Sunday, October 31, 2010

திரு கல்பட்டு நடராஜன் அவர்களின் அனுபவங்களின் தொடர்ச்சி (பாகம்1).சாதாரணமாக படங்கள் எல்லாமே நீள்சதுர (Rectangle) வடிவில்தான் இருக்கும்.

படங்களில் மையப் புள்ளிகள் (Focal points) என்று ஒன்று உண்டு. பார்ப்பவரின் கண்கள் அந்தப் புள்ளிகள் இருக்கும் இடத்திற்ககுதான் அதிகமாக இழுத்துச் செல்லப்ப் படும். ஒரு நீள் சதுரத்தில் மேலிருந்து கீழாகவும், இடமிருந்து வலமாகவும் இரண்டு இரண்டு கோடுகள் கிழித்து சம பாகங்களாக வெட்டும் போது அந்த நான்கு கொடுகளும் சந்திக்கும் இடங்களான ஏ,பீ,சீ,டீ. தான் மையப் புள்ளிகள். கீழே உள்ள படத்தைப் பாருங்கள்.



நீங்கள் எடுக்கும் படங்களில் எந்த ஒரு பொருளுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்க நினைக்கிறீர்களோ அதை இந்த நான்கு புள்ளிகளில் ஒன்றின் அருகில் வைத்தால் அது படம் பார்ப்பவரின் கவனத்தை உடனே ஈர்க்கும். அந்த நான்கு புள்ளிகளில் எதன் பக்கத்தில் வைப்பது என்பதை இனி பார்க்கலாம்.

நீங்கள் ஒருவரது இடுப்பிற்கு மேலான படம் (Bust) எடுப்பதாக வைத்துக் கொள்ளுவோம், அதுவும் சிறிதளவு ஒரு பக்கம் திரும்பினாற்போல. அந்தப் படம் அதில் உள்ளவரின் குணாதிசயத்தினை வெளிக் கொணற வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள். அப்போது என்ன செய்ய வேண்டும்?

ஒருவரது முகத்தில் எந்த உறுப்பு அவரை அடையாளம் காட்டும்? கண்கள்தானே? ஆங்கிலத்தில் சொல்வதுண்டு “Your eyes are the most expressive part of your body” என்று. ஆக கண்கள் மையப் புள்ளிகள் இருக்குமிடத்தில் வைத்தால் படம் கவர்ச்சியாக இருக்கும்.

மேற் சொன்ன படத்தின் கண்கள் வலது பாதியில் மேல் புள்ளியின் அருகே வருமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் அவர் தன் வலப்புறம் திரும்பிப் பார்த்திருந்தால். அப்படிச் செய்வதால் படத்தில் உள்ளவரின் முகமோ கண்களோ பார்ப்பதற்கு இடம் இருக்கும். அப்படி இல்லாமல் இடது பாதியின் மேல் புள்ளியின் அருகேவோ, அல்லது கீழ் புள்ளிகள் அருகேவோ கண்கள் வருமாறு வைத்தால் படம் அதன் அழகை இழந்து விடும். படத்தில் இருப்பவர் கண்களோடு, பார்ப்பவரின் கண்களும் படத்தை விட்டு வெளியே போய் விடும். படத்தில் உள்ளவர் அவரது இடது புறமாகத் திரும்பிப் பார்த்து இருப்பாராகில் அவரது கண்கள் பார்ப்பதற்க் ஏதுவாக படத்தின் வலப்புறத்தில் இடம் வரும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

இந்தப் படத்தைப் பாருங்கள்.

(படம் எடுத்தது நடராஜன் கல்பட்டு)

இந்த விதி தனி மனிதர்களின் படங்களுக்கு மட்டும்தான் என்று இல்லை. எல்லாப் படங்களுக்குமே ஓரளவு பொருந்தும்.

இந்த விதிக்கு மேலும் ஒரு விளக்கம் அடுத்த மடலில் தர முயற்சி செய்கிறேன்.

-கல்பட்டு நடராஜன்

Thursday, October 28, 2010

அன்பு நண்பர்களே...

இந்த முறை `விளையாட்டு` போட்டியில் படங்கள் அதிகம் வரும் என்று ரொம்பவும் எதிர்பார்த்திருந்தேன்.. ஆனால் 26 படங்கள் மட்டுமே வந்திருந்தது எங்கள் வேலையை குறைத்தாலும் படங்கள் குறைவாக வந்தது சிறிது ஏமாற்றமே..

சரி இனி முதல் இடங்களை பிடித்தவர்களை பற்றி பார்பதற்கு முன் இறுதி சுற்று வரை வந்த படங்களை பார்ப்போம்..

1.மோகன் குமார்
2.வினோத்
3.சிவபரணீதரன்
4.சுபாஷ் சந்திரன்

5.சத்தியா

6.rasena.


இதில் சுபாஷ் அவர்களின் படத்தில் ,




இரு சிறுவர்கள் பிரம்மாண்ட செஸ் செட்டப்பை பார்த்து விளையாடுவதை அழகாக 10mm wide angle ல் படம் பிடித்துள்ளார்.. foreground focusing நன்றாக பயன்படுத்தி இருந்தாலும் பின்னால் சில distractions இருக்கின்றது..

அதுவுமில்லாமல் படத்தை பார்ப்பதற்கு சிறுவர்கள் விளையாடுவது போல் இருந்தாலும், இதில் விளையாடுவது என்பது முடியாது என்று நினைக்கின்றேன்..



அடுத்தது rasena,

ஒரு சிலருக்கு இது சாகஸ நிகழ்ச்சியாக தெரிந்தாலும் இதுவும் ஒரு வகை விளையாட்டு தானே.. அருமையாக கம்போஸ் செய்துள்ளார்..சப்ஜெக்ட்டும் அருமையாக வந்துள்ளது.. விமானம் புகையை அழகாக கக்கிக்கொண்டு ஒரு டைவ் அடித்துச்சென்றுள்ளது என்பதை புரிந்து கொள்ளமுடிகின்றது.. அருமை..

ஆனால், சில போர்டுகள்,பின்னால் தெரியும் கட்டிடம்?.. படத்தின் சப்ஜெக்டிடம் நமது கன்கள் செல்லாமல் தொந்தரவு செய்கின்றன.. இதுவே இப்படத்திற்கு ஒரு மைனஸ்..

அடுத்தது மூன்றாம் இடத்திற்கு போட்டி போடுவது,

சிவபரணீதரன் மற்றும் வினோத்.

இரண்டு பேருமே இரு நல்ல action படத்தை தந்துள்ளனர்..

இதில் வினோத் எடுத்திருப்பது ஒரு நல்ல action shot.. ஆனால் ரொம்பவும் wide ஆக க்ராப் இருப்பது பெரிய பலன் தரவில்லை..இருந்தாலும் பேட்ஸ்மேன் மற்றும் ஸ்லிப்பில் இருப்பவரின் action ம் அருமையாக இருக்கின்றது..

சிவபரணீதரன் அவர்களின் படத்தில் கலர்ஸ் அருமையாக வந்துள்ளது.. நல்ல காண்ட்ரஸ்ட்டுடன் action ம் நன்றாக வந்துள்ளது.. இருந்தாலும் இப்படத்தில் composition என்பது ஒரு சிறிய குறையே.. முக்கிய சப்ஜெக்ட் செண்டரில் இருப்பதும், மேலே டைட்டாக க்ராப்/கம்போஸிசன் செய்திருப்பதும் ஒரு குறை..

இவ்விரண்டு படங்களும் சமமாகவே இருப்பதால்

மூன்றாமிடம் பிடிப்பவர்கள்

சிவபரணீதரன்


மற்றும்

வினோத்



அடுத்து முதல் இடத்திற்கு போட்டி போடுவது சத்தியா மற்றும் மோகன்குமார்..

இவர்களில் மோகன்குமார் அவர்களின் படத்தில், ஒருவர் சைக்ளிங் விளையாட்டில் வேகமாக போவதை மிக அழகாக panning ஷாட்டாக படம் பிடித்துள்ளார்.. panning ம் குறையில்லாமல் வந்துள்ளது படத்திற்கு பலமாக உள்ளது.

அடுத்து சத்தியா அவர்களின் படத்தில், இரு வாண்டுகள் தன்னை மறந்து கடற்கரையில் மண் வீடு கட்டி விளையாடுகின்றனர்.. டைட் கம்போஸிசன் மற்றும் கொஞ்சம் சாஃப்ட் ஆக படம் இருந்தாலும் டோன் மற்றும் கடற்கரை பேக்கிரவுண்ட் படத்திற்கு அழகு சேர்ப்பதால் அது ஒரு குறையாக தெரியவில்லை..
இந்த சூழ்நிலைகளை பார்க்கும் போது நாமும் போய் மண் வீடு கட்டி விளையாடலாம் போல் உள்ளது.
அதுவுமில்லாமல் வெளிநாட்டில் குழந்தைகளை படம் எடுப்பது என்பது சிரமம் என்று கேள்விபட்டிருக்கின்றேன்.

இரண்டு படங்களும் சமமாக இருந்தாலும் முதலிடம் என்பது ஒருவருக்கு தான் என்று வரவேண்டியிருக்கின்றது.. எனவே,


இரண்டாமிடம் பிடிப்பது

மோகன்குமார்



முதலிடம் பிடிப்பது

சத்தியா


முதல் மூன்று இடங்களை பிடித்த அனைவருக்கும் PIT ன் வாழ்த்துக்கள்..

சரி நண்பர்களே.. இனி அடுத்த போட்டிக்கு தயாராகுங்க.. விரைவில் புது தலைப்புடன் உங்களை சந்திக்கின்றோம்..

நன்றி
கருவாயன்
Rarindra Prakarsa பற்றி இதற்கு முன் உங்களுத் தெரியாதெனில் இங்கே அவரின் படங்களை பார்த்து அதிசியத்துக் கொள்ளலாம்.

கடந்த ஒரு மணி நேரத்துக்கும் மேல் அவரின் பல படங்களை ஒன்றாக வைத்து பார்த்துக் கொண்டு இருந்தப் போது, இந்தப் படங்களில் ஒரு ஒற்றுமை தெரிந்தது.






கண்டுப்பிடித்து விட்டீர்களா ?


Reduce Reuse and Recycle :)

Tuesday, October 26, 2010

படங்களும் படங்களும்
_____________________________


திரு கல்பட்டு நடராஜன் நரசிம்மன் அவர்கள் தன்னுடைய புகைப்பட அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துக் கொள்ள மனமுவந்து ஒப்புக் கொண்டுள்ளார்.

அவருடைய வலைப்பூ : இங்கே
அவரைப் பற்றிய சிறு குறிப்பு அவர் வாயிலாகவே

வயதில் முதிர்ந்தவன் (81முடிந்து விட்டது). எனது அனுபவங்கள் "கொடேக் பேபி ப்ரௌனி' கால அனுபவங்கள். டி.எஸ்.எல்.ஆர். கால அனுபவங்கள் அல்ல. பெருத்த ஏமாற்றம் அடைவீர்களோ என்று வருந்துகிறேன்.

ஒரு காலத்தில் கழுத்தில் கேமிராக்களை (ஒரு ட்வின் லென்ஸ் ரிஃப்ளெக்ஸ், ஒரு சிங்கிள் லென்ஸ் ரிஃப்லெக்ஸ்) தொங்க விட்டுக் கொண்டு காட்டிலும் மேட்டிலும் அலைந்திருக்கிறேன், பறவைகள், விலங்குகள் இவற்றைப் படம் பிடிக்கும் எண்ணத்தில். சில படங்களும் எடுத்திருக்கிறேன்.

புகைப் படக் கண்காட்சிகளில் 13 முதல் பரிசுகளும் பெற்று இருக்கிறேன். ஏ.எஃப்.ஐ.ஏ.பி. (Associate de la Art Photographique) என்ற பட்டமும் பெற்றேன் Nature Photography யில். F.I.A.P. (Federation Internationale de La Art Photographique) என்பது இங்கிலாந்தின் ராயல் போடோக்ராஃபிக் சொஸைடி போன்ற ஒரு ஐரோப்பிய அமைப்பு. இதன் அத்தாட்சிப் பத்திரத்தினை குடியரசுத் தலைவர் கைகளில் இருந்து 1971ல் பெற்றேன்.
இனி அவருடைய புகைப்படப் பயணத்தில் நாமும் சேர்ந்து பயணிப்போமா ? வாருங்கள்.


பள்ளி நாட்களில் நண்பன் ஒருவனின் கொடேக் பேபி ப்ரௌனி கேமெராவை வைத்துக் கொண்டு பார்ப்பவரை எல்லாம் படம் பிடித்து வந்தேன். பின்னர் கான்பூரில் வேலை பார்த்த போது சொந்தமாக வாங்கிய யாஷிகா ட்வின் லென்ஸ் ரிஃப்ளெக்ஸ் கேமிராவில் படம் பிடிக்க ஆரம்பித்தேன். அப்போதும் நான் எடுத்த படங்கள் எல்லாம் மனிதர்களின் படங்களே. எப்போதாவது ஒரு சமயம் சமுத்திரக் கரையில் படகும் மீனவரும், சூரியோதயம் போன்ற படங்களை எடுத்தேன். அவற்றில் பல குறைந்த அல்லது அதிக நேரம் எக்ஸ்போஸ் ஆன படங்களாக இருக்கும். எட்டுக்கு ரெண்டு தேரும். அந் நாட்களில் தானியங்கிக் கேமிராக்கள் வரவில்லை.

வேலை நிமித்தம் பங்களூரிலிருந்து ஹைதராபாத் போயிருந்த போது, எனது காரிலிருந்து வண்டி ஓட்டுனர் உரிமம், காரின் பதிவுப் புத்தகம், எனது காசோலைப் புத்தகம் இவை திருட்டுப் போயின.

பங்களூரு திரும்பியதும் ஓட்டுனர் உரிமம், காரின் பதிவுப் புத்தகம் இவற்றின் நகல் பெற விரும்பி ஆடோமோபைல் அஸ்ஸோசியேஷன் சென்ற போது உபேந்த்ரா என்ற ஒருவரை சந்திக்க நேர்ந்தது. அவருடன் பல விஷயங்கள் பற்றிப் பேசியபோது, புகைப் படம் எடுத்தல் பற்றிப் பேச்சு வந்தது. அவர் நான் எடுத்த படங்களைக் காட்டுமாறு கேட்டார். “முதலில் உங்கள் படங்களைக் காட்டுங்கள்” என்றேன். அவர் எடுத்த படங்கள் சில வற்றைப் பார்த்ததும் நான் எடுத்த படங்களைக் காட்ட மறுத்தேன். காரணம் அது வரை எனக்குத் தெரியாது புகைப் படம் பிடித்தலில், பிக்டோரியல், லேண்ட்ஸ்கேப், போர்ட்ரைட், இயற்கை, டேபிள் டாப் ஸ்டடி, ஃபேஷன், இண்டஸ்ற்றியல் என்று பல பிரிவுகள் இருக்கின்றன என்பதும், ஒருவர் நல்ல புகைப் படக் கலைஞராக வேண்டுமென்றால் இவற்றில் ஒன்றினை தீவிரமாகக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதும்..

உபேந்த்ரா என்னை விலங்குகள் பறவைகள் இவற்றைப் படம் பிடிப்பதில் வல்லுனரான டி.என்.ஏ.பெருமாள் என்பவருக்கும் சி.ராஜகோபால் என்பவருக்கும் அறிமுகம் செய்து வைத்தார். அன்று பிடித்தது எனக்கு புகைப் படம் எடுப்பதின் மீதான காதல்.

ராஜகோபால் ஒரு ஏரோனாடிகல் எஞ்சினியர். அவர் ஒரு பிக்டோரியலிஸ்ட். நிலப் பறப்புகள் மற்றும் இயற்கைக் காட்சிகளைப் படம் பிடிப்பவர். உலக அளவில் பெயர் பெற்றவர். அவர் பெயருக்குப் பின் வரும் பட்டங்கள் சுமார் பத்து இருக்கும். பரிசுகள் எண்ணில் அடங்காது.

அவர் வீட்டிற்குச் சென்றிருந்த போது அவர் ஒரு கதை சொன்னார். அவரது உறவினர் ஒருவர் 8mm சலனப் படக் காமிரா வாங்கினாராம். அந்த நாட்களில் வீடியோக் கேமிராக்கள் வரவில்லை. ஏதாவது ஒரு நிகழ்ச்சியை சலனப் படமாகப் பிடித்துக் காட்ட வேண்டும் என்றால் 8mm கேமிரா தான் துணை. கேமிரா வங்கியவர் ஒரு கல்யாணத்தினைப் படம் பிடித்து அதை பிறருக்குப் பெருமையோடு ப்ரொஜெக்டரில் போட்டுக் காட்டினாராம்.

தெருவில் எடுத்த காட்சிகளும், மேடையில் பெற்றோமேக்ஸ் வெளிச்சத்தில் எடுத்த படங்களும் சுமாராகத் தெரிந்தன. அடுத்து வந்தது விருந்துக் காட்சி. ஆகாசத்தில் விட்டு விட்டு நீண்ட் வெள்ளைக் கோடுகள். மற்ற இடமெல்லாம் கருப்பு. அவை அங்கிருந்த குழாய் விளக்குகள். ஆங்காங்கே வெள்ளைத் திட்டுகளாக நாற்காலிகளில் உட்கார்ந்திருந்தவர்களின் சட்டைகள்.

திடீரெனெ வெள்ளையாக கும்பாரமாய்க் குவித்து வைக்கப் பட்ட ஒன்று காற்றிலே மிதந்து வந்து கொண்டிருந்தது. நடுவில் ஆங்காங்கே ஒரு வினாடி அது நிற்கும். அதிலிருந்து கொஞ்சம் வெள்ளை இடம் மாறும். பின் அங்கிருந்து சிறு சிறு உருண்டைகளாக மாறி சிறிது தூரம் மேலழும்பிப் பின் மறைந்து விடு.ம் அந்த உருண்டைகள்.

அது வேறு ஒன்றும் இல்லை. சரியான அளவு எக்ஸ்போஷர் கொடுக்காததால் குறைந்த வெளிச்சம் உள்ள இடங்களில் வெள்ளையாயிருந்த சாதம் மட்டுமே தெரிந்திருக்கிறது. இருந்தாலும் உறவினருக்கோ தன் படைப்பில் பரம சந்தோஷம்.

இப்படித் தான் நம்மில் பலரும் ஆரம்ப நாட்களில் இருக்கிறோம். பிறந்த போதே யாரும் புகைப் படக் கலைஞராகப் பிறப்பதில்லை. ஆனாலும் ஒரு கேமிரா கைக்கு வந்த உடன் சில விஷயங்கள் பற்றித் தெரிந்து கொண்டால் நாமும் வெட்கப் படாது நமது படைப்புகளைப் பிறருக்குக் காட்ட முடியும். அவை என்ன என்பதைப் பற்றித் தெரிந்து கொள்ளு முன் இதோ இன்னொரு கதை.

ஒரு விட்டில் விருந்தினர்களுக்கு வீட்டுக் கார அம்மா புகைப் பட ஆல்பத்தினைக் காட்டிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென, “அதோ லில்லி அத்தை” என்று கத்தியது அவர் குழந்தை. “எங்கே?” என்று அனைவரும் கேட்க, “அதோ” என்று காட்டியது குழந்தை படத்தில் ஒரு ஓரத்தில் இருந்து வெளியேறிக் கொண்டிருந்த லில்லி அத்தையின் பின் பகுதியை!

படம் புரட்டப் படுகிறது. மீண்டும் குழந்தையின் குரல், “அதோ எங்கள் டாமீ”. “எங்கே?” என்று கேட்போருக்குக் குழந்தை காட்டுகிறது, படத்தில் ஒரு விளிம்பில் தெரியும் டாமியின் வாலை.

லில்லி அத்தையையோ, செல்ல நாய் டாமீயையோ படத்தில் காட்ட வேண்டும் என்றால் அவர்களின் முகத்தை அல்லவா காட்ட வேண்டும்?

நாம் பிடிக்கும் படங்கள் எல்லாமே ‘படங்கள்’ என்று சொல்ல முடியாது.

‘ஆகா இந்தப் படத்தைப் பெரிதாக்கி வீட்டில் சுவற்றில் மாட்டோமா’ என்ற எண்ணத்தையோ அல்லது பார்ப்பவரின் மனத்தில் ‘மீண்டும் ஒரு முறை பார்க்க மாட்டோமோ’ என்ற ஆவலையோ தூண்டும் படங்களே ‘படங்கள்’. மற்றவை எல்லாம் ஜடங்களே.

திரு ராஜகோபாலின் படங்கள் கருப்பு வெள்ளை படங்கள் தான். அவைகளில் ஒளியின் விளையாட்டினக் கொண்டு கரியினால் வரையப் பட்ட ஒரு ஓவியம் போன்ற தோற்றத்தினைக் கொண்டு வந்திருப்பார். காலஞ் சென்ற திரு ராஜகோபால் பற்றி சொல்லி விட்டு அவரது படம் ஒன்றையும் உங்களுக்குக் காட்டா விட்டால் எப்படி?

பலராலும் வெறுக்கப் படும் எலியையும் அதனை நெருப்பில் வாட்டித் தின்போரையும் வைத்துக் கொண்டு பரிசுகள் பெற்றிடும் படம் ஒன்றினை எடுக்க முடியுமா? ஏன் முடியாது என்று கேட்காமல் அதை செய்து காட்டினார் திரு ராஜகோபால். இங்கே அந்தப் படம்.


-- நன்றி - கல்பட்டு நடராஜன் நரசிம்மன்.
PiTன் Flickr க்ரூப்பில், 'தூள்' படங்களின் வரவு சமீபத்தில் கம்மியாகிக் கொண்டு வருகிறது என்பது பரவலான கருத்து. அதனாலதான், 'இந்த வாரப் படம்' அடிக்கடி வருவதில்லை.பதிவைப் படிக்கும் அனைவரும், படப் பொட்டியை தூசு தட்டி, பளிச்னு அம்சமான படங்களை க்ளிக்கி Flickr க்ரூப்பில் இணைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

குரூப்பில் உள்ள படங்களை மேலேயும் கீழேயும் ஆராயந்த போது, தன் பக்கம் கவனத்தை இழுத்த ஆனந்தின் படம், உங்கள் பார்வைக்கு, இந்த வாரப் படமாய்.
படத்தில் உள்ள நிறை குறைகளை, அள்ளி வீசுங்க. அவருக்கும் ப்ரயோஜனமா இருக்கும், நமக்கும்.

Expresso

Full Blown
 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff