Showing posts with label கல்பட்டு நடராஜன். Show all posts
Showing posts with label கல்பட்டு நடராஜன். Show all posts

Friday, May 16, 2014

கிராமப் புறங்களில் அழகான படங்கள் பிடித்திட பல வாய்ப்புகள் கிடைக்கும்.  குடிசை வீடுகள், வயல் வெளிகள், களத்து மேடு, கிராம மக்கள் என இப்படிப் பல உங்கள் கண்களைக் கவரும்.  அவற்றை சரியான கோணத்தில், தேவையான வெளிச்சம் பட, சரியான தருணத்தில் எடுத்திருந்தால் கதை சொல்லும் பல அழகிய படங்களை நீங்கள் எடுத்திடலாம்.  உதாரணத்திற்கு சில படங்கள்:
#1
(உழைப்பாளிகள்)
#2
(வறுமைக்கோட்டின் கீழே)
#3
(தொழிலாளி)
#4
(இயற்கை வைத்தியம்)
#5
(கண்ணீர் இன்றித் தண்ணீர்)
கிராமப் புறங்களில் படம் பிடிக்கும் போது மிகுந்த கவனம் தேவை.  இல்லை என்றால் நீங்கள் அனாவசியமாகப் பிரச்சினைகளில் சிக்கித் தவிக்க நேரிடும்.  முதலில் நீங்கள் அவர்களோடு பேசி உங்களை அவர்களோடு ஒருவராக ஆக்கிக் கொண்டு, பின் அவர்களது அனுமதியுடன் படம் பிடிக்க வேண்டும்.  இந்த விதி பெண்களைப் படம் பிடிக்கும் போது கட்டாயம் அனுசரிக்க வேண்டிய ஒன்று.  இல்லை என்றால் ஒரு கிராமத்தில் நாங்கள் பட்ட அவஸ்தையினை நீங்களும் பட வேண்டி வரும்.

ஒரு முறை ஏரிக்கரையில் தலையில் புல்லுக் கட்டோடு வந்து கொண்டிருந்த பெண்கள் பக்கம் தன் கேமிராவைத் தூக்கி என் நண்பர் நோட்டம் விட, அவள் கன்னடத்தில் ஏதோ கத்த, வயல்களில் இருந்து ஐந்தாறு ஆட்கள் கையில் அரிவாளோடு ஓடி வந்து எங்களைச் சூழ்ந்து கொண்டு மிரட்ட, அன்று அவர்களிடம் இருந்து தப்பிக்கப் பட்ட பாடு, அப்பப்பா, சொல்லி மாளாது!

படங்கள் அனைத்தும்: நடராஜன் கல்பட்டு.

-அடுத்த பகுதியுடன் தொடர் நிறைவுறும்.

***

Legend Talks..
திரு கல்பட்டு நடராஜன்
-----------------------------------------------------------------------------------------------------------
தொடர்புடைய முந்தைய பதிவுகள்:




Sunday, April 6, 2014

இந்தக் கட்டுரை ஒரு நேயர் விருப்பம்.  அன்பர் அகமது சுபைர் அவர்கள் ஒருநாள் கேட்டார், “பறவைகளுக்கு 20 பாகம்... விலங்குகளுக்கு ஒரு பாகம் தானா???  இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன் உங்க கிட்டெ... :).” என்று.  ஆகவே பூச்சிகளைப் படம் பிடிப்பது பற்றி எழுதுகிறேன் இங்கு.

பூச்சிகள் உருவத்தில் மிகச் சிறியவை.  ஆகவே அவற்றைப் படம் பிடிக்க சிறிது சிரமப் பட வேண்டும்.  அந்நாட்களில் இப்போது இருப்பது போல ‘மேக்ரோ லென்ஸ்’ கள் கிடையாது.  ஆகவே பூச்சிகளைப் படம் பிடிக்க கேமிராவின் லென்ஸ் பூச்சியில் இருந்து ஒன்றிரண்டு அங்குல தூரத்தில் இருந்தால் தான் பூச்சியின் நுண்ணிய பரிமாணங்கள் தெரியும்.  ஆனால் கேமிராவின் லென்ஸோ ஒரு குறிப்பிட்ட தூரத்திகு மேல் இருந்து எடுத்தால் தான் படம் சரியாகத் தெரியும்.  அப்படி எடுத்தாலோ பூச்சி ஒரு புள்ளியாகத் தெரியும். ஆகவே நிலமையை சமாளித்திட பெல்லோஸ் ஸ்கோப் என்ற ஒரு கருவியின் உதவி தேவை.  துருத்தி போன்ற அக்கருவியில் உங்கள் கேமிராவின் லென்ஸைப் பொறுத்தி, ஒரு அங்குல தூரத்தில் இருந்து கூட படங்கள் பிடித்திடலாம்.



உங்கள் கேமிராவின் லென்ஸைக் கழற்றி எடுத்து அந்த இடத்தில் பெல்லோஸ் ஸ்கோப்பைப் பொறுத்தி, லென்ஸை அதில் பொறுத்திப் படம் பிடிக்க வேண்டும்.  அப்படிப் பிடித்த மூன்று படங்கள் இதோ:
(சிலந்தி முட்டைகளை தானே நூற்ற நூலால் சுற்றி பந்தாகச் செய்து தன்னுடனே சுமந்து செல்கிறது)
இந்த சிலந்தி தோட்டங்களில் தரையில் வாழ்ந்திடும் ஒன்று.  சுமார் 5 மில்லி மீட்டர் அளவில் இருக்கும் இது.  இந்தப் படம் ஒரு அங்குல தூரத்தில் இருந்து எடுக்கப் பட்ட்து.

சிலந்திக்கு மூன்று அல்லது நான்கு ஜோடிக் கண்கள் உண்டு, தூரத்துப் பார்வை, பரந்த பார்வை, கிட்டத்துப் பார்வை, தூரத்தினை அளந்திடும் வகை செய்ய முப்பரிமாணப் பார்வை உள்ள கண்கள் என்று.

(அன்று பிறந்த வண்ணாத்திப் பூச்சி)
இடையான் பூச்சிகளில் பல விதங்கள் உண்டு.  புல் வடிவில், இலை வடிவில், சருகு வடிவில், மலர் வடிவில் என்று.  ஆனால் அவை எல்லா வற்றிற்கும் சில பொதுக் குணங்கள் உண்டு.  அவை மாய்மாலம் (சுற்றுப் புறத்தோடு நிறத்தில் ஒன்றிடுதல்), தன்னைவிடப் பெரிய உயிரினங்களையும் பிடித்துத் தின்னல் என்று.  சில வகை இடையான்கள் கணவனோடு இன்பம் அனுபவித்துக் கொண்டிருக்கும் போதே கணவனின் தலையைக் கடித்துத் தின்று விடும்!  தலை இழந்து கணவன் துடிக்கும் போது மனைவிக்கு இன்பம் அதிகரிக்கிறது என்று ஒரு பூச்சி ஆராய்ச்சியாளர் சொல்லி இருக்கிறார்!!

(முன்னங் கால்களை மடித்து வைத்துக் கொண்டிருக்கும் குச்சி ரக
இடையான் பூச்சி)
இவ்வுலகில் லட்சக் கணக்கான பூச்சிகள் உள்ளன.  அவை ஒவ்வொன்றும் தனித் தன்மை வாய்ந்தவை, அவற்றைப் படம் பிடித்தல் ஒரு அருமையான பொழுது போக்கு.  அப்படிப் படம் பிடிக்கும் போது அவை பற்றி பல விஷயங்களையும் அறிந்திட வாய்ப்பு கிடைக்கும்.

(படங்கள் – நடராஜன் கல்பட்டு)
***

Legend Talks..
திரு கல்பட்டு நடராஜன்
-----------------------------------------------------------------------------------------------------------
தொடர்புடைய முந்தைய பதிவுகள்:


Thursday, February 20, 2014

சரணாலயங்களில் நடந்தோ, யானை மீதோ, நீர் தேக்கங்களில் படகிலோ சென்று, பார்த்தல்,விலங்குகளைப் படம் பிடித்தல் என்பது ஒரு இன்ப மயமான அனுபவம். 
நீங்கள் சுவாசித்திடும் சுத்தமான காற்றும், மனித ஆரவாரமற்ற நிலையும், பறவைகளின் சங்கீதமும், ஓடைகளில் ஓடிடும் நீரின் சலசலப்பும் உங்களை உடலோடு தூக்கி வேறு ஒரு உலகத்திற்கே கொண்டு சென்று விடும்.
படம் பிடித்திடும் ஆர்வத்தில் தனியாக மட்டும் சென்றிட வேண்டாம்.  வனக் காவலர்கள் துணையுடனோ அல்லது அனுபவம் மிகுந்தவர்களுடனோ செல்வது எப்போதுமே நல்லது.
#1
(பெரியாறு ஏரிக் கரையில் ஒரு யானைக் கூட்டம்)
தனியாக இருக்கும் யானைக்குத் தக்க மரியாதை கொடுத்து வெகு தூரத்திலே இருந்தே அதைப் பாருங்கள்.  யானைக கூட்டமாக இருக்கும் போது அவ்வளவு ஆபத்தானது அல்ல.
காட்டு விலங்குகளில் சிங்கம், சிறுத்தை, புலி இவையும் சற்று ஆபத்தானவையே.
ஒரு முறை கர்னாடகாவில் உள்ள கெமன்குண்டி மலைப் பிரதேசத்தில், ஆளுயரப் புல் அடர்ந்த காட்டுப் பகுதியில் இருந்த ஒற்றையடிப் பாதை வழியே எனது குரு பெருமாள் அவர்களும் மற்றொரு நண்பருமாக நடந்து சென்று கொண்டிருந்தோம்.  ஓரிடத்தில் ஒரு புதிய வாடையை நுகர்ந்து ஒரு வினாடி நின்று சுற்று முற்றும் பார்த்தேன்.  என் பின்னே வந்து கொண்டிருந்த பெருமாள் சைகையால், “நிற்காதே.  போ” என்றார்.  நானும் நடந்தேன்.  சற்று தூராம் சென்ற பின் பெருமாள் கேட்டார், “ஏன் தெரியுமா உன்னை நிற்காதே என்றேன்?  அங்கு ஒரு புலி நம் கண்ணுக்குப் புலப்படாமல் நம்மைப் பார்த்துக் கொண்டிருந்த்து” என்று.  பதிலுக்கு நான் சொன்னேன், “நானும் அதற்காகத் தான் நின்றேன்.  புலி கண்ணில் படுகிறதா என்று பார்த்திடலாம்” என்று.
விலங்குகளை அவற்றின் இயற்கையான் சூழலில் இருப்பது போன்ற படங்களைப் பிடித்திட சரணாலயங்களுக்குத் தான் போகவேண்டும் என்பதில்லை.  உங்கள் ஊரிலோ அல்லது அருகாமையிலோ இருக்கும் உயிரியல் பூங்காவிற்கு சென்றால் கூட நல்ல படங்கள் பிடித்திடலாம்.  அப்படிப் பிடிக்கும் போது நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய ஒன்று விலங்குகள் இருக்கும் கூண்டுகளின் கம்பிகளோ தடுப்புச் சுவர்களோ படத்தில் வராத படி பார்த்துக் கொள்ள வேண்டும்.  உதாரணத்துக்கு நான் பிடித்த சில படங்கள் கீழே:
#2 
 (யோவ்.... பொண்ணு குளிக்கற எடத்துலெ ஒனக்கு என்னையா வேலெ?)
#3 
(கொஞ்ச நேரம் ஓய்வு எடுக்கலாம்னா இங்கெயும் வந்துட்டாங்கையா படம் புடிக்க)
#4
 (ராஜா ராணி)
#5
(புலி சிங்கம் இருந்தா ஒரு மான் இருக்க வேண்டாம்?)

#6 


(என்னெயெப் போல சோம்பேறியா இருக்காதீங்க.  சுறு சுறுப்பா இருங்க.)

#7

(உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்................கிட்டெ வராதீங்க!)
பறவைகள் ஆச்சு. விலங்குகள் ஆச்சு.  மனுசங்களெப் பத்தி சீக்கிரத்துலெ பாக்கலாம். அதுக்கு முந்தி பூச்சிகளெப் பத்தி அடுத்த பகுதிலெ பார்க்கலாம்.
(படங்கள் – நடராஜன் கல்பட்டு)

*** 
Legend Talks..
திரு கல்பட்டு நடராஜன்
-----------------------------------------------------------------------------------------------------------
தொடர்புடைய முந்தைய பதிவுகள்:


Monday, December 16, 2013

1970_ல் ஹைதராபாதில் புகைப் படக் கலையில் ஆர்வம் உள்ள ஒரு வக்கீல் நண்பருடன் வாரங்கல் சாலையில் சென்று கொண்டிருந்தேன்.

எனக்கு எப்போதுமெ ஒரு பழக்கம் வாகனத்தில் பயணிக்கும் போது எனது கவனம் சாலையில் மட்டும் இராது.  சாலையிலும் அதன் இரு புறங்களிலும் பறந்திடும் பறவைகளையும் பார்த்துக் கொண்டே செல்வேன்.  அன்று என் கண்களில், அலகில் இரையுடன் பறந்து சென்று வயலில் இறங்கிய, ஒரு வானம்பாடி பட்டது.

உடனே காரை நிறுத்தி விட்டு அந்த இடத்தை நோக்கி நடந்தோம்.  நாங்கள் அந்த இடத்தை அடைவதற்குள் அந்தப் பறவை பறந்து சென்று விட்டது.  ஆனால் அதன் கூடும் அதில் இருந்த இரு குஞ்சுகளும் என் கண்ணில் பட்டன.  நண்பர் நான் பார்த்த்தைக் கவனிக்க வில்லை.  உடனே அந்தக் கூட்டைச் சுற்றி ஒரு ஆறடி ஆரத்தில் ஒரு வட்டக் கோடு போட்டு, “இந்த வட்டத்திற்குள் ஒரு பறவையின் கூடு இருக்கிறது.  உங்களால் கண்டு பிடிக்க முடியுமா?” என்று கேட்டேன்.  அவர் சுற்றிச் சுற்றி வந்தார்.  ஆனால் அவரால் கூட்டினைக் கண்டு பிடிக்க முடியவில்லை.  காரணம் அது சுற்றுப் புரத்தோடு அவ்வளவு அழகாக ஒன்றி இருந்த்து.

நண்பர் கூட்டின் மீது கால் வைத்திடப் போகும் சமயம் அவரைத் தடுத்து நிறுத்தி அவருக்கு அந்த வானம்பாடியின் கூட்டினையும் அதில் இருந்த இரண்டு குஞ்சுகளையும் காட்டினேன்.  பின்னர் தாய்ப் பறவை தன் குஞ்சுகளுக்கு இரை ஊட்ட வந்த போது அந்த அழகினை தூரத்தில் இருந்து படம் பிடித்தேன்.  அந்தப் படம் இதோ:

#1

(சாம்பல் தலை வானம்பாடி – Ashy crowned  finch lark
புகைப்படம்: நடராஜன் கல்பட்டு)
வானம்பாடிக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது தெரியுமா?

சாதாரணமாக பிப்ரவரி முதல் ஜுலை வரையிலான நாட்களில் ஆண் வானம்பாடி தான் உட்கார்ந்திருக்கும் கல்லிலிருந்தோ அல்லது செடியிலிருந்தோ செங்குத்தாக மேலே பறந்து கண்ணுக் கெட்டாத தூரத்தை அடையும்.  பின் தன் இறக்கைகளை மெதுவாக அடித்துக் கொண்டு ஒரே இடத்தில் இருந்தபடி தன் அழகான குரலில் சிறிது நேரம் இசை எழுப்பும்.  அவ்வாறு இசை எழுப்புவது சில சமயம் ஐந்து நிமிஷங்களுக்குக் கூட நிகழும்.  பின் தன் இறக்கைகளை மடித்துக் கொண்டு ஒரு கல் விழுவது போல செங்குத்தாக கீழே சில மீடர் தூரம் இறங்கி தன் இறக்கைகளை விரித்துக் கொண்டு மீண்டும் சிறிது நேரம் இசை எழுப்பும்.  இவ்வாறு இரண்டு மூன்று மட்டங்களில் பாடி முடித்தபின் வானம்பாடி முன்பு உட்கார்ந்து இருந்த இடத்தினை வந்தடையும்.

இந்த இசைக் கச்சேரி வாழ்க்கைத் துணை கிடைக்கும் வரை தொடரும்.
#2
(ஆகாசத்துலெ இருந்து நான் பாடற பாட்டு ஒங்களுக்குப் புடிச்சிருக்கா?
படம்: இணையத்திலிருந்து..)
இப்படி வானத்தில் இசை எழுப்பி துணை தேடுவதை ஒரு ஆண் குருவி மட்டடுமின்றி பல ஆண் குருவிகள் போட்டி போட்டுக் கொண்டு செய்வதும் உண்டு.

வானம்பாடியின் இசை கேட்டிட இந்தச் சுட்டியில் அழுத்தவும் (Control + Click)
http://www.youtube.com/watch?v=tkk7bnTG5JM&feature=related

நம் நாட்டில் மூன்று வித வானம்பாடிகள் உள்ளன.  அவை ஆகாசத்து வானம்பாடி (Sky lark),  சாம்பல் நிறத் தலை கொண்ட வானம்பாடி (Ashy crowned finch lark)  மற்றும் கொண்டை கொண்ட வானம்பாடி (Crested lark) என்பவை ஆகும்.


#3

(ஆகாசத்து வானம்பாடி - Sky lark
படம்: கல்பட்டு நடராஜன்)
#4
(கொண்டை கொண்ட வானம்பாடி – Crested lark
படம்: இணையத்திலிருந்து..)
பள்ளி நாட்களில் இந்தக் கதையைப் படித்திருப்பீர்கள்.
 
ஒரு நெல் வயலில் வானம்பாடி ஒன்று கூடு கட்டி குஞ்சு பொரித்திருந்தது.  ஒரு நாள் இரையுடன் திரும்பிய தாய்ப் பறவையிடம் குஞ்சுகள், “அம்மா, அம்மா... இன்று இருவர் வந்திருந்தனர்.  ஒருவர் சொன்னார் நெல் கதிர்கள் நன்றாக முற்றி விட்டன.  வெளி ஊரில் உள்ள நம் சொந்தக் காரர்களுக்கு சேதி அனுப்பி அவர்கள் வந்ததும் அறுவடை செய்ய்ய வேண்டும் என்று.  எங்களுக்கு பயமா இருக்கம்மா.  வேறெ எங்கயாவது போயிடலாம்மா” என்றன.

தாய்ப் பறவை சொல்லிற்று, “கவலைப் படாதீங்க.  மறுபடி அவங்க வந்து பேசினா கவனமாக் கேட்டு எங்கிட்டெ சொல்லுங்க என்ன பேசிகிட்டாங்கன்னு.”  “சரிம்மா” என்றன குஞ்சுகள்.

இரண்டு நாட்களுக்குப் பின் ஒரு குஞ்சு சொல்லிற்று, “அம்மா, அம்மா இன்னெக்கி மறுபடி அந்த ஆளுங்க வந்து பேசிக்கிட்டாங்க சொந்தக் காரங்க வரதாக் காணும்.  கூலி ஆளுங்களுக்கு சொல்லி அனுப்பலாம்னு.  அம்மா ரொம்ப பயமா இருக்கும்மா.  ஆளுங்க வந்து எங்களெ மிதிச்சுட்டா நாங்க செத்துப் போயிடுவோமேம்மா.”

தாய்ப் பறவை, “கவலைப் படாதீங்க.  மறுபடி வந்தா என்ன பேசினாங்கன்னு கவனமா கேட்டு சொல்லுங்க,” என்றது.

மறு நாள் மாலை, “அம்மா, அம்மா இன்னெக்கி அவர் சொல்லிட்டு இருந்தார், ஆளுங்க வர்ரதாக் காணும்.  நாளெக்கி நாமே வந்து அறுவடை செஞ்சிடலாம்னு,”  என்றது ஒரு குஞ்சு.  இதைக் கேட்ட தாய்ப்பறவை, “இப்போ நாம வேறெ எடத்துக்குக் கெளம்ப வேண்டியதுதான்” என்று சொல்லி ஒவ்வொரு குஞ்சாக வாயில் கவ்விச்சென்று பாதுகாப்பான இடத்திற்கு குஞ்சுகளை மாற்றியது.


இந்தக் கதையில் நமக்கு இரண்டு விஷயங்கள் தெரிய வருகின்றன.  ஒன்று தன் கையே தனக்குதவி என்பது.  மற்றொன்று வானம்பாடி தரையில் கூடு கட்டும் என்பது.

தரிசல் நிலங்கள், ஆற்றுப் படுகைகள், வயல் வெளிகள் இவற்றில் ஈர மண்ணில் மாட்டுக் குள்ம்பினால் ஏற்பட்ட குழி அல்லது இயற்கையிலேயே செடிகளின் வேர் அருகே உள்ள சிறிய பள்ளம் இவற்றில் காய்ந்த வேர், இலை, சரகுகளைக் கொண்டு கிண்ணம் போன்ற தனது கூட்டினை வானம்பாடி அமைக்கும்.  குஞ்சுகளுக்கு இரை அளிப்பது ஆண் பெண் இரண்டு குருவிகளுமே.

இயற்கையில்தான் பார்த்து ரசித்திட எத்தனை அழகிய காட்சிகள்!  காட்டிலும் மேட்டிலும் சுற்றித் திரியும் போது நீங்கள் சுவாசிக்கும் தூய்மையான காற்றே ஒர் அலாதி சுகமளிக்கும்.  கூட்டுப் புழுவாய் வீட்டுச் சுவற்றுள் அடைந்து கிடக்காது வெளியே வாருங்கள்.  இயற்கையின் அழகினக் கண்டு ரசியுங்கள்.

(வண்ணப் படங்கள் மட்டும் இணைய தளத்தில் இருந்து எடுக்கப் பட்டவை)
***

Legend Talks..
திரு கல்பட்டு நடராஜன்
-----------------------------------------------------------------------------------------------------------
தொடர்புடைய முந்தைய பதிவுகள்:


Thursday, November 28, 2013


பக்கி என்றொரு பறவை.  இதன் ஆங்கிலப் பெயர் நைட் ஜார் என்பதாகும்.  இரவில் காதுக்கு நாராசமான “சச்....சர்ர்ர்ர்ர்ர்ர்ர்” என்று ஒலி (jarring sound) எழுப்புவதனால் இந்தப் பெயர் கொடுத்திருப்பார்களோ இதற்கு?

இந்தப் பறவையை பாதுகைக் குருவி என்று அழைப்பதும் உண்டு.  காரணம் இது தரையில் உட்கார்ந்திருக்கும் போது கவிழ்த்துப் போட்ட பாதுகை, அதான் செருப்பு, போலக் காணப்படும்.

வாகனங்களில் நெடுஞ் சாலைகளில் பயணிக்கும் போது சில சமயம் சாலை ஓரங்களிலோ அல்லது தாழ்வான மரக் கிளைகளிலோ இரு மாணிக்கக் கற்கள் (இதை கெம்பு அல்லது சிவப்பு என்று சொல்வதும் உண்டு) ஜ்வலிப்பது போன்று தோன்றுவதைப் பார்த்திருப்பீர்கள்.  அவை நம் பக்கியின் கண்களே.   பக்கி திடீரெனெப் பறந்து சாலையின் குறுக்கே செல்வதையும் பார்த்திருப்பீர்கள்.  அவை அவ்வாறு பறப்பது வாகனங்களின் விளக்கொளியில் துல்லியமாகத் தெரிந்திடும் பறக்கும் பூச்சிகளைப் பிடித்துத் தின்னதான்.

பறந்திடும் பூச்சிகளைப் பிடிக்கும் போது அவை தப்பி விடாமல் இருக்க பக்கியின் வாயின் இரு புறமும் வரிசையாக பல ‘மீசை’  மயிர்கள் இருக்கும்.

பகலில் பக்கிகள் மரக் கிளைகளிலோ அல்லது செடிகளின் அடியிலோ படுத்துரங்கும்.  அப்போது அவற்றைக் கண்டு பிடிப்பது மிகவும் கஷ்டம்.  காரணங்கள் இரண்டு.  ஒன்று அதன் நிறம் மரப் பட்டைக்ளோடும், தரையில் இருக்கும் சரகு, வேர், காய்ந்த புல் இவற்றோடும் ஒன்றி விடும்.  இரண்டாவது காரணம் அவை மரக் கிளைகளில் உட்காரும் போது மற்ற பறவைகளசிப் போல் குறுக்கு வாட்டத்தில் உட்காராமல் கிளை போகும் வாட்டத்திலேயே உட்காரும்.

 கிளையின் நீள வாட்டத்தில் உறக்கம்.
(படம் நன்றி: இணையம்)
பக்கிகளின் மற்றொரு ஆங்கிலப் பெயர் ‘Goat sucker’ ஆட்டுப் பால் உறிஞ்சி.  இப் பெயர் வரக் காரணம் இரவில் தொழுவங்களில் பறந்திடும் பூச்சிகளைப் பிடித்துத் தின்பதற்காக வந்திடும் பக்கிகளை அவை பாலை உறிஞ்சிக் குடிப்பதற்காக வந்துள்ளதாக மக்கள் எண்ணியது தான்.

சில மிருகங்கள் ஒத்துக் கொள்ளாத பருவ நிலையில் உணவு தேடி அலைந்திடாமல் நீண்ட உறக்கத்தில் ஈடு படுவது போல (Hibernation) அமெரிக்காவில் காணப்படும் பக்கிகள் பல வாரங்கள் பாறை இடுக்குகளில் படுத்துறங்கும்.  பறவை இனத்தில் ஆழ் உறக்கத்தில் ஈடுபடும் ஒரே பிராணி பக்கிதான்.

பக்கி தன் முட்டையையும் குஞ்சையும் அவற்றின் மீது படுத்துறங்கிக் காத்திடும்.
முட்டையைக் காத்திடும் பக்கி
படம்: கல்பட்டு நடராஜன்

குஞ்சின் மீது படுத்துறங்கும் பக்கி
படம்: கல்பட்டு நடராஜன்
குஞ்சின் மீது படுத்திருக்கும் போது அதன் கண்கள் மூடி இருக்குமே ஒழிய அவை முற்றிலுமாக நித்திரையில் ஆழ்ந்து விடுவதில்லை.

ஒரு முறை பக்கி படுத்திருந்த இடத்தை நெருங்கிய போது, குஞ்சு தன் சிறகினை அடித்துத் தாய்ப் பறவையை எழுப்பியது.  தாயோ, “சும்மாக் கிட.  அவுங்களாலெ நம்மெக் கண்டு பிடிக்க முடியாது” என்பது போல இருந்த்து.  அவ்வளவு நம்பிக்கை தன் மாய்மாலத்தின் மீது!

அப்போது என் காலடியில் இருந்து ஒரு கல் நகர்ந்து கூட்டை நெருங்க, திடீரெனப் பறந்தது அது.

கூடு என நான் சொன்ன போது அது எதோ பிரமாதமாகத் தயார் செய்திருக்கும் என்று நினைக்காதீர்கள்.  சிறு கற்களிடையே முட்டையினை (ஒன்றோ இரண்டோ) இட்டிடும்.  அவ்வளவே.  தன் முட்டைக்கோ குஞ்சுக்கோ ஆபத்து என்று தோன்றினால் அவற்றைத் தன் அலகினால் வேறு இடத்திற்கு அப்புறப் படுத்தி விடும்.  இந்த சாமர்த்தியம் இருக்கும் போது தனியாக சொந்த வீடு எதற்கு பக்கிக்கு?

***


Legend Talks..
திரு கல்பட்டு நடராஜன்
-----------------------------------------------------------------------------------------------------------
தொடர்புடைய முந்தைய பதிவுகள்:



Friday, April 12, 2013


நாரை இனத்திலே பூ நாரை என ஒன்று.  இதை சங்குவலை நாரை, வர்ண நாரை என்றும் அழைப்பார்கள்.  விஞ்ஞான ரீதியாக இதற்கு அளிக்கப் பட்டு உள்ள பெயர் என்பதாகும்.ஆங்கிலத்தில் இதனை ‘Painted stork’ என்பர். 
[வண்ணப்படம் நன்றி: http://en.wikipedia.org/wiki/Image:Painted_Stork.jpg ]

பூ நாரையின் பெயர்கள் எல்லாமே காரணப் பெயர்கள் தான்.  மஞ்சள் நிற அலகுகள், மெழுகினால் செய்தது போன்ற ஆரஞ்சு நிறத் தலை, இறக்கை களில் மயில் கழுத்தென மின்னும் கருப்புக் கோடுகள், பாலெனத் தோன்றும் வெள்ளை உடல், மார்பிலே ஒரு கருப்புப் பட்டை, இறக்கைகளின் நுனி சிறகுகளிலும், வால் சிறகுகளின் மேல் புறத்திலும் மிகச் சன்னமாக ஒரு    ரோஜாவின் வண்ணம், சாம்பல் பூத்த ரோஜா நிறக் கால்கள் என ஒரு ஓவியன் துரிகை கொண்டு வர்ணம் தீட்டி இருப்பது போல இருப்பதால் தான் இந்தக் காரணப் பெயர்கள்.

பூ நாரை வெளி நாட்டிலிருந்து நம் நாட்டுக்கு வலசை வரும் பறவை அல்ல.  உள் நாட்டிலேயே வாழும் பறவை தான்.  இவை செப்டம்பர் முதல் ஜனவரி வரையிலான நாட்களில் இனப் பெருக்கம் செய்யும்.  இனப் பெருக்கம் செய்யும் இடங்களில் மற்ற நாட்களில் காணப் படுவதில்லை என்பதால் பலர் இதனையும் வலசை வரும் பறவைகளின் பட்டியலில் சேர்த்து வழக்கம் போல சைபீரியாவில் இருந்து வரும் பறவைகள் என்று விடுகின்றனர்.  (வலசை வரும் பறவைகள் அனைத்துமே சைபீரியாவில் இருந்து வருபவை அல்ல என்பது வேறு விஷயம்.)

சாலையோர மரங்களிலோ, கிராம வீடுகள் நடுவே உள்ள புளிய மரம் போன்ற மரங்களிலோ கூட்டமாக பல பூ நாரை ஜோடிகள் கூடுகள் கட்டி, முட்டை இட்டுக் குஞ்சு பொரித்து வாழும்.  ஆனால் சாதாரணமாக மக்கள் இவற்றைத் துன்புறுத்துவது இல்லை.  காரணம் தெரிய வேண்டுமா?

முன்னாள் முதல்வர் ப்ரகாசம் அவர்கள் ஊரான ஆந்திர மாநிலம் டங்குடூரு அருகில் உள்ள ஜருகுமல்லி என்ற கிராமத்தின் தலைவருடன் 1976ல் தெலுங்கில் நட்த்திய ஒரு சம்பாஷணையின் தமிழாக்கத்தைப் படியுங்கள்.

“ஏன் சார், நாம பேசறது கூடக் காதுலே விழாதபடி இப்படி கா...கா... ன்னு கூச்சல் போட்டுகிட்டு இருக்குதுங்களே இந்தப் பறவைங்க. ஒங்களுக்கெல்லாம் தொந்திரவா இல்லயா?  ஊர் ஜனங்க இதுங்களெ வெரட்டறது இல்லயா?”

“தொந்திரவு என்ன சார் தொந்திரவு?  இந்தப் பறவைங்க எங்க ஊருக்கு வந்திச்சுன்னா இந்த வருஷம் மழை நல்ல பேஞ்சு ஏரி குளமெல்லாம் நெறெஞ்சு வெளெச்சல் அமோகமா வரும்னு தெரிஞ்சுடும்.  அதுங்களெ நாங்க ஏன் சார் வெரட்டணும்?”

“சரி சத்தத்தெ உடுங்க.  தரையெல்லாம் வெள்ளை அடிச்சாப்ளெ பறவை எச்சமும் மீன் துண்டுங்களுமா கெடக்குது.  நாத்தம் வயத்தெக் கொமட்டி வாந்தியெடுக்க வருது.  இது கஷ்டமா இல்லியா ஒங்களுக்கு?”  (இதைக் கேட்டுக் கொண்டிருக்கும் போதே என்மேல் ஒரு பறவையின் எச்சம் விழுகிறது)

“சார் இந்தப் பறவைங்க வயல்கள்லெ மேஞ்சுகிட்டு இருக்கும் போது போடுற எச்சமும், இங்கெ தரெலெ கெடெக்கற எச்சமும் அறெகொறெயாக் கடிச்ச மீன் துண்டுங்களும் நல்ல ஒரமாகுது.  இது மட்டுமா?  அப்பொப்போ ஊர் சனங்களுக்கு கருவாடும் கெடைக்குது.  எப்படிங்கிறீங்களா?  பறவைங்க குஞ்சுங்களுக்கு மீனெக் கொண்டு வந்து கொட்டும்போது கொஞ்சம் கீளேயும் விளும்.  ஊர் செனம் ஏன் சார் இதுங்களெ வெரெட்டுவாங்க?”

இப்போது புரிகிறதா பூ நாரைகள் ஜன நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களிலும் எப்படி கூடுகள் கட்டி குடும்பம் நடத்த முடிகிறது என்று?
(ஜருகுமல்லியில் பூநாரையும் அதன் பூப்பந்து போன்ற குஞ்சுகளும்) 

பூ நாரைகளின் கூடு குச்சிகளால் ஆன சுமார் 2 – 3 அடி விட்டமுள்ள ஒரு வட்ட வடிவமான மேடை போன்றது.  நடுப் பாகம் சற்றே பள்ளமாக இருக்கும்.  பள்ளத்தில் இலைகள் மற்றும் காய்ந்த புல், வைக்கோல் இவை இருக்கும். 

ஒவ்வொரு முறை பெரிய பறவைகள் வந்திறங்கும் போதும், குஞ்சுகள் நகரும் போதும் சில குச்சிகள் கீழே விழுந்து விடும்.  ஆகவே அவற்றுக்குப் பதிலாக வேறு குச்சிகளைக் கொண்டு வந்து கூட்டினை சரி செய்ய வேண்டி வரும்.  இந்த சரி செய்யும் வேலை பார்த்து ரசிக்க வேண்டிய ஒரு காட்சி.  எப்படி என்கிறீர்களா?

கூட்டில் குஞ்சுகள் இருக்கும் போது எப்போதும் ஒரு பறவை காவல் காத்துக் கொண்டு இருக்கும் தனது இறக்கைகளை சற்றே விரித்து குடைபோல நிழல் கொடுத்துக் கொண்டு.
   (குடை விரித்திருப்பது குழந்தைகளுக்காக)

வெளியே சென்று இரையுடன் திரும்பும் பறவை தன் அலகிலே ஒரு குச்சியையும் கொண்டு வரும்.
(கூடு ரிபேருக்குக் குச்சி வருது)

குச்சி கொண்டு வந்த பறவை தானே கூட்டினை சரி செய்யும் வேலையைத் துவங்காது.  பதிலாக உட்கார்ந்திருக்கும் பறவையிடம் கொண்டு வந்த குச்சியைக் கொடுக்கும், ஏதோ அரச சபையிலோ அல்லது ஜனாதிபதி வீட்டிலோ பணி மாறிடும் காவலர்கள் போல.  அதுவரை காவல் பணியில் ஈடுபட்டிருந்த பறவை குச்சியை வாங்கிக் கூட்டினை சரி செய்யும்.  பின்னர் இருவருமாக பாசத்துடன் அலகுகளால் ஒன்றை ஒன்று மாறி மாறி தட்டிக்கொள்ளும் முத்தமிடுவது மாதிரி. (மூக்கு ஒரு முழ நீளம் நீட்டிக் கொண்டிருந்தால் மூக்கால் தானே முத்தமிட்டுக் கொள்ள முடியும்!)  குஞ்சுகள் பசியில் வாயைப் பிளந்து “கா... கா...” என்று கத்திக் கொண்டு இருக்கும்.  ஆனால் சடங்குகள் முழுவதுமாக முடியாமல் அவை கவனிக்கப் படமாட்டா.

குஞ்சுகளுக்கு இரை ஊட்டுவதும் ஒரு காணவேண்டிய காட்சி.

இரை கொண்டு வரும் பறவை ஒரே ஒரு மீனைக் கொண்டு வராது.  தொண்டை, கழுத்து மற்றும் வாய் பூராவும் மீன்கள் தான்.  அவற்றினை ஒவ்வொன்றாகக் கக்கி குஞ்சுகளுக்குக் கொடுக்கும்.  அப்போது சில மீன்கள் கூட்டிற்குள்ளேயும் சில கீழேயும் விழும்.  அப்படி நடக்கும்போது குஞ்சுகள் இரைக்காகக் கெஞ்சினாலும் மேலும் மீனை தொண்டையிலிருந்து வெளியே கொண்டு வராமல் “அதோ பார் அங்கே ஒன்று”, என்பது போல கூட்டில் கிடக்கும் மீனைக் காட்டும்.

(அங்கெ பாருங்க.  கூட்டுலெ ரெண்டு மீனு கெடெக்கு)

குஞ்சுகள் தானாக அதைப் பொறுக்கித் தின்னவில்லை என்றால் பெரிய பறவை அந்த மீனைத் தானே எடுத்துக் குஞ்சுக்குக் கொடுக்கும்.   ஐந்தறிவே படைத்தது என்று நாம் எண்ணும் பறவைகளுக்குத் தான் எத்தனை அறிவு!

இதெல்லாம் எப்படி உங்களுக்குத் தெரியும் என்கிறீர்களா?  நான்தான் 30 அடி உயரத்தில் சவுக்கு, மூங்கில் இவற்றால் கட்டப் பட்ட நான்கு கால் சாரத்தில், சாக்குக் கூடாரதினுள் உட்கார்ந்து பார்த்தேனே படங்கள் பிடித்திடும் போது.

தமிழ் நாட்டில் பூ நாரையை திருநெல்வேலி ஜில்லாவின் மூன்றடைப்பு என்ற இடத்திலும், தஞ்சை ஜில்லாவின் கோடியக்கரையிலும் வேறு சில இடங்களிலும் காணலாம்.

இயற்கையின் எழிலைக் கண்டு ரசியுங்கள்.  இறைவனைக் காண்பீர்கள்.
***

(கருப்பு  வெள்ளை படங்கள் அனைத்தும் எடுத்தது: நடராஜன் கல்பட்டு)


Legend Talks..
திரு கல்பட்டு நடராஜன்
-----------------------------------------------------------------------------------------------------------
தொடர்புடைய முந்தைய பதிவுகள்:

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff