Saturday, August 29, 2009

வணக்கம் மக்கள்ஸ்,
ஒரு பள்ளிகூடத்தில் படிச்ச பையன் அதே ஸ்கூலுக்கு வாத்தியா வந்த கதைதான் என்னுதும்,முழுக்க முழுக்க PIT தயாரிப்பான நானும் PITன் மூத்த உறுப்பினர் தீபாவும்தான் இந்த மாசத்துக்கு நடுவர்கள் .என்னது போட்டிதலைப்பை இன்னும் சொல்லலையா?

silhoutte இத தமிழ்ல்ல என்னன்னு சொல்ல? :( நிழற் படம்னு சொல்லலாமா ஆனா தப்பா புரிஞ்சுக்கற அபாயம் இருக்கே. அதனால silhoutteன்னே வெச்சுக்குவோம்.உச்சரிப்பு எப்படியெப்படியோ சொல்றாங்க. பாமர உச்சரிப்பான சில்லவுட்டையே வெச்சுக்குவோம்.( இல்லைனா எனக்கு சொல்றதுகுள்ள நாக்கு சுலுக்குதுங்க:( )

பின்னனி வெளிச்சமாகவும் படத்தில் உருவத்தில் எந்த விவரங்களும் இல்லாமல் அவுட்லைனை மட்டும் உருவத்தை யூகிக்கும் படி டார்க்காக எடுக்கும் படங்கள் சில்லவுட் என மிக சுருக்கமாக வைத்துக்கொள்ளலாம். மற்றபடி உதாரண படங்களை பார்த்தாலே உங்களுக்கு புரிந்துவிடும். மற்றபடி உங்கள் படத்தில் எந்த விபரங்களும்(டீடெய்ல்ஸ்) இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்



Exposure1/1000 F11 ISO 100


silhoutte சில குறிப்புகள்.

சில்லவுட் உண்மையில் ரொம்ப ஈசிங்க.சாதாரணமா எடுக்கும் படத்தின் ஆக்சுவல் ஷட்டர் ஸ்பீடை இன்னும் அதிகப்படுத்திவிட்டாலே போதும் சில்லவுட் ரெடி.

சாதாரணமா சப்ஜெக்டைவிட பேக்ரவுண்ட் வெளிச்சமாக இருந்தாலோ. சூரிய ஒளியோ வேறு ஒளியோ கேமராவை பார்த்து விழும்போது போது சப்ஜெக்டைசாதாரணமான மோடில் ( ஆட்டோ, ப்ரொகிராம்) படமெடுத்தாலே அது சில்லவுட்டாகத்தான் வரும். கேமராக்கள் சாதாரணமாக ஒளி அதிகம் உள்ள இடத்தின் ஒளியைதான் கணக்கில் எடுக்கும் ( ஸ்பாட் மீட்டரிங் தவிர)

Exposure1/4000 F8 ISO 100
சூரிய உதயம் or அஸ்தமனத்தின் போதும், சூரியன் மறைந்த பின் அடிவானத்தில் உண்டாகும் வெளிச்சத்தின் பின்னனியில் எடுக்கப்படும் சில்லவுட்டுக்கள் மனத்தை மயக்கும்.அந்த பின்னனியில் ஒருவரையோ அல்லது பலரையோ குதிக்க விட்டு சில ஆக்சன் ஷாட்டுக்கள் முயற்சி பண்ணலாம்.ஏனெனில் வெளிச்சப்புள்ளியை கணக்கில் எடுப்பதால் ஷட்டர் ஸ்பீடு வேண்டிய அளவுக்கு மேலேயே கிடைக்கும். படம் ஷேக் ஆகாது.
சூரிய உதய அஸ்தமன பேக்ரவுண்டுகள் அழகான படத்திற்கான பாதி வேலைகளை செய்துவிடும்.



மற்றபடி மதிய வேளையோ எந்த வேளையோ ஷட்டர் ஸ்பீடைமட்டும் அதிகப்படுத்தி சில்லவுட் எடுக்கலாம். ஆனால் நல்ல ஐடியாக்களையே முழுதும் சார்ந்திருக்க வேண்டி வரும்.வேண்டுமெனில் சூரியனுக்கு எதிர் திசையை பயன்படுத்தி நீலவானம் + மேகங்களை பேக்ரவுண்டாக வரவைக்கலாம்.

DSLRகேமராவாக இருந்தால் போகசிங் பேக்ரவுண்ட் மேல் விழாமல் சப்ஜெக்ட்ட் மேல் விழ வைக்க, ஸ்பாட் மீட்டரிங் வைத்துக்கொண்டு சப்ஜெக்ட் மேல் ஹாஃப்ப்ரஸ் செய்து போகஸ் ஆனபின்பு பிரேமுக்குள் வெளிச்சமான இடத்தை நோக்கி போகஸிங் பாயிண்ட் வரவையுங்கள்.
சப்ஜெக்ட் போகஸ் ஆனபின்பு படத்தை எடுக்கும்போது எந்த இடத்தில் போகசிங் பாயிண்ட் இருகிறதோ அந்த இடத்து ஒளிக்கு தகுந்தபடி மீட்டரிங் எடுத்துக்கொள்ளும். சூரிய அஸ்தமனத்தில் இதை முயற்சித்தால் அற்புதமான படங்கள் கிடைக்கும்.

நிலவொளியில் மற்றும் இரவொளியிலும் சில நல்ல சில்லவுட் படங்கள் எடுக்கலாம்.


Exposure 1/5 F4.8 ISO 650
இதையெல்லாம் தவிர சாதாரணமாக எடுத்த படத்தை எப்படி பிற்தயாரிப்பின் மூலம் silhoutte படமாக மாற்றுவதுன்னு அடுத்த போஸ்ட்ல டீட்டெய்லா நம்ம ஆனந்த் அண்ணாச்சி விளக்குவாரு. ஆனா மக்களே அத படிச்சுட்டு ஆல்ரெடி எடுத்து வெச்ச படத்த பிபி பண்ணி அனுப்பிடாதீங்க. ஃப்ரெஷ்ஷா ஒரு படம் எடுங்க.புதுசா படம் எடுக்க எடுக்கதாங்க இன்னும் மெருகேர முடியும்.
நம்ம நந்தகுமார் எடுத்தப்படத்தை பாருங்க.. சூப்பரா இருக்கில்லே!
(ஹை!.. இது ஆல்ரெடி ப்ரைஸ் வாங்கின படம்.. சோ நோ ரீ-எண்ட்ரீ )


PiT மாதாந்திர போட்டி விதிமுறைகள்

படம் அனுப்ப வேண்டிய கடைசி தேதி : 15 ம் தேதி, 23:59 IST

போட்டி விதிமுறைகள்

Monday, August 17, 2009

வணக்கம் கிளிக்கர்ஸ் & வ்யூவர்ஸ்.

இந்த தடவை முதல் மூன்று தேர்ந்தெடுக்க நிறையவே சிரமப் பட வேண்டியதாயிற்று. முடிவைப் பார்க்கும் முன்

சக பதிவர் சிங்கை நாதனின் இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு நம்மாள் இயன்றதை உதவுவோம்

அடுத்து :

போட்டியில் வெற்றி பெறாமல் போனதால் மற்றப் படங்கள் குறைந்து போனது என்ற அர்த்தம் இல்லை. சிறு சிறு விஷயங்களால் அவை பின் தள்ளப்பட்டன. உதாரணத்துக் இரமேஷின் படம். போட்டிக்கு என்று இல்லை பொதுவாகவே பெயரை படத்தின் நடுவில் போடும் போது படத்தின் மீதான தாக்கம் குறைந்து போகிறது.

போட்டிக்கு என்று வரும்போது சின்ன சின்ன விஷயங்களையும் கவனத்தில் கொள்ளவேண்டியது கட்டாயமாகிப் போகிறது. இல்லாவிட்டால் எங்களுக்குப் பிடித்தப் படம் என்று வந்த அனைத்துப் படத்துக்குமே அல்லவா நாங்கள் பரிசு தரவேண்டும் :)

அடுத்து தேர்வுமுறை. தேர்வு செய்யப் படும் படங்கள் நடுவர்களின் ரசனை மற்றும் படங்களின் மேல் அவர்களின் விருப்பு வெறுப்பற்ற தனிப்பட்ட விமர்சனத்தால் மட்டுமே தேர்வு செய்யப் படுகிறது. ஆகவே எல்லோருடைய ரசனையும் ஒத்துப் போகவேண்டும் என்றில்லை. இது புரிந்துக் கொள்ளப்படும் என்று நினைக்கிறேன்.




மூன்றாம் இடத்தை பிடிக்கும் படம் :

ஒப்பாரி,காவியம், அமல் , கார்த்தி & விஜயாலயன் படங்கள் இதற்கு கடும் போட்டி.
ஒப்பாரியின் படம் :
பின்னனி கருமையாக இருக்க வேண்டும் என்பதற்காக செய்த பிற்சேர்க்கை/மாற்றத்தில் கட்டிடத்தின் மேலே இருக்கும் இலைக்கு அருகில் திட்டு திட்டாக தெரிவது பெரிய பலவீனம். அது போலவே படத்தின் வலப்புறத்திலும்.
ஒப்பாரி : இன்னும் சற்று கவனம் தேவை.

காவியம் :
வித்தியாசமான கோணம் சந்தேகமே இல்லை. Cluttering lines ஐயும் மீறி தெரியும் அழகு நன்றாய் இருக்கிறது. கோபுரத்தின் அடிப்புறத்தில் இருக்கும் ஷார்ப்னெஸ் மேலே போகப் போக குறைந்துக் கொண்டு வருகிறது. அபெர்ச்சர் இன்னும் குறைந்த்து எடுத்திருக்கலாம். மொத்தத்தில் அருமையான முயற்சி. பொதுவாக போட்டிகளில் கலந்துக் கொள்ளும் போது புகைப்படத்தில் அதை தவிர்த்து வேறெதுவும் கவனத்தை சிதறடிக்காதவாறு இருக்க வேண்டும். பெரும்பாலான போட்டிகளில் Border, *Signature* & Time Stamp ஏற்றுக் கொள்ளப் படுவதில்லை. வரும் போட்டிகளில் இதை கவனத்தில் கொள்ளவும்.

விஜயாலயன் படம் : கோபுரத்தில் இருந்து வரும் ஒளிக்கீற்று அருமை. ISO அதிகம் போலிருக்கிறது. தேவையான ஷார்ப்னெஸ் மிஸ்ஸிங். முதல் பங்கெடுப்பிலேயே முதல் பத்தில் வந்திருப்பது மகிழ்ச்சியான விஷயம்.

அமலின் கோல்டன் கேட் ப்ரிஜ்.

அருமையான கோணம். கீழிருக்கும் dead space அவ்வளவாக படத்திற்கு துணைபுரியவில்லை. கான்ட்ராஸ்ட் குறைவு. இன்னமும் லேசாகா கான்ட்ராஸ்ட் அதிகரித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். மேல் பகுதியில் இன்னும் அதிகம் இடம் விட்டிருக்கலாம்.

ஆக மொத்தத்தில் மூன்றாம் இடத்துக்கு தேசப்பிதாவை வித்தியாசமான கோணத்தில் காட்டு முன்னேறிய படம்

வாழ்த்துகள் கார்த்திக்:



இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் படம் :

சிங்கப்பூரின் சிங்கத்தை வித்தியாசமான கோணத்தில் வித்தியாசமான வண்ணத்தில் காட்டி இரண்டாம் இடத்தை பிடித்த சத்தியாவிற்கு எங்களின் வாழ்த்துகள்.


நடுவர்கள் அனைவராலும் ஒருமனதாகத் தேர்ந்தெடுத்து முதலிடம் பிடித்த "உண்மையின்" படம். வாழ்த்துகள் கிரண்.




வெற்றிப் பெற்றவர்கள் உங்களின் பரிசுப் பணம் எப்படி அனுப்ப வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள் என்பதை 25ம் தேதி ஆகஸ்ட் 2009 க்குள் சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம். பதில் வராதபட்சத்தில் இந்தப் பணம் சிங்கைநாதனின் இதய மாற்று அறுவைச் சிகிச்சைக்கு கொடுக்கப் படும். அறுவை சிகிச்சை பற்றிய மேலும் விவரங்கள் இங்கே



நன்றி

Thursday, August 13, 2009

HDR படங்கள் உருவாக்க Photomatix மற்றும் Dynamic Photo HDR போன்ற மெனபொருட்கள் இருந்தாலும் அவை கொஞ்சம் விலை உயர்ந்தவைகளதான். Photomatix கிட்டத்தட்ட $100க்கும், Dynamic Photo HDR $55 க்கும் கிடைக்கின்றன. இலவச trial version கிடைத்தாலும், அவை சாணி அடிப்பதுப்போல watermark அடித்துவைக்கும்.

சிறிது தகிடுத்தத்தம் செய்து, watermark நீக்க முடியும் என்றாலும், நமக்குத் தெரிந்தது நீதி ,நேர்மை, கருமை, எருமை என்பதால் , நேர்மையாக இலவசமாய் கிடைக்கும் QTPFSGUI வைத்து, எப்படி HDR அல்லது Pseudo HDR ப்டங்களை உருவாக்குவதுப் பற்றி பார்க்கலாம்.





முதலில் நமக்குத்தேவை, குறைந்தது மூன்று வெவ்வேறு exposure (normal, under, over exposed) செய்யப்பட்ட படங்கள்.
(உங்களிடம் ஒரே ஒரு JPG மட்டுமே இருந்தால், கிம்பில் திறந்து, பின்ணனி லேயரை நகலெடுத்துக்கொண்டு, mode -> Multiply ல் under exposed பட்மும் , mode -> Screen ல் over exposed படம் என்று மூன்று படங்களாக சேமித்துக் கொள்ளுங்கள். இதற்கு Pseudo HDR என்று பெயர்)


உதாரணதிற்கு இந்த மூன்று படங்கள்.

Normal Exposure ( Exposure Value 0 )




Under Exposure ( EV -1 )



Over Exposure( EV +1)






Qtpfsgui முதலில் தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள்.


Qtpfsgui ஆரம்பித்து New Hdr ... -> Load Images தெரிவு செய்து மூன்றுப் படங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள். Exposure for selected image பகுதியில் சரியான exposure அளவை செய்துக்கொள்ளுங்கள்.



Next பொத்தானை அமுக்கியவுடன் இந்த சன்னல் வரும். இதில் செய்ய வேண்டியது அதிகம் இல்லை. Next அமுக்கிக் கொள்ளுங்கள்.






Finish யை கிளிக்குங்கள்.






ஆட்டமே இனித்தான் ஆரம்பம். HDR என்று பொதுவில் அழைக்கப்படும் படங்கள் Tone Mapping ன் விளைவே. நாம் உபயோகிக்கும் கணினித் திரைகளில் HDR படங்களை சரியாக பார்க்க இயலாது. Tone Mapping , HDR படங்களை நமது கணினித் திரைக்கு ஏற்றவாறு மாற்றும். Tonemap the Hdr அமுக்கிக்கொள்ளுங்கள்.



Qtpfsgui ன் மிகப் பெரிய குறைப்பாடு live preview இல்லாதது. Apply பொத்தானை அமுக்கும் வரை விளைவை நம்மால் பார்க்கமுடியாது.( தானம் கொடுத்த மாட்டில் பல்லை எல்லாம் பிடிச்சு பார்க்காம வேலையை பார்ப்போம். )

Operator பகுதியில் தான் சித்துவேலைகள் இருக்கு.



உதாரணதிற்கு
Operator -> Reinhard 02 தெரிவு செய்து, Apply அமுக்கியவுடன் படம் திரையில் தெரியும். உங்களுத் தேவையான Operator தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம்.




ஒவ்வொரு மாற்றத்திற்கு பிறகும் Apply பொத்தானை அமுக்க மறக்காதீர்கள்.



கருப்பு வெள்ளைப் புள்ளிகளை கிம்பில் குறிப்பது பற்றி இங்கே பார்த்து இருக்கிறோம். அதேப் போல இங்கேயும் Apply Levels தெரிவு செய்து படத்தை மெருகேற்றிக் கொள்ளலாம்.



பலருக்கு செவ்வாய் கிரகத்தின் தோற்றம் போல ஒரு மாய உலக HDR வகைப் படங்கள் பிடிக்கும். பலருக்கு இய்ல்பான தோற்ற்ம் உடைய படங்கள் பிடிக்கும். விளையாடிப் பார்ப்பது மிக முக்கியம். Operator க்கு ஏற்ப தோற்றம் மாறும்.

உதாரணதிற்கு நான் Opeator ->Fattal உபயோகித்து வந்த விளைவு இது.





படத்தை சேமித்துக் கொள்ளுங்கள். ஞாபகம் இருக்கட்டும். Tonemapping பிற்சேர்க்கையின் ஆரம்பக் கட்டம் மட்டுமே. இதன் மேலும். உங்களின் வழக்கமான பிற்சேர்க்கைகள் தேவைப்படலாம்.

இந்தப் படத்தில் மூலப்படத்தை, Mantuik ( இயல்பான படம் ) மற்றும் Fattal ( செவ்வாய் கிரக மாயத் தோற்றப்படம் ) முறையில் மாற்றி இருக்கிறேன். முன்னரே கூறியதுப் போல உங்களுக்கு பிடித்த முறை தேர்ந்து எடுத்துக் கொள்ளுங்கள். எனக்கு பிடித்த முறை, இந்த இரண்டையும் இணைத்து உருவாக்கும் முறை. உதாரணதிற்கு நான் முதலில் Mantuik படத்தை கிம்பில் திறந்து அதன் மேல் Fattal படத்தை Overlay mode ல் இணைத்துக் கொண்டேன்.






Wednesday, August 12, 2009

வணக்கம் மக்கா,
தாமதத்திற்கு மன்னிக்கவும். மெகா போட்டியில் தேர்வு பெற்ற முதல் பத்து படங்கள் கீழே !

அமல்


காவியம்

கார்த்திக்

மன்(ணி)மதன்
மோகன்குமார்

ஒப்பாரீ

ரமேஷ்

சத்தியா

உண்மை/கிரண்

விஜயாலன்


பங்கு பெற்ற அனைவருக்கும் எங்களுடைய நன்றி ! அடுத்த சுற்றுக்கு தேர்வு பெற்றவர்களுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள் !!!

விரைவில் முதல் மூன்று படங்களுடன் சந்திக்கிறோம் !

Monday, August 10, 2009

ஒரு அழகான புகைப்படம் எடுத்து அதை மெருகேத்தி யாருக்காவது காமிச்சீங்கன்னா, அவங்க கேக்கர முதல் கேள்வி, "என்ன கேமரால எடுத்தது"ன்னுதான் இருக்கும்.
கேக்கரவங்க நெனப்பு என்னென்னா, காஸ்ட்லியான காமெரால எடுக்கர படம்தான் ப்ரம்மாதமா இருக்குங்கரது.

ஆனா, உண்மை என்னென்னா, நல்ல படம் எடுக்க, உயர்தர கேமராவெல்லாம் இரண்டாம் பட்சம். டிஜிட்டல் யுகத்தில், எல்லாத்தையும் மெருகேத்தி பாலிஷ் போட வழி வகைகள் இருக்கு ( அதில் பலப் பல விஷயங்களை PiTல் An& அண்ணாச்சி ஏற்கனவே பிரிச்சு மேஞ்சிருக்காரு ).
நல்ல கேமரா இல்ல, அதனாலதான் என் படம் சரியில்லையோங்கர கவலையை புறம் தள்ளுங்கள். ஆயிரம் ரூபாய் கேமராவில் கூட நல்ல படம் எடுக்க முடியும். காட்சியமைப்புதான் ரொம்ப முக்கியம். லட்ச ரூபாய் கேமராவைக் கொண்டு, தப்பான ஏங்கிளில் சொத்தையாக ஒரு காட்சியை கட்டம் கட்டினால், படம் எடுபடாது.
ஸோ, காட்சியமைப்பை மெருகேத்துங்க. வ்யூ ஃபைண்டரில் பாக்கும் காட்சி, ப்ரிண்ட்டு போட்டு நடு ஹால்ல மாட்டினா நல்லா இருக்குமான்னு யோசிச்சு, முன்ன பின்ன நகந்து, எடுங்க.

ஏய், அடுங்குய்யா, தலைப்புக்கு வாடாங்கறீங்களா?
வந்துட்டேன்! :)

என்னதான், ஒரு காட்சியை சரியா கட்டம் கட்டினாலும், அது எவ்ளோ காஸ்ட்லியான கேமராவை வைத்து கட்டம் கட்டியிருந்தாலும், சில சமயம் அந்த படங்களுக்கு திருஷ்டிப் பொட்டு வச்சாமாதிரி, எடுபடாமல் போயிடுது. கேமராவிலிருக்கும் தூசி காரணமாக, எடுக்கப்படும் படத்தில், அங்கங்க திட்டு திட்டா அழுக்கு தெரிஞ்சு சொதப்பிடும்.

DSLR வைத்திருப்பவர்கள் பலருக்கும் நிகழும் நிகழ்வு இது.

point & shoot கேமராவுக்கு அநேகமாய் இந்தப் ப்ரச்சனை இல்லை. அடிக்கடி கழுற்றி மாட்டும் ப்ரச்சனையில்லாததால், அழுக்கு சேர வாய்ப்பு குறைவு. வெறும், முகப்பு லென்ஸை மட்டும், கேமராவுடன் வந்த மஞ்சா துணி கொண்டு துடைத்தால் போதும்.

ஆனா, DSLR கேமராவை பல இடத்தில் துடைக்கணும். இல்லன்னா, சீரான தெளிவான காட்சிகளை படம் எடுக்கும்போது, படம் வில்லங்கமா முடிஞ்சிடும்.
சமீபத்தில் நான் எடுத்த ஒரு ஏரி+வானம் இருந்த படம். அழுக்கால், ரொம்ப டேமேஜ் ஆகியிருந்தது. (க்ளிக்கி பெருசா பாத்தீங்கன்னா தெரியும். சிகப்பு வட்டத்துக்குள் சுழிச்சு வச்சிருக்கேன்)


DSLRல் அடிக்கடி, லென்ஸை கழற்றி மாட்டுவதால், தூசி உள்ளே சேர்ந்து விடுகிறது. ஷட்டர் மூடி திறக்கும்போது, சில சமயம் இந்த தூசி, உள்ளேயிருக்கும், சென்ஸார் மீதும் விழுந்து விடும். இனி, இந்தத் தூசியை துடைப்பதைப் பத்திப் பாப்போம்.

கேமராவை துடைப்பதர்க்கு, சுத்தமான இடத்த தேர்ந்தெடுத்துக்கோங்க. தூசி படர்ந்த இடங்கள் தவிர்க்கவும்.

தூசி பல இடங்களில் சேரும். அவையாவன:
1) கேமரா body
இதுக்கு ஒண்ணும் ப்ரத்யேகமா ஒண்ணும் இல்லை. microfiber (கேமராவுடன் வரும் மஞ்சா துணி) துணியை எடுத்து துடைச்சிடுங்க. துடைப்பதற்கு முன் ஊதிவிடவும். இல்லன்னா, கீரல் விழுந்துடும். வாயால் ஊதி தூசியை அப்புறப்படுத்த முடியாத தம்மில்லா க்ளிக்கர்கள், மெடிக்கல் ஷாப்பில் கிடைக்கும், air blower பயன் படுத்தலாம். compressed air பயன் படுத்தக் கூடாது. கெடுத்துடும்.

2) முகப்பு லென்ஸ்

இதை சுலபமா தொடச்சிடலாம். முதலில், லென்ஸ் மேல் ஊதி, தூசியை அப்புறப்படுத்தவும். தூசிய வச்சுக்கிட்டே தொடச்சா, கீரல் விழுந்துடும். ஊதியவுடன், காமெராவுடன் வரும் மஞ்சள் துணியை (microfiber soft cloth) எடுத்து வட்டமாய் துடைத்து எடுக்கவும். லென்ஸ் துடைக்க கிட்டும் cleaner fluidம் உபயோகிக்கலாம். cleaner fluid உபயோகிக்கும்போது, க்ளீனரை லென்ஸில் ஊற்றாமல், துணியில் நனைத்து, துணியால் துடைக்கவும். nail polish remover, தண்ணி, alcohol swab, இதெல்லாம் உபகோகிக்காதீங்க. டாமேஜ் ஆயிடும்.

3) உள்புற லென்ஸ் மற்றும் கண்ணாடி

லென்ஸை கழற்றி எடுத்துடுங்க. கேமரா பாடிக்குள்ள பாத்தீங்கன்னா ஒரு கண்ணாடி இருக்கும். அதை துடைக்கணும்னு அவசியம் இல்லை. ஏன்னா, அது சும்மா, வியூ ஃபைண்டரில் நமக்கு காட்சியை காட்ட மட்டுமே பயன்படும் கண்ணாடி. அதில் அழுக்கிருந்தாலும், படத்தில் விழாது. கண்ணாடியை துடைப்பதர்க்கு முன், air blower கொண்டு, உட்புறத்தில் காற்றடித்து தூசியை அப்புறப்படுத்தவும். காமெராவை தலைகீழா புடிச்சுக்கிட்டு பண்ணீங்கன்னா, தூசி கீழ விழ ஏதுவாயிருக்கும். கடைசியா, கண்ணாடி மேலும் காற்றடிக்கவும். கையால் அதை தொட்டு துடைக்கவேண்டாம். ரொம்ப, லேசான ஐட்டம் அது, ஸ்ப்ரிங் ஒடஞ்சுடுச்சுன்னா, காமிரா கந்தலாயிடும்.
அடுத்ததா, லென்ஸின், பின்புறத்தையும் மஞ்சா துணி lense cleaner வைத்து துடைத்து விடவும்.
கண்ணாடிக்கும் வ்யூ ஃபைண்டருக்கும் நடுவில் இருக்கும் இடத்தையும், துணியை வைத்துத் துடைக்கவும். என் கேமராவில், பல மாசமா இருந்த குட்டி தூசி, இந்த ஏரியாவில்தான் இருந்திருக்கு. சமீபத்தில்தான் கவனிச்சுத் துடைச்சேன். ஒரு cotton swab எடுத்து அதை, மஞ்சா துணியில் சுற்றி,அந்த ஏரியாவில் நுழைச்சு துடைக்க்லாம்.

4) சென்ஸார்

இதை ஜாக்கிரதையா கையாளணும். (டாமேஜுக்கு கொம்பேனியார் பொறுபேத்துக்க முடியாது :)). தூசி கண்டிப்பா சென்ஸாரில் தான் இருக்குண்ணு ஊர்ஜீதம் செஞ்சவங்க இந்த ஸ்டெப்பை எடுங்க.
எப்படி ஊர்ஜீதம் செய்யரதுன்னு கேட்டீங்கன்னா, முதல் மூன்று ஸ்டெப்பை முடித்ததும், காமெராவை மீண்டும் பொறுத்தி நீலவானத்தையோ, வெள்ளை பேப்பரையோ படம் பிடித்து, படத்தை ஜூம் செய்து பார்க்கவும். தூசித் திட்டுக்கள் இன்னமும் தெரிஞ்சா, சென்ஸாரை துடைக்க ஆயத்தமாகவும்.
சென்ஸாரை துடைக்கணும்னா, அதன் முன்னால் இருக்கும் கண்ணாடியையும், ஷட்டரையும் தூக்கிப் பிடிக்கணும். கேமரா menuல் அதைச் செய்ய ஒரு ஆப்ஷன் இருக்கும்.
Canon Rebel வைத்திருப்பவர்கள், கேமராவை manual மோடில் போட்டு, 'Sensor cleaning: manual' தெரிவு செய்து, ஓ.கே அமுக்குங்கள். இப்படி செய்தவுடன், கேமராவின் கண்ணாடி மேலே ஏறி, ஷட்டரும், 'ஆ'ன்னு திறந்து, சென்ஸாரை நமக்குக் காட்டும்.
இப்படிச் செய்யாமல், கையால் கண்னாடி/ஷட்டரை தூக்கி சென்ஸாரை துடைக்க யத்தனித்தால், காமெராவை தலையை சுத்தி தூரப் போட வேண்டிவரும், உஷாரு.
எல்லா DSLR கேமராவிலும், சென்ஸார் துடைக்க, இந்த ஆப்ஷன் இருக்கும், தெரியாதவங்க, பின்னூட்டினா, தெரிஞ்சவங்க சொல்லுவாங்க.
சரி, இப்ப, சென்ஸாரை தெரிய வச்சாச்சு. அடுத்தது, air blowerஐ எடுத்து, காமெராவை தலைகீழா புடிச்சு, புஸ் ப்ஸ்னு காத்தடிச்சு, தூசியை விரட்டலாம். தவறியும், சென்ஸார் மேல், உங்கள் விரலோ, வேறு பொருளோ பட்டு விடக் கூடாது. கேமராவின் ஜீவநாடி இது. உஷாரு.
ஊதியாச்சா? புரியலையா? சந்தேகம் இருக்கா? வீடியோ பாத்து தெரிஞ்சுக்கோங்க.

ஊதியதோடல்லாமல், இன்னும் ஒரு படி மேலே போய், sensor cleaning kit உபயோகித்து,
சென்ஸாரை துடைத்தும் எடுக்கலாம். இந்த வீடியோவில் காட்டியிருப்பதைப் போல்.


நான் எனது canonல், sensor cleaning fluid எல்லாம் பயன் படுத்தாமல், வெறும் காற்றை மட்டும் உபயோகித்து துடைத்ததில், தூசி அப்புறப்படுத்தப்பட்டு விட்டது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். தெளிந்த வானம் இப்ப இப்படி தெரியுது. உங்க கண்ணுக்கு தூசி தெரிஞ்சா சொல்லுங்க, ஊதிடறேன் :)


பி.கு1: இதெல்லாம் பெரிய வேலையா இருக்கே, வேர வழியில்லையான்னு நெனைக்கறவங்க, காமெரா கொம்பேனியாரிடமே கொடுத்து வருஷத்துக்கு ஒரு தபா சர்வீஸ் செஞ்சுக்கலாம்.

பி.கு2: (பிற்சேர்க்கை) நம்ம ப்ரேம் என்னா சொல்றாருன்னா,
"லென்ஸை கழற்றித் துடைக்கும்போது, நேராக குளிர்ந்த காற்று படும் இடத்தில உட்கார்ந்து clean பண்ணாதிங்க...லென்ஸுக்கு உள்ள நீராவி condense ஆகிவிடும்... உஷாரு!" ( நன்றி ப்ரேம். good tip).

Tuesday, August 4, 2009

வணக்கம் மக்கா,

எல்லோரும் எப்படி இருக்கீங்க ? எல்லோரையும் பாத்து ரெம்ப நாள் ஆச்சு. படம் எடுத்தும் நாள் ஆச்சு. ஆணி நெறையன்னு காரணம் சொன்னாலும், சோம்பேறி தனம் தான் முக்கிய காரணம் :D

எதையும் கஷ்டப்பட்டு செய்ய கூடாது, இஷ்டப்பட்டு செய்யனும்னு நம்ம சஞ்சய் ராமசாமி சொல்லி இருக்காக. அதனால எனக்கு மிகவும் பிடித்த புகைப்பட பிரிவான மேக்ரோ புகைப்படங்கள் எடுக்க கத்துக்க முடிவு பண்ணி இருக்கிறேன். அப்படியே கற்று கொள்ளும் போது, நான் கற்றவற்றை இங்க சைடு கேப்புல பதிவா போட்டு உங்க கிட்ட பகிர்ந்துக்கலாம்னு எண்ணம் :)

நாம் பொதுவா எல்லாவற்றையும் மேலோட்டமா தான் பாப்போம். கொஞ்சம் உற்று நோக்கினால் பல புதிய விஷயம் மற்றும் தகவல்கள் புலப்படும். இந்த உலகத்தில் பல நுட்பமான/அழகான/ விசித்திரமான வடிவங்களும், வண்ணங்களும் உள்ளன. அவற்றை நாம் கூர்ந்து நோக்கா விட்டால் அவை நமக்கு புலப்படாது. உதாரணமாக ஒரு நகை வாங்கும் போது, அந்த நகையின் வேலைப்பாடு, வடிவம் மற்றும் இன்ன பிறவற்றை நாம் எவ்வாறு கூர்ந்து ஆராய்வோம். ஆனால் நாம் பயன் படுத்தும் நாணயங்கள், பேனா முதலியவற்றை உற்று பார்த்து இருப்போமா ? தும்பியின் கண் அடுக்குகளை கூர்ந்து பார்த்து இருப்போமா ? நம்மில் பலர் அழகிய மலர்களை கூட உற்று நோக்குவது இல்லை. சின்ன சின்ன பொருட்களிலும், தாவரம் மற்றும் பூச்சி வகைகளிலும் பல வடிவங்களும், வண்ணங்களும் இருக்கின்றன. அந்த அழகை எல்லாம் நம் புகைப்பட பெட்டிக்குள் அடைக்கும் வழிமுறைகள் பற்றிய விளக்கம் அளிக்க எங்களால் முடிந்த சிறிய முயற்சி இந்த தொடர் - "சின்னஞ்சிறு உலகம்".


படக்குறிப்பு -
90mm, f/18, 1/2 விநாடி


இந்த தொடரில் கீழ் கண்ட தலைப்புகளை விரிவாக பாக்க போறோம்.

* "மேக்ரோ" மற்றும் "க்ளோஸ் அப்" புகைப்படங்கள் பற்றிய விளக்கம் மற்றும் இவற்றின் வேற்றுமை

* அடிப்படை/முக்கிய குறிப்புகள்

* "மேக்ரோ" மற்றும் "க்ளோஸ் அப்" புகைப்படங்கள் எடுக்க பல்வேறு வழி முறைகள். (இது பெரிய பகுதி. இதுக்கே பல பாகங்கள் தேவை படும்.)

* களப்பணி குறிப்புகள். (On the Field Tips and Tricks)


படக்குறிப்பு -
90mm, f/5.6, 1/160 விநாடி


முடிஞ்சவரைக்கும் விளக்க படங்களோட இந்த தொடரை எழுதலாம்னு இருக்கிறேன். அப்புறம் இந்த தொடர் குறிப்பா DSLR/SLR பயனாளர்களை கருத்திற் கொண்டு எழுதப்படுகிறது. ஆனால் இதன் அடிப்படை கொள்கைகள் அனைவரும் பயன் படுத்தலாம். முடிந்தால் பாயிண்ட் அண்ட் சூட் குறிப்புகளையும் சேர்த்து எழுதுறேன்.

ஏதாவது தலைப்பு விடுபட்டு இருந்தா சொல்லுங்க. அதையும் சேர்த்துடுவோம்.

படக்குறிப்பு - 90mm, f/6.3, 1/250 விநாடி


பி.கு. - நெறைய வார்த்தைகள்(குறிப்பா டெக்நிக்கல் வார்த்தைகள் ஹி ஹி ஹி ) ஆங்கில தழுவலாக இருக்கும். அதற்க்கு தூய தமிழ் சொல் தெரிந்தால் சொல்லுங்க. மாத்திடுவோம்.

Sunday, August 2, 2009

அன்பு க்ளிக்கர்க்ளே, படிப்பர்களே!

நம் புகைப்படக் குழுவின் நண்பர்கள் சிலர் புகைப்படக் கலையின் நம் குழுவினைத் தாண்டி பெரிய அளவில் அங்கீகாரம் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

இப்போது சீவீ ஆரின் சென்னை சார்ந்த படங்களை Alliance Francaise என்னும் நிறுவனம் தொகுப்பாக காட்சிக்கு வைக்க உள்ளது.

அவர் மேலும் மேலும் பல சிகரங்களைத் தொட குழுவின் சார்பாக நம் அனைவருடைய வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வோம்.

அதே நேரம் பணிச் சுமை காரணமாக சீவீ ஆர் குழுவில் எழுதும் மற்றும் நடுவர் வேலைகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டுள்ளார். நன்றி சொல்லி அவரைத் தனிமைப் படுத்தப் போவதில்லை ஏனென்றால் அவர் இந்தக் குழுமத்தில் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து சென்றுவிடவில்லை. நாளை தேவை எனில் அவரின் சேவை இங்கே தொடரும். அவரின் சொந்த, தொழில் சார்ந்த துறைகளில் மற்றும் புகைப்படத் துறையில் மென்மேலும் பல வெற்றிகள் பெறவேண்டும் என்பது நம் எல்லோரின் ஆசை. அனைவரின் சார்பில் வாழ்த்துகள் சீவீ ஆர்.

அடுத்ததாக நம் கருவாயன் (எ) சுரேஷின், நமது "உணர்வுகள்" போட்டியில் வெற்றி பெற்ற ஏழையின் சிரிப்பில் படம் குறிப்பிடத்தக்க படம் என்று Photography society of Madras ஆல், அதே உணர்வுகள் தலைப்பில் குறிப்பிடத் தக்க படமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அவருக்கும் நம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வோம்.

அடுத்து குழுமத்தை மேலும் தொடர்ந்து அடுத்த கட்டநகர்வுக்கு கொண்டு செல்ல புதியதாக நால்வர் சேர்ந்துள்ளனர்.

நந்து f/o நிலா
கருவாயன் (எ) சுரேஷ் பாபு
இராயல் ராம் மற்றும்
கைப்புள்ள (எ) மோஹன் ராஜ்.

இவர்களுக்கு பலமான கரகோஷத்துடன் ( அவர்கள் முதுகிலே மொத்தினாலும் கூட ) கரகோஷம் பலமாக கேட்க வேண்டும் ;) ) வரவேற்கலாம் வாருங்கள்.

ஏற்கனவே சிறப்பு நடுவராக இருந்த கைப்புள்ள, சில போட்டிகளில் முதல் பரிசு பெற்றதோடு அடுத்தடுத்து பல படங்களின் மூலம் நம்மை அசத்திக் கொண்டிருக்கும் ஈரோடு மாமன்னர்கள் சுரேஷ் & நந்து சிங்கார சிங்கப்பூரில் இருந்துகொண்டு போட்டோகிராபியில் பட்டையைக் கிளப்பிக்க் கொண்டிருக்கும் மருதைப் புயல் இராம் அனைவரும் சேர்ந்து வரும் போட்டிகள், தொழில்நுட்ப பதிவுகள், கேள்விபதில்கள் போன்றவற்றை தொடர்ந்து திறம்பட இவர்கள் நடத்தி செல்வார்கள் என்ற நம்பிக்கையுடன்.....

நானும் 15ம் தேதிக்கு காத்திருக்கேன். முதல் மூன்று இடத்தைப் பிடிக்கும் அதிர்ஷ்டசாலி யார் என்று தெரிந்துக் கொள்வதற்காக. அதுக்கு முன்னாடி முதல் பத்து கூடிய விரைவில்...
 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff