Sunday, May 31, 2015

மே - 2015 மாத போட்டியான  அறிமுகமற்றவரின் உருவப்படம்  (Portrait of the unknown) முடிவிற்கு வந்துள்ளோம். போட்டியில் பங்கு பெற்ற ஒவ்வோர் படமும் ஒவ்வோர் விதத்தில் அழகு.

வெற்றி பெற்ற படங்களை தெரிந்து கொள்ளும் முன், மற்றவர்களின் படங்கள் ஏன் வெற்றி பெறவில்லை என்ற காரணங்களை கூறி விடுகிறேன். 

#மதன் மாத்தீவ் மற்றும்  #பால முகுந்தன் படங்களில் பின்புறம் இன்னும் சற்று நன்றாக இருந்திருக்கலாம். 


#சிவராமன் 
பெரியவர் திரும்பி நிற்கும் திசையில் அதிகம் இடம் அளித்து படத்தின் இடது பகுதியை சற்று குறைத்து கூட்டமைவு (Compose) செய்திருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும்.

#RKC

நல்ல படம். ஆனால் Focus பாட்டியின் முகத்தில் இல்லாமல் குடையில் இருப்பதினால் படம் சிறப்பாக அமையவில்லை. 

# ஆறுமுகவேல்

சிறப்பான படம் தான். ஆனால் கூட்டமைவு (Composition)வில் சற்று கவனம் செலுத்தி கைகள் சற்று வெட்டப்படாமல் படம் எடுத்திருக்கலாம்.


சிறப்புக் கவனம்:

# கார்த்திக் ராஜா 

பொதுவாக Portrait படங்கள் எடுக்கும் பொழுது, யாரை படம் எடுக்கிறோமோ, அவர்களிடம் அனுமதி பெற்று எடுப்பது அவசியம். அப்பொழுது மட்டுமே அவர்கள்  கேமராவைப் பார்ப்பது சாத்தியமாகும்.  ஏனெனில் ஒருவரின் படத்திற்கு உயிர் கொடுப்பதே அவர்களின் கண்கள் தான்.  அவர் கண்கள் காமெராவை பார்த்திருந்தால், முதல் மூன்றுக்குள் இடம் பெற்றிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.



பாரிவேல்

ஒருவரின் படத்துடன், அவர்களின் வாழும் சூழலையும் சேர்த்து படம் எடுப்பது  அவர்களைப் பற்றி கூடுதல் தகவலை அளிக்கும். அவ்வகையில் இப்படம் மிகச்சிறப்பாக அமைந்திருக்கிறது. ஆதலால் சிறப்பு கவனத்தையும் பெறுகிறது. Post Processing -ல் சற்று கவனம் செலுத்தி இருந்திருக்கலாம்.




இனி வெற்றி பெற்றப் படங்களைப் பார்ப்போம்.

மூன்றாம் இடம் - சுந்தர்ராஜன்

இயல்பான அழகிய படம்.



இரண்டாம் இடம்  - ஜவஹர் ஜெயபால்

மனதை அசைத்துப் பார்க்கும் உயிரோட்டம் நிறைந்த படம். Frame சற்று அகலமாக இருந்திருந்தால் மிகச் சிறப்பாக இருந்திருக்கும். மேலும் கையெழுத்து சற்று உறுத்தலாகவும், கால்கள் வெட்டப்பட்டும் உள்ளது.  இவ்விரண்டும் சரியாக இருந்திருந்தால் முதல் இடத்திற்கு கண்டிப்பாக தேர்வு செய்யப்பட்டிருக்கும்.


முதலாம் இடம்: பாலமுருகன் 

 நல்ல படம்.

Portrait - க்கு தேவையான முக அமைப்பு, உணர்வு ஆகியன மிகச் சிறப்பாக பதிவு செய்யப்பட்டிருகிறது. வாழ்த்துக்கள் பாலமுருகன்!!!. 




வெற்றி பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!...

அன்புடன் 
- வனிலா பாலாஜி





Thursday, May 28, 2015

ன்று புகைப்படக்கலையில் நாட்டமுள்ள கலைஞர்கள் அவர்களுடைய படங்களை ப்ராசஸ் செய்வதற்கு பெரும்பாலும் "Photoshop" மற்றும் "Adobe" - ன் தயாரிப்புகளையே பயன்படுத்துகின்றனர். இவ்வகையான மென்பொருட்களை பயன்படுத்துவதற்கு சிறு கட்டணத்தையும் "Adobe" வசூலிக்கிறது. சில காலம் முன்பு வரை, நாம் Photoshop மென்பொருளை வாங்க வேண்டுமென்றால், ஒரு முறை பணம் கொடுக்க வேண்டி இருந்தது. அப்படி ஒரு முறை கட்டணம் செலுத்தி வாங்கினால், அப்பொழுதைய "Photoshop" பதிப்பு முழுவதும் நம்முடையது என்று நாம் சொந்தம் கொண்டாடிக் கொள்ளலாம். ஆனால் அப்பதிப்பை நாம் நம்முடைய நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டால்,  அவர்களின்(Adobe-ன் ) கண்ணோட்டத்தில் அது Piracy(களவு). மேலும் சமீபகாலமாக அதே மென்பொருளின் புது புது வசதிகளை பயன்படுத்திக் கொள்வதற்கு ஏற்ப மாதாந்திர கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இவ்வகையான காரணங்களினால் சற்று வருத்தமடைந்து, வேறு மென்பொருட்களை தேடும் பொழுது கட்டற்ற மென்பொருட்களைப் பற்றித் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு என் கணவரின் மூலமாகக் கிடைத்தது. அவைகளை பயன்படுத்தும் வாய்ப்பு கிடைத்ததினால் இம்மாதிரியான வருத்தங்களை எல்லாம் தவிர்க்க முடிந்தது. அவரின் மூலமே விண்டோஸ் அல்லாத Operating System பற்றியும் தெரிந்து கொண்டேன்.

இனி புகைப்படக்கலையில் பயன்படுத்தும் மென்பொருட்களில் சிலவற்றைப் பார்ப்போம். இன்று கட்டற்ற மென்பொருட்களில் பலவற்றை புகைப்படக்கலைஞர்கள் பயன்படுத்தினாலும், மிகவும் முக்கியமானதாக 3 மென்பொருட்கள் கருதப்படுகிறது. அவை

1. GIMP

2. Darktable

3. Rawtherapee




1. GIMP


GIMP பற்றி அனைவரும் கேள்விபட்டிருப்பீர்கள். இது Photoshop வகையை சேர்ந்த மென்பொருள்.  Photoshop - ன் Layerகளில் வேலை செய்வதைப் போலவே இதிலும் செய்ய முடியும். மேலும்  FX Foundry மற்றும் G 'MIC போன்ற plugin தொகுப்புகளினால் நம்முடைய processing ஐ மேலும் மேம்படுத்திக்கொள்ள முடியும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள plugin தொகுப்புக்களை இணையத்தில் இருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். GIMP க்கு தேவையான plugin-களின் இணைய சுட்டிகளை இங்கு குறிப்பிடுகிறேன். பயன்படுத்திக் கொள்ளுங்களேன்.

FX Foundry  - http://sourceforge.net/projects/gimpfx-foundry/

G 'MIC - http://gmic.eu/gimp.shtml

மேலும் GIMP -க்கு தேவையான பல pluginகளை  http://registry.gimp.org/ லிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

2. Darktable மற்றும் 3. Rawtherapee



Darktable என்பது Lightroom-க்கு இணையான மென்பொருள். GIMP ல் jpg வகையான படங்களை மட்டுமே process செய்ய முடியும். ஆனால் jpg மற்றும் Raw வகையினை சேர்ந்த படங்களை darktable மற்றும் Rawtherapee ஆகியவற்றில் Process செய்து கொள்ளலாம். Windows பயனாளர்களுக்கு Darktable பதிவு இதுவரை வெளியிடப்படவில்லை. ஆனால் Linux மற்றும் Mac பயனர்கள் இதை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

Photoshop - ல் இருக்கும் அனைத்து வசதிகளும்  இவ்வகையான மென்பொருட்களில் இல்லையென்றாலும், பெரும்பான்மையான வசதிகள் இவற்றில் இருக்கின்றன. இவற்றை எல்லாம் தவிர்த்து, இவ்வகையான மென்பொருட்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும் கொடுத்து உதவலாம், எவ்வகையான கட்டுப்பாடும் இல்லாமல். மேலும் S/W எழுத தெரிந்தவர்கள் இவைகளை தங்கள் தேவைக்கு ஏற்றாற்போல் மாற்றி அமைக்கும் சுதந்திரமும் உண்டு. மாற்றி அமைத்தவற்றை தங்களின் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கும் தடையில்லை. இம்மாதிரியான அம்சங்களே இம்மென்பொருட்களை உபயோகிக்கும் ஆர்வத்தை என்னுள் வளர்த்தது.

GIMP பற்றிய அடிப்படைப் பாடங்கள் ஏற்கனவே PIT தளத்தில் இருப்பதினால், முக்கியமான பாடங்களை மட்டும் அவ்வப்பொழுது தொடராக உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என இருக்கிறேன். அடுத்த வாரத்தில் உங்களுடைய படங்களில் textureகளை எப்படி பயன்படுத்துவது என்பதைப் பற்றி பார்ப்போம்.
***

- வனிலா பாலாஜி

Tuesday, May 26, 2015

னைவருக்கும் வணக்கம்.

இம்மாத போட்டியின் தலைப்பான "அறிமுகமற்றவர்களின் உருவப்படம்" என்பதின் கீழ் பல நல்ல புகைப்படங்களை சமர்பித்திருக்கிறீர்கள்.  அனைத்தும் ஒவ்வோர் விதத்தில் அருமை. படங்களை அனுப்பியுள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

முதல் சுற்றுக்கு முன்னேறியுள்ள 10 படங்கள், எந்தவித வரிசையுமில்லாமல்

#ஆறுமுகவேல்



 #பாலமுருகன்


 #ஜவஹர் ஜெயபால்



#கார்த்திக் ராஜா


# M. மதன் மாத்தீவ்


#பாரிவேல்


 #s பாலமுகுந்தன்



#சிவராமன் C


#சுந்தர்ராஜன்

#RKC


முதல் சுற்றுக்கு முன்னேறிய அனைவருக்கும் வாழ்த்துக்கள். இறுதி முடிவுகள் இம்மாத இறுதிக்குள்....

வனிலா பாலாஜி

Monday, May 11, 2015

மே மாதப் போட்டி அறிவிப்பான, சென்ற பதிவில் “Portraitனா என்ன? கொஞ்சம் சொல்ல இயலுமா? இல்லை தமிழ்ல லிங்க் கிடைக்குமா?” இப்படிக் கேட்டிருக்கிறார் PiT வாசகர் சதீஷ் செல்லத்துரை. அவருக்கான பதிலாக மட்டுமின்றி போர்ட்ரெயிட் குறித்த ஒரு அறிமுகமாக இந்தப் பதிவு:



போர்ட்ரெயிட் அல்லது போர்ட்ரெய்ச்சர் என்பது ஒரு நபரின் முகம், முக அமைப்பு, உணர்வுகளை வெளிப்படுத்தும் முகபாவம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கலை வடிவம். அது ஒளிப்படமாகவோ, ஓவியமாகவோ, சிற்பமாகவோ இருக்கலாம். இவை சப்ஜெக்ட் நகராத நிலையில் இருக்கும் போது எடுக்கவோ, வரையவோ, வடிக்கவோ படுகின்றன. குறிப்பாக சப்ஜெக்ட் படம் எடுப்பவரையோ வரைபவரையோ நேராகப் பார்ப்பது போல் இருக்க வேண்டும்.  அப்போதுதான் பார்வையாளரைப் படத்துடனோ ஓவியத்துடனோ வெற்றிகரமாக ஒன்றிடச் செய்ய முடியும். அதுதானே ஒரு கலைஞனுக்கு தேவையானதும் :)?
**

ரி, நாம் இப்போது போர்ட்ரெயிட் ஃபோட்டோகிராஃபிக்கு வருவோம்.

I.  TRADITIONAL PORTRAIT எனப்படும் வழமையான மரபு: இதைத்தான் இம்மாதப் போட்டிக்கான தலைப்பாக நடுவர் அறிவித்திருப்பது.

* முகத்துக்கு முக்கியத்துவம்..

* நபரின் தனித்தன்மையைப் பிரதிபலிப்பது..

* நபர் நேரடியாக கேமராவைப் பார்ப்பது.


* நபரின் கழுத்து வரை..

நெஞ்சு அல்லது உடலின் மூன்றில் இரண்டு பாகம் வரை...

இந்த அளவுகளில் படம் அமைந்தாலே முகபாவத்துக்கு முக்கியத்துவம் அளிக்க முடியும். நபரை கால் வரைக்கும் முழுமையாகக் காட்டுவதும் போர்ட்ரெயிட் வகையில் வந்தாலும் அவற்றை விட மேற்சொன்ன மூன்று வகையே போர்ட்ரெய்ட்டின் அம்சமாகும்.

போர்ட்ரெயிட் பற்றி ஆரம்பித்தாயிற்று. அதிலிருக்கும் மேலும் சில வகைகளைப் பற்றியும் கொஞ்சம் பார்த்து விடுவோமா?

II. ENVIRONMENTAL PORTRAIT எனப்படும் நபர் இருக்கும் சுற்றுச் சூழலைப் பிரதிபலிக்கும் படங்கள். உதாரணமாக மார்க்கெட் அல்லது தெருவோர வியாபாரி, ஒளிப்படம் எடுக்கும் கலைஞர், உணவு விடுதியில் சமைப்பவர், சுவருக்கு வர்ணம் தீட்டுபவர்.. போன்றவர்களைச் சொல்லலாம். முகத்தோடு அவர்கள் ஈடுபடுட்டிருக்கும் செயலையும் சேர்த்து நமக்குக் காட்டுவதாக இருக்கும்.


முகபாவம் முக்கியம் என்றாலும் நேரடியாகக் கேமராவைப் பார்த்தேயாகும் கட்டாயம் கடைபிடிக்கப்படுவதில்லை. கேமராவைப் பார்த்தால் கூடுதல் சிறப்பு.

III.  CANDID PORTRAIT என்பது சப்ஜெக்ட்டுக்குத் தெரிந்தோ தெரியாமலோ அவர்களை இயல்பு நிலையில்.. கேமராவைப் பார்த்திராத வேளையில்.. படமாக்குவது.

பெரும்பாலும் பத்திரிகையியல் (JOURNALISM), பயணப் படங்கள் (TRAVEL PHOTOGRAPHY),  சாலைக் காட்சிகள் ( STREET PHOTOGRAPHY), விழாப் படங்கள் ( EVENT PHOTOGRAPHY) ஆகியவற்றுக்கு கேன்டிட் வகை சிறப்பு சேர்க்கும். இன்னும் சொல்லப்போனால் ஒரு தருணத்தை உறைய வைப்பதன் மூலமாக அந்நபரின் உணர்வுகளை பார்ப்பவருக்குக் கடத்துவது.


 IVLIFE STYLE PORTRAIT என்பது ஒரு தனிநபர் அல்லது நபர்களின் வாழ்க்கை முறையைப் பிரதிபலிப்பது. என்விரோன்மென்டல் மற்று கேன்டிட் இரண்டையும் கலந்து செய்த கலவையாக இருக்கலாம். சுற்றுச்சூழலைப் பிரதிபலிப்பதாக, நபர்கள் இயல்பு நிலையில் கேமராவைப் பார்க்காமலும் இருக்கலாம். அல்லது பார்க்கவும் செய்யலாம்.


இங்கே முக்கியத்துவம் சப்ஜெக்ட்டின் [நபர் (அ) நபர்களின்] வாழ்க்கை அனுபவம் அழுத்தமாக வெளிப்பட வேண்டும். பெரும்பாலும் விளம்பரப் படங்கள் இவ்வகையைச் சார்ந்ததாக இருப்பது கவனித்தால் புரியும். ஃபேஷன், மருந்து மற்றும் உணவுத் தொழிலகங்கள் போன்றவை இத்தகு வாழ்க்கை முறைகளைப் படங்களில் காட்டுவதன் மூலம் மக்களின் உணர்வுகளை எளிதாகத் தொடுகிறார்கள். திருமண விழாக்கள் மற்றும் ஃபேமிலி போர்ட்ரெய்டுகளும் LIFE STYLE வகையைச் சார்ந்தவையே ஆகும்.

மேற்சொன்ன மூன்று வகைக்கும் ஒவ்வொரு மாதிரிப்படத்தை மிகச் சிறிதாகப் பகிர்ந்திருப்பதன் காரணம், சரியாக வாசிக்காமல் இவையே போட்டிக்கான மாதிரிப்படமென நினைத்து எவரும் குழப்பம் அடைந்து விடக்கூடாது.

இந்தப் பதிவின் நோக்கம் போர்ட்ரெயிட் ஃபோட்டோகிராஃபி  அறிமுகம் என்பதால் தெளிவான புரிதலுக்காக மேலும் சிலவகைகளை நாம் பார்த்தோம். இந்த வகைகளும் கூட எதிர்காலத்தில் போட்டித் தலைப்பாகலாம்:).
**
ப்போது இம்மாதப் போட்டிக்கு வருவோம்.

முதல் வகையான ட்ரெடிஷனல் போர்ட்ரெயிட் வகைப் படங்களே இப்போட்டிக்கு ஏற்றவை.

‘அறிமுகமற்றவர்களின்’ உருவப்படம் என்றதும் படத்தில் இருக்க வேண்டியது ஒரு நபரா, அல்லது பல நபர்கள் இருக்கலாமா எனும் சந்தேகம் பலருக்கு வருகிறது. பொதுவாகப் போர்ட்ரெயிட் என்றாலே ‘ஒரு தனி நபரின் முகபாவத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் உருவப்படம்’ என்பது புரிதலுக்குரிய ஒன்றென்பதால் அவ்வாறாக அறிவிக்கப்பட்டது. ‘போர்ட்ரெயிட் என்றால் என்ன?’ எனும் கேள்வியே சிலருக்கு இருக்கும் நேரத்தில் தலைப்பை இப்போது “அறிமுகமற்றவரின்” என ஒருமையில் திருத்தம் தரப்பட்டுள்ளது. ஆக முதல் வகையான ட்ரெடிஷனல் போர்ட்ரெய்ட்டின் கீழ் தரப்பட்டுள்ள குறிப்புகளை மனதில் நிறுத்திப் படங்களை அனுப்புங்கள்.
**
றிமுகமற்றவரின் போர்ட்ரெயிட் படங்களை எடுப்பது எப்படி?

முன்னர் இந்தியாவின் பெருநகரங்களில் மட்டுமே தென்பட்டு வந்த ஃபோட்டோகிராஃபி குழுமங்கள் இப்போது பரவலாகப் பல இடங்களிலும் தோன்றி இயங்கி வருகின்றன. குறிப்பாகத் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் இயங்கி வருகின்றன. ஒளிப்படக் கலைஞர்கள், ஆர்வலர்கள் ஒன்றாக இணைந்து வாரயிறுதிகளில் ஃபோட்டோ வாக் செல்கிறார்கள். இது ஆரோக்கியமான விஷயம். இப்படிக் குழுவாகச் செல்வது பாதுகாப்பானதும் மனிதர்களை அணுக எளிதான ஒன்றும் ஆகும். அறிமுகமற்றவர்களும் உடனடியாக ஒரு புரிதல் ஏற்பட்டு ஒத்துழைக்கிறார்கள்.

பெங்களூரிலும் இப்படிப் பல குழுமங்கள் உண்டென்றாலும் அவற்றில் இணைந்து செயல்படுவது எனக்கு வசதிப்படவில்லை. அன்றாட வெளி வேலைகள், பெங்களூரின் முக்கிய வீதிகளுக்கு வேறு வேலையாகச் செல்லும் சமயங்கள், மக்கள் கூடும் பல்வேறு கண்காட்சிகள், ஏரிகள் மற்றும் பூங்காக்களில் நடைப் பயிற்சி செல்லும் வேளைகள் என கிடைக்கிற வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்கிறேன். சிலருக்கு உபயோகமாய் இருக்கலாம் எனக் கருதி எனது தனிப்பட்ட அனுபவங்களிலிருந்து சில குறிப்புகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

நாம் வாழும் காலத்தில் முடிந்தவரையிலும் விதம் விதமான மனிதர்களை இயல்பு நிலையில் படமாக்கிப் பதிந்திட வேண்டும் எனும் ஆர்வம் கொண்டிருந்த எனக்கு, ஆரம்பத்தில் புதியவர்களை அணுகுவதில் நிறைய தயக்கம் இருந்தது.  அதனால் கேன்டிட் வகை போர்ட்ரெய்ட்டுகளையே அதிகம் எடுத்து வந்தேன். ஆனால் ஃப்ளிக்கர் நண்பர்கள் பலரின் பதிவுகளில் அறியாத நபராயினும்  கேமராவைப் பார்க்கிற மாதிரியாக எடுக்கப்பட்டவற்றில் இருந்த உயிர்ப்பு என்னைக் கவர்ந்தது. அவர்களிடமிருந்து கிடைத்த சில ஆலோசனைகளை செயல்படுத்திப் பார்க்க முடிவு செய்தேன்.

அதில் ஒன்று சப்ஜெக்டுக்கு சற்று தொலைவில், சாலையின் மறுபக்கமோ கூட நின்றபடி சுற்றிவர கேமரா மூலமாக நாம் கம்போஸ் செய்வதாக பாவ்லா செய்தோ அல்லது சில படங்களை எடுத்தபடியோ இருந்தால் சப்ஜெக்ட் “சரிதான். இவர் போற வாரவங்கள, கண்ணுல படற விசயங்கள எல்லாம் படமாக்கித் தள்ளுவாரு போல” எனும் எண்ணத்துக்கு வந்து விடுவார்.  ஏதோ ஒரு நொடியில் அவரது “கண் தொடர்பு” (eye contact) நமக்குக் கிடைத்து விடும். இந்த ஆலோசனை எனக்கு அத்தனை வசதியானதாக இல்லை. உங்களுக்குச் சரிப்பட்டு வருமாயின் முயன்று பாருங்கள்!

ஒருவர் நம்மைப் பார்க்க அவரிடம் கேட்காமல் நிமிடக் கணக்கில் காத்திருப்பதை விட மனிதர்களை அணுகிச் சம்மதம் பெறுகிற இரண்டாவது ஆலோசனை எனக்குப் பொருந்தி வந்தது. இதற்காக நீங்கள் அவர்களோடு பேசியே ஆக வேண்டிய கட்டாயம் ஏதுமில்லை. கேமராவைக் கோணம் பார்ப்பது போல் வைத்துக் கொண்டு நட்பாக ஒரு தலையசைப்பில் சம்மதம் கேட்டால் போதுமானது. அதே போன்ற தலையசைப்பைப் பதிலாகத் தந்து விட்டு விருப்பமானால் போஸ் கொடுப்பார்கள். இல்லையானால் “எடுத்துக்கலாம் ஆனால் நேரடி போஸ் எல்லாம் வேண்டாம்” என்பது போல வேறு திசையில் பார்ப்பார்கள். கண் தொடர்பு கிடைத்தால் அதிர்ஷ்டம்.  இல்லையேல் கேண்டிட் ஆக முடிந்தாலும் பாதகம் இல்லை.

சிலர் தலையசைப்பைத் தாண்டி சிநேகமாகக் புன்னகைக்கவோ ஒரு சில வார்த்தைகள் நம்மோடு பேசவோ செய்வார்கள். நாமும் நலம் விசாரிக்கலாம். அதே சமயம், அட பேசுகிறார்களே என “எங்கே இப்படி நில்லுங்க. அப்படி போஸ் கொடுங்க. இப்படிச் சிரிங்க” என அட்வான்டேஜ் எடுக்காதிருப்பது நல்லது. அவர்களின் பொன்னான நேரத்தையும் மதிக்க வேண்டும்.  அரை நிமிடத்துக்குள் ஒன்றிரண்டு படங்களோடு முடித்துக் கொள்வது சாலச் சிறந்தது. அணுகும் முன்னரே கேமராவில் அதற்கான செட்டிங்குளை தயாராக வைத்துக் கொண்டு அணுக வேண்டும்.

#


மேலே இருக்கும் வயதான பெரியவர் வீடு வீடாகச் சென்று உப்பு, கோலப்பொடி விற்கும் வியாபாரி. நெல்லையில் அம்மா வீட்டுக்குப் போயிருந்தபோது சந்தித்தேன். கேட்கும், பார்க்கும் திறன்கள் குறைந்து வருகிற நிலையில் இருக்கும் இவரை இந்த ஒரு படம் மட்டுமே கேமராவைப் பார்ப்பது போல எடுத்தேன். மற்றபடி இவரது நடை உடைகளை இயல்பு நிலையிலேயே படமாக்கி விட்டிருந்தேன். நம்மால் வயதானவர்களுக்குத் தொந்திரவு இருக்கக் கூடாது.

அறியாத குழந்தைகளை எடுக்கும் போது உடன் வந்திருக்கும் பெற்றோரிடம் தலையசைத்துக் கேட்கலாம். விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளைத் தொந்திரவு செய்யாமல் இயல்பு நிலையிலேயே எடுக்கலாம். அவர்களே நம்மைப் பார்க்கும் பட்சத்தில் நாம் சிரித்தால் அவர்களும் அழகாகச் சிரிப்பார்கள்.
சில பெற்றோர்கள் அவர்களாக முன் வந்து ‘கேமரா பார், சிரி’ என்றும் சொன்னதுண்டு.  விருப்பமில்லாவிடில் நகர்ந்து விடலாம். விருப்பமின்மையைக் கணித்து விடவும் முடியும். என் அனுபவத்தில் அப்படி ஆட்சேபித்தவர்கள் இல்லை. சிறு வியாபாரிகளில் அபூர்வமாகச் சிலர் ’வேண்டாமே’ என்பது போல மறுத்திருக்கிறார்கள். பொதுப்படையாகப் பார்த்தால் மனிதர்கள் பழக இனிமையானவர்களே. அணுகும் விதத்தில் பக்குவம் வேண்டும். சடாரென ஒருவர் முன் கேமராவுடன் போய் நின்று ‘எடுக்கட்டுமா’ எனத் தலையசைத்தீர்களானால் பூசை விழக் கூட வாய்ப்பிருக்கு. இடம், பொருள், ஏவல் என ஒன்றிருக்கிறது அல்லவா? எனவே பக்குவமாய் அணுகுங்கள்.

முத்தாய்ப்பாக ஒன்று. அறியாத மனிதரின் போர்ட்ரெயிட் படங்கள் காலத்தின் பதிவுகள். ஈடுபட்டிருக்கும் கலையில் மூலமாக சமகால வரலாற்றுக்கு நமது சிறு பங்களிப்பு. இத்தகு படங்களின் மூலமாக சமகால மனிதர்களின் உடை நடை வாழ்வியல் சூழல் ஆகியவற்றை ஆவணப்படுத்துகிறோம் நாம்.

***

தொடர்புடைய முந்தைய பதிவு:

2015 மே மாதப் போட்டி அறிவிப்பு


Tuesday, May 5, 2015

அனைவருக்கும் வணக்கம்.

என் ஒளிப்பட அனுபவங்களைப் பாடங்களாக PiT-ல் பகிர்ந்து வந்த நான் இந்த மாதம் சிறப்பு நடுவராக உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இம்மாத போட்டித் தலைப்பு - அறிமுகமற்றவரின் உருவப்படம்  (Portrait of the unknown)

[விரிவான விளங்கங்களுக்கு இந்தப் பதிவு உதவலாம்.]

நமக்குத் தெரிந்தவர்களின் Portrait-ஐ நம்மில் பலர் படம் எடுத்திருப்போம். புகைப்படத்தொழிலில் ஈடுபட்டிருக்கும் சிலர், குழந்தைகளையும் தங்கள் வாடிக்கையாளர்களையும் படமெடுத்திருப்பர். ஆனால் இம்மாதத் தலைப்பிற்காக, முன்பின் தெரியாதவர்களின் படங்களை சமர்ப்பிக்க வேண்டும். அது நீங்கள் வெளியில் செல்லும் பொழுது, உங்கள் கவனத்தை ஈர்த்த குழந்தையாகவோ, ஏதாவது வியாபாரம் செய்யும் பெரியவர்களாகவோ அல்லது உங்களைச் சுற்றி இருக்கும் சாதாரண மக்களாகவும் இருக்கலாம். போர்ட்ரெயிட் என்பதால் அவர்கள் கேமராவைப் பார்ப்பது போல (eye contact) இருப்பது அவசியம்.

மாதிரிப் படங்கள் சில:

வனிலா பாலாஜி:
#1


#2


#3



#4


ராமலக்ஷ்மி:

#5



#6

#7

#8

போட்டி விதிமுறைகள் இங்கே.

படங்கள் வந்து சேர வேண்டிய கடைசித் தேதி: 20 மே 2015

அன்புடன்
- வனிலா பாலாஜி

போட்டி ஆல்பம் இங்கே
 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff