Tuesday, June 30, 2015

வணக்கம்.

அருமையான படங்களை ஆர்வத்துடன் அனுப்பியிருந்த அனைவருக்கும் நன்றி.

முதல் சுற்றுக்கு முன்னேறியிருக்கும் பனிரெண்டு படங்கள் எந்த தர வரிசைப் படியும் அன்றி..


# தனஷ்யாம் ராஜ்

# கரிகாலன்

# பாலமுருகன்


# செந்தில் குமார்


# பிரபு

# தேவேந்திரன் S


# ஆன்டனி சதீஷ்

# நரேந்திரன்

# பாலா


# சதாசிவம்

# குமார்


# பிரகாஷ்


# தகாஷ் குமார் J


சட்டமிட்டு அசத்தியிருக்கும் பன்னிருவருக்கும் வாழ்த்துகள். விரைவில் இறுதிச் சுற்று முடிவுகள் அறிவிப்பாகும்.
**



Friday, June 12, 2015

புகைப்படக்கலையில் பயன்படுத்தப்படும் கட்டற்ற மென்பொருட்களைப் பற்றி சென்ற கட்டுரையில் பார்த்தோம். அதில் GIMP பயன்படுத்தி எப்படி உங்கள் படங்களில் Texture சேர்ப்பது என்பதை இப்பொழுது பார்க்கலாம்.

சமீபத்தில் நான் எடுத்த படத்தைக் கொண்டு இதை நான் உங்களுக்கு விளக்கலாம் என நினைக்கிறேன். இதோ நான் எடுத்த படம் ப்ராசெஸ்_க்கு முன்பும், பின்பும்.


1. முதலில் GIMP ஐ திறந்து கொள்ளுங்கள். File --> Open ல் சென்று தேவையான படத்தை தேர்வு செய்து,  பின்பு  Layer Palette (Ctrl - L) ல் Background Layer ஐ Duplicate செய்து கொள்ளவும்.

2. உங்களுக்கு தேவையான Texture ஐ இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொண்டு அதை GIMP ல் புது layer (File  -- > Open as Layers) ஆக திறந்து கொள்ளவும். இங்கு நான்,  கீழே கொடுக்கப்பட்டுள்ள Texture ஐ உபயோகப்படுத்தி உள்ளேன்.



3. புதிதாக சேர்த்த Texture Layer, ஏற்கனவே உள்ள Layer களுக்கு இணையாக Scale(Tool Box ல் Scale toolன் உதவியுடன்) செய்து கொள்ளவும்.

4. பின்பு Layer Palette ல் Texture Layer ன் blending mode ஐ Screen க்கு மாற்றிக் கொள்ளவும். Opacity 50% ஆக முதலில் வைத்துக் கொள்ளவும். அதிலிருந்து உங்கள் ரசனைக்கு ஏற்ற படி மாற்றிக் கொள்ளலாம்.

இப்பொழுது Texture Layer ம் அதற்கு கீழ் உள்ள Layer ஐயும் சேர்த்து ஓர் படத்தைப்  பெற்றிருப்பீர்கள். இதில் பட்டாம்பூச்சியின் மேலும் Texture இருக்கும். இதை நீக்காவிட்டால் படம் அவ்வளவு தெளிவாக இருக்காது.



5. ஆகவே, அதைக் களைய Texture Layer ஐ Right Click செய்து Add Layer Mask என்பதை அழுத்தி Layer Mask ஐ இணையுங்கள்.


பின்பு Tool Box ல் Brush ஐ தேர்வு செய்து, color picker tool -ன் உதவியுடன் பட்டாம்பூச்சியின் மேல் உள்ள வண்ணத்தை தேர்வு செய்து Layer mask -ல் Brush செய்து விடுங்கள். இதனால் Texture -ன் வண்ணம் மாறாமல் அதன் texture மட்டும் நீங்கி தெளிவாக காட்சியளிக்கும்.

இதற்கு மேல் Split toning என்னும் முறையில் உங்களுக்கு பிடித்த வண்ணங்களை சேர்த்துக் கொள்ளலாம்.

Split toning ஐ GIMP அல்லது Darktable -ன் Color Correction மூலமாக செய்து கொள்ள முடியும்.

படம் அழகாக வருவதென்பது, நாம் தேர்வு செய்யும் Texture மற்றும் வண்ணங்களில் தான் உள்ளது. ஆகவே நம் subject ற்கு தகுந்தபடி இவ்விரண்டையும் தேர்வு செய்து கொள்ள வேண்டும்.

Pit வாசகர்களுக்கு இப்பதிவு உபயோகமாக இருந்திருக்கும் என நினைக்கிறன். உங்கள் கருத்துக்களைத்  தெரிவியுங்களேன்.
***

- வனிலா பாலாஜி

Tuesday, June 9, 2015

#1


புகைப்படம் எடுக்கும் போது போதிய எச்சரிக்கை/ பாதுகாப்பு இன்றி விபத்துகள் நேர்வதைக் கேள்விப் படுகையில் மனம் மிகவும் வருத்தம் அடைகிறது.   புகைப்படக்கலை அருமையானது. இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் உயிர் யாவினும் விட மேன்மையானது. பாதுகாப்பே நம் முதல் நோக்கம். 

சில பாதுகாப்புக் குறிப்புகள். உங்களுக்கு உதவக் கூடும். 
​​
​1 -  புகைப்படம் எடுக்க சற்றே ஆபாத்தான இடம் என்றாலும்  தனியாகச் செல்வதை தவிர்க்கவும்.  ​

2 - தவிர்க்க இயலாத  சூழலில் அப்படி சென்றே ஆக வேண்டி இருப்பின் கண்டிப்பாக குடும்பத்தாரிடம் உரிய தகவல்கள் அளித்துவிட்டுச் செல்லவும். 

3 -  அலைபேசியை மறக்க வேண்டாம். புகைப்படம் எடுக்குமிடத்தில் ஓரிரு நாட்கள் தங்க வேண்டி இருப்பின், கட்டாயம் பவர் பேங்க் ( Power Bank )  கையிருப்பு வைத்திருங்கள், எந்த சமயத்திலும் .

​4 -  உங்களுடைய கேமரா / லென்ஸ் அனைத்தின் சீரியல் நம்பர்களை தனியாக  அலைபேசியிலோ, தனிப் புத்தகத்திலோ குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.  இக்கட்டான சூழல்களில் கண்டிப்பாக உதவும். உதாரணத்திற்கு, தவற விட்டுப் பின் காவல் நிலையத்தில் சென்று பெற்றுக் கொள்வதோ, நண்பர்களுடன் இருக்கும் போது மாறி மற்றொருவரிடம் சென்றுவிட்டாலோ, இந்த விவரங்கள் உடனடியாக உதவும். 

5 - தங்களின் புகைப்பட உபகரணங்கள் எப்போதும் தங்களுடனே இருக்கட்டும். அதிகம் அறிமுகமற்ற/ சற்று முன் தான் அறிமுகமான நபர்களிடம் கொடுப்பதை தவிர்க்கவும். நீங்கள் புகைப்படம் எடுக்கும் இடத்தை ஆராயவேண்டும் என்றாலும், உபகரணங்களை பாதுகாப்பின்றி  தனித்து விடவேண்டாம்.

6 - நீங்கள் புகைப்படம் எடுக்கப் போகும் இடத்தின் நெறிமுறைகளை முதலிலேயே அறிந்துக் கொள்வது உத்தமம். சில இடங்களில் பெண்களைப் புகைப்படம் எடுப்பது குற்றமாக இருக்கலாம்.  சில இடங்கள் அரசாங்கத்தால் பாதுகாக்கப் பட்ட இடமாக இருக்கலாம் அல்லது தனியாரின் சொந்த இடமாக இருக்கலாம்.  அந்த இடத்தின் சட்ட திட்டங்களை அறிந்து அதற்கேற்ப நடவடிக்கைகள் அமைத்துக் கொள்வது நல்லது. சில இடங்களில் முன் கூட்டிய அனுமதி தேவைப் படும். அதை மீறாமல் நடப்பது நல்லது. 

7 -  ​ நீங்கள் செல்லும் இடத்திற்கு ஏற்றவாறு உடையைத் தேர்ந்தெடுத்தல் நலம்.  வானிலை நிலைமை பார்த்து  அதற்கேற்றவாறு தக்க உடைகளை எடுத்துச் செல்லுங்கள்.
#2

8 - எந்தச் சூழலிலும் வழுக்கி விடாத வகையில் காலணிகள் அணியுங்கள்.  நல்ல  ஷூ அணிவது  உங்கள் கால்களை மட்டுமல்ல,  உபகரணங்களையும் சேர்த்து பாதுகாக்கும். நீங்கள் விழுந்து கூடவே உபகரணங்கள் விழுந்தால் அவற்றின் சேதம் உங்களுக்குச் சொல்லித்தான் தெரியவேண்டுமா என்ன ?

9 - செல்ஃபி எடுக்கும் போது சூழலை கவனியுங்கள். சற்றே அபாயகரமான இடம் என்றாலுமே, தயவு செய்து உங்களின் பாதுகாப்பின் மீது அதிக  கவனம் செலுத்துங்கள்.  சமீபத்தில்  பாய்ந்து வரும் அலையின் பின் புறமாகக் கொண்டு செல்ஃபி எடுத்துக் கொண்ட ஒரு இளைஞரின் கடைசிப் படமாக அது அமைந்தது வேதனைக் குறியது.  அலை இழுத்துச் சென்ற அம்மாணவனின் உடல் சிலநாட்களுக்குப் பிறகே தேடிக் கண்டெடுக்கப்பட்டது என்பது மற்றொரு சோகம்.

10 - சாலைகள், இரயில் தடங்களில் புகைப்படம் எடுக்கும் போது அதீத எச்சரிக்கை தேவை.
#3
நம் எதிரே நின்று பார்க்கும் போது வண்டியின் வேகம் நமக்கு அவ்வளவாகப் புலப்படாது. அது நம்மைக் கடந்து செல்லும் போது உணரும் வேகம் தூரத்தில் இருந்து பார்க்கும் போது உணர இயலாது. அதை சரியாக கவனிக்காமல் போகும் பட்சத்தில் அது பேராபத்தில் முடியலாம்.
#4

11 -  புகைப்படக் கருவிகள் அதிக விலையில் இருப்பின் அதற்கு இன்ஸூரன்ஸ் செய்துக் கொள்வது நல்லது.
#5
12 - சில இடங்களில் வைக்கப் பட்டு இருக்கும் எச்சரிக்கைப் பலகைகளில் இருக்கும் வாசகத்தை மதியுங்கள். அவை நம் பாதுகாப்பிற்கானவை என்பதை உணர்ந்துக் கொள்ளுங்கள். 

13 -  புகைப்படக் கருவிகள் சுமந்து செல்லும் பைகளில், அவை புகைப்படக் கருவிகளுக்கானவை என்ற அடையாளங்கள் இருப்பதை தவிர்க்கவும். இது பெரும்பாலான திருடர்களிடம் இருந்து உங்கள் உடைமைகளை  பாதுகாக்க உதவும். 

14 - ஒரு இடத்தின் அழகில் மெய் மறந்து அதிலேயே இருந்து விடவேண்டாம். எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் எச்சரிக்கை உணர்வு வேண்டும்.  திருடர்கள், வாகனங்கள், விலங்குகள் போன்றவை உங்களுக்கு எச்சரிக்கை தந்துவிட்டு வருவதில்லை.  
#6
15 - எங்கு புகைப்படம் எடுத்தாலும்,  தன்னம்பிக்கை (Confident) உடன் எடுங்கள்.   இங்கு எடுப்பது தவறோ, யாரேனும் கவனிக்கிறார்களோ, தவறு செய்கிறோமோ என்ற முக, உடல் பாவனைகள் அந்த இடத்தில் இருக்கும் ஏமாற்றுப் பேர்வழிகளுக்குச் சாதகமாக்கி விடும்.

16 -  புகைப்படம் எடுக்கும்  இடங்களில் தங்களை யாரும் தொடர்ந்து கண்காணிப்பதாகவோ, அல்லது பின் தொடர்வதாகவோ உணர்ந்தால் உடனடியாக தேவையான பாதுகாப்புக்கு உதவியை நாடுங்கள்.    தவிர்க்க இயலாத நேரத்தில் உங்கள் உடைமைகளையும் விட உயிர் பெரியது. புரிந்து நடந்துக் கொள்ளுங்கள். 

17 - புகைப்படம் எடுக்க செல்லும் இடங்களின் மொழியின் அடிப்படை வார்த்தைகள் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.   அந்த இடத்து மக்களிடம் நெருக்கத்தை ஏற்படுத்துவதோடு அவர்களின் ஒத்துழைப்பைப் பெற்றுத் தர அது உதவும்.  எப்படியும் எந்த ஒரு இடத்திலும் உதவியர்களுக்கு நன்றி சொல்ல மறக்கமாட்டீர்கள் அல்லவா ?
**

படங்கள் 3,4: ஐயப்பன் கிருஷ்ணன்
படங்கள் 1,2,5,6: ராமலக்ஷ்மி
***

Sunday, June 7, 2015

முக்கிய அறிவிப்பு:

ம்மாதப் போட்டிக்கான தலைப்பு என்னவெனப் பார்க்கும் முன் போட்டி விதிமுறைகளில்.., போட்டிக்கான படங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரிகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தைக் கவனத்தில் கொள்ளும்படிக் கேட்டுக் கொள்கிறோம்.

பிகாஸா திடீரென மின்னஞ்சல் மூலமாக ஆல்பங்களுக்குப் படம் அனுப்பும் வசதியை நீக்கி விட்ட படியால் சென்ற மாதம் 15 தேதிக்கு மேல் பலரின் படங்கள் ஆல்பத்தில் தானாக அப்டேட் ஆகாமல் போனது. சிலர் இத்தகவலை பின்னூட்டமிட்டுத் தெரிவிக்கவும், அதன் பிறகு மற்றுமொரு மின்னஞ்சலுக்கு (CC) அனுப்பப்பட்டதில் இருந்து படங்கள் மீட்டெடுக்கப்பட்டு ஆல்பத்தில் சேர்க்கப்பட்டன.

இனி பிகாஸா மூலமாக நேரடியாகப் படங்கள் அப்டேட் ஆகமுடியாத சூழலில் ஃப்ளிக்கருக்கு மாறுகிறது PiT. ஆகையால் இனி படங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: hall84eyes@photos.flickr.com
CC அனுப்ப வேண்டிய முகவரி: photos_in_tamil@yahoo.in
[இங்கும் கவனியுங்கள். cc முகவரி முன்னர் அனுப்பியது போலவே இருக்கிறதே என உங்கள் Contacts_ல் update செய்யாது இருந்து விடாதீர்கள். இது யாஹூ ஐடி. முன்னர் பயன்பாட்டில் இருந்தது ஜிமெயில்.]

விதிமுறைகள் பதிவிலும் இந்த மாற்றத்தை அப்டேட் செய்துள்ளோம். மற்றபடி நீங்கள் அனுப்பும் படத்தின் ஃபைல் பெயரும், மின்னஞ்சலின் சப்ஜெக்டும் வழக்கம் போல உங்கள் பெயரில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

கவனக்குறைவாக பழைய முகவரிக்கு அனுப்பி விடாதீர்கள்.

2015 ஜூன் மாதப் போட்டி

Frame within a frame - சட்டத்துக்குள் சட்டம்

இதுதான் இம்மாதப் போட்டித் தலைப்பு. நாம் கட்டம் கட்டும் காட்சியின் ஆழத்தை அதிகரிக்கவும், சுவாரஸ்யம் கூட்டவும், சொல்ல வருவதை அழுத்தமாகக் காட்டவும் இந்த உத்தி கையாளப் படுகிறது. கேமரா பார்வையுடன் இரசனையான கூட்டமைவு(composition)ம் சேர்ந்து பார்ப்பவரை ஈர்க்கும் இந்த வகைப் படங்கள்.

அதுமட்டுமின்றி கேமரா வழங்கும் வழமையான செவ்வக வடிவ சட்டத்திலிருந்து விலகி விதம் விதமாக சட்டமிடும் வாய்ப்பை நம்மைச் சுற்றியிருக்கும் பல விஷயங்கள் நமக்கு வழங்குகின்றன.

வாகனத்தின் பக்கவாட்டுக் கண்ணாடி, பைக் கண்ணாடி, வண்ண மூக்குக் கண்ணாடி, ஸ்மார்ட் ஃபோன் ஆகியவற்றில் சப்ஜெக்டின் பிம்பங்களை கொண்டு வருதலும் ஒரு உத்தி. பயணத்தின் போது இவ்வகைக் காட்சிகளுக்கு ஏராளமான வாய்ப்புகள் உருவாகும். ஜன்னல் அல்லது நுழைவாயில் ஊடாகத் தூரத்தில் தெரியும் கட்டிடங்கள், மலைகள், மரங்களைப் படமாக்கலாம். பரந்த மரக்கிளைகளையே கூடச் சட்டமாக்கி விடலாம். உங்கள் கற்பனைக்கு வானம்தான் எல்லை!

எடுத்த படங்களிலிருந்து தேடி ஒரு சிலவற்றை மாதிரிக்காக இங்கே பகிர்ந்திருக்கிறேன். இதற்கென்றே நீங்கள் களத்தில் இறங்கும் போது சிந்தித்து அசத்தலான படங்களைத் தர முடியும்.

#1

#2


#3

#4

#5

#6

படங்கள் 1 to 6: ராமலக்ஷ்மி

படங்கள் 7 & 8: சர்வேசன்

#7

#8


படங்கள் வந்து சேர வேண்டிய கடைசித் தேதி: 20 ஜூன் 2015
போட்டி விதிமுறைகள் இங்கே.
***

ஜூன் 2015 போட்டி ஆல்பம் - ‘சட்டத்துக்குள் சட்டம்’ இங்கே!
 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff