Monday, March 24, 2008

வழமை போலவே இந்த மாதப் போட்டியும் உங்களின் ஆர்வத்தாலும், ஆதரவாலும் சிறப்பாக முடிந்தது. போட்டியின் முடிவு அறிவிக்கும் இடுகைக்கும் நேரம் வந்தாச்சு.

நிறைய புதிய முகங்கள் இந்த முறை. இது வளர்ச்சியின் போக்காகவே நான் பார்க்கிறேன். பங்கேற்ற அனைவருக்கும் மீண்டும் நன்றி.

-----------------------------------------------------------------------------------



மூன்றாம் இடம் கெளசிகன்.



எந்த இடம் இது ? மிக அழகான வண்ணங்கள். சரியான இடத்தில் சரியான கோணத்தில், படம் அழகாய் இருக்கிறது.



------------------------------------------------------------------------------------------

இரண்டாம் இடம் . நாதஸ்



அற்புதமான முயற்சி. சரியாகவும் வந்து இருக்கிறது. கருப்பு காய்கள் இன்னும் தெளிவாய் வந்து இருந்தால், முதல் இடத்தில் வந்து இருக்கலாம்.


-----------------------------------------------------------------------------------------



முதல் இடம் peeveeads





தலைப்புக்கு மிகப் பொருத்தமான படம். மிக அருமையான வண்ணங்கள், அழகான காட்சி அமைப்பு. இளவஞ்சி போன முறை சொன்னது போல இவரிடம் நாம் கற்க நிறைய இருக்கிறது.

அனைவருக்கும் வாழ்த்து

Tuesday, March 18, 2008













































Monday, March 17, 2008

வணக்கம் நண்பர்களே!

தமிழில் புகைப்படக் கலைன்னு சொல்லிக்கிட்டு அப்பப்ப, இந்த ஆங்கில தலைப்புகள் வைக்கரது தவிற்க முடியாத ஒண்ணா ஆயிடுது. (என் எழுத்துப் பிழைகள் தனிக்கதை, அத இப்பதைக்கு லூஸ்ல விடுங்க).

இன்னிக்கு நம்ம எல்லாரும் கத்துக்கப் போர விஷயம் 'selective blurring' என்னும் டெக்னிக்கு.

ஒரு படத்தை எடுக்கலாம்னு முடிவு பண்ணியாச்சுன்னா, படத்தில் ப்ரதானமா எந்த விஷயம் பளிச்னு தெரியணும்னு முடிவு பண்ணிதான் படத்தை ஆரம்பிப்போம். SLR கேமரா வச்சிருக்கரவங்க, அந்த முக்கிய விஷயத்தை ஃபோக்கஸ் பண்ணி, சரியான mode எல்லாம் உபயோகித்து க்ளிக்குவாங்க.
உதாரணத்துக்கு ஒரு தோட்டத்தில் இருக்கும் பூவை படம் எடுக்கணும்னா, 'பூ' mode தெரிவு செய்துகொண்டு, படத்தை எடுத்தீங்கன்னா, கேமராவே பாதி வேலைய உங்களுக்காக செஞ்சுடும்.
அந்த பூவை எடுக்க தேவையான, aperture, ஷட்டர் வேகம் எல்லாம் நிர்ணயித்து, படத்தில் பூ பளிச் என்றும், பூவுக்கு பின்னாலும் முன்னாலும் இருக்கும் விஷயங்களை கொஞ்சம் out-of-focusல் மங்கலாக்கி எடுத்து விடும்.

உதாரணத்துக்கு நம்ம புகைப்பட வித்தகர் ஒப்பாரி எடுத்த ஒரு செஸ்-போர்ட் படம் பாத்தீங்கன்னா, படத்தில் ப்ரதானமா ராஜாவ எடுத்திருப்பாரு. மத்த வீரர்கள் எல்லாம் கொஞ்சம் மங்கலா தெரிவாங்க. அதனால, படத்தை பாக்கும்போது, உங்க கவனம் சிதராம, ஒப்பாரி என்ன காட்டணும்னு நெனச்சாரோ அங்கதான் உங்க பார்வை விழும்.

SLR இல்லாதவங்க இந்த விஷயத்தை கொண்டுவரது கொஞ்சம் சிரமம்தான். ஆட்டோ போக்கஸ் காமெரால படம் எடுத்தீங்கன்னா, இவ்வளவு கிட்டயிருந்து எடுக்கர படத்துல, எல்லா விஷயமும் போக்கஸ்ல வந்து பளிச்னு தெரியும். இந்த கவித்துவமான ரிசல்ட் கெடைக்கரது கஷ்டம்.
SLR வச்சிருக்கரவங்களும், வெளில எங்கயாவது படம் எடுக்கும்போது, அவசரத்துல சரியான 'mode' உபயோகிக்காமல் எடுத்துட்டா, இந்த DOF (depth of field) அழகு கிட்டாமல் போயிடும்.

அப்பதான் GIMP மாதிரி இணைய மென்பொருள் உதவியை நாடணும்.

உதாரணத்துக்கு நான் சமீபத்தில் 2007ல் எடுத்த ஒரு படத்தைப் பாருங்க. சும்மா அவசரத்துல எடுத்த படம். அழகான நாய் பக்கத்துல ரெண்டு அசிங்கமான கால். நாய் மட்டும் இருந்திருந்தா நல்லாயிருந்திருக்கும். (படத்தை க்ளிக்கி பெருசா பாருங்க). இப்படி ஒரு படத்தை எடுத்தப்பரம் என்ன பண்ண முடியும்?


இங்கதான் gimp கிட்ட போகணும். இந்த படத்தை gimpல் திறந்துவிட்டு. 'கத்திரிக்கோல்' ஐக்கானை தெரிவு செய்து கொள்ளுங்கள்.
இப்ப என்ன பண்ணலாம்னா, நாயை சுத்தி கத்திரிகோலால், கோலம் போடர மாதிரி க்ளிக்கிட்டே வாங்க.
அதாவது, நாயின் சுற்றளவு மட்டும் கட் பண்ற மாதிரி, மார்க் பண்ணிக்கணும்.

முழுசா ஒரு ரவுண்ட் அந்த மாதிரி மார்க் பண்ணியதும், 'enter' அமுக்கி உங்க தெரிவை ஊர்ஜீதம் செய்யுங்கள்.
பக்காவா கட்டம் கட்டலன்னா, escape அடிச்சு, திரும்ப வேலைய ஆரம்பிங்க.

எல்லாம் ஒழுங்கா கட்டம் கட்டியதும், இப்போ ctrl-I அடிங்க.

இப்போ, Filter->Blur->Gaussian Blur தெரிவு செய்து, radiusல் 35/35 என்று அடித்து 'Ok'வை சொடுக்குங்கள்.

இப்ப என்னாகும்னா, நாயை சுத்தியுள்ள காட்சி, கொஞ்சம் out-of-focus ஆகி, blur ஆக காட்சிதரும். இதோ இப்படி. (படத்தை க்ளிக்கி பெருசா பாருங்க). இப்போ, படத்தின் கருப்பொருள் 'நாய்' பளிச்னும், மத்த சமாச்சாரம் எல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டு மங்கலாயிடும்.

(ரெண்டு படத்துக்கும் பெருசா ஒண்ணும் வித்யாசம் இல்லன்னு மனசுல நெனச்சு சிரிக்கரவங்க, க்ளாஸ்லேருந்து கெட்-அவுட்).

இதே அடிப்படையில் தான், wallpaper எல்லாம் செய்யமுடியும். இதோ இப்படி. அத இன்னொரு நாள் சாவகாசமா பாக்கலாம்.


புரிஞ்சுதா? புரியாம தாவு தீருதா?
சரி, மேலே சொன்னதின் சுருக்கம் கீழே.

1) Open your pic in GIMP (or like tools)
2) choose the 'scissors' icon ( Scissors select tool)
3) click on the edge of your main object and start connecting the dots
4) once you complete your selection (1st dot and last dot are connected), press 'enter'
5) your selection will be highlighted with a boundary line
6) click ctrl+i (invert) to make the image outside your boundary as the primary object
7) click Filer->Blur->Gaussian Blur
8) enter 35/35 for the radius value and click OK ( you can choose a different value based on your needs)
9) your pic is ready

முயற்சி செய்து, உங்கள் 'selective blurred' படங்களை வலையேற்றுங்கள். வந்து மார்க் போடறேன். :)

மேலும், சில உதாரணங்கள் கீழே, என் கைவரிசையில்: (படத்தை க்ளிக்கி பெருசா பாத்தீங்கன்னாதான் மேட்டர் புரியும்). tour-guide ஆத்தா, முதல் படத்தில் பளிச்னு தெரிஞ்சாலும், மற்ற தலைகளும் கவனத்தை சிதறிடிப்பதால், ஆத்தாவைத் தவிர மற்றவைகளை ப்ளர் ஆக்கியாச்சு. அதேமாதிரி, விவேகானந்தரும் தடாகமும் 'பளிச்' என்று தெரிய, பின்னாலிருக்கும் சமாச்சாரம் ப்ளர் செய்யப்பட்டுள்ளது.



மீண்டும் சந்திப்போம்,


-சர்வேசன்

Sunday, March 16, 2008

UPDATE:- இன்றோடு (18 march 08, 8.00 am , IST) இந்த பதிவுக்கான பின்னூட்டம் மூடப்படுகிறது. இனிமேல் போட்டியில் எந்த மாற்றமும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது
நேத்தோட (March 15) இந்த மாதம் போட்டிக்கான படங்கள் சப்மிட் பண்ணவேண்டிய கெடு முடிஞ்சுபோச்சு.ஸோ..இன்னியிலிருந்து நோ நியூ எண்ட்ரீஸ். இந்த பதிவு முக்கியமா இந்த போட்டியில் படங்களை சமர்பித்தவர்களுக்கு மட்டுமே... ஒரு கிரேஸ் பீரியட் மதிரின்னு கூட சொல்லலாம்.

எல்லாரும் அப்பப்போ யாரு என்ன படங்கள் சப்மிட் பண்ணியிருக்காங்கன்னு slide show லே பார்த்துகிட்டு இருப்பீங்க.( விருப்பப்பட்டா slideshow ல் வலதுபக்கமா இருக்கும் "more" ங்கிர லிங்க்கை க்ளிக்கி உங்க கமெண்ட்டை டைரெக்ட்டா slidesheow லேயே குடுக்கலாம்)..

போட்டியிலே பங்கெடுப்பவர்களுக்கெல்லாம் ஒரு வேண்டுகோள்... That that person - That that photo இருக்கா ன்னு ஒரு முறை சரிபார்த்து பின்னூடம் போடுங்க...(ஒரு கன்பர்மேஷன் மாதிரின்னு கூட சொல்லலாம்)

கீழே சொல்லியிருக்கும் காரணங்கள் இருந்தால் கண்டிப்பாக பின்னூடத்தில் தெரிவிக்கணும்.... அப்புறமா .. "நான் சரியா தான் சொன்னேன்..நீங்க தான் தப்பா புரிஞ்சுகிட்டீங்க "...ன்னெல்லாம் சொல்ல கூடாது... இது தான் போட்டிக்கான படங்களில் மாற்றம் இருந்தால் தெரிவிக்க கடைசீ சந்தர்ப்பம்

1. By default முதல் ரெண்டு படங்கள் தான் சேர்க்கப்பட்டுள்ளன


2. ஒருவேளை நீங்க என்ன படம் எடுத்துக்கலாம்ன்னு சொல்லியிருப்பீங்க ..ஆனால் நான் தான் அதை சரியா கவனிக்காமல் இருந்திருக்கலாம்


3. பின்னூடத்திலே உங்க பதிவின் லிங்க்கை குடுத்த பிறகு ... உங்க பதிவிலே படங்களை மாற்றி போட்டிருக்கலாம்


4. 2 க்கும் மேலே படங்கள் பதிவிலே இருந்தால்.. இது தான் கடைசீ சந்தர்ப்பம்.. எந்தெந்த படங்களை போட்டிக்கு எடுத்துக்கணும்ன்னு சொல்ல


நாளையோட இந்த பதிவுக்கு பின்னூட்டம் மூடப்படும்
Comments shall be closed for this post on17-March-07 :: 4.00 pm


அதுக்குள்ளே எல்லாரும் அவங்க அவங்க Corrections in selection (மட்டும்) சொல்லிடனும்...

Thursday, March 13, 2008

மு.கு:
இந்த பதிவில் வரும் aperture,shutter speed போன்ற கலைச்சொற்களுக்கு அர்த்தம் தெரியவில்லை என்றால் சைடுபாரில் உள்ள பதிவுகளில் பார்த்துத்தெரிந்துக்கொள்ளுங்கள்.

நமது கேமராக்களில் பார்த்தீர்கள் ஷட்டர் பொத்தானிற்கு பக்கத்திலேயே ஒரு dial பொருத்தப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள்.அதில் Av,Tv என்று வெவ்வேறு வகையான modes குறியிடப்பட்டிருக்கும்.ஆனால் நாம் அதை பற்றியெல்லாம் அவ்வளவாக கண்டுக்கொள்வது கிடையாது.எப்போதும் auto mode-இல் கேமராவை பொருத்திவிட்டு அதிலேயே எல்லா படங்களையும் எடுத்துக்கொண்டிருப்போம்.
எனக்கு தெரிந்து ஒருவர் தனது DSLR கேமராவிலும் கூட auto mode மட்டுமே பயன்படுத்தி படங்களை எடுப்பார்!!!
Auto mode பயன்படுத்துவதாக இருந்தால் அவர்களுக்கு SLR எதற்கு?? சாதாரண point and shoot கேமரா மட்டுமே போதுமே என்று நான் நினைத்துக்கொள்வேன்.
இவ்வளவு காசு கொடுத்து வாங்கிவிட்டு நம் கேமராவின் பெரும்பாலான பயன்பாடுகளை இப்படி பயன்படுத்தாமல் இருந்தால் எப்படி??
வாங்க இந்த modes ஒவ்வொன்றாக என்னவென்று பார்க்கலாம்.
கேமரா என்றாலே ஒரு துளையின் விட்டத்தையும் அது திறந்திருக்கும் நேரத்தையும் கட்டுப்படுத்தி ஒளியை சேமிக்கும் கருவி என்று சுருக்கமாக சொல்லிடவிடலாம்.இப்பொழுது வரும் எல்லா கேமராக்களிலும் கண்டமேனிக்கு பல modes இருந்தாலும் ஒளியின் அளவை நேரிடையாக கட்டுப்படுத்தும் சில அடிப்படையான modes-ஐ பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

Auto Mode:
உங்கள் கேமராவில் Auto என்றோ அல்லது ஒரு சிறிய சதுரம் கொண்டு இந்த வகை குறியிடப்பட்டிருக்கும்.பேருக்கேற்றார்போல் இந்த வகையில் அனைத்தும் கேமராவின் கையில்.துளையின் விட்டம்,ஷட்டர் வேகம்,ISO,White balance,ப்ளாஷ் உபயோகிக்கலாமா வேண்டாமா இப்படி சகலமும் கேமராவே தீர்மானித்துக்கொள்ளும்.நீங்கள் காட்சியை நோக்கி க்ளிக் செய்தால் மட்டும் போதும்.ஷட்டரை பாதி அழுத்தும்போதே காட்சியில் எவ்வளவு ஒளி இருக்கிறது என்று தீர்மானித்து அதற்கேற்றார்போன்ற அளவுகளை கேமரா தானே ஊகித்து படம் எடுத்துவிடும்.ஒளி கம்மியாக இருக்கும் பட்சத்தில் ப்ளாஷை தானாக பயன்படுத்திக்கொள்ளும்.
இந்த mode தவிர மற்ற எல்லா mode-களிலும் ISO,White balance,ப்ளாஷ் உபயோகிக்கலாமா வேண்டாமா போன்றவற்றை நீங்களே முடிவு செய்துக்கொள்ளலாம்.
நீங்கள் SLR வைத்திருக்கும் பட்சத்தில் இந்த வகையை உபயோகித்தால் SLR வைத்திருப்பதற்கே அர்த்தம் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால் ஒளியின் அளவு நமது விருப்பத்திற்கேற்க கூட்டவோ குறைக்கவோ பிரத்தியேகமாக உருவாக்கப்படுவது SLR கேமராக்கள்!! அதை வாங்கி வைத்துக்கொண்டு முழுவதுமாக தானியங்கி முறையில் உபயோகித்தால்,ஐந்து கியர் கொண்ட ஒரு காரை வாங்கிவிட்டு ஆட்டோகியரில் ஓட்டுவது போல!


Program Mode:(P)
இந்த வகையில் காட்சிக்கு ஏற்றார்போல் aperture மற்றும் ஷட்டர் வேகத்தை மட்டும் கேமரா முடிவெடுத்துக்கொள்ளும்.மற்றபடி ISO,whitebalance போன்றவற்றை நீங்களே நிர்ணயித்துக்கொள்ளலாம்.காட்சியை பார்த்து பொத்தானை பாதி அழுத்திய உடனேயே ஒளியின் அளவை கணித்து aperture மற்றும் ஷட்டர் வேகத்தை கேமராவே நிர்ணயித்து விடும். ஒளி குறைந்திருந்தால் அதற்கேற்றார்போல் ஷட்டர் வேகத்தை குறைத்துக்கொள்ளுமே தவிர ப்ளாஷ் உபயோகிக்கப்பட மாட்டாது.
முழுவதுமாக auto mode-இல் உபயோகிப்பதை விட இந்த முறை சற்றே தேவலாம். கேமரா வாங்கிவிட்டு புகைப்படக்கலையை கற்க ஆரம்பிக்கும் ஒருவர்,தொடக்கத்தில் manual mode பழக்கமாவதற்கு முன் இந்த வகையை உபயோகிக்கலாம்

Av mode:
பெரும்பாலான SLR பயனர்கள் அதிகமாக பயன்படுத்தும் வகை இது என்று சொல்லலாம்.
உங்கள் கேமராவின் aperture எனப்படும் துளையின் விட்டத்தை நீங்களே முடிவு செய்ய வேண்டும் என்று விரும்பினால் நீங்கள் இந்த வகையை பயன்படுத்தலாம்!!aperute-ஐ பொருத்தவரை அதன் அளவை பொருத்து படத்தில் பெருமளவு மாறுதல் ஏற்படும்.உதாரணத்திற்கு துளையின் விட்டம் குறைவாக இருந்தால் அப்பொழுது தூரத்தில் இருக்கும் பொருள் கூட நன்றாக தெளிவாக பதியுமாறு wider depth of field(DOF)-உடன் படம் எடுக்கப்படும்.கேமராக்களில் இருக்கும் Landscape mode-ஐ நீங்கள் தெரிவு செய்தால் இருக்கும் ஒளிக்கு ஏற்ற மிக குறிகிய துளையின் விட்டத்தை கேமரா தெரிவு செய்துக்கொள்ளும்.ஏனென்றால் அப்பொழுது தான் நீங்கள் எடுக்கும் காடு,நாடு,மேடு மலை ஆகிய எல்லாமும் சரியான தெளிவோடு கேமராவில் பதிவாகும்.
aperture-இன் விட்டம் அதிகமாக அதிகமாக கேமராவின் f-number குறைவாகிக்கொண்டே போகும் என்பதை மறக்க வேண்டாம்.
இதே போல் துளையின் விட்டம் அதிகமாக இருந்தால் காட்சியின் ஒரு சிறு தூரத்திற்கு மட்டும் focus set ஆகுமாறு DOF shallow-வாக அமைந்துவிடும்.கேமராக்களில் உள்ள portrait mode-ஐ நீங்கள் தேர்ந்தெடுத்தால் அது காட்சியின் ஒளிக்கு ஏற்ப முடிந்த வரை அதிகமான துளையின் விட்ட அளவை தெர்ந்தெடுத்துக்கொள்ளும் அப்பொழுதுதான் நீங்கள் எடுக்கும் மக்கள் பிண்ணனியில் இருந்து பிரிந்து பளிச்சென்று தெளிவாக தெரிவார்கள்.
இப்படி துளையின் விட்டத்தை மாற்றுவதால் படத்தின் போக்கே மாறிவிடும் என்பதால்,பலர் இந்த Av mode-ஐ உபயோகிக்கிறார்கள்.இந்த வகையில் துளையின் விட்டத்தை நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்,அதற்கு ஏற்ப ஷட்டரின் வேகத்தை கேமரா தேர்ந்தெடுத்துக்கொள்ளும்.







Higher fnumber - shorter aperture - wider DOF(f/13.0)

Lower fnumber - wider aperture - shallow DOF(f/1.8)

Tv Mode:
இந்த வகையில் கேமராவின் ஷட்டர் வேகத்தை நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ள,அதற்கேற்ப துளை விட்டத்தை (aperture) கேமரா கணித்துக்கொள்ளும். பல சமயங்களில் நமக்கு ஒரு சில மணித்துளிகளில் ஒரு காட்சி பதிவு செய்யவேண்டியிருக்கும்(உதாரணத்திற்கு தண்ணிர் தெரிக்கும் காட்சி,ஒரு நீச்சல் வீரர் நீரில் குதிக்கும் காட்சி போன்றவை) சில வேறு நேரங்களில் நமக்கு ஷட்டர் குறைவான வேகத்தில் இருக்க வேண்டி வரும்.(இரவில் வாகனங்கள் விட்டுச்செல்லும் ஒளியை கோடு போல படம் பிடிக்க,அருவியில் விழும் நீரை படம் பிடிக்க,இரவில் படம் பிடிக்க.... போன்றவை)
இப்படி ஷட்டர் வேகத்தை நமக்கு மாற்ற வேண்டிய சந்தர்ப்பம் வரும் நேரங்களில் இந்த வகையான mode-ஐ பயன்படுத்திக்கொள்ளலாம்.துளையின் விட்டத்தின்(aperture) அளவை கேமரா பார்த்துக்கொள்ளும்.








Faster shutter speed(1/100s) - capturing action

Slower shutter speed(30s) - Traffic trails

Manual mode:(M)
இது முழுக்க முழுக்க நாமாகவே எல்லாவற்றையும் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு வகை.இதில் ஷட்டரின் வேகம்,துளையின் விட்டம் என எல்லா அளவையும் நாமே நிர்ணயித்துக்கொள்ளலாம்.புகைப்படக்கலையின் தொடக்கநிலையில் இருக்கும் ஒருவருக்கு இந்த வகையில் படம் பிடிப்பது குழப்பத்தையும்,அயற்சியையும் தரலாம் என்பதால்,சற்றே இந்த கலையை பழகிவிட்ட பின் இதை உபயோகப்படுத்த எல்லோரும் விரும்புவார்கள்.அதிலும் படம் எடுப்பதற்கு முன் நாமே அளவுகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதால் இதை உடனடியாக படம் எடுக்க வேண்டிய சந்தர்ப்பங்களில(பறவை,மிருகம் போன்ற அசைந்துக்கொண்டிருக்கும் பொருட்கள்)் உபயோகப்படுத்த முடியாது.நல்ல ஆற அமர நேரம் இருக்கும் சமயங்களில்(அசையாத பொருட்கள்) இதனை பயன்படுத்தலாம்!!
ஆனால் நல்ல அனுபவமுள்ள புகைப்படக்கலைஞர்கள் இந்த முறையையே உபயோகிக்க விரும்புவார்கள்!!தனக்கு வேண்டியவாறு படத்தின் தன்மையை நுணுக்கமாக மாற்றியமைக்க முடியும் என்பதால் இந்த முறை அவர்களுக்கு பிடிக்கும்.பழக்கம் காரணமாக பெரிதாக நேரம் எடுத்துக்கொள்ளாமல் கண நேரத்தில் எல்லா அளவுகளையும் நிர்ணயித்து பட்டென படம் எடுத்துவிடுவார்கள்!! :-)

இப்படியாக நமது கேமராவில் வெவ்வேறு Exposure mode-கள் உள்ளன.உங்கள் கருத்துக்களையும் கேள்விகளையும் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.கலந்தாலோசிக்கலாம்.
அப்படியே நீங்கள் உங்கள் கேமராவில் வழக்கமாக எந்த mode-இல் படம் எடுப்பீர்கள் என்று பின்னூட்டத்தில் தெரிவித்து விட்டு செல்லலாமே!!
வரட்டா??? :-)


பி.கு:இது தவிர கேமராவில் auto focussing,manual focussing என்று ஒரு சங்கதி உண்டு.அதை இத்துடன் போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம்!

Tuesday, March 11, 2008

கருப்பு இரஜினி, ஒரு கூடை சன்லைட் பாட்டில், ஒரு வெள்ளைப் பெண்ணின் வண்ணம் வாங்கி கலராகி இருப்பார், அது மாதிரி வேற ஒரு படத்தில் இருந்து உங்களின் படத்துக்கு வண்ணத்தை மாற்ற முடியுமா ?





(வெள்ளைக்காரிய பார்க்காம, ரஜினியின் கண்ணாடியில் தெரியும் ரிப்பெள்டர் எவ்வளவு பெரிசு, கேமராவுக்கு எந்த கோணத்தில் அதை வைத்து இருக்கிறார்கள் என்று துல்லியமா பார்த்தீங்கன்னா, நீங்கதான்யா போட்டோகிராப்பிக்கு சரியான ஆளு ! )


வண்ணமயாமான ஒரு காட்சியை பார்த்து இரசித்து, அதை படமெடுத்து வீட்டுக்கு வந்து பெரிதாக்கி பார்த்தால், பல சமயங்களில், வண்ணங்கள் நீர்த்து.வெளிறிப்போய் , நாம் பார்த்த காட்சிதானா இது என்று பயந்துப்போகும் அளவிற்கு பேஸ்து அடித்து இருக்கும்.


பிறரின் சில படங்களைப் பார்க்கும் போது, "இவள் புடவை என்னதை விட வெளுப்பா?"
என ரின் அம்மிணிப் போல கடுப்பேறுவதும் நடக்கும். இதே மாதிரி வண்ணக்கலவை நமது படத்திலும் இருந்தால் எப்படி இருக்கும் என்று எண்ணத் தோன்றும். எண்ணுவதோடு இல்லாமல். அந்த வண்ணங்களை நமது படத்துக்கு கடத்தும் ஒரு எளிய வழி இங்கே.

இந்த முறை கிம்பில் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம். இதை போட்டோஷாபிலும் எளிதாகச் செய்யலாம்.

இலவசமாய் கிம்ப் கனி கிடைக்கும் போது காசு கொடுத்து வாங்கும் போட்டோஷாப் காய் எதற்கு ?


பல முறை சலவைக்குப் போட்டது போன்ற வெளுத்துப் போன எனதுப் ஒரு கடற்கரை படம்.




இராமராஜன் அளவிற்கு கலர் காட்டும் பரணியின் ஒரு கடற்கரை காட்சி இங்கே. பரணியின் வண்ணங்களை கடத்தலாம் இந்த உதாரணதிற்கு.




இந்த இரண்டுப் படங்களையும் கிம்பில் திறக்கவும்.






நமது வெளுத்துப்போன படத்தை தேர்ந்து எடுத்துக் கொள்ளுங்கள். தேர்வு செய்யப் பட்ட படத்தின் மேல் பட்டை நீல நிறத்தில் இருக்கும் ( இது கூட எனக்கு தெரியாதா என்கிறீர்களா ? )

பிறகு Colors->Map->Sample Colorize தேர்வுச் செய்யுங்கள்




Destination இடத்தில் நமது படமும் , Sample இடத்தில் திருடப் போகும் படமும் இருக்கும்.





Get Sample Colors பொத்தானை அமுக்கினால, வண்ணங்கள் இடம் மாறும்.



அப்புறம் Apply , Close தான்.





கஷ்டப்பட்டு வண்ணங்களை காப்பி அடித்தப்பின் நமது சாயம் போனப் படம் "ஒரு கூடை சன்லைட்", தலைவர் மாறி கலர் மாறிப் போச்சு





இதே முறையில் வண்ணம் மாற்றிய வேறு ஒரு எடுத்துக்காட்டு. !







பின்(நவீனத்துவ) குறிப்பு 1:
அழகே, அழுக்கியே,
என் எண்ணத்தை எடுத்துக் கொண்ட எருமையே
என் வண்ணத்தை வழித்துக் கொண்ட வறுமையே
ன்னு வைரமுத்து அடுத்தப் படத்துக்கு பாட்டு படிக்கறாரேமே ?

பின்(நவீனத்துவ) குறிப்பு 2:

ஒரு கூடை சன்லைட் பாட்டுக்கு பயன்படுத்திய முறைக்கும், இந்த பதிவில் கூறப்பட்டுள்ள முறைக்கும் நேரடியாக எந்தத் தொடர்ப்பும் இல்லை. அது ஒரு எடுத்துக்காட்டாகவும். விளம்பரத்துக்காவும் மட்டுமே
!

Wednesday, March 5, 2008

இன்னைக்கு இணையத்துல ஒரு அற்புதமான நிகழ்படம் கிடைத்தது!!

இரவில் புகைப்படங்கள் எடுக்க (Night photography) உங்கள் SLR கேமராவை எப்படி பயன்படுத்தலாம் என்பது தான் அது.எப்படி குழந்தைக்கு சொல்லித்தருவது போல் சொல்லியிருகிறார் பாருங்கள்!!சொன்னது SLR கேமராவிற்கு என்று குறிப்பிட்டாலும் அவர் சொல்லும் குறிப்புகள் aperture மற்றும் ஷட்டர் வேகம் மாற்றக்கூடிய எல்லா கேமராக்களுக்கும் பொருந்தும்.
:-)



அவரு இங்கிலீபீசுல என்னவோ சொல்லுறாரு,எனக்கு ஒன்னும் புரியலபா என்கிறீர்களா???
அவர் சொல்வதின் சாராம்சம் இதுதான்.

1.)இரவுப்புகைப்படக்கலையில் முக்கியமான இரண்டு விஷயங்கள்
அ.) உங்கள் கேமராவில் முடிந்த அளவுக்கு ஒளி உட்புகுமாறு பார்த்துக்கொள்வது.இதற்கு aperture மற்றும் ஷட்டரின் வேகத்தை தேவையான அளவுக்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.
ஆ.)அப்படி செய்யும் போது உங்கள் கேமரா அதிராமல்/அசையாமல் பார்த்துக்கொள்வது

2.)உங்கள் கேமராவை manual mode-இற்கு மாற்றிக்கொள்ளுங்கள் .

3)உங்கள் லென்ஸின் aperture-ஐ முடிந்த வரை பெரியதாக ஆக்கிக்கொள்ளுங்கள். f number எவ்வளவுக்கெவ்வளவு சிறியதாக இருக்கிறதோ உங்கள் லென்ஸ் துளையின் விட்டம் அவ்வளக்கவ்வளவு பெரியதாக இருக்கிறது என்று பொருள்.இதை பற்றி மெலும் அறிய இந்த பதிவுக்கு செல்லுங்கள்.

4.)இப்பொழுது உங்கள் கேமராவின் ஷட்டர் வேகத்தை மாற்றி மாற்றி போட்டு நல்ல படம் எடுக்க முயலுங்கள்! அதிக மாக வேகம் இருந்தால் ஒளி உட்புகுவதற்கான நேரம் குறைந்து படம் இருட்டாகிவிடும்,வேகம் குறைவாக இருந்தால் உள்ளே உட்புகும் ஒளியின் ஆளவு அதிகமாகி படம் வெளிரிப்போய் விடும்.
உங்கள் SLR கேமராவில் aperture மாற்றுவது எப்படி,ஷட்டரின் வேகத்தை மாற்றுவது எப்படி என்பதை எல்லாம் உங்கள் கேமராவின் manual-ஐ பார்த்தால் தெரிந்து விடும்.

5.)இரவில் புகைப்படம் எடுக்க பொதுவாக குறைந்த அளவு ஷட்டர் வேகம் தேவைப்படும் என்பதால் படம் எடுத்து முடிக்கும் வரை கேமரா அசையாமல் இருக்க முக்காலியை (tripod)பயன்படுத்துங்கள்.
முக்காலி இல்லையென்றால் ஏதாவது நிலையான தரையில் கேமராவை பொருத்தி படம் எடுப்பது உசிதம்.
கேமராவை க்ளிக் செய்யும் பொது கூட சில அதிர்வுகள் ஏற்படும் என்பதால் கேமராவில் timer-ஐ செட் செய்து படம் எடுப்பது மிக உபயோகமான உத்தி!

6.)அப்புறம் என்ன?? ஷட்டர் வேகத்தை மாற்றி மாற்றி படங்களை சுட்டு தள்ளுங்க!! ஒளியின் அளவை மாற்றி மாற்றி போட்டு,படத்திற்கு கனக்கச்சிதமான அளவு ஒளி அமைந்த படத்தை எடுத்து மகிழுங்கள்!! சித்திரமும் கைப்பழக்கம் என்பது போல புகைப்படமும் விரல்ப்பழக்கம் தான்!!

இனிமே இரவில் அழகழகான படங்கள் எடுக்க வாழ்த்துக்கள்!!
போகறதுக்கு முன்னாடி உங்களுக்காக ஒரு உதாரணம்,exif தகவல்களுடன்.


Camera: Canon EOS Digital Rebel XTi
Exposure: 8 sec (8)
Aperture: f/4
Focal Length: 30 mm
ISO Speed: 100

Tuesday, March 4, 2008

ஜன்னல் வெளிச்சத்தில் ஜாலங்கள் !

ஒரு நல்ல புகைப்படம் எடுக்க , நாம் நினைப்பது போல விலையுயர்ந்த கேமரா, அலங்கார விளக்குகள், அதி நவீன ஸ்டூடியோ போனறவை தேவையில்லை. வீட்டுக்குள் வரும் ஜன்னல், கதவு வெளிச்சத்தில், கொஞ்ச்ம வெள்ளைக் காகிதங்களை கொண்டு அழகான, தரமான படங்கள் எடுக்க முடியும். காசு செலவில்லாமல், இலவசமாய் வீட்டில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு என்ன செய்ய முடியும் என்று இங்கே கொஞ்சம் அலசலாம்


முதலில் தேவையான பொருட்களைப் பார்ப்போம்.

1. நல்ல குழைந்த சூரிய வெளிச்சம் வரக்கூடிய ஜன்னல் அல்லது கதவு. வடக்கோளத்தில் இருப்பவர்களுக்கு வடக்கு நோக்கிய ஜன்னல், தென்கோளத்தில் இருப்பவர்களுக்கு தெற்கு நோக்கிய ஜன்னல். இந்த திசையில் நாள் முழுவதும் சமமான அளவில் வெளிச்சம் நேரடியாக போட்டுத் தாக்காமல் சரியாய் கிடைக்கும்.

2. பிண்ணனியாக வெற்றுச் சுவர். வெளீர் நிறச் சுவர் இருப்பது உத்தமம். இல்லை வீட்டில் இருக்கும் துணிகளைக் கொண்டு திரை அமைத்துக் கொள்ளலாம்.

3. வெளிச்சத்தை பிரதிபலிக்க வெள்ளை அட்டைகள். வீட்டில் இருக்கும் அலுமினியத்தாள், கண்ணாடி எது வேண்டுமானலும். வெளிச்சம் நன்றாக இதில் பட்டு பிரதிபலிக்க வேண்டும். வெள்ளை அட்டை பெரும்பாலும் போதுமானது.


பொதுவாக மூன்று வகையான விதத்தில் முகங்களை படமெடுக்கலாம்.

1. முழு முகம் .
2. பக்கவாட்டுத் தோற்றம்
3. சாய்வுக் கோணம்.
இவற்றுக்கு எந்த முறையில் கேமராவை, பின்னணியை , வெள்ளை அட்டைகளை பொருத்த வேண்டும், என்று பார்க்கலாம் .



முதலில் நமக்கு போஸ் கொடுப்பவரை ( கீழே படங்களில் இருப்பதுப் போல நமீதா, அஸின், பாவனா, இவர்கள் கிடைக்கவில்லை என்றால் வீட்டு அம்மிணி, அவங்களும் கோவித்துக் கொண்டார்கள் எனில் கரடிப் பொம்மை ) கிட்டத்தட்ட 45 கோணத்தில் ஜன்னல் வெளிச்சம் வரும் திசையில் நிறுத்திக் கொள்ளுங்கள். வெளிச்சத்திற்கு ஏற்ற முறையில் கொஞ்சம் அப்படி, இப்படி மாற்றிக் கொள்ளலாம்.




1. முழுத் தோற்றம்.



இது பாஸ்போர்ட் படம். அனைவரிடமும் இந்த முறைப் படம் கண்டிப்பாக இருக்கும். முழு முகத்தையும் , படத்தில் காட்ட வேண்டும்.








2. பக்கவாட்டுத் தோற்றம்.


அரசியல் தலைவர்களில் போஸ்டரில் தோன்றுவதுப் போல முகத்தின் ஒருப் பக்கத்தை மட்டும் படத்தில் காட்ட வேண்டும்.














3. சாய்வுக் கோணம்.



இது இரண்டுக்கும் இடைப் பட்டது. முகத்தின் ஒருப் பகுதி மட்டும் முழுமையாகவும், மீதிப் பகுதியில் , பாதி, பாதிக்கும் குறைவாகவும். பெரும்பாலான முகப் படங்கள் இந்த முறையில்தான் அமைந்து இருக்கும்.






படங்கள் புரிந்ததா ? முயற்சி செய்துப் பாருங்கள். இந்த முறைகள் கூடிய விரைவில் , மாதாந்திரப் போட்டிக்கு(ம்) உதவலாம்.
 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff