Tuesday, March 25, 2014

வணக்கம் பிட் மக்கா,

பொதுவாகவே "பிட்" மாதாந்திர போட்டிக்கு நடுவரா இருக்கிறது ரொம்ப ரொம்ப கஷ்டமான விஷயம் தான்...ம்ம்ம்ம் எந்த படங்களை விடுவது எவைகளை தேர்வு செய்வதுன்னு ஒரே குழப்பம் தான்.....சரி ரொம்ப டெக்னிக்கலா இல்லாம கொஞ்சம் பார்த்தவுடன் கவனத்தை ஈர்த்த முதல் 10 படங்களையும் பின்னர் அவைகளில் பிடித்த 3 படங்களையும் உங்கள் பார்வைக்கு வைக்கிறோம்.

முதல் 10 இடங்களைப்பிடிக்கும் படங்களை எவ்வித வரிசையுமின்றி பார்க்கலாம் :

அசோக்:


புவனேஷ்:


ஜெயராம் அழகுதுரை:


மதன் மேத்யூ:


முரளி:


முத்துக்குமார்:


பிரபு:


சஞ்சய்:


சூர்யா:


விஜய்:



அடுத்தபடியாக போட்டியின் முடிவிற்குச்செல்லும் முன்னம் ஒரு விஷயத்தை தங்களுக்கு தெளிவுப்படுத்த விரும்புகிறேன்.

அதாவது ஒரு சில அன்பர்கள் போட்டிக்கு இரண்டு படங்களை அனுப்புகிறார்கள்,பிட்டின் போட்டி விதிகளின் படி அவ்வாறு அனுப்புகிறவர்களின் படங்கள் நீக்கப்படும் அல்லது முதலில் அனுப்பும் படம் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்  என்று இருந்தாலும் போட்டியின் விதியை மீறாமல் செயல்பட்டால் நல்லது எனக் கருதுகிறோம். எனவே ஒருவர் ஒரு படத்தைமட்டுமே அனுப்பவேண்டும். ஒருவரே இரண்டு பெயரில் வெவ்வேறு படங்களை அனுப்பி விட மாட்டீர்கள் என நம்புகிறோம்:)!

அடுத்ததாக நீங்கள் போட்டிக்கு அனுப்பும் படத்தில் வானமும் நிலமும் ஒருசேர‌  இருப்பின் அந்த படமானது கட்டாயம்  நேர்படுத்தப்படவேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.(Horizon Straighten குறித்த பதிவை நான் பிட்டில் விரைவில் பகிருகிறேன்.)

உதாரணம் இந்த மாதப்போட்டிக்கு வந்த திரு.மதன் மேத்யூ படத்தின் காம்போசிஷன் எனக்கு மிகவும் பிடித்திருந்தது,எனினும் இந்த Horizon நேர்படுத்தப்படாமல் இருந்ததால் அடுத்த கட்டத்தை எட்டிப்பிடிக்க தவறியது,எனினும் அவரது படத்தை நான் நேர்படுத்தியிருக்கிறேன்.

Org :

Corrected :


அடுத்ததாக போட்டியின் முடிவிற்கு செல்லலாம்:

மூன்றாமிடம் பிடிப்பது :

விஜய்:

நல்ல கம்போசிஷன்,படத்தில் செபியா டோன் அருமை.

இரண்டாமிடம் பிடிப்பது:

அசோக்:




மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் ‘என் உழைப்பை நம்பி என்னால் வாழமுடியும்’  என்கிற இவரது தன்னம்பிக்கை அழகாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்றவருக்கு நல்ல எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது . அதிலிருக்கும் வாசகமும், அதனை போகஸில் கொண்டு வந்திருப்பதும் சிறப்பு. சாதாரணப் படமாக இருந்தாலும் படத்திலிருக்கும் விஷயம் அசாதாரணமானது என்பதால் இரண்டாமிடம் பிடிக்கிறது.

முதலிடம் பிடிப்பது :

முத்துக்குமார்:




அன்றாட பிழைப்பை நம்பி வாழும் இவரது ஏழ்மையிலும், ‘என்னாலும் என்னுடைய மகிழ்சியை வெளிப்படுத்தமுடியும்’ என்பது போலவே ஒரு கவலையில்லாத சிரிப்பை வெகு இயற்கையாகச் சிரித்து நம்மை மகிழ்ச்சியாக்கிய அந்த தருணத்தை அழகாகப் படம் பிடித்துக் காட்டிய முத்துக்குமார் அவர்களுக்கு பிட்டின் வாழ்த்துக்கள்.


மீண்டும் சந்திப்போம்.

Tuesday, March 18, 2014

வணக்கம் பிட் மக்கா,நலமா?

சென்ற வாரம் Rotary Club of Pondicherry Beachtown மற்றும் Canon Showroom ஏற்பாடு செய்திருந்த Photo workshopபிற்கு பாண்டிச்சேரி புகைப்படக்குழுவிற்கு அழைப்புவிடுத்திருந்தனர். எனவே புதுவையை சேர்ந்த புகைப்படக்கலைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

ஸ்டுடியோ லைட்டிங்கில் Portrait படங்கள் எடுக்கப்பட்டதுவீடியோகிராபர்கள் பயன்படுத்தும் டங்க்ஸ்டன் lighting வாயிலாக எடுக்கப்பட்டது. இவ்வாறாக படம் எடுக்கப்பட படத்தில் Color Cast வந்ததுஅதாவது கேமராவில் White Balance ஆனது AWBல் செட்செய்யப்பட்டதால் கேமராவானது சுமார் 3200 கெல்வின்களுக்கு செட்செய்துகொள்ள Skin tone ஆனது சற்று சிகப்புநிற Color Cast காணப்பட்டது. எனவே கேமராவில் இந்த 3200k வை 2600k ஆக மாற்றிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

இங்கே தான் ஒரு விஷயம் கவனிக்கவேண்டும் அதாவது கேனான் 5d,6d,60d போன்ற சற்று விலையுயர்ந்த மாடல்களில் நமது White Balance இன் மதிப்பை சூழ்நிலைகளுக்கேற்ப மாற்றிக்கொள்ள முடியும்.

ஆனால் Entry Level கேமராக்களில் இது சாத்தியம் கிடையாது அல்லவா? எனவே சில கலைஞர்கள் எங்களது கேமராவில் எவ்வாறு மாற்றுவது என கேட்கும் போது RAWவில் ஷூட் செய்துகொண்டு RAW எடிட்டரில் சென்று நாம் விரும்பும் கெல்வின்களை கொடுத்துக்கொள்ளலாம்அல்லது மாடல்களிடம் ஒரு Gray கார்டை கொடுத்து ஒரு ஷாட் எடுத்துக்கொண்டு பின்னர் RAW எடிட்டரில் White Balance சரிசெய்து கொள்ளலாம் என விளக்கம் தந்தனர்.

ஆனால் Gray கார்டுகள் இல்லாமல் JPG யில் படம்பிடிப்பவர்களின் படங்களில் ஏற்படும் Color Castகளை எவ்வாறு நீக்குவது என கேள்வி எழுந்தபோது போட்டோஷாப் போன்ற டூல்களில் தான் சரி செய்துகொள்ளவேண்டும் எனவும் அவற்றை பற்றி பின்னர் விளக்கம் அளிக்கப்படும் என கூறியிருந்தனர்ஆனால் நேரமின்மை காரணமாக அந்த செயல்முறை விளக்கம் அளிக்கப்படவில்லை.

ஆகையால் நட்பு வட்டத்தில் ஒருசிலர் "பிட்" தளத்தில் இதனை விளக்கி ஒரு பதிவு போட்டால் JPG யில் படம்பிடிப்பவர்களுக்கு பயனாக இருக்குமே என கேட்ட போது,  தாராளமா போடலாமே என கூறி இக்கட்டுரையை உங்களுக்கு அளிக்கிறேன்.


கீழேயுள்ள படம் Tungsten Lighting கொண்டு JPGயில் எடுக்கப்பட்டது. இப்படத்தில் மாடலின் Skin Tone ஆனது சற்று ஆரஞ்சு நிறத்துடன் தெரிகிறது இதனை எவ்வாறு சரி செய்யப்போகிறோம் என்பது தான் இக்கட்டுரை.


அதற்கு முன்பாக ஒரு சில விஷயங்களை தங்களுடன் பகிருகிறேன்,அதாவது போட்டோஷாபில் ஒரே வேலையை பல வழியில் செய்யலாம் எனவே இந்த Color Castஐ  நீக்க Hue\Saturation,Curves,Levelsனு நிறைய இருந்தாலும் போட்டோஷாப்பில் அடிப்படை தெரியாதவர்களும் புரிந்துகொள்ளும் விதமாக ஒரு எளிமையான வழியில் சரிசெய்யப்போகிறோம்.

அதாவது Levels,Curves இல் இருக்கும் Black Point,Gray Point,White Point களைக்கொண்டு இந்த Color Castஐ நீக்க முடியும் என்றாலும்,நீங்கள் தவறான Black,Gray,White Points தேர்வு செய்துவிட்டால் படத்தை கெடுத்துவிடும் அதேபோல் ஒருபடத்தில் இருக்கும் Gray Points களை கண்டுபிடிப்பதிலும் போட்டோஷாப்பில் போதிய அனுபவம் இருக்கவேண்டும் என்பதால் நான் இக்கட்டுரையில் ஒரு எளிமையான வழிமுறையை உங்களுக்கு கற்றுத்தருகிறேன்.

முதலில் படத்தை போட்டோஷாப்பில் திறந்துகொள்ளவும். பின்னர் லேயர் பேலட்டில் இருக்கும் பேக்கிரவுண்டு லேயரை தேர்வு செய்து மவுஸில் வலது கிளிக் செய்யவும்.இப்போது தோன்றும் மெனுவில் Duplicate Layer என்பதை தேர்வு செய்து உங்களது படத்தை நகலெடுத்துக்கொள்ளவும்.


இப்போது Filter>Blur>Average என்பதை அழுத்தவும்.இது உங்களது படத்தை முழுவதுமாக ஆய்வு செய்து எந்த நிறத்தால் உங்களது படமானது Color Cast இருக்கிறது என்பதை உங்களுக்கு தெரியப்படுத்தும்.

இப்போது லேயர் பேலட் சென்று Levels Adjustment Layer ஐ தேர்வு செய்யவும்.

பின்னர் Levelsல் இருக்கும் Gray நிற Eyedropper  ஐ எடுத்து இந்த Color Cast லேயரில் ஒரு இடத்தில் கிளிக் செய்யவும்.

இப்போது இந்த Color Cast ஏற்படுத்திய குறிப்பிட்ட நிறமானது கிரே நிறமாக நியூட்ரல் செய்யப்பட்டிருக்கும். இனி டூப்ளிகேட் செய்த லேயரின் கண் அடையாளத்தை நீக்கிவிடுங்கள்.

இப்போது பாருங்கள் Color Cast நீக்கப்பட்டிருக்கும். இனி உங்கள் படத்தினை உங்கள் விருப்பப்படி Process செய்துகொள்ளுங்கள்.

என்றும் அன்புடன்,
நித்தி ஆனந்த்

Saturday, March 15, 2014

மகளிர் தினம் அனுசரிக்கப்படும் இந்த மார்ச் மாதத்தில் ITHI மகளிர் அமைப்பு விழிப்புணர்வுக்காக அறிவித்திருக்கும் ஒளிப்படப் போட்டிதான் FEMME VUE.

ஐடி துறையில் பணியில் இருக்கும் பெண்கள் எதிர்கொள்ள நேரும் பிரச்சனைகளுக்கான தீர்வுகளைக் காணவும், அவர்களுக்கு உறுதுணையாக இருக்கவும் பெங்களூரில் இயங்கி வரும் அமைப்பு ITHI. அவ்வப்போது உழைக்கும் மகளிரின் பிரச்சனைகள், உரிமைகள் குறித்த கருத்தரங்கங்கள், விவாதங்கள், கூட்டங்களை மகளிருக்காகவும், பொதுமக்கள் உணர்ந்து கொள்வதற்காகவும் தொடர்ந்து நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக அறிவிக்கப்பட்டிருக்கும் இந்தப் போட்டியின் நோக்கம் ஒத்த கருத்தும் புரிதலும் கொண்டவர்களை ஒன்று சேர்த்து மகளிர் குறித்த உலகின் பார்வையை, மகளிர் பிரச்சனைகளை வெளிக் கொண்டு வருவதேயாகும். வேறு எந்த விதத்திலும் சொல்ல முடியாத கதையை மனதில் தைப்பது போல அழுத்தமாகச் சொல்லக் கூடிய சக்தி வாய்ந்தவை ஒளிப்படங்கள் என நம்புகிற அமைப்பு, அனைவரையும் இதில் பங்கு கொண்டு தம்மைக் கெளரவிக்கக் கேட்டுக் கொள்கிறது.

படங்கள் கண்டிப்பாகப் பின் வரும் கருக்களை வெளிப்படுத்துபவையாக இருக்க வேண்டும்:

  • வெவ்வேறு சமுதாயங்கள் பெண்களை எப்படிப் பார்க்கின்றன.. சித்தரிக்கின்றன..
  • சமுதாய வளர்ச்சியில் பெண்களின் பங்கு.. அரசியல், கலை, கல்வி, ஆய்வுத் துறை, தொழில் துறை,  ஊடகங்கள் ஆகியவற்றில் பெண்களின் இடம்..
  • இன்றைய உழைக்கும் மகளிர்.. சமூகம் அவர்களை எப்படி நடத்துகிறது..

பிரிவுகள்:

  • A பிரிவு, தனிப்படங்களுக்கானது.
  • B பிரிவு, ஒளிப்படக் கதைக்கானது (அதாவது 2 அல்லது 5 படங்கள் ஒரு குறிப்பிட்டக் கருவை வெளிப்படுத்துவதாக.. அல்லது ஒரு கதையைச் சொல்வதாக.. இருக்க வேண்டும்).
கவனிக்க வேண்டிய முக்கிய  விதிமுறைகள்:
  • படங்களை அனுப்பக் கடைசித் தேதி: 27 மார்ச் 2014 மாலை ஐந்து மணி.

  • உலகின் எல்லாப் பாகங்களிலிருந்தும் ஆண், பெண் இரு பாலினரும், எந்த வயதினரும், எந்த நாட்டினரும் என யார் வேண்டுமானாலும் போட்டியில் கலந்து கொள்ளலாம்.
  • ஒருவர் எத்தனை படங்கள் வேண்டுமானாலும் கொடுக்கலாம். ஆனால் ஒரே படத்தை இரண்டு பிரிவுகளுக்கும் கொடுக்கக் கூடாது.
  • அடிப்படை திருத்தங்கள் செய்து படங்களை மேம்படுத்த அனுமதி உண்டு.
  • வண்ணம், கருப்பு வெள்ளை இரண்டு வகைப்படங்களும் தரலாம்.
  • JPG file ஆக சமர்ப்பிக்க வேண்டும்.
  • 1500x2100 பிக்ஸல்; 150-க்கு அதிகமான dpi மற்றும் 20 MB அளவு வரை இருக்கலாம். [வெற்றி பெற்றவர்கள் print செய்யும் வசதிக்காக, அதிக resolution படங்களை போட்டிக்குப் பிறகு சமர்ப்பிக்கக் கேட்டுக் கொள்ளப்படுவார்கள்.]
போட்டிக்குத் தரப்படும் படங்கள் creative commons License_கு கீழ் வரும். அதாவது அவற்றைப் பிரசுரிக்க.., கண்காட்சியில் பயன்படுத்த.., print செய்ய.., விநியோகிக்க.., இணையத்தில் பயன்படுத்த அனுமதியை விரும்புகிறது அமைப்பு. இதற்கென சன்மானங்கள் எதிர்பாராமல், பயன்படுத்தும் ஒவ்வொரு சமயமும் தெரிவிக்க வேண்டுமென நினைக்காமல் இந்த விதிமுறைகளுக்குச் சம்மதம் என்றால் மட்டுமே கலந்து கொள்ளக் கேட்டுக் கொள்கிறது.

படங்களைச் சமர்ப்பிக்கவும் மேலும் விரிவான விவரங்களுக்கும் இங்கே http://itecentre.co.in/ithi/#events செல்லவும்.

30 மார்ச் அன்று போட்டியில் முதல் 3 இடங்களைப் பெற்றவர்களுக்கு கோப்பைகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும். பெங்களூரில் எந்த இடத்தில்.. என்பது அவர்களது தளத்தில் விரைவில் அறிவிப்பாகும். அத்துடன் அமைப்பின் FB பக்கத்தில் https://www.facebook.com/Ithiforwomen வென்றவர்களது ஒளிப்படங்கள் காட்சிப்படுத்தப்படும்

ஒளிப்பட நுட்பங்கள் பிரமாதமாக அமைய வேண்டும் என்பதை விடவும் எத்தனை வலுவாக படம் கருவை வெளிப்படுத்துகிறது என்பதற்கே அதிக முக்கியத்துவம் தரப்படும்.
***

AID பெங்களூர், விழிப்புணர்வுக்காக நடத்திய ஒளிப்படப் போட்டி குறித்த அறிவிப்பு விரிவாக இங்கே. கலந்து கொண்ட படங்களில் கண்காட்சிக்குத் தேர்வான படங்கள் 15 குறித்த விவரங்கள் இங்கே. இவற்றோடு பெங்களூர் குறித்த மேலும் பல ஒளிப்படங்களுடன், மார்ச் 15 மற்றும் 16 தேதிகளில், பெங்களூரின் தொம்லூர் பகுதியிலிருக்கும் தளம் அரங்கில் நடைபெறவிருக்கும் கண்காட்சியில் வாய்ப்புக் கிடைக்கிறவர்கள் கலந்து கொள்ளுங்கள்!

***

Tuesday, March 11, 2014

வணக்கம் பிட் மக்கா.....நலமா?

Vignette என்பது லென்ஸுகளின் ஒருவித குறைபாடு ஆகும்,ஆனால் பின்நாளில் அதுவே ஒரு எபக்ட்டாக புகைபடக்கலைஞர்களிடம் உருவெடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது படத்தின் ஓரங்களை சற்று கருப்பு வண்ணத்தையோ அல்லது வெள்ளை நிறத்தையோ உருவாக்கி படத்தின் சப்ஜெக்ட்டை மட்டும் பளிச்சென காட்டும் யுத்தியாக இன்று Vignette Effect விளங்குகிறது.

[இந்த Vignette போடுவது குறித்த பதிவை எங்களது பிட் குடும்பத்தின் அங்கத்தினரான திரு.ஆனந்த் விநாயகம் அவர்கள் ஏற்கனவே கிம்பில் உருவாக்குவது குறித்த கட்டுரையை இங்கே பதிவிட்டுள்ளார்.]

இந்தக் கட்டுரையில் நான் போட்டோஷாப் மற்றும் Lightroom பயனாளர்கள் எப்படி இந்த Vignette எபக்ட்டை உருவாக்குவது என விரிவாக பார்க்கலாம்.


இங்கே ஒரு விஷயத்தை உங்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
அதாவது ஒரு குறிப்பிட்ட எபக்ட்டை போட்டோஷாப்பில் பலவிதமாக உருவாக்கலாம்,எனவே இதுதான் சிறந்தது அதுதான் சிறந்தது என்றெல்லாம் கிடையாது.ஏனெனில் இந்த Vignette எபக்ட்டை பொறுத்தவரையில் போட்டோஷாப்பில் பலவிதமாக உருவாக்கலாம்.எனினும் நான் போட்டோஷாப் யிற்சி தரும் நண்பர்களுக்கும்,ஒரு சில கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்பு எடுக்கும் Facultiesகளுக்கும் சொல்லித்தரும் உத்தியைத்தான் தங்களுக்கும் விளக்குகிறேன்.இது பிற உத்திகளுடன் ஒப்பிடும் போது சற்று எளிமையும் கூட அதைவிட‌ more flexible கூட.

சரி முதலில் உங்களது படத்தை போட்டோஷாப்பில் திறந்துகொள்ளவும்.

இப்போது Filter>Convert to Smart Filters என்பதனை அழுத்தி உங்களது லேயரை Smart Object ஆக மாற்றிக்கொள்ளவும்.உங்களது படம் Smart Object ஆக  மாறுவதன் மூலம் நம்முடைய பிற்சேர்க்கையானது Non-Destructive ஆக நடைபெறும் என்பதும் ,மேலும் உங்களது பிற்சேர்க்கையில் மாற்றம் வேண்டுமெனில் நம் Smart Object  லேயரை நேரடியாக எடிட் செய்து கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இப்போது Filter>Lens Correction  என்பதனை தேர்வு செய்யவும்.இப்போது தோன்றும் Lens Correction விண்டோவில் Custom என்பதை தேர்வு செய்யவும்.




இதில் Vignette என்ற பகுதியில் இருக்கும் Amount மற்றும் Midpoint_டை உங்களது ரசனைக்கேற்ப செட் செய்து கொள்ளவும். Amount ஸ்லைடரை இடமிருந்து வலமாக நகர்த்த வெள்ளை நிற Vignette ம்,வலமிருந்து இடமாக நகர்த்த கருப்பு நிற Vignette ம் கிடைக்கும் என்பதை நினைவில்கொள்ளவும்.

குறிப்பு: நீங்கள் போட்டோஷாப் பழைய பதிப்புகளை(Below CS4) பயன்படுத்துவதாக இருப்பின் இந்த Lens Correction பில்டரானது
 Filter>Distort>Lens Correction என்பதிலிருந்து தேர்வுசெய்து பயன்படுத்தவேண்டும்.

சரி Vignette போட்டாச்சு இப்போது நீங்கள் இன்னும் சில மாற்றம் செய்ய விரும்பினால் உங்களது லேயர் பேலட்டில் இருக்கும் Lens Corrections  Smart Filter_ இருமுறை கிளிக் செய்தால் நீங்கள் என்ன மதிப்பு கொடுத்திருந்தீர்களோ அதே மதிப்பில் அப்படியே அந்த விண்டோ மீண்டும் திறக்கும்,உங்களின் விருப்பப்படி மதிப்புகளை மாற்றிக்கொள்ளலாம்.


சரி இதே Vignette effect_ வேறு ஒரு படத்திற்கு போட்டு பார்க்கவேண்டும் என விரும்பினால் உங்களது லேயரின் மீது மவுஸால் ரைட் கிளிக் செய்யவும் பின்னர் வரும் ஆப்ஷனில் Replace Contents என்பதனை தேர்வு செய்யவும்.


 பின்னர் புதிய படத்தை தேர்வு செய்து ஓகே செய்துகொள்ள உங்களின் புதிய படம் நீங்கள் கொடுத்திருந்த மதிப்பில் Vignette_டுடன் தோன்றும்.


 இப்போது Vignette_ன் மதிப்பில் மாற்றம் செய்ய விரும்பினால் மீண்டும் லேயர் பேலட்டில் Lens Corrections Filter_ஐ இருமுறை கிளிக் செய்ய Lens Corrections விண்டோவானது மீண்டும் தோன்றும்இந்தபடத்திற்கு ஏற்றவாறு Vignette_ன் மதிப்பை கொடுத்துக்கொள்ளவும்.

Lightroom பயன்படுத்துபவர்கள்படத்தை Lightroom_ன் Develop_ல் திறந்துகொண்டுபின்னர் Effects பேனல் சென்று இந்த Vignette எபக்ட்டை உருவாக்கிக்கொள்ளலாம்.


அவ்வளவுதான்,என்ன பிட் மக்கா Vignette Effect எளிமையாக உருவாக்கும் நுட்பத்தினையும் அதனுடன் போட்டோஷாப்பில்  Smart Object_ன் பங்கு என்ன என்பதைக்குறித்த தகவல்களையும் தெரிந்துகொண்டீர்கள் தானே??

அன்புடன்,
நித்தி ஆனந்த்

Wednesday, March 5, 2014

வணக்கம் பிட் மக்கா....நலந்தானா?

“ஏங்க ஆபிஸ் முடிஞ்சி வரும்போது மறக்காம கடைத்தெருக்கு போயி காப்பி தூள் வாங்கிட்டு வந்தாத்தான் இன்னைக்கு சாயங்காலம் உங்களுக்கு காப்பி”னு கன்டீஷன் போடுற இல்லத்தரசிகள், “ஏங்க உங்க ஆபீஸ்ல சாயங்காலம் ஒன் அவர் பர்மிஷன் சொல்லிடுங்க,நானும் எங்க ஆபிஸ்ல சொல்லிடுறேன் கொஞ்சம் சீக்கிரமா கிளம்பிட்டா வீட்டுக்கு போகிற வழியில கடைத்தெருக்கு போயிட்டு காய்கறி வாங்கிக்கிட்டு போயிடலாம்”னு  சொல்லுற மனைவிமார்கள். இந்த டயலாக் எல்லாம் நம்ம வாழ்கையோடு ஒன்றிவிட்டவைகள்...

என்னமோ கடைக்கு போனோமா,பேரம் பேசினோமா,பொருளை வாங்கினோமானு இல்லாம கொஞ்சம் அவர்களை நோக்கிய ஒரு சிறு பயணம்தான்,இந்த மாதம் நாங்கள் உங்களுக்கு கொடுக்கும் அசைன்மென்ட்.. சாரி சாரி.. தலைப்பு "சிறு வியாபாரிகள்".

சிறுவியாபாரிகளைப் படம் பிடிக்க அருமையான இடம் கடைத்தெரு தாங்க, காய்கறி வியாபாரியிலிருந்து கறிக்கடை வியாபாரி வரை ஒரே இடத்தில அருமையா படம் பிடிக்கலாம்.

சில மாதிரிப்படங்கள் இங்கே:

நித்தி ஆனந்த்:

‘கோலிசோடா உங்கள் சாய்ஸ்’


‘போட்டோ மட்டும் புடிக்கிற. வந்து போணி பண்ணுப்பா’



‘ஒரு ரூவாக்காக இவ்வளவு பேரம் பேசுறது சரியா தம்பி’



‘ஒரு போன் பண்ணுங்க. வீடு தேடி நானே வர்றேன்’

ராமலக்ஷ்மி:

“ஒடம்பு தளர்ந்தாலும் மனசுல தெம்பிருக்கு..”

“பஞ்சு மிட்டாய்.. அஞ்சு ரூவாய்”

வண்ணக் கனவுகள்:

“ரெண்டு ரூவாய்க்கா...?!”

ஆன்டன் க்ரூஸ்:

வீதி வீதியாய் விறகு வியாபாரம்..


போட்டி விதிமுறைகள் இங்கே.

படங்கள் வந்து சேரவேண்டிய கடைசித்தேதி: 20 - 3 - 2014

அன்புடன்,

நித்தி ஆனந்த்
 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff