Tuesday, February 25, 2014

வணக்கம் பிட் மக்கா,நலந்தானா?

நீண்ட நாட்களாக நண்பர் ஒருவர் வீட்டிற்கு என்னை அழைத்திருந்தார் நானும் இதோ வரேன் அதோ வர்ரேன்னு இழுத்துக்கிட்டிருந்தேன்,சென்றவாரம் ஒருவழியா நண்பர் வீட்டுக்கு செல்ல அவரோ தான் எடுத்த புகைப்படமொன்றை பிராஸஸ் செய்து அதனை ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துகொண்டிருந்தார்அவரது படமானது நீண்ட நேரமாகியும் பதிவேற்றப்படாமல் ஓடிக்கொண்டிருந்தது.....

"ஏம்பா ஒருபடம் பதிவேற இவ்வளவு நேரமா"ன்னு கேட்டதும் "பின்ன என்ன 8.5 MB இல்லையா? அதான் நேரமாகிறது"ன்னு சொன்னாரு. "ஃபேஸ்புக்கிற்கு 8.5MB அளவுள்ள படத்தையா போடறீங்க"ன்னு? வியப்பா கேட்டேன். "இவ்வளவு நாளா அப்படித்தான் பண்ணிக்கிட்டுருக்கேன்”னு சொன்னாரு. 'நல்ல ஆளுய்யா நீ'னு நினைத்துக்கொண்டேன்.

சரி விஷயத்துக்கு வருவோம். பொதுவாகவே ம்மில் பலரும் எடுத்த படத்தை கிராப் செய்து பிற்சேர்க்கை செய்து அப்படியே வலையேற்றம் செய்துவிடுகிறோம்ஆனால் Facebook தளத்தைப் பொருத்தவரை நீங்கள் என்னதான் அதிகப்படியான Resolution படங்களை வலையேற்றம் செய்தாலும் பேஸ்புக் அனுமதிக்கும் அதிகப்படியான Resolution 2048px ஆகும்.

சரி உங்களுடைய படம் 4000X3000 Resolution உள்ள படமென வைத்துக்கொள்வோம் அதனை அப்படியே பேஸ்புக்கில் வலையேற்றம்  செய்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம், அப்போது என்னுடைய படம் அப்படியே தானே இருக்குமென நீங்கள் நினைத்தால் அதான் கிடையாதுஒருமுறை உங்களது படம் பேஸ்புக்கில் வலையேற்றம் செய்துவிட்டால் ஃபேஸ்புக்கின் ரீசைஸிங் டூலானது தானாகவே உங்களது படத்தை ரீசைஸ் செய்துகொள்ளும். சுமார் 8MB அளவுள்ள படத்தை வலையேற்றம் செய்து பின்னர் அதனை அப்படியே பதிவிறக்கம் செய்து பாருங்கள் 8MB அளவிலிருந்த படமானது 1MB க்கும் குறைவாக Compress ஆகியிருப்பதை பாருங்கள்.எனவே ஃபேஸ்புக்கில்  படத்தினை பதிவேற்றம் செய்ய 2048px அளவிலான படங்களே போதுமானதாகும்.

எனவே நீங்கள் போட்டோஷாப்பில் ஃபேஸ்புக்கிற்கானக படங்களை உருவாக்கும் போது 2048px அளவுள்ள படங்களாக தயாரித்துவிட்டீர்களென்றால் பதிவேற்றம் சீக்கிரமாக முடிந்துவிடும்.சரி இதனை எப்படி போட்டோஷாப்பில் உருவாக்குவது என பார்க்கலாம்.

முதலில் போட்டோஷாப்பில் படத்தைத்திறந்துகொண்டு உங்களது எடிட்டிங்குகளை முடித்துக்கொள்ளவும். இப்போது File>Automate சென்று Fit Image என்பதனை தேர்வு செய்யவும்.



இப்போது தோன்றும் விண்டோவில் Width மற்றும் Height என்பதிலும் 2048 என தட்டச்சு செய்யவும்.


Widht மற்றும் Height இரண்டிலும் 2048 என ஒரே மதிப்பை கொடுக்கும்போது என்னடா நம்ம படம் சதுரமாக வந்துவிடுமோ என்று நினைக்க வேண்டாம்.Fit Image ல் உங்களது படம் லேண்ட்ஸ்கேப்பாக இருந்தால் Longest Edge Widthஐ 2048 px ஆகவும் Portraitடாக இருப்பின் Height Longest Edge ஆகவும் எடுத்துக்கொண்டு படத்தை  தானாக ரீசைஸ் செய்து கொடுத்துவிடும் என்பது தான் இதன் சிறப்பு.
கடைசியாக File>Save As என்பதனை தேர்வு செய்யவும்.பின்னர் உங்களது படத்திற்கு ஒரு பெயரை கொடுத்து Save என்பதனை அழுத்தவும்.



இனி வரும் JPEG Optionல் நீங்கள் ஒன்றினை நினைவில் கொள்ளவேண்டும் அதாவது 2048px லில் நீங்கள் உருவாக்கும் படமானது 1MB அளவிற்குள்ளாக இருக்கவேண்டும் அவ்வாறு இல்லாவிடில் ஃபேஸ்புக்கின் ரீசைஸ் டூலானது உங்களது படத்தை 1MBக்கு Compress செய்துவிடும்.எனவே நாம் போட்டோஷாப்பிலேயே நமது பைல் சைஸை குறைத்துக்கொள்ளலாம்.

இதற்கு Quality Slider 10லிருந்து 8க்குள்ளாக நகர்த்தும்போது 1MBக்கு குறைவான பைல் சைஸ் கிடைத்துவிடும்,பின்னர் சேமித்துக்கொள்ளவும், என நண்பரிடம் கூறிய இந்த தகவலை பிட் மக்களிடமும் பகிர்ந்துகொள்கிறேன்.



அட Lightroom வாசகர்களை மறந்துட்டேனே,Lightroom பயன்படுத்துபவர்கள்,உங்களது எடிட்டிங்குகளை முடித்தப்பின்னர் File>Export என்பதனை அழுத்தவும்.


பின்னர் நான் கீழே கோடிட்டு காட்டியபடி உங்களது செட்டிங்குகளை செய்து எக்ஸ்போர்ட் செய்துகொள்ளவும்.


என்ன பிட் மக்கா ஃபேஸ்புக் தளத்திற்கான படத்தினை தயாரிக்கும் நுட்பத்தினை கற்றுக்கொண்டீர்களா?

சரி, ஃபேஸ்புக் பற்றி இன்னொரு தகவலையும் அளிக்கிறேன், ஃபேஸ்புக்கில் நீங்கள் உங்களது படத்தை அப்லோடு செய்தவுடன் உங்கள் படத்தில் இருக்கும் IPTC metadata க்களை ஃபேஸ்புக் தளமானது நீக்கிவிடும்அதனால் என்னன்னு நினைக்கிறீங்களா? IPTC metadata நீக்கப்படுவதால் உங்களது படத்தில் பொதிந்திருக்கும்(Embedded) காப்பிரைட்,கேப்ஷன் போன்ற விஷயங்கள் நீக்கப்படும் என்பதையும் நினைவில் கொள்ளவும்இதுகுறித்து பலமுறை உலக அளவிலான புகைபடக்கலைஞர்கள் குழுமம்  ஃபேஸ்புக் தளத்தில் புகார் அளித்திருந்தாலும் ஃபேஸ்புக் தளம் இதுவரை செவிசாய்க்கவில்லை என்பது தான் நம்மைபோன்ற புகைப்படக்கலஞர்களின் வருத்தமான விஷயமாகும்.

அன்புடன்,
நித்தி ஆனந்த்

Thursday, February 20, 2014

சரணாலயங்களில் நடந்தோ, யானை மீதோ, நீர் தேக்கங்களில் படகிலோ சென்று, பார்த்தல்,விலங்குகளைப் படம் பிடித்தல் என்பது ஒரு இன்ப மயமான அனுபவம். 
நீங்கள் சுவாசித்திடும் சுத்தமான காற்றும், மனித ஆரவாரமற்ற நிலையும், பறவைகளின் சங்கீதமும், ஓடைகளில் ஓடிடும் நீரின் சலசலப்பும் உங்களை உடலோடு தூக்கி வேறு ஒரு உலகத்திற்கே கொண்டு சென்று விடும்.
படம் பிடித்திடும் ஆர்வத்தில் தனியாக மட்டும் சென்றிட வேண்டாம்.  வனக் காவலர்கள் துணையுடனோ அல்லது அனுபவம் மிகுந்தவர்களுடனோ செல்வது எப்போதுமே நல்லது.
#1
(பெரியாறு ஏரிக் கரையில் ஒரு யானைக் கூட்டம்)
தனியாக இருக்கும் யானைக்குத் தக்க மரியாதை கொடுத்து வெகு தூரத்திலே இருந்தே அதைப் பாருங்கள்.  யானைக கூட்டமாக இருக்கும் போது அவ்வளவு ஆபத்தானது அல்ல.
காட்டு விலங்குகளில் சிங்கம், சிறுத்தை, புலி இவையும் சற்று ஆபத்தானவையே.
ஒரு முறை கர்னாடகாவில் உள்ள கெமன்குண்டி மலைப் பிரதேசத்தில், ஆளுயரப் புல் அடர்ந்த காட்டுப் பகுதியில் இருந்த ஒற்றையடிப் பாதை வழியே எனது குரு பெருமாள் அவர்களும் மற்றொரு நண்பருமாக நடந்து சென்று கொண்டிருந்தோம்.  ஓரிடத்தில் ஒரு புதிய வாடையை நுகர்ந்து ஒரு வினாடி நின்று சுற்று முற்றும் பார்த்தேன்.  என் பின்னே வந்து கொண்டிருந்த பெருமாள் சைகையால், “நிற்காதே.  போ என்றார்.  நானும் நடந்தேன்.  சற்று தூராம் சென்ற பின் பெருமாள் கேட்டார், “ஏன் தெரியுமா உன்னை நிற்காதே என்றேன்?  அங்கு ஒரு புலி நம் கண்ணுக்குப் புலப்படாமல் நம்மைப் பார்த்துக் கொண்டிருந்த்து என்று.  பதிலுக்கு நான் சொன்னேன், “நானும் அதற்காகத் தான் நின்றேன்.  புலி கண்ணில் படுகிறதா என்று பார்த்திடலாம்” என்று.
விலங்குகளை அவற்றின் இயற்கையான் சூழலில் இருப்பது போன்ற படங்களைப் பிடித்திட சரணாலயங்களுக்குத் தான் போகவேண்டும் என்பதில்லை.  உங்கள் ஊரிலோ அல்லது அருகாமையிலோ இருக்கும் உயிரியல் பூங்காவிற்கு சென்றால் கூட நல்ல படங்கள் பிடித்திடலாம்.  அப்படிப் பிடிக்கும் போது நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய ஒன்று விலங்குகள் இருக்கும் கூண்டுகளின் கம்பிகளோ தடுப்புச் சுவர்களோ படத்தில் வராத படி பார்த்துக் கொள்ள வேண்டும்.  உதாரணத்துக்கு நான் பிடித்த சில படங்கள் கீழே:
#2 
 (யோவ்.... பொண்ணு குளிக்கற எடத்துலெ ஒனக்கு என்னையா வேலெ?)
#3 
(கொஞ்ச நேரம் ஓய்வு எடுக்கலாம்னா இங்கெயும் வந்துட்டாங்கையா படம் புடிக்க)
#4
 (ராஜா ராணி)
#5
(புலி சிங்கம் இருந்தா ஒரு மான் இருக்க வேண்டாம்?)

#6 


(என்னெயெப் போல சோம்பேறியா இருக்காதீங்க.  சுறு சுறுப்பா இருங்க.)

#7

(உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்................கிட்டெ வராதீங்க!)
பறவைகள் ஆச்சு. விலங்குகள் ஆச்சு.  மனுசங்களெப் பத்தி சீக்கிரத்துலெ பாக்கலாம். அதுக்கு முந்தி பூச்சிகளெப் பத்தி அடுத்த பகுதிலெ பார்க்கலாம்.
(படங்கள் – நடராஜன் கல்பட்டு)

*** 
Legend Talks..
திரு கல்பட்டு நடராஜன்
-----------------------------------------------------------------------------------------------------------
தொடர்புடைய முந்தைய பதிவுகள்:


Monday, February 17, 2014

AID (Association for India's Development) ஒரு இலாப நோக்கற்ற, தன்னார்வ நிறுவனம். பாராபட்சமற்ற நடுநிலையான, நியாயமான சமுதாயத்தை உருவாக்கவும், சமுதாயத்தின் தொடர்ச்சியான வளர்ச்சிக்காவும் பாடுபட்டு வருகிறது. கல்வி,வாழ்வாதாரம், ஆரோக்கியம், பெண்கள் உரிமை, இயற்கை வளம் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் AID, பெங்களூரில் பரவலாக மக்களிடம் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்தப் போட்டியை அறிவித்துள்ளது. அத்தோடு நிதி திரட்டி இது போன்ற சேவைகளுக்கு ஊக்கம் தரும் முயற்சியிலும் இறங்கியுள்ளது.


*
SOUL - SPACE - SOCIETY
BANGALORE AS YOU SEE IT
[ஆன்மா - வெளி - சமூகம்
பெங்களூர், உங்கள் பார்வையில்..]
இதுதான் தலைப்பு.

*இதற்கென உருவாக்கப்பட்டுள்ள Face Book பக்கத்தில் படங்களை வலையேற்ற வேண்டும்: https://www.facebook.com/AIDIndiaBangalore?sk=app_292725327421649 [படம் ஏற்றுவதில் error message வருமாயின் வேறொரு browser உபயோகித்துப் பார்க்கவும்.]

அங்கேயே விதிமுறைகளும் தரப்பட்டிருந்தாலும் தமிழில் இங்கும்:

*ஒருவருக்கு 5 படங்கள் வரை அனுமதி.

*இரண்டே பரிசுகள்தாம். முதல் பரிசு ரூ 10000/- இரண்டாம் பரிசு ரூ 5000/-

*முதல் பத்தியில் குறிப்பிட்டிருந்த “கல்வி, வாழ்வாதாரம், ஆரோக்கியம், பெண்கள் உரிமை, இயற்கை வளம்” ஆகிய தலைப்புகளின் கீழ் படம் பொருந்தி வர வேண்டும்.

*வாக்குகள் அளிக்கும் முறை ஊக்கத்திற்காக ஏற்படுத்தப்பட்டிருப்பினும் அது பரிசீலனையின் ஒரு பகுதியாகவே இருக்கும். வாக்களிப்பு முறையால் படங்கள் இன்னும் பலரைச் சென்றடைந்து விழிப்புணர்வுக்கும் உதவுகிறது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். மற்றபடி நடுவர் குழுவே கண்காட்சிக்கான படங்களைத் தேர்வு செய்வர். அதிலிருந்து முதல் பரிசுக்கான படங்களை போட்டி அமைப்பாளர் நியமிக்கும் சிறப்பு நடுவர் தேர்வு செய்வார்.

*படம் நீங்கள் எடுத்ததாக இருக்க வேண்டும். டெக்னிக்கலாக சிறப்பாக இருக்கிறதா என்பதை விடவும் கருவினை எந்த அளவுக்குப் படம் வெளிக்கொண்டு வருகிறது என்பதற்கு அதிக முக்கியத்துவம் தரப்படும்.

* எப்போதுமே போட்டிக்கு சமர்ப்பிக்கும் படங்களில் வாட்டர் மார்க் இருக்கக் கூடாது, என்பது பொதுவான விதி. நினைவிருக்கட்டும்.

*பெங்களூரைச் சேர்ந்த எந்த வயதினரும் கலந்து கொள்ளலாம்.

*பெங்களூர்வாசிகளாக அல்லாத பட்சத்தில் பெங்களூர் வந்தபோது எடுத்த படங்களைக் கொடுக்கலாம். நம்பிக்கையின் பேரில் நடத்தப்படும் இப்போட்டி விதிகளுக்குக் கட்டுப்பட்டு படங்கள் கண்டிப்பாக பெங்களூரில் எடுத்ததாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

*பரிசுக்குரிய படங்கள் போக தேர்வாகும் படங்கள் ‘தளம்’ அரங்கில் மார்ச் 8,9 தேதிகளில் காட்சிப் படுத்தப்படும். அதற்கான சட்டமிடும் செலவான ரூ.500_யை ஒளிப்படக் கலைஞர்களே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

*படங்களை வலையேற்றக் கடைசித் தேதி: 24 பிப்ரவரி 2014, நள்ளிரவு 12 மணி.

பரிசு மட்டுமே நோக்கமாக இன்றி சமுதாய விழிப்புணர்வுக்கு முக்கியத்துவம் தரும் இப்போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு உங்கள் பங்களிப்பால் போட்டியையும், கண்காட்சியையும் சிறப்பியுங்கள்.

**

இந்தப் போட்டிக்கான கடைசித் தேதி 1 மார்ச் 2014 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது:


மார்ச் 8,9 தேதிகளில் நடைபெறவிருந்த ஒளிப்படக் கண்காட்சியும் 15,16 தேதிகளுக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
***

Friday, February 7, 2014

வணக்கம் பிட் மக்கா,

பொதுவாக இணையதளத்தில் போட்டி நடத்துபவர்கள்,போட்டிக்காக அனுப்பப்படும் படங்கள் இத்தனை PPI resolution மற்றும் Longest edge இவ்வளவு பிக்ஸலில் அனுப்பனும்ன்னு தெளிவா சொல்லிடறாங்க ,ஆனா இந்த அளவுகள்ல நம்ம படங்கள எப்படி  தயாரிக்கிறது? ***  

இப்போ நம்ம‌ பிட் தளத்தையே எடுத்துக்கோங்க மாதாந்திரபோட்டிக்காக 1024 க்கு 768 அளவுலதான் படங்களை அனுப்பனும்ன்னு திட்டவட்டமா சொல்லுறாங்க இல்ல?

சரி இதுகுறித்து பிட்டில் ஏற்கனவே ராமலக்ஷ்மி அவர்கள் Irfanview ல் செய்வது குறித்து கட்டுரை எழுதியிருந்தார்களே என நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது நண்பர்களே!!, இருப்பினும் சமீபத்தில் சந்தித்த புகைப்படக்கலையில் ஆர்வமுள்ள நண்பர் ஒருவர் இதுகுறித்து போட்டோஷாப்பில் விளக்கமுடியுமான்னு கேட்டிருந்தார், Photoshop,Lightroom பயனாளர்களும் தெரிந்துகொள்ளட்டுமே என இக்கட்டுரையை உங்களுக்கு அளிக்கிறேன்.

சரி கட்டுரைக்கு வருவோம்,கீழேயுள்ள படமானது ஒரு இணையதளத்தில் அறிவிக்கப்பட்டிருந்த புகைப்படப்போட்டிக்கான விதிகளாகும்.அதில் நான் சிகப்பு கட்டங்கட்டி காட்டியிருப்பதைப் பற்றிய செயல்முறை விளக்கம் தான் இன்றைய கட்டுரையாகும்.

** 


முதலில் போட்டோஷாப்பை இயக்கி உங்களது படத்தினை திறந்துகொள்ளவும்,பின்னர் Edit<Image Size செல்லவும்.


 பின்னர் Resample என்பதன்டிக்” மார்க்கினை எடுத்துவிடவும்.

இப்போது Resolutionல் உங்களுக்கு தேவையான மதிப்பை தேர்ந்தெடுத்துக்கொண்டு OK செய்யவும். இக்கட்டுரையில் நாம் எடுத்துக்கொண்ட விதிகளின் படி 300 ppi ஆகும்.


இனி மீண்டும் ஒருமுறை Edit<Image Size செல்லவும் இம்முறை Resample என்பதனைடிக்” செய்துகொள்ளவும். இனி நமக்கு தேவை Longest Edge எது என்பதை தேர்ந்தெடுத்து அதன் மதிப்பை கொடுத்து படத்தினை ரீசைஸ் செய்யப்போகிறோம். இப்போட்டியின் விதிப்படி நமக்கு தேவையான அளவு Longest Edge 3300 Pixels ஆகும்.

ஒரு படத்தின்Longest Edge” என்பது படத்தின் அதிகப்படியான மதிப்பேயாகும்,அதாவது Landscape ஆக இருந்தால் Widht என்பது Longest பகுதியாகும். Portrait ஆக இருப்பின் Height என்பது Longest Edge ஆகும்.

கீழேயுள்ள படம் Portrait  படமென்பதால் நான் Height இன் மதிப்பை போட்டிக்கான விதிப்படி 3300 pixels ஆக கொடுக்கிறேன்,என்ன ஆயிற்று என்று பாருங்கள் ??.

என்னுடைய  Widht ன் மதிப்பை தானாகவே போட்டோஷாப் தீர்மானித்துக்கொண்டது. Landscape படமாக இருப்பின் உங்களது Widhtல்
 3300 pixels என கொடுக்கும் போது படத்தின் Height ஆனது போட்டோஷாப் தானாகவே தீர்மானித்துக்கொள்ளும்


கடைசியாக OK செய்யவும். அவ்வளவே போட்டிக்கான விதிமுறைகளின் படி  படம் தயார்.

நீங்கள் Lightroom பயன்படுத்துபவராக இருப்பின் இதில் மிக எளிமையாக உருவாக்கலாம். படத்தினை Lightroomல் திறந்துகொண்டு பின்னர் File<Export என்பதை தேர்வு செய்யவும்.



இப்போது தோன்றும் விண்டோவில் Image Sizing பகுதியில்Resize to Fitஎன்பதில்Longest Edge” என்பதனை தேர்வு செய்யவும் பின்னர்,Pixel பகுதியில் உங்களுக்கு தேவையான மதிப்பை கொடுக்கவும்,நம் கட்டுரையின் படி 3300 Pixels ஆகும். பின்னர் கடைசியாக Resolution என்பதனை 300 ஆக மாற்றிக்கொண்டு Export செய்துகொள்ளவும்.


இக்கட்டுரையை வாசிக்கும் Photoshop/Lightroom அல்லாதபயனாளர்களாக இருப்பின் பிட்டில் ஏற்கனவே இராமலக்ஷ்மி அவர்கள் எழுதியிருக்கும் Irfan view குறித்த பதிவையும் பார்த்துக்கொள்ளுங்கள்.
***

Wednesday, February 5, 2014

காலில் சக்கரங்கள் கட்டிய மாதிரி ஓடிக்கொண்டிருக்கிற மனிதரை சற்றே நிற்க வைக்கவும் ஆசுவாசப்படுத்தவும் செய்பவை கலையை விட வேறெதுவாக இருக்க முடியும்? நம்ம ஒளிப்படக் கலையையும் சேர்த்துதான்:)! கலைகளைக் கொண்டாட விரும்பித் தந்திருக்கிறார் தலைப்பை, இம்மாதப் போட்டி நடுவராகச் செயலாற்றவிருக்கும் ஐயப்பன் கிருஷ்ணன்.

சிற்பங்களும் ஓவியங்களும்

இதுதான் தலைப்பு.

இந்தப் போட்டியைப் பொறுத்தவரை, வடித்த சிற்பிக்கும் தீட்டிய ஓவியருக்குமே கெரெடிட் என்றால் நமது பங்கு என்ன?

அவர்கள் திறனை அழகாக உலகுக்கு எடுத்துக் காட்டுகிற விதத்தில்..

உங்கள் ஒளிப்படங்கள் அவர்கள் கலைத் திறனுக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக இருக்கப் போவதில்..

சிற்பங்களை பலவித கோணங்களில் எடுக்கலாமென்றாலும் ஒருவர் வரைந்த ஓவியத்தை அப்படியே படமாக்குவதில் என்ன சவால் இருக்கிறது என்கிற கேள்வியும் சிலருக்கு இருக்கிறது. பெரிய பெரிய கேன்வாஸ்களில் வரையப்படுபவற்றை ஸ்கேன் செய்வது நடைமுறையில் அத்தனை எளிதாக சாத்தியப்படாதிருக்க, பல ஓவியர்கள் தங்கள் படைப்புகளைச் சந்தைப் படுத்தவும், தங்கள் ஆல்பத்தில் சேமிக்கவும் இதற்கென்றே செயல்படும் புகைப்படக் கலைஞர்களின் உதவியை நாடியும் வருகிறார்கள். கலையும் கலையும் கைக்குலுக்கிக் கொள்வது போல ஓவியங்களை ஒளிப்படமாக்குவதும் புகைப்படக்கலையின் ஒரு தனிப்பிரிவாக ஆகிவிட்டிருக்கிறது.

ஓவியங்களை அதன் வண்ணங்களின் தன்மை கெடாமல், ஃப்ளாஷ் உபயோகிக்காமல், சரியான ஒளியில் எடுப்பதும் ஒரு சவால்தான். சுவரிலோ, மிக உயரத்தில் மாட்டப்பட்டிருப்பவற்றுக்கு சரியான கோணம் அமைக்க வேண்டும். முடிந்த வரை நேரான கோணத்தில் எடுத்துத் தரப்படுவதையே ஓவியர்கள் விரும்புகிறார்கள் என்றாலும் இந்தப் போட்டியில் அப்படிதான் இருக்க வேண்டுமென்பது அவசியமில்லை. ஓவியத்தில் கூடவே இரசிக்கும் நபரோ, தீட்டிய ஓவியரோ அல்லது தீட்டும் பொழுதில் எடுத்ததாகவோ கூட இருக்கலாம். அது கலந்து கொள்பவர் ரசனைக்கே விடப்படுகிறது. ஆனால் படத்தில் ஓவியம் கவனத்தை ஈர்க்க வேண்டும். தஞ்சாவூர் ஓவியங்களில் அதன் நுண்ணிய வேலைப்பாடுகள் வெளிப்படுமாறு படமெடுக்கலாம்.

பெரும்பாலும் சிற்பங்களை வடித்தவர் பெயர் நமக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான். ஆனால் ஓவியங்களை வரைந்தவர் பெயர் தெரிந்திருப்பின் அதை படத்தின் ஒரு ஓரத்தில் குறிப்பிடும்படிக் கேட்டுக் கொள்கிறோம். ஓவிய ஒளிப்படங்கள் ‘காபிரைட் பிரச்சனைக்கு உள்ளாகி விடாமல்’ பார்த்துக் கொள்வதோடு, கண்டிப்பாக நீங்கள் எடுத்ததாக இருக்க வேண்டுமென்பதைச் சொல்லத் தேவையில்லைதானே!

மாதிரிக்கு சில படங்கள்:

#1
#2


#3

#4

#5

 #6

#7


#8

போட்டி விதிமுறைகள் இங்கே.

படங்கள் வந்து சேரவேண்டிய கடைசித்தேதி: 20 - 2 - 2014



***
 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff