Saturday, June 25, 2011

எல்லாருக்கும் வணக்கம்.

ஒரு முடிவோடுதான் வந்திருக்கேன். போட்டியோட முடிவைச் சொன்னேன். :)

சரி, நான் எதன் அடிப்படையில் படங்களை தேர்வு செய்தேன் என்று கூறி விடுகிறேன்.
* படம் தலைப்புக்கு பொருத்தமாக இருக்க வேண்டும்.
* படம் தெளிவாக இருக்க வேண்டும்
* கம்போசிங் நன்றாக இருக்க வேண்டும்.
* இறுதியாக, என்னுடைய சொந்த ரசனை. :)

இதோ முடிவுகள்:

முன்றாம் இடம்:- விஜய் ப்ரகாஷ்(மதராசப் பட்டணம்)


அருமையான படம். படத்தை பார்த்த உடன் எனக்கு முதலில் மனதில் தோன்றியது, இணையங்களில் உலவி வந்த பழைய சென்னைப் பட்டிணத்தின் படங்கள்தாம். அந்த உணர்வே தோற்றுவித்த கணமே இந்தப் படம் வெற்றி பெற்று விட்டது. அதோடில்லாமல், அழகாக கம்போஸ் செய்திருக்கிறார். ஒரே ஒரு குறை சிறிய சரிவு உள்ளது. விளக்கு கம்பத்தை பார்த்தால் வலது புறம் சிறிது சரிந்திருப்பது தெரியும். 'லீடிங் லைன்ஸ்' வலது புறத்திலிருந்து கண்களை படத்தின் நடுப்பாகத்துக்கு இழுத்து செல்கிறது. எதிரேயுள்ள வீடுகளின் திண்ணைகள் அழகான 'Horizon line'-ஐ அமைத்துள்ளன. முக்கியமாக, அந்த செபியா நிறம்... அருமையான பிராசசிங். அந்த vignette-வை குறைத்திருக்கலாம். மூன்றாம் இடம் பெற்ற விஜய் பிரகாஷுக்கு வாழ்த்துகள்!

இரண்டாம் இடம்: காயத்ரி (பள்ளிக் கூடம்)


அந்த உடையில் அந்த சிறுமியை பார்த்த உடனேயே நமக்கு பள்ளிக்கூடம் நினைவுக்கு வந்து விடுகிறது. மிகவும் அழகா கம்போஸ் செய்யப்பட்ட படம். வெகு இயல்பான pose படத்துக்கு ப்ளஸ் (தற்செயலா அமைஞ்சதா? இல்லை போஸ் கொடுக்க சொன்னீங்களா?). சிறுமியின் அருகில் இருக்கும் படிப்பு/பள்ளி சார்ந்த பொருட்கள் படத்துக்கு வலு சேர்க்கிறது. நல்ல ப்ராசசிங்கும் கூட. வாழ்த்துகள் காயத்ரி!

முதல் இடம்:- ஆன்டன் (அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது)


'வாவ்!!' இதுதான் இந்த படத்தை பார்த்தவுடன் என் மனதில் தோன்றியது. படத்தின் தலைப்புக்கு அப்படியே பொருந்தி விடுகிறது. அழகான மேக்ரோ. என்ன தெளிவு, என்ன கூர்மை. Shallow DOF அழகாக பயன்பட்டிருக்கிறது இந்த படத்தில். அருமையான ப்ராசசிங். ஆக மொத்தம் முழு மதிப்பெண்கள் கொடுக்கலாம் இந்த படத்திற்கு. பொது வாக்கெடுப்பு நடத்தினாலும், இப்படமே முதலிடம் பெறும் என்பதில் எனக்கு சிறிதும் ஐயமில்லை. வாழ்த்துகள் ஆன்டன்!! கலக்கிட்டீங்க!!!


சிறப்பு கவனம் பெற்ற இரண்டு படங்கள்:

விதூஷ் (பசங்க)


நல்ல படம். வெகு இயல்பா பசங்க விளையாடுவதை படமாக்கி இருக்கிறார். ஆனால், படத்தில் 'noise' அதிகம் உள்ளது (பசங்க உடலில் பார்த்தால் தெரியும்). பாராட்டுகள் விதூஷ்!!


வருண் (அழகர்சாமியின் குதிரை)


பார்த்த உடன் கண்ணைக் கவரும் நிறம். குதிரையின் கால்களும் வாலும் முழுமையாக தெரிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். பாராட்டுகள் வருண்!!

சரி, மற்ற படங்களுக்கான எனது கருத்துகள் போட்டியின் ஆல்பத்தில் சேர்த்துள்ளேன். யாரையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்படவில்லை. என் மனதில் தோன்றிய ப்ளஸ்/மைனஸ்களே. தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

இங்குள்ள பாடங்களை தேடிப் பிடித்து படியுங்கள். உங்கள் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

அடுத்த மாதமும் ஒரு சுவராஸ்யமான தலைப்பு உங்களுக்காக காத்திருக்கிறது. விரைவில் எங்கள் குழு போட்டி அறிவிப்புடன் உங்களை சந்திக்கும்.

ஒத்துழைத்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி!

Sunday, June 19, 2011

எல்லாருக்கும் வணக்கம்.

எல்லாருக்கும் இந்த மாத போட்டி மிகவும் பிடித்திருந்தது என நினைக்கிறேன். அதை நிறுவும் விதமாக 80 படங்கள் இந்த போட்டிக்கு வந்திருந்தன. அதில் சில படங்கள் தலைப்பு குறிப்பிடாமலும், சில படங்கள் அனுப்பியவர் பெயர் குறிப்பிடாமலும் இருந்தன. காலக்கெடுவிற்குள் திருத்தம் தெரிவிக்காதவர்கள் படங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டாலும், அடுத்து சுற்றுக்கு தெரிவாகும் வாய்ப்பை பெறவில்லை.

வந்திருந்த படங்களில் பாதி படங்கள் நன்றாகவே படமாக்கப்பட்டிருந்தன. சிலர் போட்டி அறிவித்ததற்குப் பின் படம் எடுத்திருந்தார்கள். அந்த படங்கள் எல்லாம் நன்றாக வந்திருந்தன. இதுபோல, போட்டி அறிவித்ததற்குப் பின் படம் எடுத்தால் நிச்சயமாக போட்டித் தலைப்பிற்கு ஏற்றவாறு படம் எடுக்க முடியும். அவர்களுக்கு எங்கள் குழு சார்பாக சிறப்பு வாழ்த்துகள்.

சில படங்கள் புதிதாக படம் எடுக்கத் தொடங்கியவர்களின் படங்கள் போல் இருந்தது. அவர்கள் முயற்சிக்கும் பாராட்டுகள். தொடர்ந்து முயற்சி செய்து பயிற்சி எடுத்து வந்தால் முன்னுக்கு வரலாம்.

சரி, இந்த மாத போட்டிக்கு அடுத்த சுற்றுக்கு முன்னேறிய படங்கள் இதோ. அவர்களுக்கு வாழ்த்துகள்.


# நிதி ஆனந்த்( வாழ்க்கைப் படகு)


# ஆன்டன் (அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது)


# விஜய் ப்ரகாஷ்(மதராசப் பட்டணம்)


# வருண் (அழகர்சாமியின் குதிரை)



# விதூஷ் (பசங்க)


# கார்த்தி (திருட்டுப் பயலே)


# காயத்ரி (பள்ளிக் கூடம்)


# உதயன் (இணைந்த கைகள்)



# சித்தா ட்ரீம்ஸ் (அடுத்த வாரிசு)


# ஸ்ருதி (பிரிவோம் சந்திப்போம்)


# விக்ஸ் (இணைந்த கைகள்)


# Ajin Hari (யுத்தம் செய்)


# வானம் வசப்படும் (மலர்விழி)


எல்லா படங்களுக்குமான என்னுடைய கருத்துகளை விரைவில் போட்டிக்கான ஆல்பத்திலேயே ஒவ்வொரு படத்தின் கீழும் தெரிவிக்கிறேன்.

போட்டி முடிவுடன் உங்களை விரைவில் சந்திக்கிறேன். அடுத்த மாத போட்டிக்கு இப்போதே ஆயத்தமாகுங்கள்.

Tuesday, June 14, 2011

எல்லாருக்கும் வணக்கம்.

நேற்று என்னுடைய பதிவில் ஒரு படம் 'இறுதித் துளி' (Last Drop) என்று பெயரிட்டு போட்டிருந்தேன். 'Save Water' என்பது தான் அதன் கரு. அந்த படத்தை எப்படி எடுத்தீர்கள் என நண்பர் ஆதவன் கேட்டிருந்தார். அவருக்காக மட்டுமில்லாமல் எல்லாருக்கும் பயனாக இருக்கட்டுமே என எண்ணி இங்கு பொது விளக்கம். :)


இதுதான் அந்த படம்:



மிகவும் எளிதான படம் தான். இது எப்படி எடுக்கப்பட்டது என கீழே:

நான் பயன்படுத்தியவை...
* ஒரு வெற்று தண்ணீர் பாட்டில்
* ஒரு நீல நிற A4 அளவு காகிதம்
* நீல நிற பள்ளி பை
* tripod
* Ext flash with hot shoe
* அப்புறம் முக்கியமா கேமரா, மேக்ரோ(50mm) லென்சுடன்.

இதெல்லாம் இந்த படத்துல இருக்குற மாதிரி வச்சுக்கிட்டேன்.


இதுல, நீல நிற காகிதமும், நீல நிற பையும் flash வெளிச்சம் படும்போது அந்த நீல நிறம் (Aqua) கொடுப்பதற்காக. அது மட்டும் போதாது நீல நிறம் பெற. ஒயிட் பேலண்சையும் cool color range-க்கு (fluorescent WB என்னோட கேமராவுல) மாற்றிக்கொண்டேன். முக்கியமா ஃபிளாஷ் வெளிச்சம் பின்னணியில் மட்டும் படுமாறு வைத்துக்கொண்டேன். சிறியளவு வெளிச்சம் பாட்டில் மீது படுமாறு இருந்ததால், என்னுடைய மகளிடம் ஒரு வெள்ளைத் தாளை கொடுத்து பாட்டிலுக்கும் ஃப்ளாஷுக்கும் நடுவில் பிடிக்குமாறு செய்திருந்தேன்.

இடது புறம் உள்ள ஃப்ளாஷுக்கும் கேமராவுக்கும் ஒரு ஆள் அமரும் அளவுக்கும் இடைவெளி இருந்தது. அப்புறம் என்ன.... பாட்டிலின் நுணியில் ஒரு துளி தண்ணீரை இட்டேன். அதன் மீது மட்டும் ஃபோகஸ் படுமாறு இருக்க பெரிய aperture வத்துக்கொண்டேன். ஷட்டரின் வேகம் ஃப்ளாஷுக்கும் கேமரவுக்குமான sync speed 1/200 வைத்துக் கொண்டேன். அவ்ளோதான் கிளிக் கிளிக் கிளிக்.

EXIF: f/5.0;1/200;ISO-100; Ext Flash with Fluorescent White Balance.

கேமராவிலிருந்து எனக்கு கிடைத்த ரிசல்ட் இது...


அப்புறம்... பிற்சேர்க்கையில், நீல நிறத்தில் சிறிய மாற்றம் செய்தேன். அப்புறம் சிறிய சிறிய இடங்களில் cloning செய்தேன். அப்புறம் கொஞ்சம் ஷார்ப் ஆக்கினேன். அவ்வளவுதான் நம்ம படம் ரெடி. :)



ரொம்ப எளிதுதான் இல்லையா?.... நல்ல படங்களுக்கான 'கரு' நம்மைச் சுற்றிலும் விரவிக்கிடக்கின்றன. காண்பதற்கு கொஞ்சம் கலைக்கண் இருந்தால் போதும். :)

Wednesday, June 1, 2011

எல்லாருக்கும் வணக்கம்.

இந்த மாதம் நம்ம பள்ளிக்கூடத்துக்கு என்னை(MQN) லீடரா போட்டதுக்கு நம்ம வாத்தியார்களுக்கு நன்றி.:)

உலகம் முழுவதும் திரைப்படங்களை ரசிப்பவர்களும், திரைப்பட மோகம் கொண்டு அலைபவர்களும் இருந்தாலும்... தமிழர்களாகிய நமக்கும் சினிமாவுக்கும் ஒரு பெரும் பிணைப்பே இருக்கிறது. நாம் நம் ஆட்சியாளர்களை கூட அங்கிருந்துதான் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறோம். அப்படிப்பட்ட திரைப்படத் துறை தொடர்பாகவே இந்த மாத போட்டியையும் தேர்ந்தெடுத்ததில் யாருக்கும் சலிப்பிருக்காதென்றே நினைக்கிறேன். :)


இந்த மாத போட்டி: "திரைப்படத் தலைப்பு" (Movie Title)

போட்டி விதிமுறைகள் இங்கே.

படங்கள் வந்து சேர வேண்டிய கடைசித் தேதி 15-06-2011.

இந்த மாத போட்டிக்காக மட்டும் படத்தின் ஃபைல் நேம் முறையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது... படத்தின் ஃபைல் நேம், அனுப்பும் மடலின் சப்ஜெக்ட் இரண்டிலும் முதலில் படத்தை எடுத்தவர் பெயர், தொடர்ந்து அடைப்புக்குள் திரைப்படப் பெயர் என்றிருக்குமாறு அனுப்புங்கள். எடுத்துக்காட்டாக: Karuvaayan(Thaneer Thaneer).jpg என்றிருக்க வேண்டும்.



இம்மாத போட்டியை பற்றிய சிறு விளக்கம்: அதாவது... நீங்கள் அனுப்பவிருக்கும் படம் ஏதேனும் ஒரு தமிழில் வெளியான திரைப்படத்தின் பெயரை குறிப்பிடுவது போல் இருக்க வேண்டும். திரைப்படத்தின் பெயரை குறிப்பிடுவது போலுள்ள காட்சிகளை அமைத்தோ அல்லது காட்சிகளையோ படமாக்குங்கள். படத்தில் இடம்பெற்ற காட்சியை படமாக்க வேண்டும் என்பதல்ல போட்டி. படத்தின் பெயரை படமாக்க வேண்டுமென்பதே போட்டி.

நேரடியாக ஒரு பொருளை(சப்ஜெக்ட்) குறிக்கும் விதமான திரைப்படத் தலைப்புகளை தவிருங்கள். எ.கா: குருவி, மனிதன், சிறுத்தை என்று தலைப்பிட்டு ஒரு குருவியையோ மனிதனையோ காட்டினால் ரசிக்குமா? பெரும்பாலும் கவித்துவமான திரைப்பட பெயர்களை படமாக்க முயற்சி செய்யுங்கள்.

உங்கள் கற்பனைக் குதிரையை தட்டி விடுங்கள். நமது திறமை வளர வேண்டுமானால், தயவு செய்து பழைய படங்களை அனுப்பாதீர்கள். இந்த பதினைந்து நாட்களில் புதியதாக படம் எடுக்க முயற்சியுங்கள். (உண்மையிலேயே இது திறமையை வளர்க்க மிகவும் உதவும்).

புகைப்படக் கலையின் அடிப்படை விதிகள் பற்றிய பாடங்களை இங்கு தேடிப்பிடித்து படியுங்கள். பிற்தயாரிப்பிலும்(post processing) கவனம் செலுத்துங்கள். அதனால் உங்கள் புகைப்படம் மேலும் மெருகேறும்.

நிச்சயம் இந்த மாதம் போட்டி களைகட்டும் என்பதில் எனக்கு ஐயமில்லை. :)

எனது சில படங்கள் எடுத்துக்காட்டாக:
விண்ணைத்தாண்டி வருவாயா


நீர்க்குமிழி


அலைகள் ஓய்வதில்லை


நிழல் நிஜமாகிறது


இதயம்


வானமே எல்லை


ஜீவ்ஸ் - மூடுபனி


கருவாயன் - தண்ணீர் தண்ணீர்


ராமலக்ஷ்மி - மாட்டுக்கார வேலன்


சர்வேசன் - இரயில் பயணங்களில்
 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff