Friday, January 25, 2008

ஜனவரி 2008 - PIT போட்டி - முடிவுகள்

35 comments:
 
வணக்கம் நண்பர்களே. அது சரி. பட்டி மன்றம் மாதிரி 'அவிய்ங்களும் சரிதேன், இவிய்ங்களும் சரிதேன். ரெண்டுமே ரொம்ப முக்கியம். ஆகவே ரெண்டு அணிகளுமே செயிச்ச அணிக தான்'-ன்னு சொல்லிட்டுப் போவவா முடியுது? எல்லாமே ரத்தினங்களா இருக்க முக்காமுக்கா மூணை மட்டும் சொல்லுங்கன்னா எப்படிப்பு?

இப்படி ஒரு வேலையைக் கொடுத்து பெண்டைக் கழட்டின PiT பெருசுகளுக்குக் கண்டனங்கள்! :-) சரிசரி!

போட்டிக்கான இந்த மாதப் புகைப்படங்களின் அணிவகுப்பு பிரமிப்பைத் தந்தது.

அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள்னு தலைப்பைக் கொடுத்ததும் 'கோவில் மணிலருந்து குப்பைத் தொட்டி வரைக்கும்' (ஒரு எஜகை மொஜகைக்காகச் சொன்னது - குண்டக்க மண்டக்க ஆராய்ச்சி செஞ்சி குத்தம் கண்டுபிடிச்சிராதீங்கப்பா!) படங்களை எடுத்துத் தள்ளி அசத்திப் போட்டீங்க நீங்க எல்லாரும். சதி லீலாவதில வர்ற வசனம் மாதிரி 'போன சென்மத்துல பாம்பாப் பொறந்திருப்பான் போல. இப்ப்ப்ப்படிப் படம் எடுக்கறான்!'.

அன்னாடம் உபயோகிக்கற பொருட்களை படம் புடிக்கறத கஸ்டமான
வேலைதான். நம்மளச் சுத்தி பல பொருட்கள் இருந்தாலும், அதுங்க மேல சரியா ஒளி அமைப்பு இருக்காது. சில சமயம் நமக்கு வேண்டிய பின்னணில நமக்கு பிடித்தமான கோணத்துல பொருட்கள் இருக்காது.

ஒரு சாதாரண பொருள் ஆனாலும், அதை சரியான கோணத்தில் அடுக்கி, தேவையான பின்னணியில் அமைக்கத் தெரியணும். ஒரு படத்துல தேவைக்கதிகமா எந்த விஷயமும் இல்லாமல் பார்த்துக் கொள்வது அவசியம். ('இதனாலதான் நான் செல்ஃப் போட்டோவெல்லாம் எடுக்கறதேயில்லை'- சுந்தர்).
படம் புடிக்கறப்ப தெரியாத்தனமா அப்படி எதுனாச்சும் வந்திடுச்சுன்னா, பிற்தயாரிப்பில வெட்டி விட்றணும்.
பிட்ஸா கார்னர் டம்ளர் படத்துல, கீழே இடது மூலையில் தெரியும் எழுத்துக்களும், மேலே இடது மூலையில் தெரியும் கத்தி ஃபோர்க்கும் ஒரு நெருடல். பின்னாடி இருந்து ஒளி விழற மாதிரி எடுத்துருக்கறது நல்லா இருக்கு. ஆனா பின்னணி கொஞ்சம் இருட்டா வச்சிருந்தா டம்ளர் இன்னும் அழகா இருந்திருக்கும்.

எடுக்கும் படத்தில் ஒரு சுவாரஸ்யம் கொண்டு வர வேண்டும். சரியான வண்ணங்களின் தேர்வால், இந்த ஈர்ப்பு வரலாம், படத்தில் மையப்படுத்தப்படும் பொருளால் இந்த ஈர்ப்பு வரலாம். சாதாரண பொருள்களை எடுக்கும்போது, நல்ல வித்யாசமான கோணமும், வேறு ஏதாவது ஒரு டெக்னிக்கல் அம்சமும் சேர்க்க முயற்சிக்க வேண்டும்.
DOF போன்ற டெக்னிக்கல் அம்சம் நன்றாக கைக்கொடுக்கும். இல்லையேல், பிற்தயாரிப்பில் செய்யப்படும் கிராப் செய்தல், வளைத்தல், நெளித்தல், போன்ற ஏதோ ஒன்று கைகொடுக்கும். பல விஷயங்களை முயற்சி செய்து, உங்கள் மனதுக்குப் பிடித்ததை அரங்கேற்றலாம். வாசியின் lifebuoy நன்றாக கட்டப்பட்டிருந்தாலும், பின்னாலிருக்கும் போர்வை எடுபடாமல் போனதுபோல் தோன்றியது. பிட்ஸா டம்ளருக்குச் சொன்னது மாதிரி இதுக்கும் பின்னணி பிரச்சினை. மத்தபடி Glow effect அருமையாக அமைஞ்சிருக்கு இதில்.

சத்தியாவின் புஷ்-பின்னில் பின்னணியும் பின்களின் வண்ணமும் கொஞ்சம் வறட்சியாக தோன்றியது. வலது மூலையில் கிராப் சரிவர செய்யவில்லை. மூன்று 'பின்'கள் ஒன்றை ஒன்று பார்த்துக் கொண்டும், மற்ற இரண்டும் வெளியில் பார்ப்பதும் அழகை குறைத்ததோ? படத்தை விட்டு வெளியில் கை காட்டுவது போல் இருந்தால், அந்த படத்தின், 'பன்ச்' குறைந்து விடுகிறது.

கைப்புள்ளையின் கலையார்வம் அருமை :) க்ரைண்டரை எடுத்த கோணமும் ஒளியமைப்பும் சரியில்லை என்று தோன்றியது. க்ளிக்கிய முறை சரி. க்ரண்டரை வேறு எப்படிதான் எடுப்பது? அருமையான வளைவுகள் (சத்தியமா கிரண்டரைத்தான் சொல்றோம்யா).

நந்துவின் பாட்டரியும், ஒப்பாரியின் mp3யும் அருமை.

12 படங்களில் எங்களை அதிகமாக ஈர்த்த மூன்று படங்களைக் கீழே பட்டியலிட்டிருக்கிறோம். நாங்கள் எப்பொழுதும் சொல்லும், 'ஈர்ப்பு' இந்தப் படங்களில் அதிகம்.

ஜனவரி மாத போட்டியில் வெற்றிபெற்றவர்கள்.


முதலிடம்: நாதாஸ்/இளவட்டத்தின் பென்சிலும், அதைச் சீவியவனும்! அருமையான கோணம், ஒளியமைப்பு, தெளிவான காட்சி! நம் வீட்டின் வாலுகள் அப்பத்தைப் பங்கிட்ட குர... சே.. வேணாம் - பென்சிலைத் திருகித்திருகியே காலி செய்வதை தினம் தினம் பார்க்கிறோமே! மரத்தூள் தொக்கி நிற்கும் Sharpener, கூராக்கப்பட்ட பென்சில் முனை என்று அழகாக படம் பிடித்திருக்கிறார் இவர். முனையுடைந்த பென்சிலாக இருந்தால் எப்படியிருந்திருக்கும் என்றும் கற்பனை ஓடியது :-). முதலிடம் பெற்ற நாதாஸ்/இளவட்டத்திற்குப் பாராட்டுகள்.


இரண்டாமிடம்: லக்ஷ்மணராஜாவின் பூட்டு - கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலருன்னு பாடலாம். தெருவில் நடக்கையில் வீட்டின் வாசல் கதவின் பின் நிற்கும் எத்தனையோ முகங்களைப் பார்த்திருப்போம். மழை நாட்களில் நாமும் அப்படி இரும்புக் கதவின் கம்பிச் சட்டங்களைப் பற்றி நின்றதுண்டு. மழை விட்ட தருணத்தில் திறந்திருக்கும் கதவின் பூட்டைத் தொலைக்காதிருக்க இப்படி மாட்டிப் பூட்டுப் போடுவது நமது வழக்கம். அந்தக் காட்சியைத் துல்லியமாக எடுத்திருக்கிறார் லஷ்மணராஜா. இரண்டாமிடம் பெற்ற அவருக்குப் பாராட்டுகள்.


மூன்றாமிடம்: ஒப்பாரி - என்ன அருமையான சதுரங்கப் படம் இது! ராஜாவையும் இடதோரத்தில் ஒரேயொரு வீரனை மட்டும் அழகாக ஆழம் கொடுத்துப் படம் எடுத்து நல்ல ஒளியமைப்பில் ஓவியம் போல படமெடுத்திருக்கிறார் ஒப்பாரி. மூன்றாமிடம் பெற்ற அவருக்குப் பாராட்டு தெரிவிக்கும் அதே வேளையில் வேண்டுமென்றே ராணியை Focus செய்யாத அவருடைய ஆணாதிக்கத்தைக் கண்டிக்கக் கடமைப்பட்டுள்ளோம்! :-)


இது தவிர சிறப்பு கவனம் பெற்ற மூன்று படங்களைக் கீழே கொடுத்திருக்கிறோம்.


1. k4karthik-இன் க்ளிப்ஸ். முன்னேற்பாடுகள் செய்யப்படாத இயல்பான படம். பின்னணியை சற்று இருட்டாக்கி DoF கூட்டியிருந்தால் நன்றாக வந்திருக்கும்.








2. எம். ரிஷான் ஷெரீஃப் - வண்ணக்கலவையில் அழகான படம். அந்த இடத்தில் நிற்பது போன்ற உணர்வைத் தந்த படம். Silhouette படங்களைப்பற்றி வரப்போகும் பதிவுக்கான :-) அழகான உதாரணப்படம் இவருடையது. ஹரிக்கேன் விளக்கின் கீழே விழுந்திருக்கும் தேதிப் பதிவைத் தவிர்த்திருக்கலாம்.





3. குட்டிபாலுவின் பெட்டி - அழகான வண்ணங்களில், நல்ல ஒளியில், நல்ல பின்னணியில் எடுக்கப்பட்டிருக்கும் படம். Crop-யையும் நன்றாகச் செய்திருக்கிறார்.





சிறப்புக் கவனம் பெற்ற போட்டியாளர்களுக்குப் பாராட்டுகள்.



வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்களும் வந்தனங்களும்!


பின்னிட்டீங்க!


இதனால் மற்ற போட்டியாளர்களின் படங்கள் சரியில்லை என்று அர்த்தம் இல்லை. அரசியல்வாதிகளைப் பற்றிப் பேசும்போது 'இருக்கற திருடங்கள்ல பரவாயில்லாத திருடனைத் தேர்ந்தெடுக்கும்' நிர்ப்பந்தம் போல (நேரமே சரியில்லை. வில்லங்கமான உதாரணங்களா நினைவுக்கு வந்து தொலைக்குது), இருக்கற எல்லா அருமையான, நல்ல, அழகான படங்கள்ல மூணை மட்டும் தேர்ந்தெடுக்கும் நிர்ப்பந்தத்தைப் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறோம். உங்கள் படங்களையும் ஸைட் அடித்தோம் என்று மகிழ்ச்சியுடன் சொல்லிக்கொள்கிறோம். இன்னும் முயற்சித்து உங்கள் படங்களுக்கு மெருகூட்டுங்கள். வரும் போட்டிகளில் வென்றிட வாழ்த்துகள்!


தொடர்ந்து க்ளிக்குவோம், கற்போம், கலக்குவோம்!


நன்றி!


-சர்வேசன், வற்றாயிருப்பு சுந்தர்

35 comments:

  1. போட்டியிஞ் முடிவைவிட இந்தப் பதிவு எழுதுனவிதம் அருமை.

    நல்லா இருக்கறதை நல்லா இருக்குன்னு சொல்லியே ஆகணும் எனக்கு:-)

    போட்டியில் வெற்றிபெற்ற முதல் மூவருக்கும், தெரிவு செய்யப்பட்ட படங்களை எடுத்தவர்களுக்கும் என் அன்பும் வாழ்த்துகளும்.

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் வெற்றி பெற்றவர்களுக்கும், போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கும்

    ReplyDelete
  3. ஷ்பெசல் வாழ்த்துக்கள் டூ PIT டீம் & நடுவர்கள்

    ReplyDelete
  4. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. அடுத்த மாசத்தில் இருந்து மோசமான படத்துக்கும் ஒரு விருது குடுங்க அப்ப எனக்கு பரிசு கண்டிப்பா உண்டு.

    ReplyDelete
  6. சூப்பர் போஸ்ட்!!
    நல்ல நகைச்சுவையும் சேத்து கலக்கியிருக்கீங்க அண்ணாச்சி!!

    /இப்படி ஒரு வேலையைக் கொடுத்து பெண்டைக் கழட்டின PiT பெருசுகளுக்குக் கண்டனங்கள்! :-)////
    ஜீவ்ஸ் அண்ணாச்சி!!
    உங்களை பத்தி ஏதோ போட்டிருக்காரு பாருங்க!! :-P

    அருமையான தேர்வுகள் மற்றும் படங்களை பற்றிய அருமையான கருத்துக்களுடன் முழுமையான பதிவுக்கு நன்றி!
    எங்கள் அழைப்பை ஏற்று நடுவராக சிறப்பித்தமைக்கு PIT குழுப்பதிவு சார்பில் என் மனமார்ந்த நன்றிகள்!!!

    பங்கு பெற்ற அனைவருக்கும் எனது பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்!!
    ஒவ்வொரு முறையும் படங்களின் தரம் கூடிக்கொண்டே வருகிறது என்பது கண்கூடு!!
    இத்தனை அருமையான புகைப்பட ஆரவலர்களை கண்டு தமிழ் பதிவராக இருப்பதிலும் இந்த பதிவு/போட்டியுடன் சம்பந்தப்பட்டிருப்பதற்கும் மிக பெருமையாக உள்ளது!! :-)

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் வெற்றி பெற்றவர்களுக்கும், போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கும்.


    //இப்படி ஒரு வேலையைக் கொடுத்து பெண்டைக் கழட்டின PiT பெருசுகளுக்குக் கண்டனங்கள்//

    நம்ம பேரை இழுக்காட்டி தூக்கம் வராதுங்களா

    ReplyDelete
  8. என்ன ஒரு அலசல்!!! தீர்ப்பு அருமை...... அருமை...... அருமை!!! வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. super!


    oparee images hat trick! thooki adutha potikku naduvaraa podungappaa!

    The first prize is really for that studio quality image!!! great!

    Judges have won (our hearts) too!

    With regards
    Osai Chella

    ReplyDelete
  10. இம்சை, அடுத்த போட்டிகள் இரு பிரிவாக நடத்தலாம் என்று நினைக்கிறேன்.

    ஒன்று எக்ஸ்பெர்ட்ஸ் கேட்டகிரி...
    இன்னொன்று ஒபென் டு ஆல்!

    ஏனென்றால் பலரது ஃஃப்லிக்கர் புகைப்படங்களை பார்த்தால் அவர்கள் நம்மூரு ப்ரொ போட்டாகிராபர்களை தூக்கிச்சாப்பிடும் அளவுக்கு இருக்கிறார்கள் என்பதே உண்மை! எனவே கற்றுத்தேர்ந்தவர்களோடு கற்றுக்கொள்பவர்களை ஊக்கப்படுத்தும் முகமாக இரண்டாகப் பிரிப்பது அவசியம்! மற்ற நடுவர்களை கலந்தாலோசித்து சீக்கிரம் ஒரு நல்ல முடிவு எடுப்போம்.

    கலந்துகொண்டு கலக்கிய அனைத்து ஆர்வலர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். தயவு செய்து வெற்றி தோல்விகள் பற்றி அதிகம் சட்டை செய்யாதீர்கள். இது ”ஒரு நல்ல புகைப்படத்தை” தேர்ந்தெடுக்கும் போட்டியே அன்றி “ஒரு நல்ல புகைப்படக் கலைஞரை” தேர்ந்தெடுக்கும் போட்டி அல்ல. எனவே பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்! இன்னும் நிறைய கலந்துக்கொள்ளுங்கள். இம்சை போன்றவர்களின் ஆர்வத்திற்குமுன் நாங்கள் அனைவரும் ரசிகர்களே என்று சொல்லி அமைகிறேன். நன்றி வணக்கம்! (மைக்க புடுங்குப்பா என்று யாரோ பின்னாடி சொல்றது கேக்குது.. அதான் எஸ்கேப்பு!)

    அன்புடன் :-)
    ஓசை செல்லா

    ReplyDelete
  11. சரியான திருடங்களா பார்த்து தான் தேர்ந்தெடுத்து இருக்கீங்க. மூன்று பெரும் சும்மா நச்னு திருடி இருக்காங்க! என் திருட்டில் பிழை கண்டு பிடித்து சொல்லியதற்கும் நன்றி. அடுத்த முறை சரியாக திருடுகிறேன். நீங்களும் "சட்டம் என் கையில்" மனோரமா மாதிரி எப்படி சரியா திருடனும்னு சூப்பரா டிப்ஸ் கொடுத்து இருக்கீங்க. ஒவ்வொரு முறையும் திருட்டுகளின் தரம் கூடிக்கொண்டே வருகிறது என்பது கண்கூடு! இந்த திருட்டில் நானும் சம்பந்தப்பட்டிருப்பதற்கு ரொம்ப பெருமையாக உள்ளது. (எனக்கும் நேரம் சரி இல்ல போல..உதாரணங்கள் தாறு மாறாக வருது;)

    ReplyDelete
  12. சூப்பர் பதிவுங்க. வெற்றி பெற்றவர்களுக்கும், வெற்றியின் அருகே வந்தவர்களுக்கும் எனது வாழ்த்துகள்.

    ReplyDelete
  13. முடிவுகள் சூப்பர்.வெற்றி பெற்றவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    அடுத்த போட்டிய சீக்கிரமா சொல்லுங்க. கை பரபரங்குது

    ReplyDelete
  14. சர்வேசன், வற்றாயிருப்பு சுந்தர் மற்றும் PIT குழுவிற்கு என்னுடைய நன்றி...

    முதல் சுற்றில் தேறியதுக்கே ரொம்ப சந்தோசப்பட்டேன் இப்போ சொல்ல முடியாத அளவுக்கு மகிழ்ச்சியில் இருக்கேன்...

    லக்ஷ்மணராஜா, ஒப்பாரி மற்றும் போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் பாராட்டுக்கள்...

    ReplyDelete
  15. வெற்றியாளர்களுக்கு வாழ்த்துக்கள்!! பூட்டு படம் மிக அருமையா இருக்கு.

    ReplyDelete
  16. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள், ஓசை செல்லா நீங்கள் சொல்வது போல் செய்தால் நன்றாக இருக்கும், புதுசா கேமிரா வாங்கின என்னை போன்ற ஆட்கள் போட்டி போட முடியலப்பா!:(பின்னி பெடல் எடுக்கிறாங்க.

    பூட்டு செம ரகளையா இருக்கு அதில் இருக்கும் மழை துளி கலக்கல்

    அப்புறம் பிற் தயாரிப்பே செய்யாமல் போட்டோ எடுத்து போடனும் என்று வைத்தாலும் நன்றாக இருக்குமே!!!

    ReplyDelete
  17. //அதே வேளையில் வேண்டுமென்றே ராணியை Focus செய்யாத அவருடைய ஆணாதிக்கத்தைக் கண்டிக்கக் கடமைப்பட்டுள்ளோம்! :-)///

    :))) சூப்பரா முடிவு சொன்னது மட்டும் இல்லாமல் கலக்கலா நையாண்டியும் அடிச்சு இருக்கீங்க:)

    ReplyDelete
  18. நாதாஸ்,லக்ஷ்மணராஜா,ஒப்பாரி மூவருக்கும் எனது இனிய வாழ்த்துக்கள்.
    லாந்தர் விளக்கு மிகவும் தற்செயலாக எடுத்த புகைப்படம்.அதனால் நேரம் காட்டுவதைத் தவிர்க்கமுடியவில்லை...
    இப்படம் உங்கள் சிறப்புப் பார்வையில் சிக்கியதிலேயே மிக மகிழ்ச்சி அடைகிறேன்.
    புகைப்படம் எடுப்பதில் நானின்னும் கத்துக்குட்டி.இக்காலங்களில்தான் உங்கள் வலைப்பக்கம் எட்டிப்பார்த்து கொஞ்சம் கொஞ்சமாய்க் கற்றுவருகிறேன்.
    மிகவும் நன்றிகள் நண்பர்களே...

    அடுத்த தலைப்பை சீக்கிரமா கொடுங்க... :)

    ReplyDelete
  19. நன்றீஸ் அனைவருக்கும்.

    இம்முறை பல படங்கள் மிரள வைத்தது.
    இனி வரும் மாதங்களில், போட்டியில் உள்ள அனைத்துப் படங்களுக்கும், டாப்-10ல் இடம்பெறுபவர்கள் விமர்சனம் எழுதணும்னு ஒரு சட்டம் போடணும். அப்பதான், இந்த மாதாந்திரப் போட்டியின் பலன் இரட்டிப்பாகும்.

    :)

    ReplyDelete
  20. சர்வேசன் டேஞ்சர் ஐடியா, என்ன மாதிரி கத்துகுட்டியும் டாப் லிஸ்டல வந்துடரோம். இங்கவந்து கத்துகுட்டித்தனமா விமர்சனம் பண்ணுனா நல்லாவா இருக்கும்? எப்ஸ்பர்ட்ஸ் கமெண்ட் பண்றீங்களே இதுதான் சரி.

    ஆசிரியர் இலாகால இருக்கும் எல்லாரும் கமெண்ட் பண்ணுனீங்கன்னா அது எங்களுக்கும் மேம்படுத்திக்க உதவியா இரூக்கும்

    ReplyDelete
  21. //போட்டியிஞ் முடிவைவிட இந்தப் பதிவு எழுதுனவிதம் அருமை//

    ரிப்பீட்டே.

    வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். அடுத்த போட்டி எப்பங்கங்கோ?
    :)

    ReplyDelete
  22. //போட்டியிஞ் முடிவைவிட இந்தப் பதிவு எழுதுனவிதம் அருமை.

    நல்லா இருக்கறதை நல்லா இருக்குன்னு சொல்லியே ஆகணும் எனக்கு:-)//
    ரீப்பீட்டு.

    முதல் 12 படங்கள் மட்டுமல்லாது பெரும்பான்மை படங்கள் அருமையாக இருந்தது.

    அதிகம் அலட்டாமல் மிக எளிமையான படங்கள் அதிக கவனத்தை ஈர்த்தது. பூட்டும் , clip, grinder, எல்லாம் என்னை அதிகமா கவர்ந்த படங்கள்.

    என் பதிவில் ஏற்கனவே குறிப்பிட்டபடி நாதஸ் அவர்களுடைய படங்கள்தான் mp3 ப்ளேயர் எடுக்க உந்துதல்.

    என்ன நடுவர் மாதிரி சரியா எழுதுகிறேனா. என்னை மாட்டிவிட எல்லோரும் முயற்சி செய்றாங்க, படங்கள் எடுக்கிறது மட்டுமே ஒருத்தரை நடுவருக்கு தகுதியாக்கிவிடாது. சென்ற மாதம் நடுவராக இருந்த தீபா அவர்கள் எவ்வளவு சிறப்பாக செயல்பட்டார்கள்.
    இந்த மாதம் முடிவுகள் அறிவித்த இந்த பதிவு எழுதப்பட்ட விதம், இந்த டீம் செலுத்தும் அக்கறை ம்ம்ம்ம்ம்ம்ம்ம் u(we) know it and its already told.

    //oparee images hat trick! thooki adutha potikku naduvaraa podungappaa!//

    என்னே ஒரு நல்ல எண்ணம்? :).

    //இம்சை, அடுத்த போட்டிகள் இரு பிரிவாக நடத்தலாம் என்று நினைக்கிறேன்.

    ஒன்று எக்ஸ்பெர்ட்ஸ் கேட்டகிரி...
    இன்னொன்று ஒபென் டு ஆல்!//

    நல்ல யோசனை , ஒவ்வொரு முறையும் படங்களின் தரம் போட்டி போட தோனுது.

    //இது ”ஒரு நல்ல புகைப்படத்தை” தேர்ந்தெடுக்கும் போட்டியே அன்றி “ஒரு நல்ல புகைப்படக் கலைஞரை” தேர்ந்தெடுக்கும் போட்டி அல்ல. //

    மீண்டும் என்னை நடுவருக்கு தகுதியிழப்பு செய்யுறீங்க.இப்படி எனக்கு எழுத வராது.

    //இனி வரும் மாதங்களில், போட்டியில் உள்ள அனைத்துப் படங்களுக்கும், டாப்-10ல் இடம்பெறுபவர்கள் விமர்சனம் எழுதணும்னு ஒரு சட்டம் போடணும். அப்பதான், இந்த மாதாந்திரப் போட்டியின் பலன் இரட்டிப்பாகும்.

    :)//

    நல்லா இருக்கு இந்த யோசனை.

    //அதே வேளையில் வேண்டுமென்றே ராணியை Focus செய்யாத அவருடைய ஆணாதிக்கத்தைக் கண்டிக்கக் கடமைப்பட்டுள்ளோம்! :-)///

    ராணியை மட்டும் focus செய்த colourful படம் இருக்கு நல்ல வேளை அதை போட்டிருந்தா Womanizer ஆக்கியிருப்பீங்க.:).

    வாழ்த்துகள் அனைவருக்கும்.

    ReplyDelete
  23. போஸ்ட் சூப்பரு..
    ஜெயிச்சவங்களுக்கு வாழ்த்துகள்..!

    ReplyDelete
  24. This comment has been removed by the author.

    ReplyDelete
  25. இம்சை

    //அடுத்த மாசத்தில் இருந்து மோசமான படத்துக்கும் ஒரு விருது குடுங்க அப்ப எனக்கு பரிசு கண்டிப்பா உண்டு//

    இப்படி எதிர்மறை எண்ணம் எழும் அளவிற்கு எந்தப் படமும் மோசமாக இல்லை என்பதே உண்மை.

    தொடர்ந்து முயலுங்கள். தரம் உயரும். விளைவு - நமக்குக் கிடைக்கும் நல்ல படங்கள்.

    வாழ்த்துகள்.

    ReplyDelete
  26. வாழ்த்துகள்.
    என்னைக் கவர்ந்தவை பூட்டு & க்ளிப்ஸ்.

    ReplyDelete
  27. Good show folks...
    let me try again next month. :)

    ~Truth

    ReplyDelete
  28. //போட்டியிஞ் முடிவைவிட இந்தப் பதிவு எழுதுனவிதம் அருமை.//

    இந்தப் பதிவின் சுவாரஸ்யம் கூட்டியவர், நம்ம புதிய நடுவர், வற்றாயிருப்பு சுந்தர்.
    கலக்கியிருக்காரு கலக்கி :)

    டாப்-12 பிரிச்சு எடுக்கரதுக்கும், அதிலிருந்து 1,2,3 தேர்ந்து எடுக்கவும், ரொம்பவே கஷ்டமாயிருந்தது உண்மை.

    ஒவ்வொரு படத்தின் தரத்துக்கும், மிக மிக குறைந்த அளவில்தான் வித்யாசம் இருந்துது.

    Hats OFF to all!

    :)

    ReplyDelete
  29. சர்வே

    //இந்தப் பதிவின் சுவாரஸ்யம் கூட்டியவர், நம்ம புதிய நடுவர், வற்றாயிருப்பு சுந்தர்//

    போட்டுக் குடுத்துட்டீங்களா? வீட்டுக்கு ஆட்டோ அனுப்பப் போறாங்க. :)

    சேட்டையைப் பொறுத்துக்கிட்டதுக்கு நன்றி. நேரப்பிரச்சினையில் தவித்துக்கொண்டிருந்தபோது உதவிய உங்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  30. மிக நன்றி என் புகைப்படத்தை தேர்வு
    2 வதாக தேர்வு செய்தமைக்கு.


    //சர்வேசன், வற்றாயிருப்பு சுந்தர் மற்றும் PIT குழுவிற்கு என்னுடைய நன்றி...

    முதல் சுற்றில் தேறியதுக்கே ரொம்ப சந்தோசப்பட்டேன் இப்போ சொல்ல முடியாத அளவுக்கு மகிழ்ச்சியில் இருக்கேன்... //

    நாதஸ் கூறியதை வழி மொழிகிறேன்.

    அணைத்து போட்டியாளருக்கும் வாழத்துக்கள்

    என்னை கலந்துகொள்ள தூண்டிய நண்பன் ரிஷானுக்கு மிக நன்றி.


    //அடுத்த போட்டிகள் இரு பிரிவாக நடத்தலாம் என்று நினைக்கிறேன்.

    ஒன்று எக்ஸ்பெர்ட்ஸ் கேட்டகிரி...
    இன்னொன்று ஒபென் டு ஆல்!//

    நானும் இதை வரவேற்கிறேன்.

    ReplyDelete
  31. தெரிவு செய்யப்பட்ட நிழற்பட்ங்கள் அனைத்தும் அருமை! வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!

    ReplyDelete
  32. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்தோ வாழ்த்துக்கள்! நடுவர்களுக்கு கஷ்டம்(!) கொடுத்த பங்கு பெற்றவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்! :-)

    ReplyDelete
  33. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.. நடுவர் குறிப்புகள் வித்தியாச சுவையாக இருந்தது..

    ReplyDelete
  34. Hi

    Good work keep it up

    karthik

    ReplyDelete
  35. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். :-)

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff