Showing posts with label flickr. Show all posts
Showing posts with label flickr. Show all posts

Friday, June 7, 2013

#1  1 GB வேலி முள்
விலகியது:)!
Flickr அபிமானிகளுக்கு ஒரு நற்செய்தி! அன்றாடம் உலவும் சமூக வலைத்தளங்களிலும், பிரத்தியேகமாகப் புகைப்படங்களுக்கென வந்திருக்கும் புதிய பல தளங்களிலுமாக நம் படங்களைப் பகிர எத்தனையோ வழிகள் வந்து விட்டாலும் இவை அனைத்துக்கும் முன்னோடியாகவும் இன்றளவிலும் முதன்மையானதாகவும் இருந்து வருவது FLICKR.

இருவாரங்களுக்கு முன்வரையில் 1 GB வரை (சுமார் 200 படங்கள்) மட்டுமே இலவசமாக ஏற்ற முடிவதாக இருந்தது. அதில் sets உருவாக்க இயலாது. படங்களையும் பார்த்துப் பார்த்து குறைந்த அளவு இருக்குமாறு வலையேற்ற வேண்டிய சூழல். இதனாலேயே 1GB கோட்டா முடிந்ததும், பலரும் அதில் அப்டேட் செய்வதை விட்டுவிட்டு வெளியேறி வந்தனர். ஃப்ளிக்கர் மேல் பற்று கொண்டவர்கள் கூடுதல் வசதிகளை ஆண்டுச் சந்தா கட்டி Pro உறுப்பினர் ஆகித் தொடர்ந்து வந்தனர். நானும் அப்படியே. ஆனாலும் வகைப்படுத்தி சேமித்த ஆயிரத்துக்கும் மேலான படங்கள் எல்லாம் எப்போதேனும் ஆர்வம் குறைகையில் அல்லது தளத்தைக் கவனிக்காமல் விடுகையில் மறைந்து போகுமே எனும் உறுத்தல் இருந்தபடியே இருந்தது. அதாவது சந்தா கட்டத் தவறுகையில் 1GB வரையிலாக நாம் ஏற்றிய படங்களை மட்டுமே நம் கணக்கில் காட்டிக் கொண்டிருக்கும் Flickr.

பலருக்கும் இருந்து வந்த இந்தத் திருப்தியின்மையைத் தீர்க்கும் விதமாகவும்.., ‘Pro உறுப்பினர்கள் மட்டுமே உபயோகிக்க இலாயக்கு’ என்றொரு பொதுக் கருத்து உருவாகி மற்றவர்கள் விலக ஆரம்பித்தது கண்டும் சந்தா கட்டாமலே சகலரும் அனைத்துப் பயன்களையும் பெற்றிடும் விதமாக.. பொதுப் பொலிவோடு மலர்ந்திருக்கிறது ஃப்ளிக்கர் இப்போது.

* அதன் படி சந்தா கட்டியவர் கட்டாதவர் பாகுபாடின்றி அனைவரும் 1 டெராபைட் (1024 GB) கொள்ளளவு வரை (ஏறத்தாழ, 20000 படங்களை) ஸ்டோர் செய்திடும் வசதியைக் கொண்டு வந்திருக்கிறது. படங்களை நாம் பெரிய அளவு கொண்டதாகவே சேமித்து வைத்துக் கொள்ள முடியும்.

*  ‘இதுவரை கட்டிய சந்தா திருப்பித் தரப்படுமா’ எனும் கேள்வி பரவலாக எழுப்பப்பட்டு வருகிறது. சந்தா திருப்பித் தரப்படாது. அவரவர் சந்தாக்காலம் முடிகிற வரையில் (பெரும்பாலும் 2 வருடத்துக்கு செய்து கொள்வது வழக்கம்) 2 டெராபைட் (2048 GB) கொள்ளளவு வழங்கப்படுகிறது. ஆனால் அதனால் பெரிய பயனேதுமில்லை. ஏனெனில் சந்தாக்காலம் முடிந்ததும் மீண்டும் 1 டெராபைட் அளவு படங்களே கணக்கில் இருக்கும் என்பதோடு இனி விரும்பினாலும் ‘சந்தா’ வசதியை ஃப்ளிக்கர் வழங்குவதாய் இல்லை.

* சந்தாக் காலம் முடிகிறவரை விளம்பரங்கள் நம் பக்கங்களில் தோன்றி எரிச்சலூட்டாது.

தோற்றத்திலும் சில மாற்றங்கள்:

* ஒவ்வொருவர் ஃபோட்டோஸ்ட்ரீம் முகப்பிலும் குறிப்பிட்ட அளவில் மட்டுமே படங்களை முன்னர் காட்டி வந்தது. சிறந்த படங்களைத் தேடவோ, அல்லது அனைத்துப் படங்களையும் பார்வையிடவோ ஒவ்வொரு பக்கமாகத் திறந்தபடி செல்ல வேண்டியிருந்தது. இப்போது பிகாஸா ஆல்பங்களைப் போல, scroll செய்து  பார்வையிட வசதி.

* கருப்புப் பின்னணியில் படங்களைக் காண அதன் மேல் மீண்டும் க்ளிக் செய்து லைட் பாக்ஸில் திறக்க வேண்டியிருந்தது. இப்போது பக்கத்தின் மேல்பாகம் கருப்புப் பின்னணியில் படங்களைக் காட்ட, கீழ்பாகம் வெண்ணிறத்தில் உறுத்தாமல் கமெண்ட்ஸை வாசிக்கும் வசதியுடன் உள்ளது. லைட் பாக்ஸ் வசதியும் தொடருகிறது.

*  பழைய தோற்றமே நேர்த்தியாய் இருந்தது என்றும், படங்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டி கசமுசவென இருக்கிறது இப்போது என்றும் வருந்துகிறார்கள் சிலர்.  மற்றவர் பக்கங்களை அல்லாவிட்டாலும் நம் பக்கத்தை sets-favorites-யை அடுத்து இருக்கும் edit-யை உபயோகித்து பழைய தோற்றத்துக்கு வரவைத்து பார்வையிட, உபயோகிக்க இயலும்.

* முகப்பிலேயே தெரிந்துவந்த exif data மற்றும் sets இப்போது க்ளிக் செய்தால்தான் பார்க்கும்படி ஆகிவிட்டுள்ளது குறை.

இனி பலரும் இதில் இணைந்து பயன்பெறுவார்கள் என நம்பலாம். முன்னர் 200-வுடன் விட்டுச் சென்றவர்கள் மீண்டும் பகிர ஆரம்பித்திருக்கிறார்கள்.

தொடர்ந்து பயன்படுத்துகையில் ஒவ்வொரு பயன்பாட்டையும் நீங்களே அறிந்து கொள்வீர்கள்தான். ஆனாலும் ஏன் சின்னச் சின்ன விஷயங்களையும் இங்கே தரப் போகிறேன் என்றால் இவை ஒவ்வொன்றையும் நான் அனுபவத்தில் அறிந்திட பல நாட்கள், மாதங்கள் ஏன் வருடங்களே பிடித்தன. எனவே புதிதாக இணைகிறவர்களுக்கு பயனாகக் கூடும் எனும் நம்பிக்கையுடன்.. சில குறிப்புகள்:
.

* படங்களுக்கான பாதுகாப்பு (downloading option-யை disable செய்து வைக்கலாம்), அப்லோட் செய்கிற வேகம், படங்களை வகைப்படுத்துகிற வசதி ஆகியன சிறப்பாக உள்ளன.

* படங்களை எடுத்த இடத்தை வரைபடத்தில் (location map) காட்ட முடிவது, விவரங்களை tag செய்ய முடிவது ஆகியவற்றால் கூகுள் போன்ற இணையத் தேடல்கள் மூலமான வருகையையும் படங்கள் பெறுகின்றன.

* வலைப்பதிவுகளை நாம் திரட்டியில் இணைப்பது போல நமக்கேற்ற குழுக்களைக் கண்டுபிடித்து  (உதாரணமாக, நீங்கள் எந்தவகைப் படங்களை அதிகம் எடுக்கிறீர்களோ அதற்கேற்ற க்ருப்களை கீழ்வருமாறு: nature, sun, sea, flowers, nikon, canon மற்றும் வாழும் ஊர், சென்ற இடம் இப்படி..) தேடிக் கண்டு பிடித்து இணைந்து படங்களைப் பகிரலாம். பொதுவாகப் பகிர இருக்கவே இருக்கிரது நமது  PiT Pool . இங்கு இணைக்கப்பட்ட படங்களைக் கொண்டே ‘இந்த வார சிறந்தபடம்’ முன்னர் PiT தளத்தில் தேர்வாகி வெளிவந்து கொண்டிருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

* நாம் தொடருபவர்கள் வலையேற்றும் படங்களை உடனுக்குடன் காண இங்கே (Contacts - Recent Posts) செல்லலாம்.

* நமது அனைத்துப் படங்களுக்குமாக வரும் கருத்துகள், நாம் இட்ட கருத்தைத் தொடர, வருகிற தகவல்களைப் பார்க்க ஆகியவற்றுக்கு Recent Activity பக்கம் உதவும்.

* ஒவ்வொரு நாளும் ஃப்ளிக்கர் தேர்வு செய்யும் ஆகச் சிறந்த ஐநூறை இங்கே Explore செய்யலாம். திறமையான புகைபடக் கலைஞர்களின் படங்களை அவதானிப்பதே ஒரு நல்ல பயிற்சியாகவும் அமைந்து போகிறது.

*நமது மற்றும் மற்றவர் படங்களில் விருப்பமான பகுதியைக் கட்டம் கட்டி (பாராட்டவோ, அல்லது suggestion சொல்லவோ) note சேர்க்கும் வசதி ஃப்ளிக்கரின் தனிச் சிறப்பான ஒன்று.

* உறுப்பினர்களைத் தொடர்பு கொள்ள மின்னஞ்சல் வசதி உள்ளது.  அதன் வழியே தொடர்பு கொண்டு நம் படங்களை வாங்குவோரும் உண்டு. make my trip.com-யை அடுத்து map my india நிறுவனமும் மெயில் மூலமாக தொடர்பு கொண்டு லால்பாக் மலர்கண்காட்சிப் படம் (தில்லி தாமரைக் கோவில்) படங்களை தங்களது பெங்களூர் சுற்றுலா வழிகாட்டிப் புத்தகத்துக்காகக் கேட்டு வாங்கிக் கொண்டிருந்தது. நாம் எடுக்கும் படங்களுக்கு இப்படியான அங்கீகாரங்கள் கிடைப்பது மகிழ்ச்சியான ஒன்றுதானே.

எடுக்கும் படங்களை எப்படி கமர்ஷியலாகப் பயன்படுத்துவது என பலருக்கும் ஒரு கேள்வி இருந்து வருகிறது. அதற்கு Getty Images கை கொடுக்கிறது Flickr- வுடன் கைகோர்த்து.

* Getty Images:
ஒவ்வொரு சமயத்திலும் ஒவ்வொரு வகையான படங்களுக்கான தேவை இருக்கிறது இவர்களுக்கு. நமது ஃபோட்டோஸ்ட்ரீமில் அவற்றைத் தேடி எடுத்து நமக்கு அவற்றைத் தர விருப்பமா எனக் கேட்கிறது. அப்படிக் குறிப்பிட்டதைத் தேடும் சமயத்தில் கண்ணில் படுகிற பிற நல்ல படங்களையும் பட்டியலில் சேர்த்துக் கொள்கிறது. அவர்கள் தேர்வு செய்த எனது சில படங்கள்:

இவற்றில் நாம் விரும்புவதை அவர்களுக்கு விலைக்குக் கொடுக்கலாம். அதற்காக அவர்கள் முன் வைப்பது இரண்டு விதமான உரிமைகள். ஒன்று Common license. இன்னொன்று restricted license with royalty.

முதலாவது பொதுவான உரிமைப்படி, படங்களை நாமும் பயன்படுத்தலாம். அவர்களும் பயன்படுத்தலாம். அதே நேரம் வேறுயாரும் கூட பயன்படுத்தலாம். நம்முடனான அவர்களது ஒப்பந்தத்தை ஒவ்வொரு வருட முடிவிலுமாக 3 வருடங்கள் நீட்டித்துக் கொள்கிறார்கள். தேவையானவர்களுக்கு படங்களை விற்று அதில் சுமார் 70% அவர்களுக்கு 30% படம் எடுத்தவர்களுக்கு என நிர்ணயிக்கிறார்கள்.

இரண்டாவது, முழு உரிமையும் அவர்களுக்கே கொடுத்து விடுவது (நாம் பயன்படுத்துவதானாலும் அவர்களிடம் அனுமதி பெற வேண்டும்). இதில் படங்கள் விற்பனையாகும் ஒவ்வொரு முறையும் எடுத்தவர்களுக்கு 40% வரை royalty கொடுக்கிறார்கள்.

அவர்களாக தேர்வு செய்வது போக ‘இந்தப் படங்களைக் கொடுக்கச் சம்மதம்’ என முடிவு செய்பவற்றை அவர்களது group-ல் இணைத்திடும் வசதியை வைத்திருந்தார்கள் முன்னர். இப்போது அது நீக்கப்பட்டு விட்டது. ஆகவே அவர்களது தேடல்களின் போது நாம் கொடுக்க முடிவு செய்யும் படங்களை எளிதாக அவர்கள் கண்டு கொள்ள Getty Images - For your attention போன்றதான தலைப்பில் ஒரு set (folder) உருவாக்கி வைக்கலாம்.

பெரிய அளவிலான வருமானம் என்று கொள்ள முடியாது. எடுத்தது ஏதோ ஒரு வகையில் பயன்படட்டும் என்ற நோக்கில் கொடுப்பவர்கள் முயன்றிடலாம்.

பத்திரிகைகளுக்கானாலும் சரி, வேறு யார் படங்களுக்காக நம்மை அணுகினாலும் சரி, வாட்டர் மார்க் இல்லாத படங்களையே தர வேண்டியிருக்கும். எனவே படங்களின் ஒரிஜனல் கோப்பையும், process செய்த படங்களை வாட்டர் மார்க் இல்லாமலும் தனியாக ஒரு கோப்பில் எப்போதும் சேமித்து வைப்பது அவசியம்.

நான் எடுக்கும் படங்களின் உரிமம் எப்போதும் எனக்கு இருக்க வேண்டும் என்பது எனும் தனிப்பட்ட விருப்பத்தால் (காமன் லைசன்ஸில் அனுமதியின்றி மற்றவரும் பயன்படுத்துவதாக இருப்பது சம்மதமாக இல்லை) நான் enroll செய்து கொள்ளவில்லை. எனவே அவர்களும் முதன்முறைக்குப் பிறகு அணுகவில்லை. இங்கே இன்னொரு விஷயத்தையும் கவனிக்கத் தருகிறேன். தேர்வான 7 படங்களில் 3,5,7 ஆகியவை DSLR உபயோகிக்க ஆரம்பிக்கும் முன் Point and shoot-ல் எடுத்த படங்கள்:

ஷ்ராவணபெலகுலா ‘கோமதீஷ்வரா’
2006-ஆம் ஆண்டில் மகாமஸ்தக அபிஷேகத்தின் போது 
Nikon E3700 பாயின்ட் & ஷூட் கேமராவில் எடுத்த படம்.
 http://www.flickr.com/photos/ramalakshmi_rajan/6812580774/
DSLR ஆக இருந்தால் 18mm-ல் 57 அடிச் சிலையை முழுதாகப் படமாக்கியிருக்க முடியும்தான். அதிக பட்ச தொலைவில் நின்றும் P&S-ல் இவ்வளவே கவர் செய்ய முடிந்தது. இருந்தாலும் தேர்வாகியிருக்கிறது. கூடுதல் வசதிகள் DSLR-ல் இருப்பது உண்மைதான் என்றாலும் பாயிண்ட் அண்ட் ஷூட்டிலும் நல்ல படங்களை நாம் தர முடியும். இப்போது PiT உறுப்பினர் குழுவில் இடம் பெற்று விட்டிருக்கிற நான், இந்தத் தளம் அறிமுகமாகி முதல் மூன்று வருடங்கள் ஒருமாதம் கூட தவறாமல் போட்டிகளில் கலந்து கொண்டு வந்த போது பலரும் குழுவிடம் அடிக்கடி முன் வைத்த கேள்வி இது:‘டி எஸ் எல் ஆர் படங்களுக்குத் தனியாகவும், பாயின்ட் அன்ட் ஷூட் படங்களுக்குத் தனியாகவும் போட்டியைப் பிரித்தால் என்ன?’.  நல்ல படங்களை எந்தக் கேமராவிலும் எடுக்கலாம் என நம்பிக்கையூட்டும் விதமாகக் குழுவினர் தொடர்ந்து தந்து வந்த பதில்: ‘It's not the brush, it's the Painter'. எந்தத் தூரிகையை வைத்துத் தீட்டுகிறோம் ஓவியத்தை என்பது முக்கியமே இல்லை. இதோ Getty Images தேர்வு செய்த இன்னொரு படம் Sony W80-ல் எடுக்கப்பட்ட ஒன்றே:

# நெல்லை காந்திமதி அம்மன் கோபுரம்
http://www.flickr.com/photos/ramalakshmi_rajan/4894130962/

சித்திரமும் கைப்பழக்கம். என்ன சொல்ல வருகிறேன் என்றால் தூரிகையைக் காய விடாதீர்கள்:)! எப்போதும் வண்ணங்களில் குழைந்து ஈரமாகவே இருக்கட்டும் அது. தொடர்ந்து படம் எடுத்துக் கொண்டே இருப்பதுதான் நம் திறனை வளர்க்க சிறந்த வழி. 

கூடு திரும்பும் இப்பறவைகளைப் போல் Flickr-கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள் 1GB-யோடு விட்டுச் சென்றவர்கள்.

என்ன செய்யப் போகிறீர்கள், நீங்கள்:)?

Sunday, December 19, 2010

PiT ஆர்வலர்கள் விளையாட ஒரு புதிய ஆட்டம் கார்த்திகேயனால் Flickrல் துவங்கப்பட்டுள்ளது.நீங்க செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்:
1) அந்த தளத்துக்கு போங்க.
2) கடைசியா யாரு விளையாடி இருக்காங்கன்னு பாருங்க.
3) அந்த நபரின் Flickr படங்களை பாருங்க. அதுல உங்களுக்கு ரொம்ப பிடிச்ச படத்தை சொல்லுங்க.
4) அடுத்து வரும் நபர், உங்க படங்களில் எது அவருக்கு புடிச்சிருக்குன்னு சொல்லுவாரு.

அப்படியே ஆடிக்கிட்டே இருக்கலாம் டயர்டாகர வரைக்கும்

இன்னொருத்தர், நம்ம படத்தை பாத்து ஆஹான்னு சொல்றது ஒரு பரம சுகம்.

Tuesday, November 2, 2010

PiTன் கேள்வி பதில் பக்கத்தில் இடம்பெறும் கலந்துரையாடல்களை இனி Flickr தளத்தில் 'Discussion'ஆக தொடரலாம் என்று முடிவு செய்துள்ளோம்.
200க்கும் மேலாக பின்னூட்டங்கள் இருக்கும் பதிவை, உபயோகிப்பது கடினம் என்பதாலும், Flickr தளத்தின் Discussion Forum, இதைப் போன்ற கேள்வி பதில் விஷயங்களுக்கு ப்ரத்யேகமான வசதிகளுடன் இருப்பதாலும் இந்த முடிவு.

Flickr சில மித்தியக் கிழக்கு நாடுகளில் வேலை செய்யாமல் இருந்தது. ஆனால், சமீபத்தில் அந்த தடை தளர்த்தப்பட்டிருப்பதாக அறிந்தோம். யாருக்காவது, மேலே இருக்கும், 'கேள்வி பதில்' உரல் வேலை செய்யவில்லையென்றால் சொல்லவும்.
(உரலில் http://www.flickr.mud.yahoo.com/ முதலில் சேர்த்துக் கொண்டால் வேலை செய்யலாம்).

ஒரே பதிவில், பின்னூட்டங்கள் வாயிலாக தொடர் கேள்விகள் கேட்காமல், Flickrல் ஒரு புதிய பதிவாக உங்கள் கேள்விகளைக் கேட்டு, சக நண்பர்களிடம் அதற்கான பதிலைப் பெறலாம்.

புகைப்படக் கருவிகளை 'வாங்க விற்க' ஒரு தனிப் பதிவு வைத்திருந்தோம், அதையும், Flickr Discussionல் ஒரு பதிவாக அரங்கேற்றியாயிற்று.

இனி கலந்துரையாடல்கள் Flickrலும், பாடங்கள், போட்டிகள், இங்கே ப்ளாகர் பதிவிலும் தொடரும்.

PiT கேள்வி பதில்: Flickr PiT Group Discussion
வாங்க விற்க: Flickr Topic

பழைய 'கேள்வி பதில்' பதிவு இங்கே உள்ளது.
பழைய 'வாங்க விற்க' பதிவு இங்கே உள்ளது.

நன்றி.

Saturday, September 19, 2009

Genius is 99% perspiration and 1% inspiration அப்படின்னு ஆங்கிலத்தில் ஒரு சொல்லாடல் இருக்கிறது. அப்படி சொன்னவரு விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன். இந்த கருத்து புகைப்படக்கலை கத்துக்கறவங்களுக்கும் பொருந்தும்ங்க. என்ன ஒரே ஒரு வித்தியாசம் புகைப்படக்கலையில் வெற்றி இல்ல தேர்ச்சி என்பது 99 சதவீதம் ஊக்கத்தினாலும்(inspiration) 1 சதவீதம் உழைப்பினாலும்(perspiration) ஆனது. புகைப்படக்கலையில் வெற்றி பெற உழைப்பை விட ஊக்கம் தான் மிக முக்கியமான காரணிங்கறது என்னோட எண்ணம். இங்கே வெற்றி என்று சொல்றது, படிக்கிறவங்க எப்படி எடுத்துக்கறாங்கங்கிறதை பொறுத்தது. அந்த விவாதம் இப்போ நமக்கு வேணாம். இந்த ஊக்கம் எங்கேருந்து எப்படி கெடைக்கும்? ரொம்ப சுலபம்ங்க. நம்மளை நாமே ஊக்கப்படுத்திக்க வேண்டியது தான். அட போங்க பாஸ்! உபயோகமா எதோ சொல்லப் போறீங்கன்னு பார்த்தா புகைப்படக்கலை கத்துக்க சுயமா ஊக்கப்படுத்திக்கனுமாமில்ல? சொந்தமா ஊக்கப்படுத்திக்கனும்னா இவ்வளோ நாளைக்கு நாங்களே பண்ணியிருக்க மாட்டோமா? எவ்வளவு முயற்சி பண்ணாலும் நான் எடுக்கற படம் எனக்கே திருப்தியா அமைய மாட்டேங்குது...ஒரு போட்டியில பங்கெடுத்துக்கிட்டேன்னா எத்தனை முறை முயற்சி செஞ்சாலும் முதல் பத்துல கூட என் படம் வர மாட்டேங்குது. நீங்க சொல்றதெல்லாம் வெறும் jargon மாதிரி தான் தெரியுது. சுயமா ஊக்கப்படுத்திக்கிறதை தவிர எதாவது வேலைக்காவற உருப்படியான வழியைச் சொல்லுங்க அப்படின்னு படிக்கிற நீங்க சொல்லலாம். அப்படி சொன்னீங்கன்னா அப்போ கண்டிப்பா மேல படிங்க. நம்மளை மாதிரி ஆளுங்களுக்காகத் தான் இந்த பதிவு.

பாஸ்! நீங்க நினைக்கிறது எல்லாமே நியாயம் தான். நம்மள்ல பல பேர் ஒரு நிமிஷத்துல எதோ ஒரு ஆசையில ஒரு உந்துதல்ல புதுசா எதையாச்சும் ஒன்னை ஆரம்பிப்போம். அதுக்கப்புறம் அதை தொடர முடியாம தவிப்போம். ஆரம்பிச்ச விஷயத்துக்கு காசும் நெறைய செலவழிச்சிருப்போம். காசையும் செலவழிச்சிட்டு தொடரவும் முடியலையேன்னு குற்றவுணர்வால் தவிப்போம். உதாரணத்துக்குச் சொல்லனும்னா உடம்பு குண்டாவுது, நாளை காலையிலிருந்து ஜாக்கிங் போகலாம்னு ஒரு உந்துதல்ல 3000 ரூபாய்க்கு டிராக் சூட், 2000 ரூபாய்க்கு ரீபாக் ஷூ, ஜாக்கிங் பண்ணும் போது களைப்பு தெரியாம இருக்க பாட்டு கேக்கலாம்னு ஒரு ஐயாயிரத்தைப் போட்டு ஐபாட் இதெல்லாத்தையும் வாங்கி வச்சிட்டு காலைல அஞ்சரை மணிக்கு அலாரம் அடிக்கும் போது அதை ஒவ்வொரு பதினஞ்சு நிமிஷத்துக்கும் அணைச்சிட்டு இழுத்து போத்திட்டு தூங்குவோம். வரிக்கு வரி சேம் ப்ளட் சொல்லறீங்களா? வெல்கம் டு தி சுய முன்னேற்ற புத்தகத்தைத் தலைக்கு வச்சு தூங்குவோர் க்ளப். இதே உதாரணம் ஒரு விஷயத்தைத் தொடங்கிட்டு அதை தொடர முடியாம தவிக்கிறவங்க எல்லாத்துக்கும் பொருந்தும். ஆனா மத்த விஷயங்களை விட புகைப்படக்கலையைக் கத்துக்கறதுக்குச் சொந்தமா ஊக்கம் கொடுத்துக்கறது அதாவது inspire ஆகறது ரொம்ப சுலபம். இதையெல்லாம் சொல்லறதுக்கு எனக்கு என்ன தகுதி இருக்குன்னு கேக்கலாம். ஏன்னா பேசிக்கலி ஐ ஆம் எ சோம்பேறி. இந்தப் பதிவை எழுதறதுக்கே பல நாள் எடுத்துக்கிட்டேன். அதோட மேல சொன்ன எல்லா விஷயமும் எனக்கும் பொருந்தும். இன்னும் கத்துக்குட்டியான என்னை மாதாமாதம் நடக்கும் புகைப்படப் போட்டியில் பங்கெடுத்துக் கொள்ள முடியாத படி ஆப்பு வைத்து PiT ஆசிரியர் குழுவில் சேர்த்துக்கிட்ட காரணம் இதையெல்லாம் நான் எடுத்துச் சொல்லுவேன்னு தான் இருக்குமாக்கும் :). நான் இதுவரை புகைப்படக்கலையில் கத்துக்கிட்டதெல்லாம் An&, ஜீவ்ஸ் என் கல்லூரி நண்பன் திருமுருகன் இவங்களெல்லாம் குடுத்த ஊக்கத்தின் காரணமாகத் தான்.


புகைப்படக்கலையில் சீனியர்கள் சிலரின் ஊக்கத்தினால் நான் கத்துக்கிட்ட சில விஷயங்களைப் பத்தி இந்தப் பதிவுல சொல்லறேன். புகைப்படம் எடுக்கற டெக்னிக்கைப் பத்தி நான் ஒன்னும் சொல்லப் போறதில்லை.

1. நல்லது எதுன்னு தெரிஞ்சிக்கனும்
திரைப்பட இசையமைப்பாளர்களைப் பேட்டி எடுக்கும் போது "உங்களுக்கு எந்த இசையமைப்பாளரின் இசை பிடிக்கும்"னு கேட்டா என்ன பதில் சொல்லுவாங்கன்னு கவனிச்சிருக்கீங்களா? "முன்னோர்களின் இசை"ன்னு ஒரு politically correct பதிலையோ "நான் அடுத்தவங்க இசையைக் கேக்கறதில்லை"ன்னு ஒரு ஓப்பனான பதிலோ வரும். அதுக்கு காரணம் அடுத்தவங்க இசையைக் கேட்டா அந்த இசையோட தாக்கம் நாம உருவாக்கப் போற இசையில வந்துடுமேங்கிற எண்ணம் தான். ஏனென்றால் இசையமைப்பது creativeஆன ஒரு வேலை. புகைப்படம் எடுப்பதும் creativeஆன வேலை தான். ஆனா நல்ல புகைப்படம் எடுக்க கத்துக்கனும்ங்கிற ஆர்வம் உள்ளவர்கள் இசையமைப்பாளர்களோட உதாரணத்தைப் பின்பற்றுனா வேலைக்காகாது. "நல்ல புகைப்படம்"னு சொல்றேனே அதை அடையாளம் கண்டுகொள்வது எப்படி? ஏற்கனவே மத்தவங்க எடுத்து வச்சிருக்கற புகைப்படங்கள் இருக்குமில்லையா அதை பாக்கனும். இதனால் பலன் இருக்குமான்னு கேட்டீங்கன்னா என் அனுபவத்துலேருந்து கண்டிப்பா உண்டுன்னு தான் சொல்வேன். மற்ற புகைப்படங்களோட தொடர்ச்சியா நம்ம படங்களை ஒப்பிட்டுப் பாத்துக்கிட்டே இருந்தோம்னா நம்மளோட லெவல் என்னன்னு நமக்கு தெரியும், அதோட கண்டிப்பா நாளடைவுல நாம எடுக்கிற படங்கள்ல நல்ல மாற்றம் தெரியும். நிற்க. புதுசா புகைப்படம் எடுக்க வந்தாலும் ஏற்கனவே படம் வரையற ஆற்றல் இருக்கறவங்களோட புகைப்படங்களைப் பாத்தா ரொம்ப சூப்பரா இருக்கும். ஏன்னா புகைப்படக்கலையில் மிக முக்கியமான கூறுகளில் ஒன்றான காட்சியமைப்பு பத்தி அவங்களுக்கு ஏற்கனவே தெரிஞ்சிருக்கும். எந்த காட்சியை எப்படி படமா வரைஞ்சா நல்லாருக்கும்ங்கிற அனுபவம் அவங்களுக்கு ஏற்கனவே இருக்கும். அதையே சுலபமா உபயோகிச்சு அருமையான படங்களா எடுப்பாங்க. நான் மேல சொல்லிருக்கற உத்தி இந்த மாதிரியானவங்களுக்கில்லை. நம்ம படம் நல்லாருக்கா நல்லாருக்கான்னு எப்பவும் ஒரு சந்தேகம் இருக்கும் பாருங்க சில பேருக்கு? என்னைப் போல் ஒருவனான அந்த மாதிரியானவங்களுக்குத் தான்:) சரி. அடுத்தவங்க எடுத்து வச்சிருக்கற நல்ல படங்களைப் பார்ப்பது எப்படி? www.flickr.com னு ஒரு வலைதளம் இருக்கு கேள்விபட்டுருக்கீங்களா? உலகின் தலைசிறந்த புகைப்படக்கலை வல்லுநர்கள் பலரின் படங்களும் அங்கே இருக்கு. ஒரு யாஹூ ஐடி இருந்தா போதும், நீங்க கூட அதுல இலவசமா ஒரு கணக்கைத் துவங்கிடலாம். ஒரு நாளிலேயே பல லட்சம் படங்கள் அத்தளத்தில் வலையேற்றப்படுகின்றன. அவ்வளவு படங்களிலிருந்து ஒரு நாளைக்கு 500 படங்களைத் தேர்வு செய்து அவற்றை ஆர்வத்தைத் தூண்டும் புகைப்படங்கள் என்று வகைப்படுத்துகிறார்கள். இத்தகைய படங்களை வகைப்படுத்துவதற்காக(Categorising) அவர்கள் பயன்படுத்தும் சொல் "Interestingness" என்பது. இப்படங்களை 'Explore' எனும் பக்கத்தில் நமது பார்வைக்கு வைக்கிறார்கள். அந்தப் படத்தின் மீது க்ளிக் செய்தால் அப்படத்தினை எடுத்தவரின் சொந்த ஃப்ளிக்கர் வலைப்பக்கத்துக்கு நம்மை இட்டுச்செல்லும். கீழே எக்ஸ்ப்ளோர் பக்கத்தில் இடம்பிடித்த ஒரு அருமையான சில்லுவெட் படம்.

http://www.flickr.com/explore

ஒரு நாளைக்கு 500 படங்களைத் தேர்ந்தெடுப்பார்கள் என்று சொன்னேன் இல்லையா? ஃப்ளிக்கர் தளத்தில் 'Last 7 days interesting' என்ற சுட்டியைச் சுட்டினால் கடந்த 7 நாட்களில் "Interestingness"இல் பகுக்கப்பட்ட, 500 Explore படங்களில் தேர்வு செய்யப்பட்ட ஒரு சிலதை நமது பார்வைக்குத் தருவார்கள். அதில் கீழே இருக்கும் 'Reload' எனும் பொத்தானை அழுத்தினால் ரேண்டமாக வேறு சில படங்கள் வலைப்பக்கத்தில் தெரியும்

http://www.flickr.com/explore/interesting/7days

இப்படங்களில் ஒரு சிலவற்றின் தேர்வு குறித்து ஒரு சிலருக்கு மாற்று கருத்துகள் இருக்கலாம். அதாவது இந்தப் படம் 500இல் ஒன்னா தேர்வாகற அளவுக்கு ஒன்னும் அவ்வளவு சிறப்பா இல்லையேன்னு. ஃப்ளிக்கர் காரர்கள் இப்படங்களை ஒரு அல்காரித்தத்தைக் கொண்டு ஆட்டோமேட்டிக்காகத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனாலும் பெரும்பாலான படங்கள் உயர்தரமான படங்களாகத் தான் இருக்கும். நான் தினமும் ஒரு பத்து நிமிஷம் Last 7 days interesting படங்களைப் பார்ப்பேன். எந்த மாதிரி படங்கள் எடுக்கலாம் என்று வெகுவாக ஐடியாக்கள் கிடைக்கும். இந்த மாதிரியான படங்கள் எடுத்தது எப்படி? எப்படிங்கிற தேடல் கண்டிப்பா ஆரம்பமாகிடும்.

2. உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்
Explore படங்களைப் பாத்தாச்சு. பாத்துட்டு அப்படியே வுட்டுடறதா? அந்த மாதிரி படங்களை நாமும் எடுக்க முயற்சி செய்யனும். Eiffel Tower படத்தைப் பாத்தேன், அந்த மாதிரி படம் எடுக்க நான் எப்படி பாரிசுக்குப் போறதுன்னு லந்து பண்ணப்பிடாது. Eiffel Tower படத்தை பல பேரும் எடுத்துருப்பாங்க. ஆனா அது Exploreஇல் இடம்பிடிக்குதுன்னா அதுக்கு எதாச்சும் ஒரு காரணம் இருக்கும். அது என்னன்னு கண்டுபிடிக்கனும். அதிகம் பேர் பார்த்திராத கோணத்தில் ஈஃபிள் கோபுரத்தை அவர் படம்பிடித்திருப்பார். அதே மாதிரி நம்ம கோயில் கோபுரங்களில் ஒன்றை எடுத்தா எப்படி இருக்கும்னு முயற்சி செஞ்சி பாக்கணும். அப்புறம் இன்னொரு முக்கியமான குறிப்பு. ஒரு காட்சியை ஒரே ஒரு படம் எடுத்துட்டு விட்டுடக் கூடாது. பல கோணங்களிலும் பல படங்கள் எடுக்க வேண்டும். ஒரு படத்துல ஃபோகஸ் சரியா இருக்காது, இன்னொன்னுல வெளிச்சம் அதிகமா விழுந்துருக்கும், இப்படின்னு பல படங்கள் சொத்தையா தான் வரும். ஆரம்ப காலங்களில் ஒரே காட்சியை இருபது படம் எடுத்தா அதுலே ஒன்னு தான் கொஞ்ச சுமாரா வரும். அதனால மனம் தளரப் படாது. எல்லாருக்கும் ஆரம்பத்துல அந்த பிரச்சனை இருக்கும் தான். ஆனாலும் ஊக்கம் இருந்துச்சுன்னா இந்த ஒரு சதவீத உழைப்பு பெருசாத் தெரியாது.

"ஐ நல்லாருக்கே" அப்படின்னு மேல சொன்ன மாதிரி எக்ஸ்ப்ளோர் படங்களை க்ளிக் செய்து படம் எடுத்தவரின் வலைப்பக்கத்துக்குப் போனீங்கன்னா அவர் எந்த கேமராவை உபயோகிச்சு படம் எடுத்துருக்காருன்னு தெரிஞ்சிக்கலாம். இதுவும் படமெடுத்தவர் காட்ட விருப்பப்பட்டாத் தான் தெரியும். ஆனா பெரும்பாலானவங்க அதை மறைச்சிருக்க மாட்டாங்க.

நீங்க ரொம்ப ஆசையா பாத்த படம் Nikon D80 அல்லது Canon EOS 50D மாதிரியான உயர் ரக DSLR கேமராக்களைக் கொண்டு எடுக்கப்பட்டது எனத் தெரிந்து விரக்தியின் உச்சத்துக்கே போயிட்டீங்களா? DSLRஇல் எடுக்கப்பட்ட படங்களை நம்முடைய பாயிண்ட் அண்ட் ஷூட் கேமராவிலேயே எடுக்க முயற்சி செய்ய வேண்டும். அப்போ தான் நம்ம கேமராவால் என்ன முடியும் என்று தெரிந்து கொள்ள முடியும். DSLRஆல் மட்டும் தான் இத்தகைய படங்கள் எடுக்க முடியும், நம்ம கேமராவால் இதெல்லாம் எடுக்க முடியாது என நாமாகவே முடிவு செஞ்சிக்கக் கூடாது. உங்க கேமராவால் என்ன முடியும் என்பதையும் கண்டு கொள்ளவும் ஃப்ளிக்கர் தளம் உதவி செய்கிறது. Camera Finder என்ற பக்கத்தில் உங்களிடம் உள்ள கேமரா மாடல் ஃப்ளிக்கர் தளத்தில் எத்தனை பேரால் உபயோகிக்கப்படுகிறது என்றும் தெரிந்து கொள்ளலாம். உதாரணத்திற்கு உங்களிடம் Canon கேமரா இருக்கிறதென்றால், Canon மாடல்களிலேயே உங்கள் மாடலுடைய ரேங்க் என்னன்னும் தெரிஞ்சுக்கலாம்.

http://www.flickr.com/cameras
Canon Powershot A100 என்ற மாடல் 2002ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு மாடல். 175 கேனான் மாடல்களில் இக்கேமரா 143ஆம் இடம் தான் பிடித்துள்ளது.

http://www.flickr.com/cameras/canon/powershot_a100

இக்கேமராவைக் காட்டிலும் அதிக உபயோகங்களையும்(features) உயர்ந்த தொழில்நுட்பத்தையும் கொண்ட கேமராக்கள் இப்போது சந்தைக்கு வந்து விட்டன. ஆயினும் இக்கேமராவால் எடுக்கப்பட்ட Interesting படங்களைப் பாருங்கள். இந்த மாதிரியான படங்களையாச்சும் நாம எடுத்துருக்கோமான்னு நம்மளை நாமளே கேட்டுக்கனும். ஆம்னு பதில் வந்துச்சுன்னா, நீங்க புகைப்படம் எடுக்க ஆரம்பிச்சு நல்லா வளர்ந்துட்டீங்கன்னு அர்த்தம். DSLR எனும் அடுத்த கட்டத்துக்கு நீங்க தாராளமாகப் போகலாம். இல்லைங்கிற பதில் வந்துச்சுன்னா நீங்க உங்க கேமராவோட முழு பலத்தையும் சரியாத் தெரிஞ்சுக்கலைன்னு அர்த்தம். முதல்ல உங்க கேமராவோட மேனுவல் புத்தகத்தைப் படிங்க. உங்க கேமராவோட முழுத் திறனையும் கண்டு கொள்ளுங்கள். நிறைய படங்களை எடுங்கள். டிஜிட்டல் தானே? காசா பணமா? புடிக்கலைன்னா சுலபமா டெலீட் செஞ்சிடலாம். 100 படம் எடுத்து ஒன்னு தான் உங்க மனசுக்குப் புடிச்ச மாதிரி வந்திருக்கிறது என்றாலும் கவலை படாதீங்க. அதுவும் ஒரு நல்ல துவக்கம் தான். பத்தாயிரம்-பதினைஞ்சாயிரம் போட்டு கேமரா வாங்கி வேஸ்டா போச்சேங்கிற குற்றவுணர்வுலேருந்து முதல்ல விடுபடுங்க.


இன்னும் சில குறிப்புகளோட இன்னொரு பதிவுல உங்களைச் சந்திக்கிறேன். வணக்கம்.
 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff