Friday, August 31, 2007

என் இனிய தமிழ் மக்களே.
கடந்த இரு மாதங்களாக நாங்கள் நடத்தி வரும் புகைப்பட போட்டிக்கு நீங்கள் காட்டி வரும் ஆதரவுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்.
உங்கள் அன்பும் ஆதரவும் தந்த உற்சாகத்தின் வேகத்தோடு, செப்டெம்பெர் மாதத்துக்கான போட்டியின் அறிவிப்பை வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம்.

நம்மை சுற்றி பார்த்தால் நம் உலகின் நாலாபக்கமும் ் வண்ணங்களால் நிறம்பி வழிவதை நாம் பார்க்கலாம். வித்தியாசமான ஆயிரம் பொருள்கள்,அவற்றின் மேல் படர்ந்திருக்கும் பல்லாயிரம் வண்ணங்கள்.நம் உணர்வுகள்,எண்ணங்கள்,மன ஓட்டம் என நம் நினைவலைகளை புரட்டி போடும் சக்தி இந்த வண்ணங்களுக்கு உண்டு.
இந்த மாதத்தின் போட்டியின் மூலம் இந்த வண்ணங்களின் குதூகலிப்பை உங்கள் கேமராக்களில் கவர்ந்து வாருங்கள்.
ஆம்!! இந்த தடவை போட்டியின் தலைப்பு "வண்ணங்கள்" தான்.

வண்ணங்கள் தலைப்புக்கு எந்த விதமான படம் எடுக்கலாம்??
படம் முழுக்க ஒரே வண்ணத்தை முழுமையாக பெற்றிருக்க வேண்டுமா??
இது மாதிரி???
அல்லது பலவித வண்ணங்கள் கலந்து இருக்க வேண்டுமா??
இது மாதிரி??

எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்!!

ஆனால் பார்த்தால் வண்ணங்களின் அழகை ,அதன் சிறப்பை பார்வையாளர்களுக்கு பளீரென உணர்த்தும் வண்ணம் இருக்க வேண்டும்.

உங்கள் கற்பனை குதிரையை தட்டி விடுங்கள். அப்படியே காலார நடந்து சுற்றி உள்ள விஷயங்களை கலைக்கண்ணோடு பாருங்கள்.
கன்னா பின்னாவென்று சுட்டுத்தள்ளுங்கள் (தோசையை அல்ல,படங்களை!! :-P)

இன்ஸ்பிரேஷனுக்கு flickr போன்ற தளங்களுக்கு போய் சிறந்த படங்களை பார்க்க ஆரம்பியுங்கள்.
பார்க்கும் விஷயம் ஒவ்வொன்றிலும் வண்ணங்களின் விளையாட்டை ரசித்துப்பழகுங்கள்!!

எப்பவும் போல போட்டிக்கான உங்கள் படங்களை உங்கள் வலைப்பூவில் பதிவிட்டு ,அந்த இடுகையின் சுட்டியை இந்த பதிவின் இடுகையில் பின்னூட்டமிடலாம். அனானி பின்னூட்டங்கள் போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.
உங்கள் படங்களை 1-ஆம் தேதியில் இருந்து 10-ஆம் தேதிக்குள்ளாக அனுப்பலாம். ஒருவர் அதிகபட்சமாக இரு படங்களை அனுப்பலாம். இரண்டுக்கும் மேற்பட்ட படங்களை பதிவிட்டால் எதை போட்டிக்கு எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவித்து விடுங்கள்.
பதிவில் ஒன்றுக்கும் மேற்பட்ட படங்கள் இருந்து,போட்டிக்கு எந்த இரண்டு படங்களை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லாத பட்சத்தில்,இடுகையின் முதல் இரண்டு படங்கள் போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
இந்த தடவை போட்டிக்கான நடுவர்கள்,இந்த குழுப்பதிவின் சக ஆசிரியர்களான ஜீவ்ஸ் மற்றும் AN&.

தலைப்பு - வண்ணங்கள்
நடுவர்கள் - AN& மற்றும் ஜீவ்ஸ்
படங்கள் அனுப்பும் முறை - பதிவிட்டு விட்டு ,பின்னூட்டத்தில் அறிவிக்க வேண்டும்
காலம் - செப்டெம்பெர் 1 முதல் 10
நாட்டாமைகள் தீர்ப்பு சொல்லும் நாள் - 15 செப்டெம்பெர்

போன இரண்டு தடவைகள் நடந்த போட்டிகளின் மூலம் பிற்தயாரிப்பு நுணுக்கங்கள் (post production techniques) மற்றும் framing ஆகியவற்றின் அருமையை நன்றாக அறிந்து கொண்டிருப்பீர்கள் என நினைக்கிறேன்!! :-)
பிக்காஸா (Picasa) மற்றும் ஜிம்ப்(Gimp) போன்ற இலவசமான மென்பொருள்களை கொண்டு உங்கள் படங்களை பல மடங்கு மெருகூற்றலாம்.

உங்களின் திறமையின் மேல் எங்களுக்கு நிறைய நம்பிக்கை இருக்கிறது. வழக்கம் போல் அசத்தலான படங்களின் மூலம் இந்த புகைப்படத்திருவிழாவை கலகலப்பாக்கிவிடுவீர்கள் என்று எங்களுக்கு தெரியும்!!
பட்டைய கிளப்புங்க!!
போட்டியாளர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!
வரட்டா?? :-)


தற்போதய நிலவரம்

1. இம்சை

2.prakash

3.sangap palagi

4. நளாயினி

5. முத்துகுமரன்

6. रा. वसन्त कुमार्

7. Smile Dreamz -1
Smile Dreamz -2

8.காரூரன்

9.சினேகிதி

10.sugavasi

11. Surveysan

12. Osai chella.1
Osai chella.2

13.சிநேகிதன்

14.அல்வாசிட்டி.விஜய்

15. k4karthik

16. அன்புத்தோழி

17.முத்துலெட்சுமி

18.jaggy1
jaggy2

19.sathia

20. திகழ்மிளிர்

21.deepa1
deepa2

22.geenila


23.யாத்திரீகன்

24.ஒப்பாரி

25.manju

26.வற்றாயிருப்பு சுந்தர்

27.முகவை மைந்தன்

28. princenrsama

29. நாகை சிவா

30. athi

31. காட்டாறு

Wednesday, August 29, 2007

போன பகுதியை படிச்சுட்டு பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.பின்னூட்டமிடாதவறுக்கும் நன்றி!! :-P
போன பகுதியின் கடைசியில் நான் குறிப்பிட்ட சில விஷயங்களை பற்றி இந்த தடவை பாக்கலாம்.

Focal Length : தமிழ்ல இதை குவிய தூரம் அப்படின்னு சொல்லலாம்.
சின்ன வயசுல பள்ளிக்கூடத்துல இது பத்தி படிச்சிருப்பீங்களே ,ஞாபகம் இருக்கா???

சுருக்கமா சொல்லனும்னா குவிய தூரம் என்பது லென்ஸிற்கும் கேமராவின் சென்சர்/படச்சுருளின் இடையில் இருக்கும் தூரம். இதைத்தான் லென்ஸ் பற்றி குறிப்பிடும்போது குறிப்பிடுவார்கள். உதாரணமாக 180mm lens என்று சொன்னார்கள் என்றால் கேமராவில் பொருத்திவிட்ட பின் லென்ஸிற்கும் ,ஒளிக்கற்றை வந்து விழும் திரைக்கும் இடையில் உள்ள இடைவெளி 180mm இருக்கும் என்று பொருள். பல லென்ஸ்கள் ஒரே குவிய தூரத்தில் மட்டுமே நாம் உபயோகப்படுத்தும் வண்ணம் வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆனால் சில லென்ஸ்களை ஒரு குறிப்பிட்ட அளவுக்கள் எந்த குவிய தூரத்தில் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். உதாரணத்திற்கு 18-55mm என்று ஒரு லென்ஸ் உள்ளது. நீங்கள்் SLR வாங்கினீர்கள் என்றால் இந்த லென்ஸையும் சேர்த்தே பல இடங்களில் விற்பார்கள்.

இந்த லென்ஸின் குவிய தூரத்தை 18mm-இல் இருந்து 55mm வரை எந்த தூரத்திலும் மாற்றிக்கொள்ளலாம். இது போன்ற லென்ஸ்களை zoom lens என்று அழைப்பார்கள்.

இந்த குவிய தூரத்தினால் நாம் எடுக்கும் புகைப்படத்தில் என்னென்ன மாறுதல்கள் வரும் என்று பார்க்கலாமா?? பொதுவாக குவிய தூரம் கம்மியாக இருந்தால் நமக்கு முன் பரந்து விரிந்த காட்சியை காமெராவினுள் அப்படியே பதிக்கலாம். சுற்றி உள்ள விஷயங்கள் எல்லாவற்றையும் திறந்த கோணத்தில் திரைக்குள் சேர்ப்பதால் இதை வைத்து கிட்டேயிருக்கும் பொருளை எடுத்தால் கூட அது தூரத்தில் இருப்பது போல் தெரியும். அதனால் குறைந்த குவிய தூரம் உடைய லென்ஸ்களை wide angle lens என்று அழைப்பார்கள்.

லென்ஸின் குவிய தூரம் அதிகமாக அதிகமாக focus செய்யும் பொருட்கள் எல்லாம் பெரியதாக ஆகிக்கொண்டே போகும். அதனால் சிறிய பொருட்களை எல்லாம் பிடிக்க அதிக குவிய தூரம் உள்ள மேக்ரோ லென்ஸ்களை பயன்படுத்துவார்கள்.அதுவுமில்லாமல் தூரத்தில் இருக்கும் பொருள் அருகில் தெரிய வேண்டுமென்றால் குவிய தூரம் அதிகம் உள்ள லென்ஸ் தேவை. இந்த வகை லென்ஸ்களை telephoto lens என்று சொல்லுவார்கள்.

நாம் பயன்படுத்தும் point and shoot கேமராக்களில் 30-40 இல் இருந்து சுமார் 150mm மில்லிமீட்டர் வரை உள்ள zoom lens பொருத்தப்பட்டிருக்கும். எல்லாம் அந்தந்த கேமராவையும் அதின் zoom range-ஐயும் பொருத்தது. இப்பொழுதெல்லாம் 12x-15x point and shoot கேமராக்கள் எல்லாம் வர ஆரம்பித்து விட்டன. இவற்றின் குவிய அளவு 400-450mm வரை செல்லும். பொதுவாக மக்கள் SLR வாங்கினாலே அதில் நன்றாக zoom செய்ய முடியும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இது முற்றிலும் தவறான கருத்து. SLR வாங்கினால் கூட அதிக குவிய தூரம் உள்ள லென்ஸ்கள் இருந்தால் தான் உங்களால் அதிகமாக Zoom in செய்ய முடியும்.

DOF : இது புகைப்பட வல்லுனர்கள் பலராலும் தான் ரொம்ப விஷயம் அறிந்தவர் என்று காட்டிக்கொள்ள பயன்பட்டுத்தப்படும் வார்த்தை!! :-)
ஏதாவது நல்ல படம் என்றால் ஆனா ஊனா உடனே,"படம் செம DOF" என்று பிலிம் காட்ட ஆரம்பித்து விடுவார்கள்!!

அது சரி!! இந்த உண்மையில் இந்த DOF என்றால் என்ன???
DOF என்பது "Depth of field" என்பதன் சுருக்கம்.தமிழில் இதை காட்சியின் ஆழம் என்று சொல்லலாம்.

நாம் ஒரு படத்தை எடுக்கும் போது கேமராவின் முன்னே பல பொருட்கள் பல தூரங்களில் கொட்டிக்கிடக்கும். ஆனா படத்துல எல்லாமே தெளிவா தெரிவதில்லை, ஒரு குறிப்பிட்ட தூரத்துல இருக்கற சில பொருட்கள் மட்டும் தான் தெளிவா தெரியுது. அப்படி தெளிவா தெரியற பொருள் படத்தின் கருப்பொருளாக (subject) இருந்தால் படத்துக்கு அழகு. இப்படி நமக்கு வேண்டிய காட்சி மட்டும் தெளிவாக தெரிந்து மற்ற விஷயங்கள் எல்லாம் மங்கலாக தெரிந்தால் படத்தின் காட்சி ஆழம் கம்மி என்று சொல்லுவார்கள் (Shallow depth of field). படத்துல எவ்வளவோ விஷயம் இருந்தால் கூட எந்த பகுதி தெளிவா இருக்கோ அங்கே தான் நம் கண்கள் தானாக செல்லும்.

நம் கருப்பொருளின் பின்னால் (background) நம் கவனத்தை சிதறடிக்கும் வண்ணம் பல விஷயங்கள் இருந்தாலும் நான் நம் கருப்பொருளின் மேலே மட்டும் காட்சியின் ஆழம் அமையுமாறு வைத்தால் படம் அழகாக இருக்கும்.

இந்த shallow depth of field எல்லா படங்களுக்கும் நல்லா இருக்கும் என்று சொல்ல முடியாது. இயற்கை காட்சிகள் போன்று பரந்து விரிந்த காட்சிகள் எடுக்கும் போது படத்தில் எல்லா பொருளின் மேலும் தெளிவு சீராக பரவியிருக்க வேண்டும். அந்த மாதிரி சமயத்துல காட்சியின் ஆழம் எல்லா தூரங்களிலும் பரவி இருப்பது போல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
நமக்கு வேண்டிய காட்சி தெளிவாக இருக்க வேண்டும் என்பதுதான் இந்த சிந்தாந்தத்தின் நோக்கமே!!

சரி!!

இந்த காட்சியின் ஆழத்தை எப்படி கட்டுபடுத்துவது???

அதற்கும் சில உத்திகள் புகைப்படக்கலையில் உண்டு. நாம் நமது கருப்பொருளின் பக்கத்தில் எவ்வளவுக்கெவ்வளவு போகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு காட்சியின் ஆழம் கம்மியாகும். அதாவது நமக்கும் பொருளுக்கும் உள்ள தூரத்தை விட பொருளுக்கும் background-இற்கும் உள்ள தூரம் அதிமாக இருக்க வேண்டும்!!
புரியுதா???
அது ஒரு உத்தி!!
அதனால் தான் நாம் ஒரு பூவின் பக்கத்தில் போய நன்றாக zoom செய்து படம் எடுத்தால் அதின் காட்சி ஆழம் கம்மியாக வந்து விடும்.

இரண்டாவது உத்தி நான் போன பகுதியிலே சொன்னது போல லென்ஸின் துளை(aperture) சம்பந்தப்பட்டது. அதாவது துளையின் விட்டம் எவ்வளவுக்கெவ்வளவு பெரியதாக இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு காட்சியின் ஆழம் கம்மி. லென்ஸின் f-stop கம்மியாக கம்மியாக துளையின் விட்டம் அதிகமாகும் என்று நான் போன பதிவில் சொன்னதை மறந்திருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்!! :-)

இப்படியாக காட்சியின் ஆழத்தை கட்டுப்படுத்தி படங்களின் தரத்தை நிர்ணயிக்கலாம்!!!

அடடா!! பேச ஆரம்பிச்சு வல வலன்னு பேசிட்டே போயிட்டேன். இதுக்கு மேலே புது தலைப்பு ஆரம்பிச்சா சுவாரஸ்யம் இருக்காது,அதனால மத்த விஷயங்களை அடுத்த பதிவில் தொடர்கிறேன்.

இந்த தலைப்புகள் பத்தி ஏதாவது பேசனும்/ஆலோசிக்கனும்/கேட்கனும்னு தோனிச்சுனா பின்னூட்டம் இடவும். அப்படி இல்லைன்னாலும் போடுங்க (எனக்கும் நீங்க பதிவை படிச்சீங்கன்னு தெரிய வேண்டாம்?? ஹி ஹி)
புகைப்படக்கலை பற்றிய இன்னும் சில விஷயங்களோட உங்களை பிறகு சந்திக்கிறேன்.

அது வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது,உங்கள் அன்பு சீ.வீ.ஆர்!!
வரட்டா?? :-)


பி.கு: செப்டெம்பெர் மாத போட்டிக்கான அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும்,உங்கள் எண்ணங்களின் "வண்ணங்களை" எங்கள் முன் படைக்க இது நல்ல வாய்ப்பாக இருக்கும் என நம்புகிறேன்!! :-)


படங்கள் :
http://www.sweethaven02.com/Photog01/fig0119.gif
http://www.livingroom.org.au/photolog/images/Nikkor-18-55mm-af-s-dx.jpg
http://www.edbergphoto.com/images/dof-cartoon.gif

Monday, August 27, 2007

ஒரு நல்ல கலைஞனாக உயர, அந்தக் கலையை முதலில் ரசிக்கத் தெரிய வேண்டும்.

நல்ல புகைப்படங்கள் எடுக்கும் திறன் உயர, நல்ல புகைப்படங்களை பார்த்து ரசிக்கப் பழக வேண்டும்.

இதுக்காக காசு கொடுத்து புத்தகம் எல்லாம் வாங்க வேண்டாம். இணையத்தில் இல்லாத வசதியா?

Flickr.comல் கடந்த 7 நாட்களில் வந்த அழகான படைப்புகளை ஒரு லிங்கில் காணக் கொடுக்கிறார்கள்.

இங்க சொடுக்கி படங்களைப் பாக்கலாம். அந்த பக்கத்தின் RELOAD பொத்தானை அழுத்தினால், புதிய படங்கள் வந்துகொண்டே இருக்கும். பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

ஸேம்பிளுக்கு சில கீழே.


நீங்க புகைப்படம் எடுக்கும்போது, இந்த நல்ல (கடைசி படம் golden gate bridge நம்மளது. சந்துல சிந்து. ஹி ஹி) படங்கள் பல நுணுக்கங்களை ஞாபகப்படுத்தும்.
உங்களின் திறனை மெறுகேற்ற உதவும்.

நீங்கள் ரசித்த புகைப்படமும் அதில் உங்களுக்கு பிடித்த விஷயங்களும் பின்னூட்டத்தில் தெரியப்படுத்தலாம். அதோட லிங்கும் மறக்காம குடுங்க.

நன்றி!

எல்லாவர்க்கும் பொன் ஓண ஆசம்ஸகள். லோகம் நன்னாயி வரட்டே!

-சர்வேசன்

Saturday, August 25, 2007
பொதுவாக நாம் அனைவரும் ஒரு நிகழ்ச்சியைஎடுக்கப்போனால் அதில் மட்டுமே மனதை செலுத்தாமல் அதைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளையும்எடுப்பது மிகவும் அழகான ஆல்பத்திற்கு வழி வகுக்கும். மேலே கோவை ரேஸ் போட்டி ஒன்றுக்கு நான் சென்றபோது க்ளிக்கிய சில படங்கள். க்ளிக்கி பெரிதாக்கிப் பார்க்கவும்!

பிகு: இதில் ஒரு படம் கலந்துவிட்டது. அது எந்தப்படம் என்று முடிந்தால் சொல்லுங்கள். அவர் பிரபல வ-வா-வலைப்பதிவர்!

Friday, August 24, 2007

வணக்கம் மக்களே!!

எல்லோரும் எப்படி இருக்கீங்க???

இந்த மாசத்துக்கான போட்டியிலே உற்சாகமா கலந்துக்கிட்டதுனால எல்லோரும் ரொம்ப களைப்பா இருப்பீங்க,அதனால கொஞ்சம் ஓய்வு தரலாமேன்னு கொஞ்ச நாளா எந்த பதிவும் போடல.

ஆனா அடுத்த போட்டிக்கான அறிவிப்பு வரதுக்கு முன்னாடி லேசா சில விஷயங்களை அறிமுகப்படுத்திட்டு போகலாம்னு வந்தேன்.
நல்ல படங்கள் எடுக்கனும்னு நம்ம எல்லோருக்குமே நிறைய ஆசைதாங்க,ஆனா அது பத்தி கொஞ்சம் கத்துக்கலாம்னு பாத்தா நம்ம பசங்க டெக்னிகலா என்னென்னமோ பேசி நம்மல மூட் அவுட் பண்ணீருவாய்ங்க!! எத்தனை இணையதளம் பாத்திருக்கோம்??எத்தனை புகைப்பட
ஆர்வலர்களை சந்திச்சிருப்போம்??? எங்கிட்டு போனாலும் Aperture,shutter,ISO அப்படி இப்படின்னு டஸ்ஸு புஸ்ஸுன்னு பேசி நம்மள வெரட்டி
விட்டுருவாய்ங்க!!!
அப்படி அவிங்க என்னதான் சொல்ல வரானுங்க அப்படின்னு சில அடிப்படையான சொற்களின் அர்த்தங்களை பார்க்கலாமா???
ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி ஒரு விஷயத்தை தெளிவா சொல்லிடறேங்க!! புகைப்படத்துறையை பொருத்த வரை எல்லாமே ஒளி சார்ந்தவை. நாம் எடுக்கும் புகைப்படங்கள் உண்மையாகவே பொருட்கள் அல்ல,பொருட்கள் மேலே பிரதிபலிக்கும் ஒளி தான். ஒரு கதவு (Shutter) வழியாக ஒளியை ஒருசில நேரம் லென்ஸ் வழியாக உள்ளே விட்டு அதை ஃபிலிமிலோ அல்லது டிஜிட்டல் சென்சரிலோ பதியச்செய்வது தான் புகைப்படத்துறையின் அடிப்படை.
இப்படி ஒளியை நாம் கேமராவில் பதிக்கும் பொழுது மூன்று விதங்களால் அதன் பதியும் திறன் மாற வாய்ப்பு உண்டு.

முதல் விஷயம் கேமராவின் லென்ஸின் விட்டம்(diameter)். விட்டத்தின் அளவிற்கேற்ப ஒளி உள்ளே வரும் அளவு மாறுபடும். விட்டம் அதிகமானால் ஒளி அதிகம் வரும்,கம்மியானால் ஒளியும் கம்மியாகிவிடும்.
அதே போல் ஒளியை தடுத்துகொண்டிருக்கும் கதவை (shutter) திறந்து மூடும் வேகம இன்னொரு காரணி். ஒரு நொடிக்குள் திறந்து மூடிவிட்டால் குறைந்த அளவு ஒளியே உள்ளே வரும்,அதிகமாக திறந்து வைத்திருந்தால் அதிகமான ஒளி வரும்.இதனால் படம் சரியான வெளிச்சம்,நிறம் எல்லாம் சரியாக விழுவதற்கு கதவை திறந்து மூடும் வேகம் ஒரு முக்கியமான விஷயம்.
மூன்றாவது படச்சுருளின் தரம்.சில படச்சுருள்கள் குறைந்த அளவு ஒளியையே நன்றாக பதிவு செய்து விடும்,அதிகப்படியான ஒளி இருந்தால் படம் வெளிரிப்போய்விடும். இரவு நேரங்களில் படம் எடுக்க இது போன்ற படச்சுருள்கள் மிகவும் உபயோகமாக இருக்கும். சில படச்சுருள்களின் மேல் அதிகப்படியான ஒளி இருந்தால் தான் படம் ஒழுங்காக பதியும்.

சரி!! இப்போதான் எல்லார்கிட்டேயும் டிஜிட்டல் கேமரா வந்துருச்சே!!! அதுல இந்த விஷயமே கிடையாதே அப்படின்னு கேக்கறிங்களா?? இது பத்தி மேல நான் ISO பத்தி சொல்லும்போது சொல்றேன்.
இப்போ கேமராக்கள் குறித்து அடிக்கடி விவாதிக்கப்படும் சொற்கள் சிலவற்றை பார்ப்போமா??
Shutter Speed: நான் முன்னமே சொன்னது போல,கேமராவின் உள்ளே விடப்படும் ஒளியை கட்டுப்படுத்த ,கதவு திறந்து மூடப்படும் நேரத்தை
கூட்டியோ குறைக்கவோ செய்வார்கள்.நொடிப்பொழுதில் நடந்து முடியக்கூடிய விஷயங்களாக இருந்தால் அவற்றை அதிவேக Shutter speed-ஓடு எடுப்பார்கள். உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால் தெறிக்கும் தண்ணிர், மோட்டார் ரேஸ்,பறக்கும் பூச்சி போன்ற காட்சிகளுக்கு கதவு நொடிப்பொழுதில் திறந்து மூடினால் அந்த நொடியில் நடந்த நிகழ்வு தெளிவாக படத்தில் பதியும். இப்படி செய்யும் போது ஒளி உள்ளே
வருவதற்கான வாய்ப்பு குறைவு என்பதால் நீங்கள் எடுக்கும் காட்சி வெளிச்சமாக இருக்குமாரு பார்த்துக்கொள்வது உங்கள் பொறுப்பு.

அதி வேக shutter speed-ஐ போல சில சமயங்களில் கதவு மிக மெதுவாக திறந்துமூடுமாறு வைப்பதும் ஒரு சுவாரஸ்யமான புகைப்பட உத்தி. பல நொடிப்பொழுதுகள் கதவை திறந்து வைத்தால் அந்த சமயத்தில் உள்வரும் ஒளி அனைத்தும் ஒரு வித்தியாசமான காட்சியை நமக்கு காட்டும்.

இந்த சமயத்தில் சற்றேனும் நகர்வு இருந்தால் கூட படம் ஷேக் ஆகி விடும் என்பதால் slow shutter speed காட்சிகள் பெரும்பாலும் tripod-இன் உதவியுடன் எடுக்கப்படும்.

அது சரி!! ட்ரைபாட் என்றால் என்ன என்று கேக்கறீங்களா??

அதாங்க!! ஸ்டூடியோல எல்லாம் கேமராவை ஏதோ ஒரு குச்சியின் மேலே வெச்சிருப்பாங்களே!! அந்த குச்சியின் பெயர் தான் ட்ரைபாட்.
இப்பொழுதெல்லாம் பெரும்பாலான கேமராக்களில் Shutter mode(TV mode) என்று படம் எடுக்கும் முறை இருக்கும். கேமராவை அதில் மாற்றிக்கொண்டால் எவ்வளவு நேரம் கதவு திறந்திருக்க வேண்டும் என்று நாமே முடிவு செய்துக்கொள்ளலாம். அதற்கேற்ப லென்ஸின் விட்டத்தை கேமராவே கண்டுபிடித்து மாற்றிக்கொள்ளும்.
Aperture: ஒரு கேமராவில் ஒளியை கட்டுப்படுத்த பயன்படும் அடுத்த முக்கியமான விஷயம் லென்ஸின் விட்டம்.
Aperture என்பதற்கு ஆங்கிலத்தில் துளை என்று பொருள் கொள்ளலாம்.லென்ஸிற்கு முன்பு ஒரு வட்டமான,சுருங்கி விரியக்கூடிய திரையின் துணையோடு
ஒரு துளை போன்ற அமைப்பு ஒன்று இருக்கும். இதை பெரியதாக்கி சின்னதாக்கி லென்ஸிற்கு வரும் ஒளியின் அளவை கட்டுப்படுத்தலாம். இந்த விட்டத்தின் அளவிற்கு ஏற்ப படங்கள் வித்தியாசமாக வெளிவரும். பொதுவாக அகலமான விட்டம் இருந்தால் படங்களில் DOF (இதை பற்றி பின்னர் பார்க்கலாம்) நன்றாக வரும்.உங்களுக்கு துளை பெரியதாக வேண்டும் என்றால் அதிகப்படியாக வரும் ஒளியை கட்டுப்படுத்த, கதவு திறந்து மூடும் வேகத்தை அதிகமாக்கி விடலாம். அதேபோல் துளை சிறியதாக இருந்தால் வேகத்தை குறைத்து ஒளி நிறைய நேரம் உள்ளே வருமாறு ஏற்பாடு செய்யலாம்.

உங்கள் கேமராவில் இருக்கும் Aperture Mode-ஐ உபயோகித்தால் உங்களுக்கு வேண்டிய அளவிற்கு துளையின் அளவை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். அதற்கேற்ற கதவின் வேகத்தை கேமராவே கூட்டி பெருக்கி செட் செய்து கொள்ளும்.

f-Number அல்லது fstop :நிறைய இடங்களில் இந்த வார்த்தையை வெச்சுக்கிட்டு எல்லோரும் செமத்தியா சீன் போட்டுகிட்டு இருப்பாய்ங்க!!! இந்த f-number-னா என்னன்னு பார்க்கலாமா???
சுருக்கமா சொல்லனும்னா இந்த f-number என்பது நம்ம லென்ஸ் துளை விட்டத்தின் அளவுகோள் என்று சொல்லலாம். f-Number அதிகமாக ஆக துளையின் விட்டம் சிறியதாகிக்கொண்டே போகும். அதாவது ஒரே லென்ஸில் f1.2-ஐ விட f5.6-இல் துளை சிறியதாக இருக்கும்.f நெம்பரில் ஒவ்வொரு புள்ளி கூட கூட துளையின் விட்டம் பாதியாக குறைந்துக்கொண்டே போகும். அதாவது f1.0-இல் இருப்பதை விட f2.0-இல் துளையின் விட்டம் பாதியாக இருக்கும். இப்படி விட்டத்தை குறைத்துக்கொண்டே போனால் உள்வரும் ஒளி குறையும் அல்லவா.அதனால் கதவின் வேகம் அதற்கேற்றார்போல் மாற்றப்படும். உதாரணத்திற்கு ஒரு லென்ஸின் f அளவை f1.0-இல் இருந்து f2.0ஆக மாற்றினால் அதன் துளை யின் அளவு பாதியாக குறையும் அல்லவா ,அதனால் கேமராவின் ஷட்டர் திறந்திருக்கும் நேரம் இரண்டு மடங்காக்கினால் தான் முன்பு கிடைத்த அதே அளவு ஒளி கிடைக்கும்.

உங்கள் கேமராவை Manual Mode-இல் பொருத்திக்கொண்டால் துளையின் அளவு,கதவு திறந்து மூடப்படும் வேகம் ஆகியவற்றை நீங்களே தனித்தனியே தீர்மானித்துக்கொள்ளலாம். அதுவே Automatic mode-இல் இருந்தால் ,கேமராவில் உள்ள light meter ஒளியின் அளவை ஊகித்து அதற்கேற்றார்போல் துளையின் விட்டம் மற்றும் ,கதவின் வேகத்தை தானே தீர்மானித்துக்கொள்ளும். நம்மில் பெரும்பாலனவர்கள் இதை நம்பித்தான் படம் எடுத்துக்கொண்டிருக்கிறோம்.

f-stop-க்கும் f-number-க்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால்,கேமராக்களில் பொதுவாக f1.0,f2.0 போன்ற முழுமையான அளவுகள் இருக்காது.கேமராக்களில் f2.8,f5.6 போன்ற அறைகுறை என்களில் f-Number-கள் உருவாக்கப்பட்டிருக்கும். இதைத்தான் f-stop என்கிறார்கள்.
fstop is nothing but a discrete rounding off of f-numbers
கணக்குல ஆர்வம் இருக்கறவங்களுக்கு ஒரு சமன்பாடு இதோ!!

f1 = Focal length of the lens (லென்ஸின் குவிய தூரம்) / Diameter of the lens (லென்ஸின் விட்டம்).

இதன்படி பார்த்தால் எப்பொழுது ஒரு லென்ஸின் குவிய தூரம் (focal length),அதன் விட்டத்தோட சமமா இருக்கோ அப்போ லென்ஸ் f1-இல இருப்பதாக சொல்லுகிறோம். லென்ஸின் விட்டத்தை நாம் குறைக்க குறைக்க f-number-இன் புள்ளி கூட்டிக்கொண்டே போகிறது!!
புரியுதா???
ஹ்ம்ம்ம் !! இருங்க திரும்ப ஒரு முறை படிச்சுட்டு சொல்றேன் என்கிறீர்களா?? ஒரு தடவைக்கு நாலு தடவை படிச்சு பாருங்க!! சந்தேகம் இருந்தா பின்னூட்டத்துல கேளுங்க!!
அதெல்லாம் சரிபா!! இந்த குவிய தூரம்(focal length) என்றால் என்னன்னு கேக்கறீங்களா???
அது ஒரு தனி கதை மக்களே,வேணும்னா அடுத்த பகுதியில சொல்றேன்!!சரியா???
அப்படியே DOF,ISO,White balance இதெல்லாம் என்னன்னும் பாக்கலாம் !! சரியா???
போறதுக்கு முன்னாடி ஒரு கொசுறு செய்தி. இந்த லென்ஸ் பற்றி பேசும்போது 18-55mm என்றெல்லாம் குறிப்பிடுகிறார்கள் அல்லவா.இந்த குறியீடுகள் எல்லாம் இந்த குவிய தூரத்தின் அளவுகள் தான்!! :-)

அடிப்படையான விஷயங்களுக்கு அறிமுகமா இருக்கனுமேன்னு எந்த தலைப்பையும் பத்தி ரொம்ப விரிவா போகல!!ஏதாச்சும் அலோசிக்கனும்னா பின்னூட்டமிடுங்க!! அப்படியே சொல்லுறது புரியுதா, நல்லா இருகான்னும் சொன்னீங்கன்னா தொடரை செம்மைப்படுத்த வசதியா இருக்கும்!!
வரட்டா?? :-)

படங்கள் :
http://www.wtec.org/loyola/mems/fh6_4.gif
http://www.morguefile.com/lessons/lesson_images/applewat.jpg
http://www.stsite.com/camera/images/slowshut2.jpg
http://en.wikipedia.org/wiki/Image:Aperures.jpg
http://web.uvic.ca/ail/techniques/aperture.gif


Friday, August 17, 2007

மிக்க நன்றி முதலில்... எங்கள் முன் உங்கள் படைப்புகளை வெளியிட்டதற்கு. நான் இந்த படங்களை வைத்தே ஒரு போர்ட்ராய்ட் தொடரை எழுத இருக்கிறேன். நாங்கள் அனைத்து படங்களையும் ஸ்டாம்ப் சைஸ் ஆக்கி ஒரே படமாக collage ஆக மாற்றினோம். 90 படங்களுக்கு மாற்றவே ஒரு 4 மணி நேரம் ஆனது! பின் அவற்றீன் மீது புள்ளிகள் வைத்து நன்றாக இருந்தவற்றை பொறுக்கினோம். மொத்தம் 11 படங்கள் தேர்வு செய்யப்பட்டன. பின் இந்த பதினொண்ரையும் ஓடவிட்டோம். இங்கு தான் போட்டியின் கடுமை புரிந்தது. உதாரணமாக பக்கத்தில் இருக்கும் புகைப்படத்தை பாருங்கள். பதிவர் பாரதிய நவீன இளவரசன் அவர்களின் ஒரு படத்தை நான் கைவத்தபோது ஒரு க்ளாசிக் போர்ட்ராய்ட் மறைந்திருப்பது தெரிந்தது! பொதுவாகவே இவரது இரு படங்களும் மற்றும் சுந்தரின் இரு படங்களும் மிக அற்புதமான லைட்டிங் சென்ஸோடு எடுக்கப்பட்ட படங்கள் தான். ஆனால் ஒப்பாரி முன்னேறியது எதனால்...

டெக்னிகள் விசயங்கள் இருந்தாலும் அழகு ஒன்று உள்ளது. அதுஎந்த விதிக்கும் கட்டுப்படாத ஒன்று. அந்த மாதிரியான ஒரு அழகான இயல்பான எளிமையான சிரிப்பு (Expression and timing of the image!) மிகவும் சூப்பர். எனவே தான் அது மூன்றாம் இடம் பிடித்தது. இதற்கும் வேரொரு போட்டி இல்லாமல் இல்லை ... அது ஹரன் அனுப்பிய அழகுச் சிரிப்பு... ஆனால் சில விசயங்கள்.. ஒன்று அதன் கருப்பு பிண்ணணி.. டெக்சர் ஏதும் இல்லாமல்.. மேலும் கழுத்துக்கு கீழே இடதுபுறம் (பையனுக்கு) தோள்பட்டை சரியாகத் தெரியாமல் பேலன்ஸ் இல்லாமல் (கையே தெரியாமல் ஒரு தோற்றம்) . இருந்தாலும் ஹரனுக்கும் என் வாழ்த்துக்கள்! கடும் போட்டி கொடுத்துள்ளீர்கள்.

மற்றவை அடுத்த பார்வையில் .. ( அலுவலக வேளை நிறைய சேர்ந்து விட்டது!)

பிகு: மேலே உள்ள நவீன இளவரசனின் படத்தில் (பெரிதாக்கிப் பார்க்க) என்ன வித்தியாசம் காண்கிறீர்கள்? என்ன மென்பொருள் எபெக்ட் சேர்க்கப்பட்டுள்ளது என்று தெரிந்தால் சொல்லுங்களேன்! ( crop, contrast தவிர்த்து!)

Related Posts

Thursday, August 16, 2007

மேலே படத்தின் மீது "க்ளிக்" செய்தால் ரிசல்ட் தெரியும்!
மேல் விபரங்கள் நாளை!
பங்கேற்று சிறப்பித்தவர்கள் லிஸ்ட் இங்கே!

Sunday, August 12, 2007நன்றி ஒருங்கிணைப்பாளர்களே (சீவிஆர் & சர்வேசன்) ...

நடுவர்கள் என்ற முறையில் முதலில் கலந்து கொண்ட அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள். ஒருங்கிணைபாளர்கள் சொன்னது போல் இது உண்மையில் "போட்டி" என்பதைவிட "நாம் அனைவரும் கலந்துகொள்ளும் கண்காட்சி" அல்லது "புகைப்படத் திருவிழா" என்ற எண்ணத்தில் தான் நாம் அனைவரும் கலந்துகொண்டிருக்கிறோம் என்பதை நாங்கள் ஒவ்வொரு லிங்க்காக பார்வையிட்ட போதே கண்டுகொண்டோம். ஒப்பாரி, ஜயகாந்தன், சர்வேசன் என்று பலரும் பின்னூட்டங்கள் இட்டு வாழ்த்தியிருந்ததை பார்த்த போது எங்கள் மனமும் குளிர்ந்தது! இன்று 15 படங்களை பார்த்து மார்க்குகள் போட்டுள்ளோம். மற்றவை நாளை !

(சென்றமுறை சொன்னது போல் யார் மனமும் காயமுறாமல் இருக்க அது எங்களுக்கு மட்டுமே தெரிந்ததாக இருக்கவேண்டும் என்று முடிவாகிவிட்டது! )

நீங்களும் பார்வையிட ( 1 முதல் 15 வரை)

1.வசந்தன்

2.அமிழ்து

3.ஜி.ஆர்.பிரகாஷ்

4.சகாதேவன்

5.பவன்

6.ஆதி

7.அருள்குமார்

8.a.யாத்திரீகன்
8.b.யாத்திரீகன்

9.a.நாதன்
9.a.நாதன

10.வி. ஜெ. சந்திரன்

11.a.லக்ஷ்மணராஜா
11.b.லக்ஷ்மணராஜா

12.பாரதிய நவீன இளவரசன்

13.a.தீபா
13.b.தீபா

14.சூரியாள்

15.ஜெஸிலாநட்புடன்
பாமரன் & ஓசை செல்லா
நடுவர்கள் - ஆகஸ்டு போட்டி

Saturday, August 11, 2007

என் இனிய தமிழ் மக்களே,
எல்லோருக்கும் வணக்கம். கடந்த 10 நாட்களாக உருவப்பட போட்டிக்கு உங்க கிட்ட இருந்து வந்துக்கிட்டு இருந்த அன்பும் ஆதரவும் பார்த்து நெகிழ்ந்து போயிருக்கோங்க!!அதுவும் படங்கள் ஒவ்வொன்னும் வந்த அப்புறமா அவங்க சுட்டிக்கு போய் பார்த்து!!! அழகா இருந்துச்சுன்னா பார்த்து சந்தோஷப்பட்டுட்டு,ஏதாவது சொல்லனும்னு தோனிச்சுனா சொல்லிட்டு,ஆகா எவ்வளவு ஆனந்தம். நமக்கு தெரியாம இவ்வளவு ஆர்வமும் திறமையும் இருக்கறவங்க நம்ம தமிழ்ப்பதிவுலகத்துல இருக்காங்களா அப்படின்னு ஒரே ஆச்சரியம். ஒத்த கருத்துடைய எத்தனை அன்பர்கள்,அவர்கள் பார்வையில் விழுந்து பின் புகைப்படப்பெட்டியில் பதிந்த அருமையான படங்கள் அப்படின்னு ஒரு பத்து நாளைக்கு ஒரு இணைய புகைப்படக்கண்காட்சியே பாத்தா மாதிரி ஒரு உணர்வு. உங்களுக்கும் அப்படிதானே இருக்கு?? :)

போட்டின்னு பெயரை வெச்சா கூட,எங்களுடைய குறிக்கோளே இதுதானே!! புகைப்படக்கலை சார்ந்த அனைவரும் ஒன்று சேர வேண்டும்!! நாம் நமக்குள்ளே படங்களையும் எண்ணங்களையும் பகிர்ந்து கொண்டு நம் கலையில் மேலும் மேலும் கற்றுக்கொள்ள வேண்டும்,சிறக்க வேண்டும். இப்படிப்பட்ட இணைய உரையாடலுக்கு உறவாடலுக்கும் இந்த போட்டி ஒரு நல்ல பாலமாக இருக்கிறது என்பது கண்கூடு!!

முன்பே ஒரு பதிவில் கூறியது போல ,எது நல்ல படம்,எது அழகாக இல்லை என்று யாரால் கூறிவிட முடியும்??? நடுவர்கள் அவர்களின் பார்வையில் எது அழகாக தெரிகிறதோ ,அதைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். பின் இது போன்ற போட்டிகளால் என்ன இலாபம்???

நம் படங்களை வெளியிடுவதால் மற்ற ஆர்வலர்கள் வந்து பார்க்கவும் தங்கள் கருத்துகளை கூறவும் இப்படிப்பட்ட போட்டிகள் காரணியாக அமையும். அதுவும் தவிர மற்ற படங்களை பார்ப்பதால் நமக்கும் சில விஷயங்கள் பிடிபடும். அன்பர்களிடம் கலந்துரையாடுவதால் நமக்கு இருக்கும் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை தெளிவுப்படுத்திக்கொள்ளலாம். படங்களுக்கு வரும் பின்னூட்டங்களில் இருந்து நமக்கு இதற்கு முன் தெரியாத விஷயங்கள் பல தெரிய வரலாம்!!
இப்படி வலையுலகில் புகைப்படக்கலை பற்றி கருத்து பரிமாற்றம் நடப்பதற்கான உந்துகோல் தான் இந்த போட்டி!!!
இப்படிப்பட்ட கருத்துரையாடல்களில் உங்களை நீங்கள் ஈடுபடுத்திக்கொண்டால், அதுவே இந்த போட்டியின் மிகப்பெரிய வெற்றி.

இப்படி பத்து நாளைக்கு கலை கட்டிட்டு போட்டிக்கான கடைசி தேதிக்கு வந்து நிற்கிறோம் இப்பொழுது. போட்டிக்கு படம் அனுப்பி சிறப்பித்த அன்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் மற்றும் பாராட்டுக்கள்.
வழக்கம் போல நடுவர்களுக்கு மண்டை காய போகிறது என்று தோன்றுகிறது."நல்ல வேளை நான் பிழைத்துக்கொண்டேன்" என்ற பாடலை என்னையும் அறியாமல் என் உதடுகள் முனுமுனுக்கிறது!!! :-D
போட்டியாளர்களை விட நடுவர்களுக்கு தான் அதிகமான வாழ்த்துக்களை சொல்ல வேண்டும் போல இருக்கிறது!! :-)

ஆனாலும் இந்த பதிவின் நோக்கமே ,பதிவர்களுக்கு இந்த குழுப்பதிவின் ஆசிரியர்களின் சார்பாக மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பது தான்!!!

வாழ்த்துக்கள் மக்களே!! போன தடவை போல இந்த தடவையும் உங்கள் படங்களை அனுப்பி அசத்திட்டீங்க!!!
இப்போ பந்து நடுவர்களின் அரங்கில் உள்ளது (The ball is in the judges' court) :-P

போட்டி அறிவிக்கப்பட்ட போது சொன்னது போல்,போட்டியின் முடிவுகள் ஆகஸ்ட் 14-ஆம் தேதி அறிவிக்கப்படும். அது வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது.


போட்டி ஒருங்கிணைப்பாளர்கள்
சீ.வீ.ஆர் மற்றும் Surveysan.

பி.கு: கலத்துகொண்டவர்களின் புகைப்படங்களின் சுட்டியைப் பார்க்க, வாழ்த்து சொல்ல இங்கே செல்லுங்கள்

Thursday, August 9, 2007

அண்ணா கண்ணன் பதிவில் ஒரு வெள்ளை மயிலின் புகைப்படம் போட்டிருந்தார்.
கீழே உள்ளதை க்ளிக்கி பெருசா பாருங்க.


மயில் ஃபோகஸ் ஆகாம, மயிலை அடைத்து வைத்துள்ள வலைக் கம்பி ஃபோகஸ் ஆனதால், படம் சரியா வராம போயிடுச்சு.

அண்ணா கண்ணனிடம், இதைப் பற்றி கேட்டதர்க்கு, அவர் சொன்னது -
//////// ///////
சர்வேசன்,
முன்னால் இருந்த கம்பி வலை, பின்னால் உள்ளதைத் தடுக்கிறது; படம் எடுக்கும்போதே கவனித்தேன். ஆனால், என் படக் கருவி, வளையின் துளைக்குள் செல்லும் அளவு சிறிதாக இல்லை.
அடுத்து, இந்த இரண்டு மயில்களும் முன்னும் பின்னும் நடந்துகொண்டே இருந்தன. நான் எடுக்கும் நொடியில் அவை தலையைத் திருப்பிக்கொண்டு விடுகின்றன.
அசையாக் காட்சியைவிட அசையும் காட்சியை எடுப்பது, பெரிய சவாலாய் உள்ளது.////
////// /////////

சோ, இதை தவிர்ப்பது எப்படி?
மயிலை அழகா தெரியர மாதிரி எடுக்கணும்னா என்ன பண்ணனும்?

அதுக்கு முதலில் ஆட்டோ-ஃபோகஸ் கேமரா எப்படி வேலை செய்யுதுன்னு தெரிஞ்சுக்கணும்.

ஆட்டோ-ஃபோகஸ் செய்ய பல வகையில் கேமராக்கள் வேலை செய்யும்.
இது, கேமராவின் மாடலை பொறுத்து வேறுபடம்.

சிலவகைகள், infrared (தமிழ்?) கதிரை பாய்ச்சி, முன்னால் இருக்கும் பொருளின் தூரத்தைக் கணித்து, கேமராவின் லென்ஸை ஃபோகஸ் செய்யும்.

சிலவகைகள், ஒலியை எழுப்பி, திரும்பக் கேட்க்கும் எதிரொலியை வைத்து தூரத்தைக் கணிக்கும்.

இன்றைய பெரும்பான்மை கேமராக்கள், கணிப்பொறியின் துணை கொண்டு (CCD - charge coupled device எனப்படும் sensorல் பதியும் படத்தை ஆராய்ந்து), நீங்கள் படம் பிடிக்க நினைக்கும் பிம்பம் துல்லியமாய் இருக்கிறதா என்று கணக்கிடும். அதற்கேற்றார் போல், லென்ஸை தானாக அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும்.

சரி, கேமராதான் தானாவே படம் துல்லியமா வர மாதிரி பாத்துக்குமே? ஆனா, அப்படியும் அண்ணா கண்ணன் படம் ஏன் துல்லியமா வரல?

கேமரா வெறும் கருவிதான். அதுக்கு, நாம வலைய எடுக்க நினைக்கறோமா, அதுக்கு பின்னாடி அழகான மயிலை படம் புடிக்க நெனைக்கறோமான்னு நம் மனசை படிச்சு நடந்துக்க தெரியாது :)

நீங்க வலையை பாத்து கேமராவ புடிச்சு டப்புன்னு க்ளிக்கரை அழுத்துனீங்கன்னா, அந்த நேரத்துல, உங்க கேமரா கையாளும் infrared/soundwave/ccd analysis ல் எது முதலில் அதுக்கு கண்ணில் படுகிறதோ, அதை ஃபோகஸ் செய்யும்.
மயில் போன்ற அசையும் பொருளை ஃபோகஸ் செய்யும் போது, அது அசைந்து கொண்டே இருந்தால், அவ்வளவு எளிதில் அதை ஆட்டோ-ஃபோகஸ் செய்ய முடியாது.

சோ, மயிலப் புடிக்க என்ன பண்ணலாம்?

இதுக்குதான் half-pressனு (அரை அமுக்கு?) ஒரு டெக்னிக் இருக்கு.

view-finderல் ஒரு காட்ச்சியை பார்க்கும்போது, உங்கள் க்ளிக்கரை முழுவதுமாக அமுத்தாமல், அதை பாதி வரை அமுத்த வேண்டும். பாதி அமுத்தினாலே, கேமராவின் ஆட்டோ-ஃபோகஸ் செய்கை உயிர்பெற்று, நீங்கள் பார்க்கும் காட்சி ஃபோகஸ் லாக் செய்யப் படும்.
க்ளிக்கரை அரை-அமுக்கு நிலையிலேயே வைத்திருங்கள்.
view-finderல் ஃபோகஸ் ஆகியிருப்பது, வலையா, மயிலா?

வலையாக இருப்பின், க்ளிக்கரில் இருந்து கையை எடுத்து விடுங்கள். இப்பொழுது, சில மில்லிமீட்டர் கேமராவை திருப்பி, திரும்ப அரை-அமுக்கு அமுக்குங்கள்.
view-finderல் ஃபோகஸ் ஆகியிருப்பது, வலையா, மயிலா?
வலையா? ரிப்பீட்டு அரை அமுக்கு.

அழகான மயிலா? க்ளிக்கரை, முழுவதுமாக க்ளிக்கி படத்தை எடுங்கள்.

இதைப் பத்தி படங்களுடன் விளக்கங்கள் இங்கே. படித்து பயன் பெறுங்கள்.

அரை-அமுக்கு டெக்னிக்கில் சுலபமாய் செய்யக் கூடிய மேலும் சில பட வகைகள்:

1) Zooல் கம்பிக்குப் பின்னால் இருக்கும் மிருகங்கள்.


2) குழந்தைகளை எடுப்பது. குழந்தை சிரிக்கும்போது எடுக்க நினைப்பவர்கள், முதலில் குழந்தையை அரை-அமுக்கு அமுக்கி ஃபோகஸ் லாக் செய்து கொள்ளவும். அப்பறம் விழித் திரையில் குழந்தையை பார்த்துக் கொண்டே இருங்கள். சிரிக்கும்போது, மீதிப் பாதியும் க்ளிக்கினால், சிரிக்கும் குழந்தை துல்லியமாய் வரும்.


3) பொருளை படத்தின் நடுவில் இல்லாமல் ஓரத்தில் வைத்து எடுப்பத். உதாரணம், உங்கள் நண்பர் இயற்கையை ரசிக்கும் காட்சி. படத்தில் உங்கள் ஓரத்தில் இருக்கணும். சும்மா உங்கள் நண்பரை ஓரத்தில் நிற்க வைத்து க்ளிக்கினால், நடுவில் இருக்கும் மற்ற காட்சிகள் ஃபோகஸ் ஆகி, நண்பர் ஃபோகஸுக்கு வெளியே போயிடுவார் ( out of focus :) ). சோ, நண்பரின் முகத்தை அரை-அமுக்கு செய்து, கேமராவை அரை-அமுக்கு நிலையிலேயே சற்று நகர்த்தி, நண்பரை மூலையில் தள்ளி, முழுவதுமாக க்ளிக்கணும். இதோ இப்படி சொதப்பாம எடுக்கலாம்:
(படத்தை களிக்கி முழு விவரம் படிங்க)


ஓ.கேவா? இந்த நுட்பத்தை உபயோகித்து, நீங்க எடுத்துள்ள படத்தைப் போடுங்க.
இதுல வேற எக்ஸ்ட்ரா டெக்னிக்கிருந்தா தெரிஞ்சவங்க சொல்லிட்டும் போங்க.

பி.கு:
half-press - அரை-அமுக்கு? :)
focus - போகஸ்?
clicker - பொத்தான்? :)
view finder - வ்யூ பைண்டர் ?

இதுக்கெல்லாம் தமிழ்ல நல்ல வாக்கு சொல்லுங்க.

வர்டா,
-சர்வேசன் :)

பி.கு: ஆகஸ்ட் போட்டிக்கு படம் அனுப்ப கடைசி நாள் ஆகஸ்ட் 10. அட்டகாசமான பல படங்கள் வந்துள்ளன இதுவரை.

Friday, August 3, 2007

பதிவர் சத்தியா, அழகான படங்களை அனுப்பும் ஒரு பதிவர். அவரது இந்தப் பதிவில் கீழ்கண்டவாறு சொல்லியிருந்தார்...

"அதென்னவோ கறுப்புவெள்ளை மாதிரி உணர்ச்சிகளை மட்டும் காண்பிக்க வண்ணப்படங்கள் வரமாட்டேன் என்கிறது."
ஆம்.. பல்வேறு சமயங்களில் நிறங்களை விட கருப்பு வெள்ளைக்கு உணர்ச்சிகளின் ஆழத்தைக் கூட்டும் சக்தி இருப்பதைப் பார்த்திருக்கிறேன். அதனாலே விளம்பரப்படங்கள் உலகின் "மெக்கா" என்று அழைக்கப்படும் மாடிசன் அவென்யூ, நியூயார்கில் உருவான ஒரு சில ஜீன்ஸ் பற்றிய விளம்பரங்கள் இன்றும் கருப்பு வெள்ளையில் வந்துகொண்டிருக்கின்றன!!

சரி...ஒரு சோதனை செய்து பார்ப்போம். போட்டிக்குள்ளே போட்டி... தோழியர் காட்டாறு அவர்கள் அனுப்பிய ஒரு படத்தை எனக்குப் பிடித்தபடி சிறீது வெட்டி கருப்புவெள்ளையாக்கியுள்ளேன். இரண்டு படங்களில் உங்கள் ஓட்டு கலருக்கா அல்லது கருப்பு வெள்ளைக்கா?..பின்னூட்டத்தில் வாக்களியுங்கள்..உங்கள் கருத்துக்களோடு!

கலரா?கருப்பு வெள்ளையா


யாருக்கு உங்கள் ஓட்டு? கலருக்கா, கருப்பு வெள்ளைக்கா?

சீ.வீ.ஆரின் சேர்ப்பு!!
---------------------
அப்படியே Sepia-லையும் மாத்தி பாத்தேன்!!
எப்படி இருக்குன்னு பாத்து சொல்லுங்க!! :-)

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff