Wednesday, May 25, 2011

உள்ளங் கவர்ந்த உடைகள்- மே போட்டி - வெற்றிப் படங்கள்

முதலிடம்: # அரவிந்த் நடராஜ்

கேட் வாக் ஸ்டைலில் போஸ் கொடுக்கும் அழகி. சற்று தள்ளி கவுன் மேல் கவனம் ஈர்த்து அன்ன நடை பயிலும் சிறுமி. வலப்பக்கம் இரு சுடிதார் யுவதிகள். இடப்பக்கம் தோளோடு தோள் கோர்த்து மூன்று ட்ரவுசர் பாண்டிகள்.

மஞ்சள் மிடி அணிந்த மலர் முகம் தவிர்த்து மற்றவர் முகங்களில் ஒரு அந்நியத் தன்மை. அதே நேரம் அனைவர் கண்களும் காமிராவில்.

அவர்கள் ஒத்துழைப்புடன் எடுத்தாரோ அல்லது அதிர்ஷ்டவசமாக அமைந்ததோ தெரியாது. வெகு இயல்பாகவும், பலவித உடைகளைக் காட்டித் தலைப்புக்குப் பொருத்தமாகவும் அமைந்து விட்டுள்ளது.

அந்திமாலையோ அதிகாலையோ, சாய்ந்த சூரியனின் கதிர்கள் பாய்ச்சிய ஒளியில் உடைகள் மிளிர, இப்படம் முதலிடம் பெறுகிறது.

இரண்டாவது இடம்: # லாரி

பள்ளிக் குழந்தைகளின் துள்ளும் உற்சாகம். கருப்பு மஞ்சள் இறக்கைகளை விரித்துப் படபடத்து வரும் பட்டாம்பூச்சிகளைப் பார்த்தது போல் ஒரு பரவசம்.

மூன்றாவது இடம்: சித்தா ட்ரீம்ஸ்

ஹிமாச்சல் பாரம்பரிய உடையில் அசத்துகிறாள் சிறுமி. அழுத்தமான சிகப்பு வண்ணம் அதற்கேற்ற பின்னணி. இடப்பக்கம் ஸ்பேஸ் குறைத்து வலப்பக்கம் கூட்டியிருந்தால் இன்னும் பிரமாதமாக இருந்திருக்கும் என்றாலும் ப்ளஸ் ப்ளஸ் ப்ளஸ்கள் மைனஸை பின் தள்ளியதில் படம் மூன்றாம் இடத்தில்.

ஆயினும் திருத்தத்தை இங்கு காட்டி விடுகிறேனே..
சப்ஜெக்ட் படத்தின் மையத்தில் இருக்குமாறே கம்போஸ் அல்லது க்ராபிங் செய்ய வேண்டும் என்றே நானும் பலகாலம் நினைத்திருந்தேன். பின்னரே ஆக்‌ஷன் சப்ஜெக்டுகளுக்கு அவை நகரும் இடம் நோக்கி இடம் விடுவது போல, ஸ்டில் சப்ஜெக்டுகளுக்கும் அவற்றின் பார்வை செல்லும் இடத்தில் அதிக இடம் விட வேண்டும் என்பதையும், அதனால் படத்தின் நாடகத் தன்மையை அதிகரிக்கும் என்பதையும் கற்றேன்.

இந்த படத்தில் சிறுமி காமிராவைப் பார்த்தாலும் கூட சப்ஜெக்ட் வலப்பக்கமாகத் திரும்பி இருப்பதால் அங்கே அதிக இடம் வருமாறு கம்போஸ் செய்வதே அழகு. பின்புறம் அவர் விட்டிருந்த அளவுக்கு அதிகமான இடம் டெட் ஸ்பேஸ் ஆகிறது.

ஆக்டிவ் ஸ்பேஸ் குறித்து எப்போதேனும் ஒரு பதிவு இடுகிறேன்.

முதலிடம் பெற்ற மூவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.





சிறப்புக் கவனம்:
# ஷ்ருதி

# ஆன்டன்


செலக்டிவ் கலரிங்கில் இருவருமே பிரமாதப் படுத்தியிருக்கிறார்கள். ஆன்டன் படத்தில் லைட்டிங் குறைவு. ஷ்ருதியின் படத்தில் இடப்பக்கம் இன்னும் இடம் விட்டிருக்கலாம். மற்றபடி உடையை எடுத்துக்காட்டிய விதத்தில் இரண்டுமே பாராட்டைப் பெறும் படங்கள்.

வாழ்த்துக்கள் ஷ்ருதி, ஆன்டன்!





ஆன்டன் படம் லைட்டிங் அதிகரித்து என் ரசனையில் ஆன பிற்தயாரிப்பில்..


இறுதிச் சுற்றில் வெளியேறும் படங்களில் சிலவற்றைப் பார்ப்போம்.

# விஜய் ப்ரகாஷ்

உடையும் அதை மெருகூட்டிக் காட்டும் தலை அலங்காரமும் ஆக நேர்த்தியான படம். ஆயினும் சிறுமி பார்க்கும் இடத்தில் இன்னும் சற்றேனும் இடம் விட்டிருந்திருக்க வேண்டும். உதாரணத்துக்கு ஆன்டன் சிறுவன் பார்க்கும் இடத்தில் எப்படி அதிக ஸ்பேஸ் அளித்திருக்கிறார் எனக் கவனியுங்கள்.

ஒருவேளை படம் எடுத்த சமயத்தில் அரங்கின் பிற காட்சிகள் குறுக்கே வந்ததால் சாத்தியப் படாமல் போயிருந்திருக்கலாம். ஆனால் நம்மிடம் இருக்கும் விளக்கம் படத்தோடு சேர்ந்து பேசாது. படம் மட்டுமே பேசும்.
***

நேரமின்மையால் படங்களை அப்படியே பதிபவர் ஒரு வகை என்றால் “எடுத்த படங்களை அப்படியே கொடுப்பதே எனக்குப் பிடிக்கும். அதுவே இயல்பானதாய் தோன்றுகிறது” என சொல்கிறவர்கள் இன்னொரு வகை. அவர்களுக்கு ஒரு சில வார்த்தைகள். ஒரே பூவை என் இரண்டு காமிராக்களால் எடுக்கையில் ஒவ்வொன்றிலும் வண்ணங்கள் வேறுவிதமாக வந்திருந்தது கண்டு ‘அப்போ எதுதான் இயல்பு?’ என்ற கேள்வி எழுந்திருக்கிறது என்னுள்:)!

அதுவுமில்லாமல், இது டிஜிட்டல் காலமுங்க. படங்களைப் பிற்தயாரிப்பு (Post Processing) செய்ய விதம் விதமாய் சாஃப்ட்வேர்கள் இணையத்தில். அவசியமான சின்னத் சின்னத் திருத்தங்களைச் செய்ய பெரிய விஷய ஞானம் எதுவும் தேவையில்லை. பிட் பாடங்களில் தேடினாலே சுலபமாகச் செய்திடும் வகையில் வேண்டிய விவரங்கள் கிடைக்கும்.

# நித்தி க்ளிக்ஸ்


அருமையான அரண்மனைக் காட்சி. சற்றே லைட்டிங், காண்ட்ராஸ்ட் கூட்டி இருந்திருக்கலாமோ இப்படி...

# மெர்வின் ஆன்டோ


தெருக்கூத்துக் கலைஞர்களை ஆவணப்படுத்தியிருப்பதற்கு எத்தனை பாராட்டினாலும் தகும்தான். காலில் கட்டைகளைப் பொருத்தி உயர்ந்து நிற்பவர்களின் நீள உடைகளை லோ ஆங்கிளில் அற்புதமாகப் படமாக்கியிருக்கிறார் சாலை நெரிசல்களுக்கிடையே. ஆயினும் படம் இப்படி இருந்திருக்கலாம்.
எந்த இடத்தில் லைட்டிங், காண்ட்ராஸ்ட், ஷார்ப்நெஸ் போன்றவற்றை நிறுத்த வேண்டும் என்பது ரசனையைப் பொறுத்ததே என்றாலும் சரியான ஜட்ஜ்மெண்டும் அவசியம். அதற்கு நிறைய படங்களை தொடர்ந்து கவனித்தபடி இருப்பதே சிறந்த வழி.

வெளியேறிய மீதப் படங்களை விடச் சிறப்பாகத் தேர்வான படங்கள் அமைந்து விட்டுள்ளன என்பதைத் தவிர அவற்றில் பெரிய குறைகள் ஏதுமில்லை.

இதுகாலமும் நடுவர்கள் படங்களை அலசும் போது, படிப்பினையை எடுத்துக் கொண்டாலும் ‘ஆனாலும் ரொம்பத்தான் அக்கு வேறு ஆணி வேறாய் பிரித்துப் போடுகிறார்கள்’ என நொந்து கொண்டதை நேர்மையுடன் ஒத்துக் கொள்கிறேன். இப்போது நடுவர் நாற்காலியில் அமர்ந்ததும் தானாக ஒரு பொறுப்புணர்வு, அக்கறை அதே பாணியை என்னையும் பின்பற்ற வைத்து விட்டது. பொறுத்தருள்க:)! சரி வாங்க, அடுத்த போட்டிக்குத் தயாராகலாம். நன்றி. நன்றி.
*** *** ***

Friday, May 20, 2011

மே 2010 போட்டி-டாப் டென் ப்ளஸ் த்ரீ-முதல் சுற்று முடிவுகள்

உடைகள்’ போட்டிக்கு உற்சாகமாகக் படம் அனுப்பிய அனைவருக்கும் நன்றி.

முதல் பத்துடன் கூட மூன்று முத்துக்களைக் கோர்த்து விட்டுள்ளேன். இங்கு படங்கள் தகுதி வரிசைப்படி பதியப்படவில்லை. பதிமூன்று பேருக்கும் வாழ்த்துக்கள்.


# லாரி



# தமிழ் ப்ரபா


#rjpm ராஜா


# ஷ்ருதி


# ஜேம்ஸ் வசந்த்


# அரவிந்த் நடராஜ்


# நானானி


# விஜய் ப்ரகாஷ்



# மெர்வின் ஆன்டோ


# ராஜ சுரேந்திரன்



# நித்தி க்ளிக்ஸ்


# ஆன்டன்


# சித்தா ட்ரீம்ஸ்


சில படங்கள் குறித்த நிறை குறை அலசல்கள் மற்றும் ஆலோசனைகளுடன் இறுதிச் சுற்று அறிவிப்பு விரைவில்.
***

Wednesday, May 11, 2011

பளிச்னு உடை - சில குறிப்புகள்

ரு புகைப்படத்தில் இருப்பவர் பளிச்சுன்னு தெரிய புன்னகைக்கு அடுத்து போட்டிருக்கும் உடையும் பெரும்பங்கு வகிக்கும் என்பதை யாராலும் மறுக்க முடியாதுதானே?

உடைகளுக்கு என படம் எடுக்க இருப்பவர்களுக்கு மட்டுமின்றி பொதுவாக படங்களுக்கு எந்தவிதமான உடைகள் அட்டகாசமாக அம்சமாக அமையும் என்பது குறித்து ஒரு சில குறிப்புகள்.

மீடியம் மற்றும் டார்க் பின்னணியில் படம் எடுக்க டார்க் கலர் உடைகள் என்றைக்கும் பொருத்தம். டார்க் பின்னணி என்பது ஒரு கராஜ் முன்னாலோ வீட்டு சன்னலின் வெளிப்புறம் நிற்க வைத்தோ எடுக்கலாம். அதுவுமில்லாமல் டார்க் ஷேட்ஸ் ஒருவரை இன்னும் ஸ்லிம்மாகவும் காட்டும்!

அழுத்தமான வண்ணத்துக்கும் 'அடிக்க வரும்' வண்ணத்துக்குமான வித்தியாசத்தையும் நினைவில் நிறுத்திடுங்கள். ப்ரைட் கலர்களை புகைப்படங்களுக்குத் தவிர்த்திடுங்கள்.

டையில் வாசகங்கள் படத்துக்கு அழகூட்டாது. உடையின் சிறப்பை.. முகத்தின் பூரிப்பை.. கவனிக்க விடாது.

முழுக்கை உடைகள் பிரமாதமாகத் தெரியும்.
[படம்: 1 # கருவாயன்]

க்ளோஸ் நெக், ஹை நெக் இன்னும் அழகுன்னு படங்களே சொல்கின்றன.[படம்: 2 # ராமலக்ஷ்மி]

கையற்ற மற்றும் அரைக்கால் உடைகளை தவிர்த்தல் நலம். உடல் பாகங்களே கவனத்தைப் பெறுவதாகி விடும். ஆனால் சின்னஞ்சிறு தவழும் மற்றும் நடை பயிலும் குழந்தைகளைப் பொறுத்தவரை சில விஷயங்கள் ரிவர்ஸ். அவர்களது உடல் அதிகம் தெரியுமாறு, பிரகாசமான ப்ரைட் கலர்கள் அணிவித்து எடுக்கலாம். பேட்டர்ன், எழுத்துக்கள், படங்களுடனும் உடைகள் இருக்கலாம். படம்:4_ல் கவனிங்க.

ஒரு உடையில் எடுக்கும் போது க்ளோஸ் அப், முழுப்படம், இரண்டுக்கும் நடுவிலாக என பலவாறாக எடுத்து சிறப்பானதை தேர்வு செய்திடலாம்.

மெயின் உடை, கச்சேரி போல களை கட்ட, பக்க வாத்தியங்களிலும் அக்கறை காட்டணும். பெல்ட், ஜாக்கட், காலணி, தொப்பி, ஸ்கார்ஃப் போன்றவை மேலும் அழகூட்டும், பெரியவர் சிறியவர் பேதமின்றி. (படம்_2-ல் பாப்பாவின் ஹேர் பேண்ட்).

உடையின் காண்ட்ராஸ்ட் கலரில் ஸ்கார்ஃபை குழந்தைகள் கழுத்தில் கட்டி படம் எடுத்துப் பாருங்களேன். சொக்கிப் போகலாம் ஒரு பூங்கொத்தைப் பார்க்கிற மாதிரி:)!
[படம்:3 # இணையம்]

குழந்தைகளை எடுக்கையில், அவர்கள் நமக்கு ஒத்துழைக்கும் இதமான சூழலை உருவாக்கித் தரணும். அவுட் டோரில் எடுப்பது இயற்கையான பின்னணிகளுடன் அருமையான படங்களைத் தரும் என்பதோடு குழந்தைகள் தங்களைப் படமெடுக்கிறார்கள் எனும் உணர்விலிருந்து விடுபட்டு சுற்றுப்புறத்தில் லயித்து இயல்பாக போஸ் கொடுப்பார்கள். நீங்களே பாருங்க:)!படம்: 4 # கருவாயன்
அவுட் டோர் படங்களை காலை பத்தரை மணிக்கு முன்பாகவும், மாலை என்றால் ஐந்து மணிக்கு மேலும் எடுத்தால் சூரிய வெளிச்சம் அழகாய் ஒத்துழைக்கும்.

லைட் பின்னணிக்கு லைட் கலர்கள் பரவாயில்லை. மெலிந்த உடலமைப்பு கொண்டவராயின் லைட் கலர் உடையில் டார்க் பின்னணியிலும் தோன்றி அசத்தலாம் இப்படி:
[படம்:5 # ஜீவ்ஸ்]

அறிவிப்புப் பதிவில் பகிர்ந்த படமே. மிதமாக ஒரு சீராகப் பரவி நிற்கும் இப்படத்தின் லைட்டிங் என்னைக் குறிப்பாகக் கவர்ந்த ஒன்று. [நான் பொதுவாக இரண்டு பக்கமும் டேபிள் லாம்ப் வைத்து ஒளியூட்டுவேன். ஒரு சில இடங்களில் அதீத ஒளி விழுந்து போவதைத் தவிர்க்க முடிந்ததில்லை.] எனவே இப்படம் குறித்து ஜீவ்ஸிடம் கேட்டதும், எடுத்த விதத்தை ஒரு படமாக அனுப்பி வைத்து விட்டார். நன்றி ஜீவ்ஸ்!

வீட்டுக்குள்ளே மினி ஸ்டூடியோவும் ‘எதிரொளி’யும்:

விளக்கப்படம்: ஜீவ்ஸ்
ஒரு கயிறு கட்டி தேவையான வண்ணத்தில் ஒரு புடவை அல்லது துப்பட்டாவை இப்படிப் பின்னணியில் தொங்க விடுங்கள். இங்கே இவர் லைட் கலர் உடையை எடுப்பாகக் காட்ட கருப்பு வண்ணத்தை தேர்ந்தெடுத்துள்ளார். இடப்பக்கம் ஒரு ட்ரைபாடில் எக்ஸ்டர்னல் ஃப்ளாஷை பொறுத்தி கூரையைப் பார்த்து வைக்க, ஒளி கூரையில் பட்டு சிறுமியின் மேல் விழுந்து மீண்டும் ரிஃப்ளெக்ட் ஆகி வலப்பக்கமிருக்கும் தெர்மகோல் ஷீட்டின் மேல்பட்டுத் தெறித்து ‘எதிரொளி’யாய் தேவதையைக் குளிப்பாட்டியிருக்கிறது:)!

பெண்கள் உடைக்கேற்ற இயல்பான ஹேர் ஸ்டைல் இருக்குமாறு பார்த்துக் கொள்வது அவசியம். ஆண்கள் ஓரிருநாள் முள்ளுத் தாடிகள் இல்லாமல் க்ளீன் ஷேவ்ட் ஆக இருப்பது உடைக்கும் பிரகாசத்தைத் தரும்.

நம்ம ஊர் உடையான புடவை உலகெங்கும் கொண்டாடப்படுவதன் காரணம், முழுநீளத்தில் விதவிதமாய் உடுத்தும் வகையில் வியக்க வைப்பதால்தான் என்பது சொல்லியா தெரியணும்:)? புடவை மட்டுமில்லாமல் பாரம்பரிய உடையான வேட்டியும் ஒவ்வொரு மாநிலத்தில் ஒவ்வொரு கலாச்சாரத்தில் ஒவ்வொரு விதமாக அணியப் படுகிறது. உழைப்பாளிகள், கிராம நகர மக்கள் தங்கள் செளகரியத்துக்கேற்ப வேட்டியை மடித்துக் கட்டுவதும், புடவையை இழுத்துச் செருகிக் கொள்வதும் ஒரு ஸ்டைல். கருப்பு வெள்ளையிலும் கவனத்தை உடை மேல் செலுத்த வைக்க கருவாயனால் மட்டுமே முடியும்:[படம்:6 # கருவாயன்]

அற்புதமான காட்சிகள் கண்ணுக்கு கிட்டும் போது உச்சி வெயில் எல்லாம் பார்க்க முடியாதில்லையா:)? அந்த வெயிலும் கூட இந்தத் தம்பதியரை ஆசிர்வதிப்பது போல அழகாய் ஒத்துழைத்திருக்கிறது!

நம்மைச் சுற்றி ரசனையான உடைகளுக்கா பஞ்சம்:)?

பதினைந்தாம் தேதிக்குள் படம் எடுத்து சீக்கிரமா அனுப்பி வையுங்க:)!

Sunday, May 1, 2011

மே 2011 போட்டி அறிவிப்பு

ண்பர்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்.

இம்மாதத் தலைப்பு: உடைகள்.

படத்தைப் பார்த்ததும் உடைகளே நம்மைக் கவர வேண்டும். ஒரு நடனப் படமாய் இருந்தாலும் பாவனை ஒப்பனையை விட உடை பிரதானமாக ஈர்க்க வேண்டும்.

போட்டி விதிமுறைகள் இங்கே.

படங்கள் வந்து சேர வேண்டிய கடைசித் தேதி 15-05-2011.

படம்:1 #சி வி ஆர்
Duriyodhana in action

படங்கள்: 2,3,4 #ஜீவ்ஸ்
Divya-arangetram

Seller

Jay Jay!!

படம்:5 #கருவாயன்
ரெட்டை ஜடை

படம்:6 #நாதஸ்
Elvis

படம்:7 #ராமலக்ஷ்மி
‘கிமோனோ’ ஜப்பானிய உடை/ ’Kimono' Japanese Traditional Dress

டைகள் நாகரீக எல்லைக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்பதெல்லாம் பிட் குடும்பத்தினர் ‘நமக்கு’த் தெரிந்ததுதானே! நமக்கு? ஆம், நம்மில் ஒருவர்தான் இம்மாதம் நடுவர் நாற்காலியில்..,

PiT குழுவின் சார்பில் வாய்ப்பை வழங்கியிருக்கும் சர்வேசனுக்கு என் நன்றி:)!