Wednesday, June 20, 2012

படபடக்கும் பட்டாம்பூச்சிகள் - படம் பிடித்த கதை

19 comments:
 
அவுட்டோர் ஷூட் போய் ரொம்ப நாளாச்சு’ என சென்ற மாதம் ஒரு ஞாயிறு மாலை கிளம்பி விட்டேன் அருகிலிருந்த ரமண மகிரிஷி பூங்காவுக்கு. பூக்களைப் பிடிக்கலாமெனக் குஷியாகக் கூட வந்த கேமராவுக்குத் தெரியவில்லை அப்போது, அங்கே தனக்கொரு புதையல் காத்திருப்பதை.

# 1. The Common Jezebel (Delias eucharis)
பட்டாம் பூச்சிகளைப் படமாக்க வேண்டுமெனக் கொண்டிருந்த அதன் நீண்ட நாள் எண்ணம் எதிர்பாராமல் நிறைவேறியது:)! சரி, பட்டாம்பூச்சி என்றாலே படபடக்கதானே செய்யும்? அப்புறம் ஏன் அப்படியொரு தலைப்பு? சொல்லுகிறேன்.

அழகுச் சோலைக்குள் நான் நுழைந்ததோ மாலை நேரம். ஆனால் பட்டாம் பூச்சிகளைப் படம் பிடிக்க அதிகாலை நேரமே உகந்ததாம். புலர்ந்தும் புலராத பொழுதில் சோம்பல் முறித்தபடி மந்தகாசமாக இருக்குமாம். அந்த நேரத்தில் நுண்ணிய விவரங்களோடு அவற்றைப் படமாக்க ட்ரைபாட் வைத்து கூட எடுக்கலாமென்றால் எப்படி அசையாமல் இருக்குமென்பதை ஊகித்துக் கொள்ளுங்கள். அசைவற்று சிறகு பிரியாமல் செடியோடு செடியாக மறைந்து கிடப்பவற்றைக் கவனமாகத் தேடினாலே கண்ணுக்கு அகப்படும். பிறகு சூரியனின் கதிர் பரவ ஆரம்பிக்கையில் மெல்லத் தங்கள் சிறகுகளை விரித்துச் சூடேற்றிக் கொள்ளுமாம். இரவெல்லாம் காயப் போட்ட வயிற்றை ரொப்பிக் கொள்ளப் பூவிலே வெகுநேரம் தேன் உறிஞ்சியபடி போஸ் கொடுக்கும். அப்போ கேமராக்களுக்குக் கொண்டாட்டம். மற்ற நேரங்களில்...? கொஞ்சம் திண்டாட்டம்தான்:)!

இந்தத் தகவல் எல்லாம் படம் பிடித்து வந்த பிறகு, எடுத்த வண்ணத்துப் பூச்சிகள் எந்த வகையைச் சேர்ந்தவை என்பதை அறிந்து கொள்ள இணையத்தின் உதவியை நாடிய போது வந்து விழுந்தவை.

உலகில் மொத்தம் 20 ஆயிரம் வகைப் பட்டாம் பூச்சிகள் இருக்க, எனக்கு அன்று தரிசனமும் கரிசனமும் காட்டின மொத்தமே இருந்த மூன்று பூச்சிகள். மூன்றுமே மாலை ஐந்து மணி வெயிலில் மலருக்கு மலர் மகா சுறுசுறுப்பாகத் தாவித் தாவிப் பறந்து கொண்டே இருந்தன. துரத்தித் துரத்தி எல்லாம் எடுக்கவில்லை! அவை பாட்டுக்கு ஆனந்தமாக தேனுண்டு திளைக்க, பறந்த இடமெல்லாம் தொடர்ந்தோடி ஓடி எடுத்திருக்கிறேன்:)!

# 2 பூந்தேனில் மகிழ்ந்து..
ஸ்தம்பிக்க வைக்கும் அழகுத் தீட்டலாக அமைந்த வண்ணங்கள் இறைவன் பறவைகளிடமிருந்து தப்பித்துக் கொள்ள இவற்றுக்கு வழங்கிய வரம். பூக்களோடு பூக்களாக இருக்கும் போது எதிரிக்கு இவை பூவா பூச்சியா என எளிதில் இனம் காணவே முடியாதென்பது எத்தனை உண்மை பாருங்கள்!

# 3 பூவுக்குள் ஒளிந்திருக்கும்...

இவை எல்லாமே ஒன்று முதல் ஒன்றரையடி உயரத்தில் கம்பளமாக பூங்காவெங்கும் விரிந்து கிடந்த செடிகள்.

ஜெஸபெல் சாருக்கு (ஆம், இவங்க மேடத்துக்கு நிறம் இத்தனை அழுத்தமாக இருக்காதாம்) எப்பவுமே வெள்ளைப் பூக்களின் தேன்தான் பிடித்திருக்கிறது. மஞ்சள் பூக்களைத் திரும்பியும் பார்க்கவில்லை. அதற்கு நேர் மாறாக இருந்தார் கொஞ்சம் தள்ளி மஞ்சள் மலர் மேல் ‘என்னைப் பார் என் அழகைப் பார்’ என உட்கார்ந்திருந்த மோனார்க் (ராசா). வெள்ளைப் பூக்கள் இவருக்கு அலர்ஜி. இதெல்லாம் அவதானித்ததில் அறிந்தவை.

#4 Monarch Butterfly (Danaus plexippus)
இவரை வைஸ்ராய் வண்ணத்துப் பூச்சிகளோடு குழப்பிக் கொள்பவர்கள் உண்டு. வைஸ்ராய்க்கு இருப்பது போல் அழுத்தமான பக்கவாட்டுக் கருப்புக் கோடுகள் இவருக்குக் கிடையாது. மேலும் இவருக்கு வெளிப்புறம் மிதமான வண்ணத்திலும், உட்பக்கம் அழுத்தமான ஆரஞ்சிலும் அமைந்திருக்கும்.‘அப்படியா? எங்கே பார்க்கலாம்’ எனத் தடதடவெனப் பக்கத்தில் போய் விடாதீர்கள். போனால் இப்படிதான் சர்ர்ர்ர்ர்ரெனப் பறந்து விடும்.

# 5 மெல்லத் திறக்குது சிறகு


வாங்க கொஞ்சம் பொறுமையாப் பின் தொடருவோம். விட்டுப் பிடிப்போம்.

# 6 தரிசனம்
இப்பத் தெரியுது பாருங்க, உள்பக்கத்தின் அழுத்தமான ஆரஞ்சு வண்ணம்.

இன்னும் கொஞ்சம் கரிசனம் வச்சு அதே பூவில் கிர்ர்ர்னு ஒரு வட்டமடிச்சு, அகல விரிச்சுது சிறகுகளை, அடடா! என்ன அழகு!

# 7 விரித்து வைத்தப் புத்தகம்
இவரோட Wing span மூன்றரையிலிருந்து நாலரை அங்குலம்.

இவரும் சரி, ஜெசபெலும் சரி ஒருசில நொடிகளாவது உட்கார்ந்திருந்தார்கள். தேனை ருசித்து இழுக்கையில் ஆடாமல் அசையாமல் இருந்தார்கள். ஆனா க்ரிம்சன் ரோஸ் அப்படியில்லை. என்னை ரொம்பவே ட்ரில் வாங்கிட்டாரு:(!

# 8 Crimson Rose(Atrophaneura hector) - Red bodied Swallowtails


எந்தப் பூவிலும் ஓரிரு நொடிக்குமேல் உட்காரவில்லை.
# 9 ட்ரில் மாஸ்டர்

தேனை உறிஞ்சும் போது என்னதான் பரவசமோ, இல்லே அவசரமோ சும்மா சிறகுகளைப் படபட படபடவென இப்படி அடித்துக் கொண்டே இருந்தார்.
# 10
அதனால் தெளிவாக இவரைப் பதிய முடியவில்லை. இவரின் போக்கு பிடிபட்டதும் ஷட்டர் ஸ்பீட் அதிகரித்து எடுக்க முயன்றேன். அதற்குள் உயரப் பறந்து மறைந்து விட்டார். போகட்டும், இன்னொரு முறை மாட்டாமலா போய் விடுவார்:)?

# 11 கைவிசிறி


விதம்விதமான வகைப் பட்டாம்பூச்சிகளைப் படமாக்க அவற்றிற்கென்றே உரிய பண்ணைகளுக்குச் செல்லலாம். பெங்களூரிலும் கூட உள்ளது. பனர்கட்டா தேசியப்பூங்காவையொட்டி ஆறு வருடங்களுக்கு முன் அமைக்கப்பட்டது. இந்தியாவின் முதல் பட்டாம்பூச்சிப் பண்ணை. செல்லத் தோன்றும் வேளையில் “இப்போ சீசன் இல்லியே” என்பார்கள் யாராவது. அப்படியே தள்ளிப் போய்விட்டது. உங்களில் பலர் சென்றிருக்கவும் கூடும். இந்த வருடமாவது போக வேண்டும். அங்கே வருடத்தின் கடைசி மூன்று மாதங்கள் நிறைய பார்க்க முடியும் என்கிறார்கள். அதற்குக் காரணம் இருக்கிறது.

உலகின் எல்லாப் பாகங்களிலுமே குளிர்காலத்தில் பட்டாம்பூச்சிகள் காலை பத்து மணி வரையிலுமே மந்தகாசமாய்தான் இருக்கும் என்பதும் ஒரு காரணம். இயற்கையான சூழலில் அவை பராமரிக்கப்படும் aviary-யினுள் ட்ரைபாடையும் சில பண்ணைகள் அனுமதிப்பதுண்டு. எந்த மலரில் எந்தப் பின்னணியில் எந்தக் கோணத்தில் எந்த வகைப்பூச்சி வேண்டுமோ இந்த மெகா கூண்டுக்குள் வாய்ப்புகள் அதிகம்.

பூங்காவோ, வீட்டுத் தோட்டமோ, பண்ணையோ எங்கேயானாலும் சரி பொறுமை ரொம்ப அவசியம். சில பூச்சிகள் நமக்கு ஒத்துழைக்கும். சில க்ரிம்சன் போல நம் ஃப்ரேமுக்குள் அடங்க மாட்டேன்னு அடம் பிடிக்கும். ஒரு அரைமணி நேரம் அவதானித்தாலே நமக்குப் புரிந்து விடுகிறது ஒவ்வொரு வகையின் போக்கும் எப்படியானது என்பது. ரொம்ப அருகில் மேக்ரோ க்ளோஸ் அப் லென்சுகள் உபயோகித்து எடுக்க முடியுமா எனத் தெரியவில்லை. யாராவது முயன்று வெற்றி பெற்றிருந்தால் சொல்லலாம். நான் 200mm உபயோகித்துதான் எடுத்தேன். பூச்சிகளின் உடற்கூறு (anatomy) தெளிவாய் தெரியற மாதிரியான படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் எப்போதும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, அவுட்டோரில் சிறப்பாப் படமெடுக்க பொதுவான விதிகளை ஆலோசனைகளை ஏற்கனவே சர்வேசன் பதிவாகத் தந்திருக்கிறார் இங்கே: "படங்காட்ட பத்து சூட்சமங்கள்"!

முடிவாகக் கவனிக்க வேண்டிய முக்கியமான இன்னொரு விஷயத்துக்கு வருவோம். எடுத்த பூச்சிகளை அடையாளம் காணுதல் (Identification)! இணையம் இருக்கையில் இதற்கு மலைக்க வேண்டியதே இல்லைதான். இதற்கென பல தளங்கள் இருந்தாலும் சரியா நாம எடுக்கிற பூச்சியை அடையாளம் காட்டுவதாய் இருப்பதில்லை அவை. பூச்சியின் உடலில் பிரதானமாக இருக்கிற வண்ணத்தில் ஆரம்பித்து எல்லா நிறங்களையும் வரிசைப்படுத்தி, butterfly என முடித்து கூகுள் ஆண்டவரிடம் படங்களைக் கேளுங்க. நாம ஆரஞ்சு என நினைப்பது அங்கே சிகப்பாகப் பதிவாகியிருக்கலாம். ஒத்த படம் கிடைக்கும் வரை மாற்றி மாற்றிப் போட்டுத் தேடுங்க. சட்டுன்னு பார்க்க ஒரே மாதிரி இருந்தாலும் சின்ன சின்ன விஷயங்களில் மாறுபட்டு இருக்கும் சில வகைகள். மொனார்க், வைஸ்ராய் அப்படிதான். அதனால் படத்தை மட்டும் பார்த்து விட்டுப் பொத்தாம் பொதுவாய் முடிவு செய்யாமல் கொஞ்சம் நம்ம விக்கி அக்கா (wikipedia) தரும் விவரங்களையும் வாசிச்சுப் பாருங்க.

பட்டாம்பூச்சிகளைப் படமாக்கும் ஆசையை ஆசையாகவே வைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு அதை நிறைவேற்றும் ஆர்வத்தையும் வேகத்தையும் இந்தப் பதிவு தரும்னு நம்பறேன்:)!
***

19 comments:

  1. பட்டாம் பூச்சிக்கென்றெரு பண்ணையா கேட்கவே ஆச்சரியமாகவுள்ளது!! மிக அருமையான கட்டுரை,நன்றி

    ReplyDelete
  2. படங்களும் பாடங்களும் அருமை :)

    ReplyDelete
  3. //இங்கே:படங்காட்ட பத்து சூட்சமங்கள்!//தொடுப்பு கொடுத்து இருக்கிங்களா? நானும் எலிய அங்கு கொண்டுபோய் அழுத்தி அழுத்தி பார்க்குறேன் இணைப்பு இருக்கற மாதிரியே தெரியலை.

    ReplyDelete
  4. @ attractionbackgroundimages

    பெங்களூர் பனர்கட்டா பட்டர்ஃப்ளை பார்க் பற்றி இங்கே விவரம் அறிந்து கொள்ளலாம். நன்றி.

    ReplyDelete
  5. @ குறும்பன்,

    இப்போது முயன்று பாருங்கள். தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
  6. சிஸ்டர்.....,

    என்னுடைய டெஸ்க்டாப் வால்பேப்பர் முழுக்க பட்டாம்பூச்சிகள்தான் அலங்கரிக்கும், நொடிக்கொருதரம் மாறும் விதமாக..... எனினும் பட்டாம்பூச்சியின் மேலுள்ள ஈர்ப்பு தீர்வதே இல்லை. குழந்தைகளுக்கு பின் எனக்கு பிடித்த மாடல்கள் பட்டாம்பூச்சிகள்தான். நிறைய டிப்ஸ் சொல்லியிருக்கீங்க. கண்டிப்பா உபயோகப்படுத்திகிறேன். மிக அழகான மாடகளைக் கொண்டு மிக்க அழகுடன் ஃபோட்டோ எடுத்திருக்கீங்க. பதிவுக்கும், படங்களுக்கும் மிக மிக நன்றி. :))

    ReplyDelete
  7. கண்ணில் ஒற்றிக் கொள்ளும் அழகு, நன்றாக இருக்கிறது அனைத்து வண்ணத்துப் பூச்சிகளும்.

    ReplyDelete
  8. படங்களும் பகிர்வும் அருமை சகோ .

    ReplyDelete
  9. சுவாரசியமான பதிவு!

    // ரொம்ப அருகில் மேக்ரோ க்ளோஸ் அப் லென்சுகள் உபயோகித்து எடுக்க முடியுமா எனத் தெரியவில்லை. //

    எடுக்கலாம்! பட்டாம்பூச்சிகள் பற்றிய அறிவு (அவற்றின் நடத்தை) நமக்கு இருக்க வேண்டும். இளைப்பாறும் நேரம், முட்டையிடும் நேரம் மற்றும் அவற்றுக்கு இடையூறு விளைவிக்காத நம் செயற்பாடுகள் உதவக்கூடியன.

    எ.கா: https://www.facebook.com/#!/photo.php?fbid=168992646475152&set=a.162807787093638.27030.162245523816531&type=3&theater (Common Pierrot) எனும் 24-32மிமி சிறகுவிரிப்பு அளவு(wingspan) உள்ள இதனை படமெடுக்க எனக்கு எடுத்தது 1 அடிக்கும் குறைவான இடைவெளியே!

    ReplyDelete
  10. @ அன்னு, கோவி.கண்ணன், சசிகலா,

    மிக்க நன்றி:)!

    ReplyDelete
  11. @ ஆன்டன்,

    உண்மைதான். அவதானிப்பும் விஷய ஞானமும் மிக அவசியமாகிறது:)! நான் சென்ற வேளையில் மூன்றுமே ஆக்டிவ்வாக இருந்தபடியால் நான்கிலிருந்து பத்தடி தொலைவிலேதான் எடுத்தேன் படங்களை. உங்கள் படம் அருமையாக வந்திருக்கிறது.

    நன்றி:)!

    ReplyDelete
  12. Simply superb. Enjoyable photos.

    ReplyDelete
  13. @ ராமலக்ஷ்மி: Google image search helps a lot to identify the name of anything using a picture.. This post might be helpful for you.

    http://vettipayyan-nattu.blogspot.com/2012/04/google-image-search.html

    ReplyDelete
  14. @ வெட்டிப்பையன்,

    நீங்கள் பரிந்துரைத்திருக்கும் tineye ஏற்கனவே நான் கணினியில் நிறுவியிருக்கிறேன். அவை பலனளிப்பதில்லை:)! ஏன்,இங்கிருக்கிற படங்களையே முயன்று பாருங்களேன்.இதே பதிவை ஏற்கனவே என் ப்ளாகிலும் படங்களை ஃப்ளிக்கரிலும் பகிர்ந்திருக்கிறேன். அவற்றைக் கூட காட்டவில்லை. அதைநேரம் கணினியில் நிறுவியிருக்கும்
    Search by Image (by Google) - Chrome Web Storehttps://chrome.google.com/webstore/detail/dajedkncpodkggklbegccjpmnglmnflm?hc=search&hcp=main அவற்றை(என்னுடைய படங்களையே) காட்டுகிறது, ஆனால் நமக்குத் தேவையான சரியான வகையை அடையாளம் காணப் படங்களைத் தரவில்லை. நான் அனுபவத்தில் கண்டுபிடித்த முறையையே பகிர்ந்திருக்கிறேன்:)!

    எனினும் அக்கறையுடனான பகிர்வுக்கு நன்றி:)!

    ReplyDelete
  15. @ ராமலக்ஷ்மி

    நான் Tineye உபயோகிப்பதில்லை (என் பதிவில் சொல்லி இருப்பது போல உண்மையான பட உரிமையாளரை கண்டு பிடிப்பதற்கு என்ன செய்வது என்று யோசிக்கும்போது மட்டுமே நமக்கு tineye துணைபுரிகின்றார் என்பது என் அனுபவம்). பொது தேடலுக்கு நான் google Image search தான் உபயோகிக்கிறேன். பட்டாம்பூச்சிகளுக்காக நான் தேடியபொழுது சில பெயர்கள் உடனே தெரிகிறது (even in flicker)
    http://www.butterflyutopia.com/wall4.jpg
    http://www.flickr.com/photos/94051094@N00/3950464042
    பல பெயர்கள் தெரியவில்லை.. பல ரகங்கள் உள்ள இது போன்ற படங்களை கண்டுபிடிப்பது சிரமமான காரியம் தான். நான் தேடியபோழுதுதான் உங்களின் உழைப்பை புரிந்துகொள்ள முடிகிறது..நன்றி..

    ReplyDelete
  16. நன்றி வெட்டிபையன்:)!

    ReplyDelete
  17. பயனுள்ள பதிவை பகிர்ந்த அன்பு நண்பனுக்கு நன்றி

    ReplyDelete
  18. Crimson rose - எங்க ஊரு ராஜா பட்டாம்பூச்சி மாதிரியே இருக்கு.. ஆனா ராஜா பட்டாம்பூச்சி இறக்கை இன்னும் அடர்த்தியா இருக்கும்.

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff