வணக்கம் மக்களே,
முதல் பத்து படங்களை எவ்வளவு கஷ்டப்பட்டு தேர்ந்தெடுத்தேன் அப்படின்னு
முன்ன்மே சொல்லியிருந்தேன் .அடுத்த கட்ட தேர்வு அதை விட சிரமமாக இருந்தது என்று நான் சொல்லிதான் தெரிந்தாக வேண்டுமா???
குழப்போ குழப்பென்று குழப்பி,கடைசியில் சரி இதுதான் தேர்வு என்று என் மனதை கல்லாக்கிகொண்டு இப்படங்களை இறுதி செய்தேன்.
சரி இப்போ தேர்வான படங்களை பார்க்கலாம்.
மூன்றாவது இடம்:
நம்ம ஊருல குளிர் அவ்வளவா கிடையாது பாருங்க!! அதனால நம்ம பயபுள்ளைக அத்தன பேரும் செம சுறுசுறுப்பு!! அட!! மனுசப்புள்ள மவன் தான் அப்படின்னா நம்ம ஊரு புழு பூச்சிங்க கூட ஒன்னும் கொறைஞ்சது கெடயாது.
எப்பயாச்சும் ஒரு தடவை தட்டாம்பூச்சி படம் புடிக்கறேன்னு கேமராவை தூக்கிகிட்டு போங்க அப்போ தெரியும் நான் சொல்லுறது....
அப்படி இருக்கையில ஒரு பூச்சிய செடியிலையோ இல்லனா பூவிலையோ ஒரு நிமிசம் அசால்ட்டா இருக்கும்போது படம் புடிக்கறதே பெரிய்ய்ய விசயம்!!
அதே அந்த பூச்சிகள் இரண்டு நடு காத்துல டான்ஸு ஆடிட்டு இருக்கும்போது அலேக்கா நமக்கு படம் புடிச்சு காட்டினா எப்படி இருக்கும்????
காட்டியிருக்காரே ஒருத்தரு!!!!
அந்தரத்தில் உலாவும் பூச்சியை அம்சமாக படம் பிடித்து காட்டிய கருவாயன் இந்த போட்டியில்
மூன்றாவது இடத்தை பிடிக்கிறார்.
இரண்டாவது இடம்:
நம்ம ஊருல படம் புடிக்கறாப்போல வெளிநாட்டுல படம் புடிக்கறது அம்புட்டு சுலபம் இல்லீங்க!! நம்ம ஊருல நெறைய இடங்கள்ள படம் எடுக்க ஆரம்பிச்சா மக்களும் ஆசையா போஸ் குடுக்க வந்துருவாய்ங்க,நம்மளுக்கும் படம் எடுக்க சந்தோசமா இருக்கும்!!
ஆனா வெளிநாட்டுல யாரு என்ன சொல்லுவாய்ங்கன்னே தெரியாது!! நாம பாட்டுக்கு எக்குத்தப்பா மாட்டி “யக்கா யக்கா,சும்மானாச்சுக்கும் எடுத்தேன்கா...நீங்க சொன்னீங்கன்னா இப்போ இப்போ இப்போவே அழிச்சிடறேன்கா” அப்படின்னு நமக்கு தெரிஞ்ச இங்கிலீசுல அவிங்களுக்கு புரியறா மாதிரி சொல்லுறதுக்குள்ள அவிங்க போலீசு மிலிட்டரி எல்லாத்தையும் கூப்டு விட்டிருவாய்ங்க!!!
அப்படியான சூழ்நிலையில் கடற்கரை ஓரம் விளையாடிக்கொண்டு இருக்கும் இரு குழந்தைகளை அட்டகாசமாக படம் பிடித்த சூர்யா இரண்டாவது இடத்தை பிடிக்கிறார்.
முதல் இடம்
எல்லா படங்களுமே கண நேர கண்ணாடிதான்.எல்லாமே சரியான நேரத்துல க்ளிக்கினா கிடைக்கும் படங்கள் தான்!! இதுல மொத பரிசு எதுக்கு தரது???முதல் பரிசுக்கு தேர்ந்தெடுக்க நான் எடுத்துக்கொண்டகாரணம் என்ன???
எல்லாமே சரியான நேரத்தில் எடுக்கப்பட்டாலும் சில தருணங்களை ஒரு முறை தப்பவிட்டால் திரும்ப எப்பொழுது கிடைக்கும் என்று சொல்ல முடியாது.
அப்படியான மிக மிக அரிதான தருணங்களில் படமாக்கப்பட்ட படங்கள் என் பார்வையில் முன்னேரின.அதிலும் சரியான நேரத்தோடு காட்சியமைப்பும்(composition) சிறப்பாக அமைந்தால்???அதுதான் நான் எடுத்துக்கொண்ட அனுகுமுறை.இப்படி வடிகட்டியும் கூட எனது தேர்வில் இரண்டு படங்கள் முதல் இடத்தை பிடித்து விட்டது.அவை என்னவென்று பார்க்கலாமா???
பிரகாஷ்:
குழந்தையின் துள்ளல்,கைகளை தூக்கிக்கொண்டு,செருப்பை இன்னொரு கையில் எடுத்துக்கொண்டு கால்கள் நடனாமாட, ஓடும் அந்த சரியான தருணம்.....மிக மிக அழகான தருணம்.அலைகளின் ஆர்பரிப்போடு மிக அழகாக அமைந்துள்ள காட்சியமைப்பு இந்த படத்தை முதல் இடத்திற்கு இட்டுசெல்கிறது....
வாழ்த்துக்கள் பிரகாஷ் :)
கைப்புள்ள:
இரு கைகளையும் தூக்கிக்கொண்டு குதிக்கும் சமயத்தில் ,பின்னாலிருக்கும் மேகத்தின் வென்மையோடு பொருத்தமான காண்ட்ராஸ்ட்(contrast),சட்டத்தில் சரியான இடத்தில் அமைந்திருக்கும் கருப்பொருள் (subject placement in the frame) போன்ற காரணங்களால் இந்தப்படம் என் மனதில் முதல் இடத்திற்கு முந்திச்சென்றது.
வாழ்த்துக்கள் கைப்புள்ள ;)
அப்பாடா ஒரு வழியா இந்த மாசம் சமாளிச்சாச்சு!!! ஒவ்வொரு மாதமும் நமது வாசகர்களின் திறமை வளர்ந்துக்கொண்டே வருகிறது.எங்களது பணியும் சிரமமாகிக்கொண்டே வருகிறது.இந்த நிலையில் , இனி வரப்போற நடுவரை நெனச்சு பாத்தா நெம்ப பாவமா இருக்கு.
மேலும் மேலும் அட்டகாசமான படங்கள் எடுத்து எங்களை மேலும் மண்டை காய வைக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டு,பங்கேற்றவர்களுக்கும் வெற்றி பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு,வாய்ப்பளித்து அன்பு உள்ளங்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொண்டு உங்களிடம் இருந்து விட பெறுவது.
உங்கள் அன்பு சீவீஆர்...
வரட்டா :)