Friday, August 14, 2015

குழந்தைகளும் படம் பிடிக்கலாம்.. - செல்லமே இதழில்..

2 comments:
 
ஆகஸ்ட் 19 உலகப் புகைப்பட தினத்தை முன்னிட்டு ‘செல்லமே’ இதழில்..

நிழற்படம் அல்லது புகைப்படம் என்பது நிகழ்வுகளை அல்லது நினைவுகளை ஓரிடத்தில் உறையச் செய்து சேமித்து வைக்கும் கலை. ie.. Freezing  a piece of time in History.  இது ஓவியம் வரைவது போல  ஒரு அழகிய கலை தான். இன்றைய நவீன உலகில்  நம் குழந்தைகளும் செல்பேசி ஆரம்பித்து பெரிய கருவி வரைக்கும் உள்ள கேமராக்களை உபயோகிக்கும் வாய்ப்புகளைப் பெறுகிறார்கள்.  அவர்களின் ஆர்வத்தை தூண்டி அவர்களும் நல்ல புகைப்படக் கலைஞர்களாக வளர்வதில்  நம் பங்களிப்பு எப்படி இருக்க வேண்டும் ?
#1 -  கேமராக்களை எப்படிக் கையாள்வது என குழந்தைகளுக்கு பக்குவமாக சொல்லிக் கொடுங்கள். ​ உதாரணமாக முதலில் அந்த கழுத்துப் பட்டையை கழுத்தில் மாட்டிக் கொள்வது கைத் தவறினாலும் கேமரா கீழே விழாமல் பாதுகாக்கும், கையை லென்ஸின் அடிப்புறம் பிடித்துக் கொள்வது படம் எடுக்கும் போதான அசைவை தடுக்கும்,

கால்களை முன்னும் பின்னுமாக வைத்து ஸ்டெடியாக நிற்பது தடுமாறாமல் இருக்கும். 

2 -  புகைப்படம் எடுக்கும் போது புகைப்படத்தை விட சுய பாதுகாப்பும் கருவியின் பாதுகாப்பும் முக்கியம் என்பதை குழந்தைகளுக்கு
​நாம் உணர்த்த வேண்டும். 

3-  உறுத்தலற்ற பின்னணியை தேர்வு செய்வது மிகவும் அவசியம்.  முன் பக்கம்  இருக்கும் சப்ஜெக்ட் நன்றாக இருந்தாலும் பின்னணி சரியில்லை எனில் மொத்தப் படமுமே சரியில்லை என்றாகிவிடும்.

4-  குழந்தைகளின் கற்பனையை விரிக்க விடுங்கள்.  அவர்கள் விரும்பும் கோணங்களில் படங்களை எடுக்கட்டும்.
அவற்றில் சில இதுவரை நாம் பார்த்திராத கோணங்களாகவும் இருக்கக் கூடும். உங்களின் ஆலோசனையும் கொடுக்கலாம். ஆனால் அது தான் வேண்டும் என்று வற்புறுத்தாதீர்கள். இதனால்குழந்தைகளின் கற்பனை எண்ணம் சிதறும். 

5- படம் எடுக்கும் போது, எடுக்கப் படும் பொருள் முழுமையாக இருக்கும் படி பார்த்துக் கொள்ளவேண்டும். பாதி தலை, ஒருபக்கம் கண், வயிறு மட்டுமான உடல் என்று ஒருவரை படம் எடுத்தால் பார்க்க நன்றாகவா இருக்கும் ? முக்கியமாக  கை கால் முட்டிக்கு கீழ் கொஞ்சம் தெரிவது போல, விட்டுவிடுவது, தலையில் பாதி முடி இருக்க மீதியை விட்டுவிடுவது,  போன்றவற்றை தவிர்க்கலாம். முட்டிக்கு கீழே எடுக்கும் போது பாதமும் / முழு கைகளும் சேர்ந்து வருவது புகைப்படத்தை செம்மையாக்கும். 

6 -  கருவியை நேராக பிடிக்க பழக வேண்டும்.  அந்த துறு துறு  பிஞ்சு கைகளை  ஒரு நிமிடம் கருவியை நேராகப் பிடித்து படங்களை எடுக்கப் பழக்கி விட்டால் பாதி வெற்றி அடைந்துவிட்டீர்கள் என்றே சொல்லுவேன்.

6 -   கேமரா   ஒரு கருவி மட்டுமே, எப்படி ஒரு தூரிகையினால் மட்டும் ஓவியம் அழகுறாதோ, அது போலவே படம் எடுப்பவரின் தனித்தன்மை இல்லாவிட்டால் எந்த கருவியாக இருந்தாலும் அதில் வரும் படங்களில் உயிர் இருக்காது.

7 - படங்கள் இயல்பாக இருக்க யாரையும் வற்புறுத்தி நின்று  போஸ் கொடுக்க வைக்காதீர்கள்.  ஆதார் அட்டை,  ரேஷன் அட்டைகளுக்கு வேண்டுமானால் அப்படி  நின்று கொள்ளலாம்.  ஆனால் அப்படியான விறைப்பு போஸ், இங்கே படங்களின் உயிரோட்டத்திற்கு அவை தடையாகிப் போகலாம். 


9 -  நிறைய படங்களை எடுக்கத் தூண்டுங்கள்.  எந்த இடங்களில் நெருங்கி எடுக்க வேண்டும், எந்த இடத்தில் சற்று தூரத்தில் நின்று எடுக்க வேண்டும் போன்றவற்றிற்கு ஆலோசனை வழங்குங்கள்.

10.  முக்கியமாக எடுக்கக் கூடியன, எடுக்கத் தகாதன  என இருப்பவற்றைகுழந்தைகளுக்கு அறிவுறுத்தலாம். குழந்தைகளையும் நம்மையும் தர்ம சங்கடத்தில் கொண்டு நிறுத்தம் சந்தர்ப்பங்களை இவை தவிர்க்கும். 

11 - புகைப்படத்திற்கு தேவையான முக்கிய காரணி வெளிச்சம். அவற்றை கருவி மூலம் எப்படி கட்டுப் படுத்தலாம் என்பதை அபர்ச்சர், ஐ.எஸ்.ஓ, ஷட்டர் ஸ்பீட் போன்ற அடிப்படை விவரங்க்களை பொறுமையாக குழந்தைகளுக்குப் புரியும்படி விளக்கலாம். ஒவ்வொன்றும் ஒன்றுக் கொன்று தொடர்புடையவை. இவற்றின் சரிவிகித அமைப்புத் தெரிந்துவிட்டால் புகைப்படக் கலை ஒன்றும் கடினமில்லை. மிச்சம்  எல்லாம் உங்கள் மக்களின் கற்பனை வளத்தைப் பொறுத்து படங்கள் மிளிரும். 

12 . எல்லா வயது குழந்தைகளுக்கும் மேற்சொன்ன தொழில் நுட்ப விவரங்களை புரிய வைத்து விட முடியாது ஆகையால். 5 வயதுக்கு கீழான குழந்தைகளுக்குகுறிப்பிட்ட வண்ணங்கள், வடிவங்கள், குறிப்பிட்ட வகை உடை உடுத்திய மக்கள் என அவற்றை அவர்களின் கற்பனைக் கேற்றவாறு கொண்டு வரச்செய்யலாம்.     வயதுக்கேற்றமாதிரி ஒரு கதையை உருவகித்து அதற்கேற்ற பாத்திரங்களை பொம்மைகளில் இருந்தோ, அல்லது மனிதர்களோ எப்படியோ அவர்களின் கற்பனைக்கேற்ற விதத்தில் படமெடுத்துக் கொண்டுவரச் செய்யலாம். அது அவர்களின் இன்னொரு  உலகத்தை விரியச் செய்யும். 

13. ஆறு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு  மேற்சொன்னவற்றோடு, ரூல் ஆப் தேர்ட் , குறைந்த வெளிச்சத்தில் எடுப்பது, பொருளுக்கு பின்னாடி வெளிச்சம் அதிகம் இருந்தால் அதை எப்படி நமக்கு ஏதுவாக பயன்படுத்துவது, மாலை சூரியனை படம் பிடிப்பது என சற்றே அவர்களின் எல்லையை பெரிதாக்கலாம்.

14.  போகஸிங்க் பற்றி போதிய அளவு தெளிவு இருக்க வேண்டும். இல்லையேல் எடுக்க வேண்டிய பொருள் மங்கிப் போய் தேவையற்ற மற்றவை மிகத் தெளிவாக வரும்.

15. அதி முக்கியமான ஒன்று. குழந்தைகள் எடுத்தப் படத்தை அவர்களுடன் அமர்ந்து அவற்றை பார்வையிடுங்கள். உங்களின் ஆலோசனைகள், திருத்தங்களை சொல்லுங்கள். உங்களுக்குள் முக்கியமாக மனதில் நிறுத்த வேண்டிய கட்டளை. குழந்தைகள் எடுத்த  எல்லாப் படங்களும் மிக அழகியப் படங்களே.. அவை சில சட்டங்களுக்கு கொண்டு வரச்செய்ய ஆலோசனை தருவது மட்டுமே நம் கடமை. 

16 -   நிறைய இணைய தளங்கள்  புகைப்படங்களைப் பகிர இருக்கின்றன. ப்ளிக்கர், ப்ளாக்கர் போன்றவை சில எடுத்துக் காட்டுகள். குழந்தைகளின் படங்களை, அவர்கள் சொல்லும் சிறு குறிப்புடன் பகிருங்கள். அவற்றிற்கு வரும் உற்சாக வரவேற்பை குழந்தைகளிடம் தவறாமல் தெரிவியுங்கள். 


அப்புறம் என்ன ? குழந்தைகள் படம் எடுக்க உதவ வேண்டாமா... இங்கேயே இருக்கிறீர்களே... போங்க சார்.. குழந்தை போட்டோ எடுக்க போஸ் குடுங்க்க.. ப்ளீஸ்....

கட்டுரை: ஐயப்பன் கிருஷ்ணன்
படங்கள்: ராமலக்ஷ்மி

நன்றி செல்லமே!
***

2 comments:

 1. நான் இதை எனது குழந்தைகளிடம் ஏற்கனவே செய்துபார்த்திருக்கிறேன் .அருமையான புகைப்படங்கள் எடுத்திருந்தார்கள் எனது குழந்தைகள் .இங்கு குழந்தைகள் எடுப்பதற்காகவே சில கமராக்கள் விற்கின்றார்கள் ,
  நான் எனது பழைய கமரா ஒன்றினை கொடுத்து பார்த்தேன் பிள்ளைகளின்
  படங்களில் அதிகம் மேகம் ஊர்வன ,பறப்பன,பூக்கள் ,கார்கள் இப்படியாக
  இருந்தன .பாடசாலையில் கூட படம் எடுக்க கற்பிக்கின்றனர்
  உண்மையில் நல்லதொரு கட்டுரை .பிள்ளைகளின் கற்பனை திறனை
  தட்டிவிட புகைப்பட கலை உதவும் .
  /////அதி முக்கியமான ஒன்று. குழந்தைகள் எடுத்தப் படத்தை அவர்களுடன் அமர்ந்து அவற்றை பார்வையிடுங்கள். உங்களின் ஆலோசனைகள், திருத்தங்களை சொல்லுங்கள். உங்களுக்குள் முக்கியமாக மனதில் நிறுத்த வேண்டிய கட்டளை. குழந்தைகள் எடுத்த எல்லாப் படங்களும் மிக அழகியப் படங்களே.. அவை சில சட்டங்களுக்கு கொண்டு வரச்செய்ய ஆலோசனை தருவது மட்டுமே நம் கடமை. ///

  அருமையான கருத்துக்கள் . பிள்ளைகள் எடுத்த படங்கள் சரியாக வராவிட்டாலும் திருத்தங்கள் சொல்வேனே தவிர குறைகள் சொல்வதில்லை

  ReplyDelete
 2. சிறப்பான கருத்துகள். பாராட்டுகள்.

  ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff