Monday, December 9, 2013

Bokeh - பொகே (அ) பொகா - ஒரு அறிமுகம்

1 comment:
 
#1
பின்னணியின் தொலைவு கூடக் கூட பொகே அழகும் கூடும்.
ம்மாதத் தலைப்பான ‘பொகே’ அல்லது ‘பொகா’ குறித்து அறியாதவர்களுக்காக இந்தப் பதிவு. சிலருக்கு இதைப் புரிந்து கொள்வதில் சிரமம் இருப்பதை அறிய முடிந்தது. தலைப்பு அறிவிப்பான பிறகே இணையத்தைப் பார்த்துத் தெரிந்து கொண்டதாகவும் சிலர் தெரிவித்திருந்தனர். தேடிப் புரிந்து கொள்ள முடிந்தால் நன்றே. அப்படி முடியாதவருக்கு தமிழில் அறியத் தருவதற்காகதானே PiT. அதுவுமில்லாமல் வித்தியாசமான, சவாலான தலைப்புகளின் மூலம் போட்டியைப் பிரிப்பதால் அறியாத விஷயங்களை வாசகர்களுக்குத் தர முடிகிறது என்பதையும் இது உணர்த்தியது. நடுவர் ஆனந்த் ஆரம்பித்து வைத்த இம்முறை அவ்வப்போது இனி தொடரும்:)!

Bokeh எனும் சொல் ஜப்பானிய மொழியில் ‘மங்கிய’ (blurred) எனும் அர்த்தம் கொண்டதாகும். ஆங்கிலத்துக்கு வந்த விட்ட இச்சொல் பொகே, பொகா, போக்கி எனப் பலவிதமான உச்சரிப்புகளில் பயன்படுத்தப் படுகிறது. நாம் பொகே எனப் பார்ப்போம்:).

சொல்லப்போனால் அவுட் ஆஃப் போகஸாக, மங்கலாக நாம் காண்பிக்கிற ஒரு இடம் அதிக கவனத்தைப் பெறுகிறது:).   சப்ஜெக்டின் பின்னணி அல்லது முன்னணி(background/foreground)யை சற்றே மங்கலாக்கி சப்ஜெக்டைத் தனித்துக் காட்டும் விதத்தை “depth of field” எனக் குறிப்பிடுவோம் இல்லையா? அப்படி செய்கிற போது அமைகிற அந்த blurred backround.. மங்கலான பின்னணியின் தரம்.... ஒளியை அப்பகுதி பிரதிபலிக்கிற விதம்.... இவையே ‘பொகே’  என ஒளிப்படக் கலைஞர்களால் கொண்டாடப்படுகிறது. கீழ்வரும் படத்தைப் பாருங்கள்.

#2

இதில் காகம் ஷார்ப்பாகவும் ஃபோகஸ் செய்யப்பட்டுள்ளது. அதாவது படத்தின் “depth of field" உள்ளே வருகிறது. பின்னணி அவுட் ஆஃப் ஃபோகஸில் (அதாவது பின்னணி depth of field-க்கு வெளியே) உள்ளது. இப்படத்தின் shallow (ஆழமில்லாத) DOF-க்கு காரணம் லார்ஜ் அப்பெச்சரில், சப்ஜெக்டுக்கு சற்றே அருகாமையில் இருந்து, அதாவது சுமார்  ஐந்தடி தொலைவில் நின்று எடுத்தது என்பதால். பின்னால் தெரியும் மென்மையான வட்டங்கள் ஒளியின் பிரதிபலிப்புகள். ஏன் வட்டமாக உள்ளன என்றால் அந்தந்த லென்ஸுகளின் diaphragm அமைப்புக்கேற்ப வடிவம் கிடைக்கும். இது 55-200mm பயன்படுத்தி எடுத்ததாகும். இந்தப்படத்தின் அந்த மென்மையான வட்டங்கள் உள்ள பகுதி “நல்ல பொகே” ஆகக் கருதப்படுகிறது. சில கலைஞர்கள் அழுத்தமாகக் கிடைக்கும் வட்ட வடிவ ஒளிப்பிரதிபலிப்புகளே “நல்ல பொகே” என வாதிடுவதுண்டு.

ஆனால் எது நல்ல பொகே, எது சுமார் என்பதெல்லாம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட ரசனைதான். ஆக, பொகே என்பது வட்டம் எவ்வளவு எவ்வளவு அழுத்தம் திருத்தம் என்றெல்லாம் பார்க்காமல் மொத்தமாக அவுட் ஆஃப் போகஸ் ஏரியா எப்படிக் கவருகிறது என்பதே ஆகும்:
#3


இன்னும் சொல்லப்போனால் அவுட் டோர் படங்களில் கிடைக்கிற வட்டம் திருத்தமாய் வரைந்த மாதிரி இல்லாமல் அதாவது ஓரங்கள் தெளிவற்று இருந்தால் அழகோ அழகென்றும், க்ரீமி பொகே என்றெல்லாமும் கொண்டாடுகிறார்கள்:
#4


டுத்து உள்ளரங்கில் பொகே படங்கள் எடுப்பது குறித்துப் பார்ப்போம்.

கிறுஸ்துமஸ், புதுவருடக் கொண்டாட்டங்களின் ஒளி விளக்குகள் பொகே படத்துக்கு பொருத்தமானவை.

நினைவிருக்கட்டும். பொகே என்பது கேமராவை விட லென்ஸை சார்ந்தது. ஒவ்வொரு விதமான லென்ஸும் அது வடிவமைக்கப்பட்ட விதத்தில் வெவ்வேறு விதமான பொகேயை வழங்கும்.

உங்கள் லென்ஸின் பெரிய அப்பெச்சர்(சிறிய f நம்பர்) வைத்து எடுக்க வேண்டும். 

அப்பெச்சர் ப்ரையாரிட்டியிலேயே எடுக்கலாம். அல்லது மேனுவல் மோடில் எடுக்கலாம். கீழ்வரும் படங்கள் நான் Nikkor 50mm f/1.8 உபயோகித்த எடுத்தவை.  படம் 5 மேனுவல் மோடிலும் படம் 7 அப்பெச்சர் ப்ரையாரிட்டியிலும் எடுத்தது:

#5
Exif: 1/20s, f/2.5 , ISO400
Nikkor 50mm f/1.8

எடுத்த செட்டிங்கை மறுபடி அமைத்து உங்கள் பார்வைக்குக் கொடுத்துள்ளேன்.  இது பகல் நேரத்தில் எடுத்தபடம் உங்கள் புரிதலுக்காக:)!இரவில் எடுக்கும் போது அறைவிளக்கையும் அணைத்து விட வேண்டும்.
#6


சீரியல் விளக்குகளை இப்படி இடப்பக்கம் சுவரில் தொங்க விட்டுக் கொண்டேன். (சன்னல் போன்றவற்றில் தவிர்க்கவும். Plain பின்னணி அவசியம். அறைக்கதவுகளையும் உபயோகிக்கலாம்.) சப்ஜெக்டான அகல் விளக்கிற்கும் சீரியல் விளக்கிற்கும் இடையே சுமார் பத்தடிகள் இருக்கிற மாதிரி அமைத்திருந்தேன்.  பின்னணியின் தொலைவு கூடக் கூட பொகே அழகும் கூடும். ஆனால் நினைவிருக்கட்டும், கேமரா பொருளுக்கு மிக அருகாமையில்  (55-200mm போன்றவற்றில் லென்ஸ் அனுமதிக்கும் தூரத்தில், அதிக பட்ச zoom-ல்) இருக்க வேண்டும்.  பொருளும் கேமராவும் ஒரே உயரத்தில் இருக்க வேண்டும்.  பின்னணி சீரியல் விளக்கும் வ்யூ ஃபைண்டரில் அதே லெவலில் தெரிய வேண்டும். வொயிட் பேலன்ஸை பின்னணி ஒளி தரும் விளக்குகளுக்கு ஏற்ப (ஃப்லோரசண்ட், டங்ஸ்டன்) செட் செய்திடுங்கள்.


#7

Exif: 1/20s, f/2.5, ISO220
Nikkor 50mm f/1.8

அகல் விளக்கும் ஒளி தருவது என்பதால் f/1.8 வைக்காமல் f/2.5 வைத்து எடுத்தேன். இதே இடத்தில் ஒரு கோப்பை (அ) குடுவை வைத்து அதிலிருந்து பொகெ வெளிவருகிற மாதிரி எடுப்பீர்களானால் 1.8 நல்ல ரிசல்ட் தரும்.  50-200mm போன்ற லென்சுகளில் அதில் கிடைக்கும் அதிக பட்ச அப்பெச்சரான f3.5 -யில் செட் செய்திடலாம். கோப்பை வைத்து..

#8




#9


#10 படம்: ஆனந்த்


 கோப்பை வைத்து எடுக்கையில் அதையும் நாம் சாஃப்டாக ஒளியூட்டுதல் அவசியம். அதற்கு பக்கவாட்டிலிருந்து ஒரு டேபிள் லாம்ப் மூலமாக ஒளி கொடுக்கலாம். அல்லது பக்கத்து அறை விளக்கைப் போட்டு அதிலிருந்து கோப்பைக்குப் போதுமான வெளிச்சத்தைப் பெறலாம்.

இத்தனை மெனக்கிடாமல் வெளியிடங்களில் கிறுஸ்துமஸ் புத்தாண்டு அலங்கார  விளக்குகளை மட்டுமே பொகே படங்களாக்கலாம். அப்போது ட்ரைபாட் இருக்காது என்பதால் கவனமாகக் கேமராவைக் கையாள வேண்டும். ஷட்டர் ஸ்பீடை சற்று அதிகமாக வைத்துக் கொள்ளலாம்.

மொத்தத்தில் நினைவில் நிறுத்த வேண்டியது இந்த 3 விஷயங்கள்:
1.லார்ஜ் அப்பெச்சர் (சின்ன f நம்பர்);
2.சப்ஜெக்ட் மேல் க்ளோஸ் ஃபோகஸ்,
3.நல்ல தொலைவில் பின்னணி (reasonable good distance between the subject and the background).

விதவிதமான வடிவங்கள்

பொகேயின் வடிவங்கள் கேமரா லென்ஸுகளின் டயப்ரமைப் (diaphragms) பொறுத்ததெனப் பார்த்தோம்.  ஏழு நேர் ப்ளேடுகளைக் கொண்ட பழைய Nikkor 50mm f/1.4 லென்ஸுகளின் diaphragm ஹெப்டகன் வடிவ பொகேயைக் கொடுத்தன. ஹெக்ஸகன் வடிவ பொகே கொடுக்கிற லென்ஸுகளும் உள்ளன. தற்போது வருகிற பெரும்பாலான லென்சுகள் 9 வட்ட வடிவ ப்ளேடுகளைக் கொண்டே வருவதால் அவற்றின் பொகே வட்டங்களாகவே அமைகின்றன.

வித்தியாச வடிவத்துக்கு லென்ஸை மட்டும் சார்த்திருக்கத் தேவையில்லை:)!

#9

#10

படங்கள் 9.10 இணையத்திலிருந்து..

இது போல நாமே லென்ஸின் விட்டத்துக்கு ஒரு அட்டையை வெட்டிக் கொண்டு அதன் நடுவே பூ, இதயம், நட்சத்திரம் போன்ற வடிவங்களை ஏற்படுத்திடலாம். அவற்றைக் கீழ்வருமாறு அட்டையில் ஒரு cap தயாரித்து அதின் மேலே பொருத்தி லென்ஸில் மாட்டிக் கொண்டால் ஆயிற்று. வண்ணங்களோடு வடிவங்களும் உங்கள் வசம்:)!
***

1 comment:

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff