Showing posts with label ராமலக்ஷ்மி. Show all posts
Showing posts with label ராமலக்ஷ்மி. Show all posts

Friday, June 5, 2020



இன்று 5 ஜூன் 2020 சந்திரக் கிரகணம்:


இந்த ஆண்டின் இரண்டாவது பெனும்ப்ரல் சந்திரக் கிரகணம் இன்றிரவு நிகழ இருக்கிறது. இது நிலவு தேய்ந்து மீண்டும் வளரும் பூரணச் சந்திரக் கிரகணம் இல்லை. பூரணக் கிரகணத்தின் போது சூரியன், பூமி மற்றும் நிலவு ஆகிய மூன்றுமே ஒரே நேர்கோட்டில் வரும். அப்படி இல்லாமல் சூரியனின் கதிர்கள் பூமி மேல் விழுகையில், பூமியின் மங்கலான penumbra எனும் அரைநிழற் பகுதியை  நிலவு கடந்து செல்வதையே ஆங்கிலத்தில் Penumbral Lunar Eclipse என்கிறார்கள். நிலவின் தேய்வும் மிகமிகச் சிறிதாக நாம் சாதாரணமாப் பார்க்கையில் உணர முடியாதபடியே இருக்கும். டெலஸ்கோப் மூலமாகதான் தேய்வை உணர முடியும்.

இந்திய நேரப்படி, இன்றிரவு சுமார் 10.30 மணி முதல் நாளை  அதிகாலை 2.40 மணி வரை நீடிக்கும் சந்திர கிரகணம்  இரவு 12.40 மணியளவில் முழுமையான அளவை எட்டும் என்கிறார்கள். இந்த நேரத்தில் நாம் எப்போதும் பார்க்கும் வழக்கமான பிரகாசத்தோடு இருக்காதாம் முழுநிலவு.

ஸ்ட்ராபெர்ரி மூன்:

பொதுவாக ஜூன் மாத நிலவை ஸ்ட்ராபெர்ரி மூன் என்கிறார்கள். Honey Moon, the Mead Moon(தேனில் தயாரிக்கப்படும் பானம்), and Rose Moon போன்ற பெயர்களும் உண்டு. The Maine farmer's almanac_படி ஒவ்வொரு மாதத்தின் முழு நிலவுக்கும் ஒரு பெயர் வழங்கப் படுகிறது. 

ஃபார்மர்ஸ் அல்மனாக் என்பது ஓரளவுக்கு நம் ஊர் பஞ்சாங்கம் போல:). அமெரிக்கப் பூர்வீகப் பகுதிகளில் அங்குள்ள பருவங்களையொட்டி வானிலை முன் கணிப்பு; தேதி நேரங்களோடு நிலவோட அம்சம்; சூர்யோதயம் & அஸ்தமனம், பருவங்களுக்கேற்றபடி பயிர் செய்வதற்கான ஆலோசனைகள் என நாட்டுப்புறவியல் அடங்கிய ஒரு நம்பகமான குறிப்பேடு அது. உலகளாவிய அளவில் அதில் குறிப்பிட்டுள்ள பெயராலேயே அந்தந்த மாதத்தின் நிலவு அழைக்கப்படுகிறது. அந்தப் பெயருக்கு ஒருக் காரணக் கதை இருக்கும். நாம அதுக்குள்ளே ரொம்ப ஆழமாய் இறங்க வேண்டாம். ஆக பிங்க் மூன் என்றால் பிங்க் வண்ணத்திலோ ஸ்ட்ராபெர்ரி மூன் என்றால் செக்கச் செகப்பிலோ நிலா இருக்காது என்பதைப் புரிந்து கொள்வோம்:) ஆனாலும் நாசாவின் கூற்றுப்படி இன்று நிலவு இளஞ்சிவப்பாகத் தோற்றமளிக்கக் கூடிய வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.

மூன் ஃபோட்டோகிராஃபி:

போட்டோகிராபியில் நிலவைப் படம் எடுப்பது ஒரு சவாலான தனிப் பிரிவு. “திரும்பத் திரும்ப நிலவைப் படம் எடுப்பதில் என்ன இருக்கு... ஒரே மாதிரி படங்கள்தானே கிடைக்கப் போகிறது....” என்கிறீர்களா? இருக்கலாம். ஆனால் கிரகணங்கள்  மற்றும் சூப்பர் மூன் தோன்றுகையில் அவற்றை நாம் பார்க்கும் நேரத்தைப் பொறுத்து நிலவின் அளவு, பிரகாசம் அதன் பின்னணியில், இதோ மேலே சொல்லியிருப்பது போல நாம் அறிந்து கொள்ள முடிகிற தகவல்கள் போன்றவை எடுக்கும் படங்களுக்கான சுவாரஸ்யத்தைக் கூட்டுகின்றன, இல்லையா? 

உதாரணத்திற்கு, இப்பதிவின் முதல் படத்திலிருக்கும் ப்ளட் மூன். ஏன் அது அப்படி அழைக்கப்படுகிறது என்பதைப் பற்றி விரிவாக ‘இங்கே’ சொல்லியிருக்கிறேன். இப்படி நிலவைப் படமெடுக்கையில் அறிந்திடவும் கற்றுக் கொள்ளவும் எவ்வளவோ உள்ளன.

பத்தாண்டுகளுக்கு முன் dslr வாங்கிக் கொண்ட புதிதில், (ஆசிரியர் குழுவில் இணைவதற்கும் முன்பு ஒரு மாணவியாக) நிலவை அப்பெச்சர் மோடில் படமாக்குவது எப்படி என பிட் தளத்தில் பதிந்திருக்கிறேன். பின்னர் மேனுவல் மோடில் எடுக்க ஆரம்பித்த பிறகு நிலவையும் மேனுவல் மோடில் மட்டுமே எடுத்து வருகிறேன். அடிக்கடி எடுத்துப் பழகி விட்டபடியால் இப்போதெல்லாம் ஓரிரு நிமிடங்களில் நிலவு லட்டு மாதிரி கேமராவுக்குள் விழுந்து விடுகிறது. அந்த அனுபவத்தில் நிலவைப் படமாக்குவது குறித்து சில அடிப்படைக் குறிப்புகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.


Exif: 1/60s,f/13, ISO400
Focal length: 300mm
Nikkor 70-300mm f/4.5-5.6G AF-S VR IF-ED
14-11-2016 19:31:40

நிலவைப் படமாக்கும் போது 
கவனிக்க வேண்டியவை:

1.
நிலவைப் படமாக்க குறைந்தபட்சம் நம் லென்ஸில் 200mm zoom இருக்கணும். அதற்கும் மேலே இருந்தால் இன்னும் நல்லது. (இந்தப் பதிவிலுள்ள படங்கள் 70-300mm பயன்படுத்தி எடுத்தவை)


2.உங்கள் லென்ஸிலிருக்கும் UV filter_யை அகற்றி விடுங்கள்.

3.கை நடுக்கத்தால் படம் ஷேக் ஆகிவிடுவதைத் தவிர்க்க ட்ரைபாட் பயன்படுத்துவதே சிறப்பு.

கை நடுங்காமல் எடுக்க முடிந்தால் ஓகே. கீழ் வரும் படங்கள் ட்ரைபாட் இல்லாமல் கேமராவைக் கையில் பிடித்து எடுத்தவை வெவ்வேறு அப்பெச்சர் அளவுகளில்.....

Exif: 1/400s, f/11, ISO 400
Focal length: 300mm
Nikkor 70-300mm f/4.5-5.6G AF-S VR IF-ED
19-04-2019 22:24 
#HandHeld



Exif: 1/160s, f/9, ISO 400
Focal length: 300mm
Nikkor 70-300mm f/4.5-5.6G AF-S VR IF-ED
#HandHeld 

ட்ரைபாடில் வைத்து எடுத்திருந்தால் இன்னும் ஷார்ப்பாக கிடைத்திருக்கும்.

4.
ட்ரைபாடில் சரியாக கேமராவை மாட்டி, எப்படித் திருப்பி எங்கே டைட் செய்தால் நாம் விரும்பும் கோணத்தில் படம் எடுக்க முடியும் என்பதை முன்னரே பழகிக் கொள்ள வேண்டும். இருட்டுக்குள் அந்த நேரத்தில் தடுமாற வேண்டியிருக்காது.

5.என்னதான் ட்ரைபாடில் வைத்தாலும் விரலின் சிறு தொடுகையும் கூட கேமராவை ஆட்டம் காண வைக்கும். எனவே ரிமோட் அல்லது செல்ஃப் டைமர் உபயோகித்தால் நல்லது.

6.
அப்படி ட்ரைபாடில் ரிமோட் அல்லது செல்ஃப் டைமர் உபயோகித்து  எடுக்கையில் VR (vibration reduction) or IS (image stabilization) ஸ்விட்சை ஆஃப் செய்திடுங்கள்.

7.மேனுவல் மோட் அல்லது அப்பெச்சர் மோட் எது உங்களுக்கு வசதியோ தீர்மானித்துக் கொள்ளுங்கள். மேனுவல் மோடில் நான் பெரும்பாலும் அப்பெச்சர் f11_ல் ஆரம்பிப்பேன். முன்னும் பின்னுமாக  f9 to f13 சென்று பார்ப்பேன்.


8.
மேனுவல் ஃபோகஸ் படத்தை நல்ல ஷார்ப்பாக விரைவில் எடுக்க உதவும். அப்போது ஃபோகஸ் பாயின்டை (ஸ்பாட் மீட்டரிங் spot metering) நிலவின் நடுப்பகுதியில் வைத்திடுங்கள்.

9.
உங்கள் கேமராவின் குறைந்தபட்ச iso 100 எனில் ஷட்டர் ஸ்பீட் 1/125_ல் முயன்றிடலாம்.  கு.ப  iso 200 எனில் 1/250 வைத்துப் பார்க்கலாம். நிலவின் பிராகாசத்தைப் பொறுத்து iso 100 முதல் 400 வரை வைத்துக் கொள்ளலாம். இதில் hard and fast விதிகள் கிடையாது. நிலவு சற்று மங்கலாக இருப்பின் ஷட்டர் ஸ்பீடைக் குறைத்துக் கொள்ளலாம். அதிகப் பிரகாசமாக இருந்தால் ஷட்டர் ஸ்பீடை கூட்டிக் கொள்ளலாம். f நம்பரில் முன்னும் பின்னுமாகப் போய்ப் பார்க்கலாம். இருளில் எடுப்பதால்கூடிய வரை iso_வை அதிக அளவில் வைக்காமல் இருந்தால் படம் noise (grains) இல்லாமல் கிடைக்கும். குறிப்பாக.....

10.
நீங்கள் அப்பெச்சர் மோடில் எடுப்பீர்களானால், iso ஆட்டோ தவிர்த்து விட்டு, நீங்களே செட் செய்திடுங்கள்.

பெங்களூரில் கடந்த சில நாட்களாக மாலை, இரவு வேளைகளில் மழை. நீங்கள் வசிக்கும் பகுதியில் எப்படி? இன்றிரவு மேக மூட்டமாக இல்லாதிருந்தால் ஸ்ட்ராபெர்ரி மூனைப் படம் எடுங்கள்:). பத்தரை மணிக்கு மேல் கிரகணம் ஆரம்பித்த பின் நிலவு சற்று மங்கலாகத் தெரியும் எனச் சொல்லப்படுவதால், முடிந்தால் அதற்கு முன்னரே கூட முயன்று பாருங்கள்!

***

Updates:

இரவு எட்டரை மணியளவில் படமாக்கிய ஸ்ட்ராபெர்ரி மூன்.... 
Exif: 1/125s, f/13,
 ISO 100
Focal length: 300mm
#HandHeld 
***

Wednesday, October 7, 2015

இந்த மாதப் போட்டிக்கு நீங்கள் அனுப்பும் படங்களில் பொருட்களோ, மனிதரோ, கட்டிட அமைப்புகளோ எதுவானாலும் பளிச் என மூன்றாக இருக்க வேண்டும். ஆம்,

போட்டித் தலைப்பு: மூன்று

அதாவது படத்தில் ஏதேனும் ஒரு விஷயம் மூன்று எனும் எண்ணிக்கையில் பிரதானமாக இருக்க வேண்டும், தெரிய வேண்டும்.

சுலபமான தலைப்பு. கேமரா கண்களோடு உலகை நோக்கினால் காட்சி சிக்காமலா போய் விடும்? அல்லது வீட்டிலிருந்தபடியே கூட உங்கள் ரசனைப்படி பொருட்களை வைத்து எடுக்கலாம்.  சில மாதிரிப் படங்களைப் பார்க்கலாமா?

ராமலக்ஷ்மி:
#

#

#
#
#


ஆனந்த் விநாயகம்:
#
#
# மாதிரிக்காக.. ஒரு கொலாஜ். போட்டி விதிமுறையின்படி ஒருவர் ஒரு படம் மட்டுமே அனுப்ப வேண்டும்.


நவ்ஃபல்:
#


#
#

போட்டி விதிமுறைகள் இங்கே

படங்களை அனுப்பக் கடைசித் தேதி 20 அக்டோபர் 2015.
***

போட்டி ஆல்பம்: இங்கே

Saturday, July 4, 2015

போட்டியில் வென்ற படங்களைப் பார்க்கும் முன் வெளியேறும் படங்களைப் பற்றியும் கொஞ்சம் பார்க்கலாமா?

ல்ல காட்சி. கட்டம் கட்டிய சட்டத்துக்கு வெளியே இருக்கும் பகுதி கருப்பொருளின் மேல் முழுக் கவனத்தைக் கொண்டு போகாதது குறை.
பாலா
தலைப்பை மனதில் இருத்தி இப்படி க்ராப் செய்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.


வாட்டர் மார்க் பெரிய அளவில் இருப்பதும் உறுத்தல்.

கீழ்வரும் படத்துக்கும் மேல் சொன்னவை பொருந்தும். போட்டிக்கு சமர்ப்பிக்கும் படங்களில் இத்தனை பெரிய வாட்டர் மார்க் இடுவதைத் தவிருங்கள் நண்பர்களே.
பாலமுருகன்
கருப்பொருளை இன்னும் தெளிவாக முன் வைக்க, பல வட்டங்களைத் தவிர்த்து, கீழ்வருவது போல க்ராப்பிங் இருந்திருந்தால் சிறப்புக் கவனம் பெற்றிருக்கும்.



ட்டத்துக்குள் சட்டத்துக்குள் சட்டம் என அசத்தியிருந்தாலும் கிளி போதுமான அளவு ஷார்ப்பாக இல்லாதது குறை.
# குமார்
ற்ற படங்களில் பெரிய குறைகள் ஏதுமில்லை,வென்ற படங்கள் அவற்றை விடச் சிறப்பாக இருப்பது தவிர்த்து..

சிறப்புக் கவனம் பெறும் படங்கள்: 
நரேந்திரன் & தேவேந்திரன் S
தை சொல்லும் காட்சி. யாருமற்ற இல்லத்தில் ஒவ்வொரு கதவாகத் திறந்து விட்டு கடைசிக் கதவைத் திறந்து நிற்கும் மனிதனை நோக்கி இழுத்துச் செல்லும் கோடுகள்.. அதாவது Leading lines ஆக அறையின் சுவர்கள்...! நபரை silhouette ஆகக் காட்சிப் படுத்தியிருப்பதும் சிறப்பு.
# நரேந்திரன்
கருப்பு வெள்ளைப் படங்களில் ஓரளவுக்கு இரைச்சல் அனுமதி என்றாலும் இதில் சற்று அதிகமாக இருப்பது சிறு குறை.
**

ச்சிதமான சட்டம். கருப்பொருளாக வானும் கடலும் நிலமும்!

# தேவேந்திரன் S

மூன்றாம் இடம்: பிரபு சதாசிவம் 
ட்டத்துக்குள் தாஜ்மஹாலும் அங்கே குழுமியிருக்கும் மக்களும் மட்டுமின்றி, இந்த முனையில்  silhouette ஆக மக்கள் அதைப் படப்பிடிக்கும் காட்சி படத்துக்கு உயிர்ப்பைத் தருகிறது.
# பிரபு
சற்றே படம் tilt ஆகியிருப்பது குறை.
**
ருமையான ஒளி அமைப்பு. சட்டத்துக்குள் இருக்கும் பெண்ணும் சிறுமியும் இருளிலிருந்து ஒளியை நோக்கிச் செல்லும் உணர்வைப் பார்ப்பவருக்குக் கடத்துகிறது.
# சதாசிவம்

அத்தனை உறுத்தலாகத் தெரியாவிட்டாலும் இந்தப் படமும் சற்றே tilt ஆகி உள்ளது.

இருவருமே சாய்மானத்தை சரி செய்திருந்தால் முதலிரண்டு இடங்களில் பங்கு கிடைத்திருக்க வாய்ப்புகள் அதிகம்.

இரண்டாம் இடம்: ஆன்டனி சதீஷ்

ருமை. இயற்கைச் சூழலில் ஆந்தையை தெளிவாக, அழகாகப் பாறைகளால் சட்டமிட்டுக் காட்டியிருக்கிறார்.


முதலிடம்:  கரிகாலன்

ம்போஸிஷனும் ஒளியைக் கையாண்ட விதமும் அற்புதம். தரையில் படிப்படியாகப் பரவியிருக்கும் வெளிச்சம் நம்மை மறுமுனைக்கு அழைத்துச் செல்கிறது.

வெற்றி பெற்றவர்களுக்கு நல்வாழ்த்துகளும் பாராட்டுகளும்!

டுத்த மாதப் போட்டி விரைவில் அறிவிப்பாகும். போட்டிகளை  திறனை மேம்படுத்திக் கொள்ளும் பயிற்சியாகவும் வாய்ப்பாகவும் எடுத்துக் கொண்டு தொடர்ந்து கலந்து கொள்ளுங்கள், நண்பர்களே:)!
**

Tuesday, June 30, 2015

வணக்கம்.

அருமையான படங்களை ஆர்வத்துடன் அனுப்பியிருந்த அனைவருக்கும் நன்றி.

முதல் சுற்றுக்கு முன்னேறியிருக்கும் பனிரெண்டு படங்கள் எந்த தர வரிசைப் படியும் அன்றி..


# தனஷ்யாம் ராஜ்

# கரிகாலன்

# பாலமுருகன்


# செந்தில் குமார்


# பிரபு

# தேவேந்திரன் S


# ஆன்டனி சதீஷ்

# நரேந்திரன்

# பாலா


# சதாசிவம்

# குமார்


# பிரகாஷ்


# தகாஷ் குமார் J


சட்டமிட்டு அசத்தியிருக்கும் பன்னிருவருக்கும் வாழ்த்துகள். விரைவில் இறுதிச் சுற்று முடிவுகள் அறிவிப்பாகும்.
**



Sunday, June 7, 2015

முக்கிய அறிவிப்பு:

ம்மாதப் போட்டிக்கான தலைப்பு என்னவெனப் பார்க்கும் முன் போட்டி விதிமுறைகளில்.., போட்டிக்கான படங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரிகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தைக் கவனத்தில் கொள்ளும்படிக் கேட்டுக் கொள்கிறோம்.

பிகாஸா திடீரென மின்னஞ்சல் மூலமாக ஆல்பங்களுக்குப் படம் அனுப்பும் வசதியை நீக்கி விட்ட படியால் சென்ற மாதம் 15 தேதிக்கு மேல் பலரின் படங்கள் ஆல்பத்தில் தானாக அப்டேட் ஆகாமல் போனது. சிலர் இத்தகவலை பின்னூட்டமிட்டுத் தெரிவிக்கவும், அதன் பிறகு மற்றுமொரு மின்னஞ்சலுக்கு (CC) அனுப்பப்பட்டதில் இருந்து படங்கள் மீட்டெடுக்கப்பட்டு ஆல்பத்தில் சேர்க்கப்பட்டன.

இனி பிகாஸா மூலமாக நேரடியாகப் படங்கள் அப்டேட் ஆகமுடியாத சூழலில் ஃப்ளிக்கருக்கு மாறுகிறது PiT. ஆகையால் இனி படங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: hall84eyes@photos.flickr.com
CC அனுப்ப வேண்டிய முகவரி: photos_in_tamil@yahoo.in
[இங்கும் கவனியுங்கள். cc முகவரி முன்னர் அனுப்பியது போலவே இருக்கிறதே என உங்கள் Contacts_ல் update செய்யாது இருந்து விடாதீர்கள். இது யாஹூ ஐடி. முன்னர் பயன்பாட்டில் இருந்தது ஜிமெயில்.]

விதிமுறைகள் பதிவிலும் இந்த மாற்றத்தை அப்டேட் செய்துள்ளோம். மற்றபடி நீங்கள் அனுப்பும் படத்தின் ஃபைல் பெயரும், மின்னஞ்சலின் சப்ஜெக்டும் வழக்கம் போல உங்கள் பெயரில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

கவனக்குறைவாக பழைய முகவரிக்கு அனுப்பி விடாதீர்கள்.

2015 ஜூன் மாதப் போட்டி

Frame within a frame - சட்டத்துக்குள் சட்டம்

இதுதான் இம்மாதப் போட்டித் தலைப்பு. நாம் கட்டம் கட்டும் காட்சியின் ஆழத்தை அதிகரிக்கவும், சுவாரஸ்யம் கூட்டவும், சொல்ல வருவதை அழுத்தமாகக் காட்டவும் இந்த உத்தி கையாளப் படுகிறது. கேமரா பார்வையுடன் இரசனையான கூட்டமைவு(composition)ம் சேர்ந்து பார்ப்பவரை ஈர்க்கும் இந்த வகைப் படங்கள்.

அதுமட்டுமின்றி கேமரா வழங்கும் வழமையான செவ்வக வடிவ சட்டத்திலிருந்து விலகி விதம் விதமாக சட்டமிடும் வாய்ப்பை நம்மைச் சுற்றியிருக்கும் பல விஷயங்கள் நமக்கு வழங்குகின்றன.

வாகனத்தின் பக்கவாட்டுக் கண்ணாடி, பைக் கண்ணாடி, வண்ண மூக்குக் கண்ணாடி, ஸ்மார்ட் ஃபோன் ஆகியவற்றில் சப்ஜெக்டின் பிம்பங்களை கொண்டு வருதலும் ஒரு உத்தி. பயணத்தின் போது இவ்வகைக் காட்சிகளுக்கு ஏராளமான வாய்ப்புகள் உருவாகும். ஜன்னல் அல்லது நுழைவாயில் ஊடாகத் தூரத்தில் தெரியும் கட்டிடங்கள், மலைகள், மரங்களைப் படமாக்கலாம். பரந்த மரக்கிளைகளையே கூடச் சட்டமாக்கி விடலாம். உங்கள் கற்பனைக்கு வானம்தான் எல்லை!

எடுத்த படங்களிலிருந்து தேடி ஒரு சிலவற்றை மாதிரிக்காக இங்கே பகிர்ந்திருக்கிறேன். இதற்கென்றே நீங்கள் களத்தில் இறங்கும் போது சிந்தித்து அசத்தலான படங்களைத் தர முடியும்.

#1

#2


#3

#4

#5

#6

படங்கள் 1 to 6: ராமலக்ஷ்மி

படங்கள் 7 & 8: சர்வேசன்

#7

#8


படங்கள் வந்து சேர வேண்டிய கடைசித் தேதி: 20 ஜூன் 2015
போட்டி விதிமுறைகள் இங்கே.
***

ஜூன் 2015 போட்டி ஆல்பம் - ‘சட்டத்துக்குள் சட்டம்’ இங்கே!

Monday, May 11, 2015

மே மாதப் போட்டி அறிவிப்பான, சென்ற பதிவில் “Portraitனா என்ன? கொஞ்சம் சொல்ல இயலுமா? இல்லை தமிழ்ல லிங்க் கிடைக்குமா?” இப்படிக் கேட்டிருக்கிறார் PiT வாசகர் சதீஷ் செல்லத்துரை. அவருக்கான பதிலாக மட்டுமின்றி போர்ட்ரெயிட் குறித்த ஒரு அறிமுகமாக இந்தப் பதிவு:



போர்ட்ரெயிட் அல்லது போர்ட்ரெய்ச்சர் என்பது ஒரு நபரின் முகம், முக அமைப்பு, உணர்வுகளை வெளிப்படுத்தும் முகபாவம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கலை வடிவம். அது ஒளிப்படமாகவோ, ஓவியமாகவோ, சிற்பமாகவோ இருக்கலாம். இவை சப்ஜெக்ட் நகராத நிலையில் இருக்கும் போது எடுக்கவோ, வரையவோ, வடிக்கவோ படுகின்றன. குறிப்பாக சப்ஜெக்ட் படம் எடுப்பவரையோ வரைபவரையோ நேராகப் பார்ப்பது போல் இருக்க வேண்டும்.  அப்போதுதான் பார்வையாளரைப் படத்துடனோ ஓவியத்துடனோ வெற்றிகரமாக ஒன்றிடச் செய்ய முடியும். அதுதானே ஒரு கலைஞனுக்கு தேவையானதும் :)?
**

ரி, நாம் இப்போது போர்ட்ரெயிட் ஃபோட்டோகிராஃபிக்கு வருவோம்.

I.  TRADITIONAL PORTRAIT எனப்படும் வழமையான மரபு: இதைத்தான் இம்மாதப் போட்டிக்கான தலைப்பாக நடுவர் அறிவித்திருப்பது.

* முகத்துக்கு முக்கியத்துவம்..

* நபரின் தனித்தன்மையைப் பிரதிபலிப்பது..

* நபர் நேரடியாக கேமராவைப் பார்ப்பது.


* நபரின் கழுத்து வரை..

நெஞ்சு அல்லது உடலின் மூன்றில் இரண்டு பாகம் வரை...

இந்த அளவுகளில் படம் அமைந்தாலே முகபாவத்துக்கு முக்கியத்துவம் அளிக்க முடியும். நபரை கால் வரைக்கும் முழுமையாகக் காட்டுவதும் போர்ட்ரெயிட் வகையில் வந்தாலும் அவற்றை விட மேற்சொன்ன மூன்று வகையே போர்ட்ரெய்ட்டின் அம்சமாகும்.

போர்ட்ரெயிட் பற்றி ஆரம்பித்தாயிற்று. அதிலிருக்கும் மேலும் சில வகைகளைப் பற்றியும் கொஞ்சம் பார்த்து விடுவோமா?

II. ENVIRONMENTAL PORTRAIT எனப்படும் நபர் இருக்கும் சுற்றுச் சூழலைப் பிரதிபலிக்கும் படங்கள். உதாரணமாக மார்க்கெட் அல்லது தெருவோர வியாபாரி, ஒளிப்படம் எடுக்கும் கலைஞர், உணவு விடுதியில் சமைப்பவர், சுவருக்கு வர்ணம் தீட்டுபவர்.. போன்றவர்களைச் சொல்லலாம். முகத்தோடு அவர்கள் ஈடுபடுட்டிருக்கும் செயலையும் சேர்த்து நமக்குக் காட்டுவதாக இருக்கும்.


முகபாவம் முக்கியம் என்றாலும் நேரடியாகக் கேமராவைப் பார்த்தேயாகும் கட்டாயம் கடைபிடிக்கப்படுவதில்லை. கேமராவைப் பார்த்தால் கூடுதல் சிறப்பு.

III.  CANDID PORTRAIT என்பது சப்ஜெக்ட்டுக்குத் தெரிந்தோ தெரியாமலோ அவர்களை இயல்பு நிலையில்.. கேமராவைப் பார்த்திராத வேளையில்.. படமாக்குவது.

பெரும்பாலும் பத்திரிகையியல் (JOURNALISM), பயணப் படங்கள் (TRAVEL PHOTOGRAPHY),  சாலைக் காட்சிகள் ( STREET PHOTOGRAPHY), விழாப் படங்கள் ( EVENT PHOTOGRAPHY) ஆகியவற்றுக்கு கேன்டிட் வகை சிறப்பு சேர்க்கும். இன்னும் சொல்லப்போனால் ஒரு தருணத்தை உறைய வைப்பதன் மூலமாக அந்நபரின் உணர்வுகளை பார்ப்பவருக்குக் கடத்துவது.


 IVLIFE STYLE PORTRAIT என்பது ஒரு தனிநபர் அல்லது நபர்களின் வாழ்க்கை முறையைப் பிரதிபலிப்பது. என்விரோன்மென்டல் மற்று கேன்டிட் இரண்டையும் கலந்து செய்த கலவையாக இருக்கலாம். சுற்றுச்சூழலைப் பிரதிபலிப்பதாக, நபர்கள் இயல்பு நிலையில் கேமராவைப் பார்க்காமலும் இருக்கலாம். அல்லது பார்க்கவும் செய்யலாம்.


இங்கே முக்கியத்துவம் சப்ஜெக்ட்டின் [நபர் (அ) நபர்களின்] வாழ்க்கை அனுபவம் அழுத்தமாக வெளிப்பட வேண்டும். பெரும்பாலும் விளம்பரப் படங்கள் இவ்வகையைச் சார்ந்ததாக இருப்பது கவனித்தால் புரியும். ஃபேஷன், மருந்து மற்றும் உணவுத் தொழிலகங்கள் போன்றவை இத்தகு வாழ்க்கை முறைகளைப் படங்களில் காட்டுவதன் மூலம் மக்களின் உணர்வுகளை எளிதாகத் தொடுகிறார்கள். திருமண விழாக்கள் மற்றும் ஃபேமிலி போர்ட்ரெய்டுகளும் LIFE STYLE வகையைச் சார்ந்தவையே ஆகும்.

மேற்சொன்ன மூன்று வகைக்கும் ஒவ்வொரு மாதிரிப்படத்தை மிகச் சிறிதாகப் பகிர்ந்திருப்பதன் காரணம், சரியாக வாசிக்காமல் இவையே போட்டிக்கான மாதிரிப்படமென நினைத்து எவரும் குழப்பம் அடைந்து விடக்கூடாது.

இந்தப் பதிவின் நோக்கம் போர்ட்ரெயிட் ஃபோட்டோகிராஃபி  அறிமுகம் என்பதால் தெளிவான புரிதலுக்காக மேலும் சிலவகைகளை நாம் பார்த்தோம். இந்த வகைகளும் கூட எதிர்காலத்தில் போட்டித் தலைப்பாகலாம்:).
**
ப்போது இம்மாதப் போட்டிக்கு வருவோம்.

முதல் வகையான ட்ரெடிஷனல் போர்ட்ரெயிட் வகைப் படங்களே இப்போட்டிக்கு ஏற்றவை.

‘அறிமுகமற்றவர்களின்’ உருவப்படம் என்றதும் படத்தில் இருக்க வேண்டியது ஒரு நபரா, அல்லது பல நபர்கள் இருக்கலாமா எனும் சந்தேகம் பலருக்கு வருகிறது. பொதுவாகப் போர்ட்ரெயிட் என்றாலே ‘ஒரு தனி நபரின் முகபாவத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் உருவப்படம்’ என்பது புரிதலுக்குரிய ஒன்றென்பதால் அவ்வாறாக அறிவிக்கப்பட்டது. ‘போர்ட்ரெயிட் என்றால் என்ன?’ எனும் கேள்வியே சிலருக்கு இருக்கும் நேரத்தில் தலைப்பை இப்போது “அறிமுகமற்றவரின்” என ஒருமையில் திருத்தம் தரப்பட்டுள்ளது. ஆக முதல் வகையான ட்ரெடிஷனல் போர்ட்ரெய்ட்டின் கீழ் தரப்பட்டுள்ள குறிப்புகளை மனதில் நிறுத்திப் படங்களை அனுப்புங்கள்.
**
றிமுகமற்றவரின் போர்ட்ரெயிட் படங்களை எடுப்பது எப்படி?

முன்னர் இந்தியாவின் பெருநகரங்களில் மட்டுமே தென்பட்டு வந்த ஃபோட்டோகிராஃபி குழுமங்கள் இப்போது பரவலாகப் பல இடங்களிலும் தோன்றி இயங்கி வருகின்றன. குறிப்பாகத் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் இயங்கி வருகின்றன. ஒளிப்படக் கலைஞர்கள், ஆர்வலர்கள் ஒன்றாக இணைந்து வாரயிறுதிகளில் ஃபோட்டோ வாக் செல்கிறார்கள். இது ஆரோக்கியமான விஷயம். இப்படிக் குழுவாகச் செல்வது பாதுகாப்பானதும் மனிதர்களை அணுக எளிதான ஒன்றும் ஆகும். அறிமுகமற்றவர்களும் உடனடியாக ஒரு புரிதல் ஏற்பட்டு ஒத்துழைக்கிறார்கள்.

பெங்களூரிலும் இப்படிப் பல குழுமங்கள் உண்டென்றாலும் அவற்றில் இணைந்து செயல்படுவது எனக்கு வசதிப்படவில்லை. அன்றாட வெளி வேலைகள், பெங்களூரின் முக்கிய வீதிகளுக்கு வேறு வேலையாகச் செல்லும் சமயங்கள், மக்கள் கூடும் பல்வேறு கண்காட்சிகள், ஏரிகள் மற்றும் பூங்காக்களில் நடைப் பயிற்சி செல்லும் வேளைகள் என கிடைக்கிற வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்கிறேன். சிலருக்கு உபயோகமாய் இருக்கலாம் எனக் கருதி எனது தனிப்பட்ட அனுபவங்களிலிருந்து சில குறிப்புகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

நாம் வாழும் காலத்தில் முடிந்தவரையிலும் விதம் விதமான மனிதர்களை இயல்பு நிலையில் படமாக்கிப் பதிந்திட வேண்டும் எனும் ஆர்வம் கொண்டிருந்த எனக்கு, ஆரம்பத்தில் புதியவர்களை அணுகுவதில் நிறைய தயக்கம் இருந்தது.  அதனால் கேன்டிட் வகை போர்ட்ரெய்ட்டுகளையே அதிகம் எடுத்து வந்தேன். ஆனால் ஃப்ளிக்கர் நண்பர்கள் பலரின் பதிவுகளில் அறியாத நபராயினும்  கேமராவைப் பார்க்கிற மாதிரியாக எடுக்கப்பட்டவற்றில் இருந்த உயிர்ப்பு என்னைக் கவர்ந்தது. அவர்களிடமிருந்து கிடைத்த சில ஆலோசனைகளை செயல்படுத்திப் பார்க்க முடிவு செய்தேன்.

அதில் ஒன்று சப்ஜெக்டுக்கு சற்று தொலைவில், சாலையின் மறுபக்கமோ கூட நின்றபடி சுற்றிவர கேமரா மூலமாக நாம் கம்போஸ் செய்வதாக பாவ்லா செய்தோ அல்லது சில படங்களை எடுத்தபடியோ இருந்தால் சப்ஜெக்ட் “சரிதான். இவர் போற வாரவங்கள, கண்ணுல படற விசயங்கள எல்லாம் படமாக்கித் தள்ளுவாரு போல” எனும் எண்ணத்துக்கு வந்து விடுவார்.  ஏதோ ஒரு நொடியில் அவரது “கண் தொடர்பு” (eye contact) நமக்குக் கிடைத்து விடும். இந்த ஆலோசனை எனக்கு அத்தனை வசதியானதாக இல்லை. உங்களுக்குச் சரிப்பட்டு வருமாயின் முயன்று பாருங்கள்!

ஒருவர் நம்மைப் பார்க்க அவரிடம் கேட்காமல் நிமிடக் கணக்கில் காத்திருப்பதை விட மனிதர்களை அணுகிச் சம்மதம் பெறுகிற இரண்டாவது ஆலோசனை எனக்குப் பொருந்தி வந்தது. இதற்காக நீங்கள் அவர்களோடு பேசியே ஆக வேண்டிய கட்டாயம் ஏதுமில்லை. கேமராவைக் கோணம் பார்ப்பது போல் வைத்துக் கொண்டு நட்பாக ஒரு தலையசைப்பில் சம்மதம் கேட்டால் போதுமானது. அதே போன்ற தலையசைப்பைப் பதிலாகத் தந்து விட்டு விருப்பமானால் போஸ் கொடுப்பார்கள். இல்லையானால் “எடுத்துக்கலாம் ஆனால் நேரடி போஸ் எல்லாம் வேண்டாம்” என்பது போல வேறு திசையில் பார்ப்பார்கள். கண் தொடர்பு கிடைத்தால் அதிர்ஷ்டம்.  இல்லையேல் கேண்டிட் ஆக முடிந்தாலும் பாதகம் இல்லை.

சிலர் தலையசைப்பைத் தாண்டி சிநேகமாகக் புன்னகைக்கவோ ஒரு சில வார்த்தைகள் நம்மோடு பேசவோ செய்வார்கள். நாமும் நலம் விசாரிக்கலாம். அதே சமயம், அட பேசுகிறார்களே என “எங்கே இப்படி நில்லுங்க. அப்படி போஸ் கொடுங்க. இப்படிச் சிரிங்க” என அட்வான்டேஜ் எடுக்காதிருப்பது நல்லது. அவர்களின் பொன்னான நேரத்தையும் மதிக்க வேண்டும்.  அரை நிமிடத்துக்குள் ஒன்றிரண்டு படங்களோடு முடித்துக் கொள்வது சாலச் சிறந்தது. அணுகும் முன்னரே கேமராவில் அதற்கான செட்டிங்குளை தயாராக வைத்துக் கொண்டு அணுக வேண்டும்.

#


மேலே இருக்கும் வயதான பெரியவர் வீடு வீடாகச் சென்று உப்பு, கோலப்பொடி விற்கும் வியாபாரி. நெல்லையில் அம்மா வீட்டுக்குப் போயிருந்தபோது சந்தித்தேன். கேட்கும், பார்க்கும் திறன்கள் குறைந்து வருகிற நிலையில் இருக்கும் இவரை இந்த ஒரு படம் மட்டுமே கேமராவைப் பார்ப்பது போல எடுத்தேன். மற்றபடி இவரது நடை உடைகளை இயல்பு நிலையிலேயே படமாக்கி விட்டிருந்தேன். நம்மால் வயதானவர்களுக்குத் தொந்திரவு இருக்கக் கூடாது.

அறியாத குழந்தைகளை எடுக்கும் போது உடன் வந்திருக்கும் பெற்றோரிடம் தலையசைத்துக் கேட்கலாம். விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளைத் தொந்திரவு செய்யாமல் இயல்பு நிலையிலேயே எடுக்கலாம். அவர்களே நம்மைப் பார்க்கும் பட்சத்தில் நாம் சிரித்தால் அவர்களும் அழகாகச் சிரிப்பார்கள்.
சில பெற்றோர்கள் அவர்களாக முன் வந்து ‘கேமரா பார், சிரி’ என்றும் சொன்னதுண்டு.  விருப்பமில்லாவிடில் நகர்ந்து விடலாம். விருப்பமின்மையைக் கணித்து விடவும் முடியும். என் அனுபவத்தில் அப்படி ஆட்சேபித்தவர்கள் இல்லை. சிறு வியாபாரிகளில் அபூர்வமாகச் சிலர் ’வேண்டாமே’ என்பது போல மறுத்திருக்கிறார்கள். பொதுப்படையாகப் பார்த்தால் மனிதர்கள் பழக இனிமையானவர்களே. அணுகும் விதத்தில் பக்குவம் வேண்டும். சடாரென ஒருவர் முன் கேமராவுடன் போய் நின்று ‘எடுக்கட்டுமா’ எனத் தலையசைத்தீர்களானால் பூசை விழக் கூட வாய்ப்பிருக்கு. இடம், பொருள், ஏவல் என ஒன்றிருக்கிறது அல்லவா? எனவே பக்குவமாய் அணுகுங்கள்.

முத்தாய்ப்பாக ஒன்று. அறியாத மனிதரின் போர்ட்ரெயிட் படங்கள் காலத்தின் பதிவுகள். ஈடுபட்டிருக்கும் கலையில் மூலமாக சமகால வரலாற்றுக்கு நமது சிறு பங்களிப்பு. இத்தகு படங்களின் மூலமாக சமகால மனிதர்களின் உடை நடை வாழ்வியல் சூழல் ஆகியவற்றை ஆவணப்படுத்துகிறோம் நாம்.

***

தொடர்புடைய முந்தைய பதிவு:

2015 மே மாதப் போட்டி அறிவிப்பு


 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff