Sunday, January 6, 2008

உட்புற படப்பிடிப்பு(Indoor photography) குறிப்புகள்

7 comments:
 
புகைப்படக்கலை ஆர்வலர்கள் எல்லோருமே மிக சுலபமாக பழகக்கூடிய பிரிவு என்று ஒரு பிரிவை சொல்ல வேண்டுமென்றால் அது இந்த உட்புற படப்பிடிப்பு அல்லது Indoor Photography தானுங்க!

பின்ன நீங்களே பாருங்களேன். அடிச்சு புடிச்சு வீட்டுக்கு வெளில போய் அலைய வேண்டாம்.இங்கிட்டு மரம் கொஞ்சம் குட்டையா இருந்தா நல்லா இருக்குமேஅங்கிட்டு அந்த வீடு மறைக்காம இருந்தா நல்லா இருக்குமே,அந்த டெலிபோன் கம்பம் மட்டும் கொஞ்சம் தள்ளி இருந்தா நல்லா இருக்குமே அப்படின்னு எல்லாம் கவலை பட வேண்டாம்.யாராச்சும் பாப்பாங்களா,ஏதாச்சும் சொல்லுவாங்களா,என்ன பண்ணுறன்னு கேப்பாங்களா,பொதுமக்களுக்கு இடைஞ்சலா இருக்குமா அப்படின்னு ஏதும் யோசிக்க வேண்டாம்.திடீர்னு சூரியன் மேகத்துல மறைஞ்சு போயிருச்சே,மழை கொட்டுதே,காத்து அடிக்குதே என்ற பிரச்சினைகளும் இல்லை.அப்பப்பா இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

நாம இஷ்டப்படி நமது பக்கத்துல உள்ள ஏதேனும் ஒரு பொருள் அழகாக இருப்பது போல பட்டா் சட்டென் நமது கேமராவை எடுத்து சுட்டு போட்டு விடலாம்.முதன் முறை சரியாக வராவிட்டாலும் திரும்ப திரும்ப எத்தனை முறை வேண்டுமானாலும் முயற்சி செய்து நமக்கு வேண்டியவாறு படம் பிடிக்கலாம்.இப்படி பல வகைகளில் சௌகரியமான ஒரு பிரிவு தான் இந்த உட்புற படப்பிடிப்பு.

அப்படி விழுந்து விழுந்து எடுக்கற அளவுக்கு என்னதான் வீட்டுக்க்குள்ள இருக்குன்னு நெனைக்காதீங்க. எல்லாம் நாம் பாக்கற விதத்துல தான் இருக்கு.இரவு பகல் என நாளின் பல்வேறு நேரங்களில் ஒரே பொருள் பல ஒளி அமைப்புகளோடு வித்தியாசமாக தெரியும். ஒரு பொருளை நாம் வழக்கமாக பார்க்கும் கோணத்தை விட்டு சற்றே மேலே ,கீழே,தூரத்திலிருந்து,பக்கத்திலிருந்து என்று நம் பார்வையை மாற்றி பார்த்தால் நாம் முன்பு எப்போதும் அறிந்திராத அழகு ஒவ்வொரு பொருளிலும் ஒளிந்துக்கொண்டிருக்கும்.அதனை கண்டுக்கொள்வது தான் ஒரு புகைப்படக்கலைஞனின் முதன்மையான திறமை.
இப்படி ஒரு பொருளை புகைப்படம் எடுப்பது என்று தீர்மானித்த பிறகு அடுத்து யோசிக்க வேண்டியது என்ன??
எந்த புகைப்படமாக இருந்தாலும் அந்த படத்தின் தரத்தை தீர்மானிக்கும் முதன்மையான விஷயம் என்றால் ,படத்தின் உள்ள ஒளி அமைப்பு என்றுதான் சொல்ல வேண்டும்.உட்புற படப்பிடிப்பின் முதல் பிரச்சினை போதிய வெளிச்சமின்மை.என்னதான் ஃப்ளாஷ் வந்தாலும் ,பெரிய பெரிய மின் விளக்குகள் வந்தாலும் சூரிய ஒளியை மிஞ்ச முடியாது.அதனால் வீட்டுனுள் வரும் சூரிய ஒளியை முடிந்த வரை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.ஜன்னல்களை திறந்து விடுங்கள்,அதன் மூலம் வரும் ஒளி முடிந்தவரை உங்கள் கருப்பொருளின் மேல படுமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.கண்ணாடிகள் மற்றும் கையில் கிடைத்த ஒளியை பிரதிபலிக்கும் பொருட்களை வைத்து வரும் ஒளியை பிரதிபலித்து பொருளின் மீது ஒளியை கூட்டலாம். ஒரு அட்டையின் வெள்ளை காகிதத்தை ஒட்டி அதையே பிரதிபலிப்பானாக (reflector) பயன்படுத்திக்கொள்ளலாம்.இது போல அலுமினியம் ஃபாயில்(Aluminium foil), தெர்மோகோல் என்று வீட்டில் சாதாரணமாக பல பொருட்களை கொண்டு பிரதிபலிப்பான்களை உருவாக்கிக்கொள்ளலாம்.சில சமயங்களில் சூரியனிடமிருந்து வரும் ஒளி மிகவும் வீரியம் மிக்கதாகவும் நிறைய நிழல்கள் தரவனவாக இருக்கலாம்,அந்த சமயங்களில் இந்த பிரதிபலிப்பான்களை உபயோகித்தால் ஒளி மென்மையாகவும்,குழைந்து போய் (diffused light) புகைப்படம் எடுப்பதற்கு ஏற்றதாகவும் மாறிவிடும்.

ஒளியை கூட்டிக்கொள்ள இன்னொரு உத்தி உங்களின் வீட்டில் உள்ள மின் விளக்குகள் அனைத்தையும் எரிய விட்டுக்கொள்வது.உங்களிடம் ஏதாவது மேஜை விளக்கு அல்லது நடமாடும் விளக்கு (portable lamp) ஏதாவது இருந்தால் அதை பொருளின் பக்கத்தில் வைத்து எரியவிட்டுக்கொள்ளுங்கள். அப்படியும் ஒளி போதவில்லை என்றால் இருக்கவே இருக்கிறது ஃப்ளாஷ். உங்கள் கேமரா தானியங்கி முறையில் (automatic mode) இயங்கினால் படம் எடுக்கும் போது ஃபிளாஷ் தானாக இயங்கிவிடும். ஆனால் ஃப்ளாஷ் உபயோகித்தால் படத்தில் ஒரே செயற்கை தனம் வந்துவிடுவதாலும்,படத்தில் ஜீவனே இல்லாதது போன்ற ஒரு உணர்வு ஏற்படுவதாலும் அதை உபயோகிப்பதை நான் முடிந்த வரை தவிர்த்து விடுவேன்.முடிந்த வரை ஒளியை கூட்டிக்கொள்வது படம் நன்றாக வருவதற்கான சாத்தியக்கூறை அதிகப்படுத்தும்.ஆனால் அதே சமயம் ஒளி அதிகமாகிப்போய் படம் overexposed ஆகாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

ஒளி குறைந்த சந்தர்ப்பத்தில் நீங்கள் படம் எடுக்கிறீர்கள் என்றால்,உங்கள் கேமரா தானாக போதுமான அளவு ஒளி உள்ளே நுழைவதற்காக ஷட்டரை அதிகப்படியான நேரத்திற்கு திறந்து வைத்துக்கொள்ளும்.இதனால் முக்காலி இல்லாமல் (handheld) எடுக்கப்படும் படங்களில் அதிர்வுகள் (shake) அதிகமாக வரக்கூடிய வாய்ப்பு உண்டு.படத்தில் நேரடியாக தெரியாவிட்டாலும் இந்த அதிர்வுகளால் படங்களின் தெளிவில் குறைபாடு பல சமயங்களில் ஏற்படும்.இதனால் உட்புற படப்பிடிப்பு போன்ற ஒளி குறைந்த சந்தர்ப்பங்களில் முக்காலி பயன்படுத்துவது சாலச்சிறந்தது.உங்களிடம் முக்காலி இல்லாவிட்டால் மேஜை,நாற்காலி என ஏதாவது கடினமான நிலப்பரப்பில் கேமராவை பொருத்தி படம் பிடிப்பது உசிதம்.
அதுவுமில்லாமல் பொத்தானை அழுத்தும்போது சில அதிர்வுகள் ஏற்பட்டு அதனால் படம் தெளிவாக விழாமல் போகக்கூடிய வாய்ப்புகள் உண்டு என்பதால் கேமராவை self timer-இல் போட்டு விட்டு படம் பிடிப்பது மற்றுமொரு பிரபலமான உத்தி.

எடுக்கும் பொருளை சுற்றி நம் கவனத்தை சிதறடிக்க கூடிய பொருட்கள் இருந்தால் அவற்றை நீக்கிவிட பாருங்கள். முடிந்த வரை பொருளை சுற்றி மற்றும் பின்புறம் தெளிவாக அமையுமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.நமது AN& அண்ணாச்சி எடுத்த இந்த படத்திற்காக என்ன மாதிரி ஏற்பாடுகளை எல்லாம் செய்திருக்கிறார் என்று இந்த சுட்டியில் சென்று அறிந்துக்கொள்ளலாம்.
இதே போல வீட்டுலேயே ஸ்டூடியோ ரேஞ்சுக்கு ஏற்பாடுகள் செய்யறது பத்தி இந்தப்பக்கம் மற்றும் இந்தப்பக்கத்துக்கு சென்று தெரிந்துக்கொள்ளலாம்.


நம்மை எங்கெங்கோ தேடி, உருண்டு புரண்டு படம் பிடிப்பதை விட நம்மை சுற்றி குழுமியிருக்கும் அழகை ரசிக்கத்தெரிந்து கொண்டாலே பல அழகழகான படங்களை பிடிக்கலாம்.எனவே நீங்கள் அனைவரும் இந்தக்கலையை முயன்று பார்த்து நம் போட்டியை சிறப்பிக்க வாழ்த்துக்கள்.
கேள்விகள் கருத்துக்க்கள் ஏதாவது இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.
கலந்தாலோசிக்கலாம்!!

வரட்டா?? :-)

Reflector picture from
www.studiolighting.net/images/alumreflect1.jpg
Table top prop picture from
http://www.flickr.com/photo_zoom.gne?id=1357318708&context=photostream&size=o

7 comments:

  1. பயனுள்ளதாக இருக்கிறது.

    ReplyDelete
  2. சிம்பிளா புரியர மாதிரி சொல்லிட்டீங்க.

    நன்றி

    ReplyDelete
  3. Taking pictures indoor has always been a challenge for ameteur photographers like me - we struggle with the incredibly troubling built-in flash. I avoid taking pictures in the night using flash and I avoid using flash most of the times. If I use, I wish I hadn't used it!

    This is a very useful post.

    Thanks

    ReplyDelete
  4. ரொம்ப நல்லா இருக்கு பதிவு... இந்த ஜனவரிக்கு எடுத்த போன் போட்டோ கூட இப்படி முயற்சித்தது தான். சூரிய ஒளி மேலேருந்து மூணுபக்கம் மறைத்து ஸ்டூடியோ செட்டப்பாம் :) வெள்ளை பேப்பர் வளைத்து வைத்து பேக்ரவுண்டாம்.. கேமிரா சுமார் என்பதால் படம் நன்றாக இல்லை என்றாலும் முதல் ஸ்டூடியோ செட்டப்பில் எடுத்த படமாக்கும்..

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff