Showing posts with label Guest Posts. Show all posts
Showing posts with label Guest Posts. Show all posts

Sunday, August 30, 2015

# கேமரா கிறுக்கன் (D. பரணீதரன்)
டிஸ்கிட் மடாலயம், நூப்ரா பள்ளத்தாக்கு, லடாய்
 இவரது ஃப்ளிக்கர் பக்கம்: இங்கே



# கோகுல்நாத்
சென்னை கடற்கரை
  இவரது ஃப்ளிக்கர் பக்கம்: இங்கே


பரணீதரன், கோகுல்நாத் இருவருக்கும் வாழ்த்துகள்!

தேர்வு: சரவணன் தண்டபாணி
**

Friday, June 12, 2015

புகைப்படக்கலையில் பயன்படுத்தப்படும் கட்டற்ற மென்பொருட்களைப் பற்றி சென்ற கட்டுரையில் பார்த்தோம். அதில் GIMP பயன்படுத்தி எப்படி உங்கள் படங்களில் Texture சேர்ப்பது என்பதை இப்பொழுது பார்க்கலாம்.

சமீபத்தில் நான் எடுத்த படத்தைக் கொண்டு இதை நான் உங்களுக்கு விளக்கலாம் என நினைக்கிறேன். இதோ நான் எடுத்த படம் ப்ராசெஸ்_க்கு முன்பும், பின்பும்.


1. முதலில் GIMP ஐ திறந்து கொள்ளுங்கள். File --> Open ல் சென்று தேவையான படத்தை தேர்வு செய்து,  பின்பு  Layer Palette (Ctrl - L) ல் Background Layer ஐ Duplicate செய்து கொள்ளவும்.

2. உங்களுக்கு தேவையான Texture ஐ இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொண்டு அதை GIMP ல் புது layer (File  -- > Open as Layers) ஆக திறந்து கொள்ளவும். இங்கு நான்,  கீழே கொடுக்கப்பட்டுள்ள Texture ஐ உபயோகப்படுத்தி உள்ளேன்.



3. புதிதாக சேர்த்த Texture Layer, ஏற்கனவே உள்ள Layer களுக்கு இணையாக Scale(Tool Box ல் Scale toolன் உதவியுடன்) செய்து கொள்ளவும்.

4. பின்பு Layer Palette ல் Texture Layer ன் blending mode ஐ Screen க்கு மாற்றிக் கொள்ளவும். Opacity 50% ஆக முதலில் வைத்துக் கொள்ளவும். அதிலிருந்து உங்கள் ரசனைக்கு ஏற்ற படி மாற்றிக் கொள்ளலாம்.

இப்பொழுது Texture Layer ம் அதற்கு கீழ் உள்ள Layer ஐயும் சேர்த்து ஓர் படத்தைப்  பெற்றிருப்பீர்கள். இதில் பட்டாம்பூச்சியின் மேலும் Texture இருக்கும். இதை நீக்காவிட்டால் படம் அவ்வளவு தெளிவாக இருக்காது.



5. ஆகவே, அதைக் களைய Texture Layer ஐ Right Click செய்து Add Layer Mask என்பதை அழுத்தி Layer Mask ஐ இணையுங்கள்.


பின்பு Tool Box ல் Brush ஐ தேர்வு செய்து, color picker tool -ன் உதவியுடன் பட்டாம்பூச்சியின் மேல் உள்ள வண்ணத்தை தேர்வு செய்து Layer mask -ல் Brush செய்து விடுங்கள். இதனால் Texture -ன் வண்ணம் மாறாமல் அதன் texture மட்டும் நீங்கி தெளிவாக காட்சியளிக்கும்.

இதற்கு மேல் Split toning என்னும் முறையில் உங்களுக்கு பிடித்த வண்ணங்களை சேர்த்துக் கொள்ளலாம்.

Split toning ஐ GIMP அல்லது Darktable -ன் Color Correction மூலமாக செய்து கொள்ள முடியும்.

படம் அழகாக வருவதென்பது, நாம் தேர்வு செய்யும் Texture மற்றும் வண்ணங்களில் தான் உள்ளது. ஆகவே நம் subject ற்கு தகுந்தபடி இவ்விரண்டையும் தேர்வு செய்து கொள்ள வேண்டும்.

Pit வாசகர்களுக்கு இப்பதிவு உபயோகமாக இருந்திருக்கும் என நினைக்கிறன். உங்கள் கருத்துக்களைத்  தெரிவியுங்களேன்.
***

- வனிலா பாலாஜி

Thursday, May 28, 2015

ன்று புகைப்படக்கலையில் நாட்டமுள்ள கலைஞர்கள் அவர்களுடைய படங்களை ப்ராசஸ் செய்வதற்கு பெரும்பாலும் "Photoshop" மற்றும் "Adobe" - ன் தயாரிப்புகளையே பயன்படுத்துகின்றனர். இவ்வகையான மென்பொருட்களை பயன்படுத்துவதற்கு சிறு கட்டணத்தையும் "Adobe" வசூலிக்கிறது. சில காலம் முன்பு வரை, நாம் Photoshop மென்பொருளை வாங்க வேண்டுமென்றால், ஒரு முறை பணம் கொடுக்க வேண்டி இருந்தது. அப்படி ஒரு முறை கட்டணம் செலுத்தி வாங்கினால், அப்பொழுதைய "Photoshop" பதிப்பு முழுவதும் நம்முடையது என்று நாம் சொந்தம் கொண்டாடிக் கொள்ளலாம். ஆனால் அப்பதிப்பை நாம் நம்முடைய நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டால்,  அவர்களின்(Adobe-ன் ) கண்ணோட்டத்தில் அது Piracy(களவு). மேலும் சமீபகாலமாக அதே மென்பொருளின் புது புது வசதிகளை பயன்படுத்திக் கொள்வதற்கு ஏற்ப மாதாந்திர கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இவ்வகையான காரணங்களினால் சற்று வருத்தமடைந்து, வேறு மென்பொருட்களை தேடும் பொழுது கட்டற்ற மென்பொருட்களைப் பற்றித் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு என் கணவரின் மூலமாகக் கிடைத்தது. அவைகளை பயன்படுத்தும் வாய்ப்பு கிடைத்ததினால் இம்மாதிரியான வருத்தங்களை எல்லாம் தவிர்க்க முடிந்தது. அவரின் மூலமே விண்டோஸ் அல்லாத Operating System பற்றியும் தெரிந்து கொண்டேன்.

இனி புகைப்படக்கலையில் பயன்படுத்தும் மென்பொருட்களில் சிலவற்றைப் பார்ப்போம். இன்று கட்டற்ற மென்பொருட்களில் பலவற்றை புகைப்படக்கலைஞர்கள் பயன்படுத்தினாலும், மிகவும் முக்கியமானதாக 3 மென்பொருட்கள் கருதப்படுகிறது. அவை

1. GIMP

2. Darktable

3. Rawtherapee




1. GIMP


GIMP பற்றி அனைவரும் கேள்விபட்டிருப்பீர்கள். இது Photoshop வகையை சேர்ந்த மென்பொருள்.  Photoshop - ன் Layerகளில் வேலை செய்வதைப் போலவே இதிலும் செய்ய முடியும். மேலும்  FX Foundry மற்றும் G 'MIC போன்ற plugin தொகுப்புகளினால் நம்முடைய processing ஐ மேலும் மேம்படுத்திக்கொள்ள முடியும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள plugin தொகுப்புக்களை இணையத்தில் இருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். GIMP க்கு தேவையான plugin-களின் இணைய சுட்டிகளை இங்கு குறிப்பிடுகிறேன். பயன்படுத்திக் கொள்ளுங்களேன்.

FX Foundry  - http://sourceforge.net/projects/gimpfx-foundry/

G 'MIC - http://gmic.eu/gimp.shtml

மேலும் GIMP -க்கு தேவையான பல pluginகளை  http://registry.gimp.org/ லிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

2. Darktable மற்றும் 3. Rawtherapee



Darktable என்பது Lightroom-க்கு இணையான மென்பொருள். GIMP ல் jpg வகையான படங்களை மட்டுமே process செய்ய முடியும். ஆனால் jpg மற்றும் Raw வகையினை சேர்ந்த படங்களை darktable மற்றும் Rawtherapee ஆகியவற்றில் Process செய்து கொள்ளலாம். Windows பயனாளர்களுக்கு Darktable பதிவு இதுவரை வெளியிடப்படவில்லை. ஆனால் Linux மற்றும் Mac பயனர்கள் இதை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

Photoshop - ல் இருக்கும் அனைத்து வசதிகளும்  இவ்வகையான மென்பொருட்களில் இல்லையென்றாலும், பெரும்பான்மையான வசதிகள் இவற்றில் இருக்கின்றன. இவற்றை எல்லாம் தவிர்த்து, இவ்வகையான மென்பொருட்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும் கொடுத்து உதவலாம், எவ்வகையான கட்டுப்பாடும் இல்லாமல். மேலும் S/W எழுத தெரிந்தவர்கள் இவைகளை தங்கள் தேவைக்கு ஏற்றாற்போல் மாற்றி அமைக்கும் சுதந்திரமும் உண்டு. மாற்றி அமைத்தவற்றை தங்களின் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கும் தடையில்லை. இம்மாதிரியான அம்சங்களே இம்மென்பொருட்களை உபயோகிக்கும் ஆர்வத்தை என்னுள் வளர்த்தது.

GIMP பற்றிய அடிப்படைப் பாடங்கள் ஏற்கனவே PIT தளத்தில் இருப்பதினால், முக்கியமான பாடங்களை மட்டும் அவ்வப்பொழுது தொடராக உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என இருக்கிறேன். அடுத்த வாரத்தில் உங்களுடைய படங்களில் textureகளை எப்படி பயன்படுத்துவது என்பதைப் பற்றி பார்ப்போம்.
***

- வனிலா பாலாஜி

Wednesday, December 3, 2014


யது வந்த மனிதர்களைப் படம் பிடித்தல் எனக்குப் பிடிக்காத ஒன்று.  காரணங்கள் பல.  அவற்றுள் சில:

1.        நீங்கள் கஷ்டப் பட்டு படம் எடுத்து அவரிடம் பெருமையாக் காட்டுவீர்கள்.  அவர் உடனே, "ஐயே.... இது நல்லாவே இல்லியே.  என்னெயெப் போலவே இல்லியே.  மூஞ்சி ஏன் கோணலாத் தெரியுது?  ஒங்க கேமிரா லென்சுலெ எதுனா கோளாறா?  கருப்பா இருக்கே?"  என்பார்கள்.  (அவர்கள் கண்ணாடியில் முகத்தினைப் பார்த்திருக்கவே மாட்டார்களோ!)

2.       பல பெரியவர்கள் எப்போதும் படம் பிடிக்கும் போது விறைப்பாக நின்று கொண்டு முகத்தில் சிறிதும் சிரிப்பின்றி (என்னைப் போல) வைத்துக் கொள்வார்கள்.  கேமிராவை நேராகப் பார்ப்பார்கள்.  ஒருவரது முகத்தின் அழகும், குணமும் அவர் சிறிது பக்க வாட்டில் பார்த்துக் கொண்டிருக்கும் போதுதான் நன்றாகத் தெரியும்.  பெரியவர்கள் அவர்களது தலையை நீங்கள் சற்று திருப்பினாலும் அவர் கண்கள் கேமிராவையும், உங்களையுமே பார்த்துக் கொண்டிருக்கும்.

குழந்தைகளைப் படம் பிடிப்பது அப்படி அல்ல.  குழந்தைகள் இயல்பாக இருப்பார்கள்.  அவர்களுக்குதான் சூது வாது தெரியாதே.  கள்ளங்கபட மற்ற அவர்கள் முகம் எப்போதுமே அழகாக இருக்கும்.  எடுத்த படத்தைப் பார்த்துக் குறையும் சொல்ல மாட்டார்கள்.  வயதான பின்பும் தங்கள் குழந்தைப் பருவப் படங்களைப் பார்க்கும் போது அவர்கள் சந்தோஷப் படுவார்களேயொழிய குற்றம் கண்டு பிடிக்க மாட்டார்கள்.

ஒரு முறை எனது அண்ணன் மகள் ஒருத்தி தன்னைப் படம் பிடிக்கச் சொல்லிக் கேட்டாள்.  அருகில் இருந்த என் அண்ணன் கத்தினான், "அவனுக்கு மனுஷாளெப் படம் பிடிக்கத் தெரியாதுடீ.  கோட்டானையும், குரங்கையுந்தான் படம் எடுப்பான்" என்று. இருந்தாலும் எனக்குத் தோன்றும் சில விஷயங்களைச் சொல்லுகின்றேன் பெரியவர்களையும், குழந்தைகளையும் படம் பிடிப்பது பற்றி.

பெரியவர்களைப் படம் பிடித்தல் பற்றி முதலில் பார்ப்போம்:

1.       அவர்களை நிற்க வைத்து, "சிரிங்க" என்று சொல்லாமல் அவர்களோடு பேச்சுக் கொடுத்துக் கொண்டே அவர்கள் இயல்பாக இருக்கும் போது 'ஷட்டரை' அழுத்துங்கள்.

2.       அவர்கள் முன்பிருந்து பலமான சூரிய வெளிச்சமோ, விளக்கு வெளிச்சமோ விழுந்திடும் போது (Harsh lighting) படம் பிடிக்காதீர்கள்.  போட்டோ பிடிக்கும் கடைகளில் பார்த்திருப்பீர்கள் வெள்ளைக் குடைகளில் பிளாஷ் வெளிச்சம் விழுந்து அதிலிருந்து சிதறும் ஒளி உங்கள் முகத்தில் விழுமாறு வைத்திருக்கும் அமைப்புகளை.  மிருதுவான வெளிச்சம் என்பார்கள் அதை (Soft lighting).  அம்மாதிரி அமைப்புகள் இரண்டிருக்கும்.  அவற்றில் அதிக வெளிச்சம் தரும் அமைப்பு (Main light) உங்கள் முகத்தை விட சற்று உயரத்தில், பக்க வாட்டில் இருந்து விழுமாறும், குறைந்த வெளிச்சம் தரும் அமைப்பு (fill in light) முகத்தின் முன் புறம் இருக்குமாறும் அமைக்கப் பட்டிருக்கும்.

3.       மரக் கிளைகள் வழியே திட்டுத் திட்டாக அவர்கள் மூஞ்சியில் சூரிய வெளிச்சம் விழுந்திடும் போது படம் பிடிக்காதீர்கள்.  அப்படி எடுக்கும் படங்கள் அவரை வெண் குஷ்ட ரோகியாகிக் காட்டும்.

4.       யாரைப் படம் பிடிக்கிறீர்களோ அவர்கள் பின்புறமிருந்து பலமான சூரிய ஒளியோ, வானமோ, வெளியில் இருந்து ஜன்னல் வழியே வந்திடும் வெளிச்சமோ வரும் போது (Back lighting) உங்கள் காமிராவை தானியங்கியாக வெளிச்சத்தினை அளந்து இயக்கும் வித்த்தில் வைத்து எடுக்காதீர்கள்.  அப்படி எடுக்கும்போது அவர் கருப்பாகத் தெரிவார்.  காரணம் உங்கள் கேமிரா அதன் லென்சின் மீது விழுந்திடும் வெளிச்சத்தினை அளந்து அதற்கேற்றார்ப்போல் 'ஷட்டர்' ஸ்பீடையோ, 'அபெர்சரை'யோ வைக்கிறது.  அதனால் அவர் முகம் கருப்பாகத் தெரியும்.  அம்மாதிரி எடுக்க வேண்டி வந்தால் 'பிளாஷை' உபயோகித்து எடுங்கள்.

5.       ஒருவரின் இடுப்புக்கு மேலான படத்தை எடுத்து, அவரது உணர்ச்சிகளைக் காட்ட விரும்புகிறீர்கள் என்றால் அவரை கேமிராவை நேராகப் பார்க்கச் செய்யாதீர்கள்.  நேராக எடுக்கப் படும் படங்களை விட சற்றே பக்க வாட்டில் இருந்து எடுக்கப் படும் படங்கள் அழகாக இருக்கும்.  ஒருவரது கண்கள் தான் அவர் உடலில் உணர்வுகளை வெளிப் படுத்திடும் மிக முக்கிய உறுப்பு.  ஆகவே அந்தக் கண்ணோ, கண்களோ நான் முன்பு ஒரு கட்டுரையில் சொல்லி இருந்த ஒரு படத்தின் முக்கியப் புள்ளிகள் நான்கில் ஒன்றின் (picture's focal points) அருகே வருமாறு படம் எடுங்கள்.  அப்படி எடுக்கும் போது ஒன்றை மறந்து விடாதீர்கள்.  அவர் கண் / கண்கள் பார்த்திட இடமளியுங்கள்.
                 



முக்கியப் புள்ளிகள் (Focal points)



உலகப் புகழ் வாய்ந்த 'கார்ஷ் ஒஃப் ஒட்டவா', ஓ.பி.ஷர்மா மற்றும் அவர்கள் போன்ற பலர் எடுத்த படங்களைக் கூர்ந்து நோக்குங்கள்.  அவர்கள் எழுதியவற்றையோ, அவர்கள்சிப் பற்றிப் பிறர் எழுதிய வற்றையோ படியுங்கள்.

பெரியவர்களை விடுங்கள்.  

குழந்தைகளைப் படம் பிடிப்பதைப்  பார்ப்போம்:

குழந்தைகள் ஒரு இடத்தில் நின்று உங்களுக்காக 'போஸ்கொடுக்க மாட்டார்கள்.  ஒரு கணம் ஓரிடத்தில் நில்லாது ஓடிக் கொண்டே இருப்பார்கள்.  நீங்கள்தான் அவர்கள் பின்னே ஓடிக் கொண்டிருக்க வேண்டும் அவ்வப்போது அவர்களின் சேட்டைகளைப் படம் பிடிக்க.  அவ்வாறு எடுக்கும் படங்கள் தான் அழகாக அமையும்.  உதாரணத்திற்கு சில படங்கள் கீழே:



(ஒன்னுது இல்லடா.....குட்றா........)




(தின்ன சோறு ஒடம்புலெ ஒட்ட வாணாம்?)



(ஆராரோ...ஆரிரரோ...ஆரடிச்சா? நீ அழறே?)



(ஆசை முத்தம் தா...தா...)

(யாரு அங்கெ வர்றது?)


(எனக்குத் தூக்கமா வருதுங்க)

உங்களுக்கும் தூக்கமா வருதில்லெ?  அப்பொ இத்தோடெ முடிச்சுக்கறேன் என் கட்டுரைகளெ.  வணக்கம்!

(முதல் படம் தவிர மற்ற அனைத்தும் எடுத்தது நடராஜன் கல்பட்டு)
***

இத்துடன் இத்தொடர் நிறைவுறுகிறது. PiT வாசகர்களுடன் தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட திரு. கல்பட்டு நடராஜன் அவர்களுக்கு நம் நன்றி!

-----------------------------------------------------------------------------------------------------------
தொடர்புடைய முந்தைய பதிவுகள்:
தினகரன் வசந்தத்தில் திரு. நடராஜன் கல்பட்டு

Tuesday, December 2, 2014



ணையத்தில் இந்த சுட்டியில்,
http://digital-photography-school.com/ultimate-diy-ring-light-project/  வீட்டில் நாமாகத் தயாரிக்கும் Ring Light பற்றி படித்தது  முதல் இம்மாதிரியான light செய்ய வேண்டுமென மிகவும் ஆசையாக இருந்தது. ஆனால் இது நம்மூரில் சாத்தியமா என சற்று யோசனை. மேலும் இதை செய்ய வேண்டுமெனில் என் கணவரின் உதவியை சற்றும் எதிர்பார்க்க முடியாது. வேலையில் மூச்சு விட மட்டுமே நேரம் அவருக்கு.  2 வாரத்திற்கு முன் முகநூல் நண்பர் "ராகேஷ்"  இம்மாதிரியான light -ஐ செய்திருந்தார். இதன் உதவியினால் அவர் எடுத்திருந்த புகைப்படங்கள் அருமையாக வந்திருந்தன. அவருடைய முயற்சி எனக்கு மிகவும்  நம்பிக்கை அளித்தது. சரி நாமும் செய்து பார்க்கலாம் என 1 வாரத்திற்கு முன்பு plywood கடைக்கு துணிந்து சென்று விசாரித்தேன்.  இது தான் முதல் படி, இதோ 1 வாரத்தில் light தயாராகி படங்கள் எடுத்தும் பார்த்து விட்டேன். மிகவும் அருமையான, மென்மையான light மற்றும் கண்களின் கருவிழியில் தெரியும் அழகான வட்டவடிவமான  பிம்பம். இதை இதை தானே எதிர் பார்த்தேன் நான்.

சரி, இந்த லைட் செய்வதற்கு என்னென்ன தேவை என்பதை சற்று விரிவாக பார்ப்போம்.


1. 10mm plywood 3 அல்லது 4 அடி விட்டத்தில் வெட்டுவதற்கு தேவையான அளவில் (நான் 3 அடி விட்டத்தில் செய்து கொண்டுள்ளேன்) வாங்கிக் கொள்ள வேண்டும்.
2. பின்பு அதை மர வேலை செய்பவர்களிடம் கொடுத்து படத்தில் காட்டியது போல் வெட்டி கொண்டுள்ளேன்.
3. அதை ஓர் Electrician -யிடம் கொடுத்து விளக்குகளை பொருத்திக் கொள்ள வேண்டியது தான்.  நான் உள்  வட்டத்திற்கும் வெளி வட்டத்திற்கும் 12 , 12 பல்புகளாக மொத்தம் 24 பல்புகள் பொருத்தி இருக்கிறேன்.  24 பல்புகள் பொருத்துவதினால், 25W பல்புகளே போதுமானதாக எனக்கு தோன்றியது. மேலும் ஒவ்வொரு வட்டத்திற்கும் தனித்தனியாக Dimmer(நம்ம fan regulator தாங்க) பொருத்திக்  கொண்டேன். இது லைட் -ன் brightness-ஐ கூட்டியோ, குறைத்தோ வைத்துக் கொள்ள உதவும்.

இவை அனைத்தையும் செய்து முடிக்க Rs. 3200 செலவானது.

இதை, வீட்டில் ஊஞ்சல் மாட்டுவதற்காக இருந்த கொக்கியில் மாட்டி, நடுவில் பெரிதாக இருக்கும் வட்டம் வழியாக படங்கள் எடுக்க வேண்டியது தான்.  லைட் தயாரானவுடன் முதலில் தன்னைத் தான் படம் எடுக்க வேண்டும் என்பது என் மூத்த மகன் மதியின் வேண்டுகோள். ஆகவே அவனையே  முதலில் படமெடுத்தேன்.


இந்த மாதிரியான light , Fashion Photographers -க்கு மிகவும் உதவியாக இருக்கும் என  நினைக்கிறேன்.

- வனிலா பாலாஜி

Friday, May 16, 2014

கிராமப் புறங்களில் அழகான படங்கள் பிடித்திட பல வாய்ப்புகள் கிடைக்கும்.  குடிசை வீடுகள், வயல் வெளிகள், களத்து மேடு, கிராம மக்கள் என இப்படிப் பல உங்கள் கண்களைக் கவரும்.  அவற்றை சரியான கோணத்தில், தேவையான வெளிச்சம் பட, சரியான தருணத்தில் எடுத்திருந்தால் கதை சொல்லும் பல அழகிய படங்களை நீங்கள் எடுத்திடலாம்.  உதாரணத்திற்கு சில படங்கள்:
#1
(உழைப்பாளிகள்)
#2
(வறுமைக்கோட்டின் கீழே)
#3
(தொழிலாளி)
#4
(இயற்கை வைத்தியம்)
#5
(கண்ணீர் இன்றித் தண்ணீர்)
கிராமப் புறங்களில் படம் பிடிக்கும் போது மிகுந்த கவனம் தேவை.  இல்லை என்றால் நீங்கள் அனாவசியமாகப் பிரச்சினைகளில் சிக்கித் தவிக்க நேரிடும்.  முதலில் நீங்கள் அவர்களோடு பேசி உங்களை அவர்களோடு ஒருவராக ஆக்கிக் கொண்டு, பின் அவர்களது அனுமதியுடன் படம் பிடிக்க வேண்டும்.  இந்த விதி பெண்களைப் படம் பிடிக்கும் போது கட்டாயம் அனுசரிக்க வேண்டிய ஒன்று.  இல்லை என்றால் ஒரு கிராமத்தில் நாங்கள் பட்ட அவஸ்தையினை நீங்களும் பட வேண்டி வரும்.

ஒரு முறை ஏரிக்கரையில் தலையில் புல்லுக் கட்டோடு வந்து கொண்டிருந்த பெண்கள் பக்கம் தன் கேமிராவைத் தூக்கி என் நண்பர் நோட்டம் விட, அவள் கன்னடத்தில் ஏதோ கத்த, வயல்களில் இருந்து ஐந்தாறு ஆட்கள் கையில் அரிவாளோடு ஓடி வந்து எங்களைச் சூழ்ந்து கொண்டு மிரட்ட, அன்று அவர்களிடம் இருந்து தப்பிக்கப் பட்ட பாடு, அப்பப்பா, சொல்லி மாளாது!

படங்கள் அனைத்தும்: நடராஜன் கல்பட்டு.

-அடுத்த பகுதியுடன் தொடர் நிறைவுறும்.

***

Legend Talks..
திரு கல்பட்டு நடராஜன்
-----------------------------------------------------------------------------------------------------------
தொடர்புடைய முந்தைய பதிவுகள்:




Sunday, April 6, 2014

இந்தக் கட்டுரை ஒரு நேயர் விருப்பம்.  அன்பர் அகமது சுபைர் அவர்கள் ஒருநாள் கேட்டார், “பறவைகளுக்கு 20 பாகம்... விலங்குகளுக்கு ஒரு பாகம் தானா???  இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன் உங்க கிட்டெ... :).” என்று.  ஆகவே பூச்சிகளைப் படம் பிடிப்பது பற்றி எழுதுகிறேன் இங்கு.

பூச்சிகள் உருவத்தில் மிகச் சிறியவை.  ஆகவே அவற்றைப் படம் பிடிக்க சிறிது சிரமப் பட வேண்டும்.  அந்நாட்களில் இப்போது இருப்பது போல ‘மேக்ரோ லென்ஸ்’ கள் கிடையாது.  ஆகவே பூச்சிகளைப் படம் பிடிக்க கேமிராவின் லென்ஸ் பூச்சியில் இருந்து ஒன்றிரண்டு அங்குல தூரத்தில் இருந்தால் தான் பூச்சியின் நுண்ணிய பரிமாணங்கள் தெரியும்.  ஆனால் கேமிராவின் லென்ஸோ ஒரு குறிப்பிட்ட தூரத்திகு மேல் இருந்து எடுத்தால் தான் படம் சரியாகத் தெரியும்.  அப்படி எடுத்தாலோ பூச்சி ஒரு புள்ளியாகத் தெரியும். ஆகவே நிலமையை சமாளித்திட பெல்லோஸ் ஸ்கோப் என்ற ஒரு கருவியின் உதவி தேவை.  துருத்தி போன்ற அக்கருவியில் உங்கள் கேமிராவின் லென்ஸைப் பொறுத்தி, ஒரு அங்குல தூரத்தில் இருந்து கூட படங்கள் பிடித்திடலாம்.



உங்கள் கேமிராவின் லென்ஸைக் கழற்றி எடுத்து அந்த இடத்தில் பெல்லோஸ் ஸ்கோப்பைப் பொறுத்தி, லென்ஸை அதில் பொறுத்திப் படம் பிடிக்க வேண்டும்.  அப்படிப் பிடித்த மூன்று படங்கள் இதோ:
(சிலந்தி முட்டைகளை தானே நூற்ற நூலால் சுற்றி பந்தாகச் செய்து தன்னுடனே சுமந்து செல்கிறது)
இந்த சிலந்தி தோட்டங்களில் தரையில் வாழ்ந்திடும் ஒன்று.  சுமார் 5 மில்லி மீட்டர் அளவில் இருக்கும் இது.  இந்தப் படம் ஒரு அங்குல தூரத்தில் இருந்து எடுக்கப் பட்ட்து.

சிலந்திக்கு மூன்று அல்லது நான்கு ஜோடிக் கண்கள் உண்டு, தூரத்துப் பார்வை, பரந்த பார்வை, கிட்டத்துப் பார்வை, தூரத்தினை அளந்திடும் வகை செய்ய முப்பரிமாணப் பார்வை உள்ள கண்கள் என்று.

(அன்று பிறந்த வண்ணாத்திப் பூச்சி)
இடையான் பூச்சிகளில் பல விதங்கள் உண்டு.  புல் வடிவில், இலை வடிவில், சருகு வடிவில், மலர் வடிவில் என்று.  ஆனால் அவை எல்லா வற்றிற்கும் சில பொதுக் குணங்கள் உண்டு.  அவை மாய்மாலம் (சுற்றுப் புறத்தோடு நிறத்தில் ஒன்றிடுதல்), தன்னைவிடப் பெரிய உயிரினங்களையும் பிடித்துத் தின்னல் என்று.  சில வகை இடையான்கள் கணவனோடு இன்பம் அனுபவித்துக் கொண்டிருக்கும் போதே கணவனின் தலையைக் கடித்துத் தின்று விடும்!  தலை இழந்து கணவன் துடிக்கும் போது மனைவிக்கு இன்பம் அதிகரிக்கிறது என்று ஒரு பூச்சி ஆராய்ச்சியாளர் சொல்லி இருக்கிறார்!!

(முன்னங் கால்களை மடித்து வைத்துக் கொண்டிருக்கும் குச்சி ரக
இடையான் பூச்சி)
இவ்வுலகில் லட்சக் கணக்கான பூச்சிகள் உள்ளன.  அவை ஒவ்வொன்றும் தனித் தன்மை வாய்ந்தவை, அவற்றைப் படம் பிடித்தல் ஒரு அருமையான பொழுது போக்கு.  அப்படிப் படம் பிடிக்கும் போது அவை பற்றி பல விஷயங்களையும் அறிந்திட வாய்ப்பு கிடைக்கும்.

(படங்கள் – நடராஜன் கல்பட்டு)
***

Legend Talks..
திரு கல்பட்டு நடராஜன்
-----------------------------------------------------------------------------------------------------------
தொடர்புடைய முந்தைய பதிவுகள்:


Thursday, February 20, 2014

சரணாலயங்களில் நடந்தோ, யானை மீதோ, நீர் தேக்கங்களில் படகிலோ சென்று, பார்த்தல்,விலங்குகளைப் படம் பிடித்தல் என்பது ஒரு இன்ப மயமான அனுபவம். 
நீங்கள் சுவாசித்திடும் சுத்தமான காற்றும், மனித ஆரவாரமற்ற நிலையும், பறவைகளின் சங்கீதமும், ஓடைகளில் ஓடிடும் நீரின் சலசலப்பும் உங்களை உடலோடு தூக்கி வேறு ஒரு உலகத்திற்கே கொண்டு சென்று விடும்.
படம் பிடித்திடும் ஆர்வத்தில் தனியாக மட்டும் சென்றிட வேண்டாம்.  வனக் காவலர்கள் துணையுடனோ அல்லது அனுபவம் மிகுந்தவர்களுடனோ செல்வது எப்போதுமே நல்லது.
#1
(பெரியாறு ஏரிக் கரையில் ஒரு யானைக் கூட்டம்)
தனியாக இருக்கும் யானைக்குத் தக்க மரியாதை கொடுத்து வெகு தூரத்திலே இருந்தே அதைப் பாருங்கள்.  யானைக கூட்டமாக இருக்கும் போது அவ்வளவு ஆபத்தானது அல்ல.
காட்டு விலங்குகளில் சிங்கம், சிறுத்தை, புலி இவையும் சற்று ஆபத்தானவையே.
ஒரு முறை கர்னாடகாவில் உள்ள கெமன்குண்டி மலைப் பிரதேசத்தில், ஆளுயரப் புல் அடர்ந்த காட்டுப் பகுதியில் இருந்த ஒற்றையடிப் பாதை வழியே எனது குரு பெருமாள் அவர்களும் மற்றொரு நண்பருமாக நடந்து சென்று கொண்டிருந்தோம்.  ஓரிடத்தில் ஒரு புதிய வாடையை நுகர்ந்து ஒரு வினாடி நின்று சுற்று முற்றும் பார்த்தேன்.  என் பின்னே வந்து கொண்டிருந்த பெருமாள் சைகையால், “நிற்காதே.  போ என்றார்.  நானும் நடந்தேன்.  சற்று தூராம் சென்ற பின் பெருமாள் கேட்டார், “ஏன் தெரியுமா உன்னை நிற்காதே என்றேன்?  அங்கு ஒரு புலி நம் கண்ணுக்குப் புலப்படாமல் நம்மைப் பார்த்துக் கொண்டிருந்த்து என்று.  பதிலுக்கு நான் சொன்னேன், “நானும் அதற்காகத் தான் நின்றேன்.  புலி கண்ணில் படுகிறதா என்று பார்த்திடலாம்” என்று.
விலங்குகளை அவற்றின் இயற்கையான் சூழலில் இருப்பது போன்ற படங்களைப் பிடித்திட சரணாலயங்களுக்குத் தான் போகவேண்டும் என்பதில்லை.  உங்கள் ஊரிலோ அல்லது அருகாமையிலோ இருக்கும் உயிரியல் பூங்காவிற்கு சென்றால் கூட நல்ல படங்கள் பிடித்திடலாம்.  அப்படிப் பிடிக்கும் போது நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய ஒன்று விலங்குகள் இருக்கும் கூண்டுகளின் கம்பிகளோ தடுப்புச் சுவர்களோ படத்தில் வராத படி பார்த்துக் கொள்ள வேண்டும்.  உதாரணத்துக்கு நான் பிடித்த சில படங்கள் கீழே:
#2 
 (யோவ்.... பொண்ணு குளிக்கற எடத்துலெ ஒனக்கு என்னையா வேலெ?)
#3 
(கொஞ்ச நேரம் ஓய்வு எடுக்கலாம்னா இங்கெயும் வந்துட்டாங்கையா படம் புடிக்க)
#4
 (ராஜா ராணி)
#5
(புலி சிங்கம் இருந்தா ஒரு மான் இருக்க வேண்டாம்?)

#6 


(என்னெயெப் போல சோம்பேறியா இருக்காதீங்க.  சுறு சுறுப்பா இருங்க.)

#7

(உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்................கிட்டெ வராதீங்க!)
பறவைகள் ஆச்சு. விலங்குகள் ஆச்சு.  மனுசங்களெப் பத்தி சீக்கிரத்துலெ பாக்கலாம். அதுக்கு முந்தி பூச்சிகளெப் பத்தி அடுத்த பகுதிலெ பார்க்கலாம்.
(படங்கள் – நடராஜன் கல்பட்டு)

*** 
Legend Talks..
திரு கல்பட்டு நடராஜன்
-----------------------------------------------------------------------------------------------------------
தொடர்புடைய முந்தைய பதிவுகள்:


 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff