Friday, April 30, 2010

வணக்கம் மக்கா. இந்த மாசம் எல்லாராலும் கொஞ்சம் எளிதாக எடுக்க முடியக் கூடிய ஒரு தலைப்போட வந்திருக்கேன். இது இல்லைன்னா வெளிச்சம் இல்லைங்க. அதான் சூரியன். ஆனா அதை நீங்க காலையிலோ அல்லது மாலையிலோ தான் எடுக்கனும். புரிஞ்சுதுங்களா.. சூர்யோதயம் / அஸ்தமனம் தான் நீங்க இந்த மாசம் எடுக்க வேண்டியது. பொதுவாகவே உதயம் அஸ்தமனம் என்றால் ஏறக்குறைய ஒரே மாதிரி தான் புகைப்படம் இருக்கும் என்ற கருத்து உங்களுக்கு இருந்தால் மாற்றிக்கொள்ளுங்கள். சூரியனின் ஜாலங்கள் எத்தனை வருடங்கள் ஆனாலும் ஒரே மாதிரியான தோற்றம் உங்களுக்குக் கிடைக்காது. பத்து படங்கள் பத்து தினங்களில் எடுத்தால் பத்தும் பத்து விதமாக இருக்கும். சூரியனை பாரதி எப்படி சொல்லிருக்காரு பாருங்க.
பார் சுடர்ப் பரிதியைச் சூழவே படர்முகில் எத்தனை தீப்பட்டு எரிவன! ஓகோ! என்னடீ இந்த வன்னத்து இயல்புகள்! எத்தனை வடிவம்! எத்தனை கலவை! தீயின் குழம்புகள்! செழும்பொன் காய்ச்சி விட்ட ஓடைகள்! வெம்மை தோன்றாமே எரிந்திடும் தங்கத் தீவுகள்! பாரடீ நீலப் பொய்கைகள்! அடடா நீல வன்னம் ஒன்றில் எத்தனை வகையடீ! எத்தனை செம்மை! பசுமையும் கருமையும் எத்தனை! கரிய பெரும்பெரும் பூதம்! நீலப் பொய்கையின் மிதந்திடுந் தங்கத் தோணிகள், சுடரொளிப் பொற்கரை யிட்ட கரும் சிகரங்கள்! காணடி ஆங்கு தங்கத் திமிங்கிலந்தாம் பல மிதக்கும் இருட்கடல்! ஆஹா! எங்கு நோக்கிடினும் ஒளித்திரள்! ஒளித்திரள்! வன்னக் களஞ்சியம்!
என்ன அருமையான பாடல் இல்லைங்களா ? பாஞ்சாலி சபதம் நேரம் கிடைக்கும் போது படிங்க. அப்புறம் தினம் தினம் உழைத்துக் கொண்டிருக்கும் உழைப்பாளியான சூரியனை மே மாதம் புகைப்படம் எடுப்பது என்பது சரியானது தான் இல்லையா ? மற்ற நேரத்தில் முக்கியமாக மதிய நேர சூரியனை எடுப்பதென்றால் உங்கள் கண்ணிற்கும், நிழற்படக் கருவிக்கும் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் கொம்பெனி பொறுப்பேற்காது. போட்டித் தலைப்பு: சூர்யோதயம்/அஸ்தமனம் சூரியன். (Sunrise / Sunset ) போட்டிக்கான விதிமுறைகள்: இங்கே போட்டிக்கான கடைசி நாள் : 15 மே 2010 சில குறிப்புகள் : ஏற்கனவே எடுத்தப் படத்தை மெருகேற்ற - இங்கே மற்றும் இங்கே சொல்லப்பட்டிருக்கிறது சில அடிப்படைகள் - மீள்நினைவூட்டல் - இங்கே சில எடுத்துக்காட்டுப் படங்கள்
ஜீவ்ஸ்
ஜீவ்ஸ் : ( இந்தப் படம் பாயிண்ட் & ஷூட் கேமராவில் எடுக்கப் பட்டது)
ஜீவ்ஸ் :
ஆனந்தின் படம் :
ஜீவ்ஸ் :
சீவீயாரின் படம் முன்னூறு பதிவுகளுக்கும் மேலாய் ( இது முன்னூற்றி இரண்டாம் பதிவு ) தொடர்வதற்க்கு நீங்கள் தரும் உற்சாகத்திற்கும் ஆதரவிற்கும் நன்றி விடைபெறுகிறேன், மீண்டும் சந்திக்கும் வரை.....

Tuesday, April 27, 2010

ஏப்ரல் போட்டிக்கு தண்ணி காட்டச் சொலியிருந்தோம். தண்ணி காட்டியவர்களில் அம்சமாய் காட்டிய பத்து பேரின் படங்களை பார்த்திருப்பீர்கள். இனி, வெற்றி பெற்ற முதல் மூன்று படங்களைப் பாத்திடலாம். எனக்கு தெரிஞ்சது ரொம்பக் கம்மி. ஸோ, ரொம்ப டெக்னிக்கல் அம்சங்கள் எல்லாம் பாக்கலை. எது, என்னை இழுத்தது என்பதே அளவுகோல். பத்து படங்களையும் மேலையும் கீழையும் பாத்தா, கொஞ்சம் கொழப்பமாத்தான் இருந்தது. எதை எடுப்பது எதை விடுப்பதுன்னு சட்டுனு புரியல்ல. ஆனால், முதல் பரிசு எதுக்குங்கரது, ரெண்டு மூணு தடவை மேலையும் கீழையும் மேஞ்சதும் மனசுக்கு பட்டுடுச்சு. இரண்டாம் இடத்துக்கும் மூன்றாம் இடத்துக்கும், ரெண்டு படங்கள், நானா நீயான்னு, இழுபறி பண்ணிச்சு. அப்பரம், லேப் டாப்பை தூர வச்சு, வேர வேர ஏங்கிளில் பாத்து, 'வாவ்'னு, அதிகமாய் வசீகரிச்சதை, கட்டம் கட்டியிருக்கேன். மூன்றாம் இடத்தில், mervinanto. சரியான வெளிச்சத்தில், சரியான நேரத்தில், நச்னு ஷாட். நல்ல வண்ணங்களின் வெளிப்பாடும். அருமை.
இந்த இடத்துக்கான கவனம் பெற்ற இன்னொரு படம், Amalன் தண்ணி டார்ச்சு. என்னத்தச் சொல்ல? பின்னியிருக்காரு மனுஷன். தண்ணி பிரதானமாய் இருந்தும், பிரதானமாய் எனக்கு சட்டுனு படாததால், ஜஸ்ட்ல மிஸ்ஸாயிடுச்சு. ஆனா, பிரமாதமான படம்.
இரண்டாம் இடத்தில், meenatchisundaram. நீர்வீழ்ச்சியை, இப்படி படம் படிக்கரதுக்குத்தான் எல்லாரும் ஆசைப்படுவோம். அருமையா வந்திருக்கு. ஒரு சில படங்களை பாத்தா, பெருமூச் வரும். எப்படா இந்த எடத்துக்கு போகப் போறோம்னு. அப்படி ஒரு படம். தொபுக்கடீர்னு குதிக்கலாம் போலருக்கு. அருமையான ஏங்கிள். இடதுபுறத்தில் கொட்டும் நீரை இன்னும் முழுசா காட்ட முயற்சி பண்ணினா இப்படி ஒரு பஞ்ச் வந்திருக்காது. அளவான, கட்டம். சூப்பரு!
கவனம் பெற்ற இன்னொரு அருவிப் படம் Karthikero. நன்றாக க்ளிக்கப்பட்டிருந்தாலும், கொஞ்சம் பளிச் கம்மி. பின்னாலிருக்கும் இருண்ட மரங்களும் கைகொடுக்கலை.
முதலாம் இடத்தை பெறும் படம் S.M.Anbu Anandன் சொட்டு நீர். நல்லா போஸ்ட்டர் போட்டு விக்கலாம். அவ்ளோ நல்லா வந்திருக்கு. இதன் பன்ச் கூடக் காரணம், படம் எடுக்கப்பட்ட கோணம்னு நெனைக்கறேன். பாதி படம் நீலமாவும், மீதிப் பாதி நிறம் கம்மியாவும் செஞ்சிருக்காரு. ஆனா, அதுவும் ஒரு அழகாவே தெரியுது. முழுக்க நீலமா இருந்தாலும், ஓவராயிருந்திருக்கும். நீலம் இல்லாமல் இருந்தால், டல்லா இருந்திருக்கும். அளவா, அம்சமா வந்திருக்கு. வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள், வெற்றி பெற்றவர்கள் அனைவருக்கும். பங்கு பெற்ற அனைவருக்கும், நன்றீஸ்!

Sunday, April 25, 2010

இந்த வாரத்திற்கான படத்திற்க்கு தேர்ந்தெடுக்கப்படும் படம்.... ஜெயஸ்ரீ அவர்களின் fisher man படம்...





அவருக்கு PIT ன் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்..

இவரின் மற்ற படங்கள் இங்கே

Thursday, April 22, 2010

ஏப்ரல் போட்டிக்கு எல்லோரையும் தண்ணி காட்டச் சொல்லியிருந்தோம். கலக்கலா 50 படங்கள் வந்திருக்கு. போட்டிக்கான கடைசி தேதிக்கப்பரம் வந்த ஏழு படங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் சில பல காலங்களில், தங்கம், வைரத்தை விட அதிக விலைக்கு தண்ணீர் விற்கப்படும்னு பேசிக்கராங்க. போட்டிக்காக எடுத்த படங்களை ஃப்ரேம் போட்டு வீட்ல மாட்டி வச்சுக்கணும். வருங்காலத்தில், காணக் கிட்டா பொக்கிஷமாகி விடும் தண்ணீர் :) உலக தண்ணீர் தினத்தை ஒட்டி, அமைந்த போட்டியில், நம்ம கருவாயன் அண்ணாச்சியின் 'சேம்ப்பிள்' படம், நெத்தியடி! வருங்காலத்தை படம் பிடிச்சு காட்டியிருக்காரு. மொதல்ல அந்த படத்தை பாத்துட்டு, கருவாயனுக்கு ஒரு சலாம் போட்டுட்டு, போட்டிக்கான படங்களில் டாப்10ஐ பிடித்த படங்களைப் பார்க்கலாம். ஐம்பதில் டாப்10ஐ இனி பார்க்கலாம். பார்த்தவுடன் வசீகரித்தப் பத்து இவை. (வரிசைப்படுத்தவில்லை - in no particular order) Ashok Venkat Narayanan Chanz karthikero mervinanto Mohankumar Amal Anbu Anand Jayashree meenatchisundaram ஆதிமூலகிருஷ்ணன், Chan, Boopathi, karthik படங்களும் நன்றாக வந்துள்ளன. போட்டியில் கலந்து கொண்டவர்களும், பார்வையாளர்களும், அனைத்துப் படங்களையும் பார்த்து, உங்கள் மேலான கருத்துக்களை போட்டியின் பங்காளர்களுக்குத் தெரியப்படுத்தவும். மனதில் பட்டத்தை தயங்காமல் சொல்லுங்கள். நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும், நம் திறனை உயர்த்த உதவும். முதல் மூன்று விரைவில் வரும். பங்கு பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த நன்றீஸ்!

Monday, April 19, 2010

இந்த வாரப் படத்திற்கு இம்முறை தேர்ந்தெடுக்கப்படும் நண்பர்... விஜயாலன் அவர்களின் MELBOURE CBD...





அவருக்கு PITன் சார்பாக வாழ்த்துக்கள்.. இவரின் மற்ற படங்கள் இங்கே....

Tuesday, April 13, 2010

Photo$hop CS5 யில் பெரிதாய் எதிர்பார்க்கபடும் ஒரு புதிய விஷயம் content Aware Fill. இதைப் பற்றிய விவரம் இங்கே இருக்கு. சுருக்கமாய் சொல்ல வேண்டுமெனில் படத்தில் உங்களுத் தேவையில்லாத பகுதிகளை clone tool இல்லாமல் மிக எளிதாய் நீக்கி விடலாம். ஆனால் கிம்பில் இதே போனற வசதி பல நாட்களாகவே ( வருடங்களாகவே ) இருக்கு. காசே செலவில்லாமல் கிம்பில் இதை உபயோகிப்பது பற்றி இங்கே. முதலில் இங்கே இருந்து resynthesizer-for-Windows-0.13b plugin தரவிறக்கிக் கொள்ளுங்கள். இந்த zip கோப்பில் இருக்கும் resynthesizer.exe இங்கே c:\Program Files\GIMP-2.0\lib\gimp\2.0\plug-ins நகர்த்திக் கொள்ளுங்கள். அடுத்து இங்கே இருந்து smart-remove.scm தரவிறக்கி , அதை இங்கே C:\Program Files\GIMP-2.0\share\gimp\2.0\scripts நகர்த்திக் கொள்ளுங்கள். அடுத்த முறை கிம்ப் திறக்கும் போது, Filters-> Enhance-> heal selection தெரிய வேண்டும். தேவையான படத்தை கிம்பில் திறவுங்கள். உதாரணதிற்கு இந்த படத்தில் இருந்து இந்தப் பகுதிகளை நீக்க முயற்சிக்கலாம். Lasso Tool தெரிவு செய்து நீக்க வேண்டிய பகுதிகளை தேர்ந்து எடுத்துக் கொள்ளுங்கள். selection குத்துமதிப்பாய் இருந்தாலே போதும். அடுத்து Filters-> enhance-> heal selection தெரிவு செய்து, Radius 100 என்று மாற்றுங்கள். அவ்வளவுதான். மாயமாய் மறைந்து போயிருக்கும். இதில் Radius தெரிவு செய்வதுதான் முக்கியமான வேலை. கொஞ்சம் விளையாடி பார்க்க வேண்டும். நீக்க வேண்டிய ப்குதி பெரியதாக ஆக ஆக Radius அள்வும் பெரியதாகும். இந்த படத்தில் கற்கள், மற்றும் பிற தேவையில்லா பொருட்களை நீக்கி இருக்கிறேன். மொத்த நேரம், இரண்டு நிமிடங்களுக்கும் குறைவாகத்தான் ஆகி இருக்கும். படம் - மதன் ( பொம்மை போட்டிக்கு வந்த ஒருப் படம்) விளையாடிப் பாருங்கள். கிம்ப் இருக்க போட்டாஷாப் கவர்ந்தற்று :)

Monday, April 12, 2010

வணக்கம் மக்கா, மேக்ரோ படங்கள் எடுப்பதற்கான வழிமுறைகள் பற்றிய தொடரை ஆரம்பிச்சுட்டு அதை கண்டுக்காம விட்டதுக்கு என்னை மன்னிச்சுருங்க. அந்த தொடரை தூசி தட்டி மறுபடியும் ஆரம்பிச்சாச்சு. இந்த பதிவுல, Diopters(க்ளோஸ் அப் லென்ஸ்) மற்றும் Extension Tubes(எக்ஸ்டன்சன் டுயுப்) ஆகிய வழிமுறைகளின் எடுத்துக்காட்டுகளை பார்ப்போம். Diopters(க்ளோஸ் அப் லென்ஸ்): கீழே உள்ள படம் 70-300mm லென்சின் உதவியுடன் எடுக்கப்பட்டது. இந்த நெருக்கத்தில் தான் 7௦-3௦௦mm லென்சில் எடுக்க முடிந்தது. பின்னர் 5T க்ளோஸ் அப் லென்சினை 7௦-3௦௦mm லென்சில் பொருத்தி எடுக்கப்பட்ட படம் கீழே. 70-300mm லென்சின் முன்பகுதி (க்ளோஸ் அப் லென்ஸ் பொருத்துவதற்கு முன்னாள்) 5T க்ளோஸ் அப் லென்ஸ் 70-300mm லென்சின் முன்பகுதி (க்ளோஸ் அப் லென்ஸ் பொருத்திய பின்) SLR காமிராக்களில் மட்டும் அல்ல, சில Canon, Nikon, Panasonic Prosumer வகை காமிராக்களில்(eg Canon G10/G11, Canon S5 IS, Nikon Coolpix 5400, Lumix G1 etc) க்ளோஸ் அப் லென்சினை பொருத்தலாம். அதற்க்கு லென்ஸ் adapter வேண்டும். Prosumer காமிராக்களில் "Raynox DCR-250", "Raynox DCR 150" போன்ற க்ளோஸ் அப் லென்ஸ்களை பயன் படுத்தலாம். Extension Tubes(எக்ஸ்டன்சன் டுயுப்): கீழே உள்ள படமும் 70-300mm லென்சினை மட்டும் பயன்படுத்தி எடுக்கப்பட்டது. இந்த லென்சில் Kenko 20mm Extension tube பொருத்தி எடுக்கப்பட்ட படம் கீழே. Kenko 20mm Extension tube 70-300mm லென்சில் Kenko 20mm Extension tube பொருத்தப்பட்ட பின் இந்த எக்ஸ்டென்சன் டுயுப்கள் பல அளவில் கிடக்கும் (12mm, 20mm, 36mm etc). இவற்றை ஒன்றாக கூட சேர்த்து மாட்டலாம். லென்சின் இறுதி முனைக்கும், காமிரா சென்சாருக்கும் இடையே உள்ள இடைவெளி அதிகரிக்க அதிகரிக்க, மேக்ரோ அளவும் பெரிதாகும். எக்ஸ்டன்சன் டுயுப் பயன் படுத்திய போது இந்த இடைவெளி அதிகரித்ததால் பூக்கள் பெரிதாக சென்சாரில் படம் பிடிக்கப்பட்டது. போன பதிவில் கேட்கப்பட்ட கேள்விகள் - //1:1 மேக்ரோவில் எக்ஸ்டென்சன் ட்யூப் யூஸ் பண்ணும்போது எந்த அளவு படத்தில் டீடெய்ல்ஸ் மாறாமல் வருகிறது?. // எக்ஸ்டென்சன் டுய்பில் எந்த கண்ணாடியும் இல்லாததால் படத்தின் க்ளாரிட்டி கம்மி ஆகாது :) //பொதுவாக எக்ஸ்டென்ஷன் ட்யூப்புகள் செமி மேக்ரோ லென்சுக்குத்தான் செட்டாகுமா அல்லது 1:1 மேக்ரோ லென்சுக்கும் செட்டாகுதா?// எக்ஸ்டென்ஷன் ட்யூப்புகள் எல்லா வகையான லென்ஸ்களிலும் பயன் படுத்தலாம். //டெலிகன்வர்ட்டரில் 2Xஐ விட 1.4X ல் குவாலிட்டி வருவது போல எக்ஸ்டென்ஷன் ட்யூப்பில் எது நல்லா இருக்கும்? // இடைவெளி அதிகம் ஆக ஆக வியு பைண்டர்ல காட்சி கொஞ்சம் இருட்டா தெரியும் (ஒளி கம்மியா சென்சார்ல பட்ரதால). மத்தபடி பிரச்சனை ஒன்னும் இல்லை. உங்களுக்கு எதுவும் சந்தேகம் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். மேலே கூறப்பட்ட வழிமுறைகள் பற்றி உங்களுக்கு மேலும் விபரம் தெரிஞ்சா அதையும் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!!!

Sunday, April 11, 2010

புகைப்படம் பிடிப்பதிலே கொஞ்சம் அதிகம் டென்ஷன் தரக்கூடியது எதுன்னு பாத்தீங்கன்னா தண்ணீரைப் பிடிப்பது தான். தண்ணீர் அல்லது பிரதிபலிக்கும் எதையுமே எடுக்கறது கொஞ்சம் சிரமமானது. அதுலையும் நீர்வீழ்ச்சி, ஆறு போன்றவைன்னா... பார்க்கும் போது அற்புதமா தெரியும் காட்சி படம் எடுத்த பின்னால அட இதென்னன்னு டென்ஷன் கிளப்பும். எனவே தண்ணிய சுட சில டிப்ஸ்.. அதுவும் குறிப்பா நீர்வீழ்ச்சி அல்லது ஓடும் தண்ணீர். இந்த போட்டி நேரத்துல இது கொஞ்சமாவது உதவும்னு நினைக்கிறேன்.
  • சாதாரணமா நீங்க எடுக்கற போட்டோஸ்க்கும் தண்ணி போட்டோக்கும் என்ன வித்தியாசம்னா... தண்ணிய பிடிக்கும் போது ஒண்ணு பிரதிபலிப்பு இருக்கும் இல்லாட்டி, தண்ணீருக்கு உள்ள இருக்கிறது புகைப்படத்துல தெரியும். ஆகவே அதற்கேத்த மாதிரி உங்களோட செட்டிங்ஸ் பார்த்துக்கோங்க.
  • என் உச்சி மண்டைல சுர்ருங்குதுங்கற நல்ல வெயில் நேரத்துல புகைப்படம் எடுக்காதீங்க. புத்தம்புது காலை பொன்னிறவேளைன்னோ அல்லது இது ஒரு பொன் மாலைப் பொழுதுன்னு இல்லாட்டி ஒரு மாலை இளவெயில் நேரம்னு பாடிட்டே எடுங்க. புகைப்படமும் அருமையா வரும். ( பாடுன பாட்டு அதுல ரெக்கார்டு ஆகுமான்னு கேட்டீங்க... டென்ஷனாய்டுவேன் )
  • நீர்வீழ்ச்சி மிகவும் அருமையான சப்கஜெக்ட். ஆனா ரொம்பவே ட்ரிக்கி தண்ணிக்காக மீட்டரிங்க் போட்டீங்கன்னா மத்தது இருட்டடிச்சுடும். அதே நேரம் மத்த சீனரிக்காக மீட்டரிங்க் போட்டீங்கன்னா தண்ணீர் ரொம்ப வெளுத்துடும்.
  • பெரும்பாலான நல்ல நீர்வீழ்ச்சி புகைப்படம் பார்த்தா அதுல நீரோட்டம் பாலருவி மாதிரி ரொம்ப அழகா ரொம்ப வெண்மையா அதே நேரம் ஸ்மூத் லைன் இருக்கும். அதுவே நாம எடுத்தோம்னா தண்ணீர் அங்க இங்க தெரிச்சுட்டு இருக்கும். விஜயாலயனின் படம் ஒரு உதாரணம். இது ஒரு அழகான படம். இதுவே இன்னமும் ஸ்ட்ரீமிங்க் எஃப்பெக்டோட மூனாவது படம்போல இருந்தா எப்படி இருக்கும் ? அதே போல நாமும் எடுக்க ஆசை இருக்குமில்லையா உங்களுக்கும், அப்ப ஷட்டர் ஸ்பீடை குறைச்சு அபெர்சர் குறைச்சு வச்சு எடுத்து பாருங்க கண்டிப்பா வித்தியாசம் தெரியும்.
  • எஸ்.எல்.ஆர் கேமரா கூட குடும்பம் நடத்துறவங்க சர்குலர் போலரைசர் வச்சு எடுங்க. அப்போ தேவையற்ற பிரதிபலிப்பு தடுத்து காண்ட்ராஸ்ட் கூட்டி எடுக்கலாம். நான் சாதா கேமராவோட குடும்பம் நடத்திட்டு இருக்கேன்னு சொல்றவங்க உங்க கிட்ட கூலிங்க் கிளாஸ் இருக்குமில்லையா அதை லென்ஸ் முன்னாடி வச்சுக்கோங்க. போலரைசர் ஃபில்டர் எஃபக்ட் கிடைக்கும்.
  • ஐ.எஸ்.ஓ செட்டிங் முடிஞ்ச அளவுக்கு குறைஞ்ச பட்சமாக இருத்தல் நலம். குறைஞ்ச ஷட்டர்/குறைஞ்ச அபெர்சர் போட்டு எடுக்கும் போது வரும் வெளிச்சப் புள்ளிகள் குறையும்.
  • ப்ராக்கெட்டிங்க் ஆப்ஷன் இருந்தா அது வச்சு வேற வேற எக்ஸ்போஷர்ல மூனு ஷாட் எடுத்து, எச்.டி.ஆர் போட்டோவா போடுங்க. நீர்வீழ்ச்சி போன்ற படங்களுக்கு எச்.டி.ஆர் நல்ல பயனளிக்கும்
  • ஆறுகளில் பாறைகளின் மேல் தவழ்ந்து செல்லும் நதியலைகளை ஸ்லோ ஷட்டர்ல ஒருமுறையும், அதி வேக ஷட்டர்லயும் எடுத்து பாருங்க. ரெண்டுமே நல்ல திருப்தி அளிக்கும்.
உதாரணத்திற்கு படம் தந்த விஜயாலயனுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ் கேள்வி - தண்ணீரில் இருந்து கேமராவை பாதுகாப்பது எப்படி : இது போன்ற இடங்களில் சாரல் மூலம் கேமரா மேல் நீர் படிய வாய்ப்பிருக்கிறது. அதில் இருந்து தப்ப எளிதான வழி - ஷவர் கேப் சிலது கைவசம் வைத்துக் கொள்ளுங்கள். லென்ஸ் பகுதி விட்டு மற்றவற்றை ஷவர் கேப் கொண்டு மூடிவிடலாம். சட்டென்று மழை வருவது போல் இருந்தால் ஷவர் கேப் முன்னும் பின்னுமாய் போட்டுவிட்டால், கேமரா நீரினால் பாழாவது தடுக்கலாம். இதையும் தவிர்த்து தேங்கிய நீர், குளம், ஏரி,கடல் தண்ணீரைப் பிடிக்கறது, தண்ணீர் துளிகளைப் பிடிப்பது என பல உள்ளன. நேரமிருப்பின் பின் அவைகளைப் பற்றியும் பார்ப்போம். அடடே முக்கியமான ஒண்ணு சொல்ல மறந்துட்டேனே... " மாத்தி யோசிங்க "



மிக அருமையாக பட்டாம் பூச்சி படத்தை பேக் லைட்டுடன் அழகாக பிடித்துள்ள ஆனந்தம் அவர்களின் படம் `இந்த வாரப் படமாக` தேர்ந்தெடுக்கப்படுகின்றது..





இவரின் மற்ற படங்கள் இங்கே..





பிட் குழுவினரின் சார்பாக அவருக்கு வாழ்த்துக்கள்..

Tuesday, April 6, 2010

முன்னொரு காலத்தில் சேனல் மிக்ஸ்ர் உபயோகப்படுத்தி கருப்பு வெள்ளை படங்களை செய்வது பற்றி பார்த்தோம். இந்த முறை சேனல் மிக்ஸர் மூலம் வண்ணங்களை எப்படி மெருகேற்றுவது பற்றி. படத்தை கிம்பில் திறந்து பின்னணி லேயரை நகலெடுத்துக் கொள்ளுங்கள். அடுத்து colors->Components->Channel Mixer தெரிவு செய்யுங்கள். Output Channel பகுதியில் Red, Green, Blue மூன்று வண்ணங்களும் இருக்கும். Output Channel: Red பகுதியில் Red=100 Green=0, Blue=0 என்று இருக்கும். இதே போல பச்சை பகுதியில் பச்சை 100, ம்ற்றவை 0 என்றும் இருக்கும். நீலப் பகுதியில் நீலம் 100 என்றும் மற்றவை 0 என்றும் இருக்கும். முதலில் Output Channel: Red தெரிவு செய்துக் கொண்டு, Red 150 Green -25 Blue -25 என்று மாற்றுங்கள் ( கூட்டுத்தொகை இன்னமும் 100 தான், 50 சிவப்பை அதிகரித்து, அதை பச்சை மற்றும் நீலத்தில் இருந்து எடுத்து விட்டோம்.) இதேப் போல பச்சையிலும், Output Channel Green : Red= -25, Green= 150 Blue= -25 நீலத்திலும் Output Channel Blue : Red: -25 Green: -25 Blue: 150 அவ்வளவுத்தான். ஏதேனும் ஒரு வண்ணம் மிகுதியாகத் தெரிந்தால் லேயர் மாஸ்க் உபயோகப்படுத்தி குறைந்துக் கொள்ளுங்கள்.
 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff