Thursday, June 28, 2012

சீர்/Uniformity போட்டியில் கலந்து கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட புகைப்படங்களில், முந்திய பத்து படங்களைப் பார்த்திருப்பீர்கள்.
முதல் மூன்று இடம் பெற்ற படங்களை இனி பார்க்கலாம். சென்ற பதிவில் சொன்னது போல், போட்டியில் கலந்து கொள்பவர்களில் அநேகம் பேர் மிகத் திறமையுடன் கலக்குகிறார்கள். ஆனால், இன்னும் பலர், அடிப்படை விஷயங்களை கவனிக்காமல், பொத்தாம் பொதுவாக, படங்களை க்ளிக்கி, எடுத்த படங்களை மெருகேற்றாமல் அனுப்புகிறார்கள்.

போட்டியில் கலந்து கொள்வதில் இருந்தே, உங்களுக்கு புகைப்படக் கலையின் மீது இருக்கும் ஆர்வம் புலப்படுகிறது. சற்று நேரம் ஒதுக்கி, நம் தளத்தில் இருக்கும், அடிப்படை பாடங்களை அலசி, வெற்றி பெறும் மற்ற படங்களை பார்த்து அவதானித்து, அதனுள் இருக்கும் நுணுக்கங்களை புரிந்து கொண்டு, அடுத்த க்ளிக்கு க்ளிக்கும்போது, இன்னும் ஒரு படி மெருகேற்றி எடுக்க வாழ்த்துக்கள்.
யூ கேன் டூ இட்! :)

இன்னும் ஒரு முக்கிய டிப்பு தரேன் புடிச்சுக்கோங்க. டிஜிட்டல் யுகத்தில், எவ்வளவு படம் எடுத்தாலும், செலவு பெருசா ஆகரதில்லை. அதனால, ஒரு காட்சியை, ஒன்றுக்கும் மேற்பட்ட கோணங்கள், அளவுகோல்களைக் கொண்டு படம் பிடியுங்கள். அவற்றில், நல்லதை மட்டும் எடுத்து, சிறிது பிற்சேர்க்கை செய்து, (atleast, white balance fixing) போட்டிக்கும், உங்கள் ஆல்பங்களிலும் அப்லோடுங்கள். இப்படி செய்தாலே, பாதி கிணறு தாண்டிய மாதிரிதான்.

நானெல்லாம், நூறு படம் எடுத்தால், அஞ்சோ ஆறு படம் தான் ஓரளவுக்கு பார்க்கும்படி இருக்கும். அவற்றை மட்டுமே, என் தளத்திலும் ஆல்பத்திலும் பதிகிறேன். அப்பத்தான், இவரும் ரவுடிதான்னு ஒரு கெத்தோட அலைய முடியும். படம் பிடிக்கர எல்லா படத்தையும் பதிவில் ஏத்தினா, என்னை PiTல் இருந்து தூக்கிருவாங்க :)ஸோ, ஷேர் வித் கேர்!

இனி வெற்றிப் படங்களைப் பார்ப்போம்..

மூன்றாவது இடத்தில், Viswanathaன் பேப்பர் கப்பு படம். பளிச்சென்ற கலர். வசீகரிக்கும் சப்ஜெக்ட்டு. கண்ணை உறுத்தாத 'சீரான' கட்டம். அழகு. வாழ்த்துக்கள் Viswanath.


இரண்டாம் இடத்தில், துரை. க்ரியேட்டிவ் ஷாட். தலைப்புக்கு ரொம்பப் பொறுத்தமாய். நட்ட நடுவில் வைத்து கட்டம் கட்டாமல், கொஞ்சம் இடது ஓரமாய் வைத்து படம் பிடித்ததும் ஈர்ப்பை அதிகரிக்கிறது. கலக்கிட்டீங்க துரை.


முதல் இடத்தில், Udhayan. வலது ஓர ஆரஞ்சு ஆசாமி விளக்குடன் நம்மை ஈர்க்கிறார். அப்பட்டியே, கண் தானாய் அவரின் வலது பக்கத்தில் இருக்கும் மத்த ஆசாமிகளிடம் அழைத்துச் செல்கிறது. பின்னாலிருக்கும் ஆட்கள் கண்களை உறுத்தாமல் இருப்பதும் சிறப்பு. தலைப்புக்கு வெகு பொறுத்தமாய் இருக்கிறது. அதே சமயம், மற்ற படங்களைப் போல் ஒரு செயற்கைத் தனமான 'சீர்' இல்லாமல், இயற்கையாய் அமைந்தது மிகச் சிறப்பு. வெகுவாய் கவர்ந்தது. உதயன், வாழ்த்துக்கள். நன்றீஸ்!


Rajkumarன் படம் அழகாய் இருந்தாலும், கலர் கொஞ்சம் கூடிப் போய், திகட்ட வைத்தது.MervinAnto படம் நேர்த்தி. ஆனால், போலீஸின் பேக் ஷாட் இல்லாமல், இன்னும் கொஞ்சம் நடுவில் சென்று எடுத்திருந்தால், ஒரு உறுத்தல் இல்லாமல் இருந்திருக்கலாம் :)

கலந்து கொண்டவர்களுக்கு நன்றீஸ். அடுத்த மாதமும் கலந்து கலக்குங்க.

Monday, June 25, 2012


போட்டிக்கு வந்த நூறுக்கும் மேலான படங்களை அலசி ஆராய்ந்து பார்த்ததில், கீழிருக்கும் பத்து படங்கள், அடுத்த கட்டத்துக்கு நகருகின்றன.
R.N.Suriya

Udhayan

MervinAnto

Viswanath

Durai

Rajkumar

Sudhakaran

Karthi

asj

அமைதிச்சாரல்

அடுத்த கட்டத்துக்கு நகராத பல படங்களில், பிரதானமாய் தெரிந்த தவறு, காட்சி சரியாக 'கட்டம்' கட்டப் பட்டிருந்தும், ஃபோக்கஸ் சரியாக அமைக்காதது. உதாரணத்துக்கு sandeyaவின் படத்தை பாருங்கள். அருமையான சப்ஜெக்ட். அழகாக படம் பிடித்திருக்கிறார். ஆனால், படத்தை பார்க்கும்போது, முதல் கவனம் பெறுவது, படத்தின் மையப் புள்ளி. அது ஃபோக்கஸ் ஆகாமல், கீழ் வரிசை மணிகள் ஃபோக்கஸ் ஆகியிருப்பது, படத்தின் வசீகரத்தை குறைத்து விடுகிறது. சில சமயங்களில் DOF காட்ட நினைத்து, படத்தின் அழகு சிதைந்து விடுகிறது. இதே காட்சியின், வேறு விதமான படங்கள் இருந்தால், அப்லோடவும். நன்றீஸ்.


பங்களித்த அனைவருக்கும் நன்றி. 'சீரி'ய மூன்று படங்கள் விரைவில் :)

Wednesday, June 20, 2012

அவுட்டோர் ஷூட் போய் ரொம்ப நாளாச்சு’ என சென்ற மாதம் ஒரு ஞாயிறு மாலை கிளம்பி விட்டேன் அருகிலிருந்த ரமண மகிரிஷி பூங்காவுக்கு. பூக்களைப் பிடிக்கலாமெனக் குஷியாகக் கூட வந்த கேமராவுக்குத் தெரியவில்லை அப்போது, அங்கே தனக்கொரு புதையல் காத்திருப்பதை.

# 1. The Common Jezebel (Delias eucharis)
பட்டாம் பூச்சிகளைப் படமாக்க வேண்டுமெனக் கொண்டிருந்த அதன் நீண்ட நாள் எண்ணம் எதிர்பாராமல் நிறைவேறியது:)! சரி, பட்டாம்பூச்சி என்றாலே படபடக்கதானே செய்யும்? அப்புறம் ஏன் அப்படியொரு தலைப்பு? சொல்லுகிறேன்.

அழகுச் சோலைக்குள் நான் நுழைந்ததோ மாலை நேரம். ஆனால் பட்டாம் பூச்சிகளைப் படம் பிடிக்க அதிகாலை நேரமே உகந்ததாம். புலர்ந்தும் புலராத பொழுதில் சோம்பல் முறித்தபடி மந்தகாசமாக இருக்குமாம். அந்த நேரத்தில் நுண்ணிய விவரங்களோடு அவற்றைப் படமாக்க ட்ரைபாட் வைத்து கூட எடுக்கலாமென்றால் எப்படி அசையாமல் இருக்குமென்பதை ஊகித்துக் கொள்ளுங்கள். அசைவற்று சிறகு பிரியாமல் செடியோடு செடியாக மறைந்து கிடப்பவற்றைக் கவனமாகத் தேடினாலே கண்ணுக்கு அகப்படும். பிறகு சூரியனின் கதிர் பரவ ஆரம்பிக்கையில் மெல்லத் தங்கள் சிறகுகளை விரித்துச் சூடேற்றிக் கொள்ளுமாம். இரவெல்லாம் காயப் போட்ட வயிற்றை ரொப்பிக் கொள்ளப் பூவிலே வெகுநேரம் தேன் உறிஞ்சியபடி போஸ் கொடுக்கும். அப்போ கேமராக்களுக்குக் கொண்டாட்டம். மற்ற நேரங்களில்...? கொஞ்சம் திண்டாட்டம்தான்:)!

இந்தத் தகவல் எல்லாம் படம் பிடித்து வந்த பிறகு, எடுத்த வண்ணத்துப் பூச்சிகள் எந்த வகையைச் சேர்ந்தவை என்பதை அறிந்து கொள்ள இணையத்தின் உதவியை நாடிய போது வந்து விழுந்தவை.

உலகில் மொத்தம் 20 ஆயிரம் வகைப் பட்டாம் பூச்சிகள் இருக்க, எனக்கு அன்று தரிசனமும் கரிசனமும் காட்டின மொத்தமே இருந்த மூன்று பூச்சிகள். மூன்றுமே மாலை ஐந்து மணி வெயிலில் மலருக்கு மலர் மகா சுறுசுறுப்பாகத் தாவித் தாவிப் பறந்து கொண்டே இருந்தன. துரத்தித் துரத்தி எல்லாம் எடுக்கவில்லை! அவை பாட்டுக்கு ஆனந்தமாக தேனுண்டு திளைக்க, பறந்த இடமெல்லாம் தொடர்ந்தோடி ஓடி எடுத்திருக்கிறேன்:)!

# 2 பூந்தேனில் மகிழ்ந்து..
ஸ்தம்பிக்க வைக்கும் அழகுத் தீட்டலாக அமைந்த வண்ணங்கள் இறைவன் பறவைகளிடமிருந்து தப்பித்துக் கொள்ள இவற்றுக்கு வழங்கிய வரம். பூக்களோடு பூக்களாக இருக்கும் போது எதிரிக்கு இவை பூவா பூச்சியா என எளிதில் இனம் காணவே முடியாதென்பது எத்தனை உண்மை பாருங்கள்!

# 3 பூவுக்குள் ஒளிந்திருக்கும்...

இவை எல்லாமே ஒன்று முதல் ஒன்றரையடி உயரத்தில் கம்பளமாக பூங்காவெங்கும் விரிந்து கிடந்த செடிகள்.

ஜெஸபெல் சாருக்கு (ஆம், இவங்க மேடத்துக்கு நிறம் இத்தனை அழுத்தமாக இருக்காதாம்) எப்பவுமே வெள்ளைப் பூக்களின் தேன்தான் பிடித்திருக்கிறது. மஞ்சள் பூக்களைத் திரும்பியும் பார்க்கவில்லை. அதற்கு நேர் மாறாக இருந்தார் கொஞ்சம் தள்ளி மஞ்சள் மலர் மேல் ‘என்னைப் பார் என் அழகைப் பார்’ என உட்கார்ந்திருந்த மோனார்க் (ராசா). வெள்ளைப் பூக்கள் இவருக்கு அலர்ஜி. இதெல்லாம் அவதானித்ததில் அறிந்தவை.

#4 Monarch Butterfly (Danaus plexippus)
இவரை வைஸ்ராய் வண்ணத்துப் பூச்சிகளோடு குழப்பிக் கொள்பவர்கள் உண்டு. வைஸ்ராய்க்கு இருப்பது போல் அழுத்தமான பக்கவாட்டுக் கருப்புக் கோடுகள் இவருக்குக் கிடையாது. மேலும் இவருக்கு வெளிப்புறம் மிதமான வண்ணத்திலும், உட்பக்கம் அழுத்தமான ஆரஞ்சிலும் அமைந்திருக்கும்.‘அப்படியா? எங்கே பார்க்கலாம்’ எனத் தடதடவெனப் பக்கத்தில் போய் விடாதீர்கள். போனால் இப்படிதான் சர்ர்ர்ர்ர்ரெனப் பறந்து விடும்.

# 5 மெல்லத் திறக்குது சிறகு


வாங்க கொஞ்சம் பொறுமையாப் பின் தொடருவோம். விட்டுப் பிடிப்போம்.

# 6 தரிசனம்
இப்பத் தெரியுது பாருங்க, உள்பக்கத்தின் அழுத்தமான ஆரஞ்சு வண்ணம்.

இன்னும் கொஞ்சம் கரிசனம் வச்சு அதே பூவில் கிர்ர்ர்னு ஒரு வட்டமடிச்சு, அகல விரிச்சுது சிறகுகளை, அடடா! என்ன அழகு!

# 7 விரித்து வைத்தப் புத்தகம்
இவரோட Wing span மூன்றரையிலிருந்து நாலரை அங்குலம்.

இவரும் சரி, ஜெசபெலும் சரி ஒருசில நொடிகளாவது உட்கார்ந்திருந்தார்கள். தேனை ருசித்து இழுக்கையில் ஆடாமல் அசையாமல் இருந்தார்கள். ஆனா க்ரிம்சன் ரோஸ் அப்படியில்லை. என்னை ரொம்பவே ட்ரில் வாங்கிட்டாரு:(!

# 8 Crimson Rose(Atrophaneura hector) - Red bodied Swallowtails


எந்தப் பூவிலும் ஓரிரு நொடிக்குமேல் உட்காரவில்லை.
# 9 ட்ரில் மாஸ்டர்

தேனை உறிஞ்சும் போது என்னதான் பரவசமோ, இல்லே அவசரமோ சும்மா சிறகுகளைப் படபட படபடவென இப்படி அடித்துக் கொண்டே இருந்தார்.
# 10
அதனால் தெளிவாக இவரைப் பதிய முடியவில்லை. இவரின் போக்கு பிடிபட்டதும் ஷட்டர் ஸ்பீட் அதிகரித்து எடுக்க முயன்றேன். அதற்குள் உயரப் பறந்து மறைந்து விட்டார். போகட்டும், இன்னொரு முறை மாட்டாமலா போய் விடுவார்:)?

# 11 கைவிசிறி


விதம்விதமான வகைப் பட்டாம்பூச்சிகளைப் படமாக்க அவற்றிற்கென்றே உரிய பண்ணைகளுக்குச் செல்லலாம். பெங்களூரிலும் கூட உள்ளது. பனர்கட்டா தேசியப்பூங்காவையொட்டி ஆறு வருடங்களுக்கு முன் அமைக்கப்பட்டது. இந்தியாவின் முதல் பட்டாம்பூச்சிப் பண்ணை. செல்லத் தோன்றும் வேளையில் “இப்போ சீசன் இல்லியே” என்பார்கள் யாராவது. அப்படியே தள்ளிப் போய்விட்டது. உங்களில் பலர் சென்றிருக்கவும் கூடும். இந்த வருடமாவது போக வேண்டும். அங்கே வருடத்தின் கடைசி மூன்று மாதங்கள் நிறைய பார்க்க முடியும் என்கிறார்கள். அதற்குக் காரணம் இருக்கிறது.

உலகின் எல்லாப் பாகங்களிலுமே குளிர்காலத்தில் பட்டாம்பூச்சிகள் காலை பத்து மணி வரையிலுமே மந்தகாசமாய்தான் இருக்கும் என்பதும் ஒரு காரணம். இயற்கையான சூழலில் அவை பராமரிக்கப்படும் aviary-யினுள் ட்ரைபாடையும் சில பண்ணைகள் அனுமதிப்பதுண்டு. எந்த மலரில் எந்தப் பின்னணியில் எந்தக் கோணத்தில் எந்த வகைப்பூச்சி வேண்டுமோ இந்த மெகா கூண்டுக்குள் வாய்ப்புகள் அதிகம்.

பூங்காவோ, வீட்டுத் தோட்டமோ, பண்ணையோ எங்கேயானாலும் சரி பொறுமை ரொம்ப அவசியம். சில பூச்சிகள் நமக்கு ஒத்துழைக்கும். சில க்ரிம்சன் போல நம் ஃப்ரேமுக்குள் அடங்க மாட்டேன்னு அடம் பிடிக்கும். ஒரு அரைமணி நேரம் அவதானித்தாலே நமக்குப் புரிந்து விடுகிறது ஒவ்வொரு வகையின் போக்கும் எப்படியானது என்பது. ரொம்ப அருகில் மேக்ரோ க்ளோஸ் அப் லென்சுகள் உபயோகித்து எடுக்க முடியுமா எனத் தெரியவில்லை. யாராவது முயன்று வெற்றி பெற்றிருந்தால் சொல்லலாம். நான் 200mm உபயோகித்துதான் எடுத்தேன். பூச்சிகளின் உடற்கூறு (anatomy) தெளிவாய் தெரியற மாதிரியான படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் எப்போதும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, அவுட்டோரில் சிறப்பாப் படமெடுக்க பொதுவான விதிகளை ஆலோசனைகளை ஏற்கனவே சர்வேசன் பதிவாகத் தந்திருக்கிறார் இங்கே: "படங்காட்ட பத்து சூட்சமங்கள்"!

முடிவாகக் கவனிக்க வேண்டிய முக்கியமான இன்னொரு விஷயத்துக்கு வருவோம். எடுத்த பூச்சிகளை அடையாளம் காணுதல் (Identification)! இணையம் இருக்கையில் இதற்கு மலைக்க வேண்டியதே இல்லைதான். இதற்கென பல தளங்கள் இருந்தாலும் சரியா நாம எடுக்கிற பூச்சியை அடையாளம் காட்டுவதாய் இருப்பதில்லை அவை. பூச்சியின் உடலில் பிரதானமாக இருக்கிற வண்ணத்தில் ஆரம்பித்து எல்லா நிறங்களையும் வரிசைப்படுத்தி, butterfly என முடித்து கூகுள் ஆண்டவரிடம் படங்களைக் கேளுங்க. நாம ஆரஞ்சு என நினைப்பது அங்கே சிகப்பாகப் பதிவாகியிருக்கலாம். ஒத்த படம் கிடைக்கும் வரை மாற்றி மாற்றிப் போட்டுத் தேடுங்க. சட்டுன்னு பார்க்க ஒரே மாதிரி இருந்தாலும் சின்ன சின்ன விஷயங்களில் மாறுபட்டு இருக்கும் சில வகைகள். மொனார்க், வைஸ்ராய் அப்படிதான். அதனால் படத்தை மட்டும் பார்த்து விட்டுப் பொத்தாம் பொதுவாய் முடிவு செய்யாமல் கொஞ்சம் நம்ம விக்கி அக்கா (wikipedia) தரும் விவரங்களையும் வாசிச்சுப் பாருங்க.

பட்டாம்பூச்சிகளைப் படமாக்கும் ஆசையை ஆசையாகவே வைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு அதை நிறைவேற்றும் ஆர்வத்தையும் வேகத்தையும் இந்தப் பதிவு தரும்னு நம்பறேன்:)!
***

Monday, June 4, 2012

நண்பர்களே, வணக்கம்.

மே மாதப் போட்டிக்கு 'காற்று'ன்னு தலைப்பு தந்திருந்தோம். 'காற்றை' எல்லாம் எப்படிய்யா படம்புடிப்பாங்கன்னு யோசிக்கிட்டு இருந்த எனக்கு, வந்திருந்த படங்களைப் பார்த்ததும், மகிழ்ச்சியாய் இருந்தது.
ரொம்பவே வித்யாசமான சிந்தனையுடன், தலைப்புக்கு மிகச் சரியாய் படம் அனுப்பியிருந்தாங்க, அநேகம் பேரும்.
போட்டியை சிறப்பாய் நடத்தி, வெற்றிப் படங்களை தேர்வு செய்த சிறப்பு நடுவர், சத்தியா அவர்களுக்கு நன்றீஸ்.

ஜூன் மாதத்துக்கான தலைப்பை யோசிக்கும் போது, சுள்ளுனு அடிக்கும் வெயில் நினைவுக்கு வந்தது. ஆனா, வெளியில் வெயிலை பாத்து மண்டை காஞ்சு போயிருக்கும் அனைவருக்கும், பிக்காஸாவிலும் வெயிலைப் பாத்து மண்டை காய வைக்கணுமான்னு ஒரு கேள்வி எழுந்தது. சில்லுனு, மழை, தண்ணீர்னு எதையாவது வைக்க்லாம்னா, அதையெல்லாம் ஏற்கனவே வெச்சு முடிச்சாச்சு.

அக்னி வெயில் முடிந்து, பள்ளிக் கூடங்கள் ஆரம்பித்தன என்ற செய்தி கண்ணில் பட்டது. பள்ளிக்கூட மணி அடிச்சதும், ஹோன்னு கத்திக்கிட்டு வீட்டை நோக்கி ஓடிச் செல்லும் குதூகலம் நினைவுக்கு வந்தது.சரி, அதைச் சார்ந்து எத்தையாவது வைப்போம்னு முடிவு பண்ணி, 'சீருடை'ன்னு வைக்கலாம்னு மனசு சொல்லிச்சு. ஆனா, ஒரே கலர் சொக்கா போட்ட பயலுவ படம் மட்டுமே வந்தா போட்டி களை கட்டாது. அதனால, தலைப்பை 'சீர்'னு வைக்கலாம்னு முடிவு.

ஸோ, ஜூன் மாதத்துக்கான தலைப்பு: சீர்/Uniformity
விதிமுறைகள் இங்கே
படம் வந்து சேர வேண்டிய கடைசி தேதி 20-06-2012


கீழே உள்ள மாதிரி 'சீரான படங்களை' எல்லாம் போட்டிக்கு அனுப்பலாம்..
சில உதாரணங்கள்.
- பள்ளிச் சிறார்கள் பலர், 'சீரு'டையில்
- வேலைக்குச் செல்லும் மக்கள், 'சீரு'டையில்
- பார்க்கிங் ஸ்டாண்டில் 'சீரா'க நிறுத்தப்ப்ட்டிருக்கும், ஒரே நிற டாக்ஸி வண்டிகள், அரசுப் பேருந்துகள், etc..
- பலசரக்கு கடைகளில், சீராக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் மசாலா டப்பாக்கள்
- தள்ளு வண்டியில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் காய்கறி
- அலுவலக 'க்யூப்', நாற்காலிகள்/மேசைகள்
- வரிசையான சாலை மரங்கள்..


AN&


கருவாயன்

சர்வேசன்:

Ramalakshmi Rajan


AN&

Ramalakshmi Rajan

Ramalakshmi Rajan

Anton Cruz


ஜமாய்ங்க!
***கவனத்திற்கு: அனுப்பும் படத்தின் கோப்புப் பெயர்(file name) மட்டுமின்றி, மின்னஞ்சலின் சப்ஜெக்டிலும் கண்டிப்பாக உங்கள் பெயர் இருக்க வேண்டும். ஒவ்வொரு போட்டியின் போதும் ஒரு சிலர் இதை செய்யத் தவறி விடுவதால் ‘யார் படம்?’ எனும் கேள்வி எழுகிறது. விதிமுறையைக் கவனமாகப் பின்பற்றக் கேட்டுக் கொள்கிறோம்.
***
 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff