Sunday, January 31, 2010

சென்ற பகுதியில் pixelsஐ பற்றியும்,தேவைக்கும் அதிகமான பிக்சல்கள் அவசியமில்லை என்றும் பார்த்தோம்,அதே சமயம் அதிக பிக்சல்களின் தேவையும் சில நேரங்களில் உண்டு. .. PIXELSன் நன்மைகள், பல நேரங்களில் நாம் பொதுவாக படங்களை நம் தேவைக்கேற்ப CROP செய்வோம்..அப்படி CROP செய்யும் போது pixelsன் அளவு கண்டிப்பாக CROP ன் அளவிற்கேற்ப குறைந்து விடும்.. இதை கீழே உள்ள படங்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம்..இந்த பட்டாம்பூச்சியின் படம் 6 பிக்சல் கேமராவில் எடுத்தது. எந்தவித cropம் செய்யாமல் இருக்கின்றது, இதன் தற்போதய resolution 3008*2000 பிக்சல்கள் ஆகும். இதனால் நாம் 200 DPIயில் வைத்து ப்ரிண்ட் எடுத்தால் அதிகபட்சம் 15 X 10 இன்ச் சைஸ் வரை எடுக்கலாம்.. மேலே உள்ள முதல் படத்தில் குறிப்பிட்ட பகுதியை தவிர சில இடங்கள் தேவையில்லை என்று, இப்படி crop செய்யும் போது இதன் resolution 2448 X 1637ஆக தானாக குறைந்து விடும். எனவே, இதன் தற்போதைய பிக்சல் அளவு 4 MPயாக குறைந்து விடும். இதனால் நாம் இந்த படத்தை வைத்து 12 X 8 வரை தான் நல்ல குவாலிட்டியில் ப்ரிண்ட் போட முடியும்.. அந்த பட்டாம்பூச்சி மட்டும் போதும்,மற்ற பகுதி எதுவும் தேவையில்லை என்று இன்னும் crop செய்யும் போது இதன் resolution 1623 X 1083ஆக மேலும் குறைந்து, 1.5MP என்று ஆகிவிடும். இதனால் நம்மால் 6 X 4(maxi size) வரை தான் ப்ரிண்ட் எடுக்க முடியும். இந்த மாதிரி நேரங்களில் தான் நாம் பெரிய சைஸில் ப்ரிண்ட் போடுவதற்கு மேலும் அதிகமான pixels தேவைப்படும்.. சின்ன சைஸ் ப்ரிண்ட் போடும் போது கண்டிப்பாக தெரியாது.. அப்படி பெரிய சைஸ் ப்ரிண்ட் போடும் போது,pixel குறைபாடால் வரும் pixellate பிரச்சினையை கீழே உள்ள படத்தை பார்த்தால் புரியும். (க்ளிக் செய்து பெரிதாக பார்த்தால் திரித்தல் நன்றாக தெரியும்) அதே பட்டாம்பூச்சி படத்தை இன்னும் க்ளோசாக பார்க்க விரும்பி,இந்த அளவு க்ராப் செய்தால் படம் pixelattion,smudge (திரித்தல்) ஆகிவிடும். இதனால் படம் தெளிவாக இருக்காது. இது தான் பிக்சல் குறைவால் வரும் பிரச்சனை ஆகும்.. மெகாபிக்சல்கள் சில தகவல்கள்.
  • ஒரு குறிப்பிட்ட கேமராவில் 6MP ஒன்றும்,10MP ஒன்றும் இருந்து வேறு வித்தியாசங்கள் பெரியதாக இல்லாமல் அதன் விலை வித்தியாசம் மட்டும் அதிகமாக இருந்தால் 6MP கேமராவை வாங்கி பணத்தை மிச்சம் செய்வது நல்லது.
  • உதாரனமாக 6 MP nikon d40 கேமராவின் விலை rs.17000க்கு விற்றார்கள், கிட்டதட்ட 95% அதே மாதிரியுடைய 10MP nikon d40x கேமராவின் விலை rs.21-22000 க்கு விற்றார்கள்.. pixelக்காக மட்டும் கிட்டதட்ட 5000 ரூபாய் வரை அதிகம் என்பது நமக்கு தேவையில்லை.. அந்த பணத்தை நாம் மிச்சம் செய்து வேறு லென்ஸ் அல்லது வேறு accessories வாங்குவத்ற்கு பயன் படுத்தி கொள்ளலாம்..
  • pixels அதிகமாக அதிகமாக file சைஸ் அதிகரிப்பதால் download/upload செய்வதற்க்கு நேரமும் அதிகம் பிடிக்கும்.
  • 2 லட்ச ரூபாய் கொண்ட 18 MP கேமராவில் கொஞ்சம் out of focus ஆக எடுத்து பார்ப்பதை விட ,வெறும் 10,000 ரூபாய் 5 MP கேமராவில் clean shot ஆக எடுக்கப்படும் படமானது சிறந்ததாக இருக்கும்...எனவே picture quality என்பது எவ்வளவு pixels என்பதில் இல்லை,எடுப்பவரின் திறமையில் தான் உள்ளது..
  • ஒரு கேமராவை வாங்கும் முன் pixel ஐ மட்டும் முக்கியமாக பார்ப்பதை விட, கேமரா எவ்வளவு வேகமாகவும்,பயன் படுத்துவதற்கு எவ்வளவு ஈசியாகவும் இருக்கின்றது என்பதை தான் முக்கியமாக பார்க்க வேணடும்..
  • இனி வரும் காலங்களில் pixels என்பதை பார்க்கவே தேவையில்லை, ஏனென்றால் இப்பொழுது வருகின்ற விலை குறைவான கேமராக்களில் கூட குறைந்தபட்சம் 8 mega pixelsஆக தான் வருகின்றது..
  • குறைந்த அளவு pixels (8mp vs 10mp)வித்தியாசம் என்பது வெறும் வியாபர தந்திரமே....
நல்ல குவாலிட்டி படம் வேண்டும் என்றால் pixelsகளை விட முக்கிய பங்கு வகிப்பது sensor size தான்,அதை பற்றி அடுத்த பாகத்தில் பார்ப்போம்..

Wednesday, January 27, 2010

நாம் முதன் முதலில் கேமரா வாங்கும் போது எவ்வளவு megapixels கொண்ட கேமரா வாங்கினால் நல்லது என்று முடிவெடுக்க சற்று சிரமப்பட நேரிடலாம்.. உங்களுக்கு தெரிந்ததவரிடம் 6 mp உள்ள கேமரா இருக்கும்,அதனால் அதை விட இன்னொரு மடங்கு அதிகமான 12mp கேமரா வாங்கினால் அவர் வைத்திருப்பதை விட டபுள் குவாலிட்டி இருக்கும் என்று நீங்கள் 12 MP கேமரா வாங்க நினைக்கிறீர்களா? அது முற்றிலும் தவறு... MEGA PIXELS பற்றி கொஞ்சம் பார்ப்போம் . MEGA PIXELS என்பது MILLION PIXELS என்றும் அர்த்தம் ஆகும்..ஒரு கேமரா 6MP என்றால்,6 மில்லியன்(60லட்சம்) புள்ளிகள்/பிக்சல்கள் வரை அந்த கேமராவின் சென்சாருக்குள் பதிவு பன்னும் என்று அர்த்தம். உன்மையில் picture qualityக்கும் mega pixelsக்கும் சம்பந்தம் மிக குறைவே.. ஒரு படத்தை இரு வேறு pixelகளால்(6MP மற்றும் 12MP) படம் எடுத்து, ஒரு குறிப்பிட்ட அளவு வரை(8 * 12 இன்ச்) பிரிண்ட் போட்டு பார்த்தால் ஒரு வித்தியாசமும் நம்மால் கண்டுபிடிக்க முடியாது.. பொதுவாக ஒரு நல்ல குவாலிட்டி உள்ள 6*4 inch சைஸ் print போடுவதற்கு வெறும் 2 mega pixel கேமராக்களே போதும். இந்த சைஸில்(6*4) ப்ரிண்ட் போடுவதற்கு 2 mega pixel இருந்தாலும் ஒன்று தான்,24 mega pixel இருந்தாலும் ஒன்று தான். ப்ரிண்ட் சைஸ் மிக பெரியதாக போடுவதற்கு மட்டுமே அதிகமான mega pixels தேவைப்படும்..அதுவும் ஒரு நல்ல குவாலிட்டி உள்ள 6 mega pixel கேமராவிலேயே நாம் அழகாக 16*20 இன்ச் சைஸ் வரை எளிதாக போடலாம்.. 6 MP யின் டபுள் size என்பது 12 MP என்று நாம் நினைப்போம்..உன்மையில் அது தவறு.. உதாரனமாக 6MP என்பது, horizontal * vertical ஆக இரண்டாக பிரித்து 3000pixels * 2000pixels = 6000000pixels(6MP) என்று தான் அளவிடப்படும்.. எனவே இதன் இரண்டு மடங்கு என்பது 6000 * 4000 = 24MP என்பதே சரியாகும்.. 6mpயின் இரு மடங்கு என்பது 6mp * 2 times= 12mp என்று சொல்வது தவறாகும்... ஆகையால் 6MP க்கும் 12MPக்கும் மிக பெரிய வித்தியாசம் எதுவும் நாம் பயன்படுத்தும் நடைமுறையில் கண்டு பிடிக்க முடியாது..எனவே ஒரு கேமரா வாங்கும் போது 6 முதல் 10 MP என்பதே நம் நடைமுறை பயன்பாட்டிற்க்கு போதும்.. ஒரு சிலர் சிறிய சைஸ் ப்ரிண்ட் கூட போட மாட்டார்கள்..அவர்கள் computerல் மட்டுமே பார்க்க பயன்படுத்துவார்கள். அவர்களுக்கு இன்னும் குறைவான MP யே போதும்.. ஒரு 14 inch computer moniter ல் முழு அளவில் பார்ப்பதற்கு 2 MP என்பதே அதிகம். 21 இன்ச் மானிடரில் பார்ப்பதற்கு 4mp என்பதே போதும். ஏனென்றால் ஒரு நல்ல computer moniter என்பது 100 PPI/DPI யால் அளவிட படுகிற்து.. அல்லது ஒரு படத்தை computerல் பார்க்க 100PPI இருந்தால் போதும். PPI/DPI என்றால் என்ன? PPI என்றால் pixels per inch, DPI என்றால் dots per inch என்பதின் சுருக்கம்..இரண்டும் ஒன்று தான். அதாவது நாம் computerல் பார்ப்பதற்கு,பிரிண்ட் போட்டு பார்ப்பதற்கு,high quality மாத இதழ்களில் வெளிவருவதற்கு ஒரு இன்ச் சதுர அளவிற்கு குறைந்தபட்சம் தேவைப்படும் pixel மற்றும் dots(print resolution) அளவு என்பதாகும். இதை நாம் ஒரு படம் எடுத்து EXIFல் பார்த்தால் எத்தனை DPI உள்ளது என்று தெரியும் .. இது சில சமயம் 92dpi,300dpi என்று settingsற்கு தகுந்த மாதிரி மாறி இருக்க வாய்ப்புண்டு PPI/DPI எதற்கு? ஒரு 6 mp கேமராவில் படம் எடுத்தால்,அந்த படத்தில் 60 லட்சம் pixelகள்(6MP) இருக்கும். உதாரணமாக ஒரு 12 inch X 8 inch சைஸ் கொண்ட 14 இன்ச் computer மானிட்டரில் பார்க்கும் போது ஒரு இன்ச் சதுர அளவிற்கு குறைந்த பட்சம் 100 பிக்சல்கள்(100 PPI) இருந்தால் போதும். அதாவது 12 X 8(14inch monitor)ல் 12இன்ச்X 100pixels =1200 pixels 8இன்ச்X100pixels= 800 pixels மொத்தமாக 1200 X 800 = 9,60,000(0.96mp) பிக்சல்கள் இருந்தால் 14இன்ச் மானிட்டருக்கு போதும். ஆனால் நம்மிடம் 60 லட்சம்(6MP) பிக்சல்கள் உள்ளது. இதை வைத்து நாம் கிட்டதட்ட 20 X 30 இன்ச் சைஸ் வரை கொண்ட மானிடரில் கூட பார்க்கலாம் ஆனால்,100 pixels per inch இருந்தால் computer moniterக்கு மட்டும் தான் குறைந்தபட்சம் போதும் என்பது ஒரு கணக்கு.. இதுவே, நார்மல் குவாலிட்டி ப்ரிண்ட் போடுவதற்கு குறைந்தபட்சம் 150 PPI யும், நல்ல குவாலிட்டி ப்ரிண்ட் போடுவதற்கு குறந்தபட்சம் 200-250 PPI யும், magazine களில் ப்ரிண்ட் செய்வதற்கு குறைந்தபட்சம் 300PPI யும், தேவைப்படும். இதனால் நம் தேவைக்கேற்ப PPI or DPI calculationஐ gimp softwareல் அல்லது photoshopல் உள்ள print resolutionல் நாம் பார்த்து நமக்கு தேவையான பிர்ண்ட் சைஸை மாற்றிக்கொள்ளலாம்,தெரிந்து கொள்ளலாம் . PPI ஐ அதிகமாக்கினால் ப்ரிண்டின் அளவு குறைய தொடங்கும், ஆனால் நாம் எடுத்த இமேஜ் resolution(MP) என்பது குறையாது. PPI/DPI என்பதை வைத்து நம்மிடம் இருக்கும் pixelsன் அளவில் எந்த அளவு வரை பிரிண்ட் போடலாம் என்பதை தெரிந்து கொள்ள உதவும். உதாரணமாக, 6 MP கேமராவில் . EXIFல்100 PPI என்று இருந்தால், அதில் 20 * 30 இன்ச் வரை ப்ரிண்ட் சைஸ் வரை போடலாம் என்று calculationல் இருக்கும். இதுவே நல்ல குவாலிட்டி ப்ரிண்ட் போடுவதற்கு 200PPI தேவைப்படுவதால், நாம் PPIஐ settingsல் அதிகபடுத்தவேண்டும்..அப்படி அதிகபடுத்தும் போது automaticஆக அதிகபட்ச பிரிண்ட் சைஸ் அளவு 10 * 15 இன்ச் என்று குறையதொடங்கும். இதே 200DPI அளவில் இந்த அளவுக்கும் மேல் ப்ரிண்ட் போட வேண்டுமென்றால் PPI யின் அளவை குறைத்தால் தான் முடியும்..அப்படி குறைக்கும் போது பிரிண்ட் குவாலிட்டி கொஞ்சம் கொஞ்சமாக PPIயின் அளவுகேற்ப குறைய தொடங்கும்.இந்த மாதிரி நேரத்தில் தான் அதிக pixels தேவைப்படும்.. இது megapixelsன் அளவுகளுக்கேற்ப மாறுபடும். . கீழே உள்ள TABLE CHARTல் இதை பார்க்கலாம்.. FOR HIGH QUALITY PUBLISHING AND ADVERTISING

Print size (இன்ச்)

Print resolution

Image resolution

போதுமான MP

4 X 6

300 DPI

1800 X 1200

2.1 MP

5 X 7

300 DPI

2100 X 1800

3.2 MP

6 X 8

300 DPI

2400 X 1800

4.3 MP

8 X 12

300 DPI

3600 X 2400

8.6 MP

16 X 20

300 DPI

6000 X 4800

28.8 MP

FOR HIGH QUALITY PRINTING

4 X 6

240 DPI

1440 X 960

1.4 MP

5 X 7

240 DPI

1680 X 1200

2.0 MP

6 X 8

240 DPI

1920 X 1440

2.8 MP

8 X 12

240 DPI

2880 X 1920

5.5 MP

16 X 20

240 DPI

4800 X 3840

18.2 MP

FOR COMPUTER MONITOR AND GENERAL PHOTO PRINTING

8 X 12

100 DPI

1200 X 800

0.96 MP

16 X 20

100 DPI

2000 X 1600

3.2 MP

20 X 30

100 DPI

3000 X 2000

6.0 MP

24 X 36

100 DPI

3600 X 2400

8.64 MP

இதை தவிர இந்த calculationஐ gimp,photoshop போன்ற photo editing softwareகளில் உள்ள print resolution செட்டப்பில் நாம் பார்த்து தெரிந்து கொள்ளலாம். அதே சமயம் அதிக pixels என்பது தேவையில்லை என்று அர்த்தம் இல்லை..பிக்சல்ஸ்களால் சில நன்மைகளும் உண்டு,அதை பற்றி அடுத்த பாகத்தில் பார்ப்போம்.. அது வரைக்கும் போயிட்டு வாரனுங்.. -கருவாயன்.

Tuesday, January 26, 2010

வழக்கம் போல் இல்லாமல், கொஞ்சம் வித்யாசமாய், ஏதாவது ஒரு சிறுகதைக்கு அந்தக் கதையின் கருவின் முன்னிறுத்தி ஒரு புகைப்படம் அனுப்பணும்னு இம்மாதப் போட்டியில் தெரிவித்திருந்தோம். புதிய முயற்சி என்பதாலோ, அல்லது, எனக்கு வேலை சுலபமாக இருக்கட்டும் என்ற நல்ல மனமோ, அல்லது, எல்லாரும் லீவெல்லாம் முடிஞ்சு இன்னும் சுறுசுறுப்பாய் வருடத்தைத் துவங்க ஆரம்பிக்காததாலோ தெரியவில்லை, இந்த மாசம் கொஞ்சம் பேருதான் கோதால இறங்கியிருக்காங்க. மொத்தம் பனிரெண்டு படங்கள், போட்டியில், அதில், ஹோம் வொர்க் (ஸ்ரீதேவி), கதைக்கு ஒரு படமும் வெள்ளை உருவத்தில் ஓர் வில்லன் (பின்னோக்கி) என்ற கதைக்கு நாலும்,
கடைசி இரவு (ராம்குமார் அமுதன்) என்ற கதைக்கு மூன்று படங்களும்,
கறுப்பு ஞாபகம் (ஆதிமூலகிருஷ்ணன்), என்ற கதைக்கு ஒரு படமும் நெல்லி மரம் (சதங்கா) கதைக்கு ஒரு படமும், சட்டை (முரளிகண்னன்), கதைக்கு இரண்டு படங்களும்,
நல்லாருக்குல்ல படங்களெல்லாம்? கதையின் கருவை உள்வாங்கி, அதற்கேற்றாற்போல் படத்தை எடுத்து அனுப்பிய அனைவருக்கும் நன்றிகளும் பாராட்டுகளும். பாதி கிணறு அங்கையே தாண்டியாச்சு. சிறுகதைக்கு படம் எடுத்தா, வெறும் படம் எடுத்ததோடு வேலையை முடித்துவிட முடியாது. அது பத்திரிகையிலோ இணையதளத்திலோ அரங்கேற்றணும்னா, கொஞ்சமா பிற்தயாரிப்பும், பிற்சேர்க்கைகளும் சேக்கணும். குறைந்த பட்சம், கதையின் பெயரையாவது இணைத்தல், படத்துக்கு கூடுதல் பஞ்ச் தந்துவிடுகிறது. முக்கால் வாசி கிணறு இப்படித் தாண்டலாம். இன்னும், கால்வாசிதான? இதை உங்கள் தனித்துவத்தை நிலைநாட்டும் விதத்தில், புதிய வித்யாசமான கோணத்தில், இதுவரை யாரும் அதிகமாக புழக்கத்தில் கொண்டுவராத விஷயத்தை சப்ஜெக்ட்டாக்கி க்ளிக்குவதுதான், ஒரு வெற்றிப் படத்தை உருவாக்கும். இப்படி, முழுக்கிணறும் தாண்டியது யாரு?(ஸ்ஸ்ஸ், அப்பாடி, கணக்கு சரியா வந்தாச்சு ஒரு வழியா) மேலே உள்ள படங்களை ஒரு முறை மேலிருந்து கீழாக பார்த்தாலே, உங்களுக்குத் தெரிந்துவிடும். ஜனவரி 2010 PiT போட்டியின், முதல் இடத்தைப் பெறுபவர் - T.Jay. 'கறுப்பு ஞாபகம்', போதையில் தன்னை மறந்து குழம்பும் ஹீரோவின் கதை. கதைக்குத் தேவையான மது பாட்டிலும்; கம்ப்யூட்டர் மானிட்டரை பொத்துக் கொண்டு வந்து சொட்டும் wineம், உடைந்த கோப்பையும், ஹீரோவின் பிம்பமும், ஒரு கீறலான படத்தின் அமைப்பும், அருமையாக படத்துக்கு வலுவூட்டுகிறது. வாழ்த்துக்கள் T.Jay. ரொம்ப சிரத்தை எடுத்து செதுக்கியதற்க்கு நன்றியும் பாராட்டுக்களும்!2 இரண்டாவது இடத்தை தேர்ந்தெடுப்பதில் சிறு குழப்பம். அவரா, இதுவா என்ற குழப்பம். இரண்டுக்கும் கிட்டத்தட்ட ஒரே மார்க்குதான் என்றாலும். சப்ஜெக்ட்டில், அவரை விட, அது இருப்பது, ஃபோட்டோகிராஃபரின் பொறுமையை ஒரு இன்ச் அதிகம் காட்டுகிறது. படத்துக்கும் ஒரு இன்ச் மதிப்பை அதிகம் கூட்டுகிறது. so, 'வெள்ளை உருவத்தில் ஓர் வில்லன்' கதைக்கு அருமையா நீலக் கலர் கண்ணுடன் முறைக்கும் வெள்ளைப் பூனையாரை க்ளிக்கிய Kamalன் படத்துக்கு இரண்டாவது இடம். சிறப்பு கவனத்தைப் பெறுபவர், நம்ம ஒப்பாரி. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் நன்றீஸ். பி.கு: குழுப்போட்டியாளர்கள், என்ன பண்றீங்கன்னு, அப்பப்ப தகவல்களை பகிர்ந்த வண்ணம் இருத்தல் நலம். நன்றி.

Monday, January 25, 2010

PiTன் Flickr groupஐ பற்றி தெரிந்திருக்கும். புகைப்பட ஆர்வலர்கள் யார் வேண்டுமானால் இணைந்து, தங்களின் சிறந்த படைப்புகளை மற்ற ஆர்வலர்களுக்குக் காட்சியாக்க உதவும் வழி இது.
மாதாந்திர போட்டிகள், ஒரு 'தலைப்பு'க்குள் இயங்கும், ஆனால், இந்த Flickr groupல் நீங்கள் சமீபத்தில் க்ளிக்கி, உங்களுக்கு ரொம்பவே பிடித்துப் போன படங்களை சேர்த்து, மற்றவர்களின் 'ஆஹா/ஓஹோ'க்களையோ, 'ஹ்ம்/நல்லால்லை'க்களையோ பெறலாம்.

இதுவரை பலரும் இணைந்து, பலப்பல படைப்புக்களை அனுப்பியுள்ளார்கள். அனைத்தையும் பார்க்க, இங்கே சொடுக்கவும்.

இனி வரும் வாரங்களில், சமீபத்தில் வந்திணைந்த படங்களில், வெகுவாய் கவர்ந்த ஏதாவது ஒரு படத்தை, 'இந்த வாரப் படம்' என்ற தலைப்பில் பதிவேற்றலாம் என்று இருக்கிறோம்.

இந்த வரிசையில், ஃப்ளிக்கர் பக்கத்தை திறந்ததும் 'வணக்குமுங்கோ' என்று பணிவாய் எழுந்து நின்று வணக்கம் சொன்ன Dharanendra Momayaவின் Spidy முதலில் இடம்பிடிக்கிறது.


அருமையான க்ளிக்கு Dharanendra!

Spidy.......!

இதுவரை flickr groupல் இணையாதவர்கள், இங்கே க்ளிக்கி இணையலாம்.

சில ஊர்களில், Flickr வேலை செய்யாது என்பது வருத்தமான உண்மை. அந்த ஊர்களில், http://www.flickr.com என்பதர்க்கு பதிலாக http://www.flickr.mud.yahoo.com/ என்று முயன்று பார்க்கலாம்.

PIT Group - View this group's photos on Flickriver

மீண்டும் சந்திக்கும் வரை.. பை பை..

-சர்வேசன்

Thursday, January 21, 2010

இவ்வகையான சட்டங்கள் உங்களுக்குப் பிடித்து இருக்கிறதா ? வெறும் ஒரே வண்ணத்தை உபயோகிக்காமல், உங்களது படத்தையே கொஞ்சம் மங்கலாக்கி பயன்படுத்தும் இந்த Blur Frame களை கிம்ப்/போட்டோஷாபில் செய்வது எளிது. அதை பிகாஸாவில் இன்னும் எளிதாய் செய்வது பற்றி இங்கே. உங்கள் படத்தை முதலில் நகலெடுத்துக் கொள்ள வேண்டும். படத்தை தேர்ந்தெடுத்து File -> Save a Copy அமுக்கினால், பிகாஸா நகலெடுத்துக் கொள்ளும். பிண்ணனிக்காக இரண்டில் ஏதாவது ஒரு படத்தை மங்கலாக்க Effects -> Soft Focus தெரிவு செய்ய வேண்டும். படத்தில் உளளவாறு Size பொத்தானை முற்றிலும் இடது புறத்துக்கு தள்ளி விடுங்கள். Amount எந்த அளவிற்கு வலது புறம் தள்ளப் படுகிறதோ அந்த அள்விற்கு படம் மங்கலாகும். மக்கலான படத்தை கொண்டு Collage பொத்தானை அமுக்கி, Picture Pile மற்றும் Background Options: Use Image தேர்ந்து எடுங்கள். பிண்ணனி சரியாக வந்து இருக்கும். இனி முண்ணனியில் இருக்கும் குட்டிப் படத்தை அழித்து விடலாம். Clips பகுதியில் மங்கலாகத படத்தை சேர்த்துக் கொள்ளுங்கள். படத்துக்கு தகுங்ந்தவாறு பக்கவாட்டிலோ( Landscape ) அல்லது நேர்வாட்டிலோ ( Portrait) படத்தை திருத்துக் கொள்ளலாம். படத்தின் மீது கிளிக்கி உங்களின் விருப்பத்தற்கு ஏற்ப பெரியதாய்/சிறியதாய் விரும்பிய கோணத்தில் மாற்றிக் கொள்ளலாம். Picture Borders பகுதியில் வேண்டுமானல் ஒரு உட்புற வெள்ளை சட்டத்தையும் இணைத்துக் கொள்ளலாம். அல்லது உட்புற சட்டம் ஏதும் இல்லாமலும் விட்டு விடலாம். Create Collage பொத்தானை அமுக்கினால் ... Collage அடவைக்குள் படம் ரெடி! அம்புட்டுத்தான் மேட்டர். !

Wednesday, January 20, 2010

எந்த கேமரா வாங்கலாம்??..தலைய பிச்சிக்கலாம் போல இருக்குதா? டிஜிட்டல் புரட்சி வந்தாலும் வந்தது..ஒவ்வொருத்தரும் இந்த குட்டி செல்போன் ஐ வெச்சுக்கிட்டே போட்டோ எடுக்குறதுங்கற பேர்ல ஓவர் அலும்பு பன்றத பார்த்தா, புதுசா கேமரா வாங்க போற நமக்கு எவ்வளவு இருக்கனும்ன்னு நெனைப்போம் இல்லையா? ஒரு சிலர்,பணம் வேற சேர்த்து வெச்சிருப்பாங்க,ஒரு சிலருக்கு அவுங்க பெற்றோர்களோ அல்லது உறவினர்களோ பரிசளிக்க விரும்பி, கேமரா வாங்குற முடிவை மட்டும் உங்ககிட்டயே விட்டிருப்பாங்க. பொதுவா பெரும்பாலான மக்கள் இந்த மாதிரி நேரத்துல நல்ல முடிவு எடுக்க ரொம்பவே சிரமப்படுவாங்க.. என்னிடம் ஒரு நண்பர் எந்த கேமரா வாங்குவது என்று கேட்டார்.ஒரே கம்பெனி,ஆனால் வெவ்வேறு மாடல்கள் சொல்லி ஒன்றின் விலை ரூ.9000 என்றும் மற்றொன்று ரூ.12500 என்றும் சொன்னார்.. விலை கூடுதலாக இருப்பதால் அதில் பலன் இருக்கும் என்று கடைக்காரர் சொன்னதால் அதையே வாங்குவதகாவும் கூறினார். ஆனால் அந்த இரண்டு கேமராக்களுக்கும் உள்ள வித்தியாசம் என்பது மிகவும் குறைவே..அதுவும் அவருக்கு தேவையில்லாத பயன்பாடு..இதற்காக கூடுதலாக ரூ.3500 என்பது worthஆ என்றால், இல்லை.. எனவே நான் அவரிடம் பழைய மாடலையே வாங்கச்சொன்னேன். கடைக்காரங்களையும் நம்ப முடியாது,ஏன்னா அவுங்க எப்பவுமே நல்ல கேமராவை விற்பதை விட நல்ல லாபத்தையே எதிர்பார்பாங்க. ஊருல ஏகப்பட்ட மாடல்கள் இருக்கு..தினமும் புதுசு புதுசா ஒன்னு வந்துகிட்டே இருக்கு..இதுல எது நல்ல BRAND கேமரான்னு ஒரே குழப்பமா இருக்கும் ,அதுல வேற எந்த மாடல் வாங்கறதுன்னும் குழப்பமா இருக்கும் .. அப்படி பொதுவா வர சில குழப்பங்கள்.. 1.என்ன வகை பிராண்ட் கேமரா வாங்கலாம்? 2.புதுசு புதுசா features வருது ,அதெல்லாம் தேவையா? 3.எந்த கேமரா வாங்கினா குவாலிட்டியா இருக்கும்? 4.சின்னதா வாங்கலாமா அல்லது பெருசா வாங்கலாமா? 5.எத்தனை PIXELS வாங்கலாம்? 6.லென்ஸ் எது வாங்குவது? 7.OPTICAL ZOOM,DIGITAL ZOOM என்றால் என்ன? இந்த மாதிரி குழப்பங்கள் தீர எனக்கு தெரிஞ்சத,படிச்சத,புரிஞ்சிக்கிட்டத உங்களுக்கு உதவவே இந்த கட்டுரை.. பொதுவா கேமராவில் 4 வகை உள்ளது..அது என்னன்னு பார்ப்போம், 1.BASIC COMPACT CAMERA. 2.ADVANCED COMPACT CAMERA. 3.PROSUMER அல்லது SUPER ZOOM CAMERA. 4.DSLR CAMERA. இதுல எந்த டைப் வாங்கலாம், இதுல உள்ள நல்லது,கெட்டது, எந்த மாடல் நல்லது, அப்படிங்கறதுக்கு முன்னாடி , கேமரா வாங்கிறவங்க அடிப்படையா கீழ் கண்டுள்ளவற்றை கொஞ்சம் யோசிக்கவேண்டியுள்ளது.. அது என்னன்னா,,, 1.எந்த வகையான படம் எடுக்க விருப்பம் உள்ளவர்.. ஒரு சிலர், எல்லா சிறப்பு அம்சமும் வேணும், அதே சமயம் நல்ல குவாலிட்டியாகவும் வேணும் ,,நல்ல ஸ்பீடா எடுக்கணும், தூரத்துல இருக்கிறத தெளிவா எடுக்கணும், அப்படின்னு விருப்ப படுவாங்க. இவங்களுக்கு DSLR வகை கேமராக்கள் சிறந்தது.. ஒரு சிலர், மேல சொன்ன ஏதாவது கொஞ்சம் முன்ன பின்ன இருந்தாலும், இல்லைனாலும் பரவாயில்ல..அப்படின்னு விருப்ப படுவாங்க..இவங்களுக்கு PROSUMER அல்லது ADVANCED COMPACT வகை கேமராக்கள் சிறந்தது.. ஒரு சிலர்,எப்பவாவது தான் போட்டோ எடுப்போம்,அதுக்கு சிம்பிளா, கேமரான்னு ஒன்னு இருந்தா போதும்னு நினைப்பாங்க..இவங்களுக்கு BASIC COMPACT வகை கேமராக்கள் போதும்.. இதுல நீங்க எந்த வகைன்னு முதல்ல முடிவு பண்ணனும்.. 2.பட்ஜெட் . அடுத்து முடிவு பண்ண வேண்டியது நம்மளோட பட்ஜெட்.. சுருக்கமா சொன்னா..நம்ம பட்ஜெட் என்னவோ..அதுக்கு தகுந்த மாதிரி தான் கேமரா கிடைக்கும்.. நல்ல கேமரா வேணும்ன்னா கொஞ்சம் அதிகமா பட்ஜெட் ஒதுக்கி தான் ஆகனும்,அதுக்கு பட்ஜெட் பத்தலைன்னா ஒரே வழி,கொஞ்சம் வெயிட் பன்னி பணம் சேர்த்து வைத்து பின் நல்லதா வாங்கலாம்.. அதே சமயம்,அதிக விலையுள்ள கேமாராக்கள் எல்லாம் நல்ல கேமரா என்று கண்டிப்பாக கிடையாது.. விஜய் மாதிரி,ஒரு தடவ பட்ஜெட் முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன் அப்படின்னா, ரஜினி படத்துல சொல்லற மாதிரி, அளவுக்கு அதிகமா ஆசை படறவங்க,அவசர படறவங்க நல்லதா போட்டோ எடுத்ததா சரித்திரமே இல்லை..அதனால கொஞ்சம் பொறுமையா இருந்து சேர்த்து வைத்து வாங்குவது புத்திசாலிதனம்.. 3.கேமரா செலக்ட் பண்ணுவதற்கான வழிமுறைகள் ... உங்களுக்கு அடிப்படையா எது முக்கியமான தேவைன்னு முடிவு பண்ணினதுக்கப்புறம் உங்கள் தேவைக்கு உட்பட்ட மாதிரி மட்டும் இருக்கிற நல்ல கேமராவை செலக்ட் பண்ணிக்கலாம்.. உதாரணமா உங்களுக்கு கை அடக்கமா, பாக்கெட்டுக்குள்ள வெக்கற மாதிரி வேணும்ன்னு முடிவு பண்ணிட்டா, முதல் வகை கேமரா (பேசிக் காம்பக்ட்) சிறந்தது..அதுக்கப்புறம் அதுல,என்ன மாடல் வாங்கறதுன்னு முடிவு பன்னலாம்..உதாரணம் (CANON,or PANASONIC,etc) அதே சமயம்,மின்னுவதெல்லாம் பொன்னல்ல..பார்ப்பதற்க்கு அழகா இருக்கும் கேமரா எல்லாம் நல்ல கேமரா என்று கிடையாது.. ஒரு கேமராவின் உண்மையான இமேஜ் குவாலிட்டியை LCD screenல் வரும் ரிசல்ட்டை வைத்து மட்டும் எவராலும் முடிவு செய்யமுடியாது. அந்த மாதிரி பார்க்கவும் கூடாது.. ஒரு LCD screen ல் வரும் படம் என்பது அந்தந்த கேமராவுக்கு தகுந்த மாதிரி calibrate செய்யபட்டு அதிகபடியான resolution,sharpness கொடுக்கும். இதனால் சில மோசமான படங்களும் தெளிவாக தெரியும்.. மேலும் LCDன் அளவு சிறியதாக இருப்பதால் உண்மையான கலர், ஷார்ப்னெஸ் இவற்றையெல்லாம் கண்டுபிடிப்பது மிகவும் சிரமம். ஒரு சில கேமராக்களின் LCD screen என்பது ரொம்பவும் குவாலிட்டியாக இருக்கும்,ஆனால் கேமரா சுமாராக இருக்கும்..LCD ல் படம் அருமையாக தெரியும்..இதன் உண்மையான ரிசல்ட் என்பது computer monitorல் பெரியதாக பார்க்கும் போது தான் தெரியும்.. இரண்டிற்க்கும் சம்பந்தமே இருக்காது. எனவே ஒரு கேமராவின் LCD அழகை மட்டும் பார்க்க கூடாது.. உங்களுக்கு தேவையான சைஸ் முடிவு பண்ணினதுக்கு அப்புறம், நீங்கள் விருப்ப படும் கேமரா மாடல் ஐ பற்றிய விமர்சனங்களை புத்தகங்கள்,இன்டர்நெட் வழியாக நன்றாக அலசி ஆராயவும்.. சிறந்த வெப் தளங்கள், 1.www.dpreview.com 2.www.dcresource.com 3.www.imaging-resource.com 4.www.steves-digicams.com 5.www.kenrockwell.com (நான் மிகவும் விரும்புவது) குறிப்பிட்ட ஒரு மாடல் பிடித்தாலும்,உங்கள் தேவைக்கு ஏற்ப அதே மாதிரி உள்ள வேறு மாடல் ஐ பற்றியும் நன்றாக படிக்கவும்.. மேலும், நீங்கள் வாங்க விரும்பும் கேமரா மாதிரி யாராவது வைத்திருந்தால்,அவர்களதுடைய கருத்துக்களையும், அனுபவங்களையும் கேட்டு தெரிந்து கொள்ளவும்.. அதே சமயம், இதை வைத்து மட்டும் முடிவு பண்ண வேண்டாம்.. ஏனென்றால் அவர்களும் உங்களை மாதிரி புது கேமரா வாங்குபவராக கூட இருக்கலாம்.. ஏற்கனவே சொன்ன மாதிரி உங்க பட்ஜெட் ஐ நன்றாக பிளான் செய்யவும்.. பட்ஜெட்டுக்கு கொஞ்சம் அதிகமாக வந்தால், பட்ஜெட்டுக்காக குவாலிட்டி கம்மியான கேமராவை வாங்க வேண்டாம்.. ஒரு மாதமோ,மூன்று மாதமோ வெயிட் பண்ணி காசு சேர்த்து வைத்து வாங்குவதே சிறந்ததாகும்.. நீங்களே நேரடியா தொட்டு,பயன்படுத்தி வாங்கவும்.. ஒரு சிலருக்கு கை கொஞ்சம் நடுங்கும், ஒரு சிலருக்கு கை பெரிதாகவோ,சிறியதாகவோ இருக்கும்.. அதனால அந்த கேமரா சைஸ் உங்களுக்கு சரியாக உள்ளதா என்று சரி பார்த்த பின்னரே வாங்குவது புத்திசாலி தனம்.. ஏனென்றால் உங்கள் தேவைகளை உங்களை விட யாரும் சிறப்பாக புரிந்து கொள்ள முடியாது.. இனி,எத்தனை pixelகள் வாங்குவது என்பதை பற்றி அடுத்த பாகத்தில் பார்ப்போம்.. இப்போதைக்கு போய்ட்டு வரட்டுங்களா.. நன்றி, கருவாயன்..

Friday, January 15, 2010

திருமணப் புகைப்படம் மற்ற எல்லா புகைப்படங்களைப் போலத்தான். ஆனால் நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்.
  • இது வாழ்வின் ஒருமுறைக்கான நிகழ்வு. எனவே ஒவ்வொரு நிகழ்வும் மிக முக்கியமானவை. தவறவிட்ட தருணங்கள் மீண்டும் கிடைக்காது. ஆகவே மிகவும் கவனம் தேவை.
  • மொத்தக் குடும்பமும் உங்களை நம்பி இருக்கிறது. ஆகவே முடிந்தால் இரு குடும்பத்தினரின் முக்கியமானவர்களிடம் ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே பழகி சினேகபாவம் வளர்த்துக் கொள்ளுதல் நலம். கூடவே தவற விடக்குடாத முக்கிய ஆட்கள் என்று தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். பாட்டி, மாமா மாமி என்று. அது உங்களின் மேல் அவர்களுக்கு நம்பிக்கை வளர்ப்பதோடு நிகழ்ச்சியில் அவர்கள் சிறப்பாக ஒத்துழைக்க உதவும். கூடவே எது போன்ற புகைப்படங்கள் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று ஒரு பட்டியலை செய்து கொள்ளுங்கள்.
  • உதாரணத்துக்கு என்னுடைய திருமணத்தை புகைப்படம் எடுத்தவர் மிக முக்கியமான ஒருவரை புகைப்படம் எடுக்க தவற விட்டுவிட இன்றும் அது ஒரு புள்ளியாக நிற்கிறது.
  • புகைப்படம் எடுக்கும் இடத்தை ஏற்கனவே ஒருமுறை சென்று பார்த்து பழகிவிட்டால் எந்த இடத்தில் நிறுத்தி மணமக்களை புகைப்படம் எடுக்க ஏதுவாக இருக்கும் என்று தேர்வு செய்ய வசதியாக இருக்கும்.
  • உங்களிடம் இருக்கும் கேமரா ஒன்று மட்டுமே போதும் என்று முடிவு செய்து விடாதீர்கள். கூட ஒன்று வைத்துக் கொள்ளுங்கள் கடன் வாங்கியாவது. ஏற்கனவே சொன்னது போல் இது வாழ்கையில் ஒருமுறை நடக்கும் நிகழ்ச்சி. இந்த கேமரா எதாவது பிரச்சினை செய்தால் அடுத்தது உதவியாக இருக்கும்.
  • பேட்டரி, மெமரி கார்ட் & சார்ஜர் எல்லாம் ஒரு ஸ்பேர் வைத்துக் கொள்ளுங்கள்.
  • மணமக்களை புகைப்படம் எடுக்கும் போது அவர்களின் முகத்தை & கண்களை போகஸ் செய்து எடுக்கவும். முகபாவம் துல்லியமாகத் தெரிய உதவும்.
  • ஏற்கனவே நீங்கள் எடுத்த புகைப்படங்களில் சிறந்தவைகளை ஆல்பமாகத் தொகுத்து அவர்களுக்கு காண்பிக்கலாம். அது உங்களின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும்.
  • முக்கியமாக உங்களின் ஈடுபாடும் கூடவே க்ரியேட்டிவிட்டியும். ப்ளாஷ் அடிச்சு எல்லாரும் போட்டோ எடுத்துவிடலாம். நன்றாக எல்லாரும் கவரும் வகையில் எடுக்க வேண்டும்.
  • மணமக்களை தனியாக நிறுத்தி எடுக்கும் போது வெறுமனே இப்படி அப்படி என்று போஸ் கொடுத்து எடுக்கச் சொல்லாமல் முகபாவம் சிறப்பாக அமையும் படி சிறு சிறு ஜோக்குகள், கிண்டல்கள் என்று ஆரம்பித்தால் புகைப்படம் வெறும் புகைப்படமாக இல்லாமல் உயிரோட்டமாக இருக்கும்.
  • மணமக்களை மட்டுமே இல்லாமல் அங்கே ஓடியாடும் குழந்தைகளையும் கவனியுங்கள். அவை ஆல்பத்திற்கு மேலும் மெருகேற்றும் ஒன்றாக இருக்கும். முடிந்தால் ஒரு துணை புகைப்படக்காரரை வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பக்கம் மணமக்களை எடுத்துக் கொண்டிருக்கையில் அடுத்தவர் மற்றவர்களை, குழந்தைகளை என கவனித்து எடுக்க உதவும்.
  • முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று, புகைப்படம் எடுப்பது உங்கள் தொழில் அதே நேரத்தில் மணமக்களை அல்லது விழாவில் உள்ளவர்களை தொந்தரவு செய்வது இல்லாமல் எடுக்க வேண்டும்.
  • ஃப்ளாஷ் / விளக்கின் வெளிச்சம் ரொம்ப ஹார்ஷாக முகத்தின் மீது விழுவதை தவிர்க்கவும். முடிந்தால் டிஃப்யூசர் உபயோகிங்கள்.
  • முடிந்தால் ரா (RAW ) பார்மாட்டில் புகைப்படம் எடுக்க முயலுங்கள். கொஞ்சம் அதிகப் படியான வேலை தான் ஆனாலும் சில கருப்படித்த படங்கள் ஆனால் முக்கிய படங்கள் எல்லாம் சரி செய்து திரும்ப பெற உதவும்.
  • ஒரே ஆங்கிள்,ஒரே பெர்ஸ்பெக்டிவ் என இருக்காமல் வித்தியாசமாக முயன்று பாருங்கள்.
  • மோதிரம் போடுதல், மங்கல நாணை பிடித்திருக்கும் நாத்தியின் கை என சின்ன சின்ன விஷயங்களை க்ளோசப்பில் எடுக்கலாம். அட்டகாசமாக இருக்கும். இரண்டாவது ஆள் இந்த நேரத்தில் உதவலாம்.
  • பிண்ணனியில் கவனம் செலுத்துங்கள். பேக்ட்ராப் சீலைகள் சில கைவசம் வைத்திருங்கள். மணமக்களை தனியாக புகைப்படம் பிடிக்க உதவும்.
  • குழு புகைப்படம் எடுக்கும் போது கஞ்சி போட்ட மாதிரி விரைப்பாக இருப்பார்கள் நம் ஆட்கள். முடிந்தால் அதை மாற்றி கல கலப்பான சூழல் உருவாக்கப் பாருங்கள்.
  • பொறுமை மிக அவசியம். கல்யாண வீட்டை சேர்ந்தவர்கள் சற்றே இப்படி அப்படி உங்களை விரட்டலாம், பொறுத்துக் கொள்ளுங்கள், அவர்களுக்கு விளக்குங்கள் இப்படி அவர்கள் விரட்டுவதால் புகைப்படங்கள் சரியாக வராமல் போகக் கூடிய வாய்ப்புகளை. அதே நேரம் முக்கியமானவற்றை தவற விடக் கூடாது.
  • எடுத்த புகைப்படங்களை சரியில்லை என்றால் அவ்வப்போதே அழித்து விடாதீர்கள். அவை பெரிய திரையில் வேறு பெர்ஸ்பெக்டிவ் தரலாம்.
  • கடைசியா... மாத்தி யோசிங்க. ஒரே மாதிரி எடுக்காதீங்க
  • கல்யாணத்தில் தாலி கட்டும் நேரத்தில் மணமக்களை சுற்றி கண்டிப்பாக கூட்டம் இருக்கும் . அந்த மாதிரி நேரத்தில் நமக்கு viewfinderல் பார்த்து போட்டோ எடுப்பது சற்று சிரமமாக இருக்கும். ஆகையால் முடிந்த அளவு live view கேமராவை பயன்படுத்துவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்..அதுவும் TILT LCD ஆக இருந்தால் மிகவும் நல்ல உபயோகம்..மற்ற சொந்தங்களை தொந்தரவு செய்யாமல் நின்று கொண்டே எடுக்க உதவியாக இருக்கும். இப்போதைக்கு சந்தையில் nikonஐ பயன்படுத்துவோருக்கு nikon d5000 ஒரு நல்ல உபயோகம். இந்த கேமராவின் விலை ஆரம்பத்தில் அதிகமாக இருந்தது .இப்போது அமெரிக்காவில் இந்த கேமரா கிட் லென்ஸ் உடன் சுமார் rs.25000ற்கு(refurbished..americaவில் refurbished என்பது 95-99% புதியதே) இந்த சைட்டில் கிடைக்கின்றது.விலை மிகவும் குறைவாக தெரிகிறது..யாராவது அமெரிக்காவில் இருந்து தெரிந்தவர்கள் வந்தால் இந்த வாய்ப்பை பயன் படுத்திக்கொள்ளவும்.
  • http://www.adorama.com/INKD5000R.html
  • எப்படியும் இரண்டு அல்லது மூன்று ஆல்பம் போடுவது இப்போது சகஜம்..ஆனால் நான் அதிகம் பார்த்த வரையில் நெருங்கிய சொந்தங்களின் படங்களும்,சாதாரன அழைப்பாளர்களின் படங்களையும் ஒன்றாக வைத்து ஒரு order இல்லாமல் ஆல்பத்தில் ஒட்டி வைக்கப்பட்டிருக்கும்.. இதனால் சொந்தங்கள் தங்களுடைய போட்டோக்களை கண்டுபிடிப்பதில் மிகவும் சிரமப்படுவர்..எனவே மணமகன்/ள் படங்கள்,முக்கிய நிகழ்வுகள், நெருங்கிய சொந்தங்கள்,முக்கிய நண்பர்கள்,மணமக்களின் outdoor படங்கள்,போன்றவற்றை மட்டும் பெரியதாக ஒரு ஆல்பமும்,மற்றவர்களின் படங்களை ஒரு ஆல்பமாகவும் போட்டால் நன்றாக வரும்.
  • முடிந்த அளவு outdoor போட்டோ(திருமனத்திற்க்கு பிறகு) எடுக்கும் போது மணமகனை,முடிந்தால் மணமகளையும் t-shirt போன்ற கேஷுவல் உடைகளை போட்டு படம் எடுத்தால் மிகவும் நன்றாகவும் சற்று வித்தியாசமாகவும் இருக்கும்.

Thursday, January 14, 2010

வணக்கம் மக்கா, அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ! இன்னைக்கு நம் படங்களில் வரும் இரைச்சலை(noise) நீக்குவதுன்னு எப்படின்னு பாப்போம். இரைச்சலை போக்குவதற்கு பல நீட்சிகள் இணையத்தில் உள்ளன. எடுத்துகாட்டு - "NoiseWare", "Neat Image" "Dfine". எல்லா நீட்சிகளும் பெரும்பாலும் ஒரே மாதிரி தான் இயக்க வேண்டி இருக்கும். மேலே சொன்ன நீட்சிகளில் "NoiseWare-Community Edition" இலவசமா கிடைக்கும். நம் பயன்பாட்டிற்க்கு இந்த நீட்சியே போதுமானது. முதலில் இந்த நீட்சியை தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள். கீழே உள்ள படத்தில் கொஞ்சம் இரைச்சல் இருகின்றது(குறிப்பாக Background ) பின்னர் உங்களுடைய படத்தினை இந்த நீட்சியில் திறந்து கொள்ளுங்கள் இந்த நீட்சியில் இடது புறத்தில் இரைச்சலை நீக்குவதற்கு பல அளவுகள் கொடுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் "Default" செட்டிங்கை நான் பயன் படுத்துவேன்(நீங்கள் மற்ற செட்டிங்கை பயன்படுத்தி முயன்று பாருங்கள்). தேவையான செட்டிங்கை தேர்வு செய்து "Go" பொத்தானை அமுக்கவும். இப்போ இரைச்சல் நீங்கிய படம் உருவாகிவிடும். இத்தோடு நம் வேலை முடிந்து விடுவதில்லை. இரைச்சலை நீக்கும் போது சில டிடைல்ஸ் மற்றும் ஷார்ப்னஸ் குறைந்து விடும். எடுத்துக்காட்டாக மேலே உள்ள படத்தில், அந்த பறவையின் முகம் மற்றும் வயிற்று பகுதிகளில் ஷார்ப்னஸ் மற்றும் டிடைல்ஸ் போய்விட்டது. இந்த குறையை போக்குவதற்கு "Selective Coloring செய்வது எப்படி ?" என்ற பதிவில் பயன்படுத்திய முறையில் "முதல் படம்" மற்றும் "இரைச்சல் நீக்கிய படம்" ஆகியவற்றை இணைத்து "Selective Noise Reduction" பண்ணலாம். அப்படி செய்த படம் கீழே. மேலும் இந்த இரைச்சல் நீக்கும் நீட்சியினால் வேறு ஒரு பயன் உள்ளது. Portrait படங்களை இந்த நீட்சியில் பயன் படுத்தும் பொழுது, சருமத்தில் இருக்கும் குறைகளையும் நீக்கும்(கொஞ்சம் மேக்கப் போட்டாப்ல இருக்கும் :) ) எடுத்துகாட்டு இரைச்சல் நீக்குவதற்கு முன் இரைச்சல் நீக்கிய பின் இதை பற்றி வேற ஏதாவது கேள்வி இருந்தா கேளுங்க. நன்றி!
 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff