Monday, August 29, 2011

வணக்கம் மக்கா,
இந்த மாத போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்த படங்கள் கீழே,

மூன்றாம் இடம்
காயத்ரி


இரண்டாம் இடம்
வருண்முதல் இடத்தில் இருப்பது
தமிழ்செல்வி


வெற்றி பெற்றவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் !

போட்டி படங்களுக்கான எனது கருத்துக்களை போட்டியின் ஆல்பத்தில் சேர்த்துள்ளேன்.

பங்கு பெற்ற அனைவருக்கும் நன்றி !!!

Thursday, August 25, 2011

வணக்கம் மக்கா,

சோகமான நிகழ்வுகளை படம் எடுக்க வைத்ததற்காக மன்னிக்கவும். போட்டியில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றி !

மாதிரி படங்கள் பற்றி பதிவு செய்த ராமலட்சுமி அவர்களுக்கு நன்றி !

அடுத்த சுற்றுக்கு முன்னேறிய படங்கள் கிழே. அவர்களுக்கு வாழ்த்துகள்.


அவினாஷ்மணி


காயத்ரி


சுரேஷ்


தமிழ்செல்வி


ஜேம்ஸ் வசந்த்


மதன்லால்ஸ்


முஹமெத்ரபி


R.N.சூர்யா


வானம்


வருண்


அனைத்து படங்களுக்குமான என்னுடைய கருத்துகளை பதிவாக வெளியிடுகிறேன். போட்டி முடிவுடன் உங்களை விரைவில் சந்திக்கிறேன்.

Saturday, August 13, 2011

டுத்து நாம் பார்க்கக்கூடியது கான்ட்ராஸ்ட் என்கிற நிற வேறுபாடு.

இந்த வேறுபாடு எங்கிருந்து வரும்? வெளிச்சம் பொருள் மேல ஒரே பக்கத்தில் இருந்து ஒரே கோணத்தில் விழும்போது வரும். இப்படி விழும்போது பொருளோட ஒரு பக்கம் அதிக வெளிச்சமும் மறு பக்கம் குறைவாகவும் இருக்கும். இதான் வேறுபாடு. பொருள் மேலே எல்லா கோணங்களிலேயும் வெளிச்சம் விழுந்தா அது குறைவான – லோ- கான்ட்ராஸ்ட்.

இப்படி அதிக கான்ட்ராஸ்ட் தரும் வெளிச்சத்தை ஹை கான்ட்ராஸ்ட் உள்ள ஒளி மூலம் என்றும் குறைவாக கான்ட்ராஸ்ட் தரும் வெளிச்சத்தை லோ கான்ட்ராஸ்ட் உள்ள ஒளி மூலம் என்றும் சொல்வோம்.

எப்படி இது அதிகம் குறைவுன்னு கண்டுபிடிக்கிறது? சுலபம். அதிக கான்ட்ராஸ்ட் இருந்தா நிழல் விழும். அந்த நிழல் கோடு வரஞ்சு இதோ பார் இது வரை இருக்குன்னு சொல்கிற அளவு துல்லியமா இருக்கும்.அஹா! இப்ப புரியுதா ஏன் இதைப்பத்தி கவலை படுகிறோம்ன்னு? இப்படிப்பட்ட நிழல் ஹார்ட் ஷேடோ ன்னும் குறைவான கான்ட்ராஸ்ட் இருக்கும் போது கிடைக்கும் நிழலை ஸாப்ட் ஷேடோ ன்னும் சொல்கிறாங்க. குறைவான துல்லியத்தோட எங்கே ஆரம்பிக்கிறது எங்கே முடியதுன்னு தெரியாத மாதிரி இருக்கிறது ஸாப்ட் ஷேடோன்னு சொல்ல வேண்டிய அவசியம் இல்லைதானே?

கோடை காலம் உச்சி வெயில் மண்டையை பொளக்குது. மேகமே இல்லை. இப்ப சூரியன் ஹை கான்ட்ராஸ்ட் மூலம். ஹார்ட் ஷேடோதான் கிடைக்கும். இதே பனிக்காலத்தில சூரியனையே காணாம மேகங்கள் சூழ்ந்துகிட்டு இருக்கிறப்ப கிடைப்பது லோ கான்ட்ராஸ்ட் ஒளி மூலம். சூரிய ஒளி மேகங்களிடையே புகுந்து சிதறி எல்லாப்பக்கங்களிலேந்தும் கீழே வரும் இல்லையா? இதனால் கிடைக்கக்கூடிய நிழல் ஸாப்ட் ஷேடோ:இந்த ஹார்ட் ஸாப்ட் என்கிறது நிழலோட விளிம்பை பொறுத்துத்தான் சொல்கிறோம். நிழல் எவ்வளோ கருப்பு என்கிறதை பொறுத்து இல்லைங்க. நிழல் எவ்வளோ கருப்பு என்கிறது பொருளோட பரப்பு என்ன மாதிரி இருக்கு, பக்கத்திலே இருக்கிற பொருட்கள் மேலே வெளிச்சம் பட்டு இங்கே சிதறுதான்னு பல மத்த விஷயங்களை பொறுத்து இருக்கு.

பொதுவா சின்ன இடத்திலிருந்து வரும் வெளிச்சம் அதிக கான்ட்ராஸ்ட் உம் பெரிய பரப்பில் இருந்து வரும் வெளிச்சம் குறைவான கான்ட்ராஸ்ட் உம் தரும். இவற்றில சில சாதனங்களைப் பொருத்தி கான்ட்ராஸ்ட் ஐ மாத்தவும் முடியும்.

இப்படி எல்லாம் இருந்தாலும் பிஸ்தா போட்டோகிராபர்கள் குறைவான கான்ட்ராஸ்ட் இருக்கிற இடத்தில அதிக கான்ட்ராஸ்டையும் அதிக கான்ட்ராஸ்ட் இருக்கிற இடத்தில குறைவாயும் காட்டுவாங்க. எல்லாம் தொழில் ரகசியம்!

ஒரு படத்தை எப்படி கம்போஸ் செய்யறது, எவ்வளோ எக்ஸ்போசர் கொடுக்கிறது போல பல விஷயங்கள் இருக்காம்! மேலும் எக்ஸ்போசர் கொடுத்தா சிலதுல கான்ட்ராஸ்ட் அதிகமாகும், சிலதுல குறையுமாம்.

எது எப்படியானாலும் கணினி மென்பொருளை பயன்படுத்தி பூந்து விளையாடிடலாம் இப்படி:


படங்கள்: # ராமலக்ஷ்மி

காரமுந்திரி I.
காரமுந்திரி II

-திவா
‘சித்திரம் பேசுதடி’
http://chitirampesuthati.blogspot.com/

Thursday, August 11, 2011

'யாருமில்லாத தீவொன்று வேண்டும்...' இப்பிடி யாராவது நெனச்சிங்கன்ன, உங்களுக்கு இந்த பதிவு பிரயோசனமாக இருக்கும். ஏன்னா எப்பிடி குட்டி உலகம் உருவாக்கலமாங்கிறதான் பாடம். அதுவும் அஞ்சே நிமிசத்துல. உங்கட்ட இருக்க வேண்டியதெல்லாம்.
1. காமரா
2. காம்பியூட்டர்
3. ஃபோட்டோஃசொப் / கிம்ஃப்


அதுக்கு முன்னாடி, பனரோமா (Panorama) பத்தி கொஞ்சம் தெரிச்சுக்குவம். பனரோமா என்பது செந்தமிழில் அகலப்பரப்பு. காட்சிகள அகலமா ஃபோட்டோ புடிச்சா அதான் பனரோமா. இத பனரோமா வியூ (Panorama View/அகலப்பரப்பு காட்சி) என்டும் சொல்லாம். பொதுவாக 4 ஷாட்ஸ் மூலமா இத எடுக்கலாம். இது சொஞ்சம் சிரமமான வேலதான்.

பனரோமா சாம்பிளுக்கு இந்தப் படம்

பனரோமா ஃபோட்டோ புடிக்க எனக்கு நேரமில்ல என்டு நெனச்சிங்கன்னா உங்களுக்கு ஒரு சுலபமான வழி.

சாம்பிளுக்கு....

சாதாரண ஃபோட்டோ ( # ராமலக்ஷ்மி)

பனரோமாவுக்கு பொருத்தமாக Crop செய்யப்பட்டது.

குட்டி உலகம் ரெடி!

குட்டி உலகத்துக்கான ஃபோட்டோவை தெரிவு செய்தல்:
 • 2:1 என்ற விகிதப்படி உள்ள காட்சிகள் சிறப்பானவை (அல்லது 2:1 என்ற விகிதப்படி Crop செய்யப்பட்ட ஃபோட்டோ). எவ்வளவுக்கு அகலம் அதிகமாக இருக்குதோ, அவ்வளவுக்கு சிறப்பான 'குட்டி உலகம்' கிடைக்கும்.
 • ஃபோட்டோவின் கீழ்ப்பகுதியில் (25% அல்லது குறைவாக) மண் தரை, நீர் இருப்பது சிறந்தது. ஏன்னா இதுதான் நடுப்பகுதியாக மாறும்.
 • ஃபோட்டோவின் மேற்பகுதியில் (25% அல்லது குறைவாக) ஆகாயம், மேகம் இருப்பது சிறந்தது.
 • வலப்பக்கமும் இடப்பக்கமும் முடிந்தளவு ஒரே மாதிரியாக (நிறம், காட்சி, காட்சியின் உயரம்) இருப்பது சிறந்த காட்சியை உருவாக்கும். ஏன்னா வல, இட பக்கங்கள் ஒன்னா சந்திக்கும்.
 • காட்சியின் கிடையான (horizontal) எல்லைகள் உயர்ந்து தாழ்வாக இருக்காமல் சமமாக இருக்க வேண்டும். இல்லன்னா 'குட்டி உலகம்' பிளந்ததுபோல் காட்சியளிக்கும்.
உங்க பனரோமா ஃபோட்டோவை ஃபோட்டோஃசொப் / கிம்ஃப் இல் திறந்து கொள்ளுங்கள். அல்லது பனரோமாவுக்கு ஏற்ற மாதிரி Crop செய்து கொள்ளுங்கள்.


படிமுறை 1:
ஃபோட்டோவை சற்சதுரமாக மாற்றுங்கள்.
 • மெனுவில் Image> Image Size
 • Constrain Proportions என்பதன் அடையாளத்தை நீக்கிவிடுங்கள்.
 • "Width" ற்கு ஏற்றவாறு "Height" யை மாற்றிவிடுங்கள். Ex: 1800x1800

படிமுறை 2:
ஃபோட்டோவை தலைகீழாக மாற்றுங்கள்.

 • மெனுவில் Image> Rotate Canvas>180o (எதிர்மறையான குட்டி உலகம் தேவையென்றால் படத்தை தலைகீழாக மாற்றத் தேவையில்லை.)


படிமுறை 3:
ஃபோட்டோவிற்கு ஃபோலார் எஃபெக்ட்டை அப்ளை செய்தல்
 • மெனுவில் Filter > Distort > Polar Coordinates (கிம்ப்பில் Filters > Distorts > Polar Coords.)
 • “Rectangular to Polar”தெரிவு செய்யப்பட்டிருப்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள்.
90% ரெடி!

படிமுறை 4:
இனி செய்ய வேண்டியதெல்லாம், படத்தை மெருகூட்ட வேண்டியதே. அங்காங்கே இருக்கும் புள்ளிகளை அகற்றி வல, இட பங்கங்கள் பொருந்தும் இடத்தில் உள்ள செயற்கைத்தன்மையினை அகற்ற வேண்டியதுதான்.
Clone Stamp Tool, Smudge Tool என்பன இதற்குப் பயன்படும்.

(படம்: ஜெருசலேம், இஸ்ராயல்)

குட்டி உலகம் ரெடி!

Monday, August 8, 2011

PIT வாசகர்களுக்கு வணக்கம், பொதுவாக புகைப்படக்கலைஞர்கள் பெரும்பாலோனோர்கள் தங்களது படத்தொகுப்புகளில் சிலப்படங்களை "Selective coloring" காக கொடுக்க நினைப்பார்கள். "Selective Coloring" என்பது முழுபடத்தையும் கருப்பு வெள்ளையாக மாற்றிவிட்டு படத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் வண்ணமாக காட்டி பார்ப்பவரின் கவனத்தை ஈர்த்துவிடும் ஓர் நுட்பமாகும். பொதுவாக GIMPலும் போட்டோஷாப்பிலும் இதனை Eraser டூலைக்கொண்டே தான் பெரும்பாலோனோர்கள் செய்வார்கள். இந்த Eraser டூலை கொண்டு "selective coloring" செய்வதை ஏற்கனவே PIT தளத்தில் கட்டுரையாக இங்கே தந்திருக்கிறார்கள். ஆனால் கட்டுரையின் முடிவில் Layer mask கொண்டு அழிப்பது Homework என கட்டுரையை முடித்திருக்கிறார்கள். அந்த Homework ஐ நான் இன்று Class Workகாக உங்களுக்காக தொடருகிறேன்.

நான் இந்த Layer mask பயன்படுத்திதான் போட்டோஷாப் & கிம்பில் "Selective coloring" செய்வேன். Layer mask கின் அடிப்படை தத்துவத்தை நீங்கள் புரிந்துகொண்டால் எளிமையாக Layer mask நுட்பத்தை தேவையான சந்தர்பங்களில் எளிமையாக‌ பயன்படுத்திக்கொள்ளலாம். இது நான் கடைபிடிக்கும் கோட்பாடு. Layer maskகின் அடிப்படை தத்துவம் "black conceals, white reveals" இதனை இன்று முதல் நன்றாக மனதில் பதியவைத்துக்கொள்ளுங்கள்.

சரி கட்டுரைக்கு போகலாம். முதலில் உங்களது படத்தை "GIMP"இல் திறந்துகொள்ளவும்.இப்போது உங்களது "Background" லேயரை Duplicate செய்யவேண்டும். இதற்கு லேயர் பேலட்டில் இருக்கும் "Copy bacground layer" ஐகானை கிளிக்செய்யவும் அல்லது பேக்கிரவுண்டு இமேஜ் லேயரை வலது கிளிக் செய்து "Duplicate background layer" என்பதனை தேர்ந்தெடுக்கவும்.


இப்போது Duplicate செய்த லேயரை நாம் கருப்பு வெள்ளையாக மாற்றவேண்டும் இதற்கு Color>Hue&Saturation அழுத்தவும். இப்போது தோன்றும் டயலாக் பாக்ஸில் Saturation இன் மதிப்பை -100 என தரவும். இப்போது உங்களது படம் கருப்பு வெள்ளையாக மாற்றப்பட்டிருக்கும்.

குறிப்பு : இந்த Hue & Saturation க்கு பதிலாக நீங்கள் Color>Desaturate ம் பயன்படுத்தலாம். இரண்டிற்க்கும் ரிசல்ட் ஒன்றுதான்.
இனி இந்த கருப்பு வெள்ளை லேயருக்கு Layer mask சேர்ப்போம். இதற்கு கருப்பு வெள்ளை லேயரை வலது கிளிக் செய்து "Add Layer Mask" என்பதனை தேர்ந்தெடுக்கவும்.


இப்போது தோன்றும் டயலாக் பாக்ஸில் வெள்ளை நிறத்தை தேர்வு செய்து ஓகே செய்யவும்.


இப்போது உங்களது கருப்பு வெள்ளை லேயரில் Layer mask சேர்க்கப்பட்டிருக்கும். இனி உங்களது டூல் பாக்ஸில் உங்களது Foreground மற்றும் Background ன் நிறங்கள் முறையே கருப்பு & வெள்ளையாக மாற்றவும். இதற்க்கு உங்களது விசைபலகையில் "D" ஐ அழுத்தவும். (லேயர் மாஸ்கின் தத்துவத்தை மீண்டும் ஞாபகத்திற்கு கொண்டு வாருங்கள்).


இனி பிரஷ் டூலை தேர்வு செய்யவும். பிரஷின் அளவை உங்களது விருப்பத்திற்க்கு வைத்துக்கொள்ளவும்.


இனி படத்தில் எந்த பகுதியை வண்ணமாக காட்டவேண்டுமோ அந்த பகுதிகளை பிரஷ் செய்யவும். இப்போது நீங்கள் பிரஷ் செய்த இடங்கள் எல்லாம் வண்ணமாக மாறியிருக்கும்.பிரஷ் செய்யும் போது கூடுமானவரை படத்தை Zoom செய்துகொள்ளவும் பின் அதற்கேற்றார்போல பிரஷ் அளவை தீர்மானித்துக்கொள்ளவும்.
இங்கே தான் ஒரு விஷயம் கவனிக்கபடவேண்டும். நாம் என்னதான் கவனித்து பிரஷ் செய்தாலும் உங்களது ஆப்ஜக்டையும் தாண்டி வண்ணம் வெளியேசென்று படத்தை கெடுத்துவிடும். இது பெரும்பாலும் எல்லோருக்கும் ஏற்படுவதே பார்க்க கீழேயுள்ள படம்:


சரி இதற்கெல்லாம் வழி செய்யத்தானே நாம் லேயர் மாஸ்க்கை ஏற்படுத்தியிருக்கிறோம். அதாவது "black conceals, white reveals" இல்லையா எனவே உங்களது டூல் பாக்ஸில் இருக்கும் Foreground & Background வண்ணத்தை முறையே வெள்ளை & கருப்பு என உல்டா செய்துகொள்ளவும். இதற்க்கு தட்டச்சு பலகையில் இருக்கும் "X" ஐ அழுத்தவும்.
இப்போது மீண்டும் ஒருமுறை பிரஷ் டூலை தேர்வு செய்து நீங்கள் தவறு செய்த இடத்தில் பிரஷ் செய்யுங்கள். வண்ணம் கருப்பு வெள்ளையாக மாறுவதை காணலாம்.பிரஷ் அளவை உங்கள் தேவைக்கு தகுந்தவாறு செட் செய்து கொண்டு பணிபுரிந்தால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

Final image:

ஆக இதுதான் Layer maskன் தத்துவம் இதனை புரிந்துகொண்டால் புகைப்பட எடிடிங்கில் பல இடங்களில் பேருதவியாக இருக்கும். இனி PIT வாசகர்களாகிய நீங்களும் "Selective coloring" இல் அசத்துவீர்கள் என நம்புகிறேன்.

குறிப்பு: நான் என்னுடைய கணினியில் இயங்குதளம் மற்றும் மென்பொருட்களை பிரெஞ்சு மொழியில் பயன்படுத்துவதால் என்னுடைய Screen shot கள் பிரெஞ்சு மொழியில் இருக்கிறது என்பதை வாசகர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.
***
Lesson By ‘Nithi Clicks’http://www.flickr.com/photos/nithiclicks/

Friday, August 5, 2011

இந்த மாதத்திற்கான தலைப்பு - சோகம் :( அப்படின்னு அறிவிச்ச நடுவர் நாதஸ் அழகாய்ச் சொல்லிட்டார்:
“வாழ்க்கை பயணம் தொடர்ந்து சீராகச் செல்லாது. சில தடுமாற்றங்கள், கவலைகள் இடையிடையே தோன்றும். அத்தகைய உணர்வுகளை இந்த வாரம் படம் எடுக்கப்போகின்றோம். உங்களுடைய படம் இயலாமை, தோல்வி, விரக்தி, பரிதவிப்பு போன்ற உணர்வுகளை வெளிபடுத்தலாம்.”


"மாதிரிப் படங்கள் எங்கே" என உரிமைக் குரல் கொடுத்துப் போன கோமா, ஷ்ராவ்யன் ஆகியோருக்காகவும், தலைப்புக்காகக் காமிராவை கையிலெடுக்க இருக்கும் ஏனைய பிறருக்காகவும்...

#1 ராமலக்ஷ்மி


#2 ஜீவ்ஸ்


#3 கருவாயன்#4 கருவாயன்


#5 ராமலக்ஷ்மி
சோகமென்றாலே வயசானவங்கதானா அப்படின்னு கேட்கவோ, கேட்காமலே ஒரு முடிவு கட்டவோ செஞ்சுடாதீங்க. வாழ்வின் விளிம்பில் ஒரு வித சோகத்தை விரக்தியைப் பரப்புகிற மாதிரியாக அமைஞ்சு போன படங்கள் இவை. எல்லாமே உடல்மொழியால் உணர்வை உணர்த்துவதாய் அமைஞ்சிருக்கு இங்கே.

ஆனா உணர்வை வெளிப்படுத்தும் சக்தி கண்களுக்கே அதிகம் என்பதை நம்மாலே மறுக்க முடியுமா? இதோ கீழுள்ள இந்தச் சிறுவனின் கண்ணில் தேங்கி நிற்கும் ஓராயிரம் கேள்விகளில் ஒன்றுக்குக் கூட நம்மிடம் விடை இல்லை:(!
#6 ஜீவ்ஸ்


இந்தக் கண்களை நேருக்கு நேர் நம்மால சந்திக்க முடியுதா?
#7 ராமலக்ஷ்மி


காட்டு ராஜாவைக் கட்டிப் போட்டோ அதன் கண்களில் உற்சாகமா வழியும்:(?
#8 ராமலக்ஷ்மி


இதுபோல பல விலங்குகள், குறிப்பா நாய்கள், மாடுகள் தனிமையில் சோகமாப் பார்த்தபடி இருக்கும். ஐந்தறிவு விலங்குகளுக்கும் உணர்வுகள் இருக்கே. கவனிச்சுப் பாருங்க.

தனிமையிலே குழந்தைகள் கூடதான் dull-ஆக bored-ஆக உணருவாங்க. பாருங்க இந்தப் பையனை. அம்மா ‘இப்ப விளையாடப் போகாதே. படி உட்கார்ந்து’ன்னு சொல்லிட்டாங்களோ:)?

#9 ஜீவ்ஸ்


இப்போ இலையுதிர்காலம். இந்தத் தலைப்பு அறிவிப்பான நாளுல காருல போயிட்டிருக்கும் போது பல இடங்களில் ஒத்த இலை கூட இல்லாத மரங்களைப் பார்த்தேன். அது கூட ஒரு சோகம்தான். நெடுஞ்சாலை என்பதால் நிறுத்தி எடுக்க முடியலை. ஆனா என்ன அழகான கோணங்களில் எடுக்கலாம்னு மனசு மட்டும் கணக்குப் போட்டுச்சு. அப்படியான படத்தைக் கொடுத்துட்டு ‘நீங்க சொன்னீங்கன்னு எடுத்தனே. மொதப் பத்துக்குள்ள கூட வரலியே’ன்னுல்லாம் கேட்கப்படாது:))! கட்டிடப் பின்னணியில்லாமல் வெண்மேகம் சூழ்ந்த வானோ, நிர்மலமான நீல ஆகாயமோ மட்டுமே பின்னணியா வருமாறு லோ ஆங்கிளில் எடுத்தா நல்லாருக்கும். லைட்டிங்கும் சோகமான மூடை கொண்டு வருமாறு இருக்கணும்.

இது ஒரு உதாரணத்துக்குதான். உங்க கற்பனையைத் தட்டி விடுங்க. சோகத்தை எப்படி படமெடுக்க என சோர்வாயிடாதீங்க. பாருங்க மொட்ட மரம் சோகமா தெரிஞ்சாலும், இன்னும் சில நாளுல துளிர்த்துத் தளிர்விட்டுப் பூத்துக் குலுங்கிடும். அது போலதான். எந்த உணர்வும் நிரந்தரமில்ல. எல்லாம் மாறி மாறி வருவதுதானே வாழ்க்கை. ஹி.. நடுவர் சொன்ன அதே பாயிண்ட்ல முடிச்சுக்கறேன்:)!

Monday, August 1, 2011

வணக்கம் மக்கா,

வாழ்க்கை பயணம் தொடர்ந்து சீராக செல்லாது. சில தடுமாற்றங்கள், கவலைகள் இடையிடையே தோன்றும். அத்தகைய உணர்வுகளை இந்த வாரம் படம் எடுக்கப்போகின்றோம் .

இந்த மாதத்திற்கான தலைப்பு - சோகம் :(


உங்களுடைய படம் இயலாமை, தோல்வி, விரக்தி, பரிதவிப்பு போன்ற உணர்வுகளை வெளிபடுத்தலாம்

போட்டிக்கான விதிமுறைகள் இங்கே.

படம் அனுப்ப வேண்டிய கடைசி தேதி 15-08-2011


நன்றி
நாதஸ்
 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff