Saturday, September 29, 2007

வணக்கம் மக்களே,
நாம வாங்கற மசாலா பொடி பாக்கெட்டுல இருந்து சமையல் புத்தகம் வரைக்கும் பாத்தீங்கன்னா வித விதமா அழகழகா உணவுப்பதார்த்தங்களை போட்டோ புடிச்சு போட்டிருப்பாய்ங்க! அதை பாத்துட்டு உண்மையாவே அந்த பதார்த்தம் பாக்கறதுக்கு ்பாக்கறதுகு நல்லாவும் சாபிடுவதற்கும் சுவையாவும் இருக்கும்னு நம்பி நாமலும் சமைச்சு பாத்தா வேற மாதிரி இருக்கும (பாக்கறதுக்கும் சரி,சுவையிலும் சரி!! :-))்.இவங்க எல்லாம் எப்படி இவ்வளவு அழகா உணவுப்பதார்த்தங்களை படம் எடுக்கறாங்க,அதே மாதிரி நாமலும் எடுக்கனும்னா என்னென்ன பண்ணனும் அப்படின்னு எல்லாம் பாக்கலாமா??

1.)வெளிச்சம்:
இந்த விஷயம் எந்த ஒரு புகைப்படமா இருந்தாலும் மொதல்ல வந்து நிக்கற விஷயம். உணவுப்பொருட்களை பெரும்பாலும் அறையின் உள்ளே குறைந்த வெளிச்சத்தில் எடுப்போம் என்பதால் பெரும்பான்மையான சமயங்களில் படம் ஷேக் ஆகிவிடும். முடிந்த வரை வெளிச்சத்தை அதிகமாக்கிக்கொள்ள பாருங்கள்.சூரிய ஒளி கிடைத்தால் அதை விட சிறந்த வெளிச்சம் தரக்கூடிய விளக்கு கிடையாது.நல்லா சூரிய ஒளி பக்கத்துல வெச்சு படம் எடுங்க. சூரிய ஒளி நேரடியா படாம எதிலாவது பிரதிபலித்து பட்டால் நலம். சூரிய ஒளி இல்லையென்றால் நல்லா சுற்றி விளக்குகளை போட்டுக்கொள்ளுங்கள் ,அல்லது ஃப்ளாஷ் உபயோகித்துக்கொள்ளுங்கள். ஆனால் ஃப்ளாஷ் உபயோகித்தால் படத்தில் ஒரு விதமான செயற்கைத்தனம் ஒட்டிக்கொண்டு விடுவதாக எனக்கு தோன்றும் ,அதனால் அதை அவ்வளவாக உபயோகிப்பதை நான் விரும்புவதில்லை.
வெளிச்சம் ஒழுங்காக இருந்தால்தான் உண்வுப்பொருளின் நிறமும் நன்றாக கேமராவில் பதியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

2.)அக்கம் பக்கம் பாத்துக்கோங்க:
நீங்க எடுக்கப்போகும் உணவுப்பொருளுக்கு சுற்றி உள்ள விஷயங்களும் படத்தின் தரத்தை நிர்ணயிக்கும். உணவுப்பொருளை வைத்திருக்கும் தட்டு,பாத்திரம் அல்லது பீங்கான் ஓடு போன்றவை சுத்தமாக இருந்தால் படமும் பார்ப்பதற்கு எடுப்பாக இருக்கும்.தட்டை வைத்திருக்கும் இடமும் சுத்தமாக ஒரே களேபரமாக இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.டைனிங் டேபிள் மேல் வைத்து எடுக்கப்போகிறீர்கள் என்றால் மேஜையின் மேல் சுத்தமான கண்ணை உருத்தாத துணியை போர்த்திக்கொள்ளலாம்.தட்டிற்கு பக்கத்தில் கத்தி ஸ்பூன் அரிவாள்மணை இப்படி விஷயங்களை நிறப்பி வைக்க வேண்டாம்,அது கவனத்தை சிதறடித்து விடும். முடிந்தால் படம் எடுத்து விட்டு தேவையில்லாத சுற்றியுள்ள விஷயங்களை வெட்டி (crop)விட்டால் உத்தமம்.

3.)தயார் நிலையில் இருக்கவும்
எந்த ஒரு உணவுப்பொருளாக இருந்தாலும் செய்து முடித்த சில நிமிஷங்களுக்கு பார்க்கவும் அழகா இருக்கும்,சூடா சாப்பிடுவதற்கும் சுவையா இருக்கும்.அதனால சமையல் முடியறதுக்கு முன்னாடியே உங்க கேமரா,ட்ரைபாடு எல்லாத்தையும் எடுத்து வெச்சுகிட்டு,எந்த இடத்துல படம் எடுக்கலாம்,எந்த கோணத்துல படம் எடுக்கலாம்னு எல்லாம் யோசிச்சு தயாரா இருந்தா உணவுப்பொருள் தயாரானவுடன் கிடைக்கும் அந்த சில நிமிடங்களை இழக்காமல் இருக்கலாம்.அந்த சமயத்துல ரொம்ப யோசிக்காம சட்டு சட்டுனு நேரத்தை வீணாக்காம படம் எடுக்க பாருங்க!! :-)

4.)ஒழுங்கா பரப்பி வையுங்க:
சமையல் எவ்வளவு சுவையாக இருந்தாலும் வீட்டுல தங்கமணி தொப்புனு கோவத்தோட கொட்டினா சாப்பிட தோணுமா??அதே, முகத்தில் புன்னகையோட நாணிக்கோணி பறிமாறுன உப்பா காரமா என்னன்னே தெரியாம சாப்பாடு உள்ளார போயிரும்ல??? அதே மாதிரி உணவுப்பொருளை எப்படி அடுக்கி/பரப்பி வைக்கறீங்க என்பதை பொருத்துதான் படமும் அதுக்கு ஏற்றார்போல் அழகாக இருக்கும். உணவில் முந்திரி திராட்சை போன்ற விஷயங்கள் சரியான இடத்தில் இருப்பது போல் பார்த்துக்கொள்ளுங்கள். நம் முப்பகுதி கோட்பாடு போன்ற விஷயங்கள் எல்லாம் கூட இங்கே உபயோகமாகும். அதனால உங்க சமயலை தட்டுல/பாத்திரத்துல எப்படி கொட்டி வைக்கப்போறோம் என்பதை பற்றியும் கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள்.

5.)உணவுக்கு ஒப்பனை:
என்னதான் நம்ம சினிமாவுல நடிக்கறவுங்க எல்லாம் அழகா இருந்தாலும் மணிக்கணக்கா ஒப்பனை போட்டுதான படம் எடுக்கறாங்க. அதே மாதிரி நீங்க சமைக்கற உணவுக்கும் ஒப்பனை போடுங்க!! உதாரணத்திற்கு எண்ணை ,நெய் கொண்டு பதார்த்தம் பளபளபாக இருக்கும் படி லேசாக தடவி விடலாம்.இதே போல நீங்க சமைத்திருக்கும் உணவுக்கு ஏற்றார்போல் கற்பனையை தட்டிவிட்டு அதற்க்கேற்ற பொருளை கொண்டு பளபளப்பாக்குங்கள்.

6.)கோணங்களின் முக்கியத்துவம்.
இந்த விஷயமும் எல்லா விதமான படங்கள் எடுக்கும் போதும் சொல்லப்படுகிற விஷயம். எப்பவும் போல மேலே நின்றுக்கொண்டு எடுப்பதை விட கொஞ்சம் கீழே, பக்கவாட்டில் என்று பற்பல கோணங்களில் படம் எடுக்க முயலுங்கள். சற்றே இப்படி அப்படி மாற்றி மாற்றி எடுத்தால் நாம் கற்பனையே செய்ய முடியாத படங்கள் சில சமயங்களில் அமைந்துவிடும்.க்ளோஸ் அப்பில் பார்க்கும் போது சில விஷயங்கள் பார்ப்பதற்கு வித்தியாசமாகவும்,அழகாகவும் அமைந்துவிடும்

7.)ஆவி பறக்கும் உணவு
உணவு சுவையாக இல்லாவிட்டாலும் கூட பசி நேரத்தில் ஆவி பறக்க உணவு கிடைத்தால் கண்ணை மூடிக்கொண்டு சாப்பிட்டு விடுவோம்.அதனால் உணவுப்பொருளின் மேல் ஆவி பறப்பது போன்ற ஒரு காட்சியை கொண்டுவந்தால் அந்த படம் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும்.
இதற்கான ஒரு வழிமுறையை நான் பார்த்த ஒரு இணைய தளத்தில் கொடுத்திருந்தார்கள் . அதாவது தண்ணீரில் நனைத்த பஞ்சை மைக்ரோவேவில் சுட வைத்து உணவுப்பொருளின் பின்னால் கண்ணுக்கு தெரியாமல் வைத்தால் ,உணவில் இருந்து ஆவி பறப்பது போல தெரியுமாம்.இது நான் முயன்று பார்த்தது இல்லை,நம்மில் யாராவது இது போன்று செய்வோமா என்றும் தெரியவில்லை,ஆனால் சுவாரஸ்யமாக இருந்ததே என்று சொல்லி வைத்தேன்.முடிந்தால் ஊதிவத்தியை மறைத்து வைத்து ஆவி வருவது போன்ற உணர்வை ஏற்படுத்த முடியுமா என்று பாருங்கள்!!

இப்படியாக உணவுப்பொருட்களை படம் எடுக்க பல சங்கதிகள் உண்டு.வர மாச புகைப்படப்போட்டிக்கு எல்லோரும் தயாரா?? போன தடவை பின்னூட்டத்துல ஒரு நண்பர் போட்டி வைத்தால் அந்த தலைப்புக்கு ஏற்றார்போல் படம் எடுக்கும் டிப்ஸ் அளிக்கவும் என்று கூறியிருந்தார்.அந்த மாதிரி இந்த தடவை யாரும் கேட்க கூடாதே என்றுதான்......
அடாடா!! நானே வாய் தவறி ஏதாவது சொல்லிட்டேனா?? குழுப்பதிவின் உறுப்பினர்கள் என் சட்டையை பிடிப்பதற்குள் நான் எஸ்கேப் ஆகி விடுகிறேன்.
வரட்டா?? :-)

ஆங்கில மூலம் மற்றும் படங்கள்:
http://digital-photography-school.com/blog/food-photography-an-introduction/
http://flickr.com/photos/laraferroni/94294849/in/set-72057594093941047/
http://flickr.com/photos/santos/61479875/
http://flickr.com/photos/hypnotic_aubergine/164960613/

Tuesday, September 18, 2007

வணக்கம் மக்களே!
எல்லோரும் எப்படி இருக்கீங்க??
செப்டெம்பெர் மாத போட்டி சிறப்பா நடந்து முடிந்திருக்கிறது. ஒவ்வொரு தடவை போட்டி நடக்கும் போதும் எனக்கு தோன்றும் சில விஷயங்களை இந்த சமயத்திலே பகிர்ந்துக்கொள்ளலாம் என்று எண்ணம்.
போட்டிக்கு வரும் படங்கள் எப்படியெல்லாம் தேர்ந்தெடுக்கப்படுகிறது என்பதை நடுவர்களின் பார்வையில் இந்த பதிவில் முன்பே சொல்லியிருந்தேன்.
ஆனால் சில சமீபத்திய உதாரணங்களோடு திரும்பவும் உங்கள் முன்னால் இதை பற்றி அலசலாம் என்று ஒரு சிறிய ஆசை. போன தடவை எழுதியிருந்த போது போட்டிக்கு வந்திருக்கும் படங்களை வைத்து உதாரணங்களை கொடுத்தால் வசதியாக இருக்கும் என்று நீங்கள் கூறியிருந்தீர்கள். அதனால் இந்த முறை உங்களிடமிருந்தே உதாரணங்களை எடுத்திருக்கிறேன். யாரும் வீட்டுக்கு ஆட்டோ அனுப்பி விடாதீர்கள். :-)

படங்களின் பிக்சல் தரம்:


படம் தெளிவாக இல்லாமல் சொர சொரவென்று grainy-ஆக இருந்தால் ,உங்கள் படங்கள் எவ்வளவு அழகாக இருந்தாலும் காண்பவறை கவராது. அதுவும் 50-100 படங்கள் பரப்பி உங்கள் படங்களோடு ஒப்பிட்டு பார்க்கையில்,உங்கள் படம் சற்றே சிறப்பு குறைந்து காணப்படும்.பொதுவாக உங்கள் கோப்பின் அளவு குறைந்திருந்தால் அந்த படத்தின் பிக்சல் தரமும் குறைந்து போகும்.
படம் எவ்வளவுக்கெவ்வளவு பெரிதாகவும்,அதிக பிக்சல்களோடு இருக்கிறதோ அந்த அளவு பார்ப்பதற்கு தெளிவாக இருக்கும்.

தலைப்பு:
இதை முந்தைய பதிவிலே கூட சொல்லியிருக்கிறேன். படம் எவ்வளவு சிறப்பாக இருந்தாலும் தலைப்பு எந்த அளவுக்கு பொருந்தியுள்ளதோ அந்த அளவுக்கு தான் பரிசு கிடைப்பதற்கு சந்தர்ப்பம் அதிகம்.இந்த போட்டியின் தலைப்பு வண்ணங்கள் என்பதால் படங்களை பார்த்தவுடன் வண்ணங்கள் மட்டுமே பள்ளிச்சென தோன்றுமளவுக்கு இருக்கும் படங்களை எதிர்பார்த்திருந்தோம்.
போட்டிக்க்கு வந்த சில படங்கள் நன்றாக இருந்தாலும் போட்டியின் தலைப்புக்கு பொருந்தாது போன்று எனக்கு பட்டது.
உதாரணத்திற்கு முகவை மைந்தனின் இந்த படம் "Perspectives" அல்லது புதுமையான கோணங்கள் போன்ற தலைப்புகளுக்கு நன்றாக பொருந்தும் என்று தோன்றியது.


அதே சமயம் மஞ்சு அவர்களின் இந்த படம் மேகங்கள் எனும் தலைப்புக்கு சரியாக பொருந்தக்கூடியது.




பிற்தயாரிப்பு:
பிற்தயாரிப்பின் முக்கியத்துவத்தை முதல் போட்டியின் முடிவில் நான் நன்றாகவே தெரிந்துக்கொண்டேன்.அதுவும் செல்லாவின் இந்த பதிவை பார்த்தாலே உங்களுக்கு அதன் பலன் புரிந்து போகும். அடிப்படையான பிற்தயாரிப்பு செய்வதற்கான சுலபமான மென்பொருளான பிக்காஸாவை பற்றி இந்த பதிவில் நீங்கள் காணலாம். இதில் அடிப்படையான contrast adjustment மற்றும் cropping மிகச்சுலபமாக பண்ணலாம்.
Contrast adjustment,cropping,bordering,naming இப்படி பல விஷயங்களையும் சிறப்பாக செய்யவல்ல இன்னொரு இலவசமான மென்பொருள் Gimp.
இதில் நாம் செய்ய முனையும் சிறு சிறு மாற்றங்களை கற்றுக்கொள்வது மிகவும் சுலபம். வேண்டுமென்றால் சொல்லுங்கள் அதுக்கும் பதிவு போட்டு விடலாம்!! :-)

இப்படி போட்டிக்கு வந்திருந்த சில படங்கள் நான் செய்த பிற்தயாரிப்பு மாற்றங்கள் உங்கள் முன்னே.
படத்தில் பிக்சல்கள் அதிகமாக இருந்தால் contrast adjustment செய்தால் படம் தாங்கும்.இல்லைனா ஏதாச்சும் பண்ணா படத்தின் தெளிவு குறைய வாய்ப்பு உண்டு.

போட்டி அறிவிப்பு பதிவில் கூட ஒரு அன்பர் பின்னூட்டமிட்டிருந்தார். கலர் படங்கள் போட்டிக்கு படங்கள் அனுப்ப டிப்ஸ் தருமாறு. எல்லா போட்டிக்களுக்குமே இந்த பிற்தயாரிப்பு செய்தாலே படங்கள் பல மடங்கு professional ஆகி விடும்.பிற்தயாரிப்பு பற்றிய எங்களது அறிமுக பதிவை காண இங்கே சுட்டவும்.


















































இப்படி சற்றே நேரம் செலவழித்தால் பல படங்கள் மிக வித்தியாசமாக தெரிகிறது பாருங்கள். சும்மா கையில் கிடைத்த படங்களை ஏனோ தானோ என்று சிறிது வேலை செய்தாலே இந்த கதி என்றால்,போட்டிக்காக அக்கறையுடன் நீங்கள் கொஞ்சம் மாற்றங்கள் செய்தால் பாடங்கள் எவ்வளவு சிறப்புரும் என் நீங்களே யோசித்து பாருங்கள்.

ஆனாலும் சும்மா சொல்லக்கூடாது,போட்டிக்கு வந்த பல படங்கள் நான் மேற்சொன்ன விஷயங்கள் எல்லாவற்றையும் கவனித்து அனுப்பப்பட்டவையாகவே இருந்தது!! பகிர்தல் மற்றும் கூடி பேசுதல் மூலம் இந்த கலையை பற்றி மேலும் மேலும் தெரிந்து கொள்வதே நமது லட்சியம் என்பதால் படம் தேர்ந்தெடுக்கபடாமைக்கு வருந்த வேண்டாம்.
மேலும் மேலும் நண்பர்களை கூட்டிக்கொள்வோம். ஒத்த கருத்துடைய மற்றும் கலையார்வம் உள்ளவர்காளோடு இந்த குழுவின் மூலம் விவாதிப்போம்,அரட்டை அடிப்போம்,எண்ணங்களை பரிமாறிக்கொள்வோம்.
அதற்கு, மாதாமாதம் நடைபெறும் இந்த போட்டி தொடர்ந்து ஒரு சிறந்த அரங்காக விளங்கட்டும்.
வாழ்த்துக்கள்!! :-)

Saturday, September 15, 2007

போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்து. இரசனை ஒவ்வருக்கும் ஒரே மாதிரி இருப்பது இல்லை. இந்த போட்டியின் முடிவுகள் எங்களது இரசனைக்கு பிடித்த படங்களே அன்றி வேறு ஏதும் இல்லை.

வண்ணங்கள் என்ற தலைப்புக்கு பூக்கள், பச்சை புல்வேளி, இயற்கை காட்சிகள், மாலை, மீன்கள், பாம்பு, பறவை, விளையாட்டு பொருட்கள் என்று பலவித படங்கள்.

பொதுவாகவே பல வண்ணங்கள் ஒரே படத்தில் இருக்குமாறு எடுப்பதில் உள்ள சிக்கல்கள் இந்த போட்டிப் படங்களிலும் நன்றாகவே தெரிகிறது

உதாரணதிற்கு Blown highlights.





இள,வெளிர் வண்ணங்கள் காணமல் போகிவிடும் வாய்ப்பு அதிகம். இந்த படங்களில் கிளியின் இளம் பச்சை, வானத்தின் நீலம, வெள்ளை மேற்புறம், அறிவிப்பு பலகை எல்லாம் தொலைந்து விட்டன. கண் காணும் அளவிற்கு கேமராவில் காணமுடியாது.

இந்த வண்ணங்கள் வெளிறிப் போவதை Histogram பார்ப்பதின் மூலம் தெரிந்து கொள்ளலாம். (விரைவில் CVR பாடம் நடத்துவார். இப்போதைக்கு இது beyond the scope of this post)


சரி மீதியை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். போட்டியின் முடிவுகளுக்கு வருவோம்.

மூன்றாவது இடம்
இந்த முறை இரண்டு படங்களுக்கு. இம்சையின் பச்சை பாம்புவும், சுந்தரின் மயில் இறகும். பாம்பு கொஞ்சம் தெளிவாக முகத்தை திரும்பி இருந்தால் இந்த படம் இன்னும் சிறப்பாக வந்து இருக்கும்.











இரண்டாவது இடம்

யாத்திரீகனின் இந்த படம்.

அழகான வண்ணங்கள். படத்தில் நிறைந்து இருக்கும் வெண்மை இன்னும் அழகு.





முதல் இடம்
ஒப்பாரியின் இந்த படத்திற்கு. போட்டிக்கு அவர் அனுப்பி இருந்த இரண்டு படங்களுமே நன்றாக இருந்தன. இருப்பினும் இந்த படம் மிக எளிமையாகவும், தலைப்புக்கு பொருத்தமாகவும். வண்ணங்களின் அழகு குறையாமலும் இருந்ததால் எங்களின் ஓட்டு இந்த முறை ஒப்பாரிக்கே







இந்த போட்டியில் கலந்துக் கொண்டு சிறப்பித்த போட்டியாளர்கள் அனைவருக்கும் நன்றி. அடுத்தப் போட்டியில் கலந்துக் கொண்டு இன்னும் சிறப்பான படங்களை எடுத்து அனுப்புவீர்கள் என்கிற நம்பிக்கை எங்களுக்கு நிச்சயம் உண்டு.


இந்தப் போட்டியின் முதல் 10 படங்கள் மற்றும் மீதிப்படங்களின் விமர்சனங்களை அடுத்தப் பதிவில் பார்ப்போம்.

Thursday, September 13, 2007

யதார்த்த போட்டோகிராஃபர் பல்லியின் டிப்ஸ்..

சரியான வண்ணத்தோட போட்டோ கிடைக்க மாட்டேங்குதேன்னு கவலைப் படறீங்களா ?

நாம எங்க போட்டோ எடுக்கப்போறோம்னு உங்களுக்கு ஏற்கனவே தெரியும் இல்லீங்களா ? அதுக்கேத்த மாதிரி வொயிட் பேலன்ஸ் ஐ சரி செஞ்சீங்கன்னா போட்டோ நல்லா வரும்னு சொல்லியிருக்குங்க.


    • அதாவது சூரியன் உச்சத்தில இருக்கும்போது வொயிட்பேலன்ஸ் செட்டிங் க டேலைட்/சன்னி(daylight/sunny) மோட் ல வைக்கனுங்க. அப்படி வைக்கும் போது சூரியனின் ஆதிக்கம் அதிகமா இருந்தா சில நேரம் நீல நிறம் அதிகமா வர்ரதுக்கு சான்ஸ் அதிகம் இருக்குங்க.
    • அப்படி அதிகப்படி நீலம் வரும்போது வருணபகவானை மனசில நினைச்சுக்கிட்டு க்ளொடி (cloudy ) மோட்ல வச்சி எடுத்துப் பாருங்க.
    • பொதுவா வீட்டுக்குள்ளார படம் எடுக்கறப்ப மின்சாரத்தின் ஆதிக்கம் நிறையவே இருக்குமுங்க. முடிஞ்ச வரை இயற்கையான வெளிச்சத்தில படம் பிடிக்கிறது உங்க போட்டோவுக்கு நல்லது.
    • ஹோல்டரில் குண்டுபல்பு( incandecent ) மின்சாரத்துட சேர்ந்து ஆதிக்கம் செய்யும் போது ஆரஞ்சு கலர் அல்லது பிங்க் கலர் உங்க போட்டோல நிறைய வர்ரதுக்கு சான்ஸ் இருக்குங்க. டியூப் லைட் ஆதிக்கத்தினால் உண்மையான நிறம் மாறி வேறு மாதிரி கூட தோன வாய்ப்பு இருக்குங்க. முக்கியம இந்த மெர்குரி வெளிச்சத்துல அது அதிகம் வரலாங்க. அதனால பல்புக்கேத்த மாதிரி வொயிட் பேலன்ஸ் செட்டிங் உங்க கேமரால இருக்கான்னு பாருங்க. அப்படி இல்லாத போது ஆட்டோ பேலன்ஸாண்டவர் துணை உங்களுக்கு கட்டாயம் உண்டுங்க. நம்பிக்கையை கைவிட்டுடாதீங்க.





ஆனா ஆட்டோ பேலன்ஸ் தவறான அல்லது விரும்பத்தகாத மாதிரி உங்களுக்கு போட்டோ தருதுன்னு நீங்க நினைச்சீங்கன்னா அடுத்த செட்டிங் மாத்தி எடுத்து பாருங்க. உங்களுக்கு திருப்தியான போட்டோ வர வரைக்கும் எடுத்துட்டே இருங்க. ( set high standard on your photography. dont come to the conclustion " I cant take more than this.. thats it " )
மேலே இருக்கிற போட்டோ ஆட்டோ பேலன்ஸ் மோட்ல எடுத்தது. கொஞ்சம் புளூ ஃபிளிமா மாறிப்போச்சு. இல்லீங்களா


அதையே கொஞ்சம் வொயிட் பேலன்ஸ் செட்டிங் மாத்தி கிளொடு மோடுல எடுத்தது. இப்ப பாத்தீங்கன்னா பெரிய வித்தியாசம் தெரியுமுங்க.

ஆகா மொத்தத்துலா வொயிட் பேலன்ஸை ஆட்டோவில வச்சி எல்லா நேரத்திலையும் எடுத்தா நல்ல பலனளிகாதுங்க.






பொதுவா ஒரு சப்ஜெக்டை நல்ல முறையில படம் எடுக்கணும்னு நினைக்கிறீங்க உங்க கிட்ட ஜூம் குறைவான கேமரா தான் இருக்கேன்னு கவலைப்படறீங்க இல்லையா. இதுக்கு நீங்க கவலைப்பட தேவையில்லீங்க.. பெரும்பாலும் மக்கள் அதுபோல கேமரா தான் வைச்சுட்டு இருக்காங்க. முடிஞ்ச வரையில் அந்த சப்ஜெக்ட் அருகே போயி படம் எடுக்க முயற்சி செய்யுங்க நல்ல பலனைத் தரும்.

முக்கியமா என்ன சொல்ல வரேன்னா வொயிட் பேலன்ஸ் போட்டோ வாழ்கையில முக்கியமுங்க. அதுவும் இல்லாம உங்களோட முயற்சிய்யும் நம்பிக்கையும் தான் இதில முக்கியமுங்க. உங்க மேல நீங்க நம்பிக்கை வச்சே தீரனுங்க. என்னால இவ்வளவு தான் படம் எடுக்க முடியும்னு கட்டாயம் நினைக்காதீங்க. சில நேரம் நல்லா வரும்னு நினைக்கிற போட்டோ சரியா வராமல் போகுமுங்க. அதுக்காக மனம் தளராதீங்க. முயற்சி திருவினையாக்கும்.. என்ன நான் சொல்றது சரிதானுங்களே ?


.. யதார்த்த போட்டோகிராபர் பல்லியின் டிப்ஸ் தொடரும்.

ps: அடிக்கடி நாளிதழ்/மாதஇதழ்களில் வரும் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ படிச்சதோட விளைவு.. மன்னிச்சுக்கோங்க மக்கா

http://www.kenrockwell.com/tech/notcamera.htm --- மேலே இருக்கிற போட்டோஸ் இங்கன இருந்து தான் எடுத்தது.

http://www.kenrockwell.com/tech/white-balance-examples.htm -- இதையும் பாக்க மறக்காதீங்க
நம்ம ஆனந்த் அண்ணாச்சி எழுதியது அவரோட பதிவுல

http://anandvinay.blogspot.com/2005/07/white-balance-zen.html
http://anandvinay.blogspot.com/2005/07/5.html

Tuesday, September 11, 2007

முப்பதோரு போட்டியாளர்கள். அனைவருக்கும் முதலில் நன்றி.படங்களின் தரம் முந்தைய போட்டிகளின் படங்களை விட மேம்பட்டு இருப்பதை கீழே இருக்கும் மொத்தப் படங்களின் தொகுப்பிலிருந்தே அறியமுடியும்.
போட்டியாளரக இருப்பதை விட, நடுவராக இருப்பதின் கடினத்தை இந்த போட்டி தெரிவுப்படுத்தி இருக்கிறது.

விரைவில் இப்போட்டியின் முடிவுகளோடும் , இந்த படங்களின் விமர்சனங்களோடும் சந்திக்கிறோம்.


 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff