Tuesday, July 28, 2009

படங்களை எடுக்கும்போது கேமராவின் சின்ன LCD திரையில் படம் தெளிவாக இருப்பதுப் போலத் தோன்றினாலும், பெரிய கணிணித் திரையில் பார்க்கும் போது தெளிவாக Sharp ஆக இல்லாமல் மங்கலாக இருப்பது பலருக்கும் நடக்கும் நிகழ்வு. எனது $75 Sigma lens ல் எடுக்கும் படங்களுக்கும் , $2000 canon L லென்ஸ் எடுக்கும் படங்களுக்கும் தரம், திடம், மணம் என்று பல வித வித்தியாசங்கள் இருக்கத்தான் செய்யும் ( எடுக்கும் புகைப்படகாரரின் திறமையை தவிர்த்து) . என்னால் $2000 லென்ஸ் வாங்க முடியாவிட்டாலும் இலவச கிம்பில் தெளிவான படங்களை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.




முதலில் Portraits. முகத்தில் கண்கள் மிக முக்கியம். கண்கள் தெளிவாக இல்லாவிட்டால், முழு படமுமே வேஸ்ட்.




படத்தை கிம்பில் திறநது, பின்ணனி லேயரை நகலெடுத்துக் கொள்ளுங்கள்.



நான் பெரிதும் உபயோகிப்பது Unsharp Mask. இது Filters-> Enhance-> Unsharp Mask என்ற பகுதியில் இருக்கும். கிளிக்கிக் கொள்ளுங்கள்.



இந்த உரையாடல் பெட்டியில் , முதலில் Preview தெரிவு செய்யுங்கள். இதன் மூலம் நீங்கள் செய்யும் மாற்றதை உடனேயே பார்க்கலாம்.

மூன்று பகுதிகள் இருக்கும்.
Radius = 2.0
Amount = 0.75
Threshold = 3 என்று மாற்றிக் கொள்ளுங்கள்.




படத்தில் நல்ல வித்தியாசம் தெரியும். கண்களின் வித்தியாசத்தை தெளிவாக பார்க்கலாம்


(இங்கே உள்ள உதாரணப் படங்களில் resolution கம்மி மற்றும் படத்தின் அளவும் சிறியது. அதனால் விளைவு சரியாக தெரியாமல் போகலாம் )


அடுத்து குழந்தைகள், பூக்கள் போன்ற மென்மையான படங்கள். இவற்றுக்கு அதிக sharpeness தேவையில்லை. இவை கொஞ்சம் மிருதுவாக இருந்தால்தான் அழகு.

இது போன்ற படங்களுக்கு நான் உபயோகிக்கும் அளவுகள்.

Radius = 1.0 Amount =0.75 Threshold = 10








பொதுவான படங்களுக்கு ( General purpose )
Radius =4.0 Amount =0.65 Threshold = 3








இணையத்தில் வலையேற்றப்படும் படங்களுக்கு கொஞ்சம அதிகமான sharpness தேவைப்படலாம்.பிரிண்ட் செய்யப் போகிற படங்களுக்கும், உங்களின்
பிரிண்டரின் தரத்துக்கு ஏற்ப அதிகமாக தேவைப்படலாம். இதுப் போனற படங்களுக்கு

Radius = 0.3
Amount = 2.0
Threshold = 0






இந்த இடுகையில் குறிப்பிட்ட அளவுகள் நான் அதிகம் உபயோகிப்பவை. உங்களின் அனைத்து படங்களுக்கு இவை சரியாக பொருந்தக்கூடும்.
உங்களுக்கு விளைவு அதிகமாகவோ , குறைவாகவோ இருப்பதுப் போலத் தோன்றினால், இந்த இடுகையில் குறிப்பிடப்பட்ட Radius மற்றும் Threshold அளவுகளை மாற்றாமல் Amount மட்டும் மாற்றிப் பாருங்கள்.


படத்தின் தெளிவும் (Sharpness), இரைச்சலும்( Noise) ஒன்றுக்கொன்று நேர் எதிரானவை. Sharpness அதிகமாக அதிகமாக, இரைச்சலும் அதிகமாகும். அதில் கவனம் தேவை.


கொஞ்சம் காசு சேர்த்தவுடன் நல்ல தரமான லென்ஸ் வாங்கிக்கொள்ளாலாம். அதுவரைக்கும் ....

Friday, July 24, 2009

பல நேரங்களில் கேமராவின் மீட்டர் குறைப்பாட்டினாலோ அல்லது நமது தவறினாலோ படங்கள் சரியாக expose ஆகாமல் குறைந்த ( Under exposed) அல்லது அதிகமான வெளிச்சதுடன்( Over exposed) சேமிக்கப்பட்டு விடும். அதை கிம்பில் எளிதில் சரிசெய்வது பற்றி இங்கே.






முதலில் அதிக வெளிச்சப்படம்.

படம் நன்றாக வெளிறி இருக்கிறது,வானம் முழுவதும் வெளுத்து விட்டது. முழுவதும் வெள்ளையாகிவிட்டப் பகுதிகளை மீட்க முடியாது. ஆனால் முடிந்த அளவிற்கு சரி செய்ய பார்க்கலாம்.



படத்தை கிம்பில் திறந்து, லேயரை நகலெடுத்துக் கொள்ளுங்கள்




இனி லேயர் Mode => Multiply என்று மாற்றிக் கொள்ளுங்கள்.


அவ்வளவுதான் வேலை. படம் இந்த மாதிரி மாறி இருக்கும்.




விளைவு அதிகமாக இருப்பதுப் போலத் தோன்றினால், Opacity உங்களின் தேவைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளுங்கள். லேயர் மாஸ்க் உபயோகித்து உங்களுத் தேவையான பகுதிகளை இந்த விளைவில் இருந்து தவிர்த்துக்கொள்ளலாம்.



அடுத்து குறைந்த வெளிச்சப்படம். வெள்ளைக் கட்டடம் மங்கி பழுப்பாகி விட்டு இருக்கிறது. இதை எப்படி சரி செய்யலாம்.




வழமைப் போல படத்தை கிம்பில் திறந்து லேயரை நகலெடுத்துக் கொள்ளுங்கள்.




இது வரை பாடத்தை சரியாக கவனித்து வந்து இருந்தீர்கள் எனில் அடுத்து நாம் என்ன செய்யப் போகிறோம் என்று இந்நேரம் யூகித்து விட்டு இருப்பீர்கள்.

இனி Mode => Screen என்று மாற்றிக் கொள்ளுங்கள்.






அவ்வளவுத்தான். உங்களின் இரசனைக்கும், தேவைக்கும் ஏற்ப Opacity, Layer Mask எல்லாம்.



மொத்தப் பாடத்தின் சாரம் இது தான்.
Multiply Mode => படத்தின் வெளிச்ச அளவைக் குறைக்கும்
Screen Mode => படத்தின் வெளிச்ச அளவை அதிகரிக்கும்.

Wednesday, July 15, 2009

எல்லாருக்கும் வணக்கம். Landmarkஐ அனுப்பியவர்களுக்கும், அனுப்பப் போகிறவர்களுக்கும், முதற்கண் நன்றீஸ்.
ஒரு பக்கம் மாதாந்திர போட்டிகளும், இன்னொரு பக்கம், புகைப்படம் எடுப்பது எப்படி? எடுத்த படத்தை நேர்த்தியாக்குவது எப்படி? என்கிற ரீதியல் பாடங்களும் PiTல் இடம் பெற்று வருகிறது.

இந்தப் பதிவுகளில் வரும் பின்னூட்டங்களில், அடிக்கடி இடம் பெறும் விஷயம், நம் PiT ஆர்வலர்களின் கேள்விக் கணைகள்.
சில கேள்விகள்/சந்தேகங்கள், பதிவுக்கு சம்பந்தம் உள்ளதா இருக்கும், அதை அங்கேயே தீத்து வச்சு, பதிவெழுதிய நாட்டாம தீர்ப்பு சொல்லிடுவாரு.

ஆனா, பல கேள்விகள், அந்த பதிவுக்கு சம்பந்தமில்லாத பொத்தாம் பொதுவான கேள்வியா இருக்கும். ஒண்ணு, அந்தக் கேள்விக்கு தனியா (பதிவு) ரூம் போட்டு பலரும் சேந்து அலசி ஆராஞ்சு பிரிச்சு மேய வேண்டியிருக்கும், கேட்டவரின் சந்தேகத்தை தீக்க.
இல்லன்னா, கேட்ட இடத்திலேயே ஒரு பின்னூட்டத்தில் கேள்விக்கு பதில் சொல்லும்ம்படியாகவும் இருக்கும்.

கேள்வி கேக்கரது ஈஸி, பதில் தேடரது/சொல்ரதுதான் நெம்பக் கஷ்டம். கூட்டு முயற்சியில்ல்லாமல் அதை செய்வது நெம்ப நெம்ப கஷ்டம் :)

கூட்டிக் கழிச்சு சொல்லணும்னா, கேள்வி கேக்கரதுக்கு ஒரு முறை இருக்கு, அதை இனிமேலேருந்து அமல் படுத்தலாம்னு இருக்கோம். கண்ட எடத்துலையும், கண்டதையும் கேக்கப்டாது.

இனி முதல், உங்கள் கேள்விக் கணைகளை, இந்தப் பதிவில் பின்னூட்டமாய் அளிக்கவும்.
உ.ம்:
அ) வெளிநாட்டுக்கு டூர் போறேன். கேமராவுடன் என்னென்ன எடுத்துக்கிட்டு போகணும்?
ஆ) Canon Rebel வாங்கலாம்னு இருக்கேன். $500 கேக்கறான். ஓ.கேவா? இது நல்ல கேமராவா?
இ) இதோ இந்தப் படம் போன வாரம் புடிச்சேன். ஏதோ ஒண்ணு நல்லால்ல. என்ன மிஸ்ஸிங் என் படத்துல? http://உங்க படத்தின் உரல்.கோம்
ஈ) கிம்ப்ல என் படம் இப்படி இருக்கரத அப்படி மாத்தரது எப்படி?
உ) என் மூஞ்சி ஏன் அம்சமா வர மாட்டேங்குது படங்களில்?
ஊ) கேமரால தூசி விழுந்துருச்சு. துடைப்பது எப்படி? ( இதற்கு ஒரு பதிவு கூடிய விரைவில் வர இருக்கிறது )
etc..

கேள்வியைப் பொறுத்து, அந்த கேள்விக்கு, இதே பதிவில், பின்னூட்டமாயும் பதில் வரலாம். அல்லது, தனிப் பதிவில் உங்கள் கேள்வியை மட்டும் போட்டு, அக்கு வேறு ஆணி வேராய், PiT ஆர்வலர்கள் அனைவரையும் அழைத்து, பிரித்து மேயலாம். ( இ, ஈ மாதிரி கேள்விகள் )
( உ மாதிரி கேள்விகளை தவிர்க்கவும். உண்மை கசக்கும். ஆனால் உங்க கேள்வி, என்னைப் போன்ற பலருக்கும் இனிக்கலாம். "எனக்கு மட்டுமே நடக்கர விஷயம் இல்ல"ன்னு ஊர்ஜீதம் ஆவதால் :) )

ஓ.கே தானே?

மறவாமல், 'Subscribe by email' ஆப்ஷனை கமெண்ட் பொட்டிக்கு கீழே இருக்கும் லிங்க்கை அமுக்கி தேர்ந்தெடுக்கவும். அப்பதான், இந்தப் பதிவில் நடக்கும் சம்பாஷணைகள், உங்கள் ஈ.மடலுக்கு வந்து சேறும்.

உங்கள் அனைவரின் பங்களிப்பும் இந்த "கேள்வி பதில்" சிறப்பாய் நடக்க மிக்க அவசியம்.

நன்றீஸ்ஸ்ஸ்ஸ்!

source: oberazzi

Tuesday, July 7, 2009

வணக்கம் நண்பர்களே. PiT மாதாந்திரப் போட்டிகள் ஆரம்பித்து, இரண்டு வருடம் நிறைவடைகிறது. சென்ற வருடம், ஜூலை 2008ல், ஓராண்டு நிறைவு விழாவை, 'மெகா' போட்டி நடத்தி க்ளிக்கி மகிழ்ந்தோம்.

இந்த வருஷம் சும்மா விட்ரலாமா?

என்னதான் பொருளாதாரம் சர்ர்ர்ர்ர்ர்ருனு சரிவடைந்து, பலருக்கு பிடுங்க ஆணி இல்லாமல் போனதும், ஆணி பிடுங்கரவங்களுக்கு சகட்டு மேனிக்கு ஆணிகள் வளஞ்சும் நெளிஞ்சும் பிடுங்க பிடுங்க வந்து கொண்டு இருப்பதும், காலத்தின் கோலமாய் நம் கண் முன் வந்து போனாலும், நாம் க்ளிக்குவது துவளாமல் நடந்தேறிக் கொண்டிருக்கிறது.

இந்த இனிய வேளையில், க்ளிக்கிச் சிவந்த உங்கள் கைகளுக்கு, எம் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த வருட மெகாப் போட்டித்தலைப்பையும் பரிசு விவரங்களையும், பாக்கப் போறதுக்கு முன்னாடி, இதுவரை PiT போட்டியில் வெற்றி வாகை சூடியவர்கள் யார் யார்னு கீழ பாருங்க. ( சில பேரு எந்தத் தலைப்பக் கொடுத்தாலும், 'நச்னு' படம் புடிச்சு, அடிக்கடி ஜெயிக்கராங்க்ய. நெம்ப ஜெலஸ்ஸாவுது போங்க :) )

ஜூலை 2007லிருந்து, ஜூலை 2008 வரை வெற்றி பெற்ற க்ளிக்குகளை சென்ற வருட அறிவிப்பில் பார்க்கலாம்.

ஆகஸ்ட் 2008லிருந்து, ஜூன் 2009 வரை வென்ற க்ளிக் வேந்தர்கள் கீழே.

September 2008 - மெகா போட்டி
1. நாதஸ்
2. Truth
3. MQN

October 2008 - விளம்பரம்
1. Amal
2. TJay
3. Opparee

November 2008 - லீவு விட்டுட்டோம்

December 2008 - நிழல்கள்
1. Vennilaa Meeran
2. Amal
3. Truth

January 2009 - Open topic
1. நந்து
2. சங்கர் பாலசுப்ரமணியம்
3. MQN

February 2009 - Action
1. பிரகாஷ், கைப்புள்ள
2. சூர்யா
3. கருவாயன்

March 2009 - கருப்பு வெள்ளை
1. கருவாயன்
2. அன்பு
3. சத்யா, நந்தகுமார்

April 2009 - உணர்வுகள்
1. Greg
2. கருவாயன்
3. மன்(ணி)மதன்

May 2009 - மிருகங்கள், பறவைகள்
1. கருவாயன்
2. TJay, பிரகாஷ்
3. நந்தகுமார்

June 2009 - முதுமை
1. அன்பு ஆனந்த்
2. Vino
3. கருவாயன்

கலக்கிட்டாங்க இல்ல? இந்த வருட மெகா போட்டி விவரங்கள் பாத்துடலாமா?

போட்டிக்கான தலைப்பு: (Popular) Landmark (எளிதில் அடையாளங்கண்டு கொள்ளக்கூடிய சின்னம்)

உங்க் வீட்டுத் தெரு முனையில் இருக்கும் பஸ் ஸ்டாண்டு, உங்களால் எளிதில் அடையாளம் கண்டு கொள்ள முடியும். ஆனா, மத்தவங்களுக்கு முடியாது. ஸோ, பொதுவா, எல்லாருக்கும், சட்டுனு தெரியர ஓரளவுக்கு ப்ரசித்தி பெற்ற இடங்களா இருக்கணும். உதாரணத்துக்கு சென்னை மெரீனாவில் உள்ள அண்ணா/எம்ஜிஆர் சமாதி, மகாபலிபுரக் கற்கோயில், சென்ட்ரல் ஸ்டேஷன், சிங்கப்பூர் மில்லீனியா டவர், கலிஃபோர்னியா கோல்டன் கேட், இந்த மாதிரி.

படங்கள் எங்களுக்குக் கிடைக்க வேண்டிய கடைசி தேதி: ஜூலை 25ஆம் தேதி

வெற்றியாளர்களை ஆகஸ்ட் 15 ஆம் தேதி அறிவிப்போம்.

முதல் பரிசு: US $50
இரண்டாம் பரிசு: US $25
மூன்றாம் பரிசு: US $10


பரிசுக்கான தொகை, பிட் குழுவினரின் பங்களிப்பிலிருந்து வருகிறது.

பரிசு, பணமாகவோ புத்தகமாகவோ அனுப்பப்படும். ( based on winners location and logistics and possibilities for mailing a cheque vs other options )

நடுவர்கள்: பிட் குழுவினர் (Jeeves, An&, CVR, Nathas, Deepa & Surveysan)

படங்களை எப்படி அனுப்பரதுன்னெல்லாம் உங்களுக்கு ஏற்கனவே தெரிஞ்சிருக்கும். தெரியாதவங்க, இங்கப் போய் பாத்துக்கங்க. (படம் அனுப்பக் கடைசித் தேதி ஜூலை 25).

போட்டிக்கான விதிமுறைகளை தவறாமல் பின்பற்றவும்.
குறிப்பாக, ஒருத்தர் ஒரு படம் மட்டுமே அனுப்பவும்.
குறிப்பாக, படத்தின் ஃபைலுக்கு உங்கள் பெயரை வைத்து, ஈ.மடலின் சப்ஜெக்ட்டுக்கும் உங்கள் பெயரை வைப்பது.
குறிப்பாக, நீங்கள் க்ளிக்கிய உங்கள் 'சொந்தப்' படமாக இருக்க வேண்டும்.

இனி, சாம்பிள் படங்கள் கீழே:
Source: Deepa


Source: Jeeves


Source: CVR


Source: An&


Source: Nathas


Source: Surveysan


ஜமாய்ச்சிடலாம்ல?

க்ளிக்குங்க!

நன்றி!

Wednesday, July 1, 2009

பின்னணியை மாத்தும் போது ஒரு பெரிய பிரச்சனையா இருப்பது , இந்தப் படத்தில் இருப்பது போல காற்றில் பறக்கும் வணங்கா/அடங்கா முடி. Selection tools யை உபயோகிச்சி எவ்வளவு கத்தரித்தாலும் இது சரியாக வரவைப்பது கடினம். ஆனால் படத்தில் பின்னணி வெள்ளை நிறமாய் நிறந்தால் இதை செய்வது சுலபம். எப்படி என்று பார்க்கலாம்.




பின்னணியாக இந்தப் படத்தை உபயோக்கிப் போகிறேன்.






படத்தை கிம்பில் திறந்து

அதன் மேல் தேவையான புது பின்னணி படத்தை ஒரு புது லேயராக ஆக்கிக் கொள்ளுங்கள். ( புது பின்னணியை drag and drop செய்தால் அது தானவே இந்த மாதிரி மாற்றிக் கொள்ளும் )





பின்னணி படத்தின் அளவு சரியாக பொருந்தாவிட்டால் Scale Tool ( Shift T) உபயோகித்து சரியாக இருக்குமாறு மாற்றிக் கொள்ளுங்கள்.




இனி லேயர் Mode => Multiply



மூலப் படத்தின் பின்னணி வெள்ளை நிறம் என்பதால் , வெள்ளை நிறம் மறைந்து அங்கு புது பின்னணி நிரம்பி இருக்கும். இனி தேவை இல்லாப் பகுதிகளை ஒரு layer mask மூலம் அழித்து விடலாம்.



ஒரு வெள்ளை லேயர் மாஸ்க் உருவாக்கிக் கொள்ளுங்கள்.



கருப்பு நிற பிரஷ் கொண்டு


அஸின் முகத்தை அலங்கரிக்க வேண்டியதுதான்.




பின்னணி வெள்ளை நிறமாய் இருப்பதன் ஒரு பெரிய நன்மை, முடி இருக்கும் பகுதிகளில் லேயர் மாஸ்கின் தேவை இருக்காது. காற்றில் பறக்கும் முடிப் பகுதிகளில் கவனம் செலுத்தத் தேவையில்லை.



லேயர் மாஸ்க், இது போல குத்து மதிப்பாக இருந்தாலே போதும். காற்றில் அலைபாயும் முடி, நமக்கு வேலை இல்லாமலேயே சரியாக வந்து இருக்கும்.




படம் இப்படி மாறி இருக்கும்.







சில பின்(னணி) குறிப்புகள்.


1. இது போலவே, மேகத்தை சேர்த்து இருக்கும் பாடம் இங்கே.

2. சரி வெள்ளை பின்னணிக்கு Multiply mode என்றால் , மூலப் படம் கருப்பு பின்னணியில் இருந்தால் , புது பின்னணிக்கு என்ன Mode உபயோகிக்க வேண்டும் ??


3 Stock Images பெரும்பாலும் வெள்ளை பின்னணியில் இருப்பதன் இரகசியம் புரிகிறதா ?
 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff