Sunday, April 29, 2012

ஏப்ரல் 2012 - போட்டி முடிவுகள்

வணக்கம் நண்பர்களே!

போட்டியாளர்களுக்கு போட்டியில் வெல்ல இருக்கும் சவாலை விட நடுவர்களுக்கு வெற்றிப் படங்களை தேர்ந்தெடுக்கும் சவால் தான் கடுமையானது.

முன்னேறிய பதினைந்து படங்களிலிருந்து வெற்றிப்படங்களை கீழே பார்ப்போம்.


மூன்றாம் இடம்:


இரண்டு படங்கள் மூன்றாம் இடத்தை பிடிக்கின்றன.


தர்மராஜ்:
போட்டிக்கு வந்திருந்த படங்களில் பெரும்பாலும் இழுத்துச் செல்லும் கோடு நேர் கோடாகத்தான் இருக்க வேண்டும் என்பது போல் வந்திருந்தன. இந்தப் படம் அதற்கு ஒரு மாற்றாக லீடிங் லைன்ஸ் வளைந்தும் இருக்கலாம் என்பதை அழகாக எடுத்துச் சொல்லிய படம். பாதையின் இரு புறமும் இருக்கும் மரங்கள் மேலும் அழகூட்டுகிறது. வெளிறிய வானம் கூட பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. வாழ்த்துகள்!



கப்பி:
அழகாக நான்கு கோடுகள் ஓரத்தில் தொடங்கி நம்மை அந்த சிலைக்கு அழைத்துச் செல்கின்றன. பழைய கட்டிடத்திற்கு அழகான பழுப்பு நிறம் கச்சிதமாக பொருந்துகிறது. ஒரே குறை மேலேயும், வலப்புற ஓரமும் தெரியும் கருப்பு நிறத்தை கிராப் செய்திருக்கலாம். வாழ்த்துகள்!



இரண்டாமிடம்:

குசும்பன்:
அழகான வண்ணத்துடன் வளைவான கோடுகள் நம்மை உலகின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிஃபாவிற்கு அழைத்துச் செல்கிறது. அழகான கம்போசிங். கீழே சிறிதளவு கிராப் செய்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். வாழ்த்துகள்!


முதலிடம்:

துரை:
இயற்கையினூடே பயணிக்கும் இந்த இரயில் நம்மையும் அதில் ஏற்றிக்கொண்டு செல்வது போன்ற உணர்வு. அழகாக படமாக்கியிருக்கிறார் துரை. படத்தின் கீழ் ஓரத்தில் தொடங்கி தண்டவாளத்தில் நம்மை படம் முழுதும் பயணிக்க வைக்கும் கம்போசிஷன். அதில் பயணிகளின் முன்பக்கம் எட்டிப் பார்ப்பது, நம்மையும் முன் பக்கம் இழுத்துச் செல்கிறது. சூப்பர்! வாழ்த்துகள்!


சிறப்புக் கவனம்:
இரண்டு படங்கள் சிறப்புக் கவனம்பெறுகின்றன.

நித்தி க்ளிக்ஸ்:



சுரேஷ் சந்திரசேகரன்:




போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் மற்றும் வெற்றி பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள். இம்மாத போட்டியில் பங்கேற்றது போலவே வரும் மாதங்களிலும் ஆர்வமுடன் பங்கு பெறுங்கள்.

இதைவிட சவாலான தலைப்புடன் உங்களை சந்திக்க வருகிறார் வரும் மாதம் சிறப்பு நடுவராக செயலாற்றவிருக்கும் சத்தியா!
***

Tuesday, April 24, 2012

ஏப்ரல்'12 போட்டி - அடுத்த சுற்றுக்கு முன்னேறிய படங்கள்.

நண்பர்களுக்கு வணக்கம்!

அடடா... நூற்றுக்கு மேற்பட்ட படங்கள்! எல்லாரும் அசத்திட்டீங்க. பெரும்பான்மையோருக்கு 'வழிநடத்தும்/இழுத்துச் செல்லும் கோடுகள்' என்றால் என்ன என்பது புரிந்துள்ளது குறித்து மிக்க மகிழ்ச்சி.

வந்துள்ள படங்களில் குறைகள் உள்ள படங்களை ஒதுக்கி ஒரு இருபத்தைந்து படங்களை படங்களைத் தேர்ந்தெடுத்தேன். அதிலிருந்து பதினைந்தை மட்டும் பிரித்தெடுப்பது கொஞ்சம் சிரமமாகவே இருந்தது. இதிலுள்ள இந்த பதினைந்து படங்களுமே அருமையானவை. வெற்றிக்குத் தகுதியானவை. இருந்தாலும், சிறிய குறைகள் இருக்கும் படங்களை நீக்கி விட்டு விரைவில் வெற்றிப் படங்களுடன் உங்களை சந்திக்கிறேன்.

1) அஜின் ஹரி


2) தாஸ்




3) தர்மராஜ்




4) துரை



5) ஜவஹர்



6) மது அருண்



7) நித்தி க்ளிக்ஸ்




8) ரகு முத்துக்குமார்


9) சதீஷ்



10) சுரேஷ் சந்திரசேகரன்


11) ராஜேஷ்


12) தன்ஸ்


13) குசும்பன்




14) ராஜசேகரன்

15) கப்பி


*****

Friday, April 20, 2012

போஸ் கொடுக்கலாம் வாங்க

போஸ் கொடுக்க வாங்க கேமராவை கையில் எடுத்த உடனே எதிரில் இருப்பவரில் பலர் attention போஸில்தான் நிப்பாங்க. நம்க்கும் அவங்களை எந்த மாதிரி நிறகவைக்க வேண்டும் என்ற தவிப்பும் இருக்கும். இந்த இடுகைகளில் சில அழகிய எளிதான் போஸ்கள் இருக்கு. பார்த்து பழ்க்குங்க. 

















Sunday, April 15, 2012

இர்ஃபான்வ்யூ - படங்களின் அளவைக் குறைக்கவும் பல்வேறு தேவைகளுக்கும்..

PiT மாதாந்திரப் போட்டியையே எடுத்துக்குவோம். பெரிய அளவில அனுப்பாம 1024x768 எனும் அளவில் இருக்குமாறு அனுப்புங்களென ரெண்டு மாசமா வலியுறுத்திட்டு வர்றோம். ஒரு வாசகர் எப்படிக் குறைக்கணுமெனக் கேட்ட போது நான் கை காட்டியது இர்ஃபான்வ்யூ மென்பொருளை. நான் சொன்னமுறையில் சுலபமாகப் படங்களின் அளவைக் குறைக்க முடியுதுன்னு மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார். PiT போட்டிக்கு மட்டுமில்லாம அறிவிப்பாகும் பல போட்டிகளின் விதிமுறைகளில் ஒன்றாகவே இருந்து வருகிறது ‘எந்த அளவில்’ படங்களை சமர்ப்பிக்க வேண்டுமென்பது.

அநேகம் பேருக்கு எப்படி செய்வது என்பது தெரிந்த ஒன்று என்றாலும் சில நண்பர்கள் இது குறித்து என்னிடம் கேட்டபடி இருப்பதால் பதிவாகவே தருவது நல்லதென்று தோன்றியது. இதற்கு எத்தனையோ ஃபோட்டோஷாப் மென்பொருட்கள் இருந்தாலும் யூசர் ஃப்ரென்ட்லியா, பல்வேறு தேவைகளுக்கும் பயனாகக் கூடிய ஒன்றாய் இருக்கும் IrfanView 4.28-யை இங்கே போய் டவுன்லோட் செஞ்சு கணினியில் இன்ஸ்டால் பண்ணிடுங்க முதலில்.

இப்போதெல்லாம் எல்லா கேமராவும் அதிக மெகா பிக்ஸல் வசதியோடு உள்ளன. அதிக பட்ச பிக்ஸலில் வைத்தே பெரும்பாலும் படமெடுக்கிறோம். ஆனால் அவற்றை அதே அளவுகளில் உபயோகிப்பது பல சிக்கல்களைத் தருவதால் அளவைக் குறைக்க வேண்டியது அவசியமாகுது. எப்போதும் ஒரிஜனல் கோப்புகளை தனியாக ஒரு ஃபோல்டரில் வைப்பது நல்லது. எப்ப வேணாலும் மீண்டும் தேவைப்படலாம். அதனால் உபயோகிக்கப் போறப் படங்களை பிரதியெடுத்து இன்னொரு ஃபோல்டரில் போட்டுக்கிறது நல்லது.

இப்போ இர்ஃபான்வ்யூவில் குறிப்பிட்ட படத்தைத் திறந்திடுங்க. images---resize/resample தேர்வு செய்திடுங்க:
# 1

திறக்கும் பெட்டியில் வலப்பக்கம் New Size என்பதன் கீழ் நமக்கு தேவையான அளவை செலக்ட் செய்து ok செய்து சேமித்திடலாம். இதில் PiT போட்டிக்கு அனுப்பக் கோரும் அளவினைக் காட்டியுள்ளேன்:
# 2இடப்பக்கம் காட்டியுள்ள DPI(Dots per inch) அளவு பிட் போட்டிக்கு 72 என்றே இருந்திடலாம். மாற்றிடத் தேவையில்லை. ஆனால் பிற போட்டிகளுக்கு அனுப்பும் போது அவர்கள் வெற்றி பெறும் படங்களை ஒருவேளை ப்ரிண்ட் போட்டு காட்சிப் படுத்தவும் கூடும். ஆகவே DPI அளவு 300 இருக்க வேண்டுமென விதிமுறையில் சொல்லியிருப்பார்கள். அப்படிக் கேட்டிருந்தால் DPI அளவை 300 என மாற்றி ok சொல்லி படத்தை save செய்திடலாம். பத்திரிகைகளுக்கு அனுப்பும் போது கட்டாயமாக dpi 300 வைத்தே அனுப்புங்கள்.

வலப்பக்கம் நம் வசதிக்காக ஸ்டாண்டர்டாக சில அளவுகளைக் கொடுத்திருக்கிறார்கள், சரி. அந்த அளவுகள் விடுத்து வேறு அளவுகளில் மாற்றணுமென்றால் என்ன செய்ய வேண்டுமெனப் பார்ப்போம்.

இந்தப் பதிவை எடுத்துக் கொள்ளுங்கள். Picsean.com குறித்த அறிமுகமும், Eva '12 போட்டி அறிவிப்பும் உள்ளன. Picsean தனது தளத்தில் படங்களை Landscape image எனில் அகலமும், Portrait image எனில் உயரமும் ’2200 பிக்ஸல்’ இருக்குமாறு சமர்ப்பிக்கச் சொல்லுகிறது. அப்போ நாம செய்ய வேண்டியது, இடது பக்கமிருக்கும் ‘set new size' தேர்வு செய்து horizontal படமென்றால் அகலம்(width) 2200 எனக் கொடுத்தால் உயரத்தை அதே கொடுத்து விடும். இங்கே மாதிரிக்கு நான் எடுத்துக் கொண்டிருக்கும் படம் Vertical என்பதால் உயரம்(height) 2200 எனக் கொடுத்திருக்கிறேன். அகலத்தை அதே நிர்மாணித்து விட்டது.
# 3Eva '12 போட்டி ‘1600 பிக்ஸல்’ இருக்கணுமெனக் கேட்டிருந்தது. இதே முறையில் 2200-க்கு பதில் உயரத்தை அல்லது அகலத்தை படத்திற்கேற்ப 1600 எனக் கொடுத்திடுங்கள்.

குறிப்பிட்ட அளவுகளின் தேவை என்பது இல்லாமல் பொதுவாக நம்ம படத்தை ஃப்ளிக்கரிலே, ஃபேஸ்புக்கிலோ, வலைப்பூவிலோ பகிர விரும்புறோமென வைத்துக் கொள்வோம். அப்போ படத்தின் மொத்த அளவு எவ்வளவு இருக்கிறதெனப் பார்த்து விட்டு அதிலிருந்து 30,40 அல்லது 50 போன்ற சதவிகித அளவில் படத்தைக் குறைத்திடலாம் நாம். பெரும்பாலான படங்களுக்கு நான் கையாளும் முறை இது:
# 4

முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று, படங்களின் அளவைக் குறைத்ததும் கொஞ்சமே கொஞ்சம் அதன் ஷார்ப்நெஸை நீங்க அதிகரிக்க வேண்டியிருக்கும். அதையும் இர்ஃபான்வியூவிலேயே செய்திடலாம். படத்தை சேமிக்கும் முன்னரே செய்திடல் நன்று.
#5

Batch Edition:

குறிப்பிட்ட ஒரு படத்தின் அளவை எப்படியெல்லாம் தேவைக்கு ஏற்பக் குறைக்கலாமெனப் பார்த்தோம். அடுத்து ஒன்றுக்கும் மேலான படங்களை ஒரு blog post-காகவோ யாருக்கேனும் அனுப்பவோ குறைக்க வேண்டியதாயிருக்கு என வைத்துக் கொள்வோம். ஒண்ணு ஒண்ணா செய்து கொண்டிருந்தால் எவ்வளவு நேரம் எடுக்கும்:(? இதை எளிதாக்க கிடைத்திருக்கும் வசதிதான் இந்த Batch edition:
# 6
திறக்கும் பெட்டியில் படங்கள் இருக்கும் ஃபோல்டரை (Garden) ஓபன் செய்யுங்கள். பின் இடப்பக்கம் advanced தேர்வு செய்தால் எல்லா படங்களுக்குமான அளவைத் தேர்வு செய்வதற்கான பெட்டி திறக்கும். அதில் முன் சொன்னது போல உங்க தேவைக்கு ஏற்ப 30, 40, அல்லது 50 எனக் குறிப்பிட்ட சதவிகித அளவைக் கொடுத்து ok சொல்லிடுங்க:
#7

பிறகு File name-ல் படத்தின் பெயரை உள்ளிடுங்க. படத்தின் மேலே ‘க்ளிக்’ செய்யாதீங்க. படம் இடப்பக்க ப்ர்வியூ பெட்டியில் போய் உட்கார்ந்துக்கும். டைப் செய்ய ஆரம்பித்தால் படங்களின் பட்டியல் கிடைக்கும். தெரிவு செய்திடலாம். File type: common graphic ஆக இருக்கிறதா என்பதை உறுதி படுத்திக்கணும். பிறகு ஒவ்வொரு படமா Add செஞ்சுட்டே வாங்க:
#8 தேவையான படங்களை add செய்ததும் எங்கே போய் அவை சேமிக்கப்பட வேண்டும் என்பதை பெட்டியின் இடப்பாகத்திலிருக்கும் output directory-யில் browse செய்து உள்ளிட வேண்டும். நான் இங்கே டெம்ப்ளேட் ஃபோல்டரில் சேமிக்கக் கேட்டுள்ளேன். இல்லை, அதே ஃபோல்டரிலேயே சேவ் ஆனால்தான் உங்களுக்கு வசதி என்றால் use current (look in) directory என்பதை க்ளிக் செய்திடுங்க. பிறகு start batch சொல்லிடுங்க. அத்தனை படங்களும் அளவு குறைக்கப்பட்டு நாம சொன்ன இடத்தில் சேமிக்கப்பட்டிருக்கும். exit சொல்லிடலாம்:
#9

நாலைஞ்சு படமெல்லாம் இல்லை. அதைவிட அதிகம். இப்படி ஒண்ணு ஒண்ணா add செஞ்சிட்டிருக்க முடியாதா? ரைட். அப்போ ஒரு முழு ஃபோல்டரிலிருக்கும் அத்தனை படங்களையும் எடுத்துக்கக் கட்டளையிடவும் வழியிருக்கு:
# 10 இங்கே Flower show ஃபோல்டரை தேர்வு செய்து “Add All" சொன்னதும் எல்லாப் படங்களும் நொடியில் தேர்வாகி விட்டுள்ளன பாருங்க. ஃபோல்டருக்குள்ளே சில sub folders இருந்து அதையும் சேர்க்கணுமென்றால் include subdirectories ஆப்ஷனை உபயோகித்திடலாம். எங்கே சேமிக்கணுமென்பதை கவனமாகத் தேர்வு செய்து முன்போலவே start batch சொல்ல வேண்டியதுதான்.


மேலும் பனோரமா தயாரிக்க, கேமராவில் எடுத்த வீடியோக்களைப் பார்க்க என பல வசதிகள் இருக்கிறது. ஒவ்வொண்ணா திறந்து பார்த்து தெரிஞ்சுக்குவீங்கன்னு நம்பறேன். இப்ப வித விதமான பார்டர் போடும் ஒரு அடிப்படைத் தேவைக்கான வசதியை மட்டும் காட்டி விடுகிறேன்:
# 11

# 12முடிஞ்சவரையிலும் படிப்படியான விளக்கங்களையே தந்திருக்கேன். ஏதேனும் சந்தேகம் இருந்தா பின்னூட்டத்தில் கேளுங்க:)!
***

Tuesday, April 10, 2012

இழுத்துச் செல்லும் கோடு - 1965_ல் எடுத்த படத்துடன் விளக்குகிறார் திரு கல்பட்டு நடராஜன்

இம்மாதப் போட்டித் தலைப்பான ‘வழிநடத்தும் கோடுகள்’ குறித்த திரு கல்பட்டு நடராஜன் அவர்களது அனுபவப் பகிர்வு மீள் பதிவாக இங்கே, முன்னர் தவற விட்டவருக்காக:



இழுத்துச் செல்லும் கோடுகள் (Leading lines)

நீங்கள் பிடிக்கும் படங்களில் ஒரு கோடு வெளியில் இருந்து படத்தின் உள்ளே செல்லலாம். அது ஒரு குச்சியாகவோ மரக் கிளையாகவோ, சாலையாகவோ, நதியாகவோ இருக்கலாம். அப்படிப் பட்ட கோடுகள் வெளியில் இருந்து உள்ளே வருபவையாக இருக்க வேண்டும். அவை பார்ப்பவர் கண்களை படத்தின் முக்கிய அம்சத்திற்கு இழுத்துச் செல்வதாக இருக்க வேண்டும். உதாரணத்திற்குக் கீழே உள்ள படத்தைப் பாருங்கள்.

[(கேமிரா தன் கூட்டினைப் படம் பிடிப்பதைக் கண்டு ஆத்திரமைடைந்த தேன் சிட்டு கேமிராவைத் தாக்கிடுது-படம் பிடித்தது 1965)

இந்தப் படத்தில் தூரத்தில் இருந்து கேமிராவை இயக்கிடும் காற்றுக் குழாய் ஒரு இழுத்துச் செல்லும் கோடு என்று சொல்லலாம். ஆனால் அது என்ன செய்கிறது? பார்ப்பவரின் கண்களை படத்தின் பிரதான கதா நாயகனான தேன் சிட்டுக்கு இழுத்துச் செல்கிறது.

அடுத்து இழுத்துச் செல்லும் கோடு தேன் சிட்டின் அலகும் நாக்கும் ஆகும். ஆனால் இதுவும் ஒரு நல்ல வேலையே செய்கிறது. உங்கள் கண்களை கேமிராவிற்கு எடுத்துச் சென்று உங்களுக்கு ஒரு கதை சொல்கிறது.

இதே படத்தில் ஒரு பக்கத்தில் இருந்து ஒரு மரத்தின் கிளையோ, சாய்ந்த கம்பமோ நீட்டிக் கொண்டிருந்தது என்று எண்ணிப் பாருங்கள். அது என்ன செய்யும் உங்கள் கண்களை படத்தில் இருந்து வெளியே இழுத்துச் சென்று விடும்.

ஒரு ஆளோ. ஆடோ, மாடோ படத்தின் வெளி வரம்பு அருகே படத்திற்கு வெளியே பார்த்தது போல நடந்து வந்து கொண்டிருந்தாலும் இதே வேலையை செய்து விடும். இப்படிப் பட்டவை எல்லாம் தவிர்க்கப் பட வேண்டியவை.

இழுத்துச் செல்லும் கோட்டிற்கு இதோ மற்றுமொரு உதாரணம்..


இந்தப் படத்தில் சாலையும் அதன் வேலியும் இழுத்துச் செல்லும் கோடுகள். அவை உங்கள் கண்களை நேராக அந்த் அழகிய சிவப்பு வீட்டிற்கு இழுத்துச் செல்கின்றன. அதே சாலை நேராகச்சென்றோ அல்லது வலது பக்கமாகத் திரும்பியோ படத்தின் வ்ரம்புக்கு வெளியே சென்றிருக்குமானால் அது கண்களை வெளியே இழுத்துச் செல்லும் கோடுகளாக அமைந்திருக்கும்.

என்ன சொல்கிறேன் என்று புரிகிறதா?

-by, நடராஜன் கல்பட்டு

***


திரு கல்பட்டு நடராஜன் அவர்களுக்கு நமது நன்றி!









***

உற்சாகமாக இதுவரையிலும் படம் அனுப்பியிருக்கும் அனைவருக்கும் நன்றி. இன்னும் அனுப்பாதவர்கள் ஏப்ரல் 20ஆம் தேதிக்குள் அனுப்பிடுங்கள். மேலும் சில மாதிரிப் படங்கள் இங்கும்: கோடு போட்டா ரோடு.
***

Monday, April 9, 2012

பரப்புகளின் தோற்றமும் ஒளியின் கோணமும் - கார முந்திரி IX

பரப்புகளின் தோற்றம்:

எல்லா பரப்புகளுமே பரவலான, நேர், முனைவாக்கிய ..... என்னங்க? என்ன சமாசாரம்? புரியலையா? சரிதான். தமிழ்ல எழுதப்பாத்தேன். சரிப்படாதுன்னு தோணுது. சரி முன்ன மாதிரியே எழுதறேன்.

எல்லா பரப்புகளுமே டிப்யுஸ், டிரக்ட், போலரைஸ்ட் ரிப்லக்ஷன்களை கொடுக்கும். இவை எல்லாத்தையும்தான் பாக்கிறோம். ஆனால் அப்படி பாக்கிறோம் என்கிற அறிவு இல்லாமலே. ஆயிரக்கணக்கான வருஷங்களா நம் மூளை வளர்ச்சி அடைஞ்சதிலே பல விஷயங்களை நீக்கிவிட்டு பார்க்க கத்துக்கொண்டு இருக்கு. இதனால கவனத்தை திசை திருப்பக்கூடிய விஷயங்கள் அல்லது முக்கியமில்லை என்று நினைக்கிற விஷயங்கள் எல்லாம் பில்டர் ஆகிடும். அதே சமயம் நமக்கு முக்கியம்ன்னு நினைக்கிறதை இன்னும் அழுத்தமாகவே பதிவு செய்யும். கண்ணில விழுகிற பிம்பமும் நாம் மூளையால பார்க்கிற பிம்பமும் ஒண்ணு இல்லை.

உதாரணமா கடைத்தெருவுக்கு போறோம். கண்ணாடி ஷோ கேஸ்ல அழகழகா பல விஷயங்கள் இருக்கு. அதெல்லாம் பார்க்கிறோம். ஆமா, பாக்கிறோமா? தங்கமணி பாக்கிறாங்க. அவங்களுக்கு அதுல சுவாரசியம் இருக்கு. பக்கத்திலேயே இருக்கிற ரங்கமணி என்ன பார்க்கிறார்? அந்த கண்ணாடியில பிரதிபலிக்கிற காலேஜ் பொண்ணை பாக்கிறார். அவர் அப்படி பாக்கிறது தங்கமணிக்கு தெரியறதில்லை. சாதாரணமா இந்த பிரதிபலிப்பு உள்ளே இருக்கிற பொருட்களைவிட நல்லாவே தெரிஞ்சுகிட்டு இருக்கும்.

இந்தக் காட்சிக்காக அறிவிப்பான சவால்போட்டியில் வென்ற முத்துக்குமாரின் படம் இதை எத்தனை அழகாக விளக்குகிறது பாருங்க:

இது ஏன் எப்படின்னு யாருக்கும் தெரியலை. பொதுவா ஒரு நகர்படத்தில இந்த மாதிரி டிஸ்டர்பன்ஸ் எல்லாம் அவ்வளவா தொந்திரவு செய்யாது. ஆனா ஸ்டில் படத்தில் அப்படி இல்லை. ஏன்? தெரியாது!

ஒரு போட்டோவை எடிட் பண்ணுகிறதுக்கு மேலே மூளையால ஒரு சீனை எடிட் பண்ண முடியும். ஒரு போட்டோவை பாத்து ஆயிரம் குத்தம் குறை கண்டுபிடிக்கலாம். ஆனா அதே போட்டோ எடுத்த இடத்தை காட்டி சொல்லு பாக்கலாம்ன்னா முடியாது! இசைந்து வராத சமாசாரத்தை எல்லாம் மூளை வடிகட்டிடும்! விடுங்க, இது இன்னொரு புத்தகத்துக்கான சமாசாரம்!

படத்துக்கான லைட்டிங் ரெண்டு முனையில் இருக்கறதைதான் டீல் பண்ணுது. ஹைலைட்ஸ், நிழல்கள். இது ரெண்டும் சரியா அமைஞ்சா நடுவில இருக்கிறதெல்லாம் சரியாகவே இருக்கும். இந்த ரெண்டும்தான் ஒரு பொருள் எப்படி இருக்கு, அதோட வடிவம் என்ன, ஆழம் என்னன்னு எல்லாம் தெரிவிக்கும்.

ஆனா ஒரு பொருளோட பரப்பை தெரிஞ்சு கொள்ள ஹைலைட்ஸ் மட்டுமே போதும்.

முன் பதிவிலே மூன்று வித ரிப்லக்ஷன் பத்தி பார்த்தோம் இல்லையா? இந்த மூன்றும் சம விகிதத்தில இராது. ஒண்ணுத்துல டிப்யுஸ் பிரதிபலிப்பு அதிகமா இருக்கலாம். இன்னொண்ணுத்துல நேரடி பிரதி பலிப்பு அதிகமா இருக்கலாம். இப்படி இருக்கிற வித்தியாசத்தாலதான் ஒவ்வொரு பொருளும் வித்தியாசமா தெரியுது.

ஒரு பொருளை படமெடுக்க லைட்டிங் செய்ய நினைச்சா முதல்ல என்ன மாதிரி ரிப்லக்ஷன் அதை அதோட தன்மையை எடுத்துக்காட்டுதுன்னு யோசிக்கணும். இது முடிவான பின் லைட், பொருள், காமிரா – இதெல்லாத்தையும் எங்கே வெச்சா அந்த மாதிரி ரிப்லக்ஷன் நமக்கு கிடைக்கும்ன்னு யோசிக்கணும். அதே சமயம் அந்த மாதிரிதான் நாம் பார்கிறவங்களுக்கு எந்த மாதிரி ரிப்லக்ஷன் காட்டனும்ன்னும் யோசிக்கணும்.

டிஃப்யுஸ் பிரதிபலிப்பை பயன்படுத்துவது:

பழமை வாய்ந்த போட்டோக்கள், சித்திரங்கள் போன்றதை எல்லாம் போட்டோ எடுக்க வேண்டி இருக்கலாம். இது காப்பி வேலை என்கிறாங்க.

இப்ப பார்க்க போகிற உதாரணம் முதல் உதாரணம் என்கிறதால கொஞ்சம் விரிவா இருக்கலாம். யப்படா! இவ்வளோ சின்ன விஷயத்துக்கு இவ்வளோ யோசிக்கணுமா! வாண்டாம் சாமி ன்னு கூட தோணலாம். அதெல்லாம் சும்மா ஆரம்பத்தில தோணுவது. அடுத்த அடுத்த வேலை செய்யும் போது எல்லாம் ஆட்டோமேடிக்கா யோசிச்சு முடிச்சுடுவோம்!

ஒரு பிரிண்ட் பண்ண பேப்பர்; அதில நிறைய வெள்ளை இடம் இருக்கு. இது நிறைய டிப்யுஸ் வெளிச்சம் தரும். கொஞ்சம் கருப்பா இருக்கு. இது ரிப்லக்ஷனே தராது.
நாம் முன்னமே பாத்திருக்கோம். டிப்யுஸ் ரிப்லக்ஷன் ஒளி அதிர்வுகளை வித்தியாசமா திருப்பி விடும்ன்னு. அதாவது சில ஒளி அலைவரிசைகளை மட்டும் திருப்பிவிட்டு மத்ததை விழுங்கிடும். அதனால்தான் கலர் ன்னு ஒண்ணு தெரிகிறது. இந்த பக்கத்தையே ரா.ல. மஞ்ஞ்ஞ்ஞ்ச பேக்ரௌன்ட் பழுப்பு பான்ட் ல போட்டு இருந்தாங்கன்னா அதுவும் நமக்கு தெரியும். ரிப்ஃலக்ஷன் அதை சொல்லிடும்.

ஆனா என்ன மாதிரி பரப்புல இது இருக்குன்னு சரியா சொல்லாது. அது பேப்பரா இருக்கலாம், வழவழ தோலா இருக்கலாம், பளபள பிளாஸ்டிக்கா இருக்கலாம். டிப்யுஸ் ரிப்லக்ஷன் மட்டும் இருக்கிறப்ப வித்தியாசம் தெரியாது. அதுக்கு டிரக்ட் ரிப்லக்ஷன் வேணும்.
ஆனா காபி வேலைக்கு நமக்கு பரப்பு எப்படி இருக்குன்னு தெரிய வேணாம். மத்தபடி கலர் டீடெய்ல் தான் வேணும்.

ஒளியின் கோணம்:

ஆக காபி வேலைக்கு என்ன மாதிரி வெளிச்சம் வேணும்?

வழக்கமா காபி வேலை செய்கிற அமைப்பை பார்க்கலாம்.காமிரா ஒரு ஸ்டான்ட் ல இருக்கு. கீழே படம் இருக்கு. காமிராவை வ்யு பைண்டர்ல முழுசா படம் தெரிகிற மாதிரி செட் பண்ணியாச்சு. இப்ப காமிராலேந்து கோணக்கொத்து வரைஞ்சு பார்க்கலாம். இதுக்குள்ள லைட் வரக்கூடாது. அப்படி இருந்தா நேரடி ரிப்லக்ஷன் வந்து படத்தை கெடுத்துடும். படத்திலே அந்த லைட்டே தெரியும். அதனால லைட்டை இதுக்கு வெளியே வைக்கணும். ஒண்ணோ ரெண்டோ அது உங்க வசதி.


இது ஸ்டுடியோ வுக்கு பொருந்தி வரும். மியூசியம்ன்னா என்ன செய்யறது? நிறைய போட்டோக்ராபர்கள் புலம்பறது என்னன்னா 'படம் சுவத்தில இருக்கும். நாம காமிரா வைக்க வேண்டிய இடத்துல கரெக்டா ஒரு கண்ணாடி பெட்டியோ கல்தூணோ இருக்கும்!' என்கிறது! என்ன செய்யிறது? கிட்ட வெச்சு வைட் ஆங்கிள் லென்ஸ் பயன்படுத்த வேண்டியதுதான். ஓரங்களில டிஸ்டார்ஷன் வந்தா... ஏத்துக்க வேண்டியதுதான். அப்படின்னு பாத்தா இன்னொரு பிரச்சினை வந்துடுத்து. கோணக்கொத்து இன்னும் பெரிசா போச்சு! விளக்கை இன்னும் பக்கவாட்டிலே வைக்க வேண்டியதா போச்சு!

அதாவது காமிரா தூரத்தில இருக்கிறப்ப சரியா இருந்த விளக்கின் இடம் காமிரா கிட்டே வந்தா சரியில்லாம போயிடும். அறை கீக்கிடமா போய்விட்ட இடங்களிலே இங்கதான் விளக்கை வைக்க முடியும்ன்னு ஆயிடும்.

அப்படி ஆச்சுன்னா கோணக்கொத்தை சின்னதாக்க காமிராவை பின்னுக்கு கொண்டு போய் வேற லென்ஸ் பயன்படுத்தியோ ஜூம் பண்ணியோதான் படமெடுக்கணும்.

துரத்தில காமிரா இருக்கும்போது சரியா இருந்த விளக்கோட இடம் காமிரா கிட்ட வந்ததும் பிரச்சினை ஆயிடுத்து. நீல வரிகள் காமிரா கிட்டே வந்த பிறகு நிலையை காட்டுது. கோணக்கொத்து மாறிபோனதால இப்ப விளக்கு வைக்கக்கூடாத இடத்தில் இருக்கு.

சரி அடுத்ததை பார்க்கலாம். கீழே காண்பது வழக்கமான காபி செட் அப். (விளக்குகள் சிவப்பு கலர் வட்டம்)

விளக்குகள் 45 டிகிரி கோணத்துல இருக்கு. (படம் சரியா போட முடியலை.) இதுல விசேஷம் ஒண்ணுமில்லை. வழக்கமா இது சரியா வேலை செய்யுது.

இதுல கோணக்கொத்தை வரைஞ்சு பார்க்கலாம். விளக்குகள் அதுக்கு வெளியே இருக்கு.


இதுவே விளக்குகள் கிட்டே வந்தா? பொருளுக்கு அதே கோணத்தில இருந்தாலும் கிட்டே வரும்போது கோணக்கொத்துக்குள்ளே வர வாய்ப்பு இருக்கு. அப்படி ஆகக்கூடாதுன்னு தெரியுமே?


இதுக்காக பக்கவாட்டிலே லைட்டை ரொம்பவும் கொண்டு போயிட்டா பொருள் மீது விழுகிற வெளிச்சம் சமமா இராது. தூரம் அதிகமாயிடும் இல்லையா? இதை சரி செய்யத்தான் இரண்டாவது விளக்கு இன்னொரு பக்கம் அதே மாதிரி வைக்கிறாங்க!

ஆனா இந்த குணம் இன்னும் இன்னும் சாய்வா போக ரெண்டாவது விளக்காலேயும் இதை சரி செய்ய முடியாது. எவ்வளவுக்கு எவ்வளோ காமிராகிட்ட விளக்கு இருக்கோ அவ்வளவுக்கு அவ்வளவு சமமா வெளிச்சம் விழும். உதாரணமா காமிராவோட பிளாஷ்.

ஆனா பிரச்சினையே அந்த மாதிரி விளக்கு கோணக்கொத்துக்குள்ளே வந்துடும் என்கிறதுதான். என்ன செய்யலாம்? அதை அடுத்த பதிவில் பார்ப்போம்.
***

-திவா(வாசுதேவன் திருமூர்த்தி)
‘சித்திரம் பேசுதடி’
http://chitirampesuthati.blogspot.com/


முந்தைய பதிவுகள்:
காரமுந்திரி I.
காரமுந்திரி II