Wednesday, May 30, 2012

நண்பர்களுக்கு வணக்கம்!

அறுபத்தி மூன்று நாயன்மார்கள் மாதிரி 63 படங்கள். அதில் இருந்து பத்தை மட்டும் தேர்ந்தெடுக்க முடியாமல், பதினெட்டு படங்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இப்போ அதில் இருந்து முதல் மூன்றை தேர்ந்தெடுக்கணும். ஸ்ஸப்பா..கண்ணை கட்டுதே!

எல்லா படங்களுமே எனக்கு பிடித்தமான படங்கள் தான். இருப்பினும் மிகவும் பிடித்தது, பார்த்தவுடன் மனதை கவருவது, கம்போசிங், சிறிய குறைகள் ஆகியவற்றை வைத்து முதல் மூன்று இடங்களை பிடித்த படங்களை காண்போம்.


மூன்றாம் இடம் - Aaryan:

அழகான மாலை(?) வேளையில் நீல நிற வானத்தில் சிகப்பு நிற பட்டம். பட்டம் மற்றும் அது கட்டப்பட்டிருக்கும் நூல் வரை மிகவும் தெளிவாக பதிவாகியுள்ளது. அழகான கம்போசிங்! இதுவே மூன்றாம் இடத்தை பிடித்த படம். வாழ்த்துக்கள்!

இரண்டாம் இடம் - Rajes:
மிகவும் அழகான கம்போசிங். தெளிவான, ஷார்ப்பான படம். நெருப்பின் மீது காற்றின் தாக்கத்தை அழகாக காட்டியுள்ள படம். இதுவே இரண்டாவது இடத்தை பிடித்த படம்.

முதல் இடம் - Sathishkum​ar:

பார்த்தவுடன் மனதை கவர்ந்த படம். மாலை நேர வெய்யில், அழகான வண்ணங்கள், காற்றில் பறக்கும் குமிழி, அந்த குமிழியில் தெரியும் பிரதிபலிப்பில் உள்ள நீர் தேக்கத்திலும் பிரதிபலிப்பு என்று பல விஷயங்களை உள்ளடக்கிய படம். இடது பக்கத்தில் மட்டும் கொஞ்சம் இருண்டு விட்டது, இருப்பினும் அது பெரிதாக தெரியவில்லை. இதுவே முதல் இடத்தை பிடித்த படம். வாழ்த்துக்கள்!

சிறப்பு கவனம்:

Rajasekaran:

ரொம்பவே கவர்ந்த படம். மேகமும், தென்னை மரமும் சேர்ந்து அருமையான எபெக்ட் கொடுத்திருக்கிறது படத்திற்கு. நிறங்களும் அருமையாக வந்துள்ளது. ஒரே குறை அந்த இரண்டாவது தென்னை மரம் வெட்டு பட்டு உள்ளது தான். அதையும் உள்ளடக்கி அல்லது தவிர்த்து எடுத்திருந்தால் கண்டிப்பாக இந்த படம் வெற்றி பெற்றிருக்கும். வாழ்த்துக்கள்!

Durai:
பச்சை பசேல் என்று மலைப்ரதேசம், மைனா படத்தில் வருவது போல் அழகான உள்ளது. காற்று வீசுவதை மலையில் உள்ள புற்கள் பிரதிபலிக்கின்றன. முழுவதுமாகவே பச்சையாக இல்லாமல் வானமும் தெரிவது போல், அல்லது செம்மண் பூமி தெரிவது போல இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். படத்தை பார்த்தவுடன் கண்கள் நேராக அங்கு இருக்கும் மக்களை நோக்கி தான் செல்கிறது. அவர்களையும் நன்றாக காண்பித்து, அவர்களின் உடைகள், தலை முடி காற்றில் பறப்பது போல் இருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும். வாழ்த்துக்கள்!

மற்ற படங்களுக்கும் அந்தந்த படத்திலேயே விரைவில் பின்னூட்டம் இடுகிறேன். போட்டியில் பங்கு பெற்ற மற்றும் வெற்றி பெற்ற அனைவருக்கு வாழ்த்துக்கள். எனக்கு இந்த வாய்ப்பு தந்த பிட்டிற்கு நன்றி கூறி விடை பெறுகிறேன்.நட்புடன்
சத்தியா.

Monday, May 28, 2012

எவ்வளவுக்கு எவ்வளோ காமிராகிட்ட விளக்கு இருக்கோ அவ்வளவுக்கு அவ்வளவு சமமா வெளிச்சம் விழும். உதாரணமா காமிராவோட பிளாஷ். ஆனா பிரச்சினையே அந்த மாதிரி விளக்கு கோணக்கொத்துக்குள்ளே வந்துடும் என்கிறதுதான். என்ன செய்யலாம்? எனக் கார முந்திரி 9-ல் கேட்டு நிறுத்தியிருந்தேன்.

இப்போ அதற்கு இன்னொரு வழியை பார்க்கலாம். விளக்கை கிட்ட கொண்டு வராம தூரத்தில வைக்கலாம். அப்ப அது கோணக்கொத்துக்குள்ளே வராது. வெளிச்சமும் கூடியவரை சமமா இருக்கும்!

விளக்கை எங்கே வைத்தா நேரடி பிரதிபலிப்பும் இல்லாமல், கூடிய வரை சமமான வெளிச்சம் பொருள் மேலே விழுமோ, எப்போது அது குறைந்த எக்ஸ்போசர் நேரத்தை கொடுக்கும் அளவு வெளிச்சம் அதிகமா இருக்குமோ- அதை சாதிக்கணும்!

ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ்! அப்பாடா!

இதுக்கு பென்சிலும் பேப்பரும் வெச்சுகிட்டு கணக்கு போடலாம். ஆனா ப்ராக்டிகலா அது தேவை இல்லைங்க! மனித கண்ணே போதுமானது. பிரச்சினைகள் என்னன்னு புரிஞ்சா தானா விடைகளை நாமளே கண்டு பிடிச்சுடுவோம். தேவையானால் பொருள் மேலே விழுகிற வெளிச்சத்தை லைட் மீட்டர் வெச்சு அளந்துக்கலாம். வேற ஒண்ணும் வேணாம்!

முடியாததை முயற்சி செய்ய...

இப்ப பார்த்த உதாரணங்களில் ஒரு விஷயம் புரிஞ்சிருக்கும். சமமான ஒளியூட்டலும் கிளேர் இல்லாத ஒளியூட்டலும் ஒண்ணுக்கொண்ணு முரணாக இருக்கலாம். காமிராவுக்கு அருகிலே விளக்கு இருந்தா அது வெளிச்சத்தை சீரா சமமா பொருள் மேலே பாய்ச்சும், ஆனா கோணக்கொத்திலே இருக்கும். பக்கவாட்டிலே இருந்தா சம வெளிச்சம் போயிடும், ஆனா கோணக்கொத்திலே இருந்து வெளியே இருக்கும்.

தீர்வு என்ன?

ஒண்ணு விளக்கை காமிரா கிட்டே கொண்டு போனா, காமிராவை தூரத்துக்கு கொண்டு போகணும். (அதே மாதிரி படம் வர நீளமான லென்சை பயன்படுத்தியோ ஜூம் செய்தோ எடுக்கணும்.) அப்ப கோணக்கொத்து சின்னதா இருக்கும். விளக்கை வைக்கிறதுல கொஞ்சம் சுதந்திரம் கிடைக்கும்.

அல்லது இட வசதி இல்லை, காமிரா கிட்டேதான் இருந்தாகனும்ன்னா, விளக்கை மிக சின்ன கோணத்தில வைக்கணும்; அப்ப கொஞ்சமாவது சீரான வெளிச்சம் பொருள் முழுதும் படணும்ன்னா விளக்கு பக்கவாட்டிலே தூரத்துக்கும் போகணும்.படம் நன்றி: http://www.freenaturepictures.com/mountain-peak-pictures.php
எப்படி இருந்தாலும் இடம் வேணும் என்கிறதே பிரச்சினை. ஒரு ம்யுசியத்திலே சின்ன ரூமில எட்டுக்கு பத்து அடி அளவில சுவர் முழுதும் ஆக்கிரமிக்கற படத்தை எப்படித்தான் போட்டோ எடுக்கிறது? பின்னால் ஓரளவுதான் போகலாம். விளக்கை பக்கவாட்டிலேயும் கொண்டு போக முடியாது. படத்தை பாருங்க. முடியவே முடியாதுன்னு சொல்லிடலாம். இப்ப காட்டி இருக்கிற மாதிரி எடுத்தா நிச்சயம் கிளேர் இருக்கும். (உதாரண படத்துக்கு க்ளேர் கிம்ப்ல சேத்தது!)


ம்ம்ம்ம்ம்ம்... என்ன செய்யலாம். கொஞ்சம் லாஜிகலா யோசிக்கலாம்.

பிரச்சினை என்ன? கிளேர்.

அது எப்படி வருது? டிரக்ட் ரிப்லெக்ஷன்.

இதை தவிர்க்கிறது எப்படி? இது வரை பாத்த வழிகள் உதவா. ம்ம்ம் வேற வழி இருக்கு?

இருக்கு! போலரைஸ்ட் லைட் பத்தி பாத்தோமில்லையா? அங்கே விடை இருக்கு.

விளக்கு முகப்பில ஒரு போலரைசிங் பில்டர். காமிராவிலேயும் ஒரு போலரைசிங் பில்டர்.

விளக்கு முகப்பு பில்டரால வெளிச்சம் போலரைஸ்ட் ஆகிடும். அதனால் ரிப்லக்ஷனும் அப்படியே இருக்கும். காமிரா பில்டரை கொஞ்சம் சுழற்றி அட்ஜஸ்ட் செஞ்சா 90 டிகிரி வந்ததும் போலரைஸ்ட் வெளிச்சம் பில்டராகிடும். எந்த பொருளுமே நூறு சதவிகிதம் ஒரே மாதிரி வெளிச்சமா ரிப்லக்ட் பண்ணாதுன்னு பாத்தோமில்லையா? அதனால, என்ன டிப்யூஸ் வெளிச்சம் இருக்கோ அது மட்டும் காமிராவில பதிவாகும். இப்ப மத்ததை அட்ஜஸ்ட் பண்ணி படம் எடுத்துடலாம்!


எந்த பில்டரும் நூறு சதவிகிதம் வேலை செய்யாது. அதனால கொஞ்சம் கிளேர் இருக்கத்தான் செய்யும். இருந்தாலும் ஒத்துக்கொள்ளக் கூடிய அளவிலே இருக்கும்.
இது ரொம்பவே ஸ்மார்ட் வழியா தோன்றினாலும் உண்மையில் வேற வழியே இல்லைன்னா இது என்கிற சமாசாரம்.

காரணம் பலது. நிறைய வெளிச்சம் பில்டர் ஆகிடும் என்கிறதால அபெர்சரை அதிகமாக்கணும். தியரில ரெண்டு ஸ்டாப் அதிகமாகும்ன்னாலும் செயலிலே 4-6 ஸ்டாப் அதிகமாகும். அப்படி செஞ்சா படத்தின் ஆழம் குறையும்.
இது காபி வேலைகளுக்கு பரவாயில்லை. ஆனா எக்ஸ்போசர் நேரம் அதிகமாகும் என்பதால நகரும் பொருட்களை இப்படி எடுக்க முடியாது. ஒளி மூலத்தை மிக அதிகமா வைத்து கொஞ்சம் சமாளிக்கலாம்.

இன்னொரு விஷயம் போலரைசிங் பில்டர் பத்தியது. பில்டர் ஆன ஒளி எங்கே போச்சு? அது சூடாக மாறிடும். சூடான பில்டர் சீக்கிரம் சேதமாகும். அதனால இந்த பில்டரை பயன்படுத்துகிறவங்க மத்த விளக்கை எல்லாம் அணைச்சுட்டுத்தான் இதை மாட்டுவாங்க. படமெடுக்க ரெடியாகிற வரை இதை செய்ய மாட்டாங்க.
கடைசியா, இந்த பில்டர் படத்தோட கலரை மாத்தவும் கொஞ்சம் வாய்ப்பிருக்கு.

-திவா(வாசுதேவன் திருமூர்த்தி)
‘சித்திரம் பேசுதடி’
http://chitirampesuthati.blogspot.com/
முந்தைய பதிவுகள்:
காரமுந்திரி I.
காரமுந்திரி II

Friday, May 25, 2012

நண்பர்களுக்கு வணக்கம்!

காற்றை போய் எப்படி பாஸ் படம் பிடிக்கறதுன்னு கேட்காம அருமையா படம் எடுத்து அனுப்பி இருக்கீங்க. அறுபதுக்கும் மேற்பட்ட படங்கள் வந்துள்ளதில் மகிழ்ச்சி.

நமது உணர்வுகளின் வெளிப்பாடு எப்படி நமது முகத்திலும், செயலிலும் தெரிகிற மாதிரி காற்றின் தாக்கத்தை நம்மை சுற்றி உள்ள பல விஷயங்களில் அழகாக படம் பிடித்துள்ளீர்கள். காற்று என்றவுடன் எனக்கு ஞாபகம் வருவது ஷாம்பூ விளம்பரங்களில் வரும் பெண்களின் கூந்தல் தான். அப்படியே காற்றில் அழகாக பறக்கும். அந்த மாதிரி படம் எடுக்க அவர்கள் மிகப்பெரிய மின்விசிறி எல்லாம் பயன்படுத்துவார்கள். அது படத்திற்கு ஒரு நல்ல எபெக்ட் கொடுக்கும். அதே போல் இயற்கை காட்சிகளை படம் எடுக்கும் போதும், காற்று இருந்தா அது படத்திற்கு ஒரு நல்ல எபெக்ட் கொடுக்கிறது. சில சமயம் தொல்லையும் கொடுக்கும். நான் எப்போ பூ, வண்டு என்று மேக்ரோ படம் பிடிக்க முயற்சி செய்தாலும், இந்த காற்று வந்து ரொம்ப தொல்லை கொடுக்கும்.

சரி, இப்போது முதல் சுற்றுக்கு முன்னேறி உள்ள படங்களை பார்ப்போம். (Not in any order)
#Aaryan


#Dharmaraj


#Durai


#Gobenath


#H.Gowri


#Jawahar


#Nithi Anand


#Kumaran GK


#Kumaran


#Narmatha


#Nilaa


#Rajchan


#Rajasekaran


#Rajes


#Sathishkumar


#Shwetha


#Sivapri


#Antony Satheesh


முதல் மூன்று படங்களுடன் விரைவில் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.


நட்புடன்
சத்தியா.

Thursday, May 10, 2012

மாலை நேரம். மாலை நேர புகைப்பட்ங்களை எளிதில் கிம்பில் மற்றும் பிகாஸாவில் மெருகேற்றுவது பற்றி இங்கே. பார்க்கலாம்
முதலில் படத்தை கிம்பில் திற்நது லேயரை நகலெடுத்துக்கொள்ளுங்கள்.
பின்னர் லேயர் மோட் Multiply மாற்றிக்கொள்ளுங்கள்
ஒரு புதிய லேயரை திறந்துக் கொள்ளுங்கள்.
பின்னர் Blend தெரிவு செய்துக் கொள்ளுங்கள். Foreground to Transparent தெரிவு செய்துக் கொள்ளுங்கள். மேலிருந்து கீழே நடுவில் கோடு போல இழுங்கள்
இந்த லேயரின் மோட் Soft light என்று மாற்றிக் கொள்ளுங்கள்.
விளைவு அதிகமாய் இருந்தால் Opacity % குறைத்துக் கொள்ளுங்கள்.
அடுத்து இந்தப் படத்தை பிகாஸாவில் மாற்றுவது பற்றி பார்க்கலாம் பிகாஸில் படத்தை திறந்து Boost தெரிவு செய்துக்கொள்ளுங்கள்.
உங்களின் விருப்பத்திற்கு ஏற்ப அளவை மாற்றிக்கொள்வது மட்டும்தான் வேலை,

Wednesday, May 9, 2012

ஃபோட்டோகிராஃபருக்கு என்ன தகைமைகள் வேண்டும்? ஒரு காமிரா இருந்தா ஓகே. இதுதான் பலபேரின் நினைப்பு. காமிரா இருக்கிறவங்க எல்லாம் ஃபோட்டோகிராஃபராக முடியாது. சிலர் காமிரா வச்சிருப்பாங்க. ஆனாலும் எடுக்கிற படங்கள் மேல திருப்தி இல்ல. புதுசா பெரிய பட்ஜட்டுக்கு ஒரு காமிரா வாங்கினாலும் படம் திருப்தியாக வராது. ஏன்னா ஒரு ஃபோட்டோகிராஃபருக்கு மூன்று தகைமைகள் வேணும்.

பார்வை
நீங்க பார்க்கும் பார்வைதான் முக்கியம். பார்வை நல்லா இருக்கலாம். ஆனா விடயத்தை எப்படி பார்க்கிறிங்க என்பதுதான் முக்கியம். ஐந்து பேர் சுற்றுலாவுக்காக ஓர் அழகிய இடத்திற்கு செல்கிறார்கள். ஐந்து பேரும் போட்டோ எடுக்கிறாங்க.  ஒருவர் ஆட்களைப் பார்க்கிறார். இன்னுமொருவர் நீல வானத்தைப் பார்க்கிறார். மற்றவர் நெளிந்து செல்லும் சாலையைப் பார்க்கிறார். அடுத்தவர் சாலையில் போகும் வாகனத்தைப் பார்க்கிறார். ஐந்தாமவர் இந்த நான்கு பேரையும் பார்க்கிறார். யாருடைய போட்டோ நன்றாக வரும்?

உங்க நண்பர்களோட சேர்ந்து நீங்களும் போட்டோ புடிச்சிருக்கலாம். உங்க போட்டோ  மட்டும் "சபாஷ்" என்று மற்றவர்களால் பாராட்டப்பட்டிருக்கலாம். ஏன் பாராட்டப்பட்டது? காரணம் நீங்கள்  எல்லோரையும் போல் பார்க்காததுதான்.

ஓளிப்படத்துறையில் மேலானவர், குறைந்தவர் என்ற பேதம் இல்லை. ஆனால் தனித்துவமான ஒளிப்படக்கலைஞர்கள்தான் உள்ளனர். ஒளிப்படத்துறையில் பார்த்தல் என்பது இன்றியமையாதது. உங்கள் ஒளிப்படம் நீங்கள் யார் என்பதையும், நீங்கள் எப்படி உலகைப் பார்க்கின்றீர்கள் என்பதையும் தெரிவிக்கின்றது.

கருவிகள்

காமிரா ஓர் அருமையான கருவி. சிலவேளை உங்கள் கண்கள் காணாத அழகை காமிரா கண்டுவிடும். அதில் பாவிக்கப்படும் பலவித லென்சுகள் வெவ்வேறு காட்சிகளை காட்டக்கூடியன. வைட் அங்கிள் லென்ஸ் (wide angle lens), டெலிசூம் லென்ஸ் (telephoto lens), மக்ரோ லென்ஸ் (macro lens) என்ற வேறுபட்ட லென்சுகள் ஒரே விடயத்தை பலவிதத்திலும் அழகாகக் காட்ட வல்லன.

வெறுமனே கருவி உங்களை ஒரு சிறந்த ஃபோட்டோகிராஃபராக மாற்றாது. அதனைக் கையாளும் உங்கள் திறமை மற்றும் உங்கள் பரிசோதனை முயற்சிகள் உங்களை ஒரு சிறந்த ஃபோட்டோகிராஃபராக்கும்.

சென்றடைதல்
படம்: ராமலக்ஷ்மி

ஃபோட்டோ புடிக்கிறது பூட்டி வைப்பதற்கல்ல, மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு. பலவேளைகளில் இதனால் எந்த வருவாயும் கிடைக்கப்ப போவதில்லை. ஆனால் மகிழ்ச்சி, நான் கண்ட அழகை மற்றவர்களுடன் பகிர்வதிலுள்ள மகிழ்ச்சி, மற்றவர்கிடமிருந்து கிடைக்கும் பாராட்டினால் மகிழ்ச்சி. (திட்டு வாங்கினாலும் மகிழ்ச்சியாயிருங்கள். ஏனென்றால் அது திருத்திக் கொள்ள கிடைக்கும் மாத்திரை)

இன்றைய தொழில்நுட்ப உலகு பல வசதிகளைக் கொண்டது. வலைப்பூ, ஃப்ளிக்கர், பேஸ்புக் என ஏராளம் வசதிகள். பகிர்ந்து கொள்ளவும், மகிழ்ந்து கொள்ளவும், உங்கள் ஒளிப்பட அறிவை விருத்தி செய்து கொள்ளவும் உதவும்.

+1
இந்த மூன்று தகைமைகள்தான் அதிகம் பரிந்துரைக்கப்படும் விதிமுறைகள் என்று சொல்லாம். ஆனாலும் ஒன்று விடப்பட்டதாய் என்னுள் ஓர் எண்ணம். ஆகவே, நான் சேர்த்துக் கொண்டது ஆர்வம். என்னதான் இருந்தாலும் ஆர்வம் இருக்கனும். ஆர்வம் அதிகமாக அதிகமாக தேடலும், அதனோடு கூடிய புலமையும் ஏற்படும். நீ எதை நினைக்கின்றாயோ, நீ அதுவாகின்றாய்!


காமிராவ கையில எடுத்தவங்க அதைக் கைவிட்டதாக எனக்குத் தெரிஞ்ச சரித்திரமில்ல. இறைவன் அழகைப் படைத்திருக்கிறான். அதைக் காண இரண்டு கண்கள் கொடுத்திருக்கிறான். அதைப் பகிர்ந்து கொள்ள உங்களையும் என்னையும் காமராவோட அனுப்பியிருக்கிறான்.

எனக்கு மட்டுந்தான் +1 ஐடியா வரும் எங்கிர நிபந்தனையெல்லாம் கிடையாது. ஐடியா உள்ளவங்க காமன்ட் பெட்டியில பதிஞ்சிடுங்க.

Anton

Thursday, May 3, 2012

அன்பு நண்பர்களே,

அனைவருக்கும் வணக்கம்!

இந்த மாத போட்டிக்கு என்னை சிறப்பு நடுவராக தேர்ந்தெடுத்ததற்கு பிட் குழுவிற்கு நன்றி! 2007 டிசம்பரில் இருந்து பிட் போட்டியில் பங்கேற்று வந்துள்ளேன். இது எனக்கு ஐந்தாவது வருடம். இங்கிருந்து தான் நிறைய கற்று கொண்டேன். இப்போ நானே இதுல ஒரு நடுவரா செயல்படறது ரொம்ப சந்தோஷம்.

இந்த மாதத்திற்கான போட்டியை மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பீர்கள். சவாலான தலைப்பு கொடுக்க போறேன்னு வேற பில்ட் அப் கொடுத்துருக்காங்க. இப்போ போட்டிக்கு வர படங்களை எல்லாம் பார்த்தா உங்களுக்கு சவாலான தலைப்பு கொடுக்கறது தான் பெரிய சவால்னு நினைக்கிறேன்.

சரி விஷயத்துக்கு வருவோம். இந்த மாத தலைப்பு "காற்று". படத்தில் காற்றின் தாக்கம் தெரியும் படி இருக்க வேண்டும்.
போட்டிக்கான விதிமுறைகள் இங்கே

படம் வந்து சேர வேண்டிய கடைசி தேதி 20-05-2012

நட்புடன்
சத்தியா.
----------------

மாதிரி படங்கள்

# படம் 1: Anton (சிறிய மின்விசிறி)# படம் 2: Sathiya

# படம் 3: Sathiya

# படம் 4: Ramalakshmi

# படம் 5: Ramalakshmi# படம் 6: Iyappan Krishnan# படம் 7: Andrew @CubaGallery

# படம் 8: Agnese Eva Montecchi

[Photographs 7,8,9,10,11... Thanks to the links!]

மீண்டும் நினைவூட்டுகிறோம்:

படங்களை 111715139948564514448.submit@picasaweb.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இணைப்பாக அனுப்பவும். கூடவே photos.in.tamil@gmail.com முகவரிக்கு cc அனுப்பவும்.

படங்கள் 1024x768 எனும் அளவில் படங்கள் இருக்குமாறு பார்த்துக் கொண்டால் நல்லது. அது எப்படின்னு தெரியலைன்னா இந்த பதிவை படிச்சி பாருங்க.
 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff