சாய்வு மாற்ற ஒளிப்படம் (Tilt–shift photography) என்பது புல ஆழ தோற்றமிக்க படங்களை உருவாக்க வல்லது. சுருங்கச் சொல்லுவதாயின் ஒரு காட்சியை மிகச் சிறிய அளவில் காட்டும் ஒரு நுட்ப முறையாகும். எடுத்துக்காட்டு: ஒரு சாலையைப் படம் பிடித்தால், அச்சாலையிலுள்ள வாகனங்கள், கட்டடங்கள், மக்கள் என்பவற்றையெல்லாம் பொம்மைகள் போல் காட்டுவதாகும்.
உதாரணம் 1:
இது இஸ்ரேலிலுள்ள ஹைபா எனும் நகரத்தின் ஒரு பகுதி. சாய்வு மாற்ற நுட்பம் மூலம் இங்குள்ள கட்டடங்கள் பார்வைக்கு சிறியதாக, தீப்பெட்டிகள் போல் தெரிகின்றன.
உதாரணம் 2:
இஸ்ரேலுக்கும் ஜோர்தானுக்கும் இடைப்பட்ட சாக்கடலில் உல்லாசப் பயணிகள். சிலர் மிதக்கின்றனர். சிலர் நிற்கின்றனர். சிலர் நடக்கின்றனர்.
நுட்பம் என்ன?
எவ்வளவு பெரிய விடயத்தையும் சாதாரணமான மொம்மைகள் போன்று மாற்றி, பார்வைக்கு இனிமையாக தெரிய வைப்பதுதான் இதன் நுட்பம். படத்தின் நடுப்பகுதியைத் தவிர்த்த கீழும் மேலும் உள்ள பகுதிகள் குவிவற்ற (unfocused), ஆழமற்ற புலக் குவிவை (shallow depth of field) வழங்குவதால் இது ஏற்படுகிறது. கிட்டத்தட்ட இது ஒரு நுண் ஒளிப்படவியல் (macro photography) போன்றது. உதாரணத்திற்கு, நுண் ஒளிப்படவியல் மூலம் ஒரு தேனியை அதன் சுற்றுப்புறத்துடன் படமாக்க முற்பட்டால் தேனிக்கு முன்னும் பின்னும் உள்ள பகுதிகள் (பொதுவாக f/2 aperture அளவில்) குவிவற்றுத் தெரியும். நுண் ஒளிப்படவியல் ஒரு சிறு இடத்தில் மேற்கொள்ளப்படும். அதனை ஒரு பரந்த இடத்தில் (landscape photography) மேற்கொண்டால் எப்படியிருக்குமோ அப்படித்தான் இந்த சாய்வு மாற்ற ஒளிப்படமும் இருக்கும்.
|
சுமார் $2,000 விலைமதிப்புள்ள (Nikon PC-E Micro-NIKKOR 45mm f/2.8D ED) Tilt-Shift Lens |
இதனை சாதாராண வில்லைகள் (lens) மூலம் மேற்கொள்ள முடியாது. இதற்கு சாய்வு மாற்ற வில்லை (Tilt-shift lens) தேவையாகவுள்ளது (மேலேயுள்ள படம்). இதன் ஊடாக படம் பிடித்தால் அழகான சாய்வு மாற்ற படங்களைப் பெறலாம். தேவை, விலை போன்ற காரணங்களினால் இதனை பெரிதாக யாரும் வாங்குவதில்லை. ஆகவே நம்மைப் போன்றவர்கள் எப்படி படம் பிடிப்பது என்ற கேள்வி எழலாம். இப்படியானவர்கள் படம் பிடிக்க இயலாது. ஆனால், பிடித்த படத்தை போட்டோசொப் கொண்டு மாற்றிவிடலாம்.
சாய்வு மாற்ற படம் பிடிக்கவோ அல்லது பிடித்த படத்தை போட்டோசொப் கொண்டு மாற்றவோ சரியான இடம் அல்லது படம் அவசியம். மேலிருந்து கீழ் நோக்கி இருக்கும் இடம் அல்லது படம் பொருத்தமாக இருக்கும். (உதாரணப் படங்களைப் பாருங்கள்)
போட்டோசொப்பில் செய்வது எப்படி?
1. பொருத்தமான படத்தை போட்டோசொப்பில் திறந்து கொள்ளுங்கள். அதனை Quick Mask Mode (Photoshop CS5: Menu > Select > Edit in Quick Mask Mode [குறுக்குவழி Q]) என்பதற்கு மாற்றுங்கள். (படத்தில் 1 என்று கட்டமிடப்பட்டுள்ளது)
2. Tool bar இல் Gradient Tool [குறுக்குவழி Q] என்பதை தேர்வு செய்து (படத்தில் 2 என்று கட்டமிடப்பட்டுள்ளது), Reflected Gradient என்பதை (Gradient Tool இற்கான மெனுவில் நான்காவது) தேர்வு செய்யுங்கள் (படத்தில் 3 என்று கட்டமிடப்பட்டுள்ளது).
3. Gradient Tool மூலம் செங்குத்தாக (மேலிருந்து கீழாக) ஒரு கோடு வரையுங்கள். இப்போது Quick Mask Mode இல் இருப்பதால் அங்கு சிவப்பு பட்டி உருவாகியிருக்கும். Quick Mask Mode இல் இருந்து வெளியேறி வழமையாக நிலைக்கு (Standard Mode) வாருங்கள் [குறுக்குவழி Q]. (படத்தில் 1 என்று கட்டமிடப்பட்டுள்ளது)
4. இப்போது படத்தின் கீழ்ப்பக்கம் தெரிவு செய்யப்பட்டிருக்கும். இது நமது சாய்வு மாற்றத்திற்கு உதவாது. எனவே, சரியாக தெரிவு செய்ய வேண்டும். ஆகவே, படத்தில் காட்டப்பட்ட A முதல் B வரை Gradient Tool மூலம் செங்குத்தாக (நேராக) ஒரு கோடு வரைந்துவிட்டு, வழமையான நிலைக்கு (Standard Mode) வாருங்கள். இப்போது படத்தில் உள்ளவாறு படத்தில் இடைப்பகுதி தவிர்த்த பகுதிகள் (மேல், கீழ் பகுதிகள்) தெரிவு செய்யப்படும். தெரிவு செய்யப்படாத பகுதிதான் நாம் எங்கு காட்சியை முக்கியத்துவப்படுத்தப்போகிறோம் என்பதற்கான பகுதி. எனவே உங்கள் படத்திற்கேற்ப சரியான பகுதியை இனங்கண்டு அதற்கேற்ப Gradient Tool மூலம் தெரிவு செய்யுங்கள்.
5. படத்தில் உள்ளவாறு இடைப்பகுதி தவிர்த்த பகுதிகள் தெரிவு செய்யப்பட்டிருக்கையில் Lens Blur என்பதைத் தெரிவு செய்யுங்கள் (Menu > Filter > Blur > Lens Blur…).
6. உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தெரிவுகளை அமையுங்கள். என்பதை கூட்டிக் குறைப்பதன் மூலம் வேண்டிய மாற்றத்தைச் செய்யலாம். உதாரணத்திற்கான படத்தில் 40 என்றுள்ளது. பின்னர் Ok என்பதைச் சொடுகி வெளியேறுங்கள்.
7. இப்போது உங்களுக்கு வேண்டிய சாய்வு மாற்றம் உருவாகியிருக்கும். எனவே மிகுதியாக CTRL-D என்ற குறுக்குவழியூடான தெரிவு செய்யப்பட்டதை இல்லாது செய்யுங்கள்.
8. படத்தை மேலும் மெருகூட்ட வேண்டிய மாற்றங்களைச் செய்யலாம். குறிப்பாக, Hue/Saturation, Curves செய்வதால் சாய்வு மாற்ற படத்திற்கு மேலும் மெருகூட்டும்.
9. Menu > Image > Adjustments > Hue/Saturation… [குறுக்குவழி CTRL-U] என்பதைத் தெரிவு செய்து Saturation தேவையான அளவு கூட்டிக் கொள்ளுங்கள். எ.கா: 40
10. Menu > Image > Adjustments > Curves… [குறுக்குவழி CTRL- M] என்பதைத் தெரிவு செய்து தேவையான அளவு படத்தை மாற்றிப்பாருங்கள். எ.கா: Input = 7, Output = 9
இப்போது உங்களுக்கு அழகான படம் கிடைத்திருக்கும்.
***