Friday, June 7, 2013

தோற்றப் பொலிவு, கூடுதல் வசதிகளுடன் NEW FLICKR

6 comments:
 
#1  1 GB வேலி முள்
விலகியது:)!
Flickr அபிமானிகளுக்கு ஒரு நற்செய்தி! அன்றாடம் உலவும் சமூக வலைத்தளங்களிலும், பிரத்தியேகமாகப் புகைப்படங்களுக்கென வந்திருக்கும் புதிய பல தளங்களிலுமாக நம் படங்களைப் பகிர எத்தனையோ வழிகள் வந்து விட்டாலும் இவை அனைத்துக்கும் முன்னோடியாகவும் இன்றளவிலும் முதன்மையானதாகவும் இருந்து வருவது FLICKR.

இருவாரங்களுக்கு முன்வரையில் 1 GB வரை (சுமார் 200 படங்கள்) மட்டுமே இலவசமாக ஏற்ற முடிவதாக இருந்தது. அதில் sets உருவாக்க இயலாது. படங்களையும் பார்த்துப் பார்த்து குறைந்த அளவு இருக்குமாறு வலையேற்ற வேண்டிய சூழல். இதனாலேயே 1GB கோட்டா முடிந்ததும், பலரும் அதில் அப்டேட் செய்வதை விட்டுவிட்டு வெளியேறி வந்தனர். ஃப்ளிக்கர் மேல் பற்று கொண்டவர்கள் கூடுதல் வசதிகளை ஆண்டுச் சந்தா கட்டி Pro உறுப்பினர் ஆகித் தொடர்ந்து வந்தனர். நானும் அப்படியே. ஆனாலும் வகைப்படுத்தி சேமித்த ஆயிரத்துக்கும் மேலான படங்கள் எல்லாம் எப்போதேனும் ஆர்வம் குறைகையில் அல்லது தளத்தைக் கவனிக்காமல் விடுகையில் மறைந்து போகுமே எனும் உறுத்தல் இருந்தபடியே இருந்தது. அதாவது சந்தா கட்டத் தவறுகையில் 1GB வரையிலாக நாம் ஏற்றிய படங்களை மட்டுமே நம் கணக்கில் காட்டிக் கொண்டிருக்கும் Flickr.

பலருக்கும் இருந்து வந்த இந்தத் திருப்தியின்மையைத் தீர்க்கும் விதமாகவும்.., ‘Pro உறுப்பினர்கள் மட்டுமே உபயோகிக்க இலாயக்கு’ என்றொரு பொதுக் கருத்து உருவாகி மற்றவர்கள் விலக ஆரம்பித்தது கண்டும் சந்தா கட்டாமலே சகலரும் அனைத்துப் பயன்களையும் பெற்றிடும் விதமாக.. பொதுப் பொலிவோடு மலர்ந்திருக்கிறது ஃப்ளிக்கர் இப்போது.

* அதன் படி சந்தா கட்டியவர் கட்டாதவர் பாகுபாடின்றி அனைவரும் 1 டெராபைட் (1024 GB) கொள்ளளவு வரை (ஏறத்தாழ, 20000 படங்களை) ஸ்டோர் செய்திடும் வசதியைக் கொண்டு வந்திருக்கிறது. படங்களை நாம் பெரிய அளவு கொண்டதாகவே சேமித்து வைத்துக் கொள்ள முடியும்.

*  ‘இதுவரை கட்டிய சந்தா திருப்பித் தரப்படுமா’ எனும் கேள்வி பரவலாக எழுப்பப்பட்டு வருகிறது. சந்தா திருப்பித் தரப்படாது. அவரவர் சந்தாக்காலம் முடிகிற வரையில் (பெரும்பாலும் 2 வருடத்துக்கு செய்து கொள்வது வழக்கம்) 2 டெராபைட் (2048 GB) கொள்ளளவு வழங்கப்படுகிறது. ஆனால் அதனால் பெரிய பயனேதுமில்லை. ஏனெனில் சந்தாக்காலம் முடிந்ததும் மீண்டும் 1 டெராபைட் அளவு படங்களே கணக்கில் இருக்கும் என்பதோடு இனி விரும்பினாலும் ‘சந்தா’ வசதியை ஃப்ளிக்கர் வழங்குவதாய் இல்லை.

* சந்தாக் காலம் முடிகிறவரை விளம்பரங்கள் நம் பக்கங்களில் தோன்றி எரிச்சலூட்டாது.

தோற்றத்திலும் சில மாற்றங்கள்:

* ஒவ்வொருவர் ஃபோட்டோஸ்ட்ரீம் முகப்பிலும் குறிப்பிட்ட அளவில் மட்டுமே படங்களை முன்னர் காட்டி வந்தது. சிறந்த படங்களைத் தேடவோ, அல்லது அனைத்துப் படங்களையும் பார்வையிடவோ ஒவ்வொரு பக்கமாகத் திறந்தபடி செல்ல வேண்டியிருந்தது. இப்போது பிகாஸா ஆல்பங்களைப் போல, scroll செய்து  பார்வையிட வசதி.

* கருப்புப் பின்னணியில் படங்களைக் காண அதன் மேல் மீண்டும் க்ளிக் செய்து லைட் பாக்ஸில் திறக்க வேண்டியிருந்தது. இப்போது பக்கத்தின் மேல்பாகம் கருப்புப் பின்னணியில் படங்களைக் காட்ட, கீழ்பாகம் வெண்ணிறத்தில் உறுத்தாமல் கமெண்ட்ஸை வாசிக்கும் வசதியுடன் உள்ளது. லைட் பாக்ஸ் வசதியும் தொடருகிறது.

*  பழைய தோற்றமே நேர்த்தியாய் இருந்தது என்றும், படங்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டி கசமுசவென இருக்கிறது இப்போது என்றும் வருந்துகிறார்கள் சிலர்.  மற்றவர் பக்கங்களை அல்லாவிட்டாலும் நம் பக்கத்தை sets-favorites-யை அடுத்து இருக்கும் edit-யை உபயோகித்து பழைய தோற்றத்துக்கு வரவைத்து பார்வையிட, உபயோகிக்க இயலும்.

* முகப்பிலேயே தெரிந்துவந்த exif data மற்றும் sets இப்போது க்ளிக் செய்தால்தான் பார்க்கும்படி ஆகிவிட்டுள்ளது குறை.

இனி பலரும் இதில் இணைந்து பயன்பெறுவார்கள் என நம்பலாம். முன்னர் 200-வுடன் விட்டுச் சென்றவர்கள் மீண்டும் பகிர ஆரம்பித்திருக்கிறார்கள்.

தொடர்ந்து பயன்படுத்துகையில் ஒவ்வொரு பயன்பாட்டையும் நீங்களே அறிந்து கொள்வீர்கள்தான். ஆனாலும் ஏன் சின்னச் சின்ன விஷயங்களையும் இங்கே தரப் போகிறேன் என்றால் இவை ஒவ்வொன்றையும் நான் அனுபவத்தில் அறிந்திட பல நாட்கள், மாதங்கள் ஏன் வருடங்களே பிடித்தன. எனவே புதிதாக இணைகிறவர்களுக்கு பயனாகக் கூடும் எனும் நம்பிக்கையுடன்.. சில குறிப்புகள்:
.

* படங்களுக்கான பாதுகாப்பு (downloading option-யை disable செய்து வைக்கலாம்), அப்லோட் செய்கிற வேகம், படங்களை வகைப்படுத்துகிற வசதி ஆகியன சிறப்பாக உள்ளன.

* படங்களை எடுத்த இடத்தை வரைபடத்தில் (location map) காட்ட முடிவது, விவரங்களை tag செய்ய முடிவது ஆகியவற்றால் கூகுள் போன்ற இணையத் தேடல்கள் மூலமான வருகையையும் படங்கள் பெறுகின்றன.

* வலைப்பதிவுகளை நாம் திரட்டியில் இணைப்பது போல நமக்கேற்ற குழுக்களைக் கண்டுபிடித்து  (உதாரணமாக, நீங்கள் எந்தவகைப் படங்களை அதிகம் எடுக்கிறீர்களோ அதற்கேற்ற க்ருப்களை கீழ்வருமாறு: nature, sun, sea, flowers, nikon, canon மற்றும் வாழும் ஊர், சென்ற இடம் இப்படி..) தேடிக் கண்டு பிடித்து இணைந்து படங்களைப் பகிரலாம். பொதுவாகப் பகிர இருக்கவே இருக்கிரது நமது  PiT Pool . இங்கு இணைக்கப்பட்ட படங்களைக் கொண்டே ‘இந்த வார சிறந்தபடம்’ முன்னர் PiT தளத்தில் தேர்வாகி வெளிவந்து கொண்டிருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

* நாம் தொடருபவர்கள் வலையேற்றும் படங்களை உடனுக்குடன் காண இங்கே (Contacts - Recent Posts) செல்லலாம்.

* நமது அனைத்துப் படங்களுக்குமாக வரும் கருத்துகள், நாம் இட்ட கருத்தைத் தொடர, வருகிற தகவல்களைப் பார்க்க ஆகியவற்றுக்கு Recent Activity பக்கம் உதவும்.

* ஒவ்வொரு நாளும் ஃப்ளிக்கர் தேர்வு செய்யும் ஆகச் சிறந்த ஐநூறை இங்கே Explore செய்யலாம். திறமையான புகைபடக் கலைஞர்களின் படங்களை அவதானிப்பதே ஒரு நல்ல பயிற்சியாகவும் அமைந்து போகிறது.

*நமது மற்றும் மற்றவர் படங்களில் விருப்பமான பகுதியைக் கட்டம் கட்டி (பாராட்டவோ, அல்லது suggestion சொல்லவோ) note சேர்க்கும் வசதி ஃப்ளிக்கரின் தனிச் சிறப்பான ஒன்று.

* உறுப்பினர்களைத் தொடர்பு கொள்ள மின்னஞ்சல் வசதி உள்ளது.  அதன் வழியே தொடர்பு கொண்டு நம் படங்களை வாங்குவோரும் உண்டு. make my trip.com-யை அடுத்து map my india நிறுவனமும் மெயில் மூலமாக தொடர்பு கொண்டு லால்பாக் மலர்கண்காட்சிப் படம் (தில்லி தாமரைக் கோவில்) படங்களை தங்களது பெங்களூர் சுற்றுலா வழிகாட்டிப் புத்தகத்துக்காகக் கேட்டு வாங்கிக் கொண்டிருந்தது. நாம் எடுக்கும் படங்களுக்கு இப்படியான அங்கீகாரங்கள் கிடைப்பது மகிழ்ச்சியான ஒன்றுதானே.

எடுக்கும் படங்களை எப்படி கமர்ஷியலாகப் பயன்படுத்துவது என பலருக்கும் ஒரு கேள்வி இருந்து வருகிறது. அதற்கு Getty Images கை கொடுக்கிறது Flickr- வுடன் கைகோர்த்து.

* Getty Images:
ஒவ்வொரு சமயத்திலும் ஒவ்வொரு வகையான படங்களுக்கான தேவை இருக்கிறது இவர்களுக்கு. நமது ஃபோட்டோஸ்ட்ரீமில் அவற்றைத் தேடி எடுத்து நமக்கு அவற்றைத் தர விருப்பமா எனக் கேட்கிறது. அப்படிக் குறிப்பிட்டதைத் தேடும் சமயத்தில் கண்ணில் படுகிற பிற நல்ல படங்களையும் பட்டியலில் சேர்த்துக் கொள்கிறது. அவர்கள் தேர்வு செய்த எனது சில படங்கள்:

இவற்றில் நாம் விரும்புவதை அவர்களுக்கு விலைக்குக் கொடுக்கலாம். அதற்காக அவர்கள் முன் வைப்பது இரண்டு விதமான உரிமைகள். ஒன்று Common license. இன்னொன்று restricted license with royalty.

முதலாவது பொதுவான உரிமைப்படி, படங்களை நாமும் பயன்படுத்தலாம். அவர்களும் பயன்படுத்தலாம். அதே நேரம் வேறுயாரும் கூட பயன்படுத்தலாம். நம்முடனான அவர்களது ஒப்பந்தத்தை ஒவ்வொரு வருட முடிவிலுமாக 3 வருடங்கள் நீட்டித்துக் கொள்கிறார்கள். தேவையானவர்களுக்கு படங்களை விற்று அதில் சுமார் 70% அவர்களுக்கு 30% படம் எடுத்தவர்களுக்கு என நிர்ணயிக்கிறார்கள்.

இரண்டாவது, முழு உரிமையும் அவர்களுக்கே கொடுத்து விடுவது (நாம் பயன்படுத்துவதானாலும் அவர்களிடம் அனுமதி பெற வேண்டும்). இதில் படங்கள் விற்பனையாகும் ஒவ்வொரு முறையும் எடுத்தவர்களுக்கு 40% வரை royalty கொடுக்கிறார்கள்.

அவர்களாக தேர்வு செய்வது போக ‘இந்தப் படங்களைக் கொடுக்கச் சம்மதம்’ என முடிவு செய்பவற்றை அவர்களது group-ல் இணைத்திடும் வசதியை வைத்திருந்தார்கள் முன்னர். இப்போது அது நீக்கப்பட்டு விட்டது. ஆகவே அவர்களது தேடல்களின் போது நாம் கொடுக்க முடிவு செய்யும் படங்களை எளிதாக அவர்கள் கண்டு கொள்ள Getty Images - For your attention போன்றதான தலைப்பில் ஒரு set (folder) உருவாக்கி வைக்கலாம்.

பெரிய அளவிலான வருமானம் என்று கொள்ள முடியாது. எடுத்தது ஏதோ ஒரு வகையில் பயன்படட்டும் என்ற நோக்கில் கொடுப்பவர்கள் முயன்றிடலாம்.

பத்திரிகைகளுக்கானாலும் சரி, வேறு யார் படங்களுக்காக நம்மை அணுகினாலும் சரி, வாட்டர் மார்க் இல்லாத படங்களையே தர வேண்டியிருக்கும். எனவே படங்களின் ஒரிஜனல் கோப்பையும், process செய்த படங்களை வாட்டர் மார்க் இல்லாமலும் தனியாக ஒரு கோப்பில் எப்போதும் சேமித்து வைப்பது அவசியம்.

நான் எடுக்கும் படங்களின் உரிமம் எப்போதும் எனக்கு இருக்க வேண்டும் என்பது எனும் தனிப்பட்ட விருப்பத்தால் (காமன் லைசன்ஸில் அனுமதியின்றி மற்றவரும் பயன்படுத்துவதாக இருப்பது சம்மதமாக இல்லை) நான் enroll செய்து கொள்ளவில்லை. எனவே அவர்களும் முதன்முறைக்குப் பிறகு அணுகவில்லை. இங்கே இன்னொரு விஷயத்தையும் கவனிக்கத் தருகிறேன். தேர்வான 7 படங்களில் 3,5,7 ஆகியவை DSLR உபயோகிக்க ஆரம்பிக்கும் முன் Point and shoot-ல் எடுத்த படங்கள்:

ஷ்ராவணபெலகுலா ‘கோமதீஷ்வரா’
2006-ஆம் ஆண்டில் மகாமஸ்தக அபிஷேகத்தின் போது 
Nikon E3700 பாயின்ட் & ஷூட் கேமராவில் எடுத்த படம்.
 http://www.flickr.com/photos/ramalakshmi_rajan/6812580774/
DSLR ஆக இருந்தால் 18mm-ல் 57 அடிச் சிலையை முழுதாகப் படமாக்கியிருக்க முடியும்தான். அதிக பட்ச தொலைவில் நின்றும் P&S-ல் இவ்வளவே கவர் செய்ய முடிந்தது. இருந்தாலும் தேர்வாகியிருக்கிறது. கூடுதல் வசதிகள் DSLR-ல் இருப்பது உண்மைதான் என்றாலும் பாயிண்ட் அண்ட் ஷூட்டிலும் நல்ல படங்களை நாம் தர முடியும். இப்போது PiT உறுப்பினர் குழுவில் இடம் பெற்று விட்டிருக்கிற நான், இந்தத் தளம் அறிமுகமாகி முதல் மூன்று வருடங்கள் ஒருமாதம் கூட தவறாமல் போட்டிகளில் கலந்து கொண்டு வந்த போது பலரும் குழுவிடம் அடிக்கடி முன் வைத்த கேள்வி இது:‘டி எஸ் எல் ஆர் படங்களுக்குத் தனியாகவும், பாயின்ட் அன்ட் ஷூட் படங்களுக்குத் தனியாகவும் போட்டியைப் பிரித்தால் என்ன?’.  நல்ல படங்களை எந்தக் கேமராவிலும் எடுக்கலாம் என நம்பிக்கையூட்டும் விதமாகக் குழுவினர் தொடர்ந்து தந்து வந்த பதில்: ‘It's not the brush, it's the Painter'. எந்தத் தூரிகையை வைத்துத் தீட்டுகிறோம் ஓவியத்தை என்பது முக்கியமே இல்லை. இதோ Getty Images தேர்வு செய்த இன்னொரு படம் Sony W80-ல் எடுக்கப்பட்ட ஒன்றே:

# நெல்லை காந்திமதி அம்மன் கோபுரம்
http://www.flickr.com/photos/ramalakshmi_rajan/4894130962/

சித்திரமும் கைப்பழக்கம். என்ன சொல்ல வருகிறேன் என்றால் தூரிகையைக் காய விடாதீர்கள்:)! எப்போதும் வண்ணங்களில் குழைந்து ஈரமாகவே இருக்கட்டும் அது. தொடர்ந்து படம் எடுத்துக் கொண்டே இருப்பதுதான் நம் திறனை வளர்க்க சிறந்த வழி. 

கூடு திரும்பும் இப்பறவைகளைப் போல் Flickr-கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள் 1GB-யோடு விட்டுச் சென்றவர்கள்.

என்ன செய்யப் போகிறீர்கள், நீங்கள்:)?

6 comments:

 1. பலருக்கும் உதவும் விளக்கம்...

  நன்றி...

  ReplyDelete
 2. Already back to Flickr ........... after a gap of two years :)

  ReplyDelete
 3. போக வேண்டியதுதான்:)நன்றி ராமலக்ஷ்மி.

  ReplyDelete
 4. உங்கள் பக்கத்திலேயே படித்தேன்.

  இப்போது நானும் ஒரு புது கணக்கு தொடங்கி விட்டேன். இனிமேல் தான் படங்களை தரவேற்றம் செய்ய வேண்டும்.......

  தகவல்களுக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 5. அனைவருக்கும் நன்றி:)!

  ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff