Monday, September 26, 2011

எல்லாருக்கும் வணக்கம்.


ஒரு வழியா இந்த மாதப் போட்டி முடிவுக்கு வந்தாச்சு. எதிர்பார்த்ததை விட நல்ல படங்கள் நிறைய இந்த மாத போட்டிக்கு வந்திருந்தன. இந்த மாதம் பதினைந்தாம் தேதி வரை எல்லாருக்கும் கண்ணில் காண்பதெல்லாம் எழுத்து வடிவத்திலும் எண் வடிவத்திலும் தெரிந்திருக்கும். காணும் பொருட்களை ஒரு புதிய பரிணாமத்தில் கண்டிருப்பீர்கள். போட்டி முடிந்தாலும் அது போல் காண்பவற்றை அழகாகப் படமாக்க முயலுங்கள்.

சரி... இனி முடிவுக்கு வருவோம்.

[முதலிடம் பெற்றதாக அறிவிக்கப்பட்ட தினேஷின் படம் விஜய் அக்கறையுடன் சுட்டிக்காட்டிய பின்னூட்டத்தின் பேரில் நீக்கப்படுகிறது. நன்றி விஜய்.]

புதிய வரிசைப்படி:
முதலிடம் - விஸ்வநாதன் (e)

ஆஹா சுப்பர்... சிறிய எழுத்து 'e'-ஐ அழகாகப் படமாக்கியிருக்கிறார். அந்த shallow DOF படத்தை மிக அழகாக்கி காட்டுகிறது. அதில் மெலிதாக தெரியும் அந்த கோடுகள் அழகு. வாழ்த்துகள் விஸ்வநாதன்.



இரண்டாமிடம் - சூர்யா (X)
-------------------------------------

சூர்யாவின் இந்த படம் பார்த்தவுடனே எனக்கு பிடித்து விட்டது. நேர்த்தியாக படம்பிடிப்பது கொஞ்சம் கடினம்தான்... இருந்தாலும் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார். வாழ்த்துகள். அதில் தெரியும் X என்னவோ சிறிய அளவில் இருந்தாலும் அதுவே கருப்பொருள், நம் கண்கள் அதைத் தவிர வேறெங்கும் செல்வதில்லை. மேலேயும் கீழேயும் கொஞ்சம் க்ராப் செய்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.



மூன்றாமிடம் - நித்தி(A)

பாரிஸ் நகரின் இந்த பிரபல கோபுரத்தை நேர்த்தியாக படம் பிடித்து அதில் 'A' என்ற எழுத்தை தெளிவாகப் பதிவாக்கியிருக்கிறார். கருப்பு வெள்ளை நல்ல தேர்வு. பின்னால் தெரியும் கட்டிடம் சிறிய அளவில் கவனச்சிதறல் ஏற்படுத்துகிறது. இருந்தாலும் அருமை. வாழ்த்துகள் நித்தி.



சிறப்புக் கவனம் பெற்ற படங்கள்:

ரவி (O)
மேலே வெட்டுப்பட்டுள்ள வளையங்களும் முழுமையாகஇருந்திருந்தால் நிச்சயம் முதல் முன்றில் வந்திருக்கும்.


சதீஷ் (O)
இன்னும் ஷார்ப்பா இருந்திருக்கலாம்.

போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.மற்ற படங்களின் மீதான எனது கருத்துகளை போட்டிக்கான ஆல்பத்தில் பதிந்துள்ளேன். கருத்துகள் யாவும் எனது மனதில்அந்த கணத்தில் தோன்றியவையே.

நன்றி.

Saturday, September 24, 2011



'என் நகரின் காட்சிகள்'[Frames of My City] புகைப்படப்போட்டி 2011-யை அறிவித்து ரெட் ஃப்ரேம்ஸ் ஒரு பொன்னான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது அனைத்து புகைப்பட ஆர்வலர்களுக்கும். நீங்கள் இத்துறையில் பெரிய தொழில் நுட்ப வல்லுநராக இருக்க வேண்டுமென்பதில்லை. வளர்ந்து வரும் கலைஞராயினும் சரி. பொழுது போக்குக்காக (amateurs) கேமராவும் கையுமாகச் சுற்றுபவராயினும் சரி. உங்கள் திறமையைக் காட்ட ஒரு நல்வாய்ப்பு.

நீங்கள் நேசிக்கும் ஒரு ஊரின் இடங்களையும், மக்களையும், அதன் கலாச்சாரம் மற்றும் பழக்க வழக்கங்களைப் பிரதிபலிக்கும் காட்சிகளையும் படமாக்க வேண்டும். அது பிறந்த ஊரோ, வசிக்கும் ஊரோ அல்லது குறிப்பிட்ட சிறப்புகளினால் மனதைப் பறிகொடுத்த ஊரோ எதுவாயினும் இருக்கலாம்.

படமாக்குவதில் அத்தனை அனுபவம் இல்லையே என்றெல்லாம் கவலைப் படாதீர்கள். வித்தியாசமான கேமரா பார்வையும் ரசனையுமே உங்களுக்குக் கை கொடுக்கப் போகின்றன. உற்சாகமாய் களமிறங்குங்கள்.

இனி கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்..

போட்டி அறிவிப்பான தேதி: 29 ஆகஸ்ட் 2011. ‘அடடா, கிட்டத்தட்ட ஒரு மாசம் ஓடிப் போயிருச்சே’ என உட்கார்ந்து விடாதீர்கள்.

போட்டி முடிவு தேதி: 29 அக்டோபர் 2011. ‘ஆகா, இன்னும் ஒரு மாசம் கிடக்கே’ எனத் துள்ளி எழுங்கள்:)!!

தேனீ போல சுறுசுறுப்பா படமெடுத்து, உடனுக்குடன் சமர்ப்பித்து வாரப் பரிசுகளையும் அள்ளப் பாருங்கள்!

தகுதி: பதினெட்டு வயதான அனைத்து இந்தியர்களும் கலந்து கொள்ளலாம்.

கலந்து கொள்ள கட்டணம் ஏதுமில்லை.

ஒருவர் பத்து படங்கள் மட்டுமே சமர்பிக்கலாம்.

மூன்று இலட்சம்
ரூபாய் பெறுமானமுள்ள பரிசுகள் காத்திருக்கின்றன.

படங்களின் உரிமை முழுக்க முழுக்க எடுத்தவரையே சாரும். பரிசினை வெல்லும் பட்சத்தில் அவற்றை ரெட் ஃப்ரேம்ஸ் ப்ரோமோட் செய்ய உங்கள் அனுமதியைத் தர வேண்டும்.

படங்கள் வேறு போட்டிகளில் பரிசினை வென்றவையாக இருக்கக் கூடாது.

இரண்டு வருட காலத்துக்குள் எடுத்தவையாக இருக்க வேண்டியது அவசியம்.

சிலைகள், சிற்பங்கள், ஓவியங்கள் எனக் கலை சம்பந்தமானவற்றையும் காட்சிப் படுத்தலாம். ஆனால் சட்டத்துக்குப் புறம்பாக எடுத்தவையாக இருக்கக் கூடாது.

போட்டி பற்றிய விரிவான விவரங்களுக்கு: www.redframes.in/contest/

கவனமாக அத்தனை விதிமுறைகளையும் வாசித்திடுங்கள்.

மேலதிகத் தகவல்களுக்கு: fomc@redframes.in

பிறந்த மண்ணின் பெருமையை
வசிக்கும் ஊரின் அருமையை
பிடித்த ஊரின் அழகை
உலகுக்குச் சட்டமிட்டுக் காட்டுங்கள்!

பங்கு பெறவிருக்கும் PiT குடும்பத்தினரை PiT குழுமம் அன்புடன் வாழ்த்துகிறது:)!!

ALL THE BEST!!!
***

Wednesday, September 21, 2011

எல்லாருக்கும் வணக்கம்.

இந்த மாத போட்டியை அறிவிக்கும் போது எனக்கு சிறிது தயக்கம் இருந்தது. நம்ம ஆளுங்க இதுல நிறைய பங்கெடுப்பாங்களான்னு... ஆனா கலக்கிட்டீங்க மக்களே. நிறைய அற்புதமான படங்கள். கலந்து கொண்ட அனைவருக்கும் நமது குழுவின் சார்பில் நன்றியும் பாராட்டுகளும்.

இருந்தாலும் போட்டியின் முடிவுக்கு வரும் முன் ஒரு சில குறிப்பிட்ட படங்களை தேர்ந்தெடுக்க வேண்டுமில்லையா? அப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட படங்கள் இதோ கீழே.

எந்த வித வரிசைப்படியும் இல்லாமால்....
F&F (D)

Naanaani (X)

Narayanan M (W)

Nithi (A)


R.N.Suriya (X)

Ravi(O)

sathish(O)

Sathiya(Y)


Viswanathan (e)

எம். ரிஷான் ஷெரீப் (Y)

ஸ்ருதி(T)






இன்னொரு சிறிய அறிவிப்பு.... நமது குழுவிற்கு ஃபேஸ்புக் சமூக வளைத்தளத்தில் ஒரு பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. அதில் இணைந்து அவ்வப்போது அப்டேட்டுகளை கிடைக்கப்பெறுங்கள்.


******

Thursday, September 8, 2011

பொருட்கள் மீது வெளிச்சம் விழுகிறது இல்லையா? வெளிச்சம் என்கிறது பல ஃபோட்டான்கள் அடங்கிய ஓடை. (ஃபோட்டான்ன்னா ஒளித்துகள்) அனேகமா பொருட்கள் நகருவதில்லை. அதனால வெளிச்சம்தான் செயலோட இருக்கிறதா நாம நினைக்கிறோம். இப்படி நினைக்கிறதால ஒரு காட்சியை சரியா பார்க்க தவறிடறோம்.

பொருட்கள் மேலே ஃபோட்டான்கள் படும் போது 3 விஷயம் நடக்கலாம்.


1. ‘ரைட் போலாம்’ ன்னு ஃபோட்டான்களை அதோட வழியில அனுப்பிடலாம். இது ஒளி ஊடுருவல். -ட்ரான்ஸ்மிஷன்.

2. ‘வாவா’ன்னு உள்ள வாங்கி வெச்சுக்கலாம். உள் வாங்கல் - அப்சார்ப்ஷன்.

3. . ‘எனக்கு வேண்டாம்’ ன்னு திருப்பி அனுப்பிடலாம். ரிஃப்லெக்ஷன்.

ஒளி ஊடுருவல் ஆச்சுன்னா அந்த பொருளோட போட்டோவை பார்க்கிறதுல அர்த்தமில்லை. ஏன்னா ஒண்ணுமே தெரியாது! ஒளி ஒரு பொருள் மேலே பட்டு சிதறி நம் கண்ணுக்கு வந்தாதான் அந்த பொருள் தெரியவே தெரியும். ஊடுருவின ஒளி நேரா போய்கிட்டே இருந்தா நம் கண்ணுக்கு வராது - அது நம் கண் முன்னாடியே இருந்தால் ஒழிய! அதனால போட்டோ சம்பந்தமா இதுக்கு முக்கியத்துவம் இல்லைன்னு ஒதுக்கிடலாம்.

ஒளி ஊடுருவல் பொருளுக்கு செங்குத்தா இருந்தா அது பாட்டுக்கு நேரா போயிடுது. ஒரு கோணத்துல விழுந்தா அது வளைக்கப்படும். 'சற்றே தாமதித்து செல்லும் பிள்ளாய்' ன்னு தாமதப்படுத்தறதால பின்னால் வர போட்டான்கள் மோதி கீழே தள்ளி வளைக்கும் (இதான் ரிப்ராக்ஷன்) . இந்த பொருளை விட்டு வெளியேறும்போது திருப்பி பழைய வேகம் /திசையிலேயே போக ஆரம்பிச்சுடும். இப்படி வளையறதை வைத்துதான் காமிராவோட லென்ஸ் செய்து இருக்காங்கன்னு நமக்குத் தெரியுமே! இப்படி ஒளி வளையும் போதும் வெளியேறும்போதும் 100% அப்படியே நடந்து கொள்ளாது. கொஞ்சம் சிதறிடும். அதனாலதான் நாம் இந்த மாதிரி பொருட்களை பார்க்க முடியுது.

அதிகமாகவே சிதறும்படியா ஒளியை ஊடுருவ அனுமதிக்கற பொருட்கள் ஒளியை பல கோணங்களிலேயும் திருப்பி விட்டுடும். மெலிதான காகிதம், வெள்ளை கண்ணாடி (ப்ராஸ்டட் க்ளாஸ்),வெள்ளை அக்ரிலிக்; இதெல்லாம் இப்படி நடந்துக்கும். இது ஒளி மூலம் பத்தி யோசிக்கிறப்ப முக்கியம். ஒரு சின்ன ஓளி மூலம் (light source) இருந்தாலும் இப்படிப்பட்ட பொருட்களை இடையே சொருகி ஒளி மூலத்தை பெரிசாகவும், அதனால் மென்மையாகவும் (ஸாப்ட் லைட்) ஆக்கலாம். ஸ்ட்ரோப் லைட் முன்னால வைக்கிற வெள்ளை டிப்யூஷன் ஷீட், சூரியனை மறைக்கிற வெள்ளை மேகங்கள் எல்லாம் இதுக்கு உதாரணங்கள்:

போட்டோ எடுக்கப்படுகிற பொருள் இது போல ஒளியை மடக்குகிறது சாதாரணமா பிரச்சினை இல்லை.

ஒளியை உள் வாங்கலாம்ன்னு சொன்னோம் இல்லையா? உள்வாங்கப்பட்ட ஒளி திருப்பியும் பார்க்கக்கூடிய ஒளியா நமக்கு கிடைக்காது. வழக்கமா இது சூடாக மாறிடும். அதனால இதை போட்டோ எடுக்க முடியாது. பக்கத்திலேயே இருக்கிற ஒளியை உள்வாங்காத ஒரு பொருளோட ஒப்பிட்டு பார்த்தாதான் இதை 'பார்க்க' முடியும்! அதாவது வித்தியாசத்தை மட்டுமே பார்க்கலாம்.

கருப்பு பொருட்கள் நிறைய ஒளியை உள்வாங்கிடும் என்பதால அவற்றை போட்டோ எடுக்கறது கடினம்! கருப்பு வெல்வெட், ஃபர் இவற்றை போட்டோ எடுத்து பாருங்க!

மற்ற பொருட்கள் கொஞ்சம் ஒளியை உள்வாங்கி மற்றதை வெளியே விட்டு விடும். சிலதுன்னா சில அலைவரிசை ஒளியை. அதான் வண்ணம் என்பதும். ஊதா முதல் சிவப்பு வரை இருக்கிற அலை வரிசைகளில எதை திருப்பி அனுப்புதோ அந்த வண்ணமாக அந்த பொருளை நாம் தெரிஞ்சுக்கிறோம். பச்சை அலைவரிசை தவிர மீதி எல்லா அலை வரிசையையும் உள்வாங்கிட்டா பச்சை அலைவரிசை ஒளி மட்டும் வெளியே வரும்; பொருளும் பச்சையா தெரியும்.

அதே போல எவ்வளவு திருப்பி அனுப்புது என்பதை பொருத்து அந்த பொருளோட சாயலையும் நாம் தெரிஞ்சுக்கிறோம். அதிகம் திரும்பினா வெளிரியும்
குறைவா திரும்பினா அழுத்தமாவும் சொல்கிறோம்:


படம் 1 - # திவாஜி
பிற படங்கள்: # ராமலக்ஷ்மி


காரமுந்திரி I.
காரமுந்திரி II
கார முந்திரி III

-திவா
‘சித்திரம் பேசுதடி’
http://chitirampesuthati.blogspot.com/


Friday, September 2, 2011

எல்லாருக்கும் வணக்கம்.

நம்மைச் சுற்றிலும் எப்போதும் சில வடிவங்கள் மறைந்து கிடக்கும். மேகங்களை பார்த்து 'டேய் அங்க பாருடா சிங்கம் மாதிரி இருக்குல்ல', 'குதிரை மாதிரி இருக்குல்ல'.. இப்படி பல வடிவமைப்புகள் வெவ்வேறு பொருட்களில்/இடங்களில் விரவிக் கிடக்கின்றன. அது போல சில எழுத்து வடிவங்களும் எண் வடிவங்களும் காணக் கிடைக்கும்.

இந்த மாத போட்டி: "தற்செயலான எழுத்துகள்/எண்கள் "

போட்டி விதிமுறைகள் இங்கே.

படங்கள் வந்து சேர வேண்டிய கடைசித் தேதி 15-09-2011.

இந்த மாத போட்டிக்காக மட்டும் படத்தின் ஃபைல் நேம் முறையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது... படத்தின் ஃபைல் நேம், அனுப்பும் மடலின் சப்ஜெக்ட் இரண்டிலும் முதலில் படத்தை எடுத்தவர் பெயர், தொடர்ந்து அடைப்புக்குள் நீங்கள் படம் பிடித்திருக்கும் எழுத்து/எண் என்றிருக்குமாறு அனுப்புங்கள். எடுத்துக்காட்டாக: MQN(X).jpg என்றிருக்க வேண்டும்.
கீழுள்ள மாதிரி படங்களை பார்த்தாலே உங்களுக்கு போட்டி என்னவென்று விளங்கிவிடும். இருந்தாலும், சில விஷயங்களை தெளிவு படுத்துகிறேன்.

நீங்கள் குறிப்பிட விரும்பும் எண்/எழுத்து முதன்மை பொருளாக(main subject) இருக்க வேண்டும். படத்தில் எங்கே ஒரு மூலையில் 10% அளவில் மட்டும் அந்த எழுத்து வடிவம் படமாக்கப் பட்டிருக்கக் கூடாது. முதன்மை பொருளாக இருக்க வேண்டும்.

  • நேரடியாக ஒரு எண்ணோ/எழுத்தோ எழுதப்பட்டிருப்பதை படமாக்க கூடாது. அதவாது, எங்கேயோ ஒரு 'D' என்று எழுதப்பட்டிருப்பதை படமாக்கக் கூடாது. அது போன்ற வடிவமைப்புடன் உள்ளதைத்தான் படமாக்க வேண்டும்.
  • ஒரு எழுத்தை தலைகீழாக படமாக்க நேரிட்டால், பரவாயில்லை படம் பிடியுங்கள், பின்னால் பிற்தயாரிப்பில் அதை rotate செய்து அனுப்பி விடுங்கள். பார்வையாளரை தலை சுற்ற வைக்காதீர்கள். :)))
  • தமிழ் எழுத்துக்களாக (ஆங்கிலம் & தமிழ் மட்டும்) இருந்தாலும் பரவாயில்லை. வேறு மொழி வேண்டாம் ப்ளீஸ் (எனக்குத் தெரியாது... அதனால் என்னால் கண்டு பிடிப்பது சிரமம்).
மாதிரி படங்கள்.
X

S

O
H - (நன்றி ராமலஷ்மி)
W - (நன்றி ராமலஷ்மி)
இப்படத்தில் கழுத்தில் பாம்பு ‘U' ஆகவும் கையில் S ஆகவும் தெரிந்தாலும் அழுத்தமாக எழுத்தைச் சொல்வது w. எனவே மல்டிபிள் எழுத்துள்ள படமாயினும் நீங்கள் காட்ட விரும்புவதையே அடைப்புக்குள் குறிப்பிடுங்கள்.

T


டிப்ஸ்:
பறவைகளில் 'S' நிறையக் காணலாம்.
கட்டிடங்களில், 'D' 'W' 'U' 'Z' ஆகிய எழுத்துகள் காணக் கிடைக்கும்.
சாலை வளைவுகளில் 'U' 'C' காணலாம்.
மரக்கிளைகளில், 'V' 'W' 'X' 'Y' போன்றவை கிடைக்கும்.
மேலும், இங்கே இது போல பல படங்கள் உங்கள் ஐடியாவுக்கு.
ஆக..... இந்த மாத போட்டி உங்களுக்கு தெளிவாய் விளங்கியிருக்கும் என்று நம்புகிறேன். சந்தேகங்களை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

நடுவர்: MQN

போட்டிக்குப் படங்களை அனுப்பி கலக்குங்க மக்களே. :)


 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff