Saturday, August 28, 2010

பச்சை தலைப்புக்கு, வந்த 91 படங்களை அலசி ஆராஞ்சு டாப்10 போட்டிருந்ததை ஏற்கனவே பாத்திருப்பீங்க.

வெற்றி படங்களைப் பார்ப்பதர்க்கு முன், டாப்10ல் வந்த படங்களின் நிறை குறைகள், என் குட்டி அறிவுக்கு பட்டதை சொல்றேன். மேலே போறதுக்கு முன்னாடி கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், 'அழகு/ஈர்ப்பு/ரசனை' என்பது ஆளுக்கு ஆள் வேறுபடும். எனக்கு புடிச்சது, உங்களுக்குப் பிடிக்காம போலாம், உங்களுக்குப் பிடிப்பது எனக்கு பிடிக்காம போலாம், etc.. etc..
என்னைப் பொறுத்தவரை, ஒரு ஆல்பத்தை புரட்டிப் பார்க்கும்போது, சட்டுனு வசீகரம் பண்ண படங்கள் டாப்10 ஆகியிருக்கு. இப்ப, டாப்10 படங்களை புரட்டிப் பார்க்கும்போது, அதில் அதிகமாய் ஈர்த்த மூன்று படங்கள் டாப்3 ஆகிரது. ரொம்ப சிம்பிளான, வடிகட்டல் முறை இது. ரொம்ப ஆராயாம, இந்த மாத டாப்பர்களை பார்த்து மகிழ்வோம்.

அஷோக்:
பார்த்தவுடன் வசீகரித்த படம் இது. ஃப்ரேம் போட்டு மாட்டி வைக்கலாம் என்பது போன்ற நளினமான ஷாட். ஆனா, முழு இல்லை இல்லாமல் போனது ஒரு குறையாகத் தெரிகிறது, இப்ப பாக்கும்போது.


சிவபரணிதரன்:
வலப்பக்க வெளிச்சம் கொஞ்சம் உறுத்தலாய் இருக்கிறது. காட்சியமைப்பும், கிராப் செய்ததும் கூட சரியாக அமையவில்லை.


கார்த்திக் ராமலிங்கம்:
இன்னும் கொஞ்சம் பளிச்னு வந்திருந்தா மெருகேறியிருந்திருக்கும். கட்டம் கட்டியதிலும் ஒரு இன்ச் இடதோ வலதோ நகர்த்தி கட் செய்திருந்தாலும் மெருகு கூடியிருக்கும். இன்னும் கொஞ்சம், ஜூம் செய்திருந்தாலும் நன்றாயிருந்திருக்கும்.


செந்தில்குமார் சுப்ரமணியன்:
முதல் முறை பார்க்கும்போதே, வெளிச்சத்தின் கையாடல் வெகுவாய் கவர்ந்தது. ஆனா, இலையில் பொத்தல் இல்லாமல், முழு இலையும் தெரிந்திருந்தால் இலையைத் தவிர மற்ற இடங்களில் வெளிச்சம் மங்கலாய் இருந்து, ப்ளர்ராகவும் இருந்திருந்தால், 'யப்பா'ன்னு தூக்க்யிருந்திருக்கலாம்.


வெங்கட்நாராயணன்:
'winning shot' கணக்கான மிருதுவான அழகான க்ளோஸ்-அப். ஆனால், சுற்றளவை குறைத்திருக்கலாம். இடது முலையில் இருக்கும் சிவப்புத் திட்டு மேல் விரல் வைத்து மறைத்துப் பாருங்கள். படத்தின் வசீகரம் சடார்னு மேல ஏறுது.
(picasa ஆல்பத்தில் எல்லாரும் இதச் சொல்லிட்டாங்க, அதுக்கு பதிலா Venkatம், தனக்கு post-processing செய்வதில் நாட்டமில்லைன்னு சொல்லியிருக்காரு. Venkat, நல்ல விஷயம்தான், ஆனா, கிராப்பிங் செய்வது குத்தமில்லை. கிராப்பிங் தேவைப்படும் நேரங்களில் செய்வது, சாலச் சிறந்த பயனளிக்கும்)


KVR:
'நச்'னு வந்திருக்கு. வெள்ளை பேக்ரவுண்ட் பிரமாதம். ஒரொ ப்ரொஃபெஷனல் டச் வந்திருக்கு படத்தில். ஆனா, அதீக வெளிச்சம். ஃப்ளாஷ் போட்டிருக்கீங்களோ? ஃப்ளாஷுக்கு/விளக்குக்கு முன்னால் ஒரு வெள்லை பேப்பரையோ ஃபிலிம் டப்பாவையொ போட்டு difuse செஞ்சிருக்கலாம். மொளகா மேல் மட்டும் வெளிச்சம் அதிகப்படியா இல்லாதிருந்திருந்தால், கண்ணை மூடிக்கிட்டு பரிசை அள்ளிக் கொடுத்திருக்கலாம் என்கிர மாதிரியான படம். வாழ்த்துக்கள்.


Anand:
படம் தொழில்நுட்ப ரீதியாக பளிச்னு அமையலை. ஆனா, சப்ஜெக்ட்டை கையாண்ட விதமும், மொத்த ஏற்பாடும் பிடிச்சிருக்கு. ரசனையோட அமைந்த படம். நல்ல முயற்சி.



அம்மாடி, அப்டீ இப்டீன்னு ஒப்பேத்தியாச்சு, இனி டாப்3 ஐ பாத்திடலாம்ல?

மூன்றாவது இடத்தில், Priyadarsanன் பச்சைத் துளிர் இலை:

ரெண்டு மூணு தடவை பாக்க வைச்ச படம் இது. அந்த, இளம் தளிரின் அழகே அழகு. அதன் மேல் படறிய வெளிச்சமும் அழகு. வலது பக்கத்தில் கொஞ்சம் குறைத்திருக்கலாமோ? இரண்டாவது இலை ஒரு நெருடலா அமைஞ்சிடுச்சு. படத்துக்கு பலம் சேர்க்கலை அது.
ஆனாலும், ஒரு பரவசமான அழகு இருக்கு படத்தில். 'பச்சை' தலைப்புக்கு நெத்தியடி படம். வாழ்த்துக்கள் Priyadarshan.


இரண்டாம் இடத்தில், Amalன் வளர்ந்த பச்சை இலை:

அழகான க்ளோஸ்-அப். அழகான வெளிச்சம்.இலையின் நாடி நரம்பெல்லாம் தெரிவது பிரமாதம். விட்டா, பாட்டனி பாடமே எடுக்கலாம் போலருக்கு படத்தைப் பார்த்து. ஒரு abstract ஓவியம் போல், வித்யாசமான க்ளோஸ் கிராப்பிங் அழகை கூட்டியுள்ளது.
வாழ்த்துக்கள் அமல்.



முதலாம் இடத்தில், எம்.ரிஷான் ஷெரீப், கவிதைப் பச்சை:

91+ படங்களில் டாப்10க்காக மேலும் கீழும் அலசும்போதே, கணகளை கட்டிப் போட்ட படம். படத்தில் பெரிய தொழில்நுட்ப ஜாலவித்தையோ, மற்ற பிற கையாடல்களோ இல்லை. ஆனா, கவித்துவமான இலைகளும், அதன் வளைவுகளும், அழகா வந்திருக்கு. பின்னில் உள்ள கருமை, படத்தின் அழகுக்கு அழகு சேர்க்குது. படத்தை கட்டம் கட்டிய விதமௌம் மெருகேத்தியிருக்கு.
வாழ்த்துக்கள் ரிஷான்.



போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி. வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுக்கள்.

தொடர்ந்து கலக்கோ கலக்குன்னு கலக்குவோம்.

Friday, August 27, 2010

நண்பர்களே...

வெறும் 2,900 ரூபாய்க்கு PENTAX கம்பெனியின் சிறிய வகை டிஜிட்டல் கேமரா ஒன்று கிடைக்கின்றது... சிறு வருத்தம், இது இந்தியாவில் இல்லை , அமெரிக்காவில்....


http://www.adorama.com/IPXOE90BK.html?emailprice=t&utm_source=rflaid21866&utm_medium=Affiliate&utm_campaign=Other&utm_term=Other




இந்த விலைக்கு ,

PENTAX company
10 மெகா பிக்ஸல்
2.7 இன்ச் LCD screen.
டீசெண்ட்டான wide angle zoom (31mm)
3 X zoom

இன்னும் பற்பல..

யாராவது கம்மி விலைக்கு சிறிய கேமரா வாங்க ஆசைப்பட்டால் இது ஒரு நல்ல வாய்ப்பு... உங்கள் நண்பரோ,உறவினரோ யாராவது அமெரிக்காவில் இருந்து வருவதாக இருந்தால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.. அல்லது நண்பர்களை தேடுங்கள்..

இது நல்ல கேமராவா இல்லையா என்பதை ஆராய தேவையில்லை.. நம்ம ஊரில் பொம்மை கேமரா கூட இந்த விலைக்கு கிடைக்காது..இந்த விலைக்கு ஒன்னும் குறைஞ்சு போய்விடாது என்று நினைக்கின்றேன்..



குறிப்பு: இதனால் வரும் பின்விளைவுகளுக்கு PIT பொறுப்பல்ல.....


-கருவாயன்

Wednesday, August 25, 2010

எந்த கேமரா நமக்கு சிறந்த கேமரா??
இதற்கு முந்தைய பகுதிகள்....

பகுதி:1 கேமரா வாங்குவதற்கு முன் கவனிக்க வேண்டியது..
பகுதி:6 கேமராவின் கண்கள் - லென்ஸ்
பகுதி:7 எந்த ZOOM RANGE வாங்கலாம்
பகுதி:8 வேகமான லென்ஸ் என்றால் என்ன?


VR , IS, OS, என்றால் என்ன?


இப்பொழுதெல்லாம் பொதுவாக பல கேமராக்களில் மற்றும் லென்ஸ்களில் VR,IS,OS என்று எழுதியிருப்பதை பார்த்திருப்பீர்கள்...இது என்ன அர்த்தம்?இதன் பயன் என்ன? என்பதை இப்பகுதியில் பார்ப்போம்..


புகைப்படம் எடுப்பவர்கள் பெரும்பாலானோர்,பல முக்கியமான நேரத்தில் படங்களை தெளிவில்லாமல் எடுத்து கசப்பான அனுபவங்களை சந்தித்திருப்பார்கள். இதற்கு முக்கியமான ஒரு காரணம் கேமராவை போதிய அளவு steadyயாக பிடிக்காமல் எடுத்ததன் விளைவாகும்.

நாம் சில நேரங்களில் போட்டோ எடுக்கும் போது நம்மால் கை ஆடாமல்(shake,vibration) போட்டோ எடுக்க சிரமப்படுவோம்.அந்த மாதிரி நேரங்களில் நாம் blur இல்லாமல் போட்டோ எடுப்பது சிரம

இக்குறைகளை நாம் TRIPOD பயன்படுத்தி சரி செய்து கொள்ளலாம்..ஆனால் TRIPOD என்பது still photographyஐ தவிர எல்லா இடங்களுக்கும் உதவாது,மேலும் அனைவராலும் வாங்க முடியாது..

இந்த மாதிரி சிரமங்களை கொஞ்சம் குறைத்து நமக்கு போட்டோவை தெளிவாக எடுக்க, லென்ஸ் மற்றும் கேமரா நமக்கு உதவி செய்யும் படி ஒரு டெக்னாலஜி உருவாக்கப்பட்டது..

நாம் செய்யும் கை நடுக்கத்தால் கேமராவை ஆட்டினாலும், இந்த டெக்னாலஜியானது கேமராவுக்குள் அல்லது லென்ஸிற்குள் கொஞ்சம் பம்மாத்து வேலைகளை செய்து, படமெடுக்கும் வேகத்தை அதிகரித்து, நம் படத்தை blur ஆகாமல் காப்பாற்றும்.இதனால் நமக்கு படம் தெளிவாக கிடைக்கும் படி இந்த டெக்னாலஜி உதவும்படி அமைக்கப்பட்டிருக்கின்றது..

இந்த டெக்னாலஜிக்கு ஒவ்வொரு கம்பெனியும் ஒவ்வொரு பெயர் வைத்திருக்கும்..அப்படி அந்த technology க்கு வைக்கபட்ட பெயர்கள் தான் மேலே சொன்ன பெயர் எல்லாம்..

அப்படி ஒவ்வொரு கம்பெனியும் அந்த featureக்கு என்ன பெயர் வைத்திருக்கின்றது என்று பார்ப்போம்...

1. NIKON - VR (vibration reduction)
2. CANON - IS(image stabilisation)
3. PANASONIC - MOIS(mega optical image stabilisation)
4. SIGMA - OS (optical stabilisation)
5. SONY - SUPER STEADY SHOT
6. KODAK - OPTICAL IMAGE STABILISED
7. PENTAX - SHAKE REDUCTION
8. FUJI - OPTICAL IMAGE STABILISATION
9.TAMRON - VC (vibration compensation).
10. OLYMPUS - DIGITAL IMAGE STABILISATION and SENSOR SHIFT STABILISATION

நமக்கு ஏன் கையை லேசாக ஆட்டினாலும் படம் blur ஆகின்றது?..

பொதுவாக வெளிச்சம் இல்லாத நேரங்களில் படம் எடுக்கும் போது shutter speedன் அளவு என்பது வெளிச்ச பற்றாக்குறைக்கு தகுந்த மாதிரி குறைந்து விடும்.. நம்மால் ஒரு குறிப்பிட்ட shutter speedற்கு(1/30secs) கீழ் (tripod உதவி இல்லாமல்) படம் எடுக்கும் போது கண்டிப்பாக படத்தை blur இல்லாமல் எடுப்பது என்பது மிகவும் சிரமம்..

பொதுவாக நாம் ஒரு படத்தை blur இல்லாமல் நல்ல ஷார்ப்பாக படம் எடுப்பதற்கு என்று ஒரு எழுதப்படாத ஷட்டர் ஸ்பீடு விதி இருக்கின்றது..

அது என்னவென்றால் ,ஒரு குறிப்பிட்ட zoom range ல் வைத்து நாம் படம் எடுக்கும் போது shutter speedன் அளவு என்பது, குறைந்தபட்சம் எந்த zoom range(MM) ல் உள்ளதோ அதே அளவு shutter speed அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்...

அதாவது, நாம் 100 mm ல் வைத்து எடுக்கும் போது shutter speed என்பது 1/100 secs அல்லது அதற்கும் மேல் இருந்தால் தான் படம் blur இல்லாமல் sharpஆக வரும் என்பது ஒரு கணக்கு..

ஆனால் இது எல்லா நேரங்களிலும் இதே மாதிரி shutter speed நமக்கு அமையாது..

இந்த மாதிரி பிரச்சனைகளை சில சமயம் ISO வை அதிகப்படுத்தி,அதனால் shutter speedம் அதிகமாக்கி படம் எடுக்கமுடியும்.ஆனால் ஒரு குறிப்பிட்ட அளவுக்கும் மேல் ISO அதிகமாகும் போது கண்டிப்பாக கேமராவின் தன்மைக்கு ஏற்ப noiseம் அதிகமாகும்...இதனால் படத்தின் sharpnessம் குறையும். எனவே முடிந்த வரை குறைவான ISO வில் வைத்து படம் எடுக்க முயற்சிக்க வேண்டும்..

அதுவுமில்லாமல் பல சிறிய வகை கேமராக்களில் ISO என்பதை நம்மால் manual ஆக அதிகப்படுத்த முடியாது..எல்லாம் auto isoவாக இருக்கும்.

இந்த மாதிரி நேரத்தில்,இந்த டெக்னாலஜியானது கேமராவில் அல்லது லென்ஸில் இருந்தால்,நாம் அதற்கான சுவிட்சுஐ போட்டதும்


நமக்கு shutter speed ஐ 2 or 3 stop அளவு(கேமரா,லென்ஸுக்கு தகுந்த மாதிரி) கொஞ்சம் அதிகப்படுத்தி கொடுக்கும்..

உதாரணமாக,ஒரு படத்தை எடுக்கும் போது ,ஷ்ட்டர் ஸ்பீடு என்பது 1/20secs என்று இருந்தால், இந்த டெக்னாலஜியை பயன்படுத்தும் போது 1/40secsல் தரும் வேகத்தில் படம் எடுத்து தர உதவும்.. இதனால் நமக்கு படம் blur இல்லாமல் அமையும்..

ஆனால் 1/40secsஆக மாறாது.


இது எந்த அளவுக்கு உதவும்?

எனக்கு ஒரு cousin இருக்கிறார்,சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்த technology பரவலாக இல்லாத ஆரம்ப காலத்தில், தான் ஒரு கேமரா பார்த்ததாக கூறினார்..அதில் ஒரு புது technology பார்த்தேன்,அதுல வெச்சு போட்டோ எடுத்தா ஆடறதே இல்லை, நானும்(cousin) கேமரவாவை வாங்கி கையை ஒரு ஆட்டு ஆட்டிபோட்டோ எடுத்து பார்த்தேன்(கிட்டதட்ட ஒரு `O` போட்டு காண்பித்தார்), போட்டோ கொஞ்சம் கூட ஆடாமல் தெளிவா இருந்தது என்று சொல்லி பெருமை அடித்தார்.. நானும் அப்ப கொஞ்சமா நம்பி தான் போனேன்..

ஆனால் அந்த மாதிரி எல்லாம் கிடையவே கிடையாது..

இது எந்தளவுக்கு உபயோகப்படுகின்றது என்பதை கீழே உள்ள படங்களை பார்த்து தெரிந்து கொள்வோம்...


VR (ON)




VR (OFF)
மேலே உள்ள ரெண்டு படங்களையும் பார்த்தால் நம்மால் பெரிதாக குறை கண்டுபிடிக்க முடியாது.. அப்படியே சிறிய சைசில் ப்ரிண்ட் போட்டால் ஒரு வித்தியாசமும் தெரியாது..

ஆனால் அதையே க்ராப் செய்து கீழே உள்ள படங்களை பார்த்தால் நமக்கு VR ன் தேவை புரியும்..

VR (ON)



VR (OFF)

.இரண்டிற்கும் உள்ள blur வித்தியாசத்தை நாம் பார்க்கலாம்..இதனால் நமக்கு படங்கள் ஷார்ப்பாக கிடைக்கின்றது...

கீழே உள்ள படங்களும் க்ராப் செய்யப்பட்டுள்ள்து...

VR (ON)




VR (OFF)


சில தகவல்கள்:

1.பொதுவாக இந்த featureஆனது கேமராவை வைத்திருப்பவர் ஒரு குறிப்பிட்ட அளவு வரை தெரியாமல் அல்லது முடியாமல் கைகள்ஆடினால்/ நடுங்கினால் மட்டுமே பயன்படும்..மாறாக எடுக்க கூடிய subject ஆனது ஆடினாலோ,அசைந்தாலோ கண்டிப்பாக பயன் இல்லை.. உதாரணமாக ஒரு குழந்தை ஓடுவது, வாகனங்கள் ஓடுவது, பறவைகள் பறப்பது போன்றவற்றை எடுப்பதற்கு இது பயன்படாது..இதற்கு வேகமான லென்ஸ் தான் வேண்டும்..

2.இந்த பயனானது ஒரு குறிப்பிட்ட ஷட்டர் ஸ்பீடு (upto 1/15secs)வரை தான் effectiveஆக பயன்படும்...
வெளிச்சம் குறைவால் இந்த ஸ்பீடுக்கு கீழ்(1/10sec,1/5secs என்று) போனால் கண்டிப்பாக TRIPOD இல்லாமல் தெளிவாக எடுக்க முடியாது.

3.அதே மாதிரி வெளிச்சம் போதுமான அளவு இருந்து,shutter speedன் அளவு 1/40secsற்கும் மேல் (1/50secs,1/60secs etc.etc.)போகும் போது கண்டிப்பாக இந்த VR feature பெரும்பாலும் பயன் இல்லை..எனவே,இந்த பயனானது 1/15secs முதல் 1/40secs வரை வைத்து எடுக்கும் போது தான் அதிகம் பயன்படும்.மற்றபடி தேவையில்லை.

4.இந்த பயன்பாடு எல்லாம் zoom range 60mm முதல் 200mm வரை தான் 1/20secs to 1/40secs shutter speedல் தெளிவாக எடுக்க முடியும்.. அதாவது 40mm ல் வைத்து எடுக்கும் போது 1/20secsல் படத்தை blur இல்லாமல் எடுக்க முடிந்ததை, அதுவே 150mmல் வைத்து எடுக்கும் போது 1/20secல் வைத்து blur இல்லாமல் கண்டிப்பாக எடுக்க முடியாது.. எனவே zoom range அதிகம் ஆகாக நமக்கு shutter speed ன் தேவை அதிகமாகிக்கொண்டே இருக்கும்..

5 wide angle லென்ஸ்களை பொருத்தவரையில் இது தேவையில்லை.. அதாவது 12MM - 40MM வரையில் இந்த feature பெரும்பாலும் அதிக பயன் இல்லை... உதாரணமாக NIKON 18-55MM VR லென்ஸ் என்பது ரூ.6500 விற்கின்றார்கள்,ஆனால் பழைய NIKON 18-55mm லென்ஸ் ( VR இல்லாதது) ரூ.5000க்கு கிடைக்கும்.. இந்த லென்ஸ்களை பொறுத்த வரையில் நாம் பழைய லென்ஸையே வாங்கி ரூ.1500 ஐ மிச்சம் செய்யலாம்..

6. zoom range(100mmக்கு மேல்) அதிகமாகும் போது தான் நம் கை லேசாக ஆடினாலும் அதை (கை நடுங்குவதை)தெளிவாக நாம் viewfinder/LCDfinderல் பார்க்கும்போது புரிந்து கொள்ளலாம்.. இதனால் நம்க்கு மேலும் shutter speed ன் தேவை அதிகரிக்கும்.. இந்த மாதிரி நேரங்களில் நமக்கு fast lens தான் பயன்படும்.

7. focus distanceஐ பொருத்தும் இதன் பயன்பாடு மாறும்.. ரொம்ப close ஆக எடுக்கும் படங்களில் (1:1 , 1:2, 1:3 magnification ratioவில்) இந்த VR , IS பெரிதாக பயன்படாது. இந்த மாதிரி macro படங்களை எடுப்பதற்கு கண்டிப்பாக TRIPOD வேண்டும்...


8. TRIPOD பயன்படுத்தி படம் எடுக்கும் போது இந்த feature ஐ பயன்படுத்தக்கூடாது.. இதனால் படத்தின் ஷார்ப்னெஸ் பாதிக்கும் என்று கூறுகின்றனர்.. அதாவது இந்த feature என்பது handheld ஷாட் எடுப்பதற்கு மட்டுமே...

இந்த பகுதி குறித்து ஏதாவது சந்தேகம் இருப்பின் பின்னூட்டத்தில் கேட்கவும்...மேலும் தங்களது மேலான கருத்துக்களையும் தெரிவிக்கவும்..

நன்றி
கருவாயன்

Tuesday, August 24, 2010

முழுவதும் வெள்ளையான அல்லது கருப்பான பொருளை படம் எடுத்தால், படம் எதிர்பார்த்த வண்ணத்தில் வராமல் சிறிது ( அல்லது நிறய ) சாம்பல் வன்ணம் கலந்து வருவதை கண்டு இருப்பீர்கள்.

சூரியன் உதித்ததில் இருந்து மறையும் வரை வண்ணம் மாறிக்கொண்டே இருக்கிறது. நம் கண்களுக்கு இந்த வண்ண மாறுதல் புரியும். எந்த நேரத்தில் பார்ப்பினும், நம்மால் தூய வெண்மையை சாம்பல் நிறதிதில் இருந்து மாறுபடுத்தி காண முடியும். ஆனால் கேமராவில் இது முடியாது. அது தான் பார்க்கும் வண்ணத்தை தனக்கு இருக்கும் "சிற்றறிவோடு" ஒப்பிட்டு இந்த வண்ணம் தான் போலும் என்று நினைத்து கொள்ளும். இந்த மாறுபாட்டை மாற்றுவது தான் "White Balance"

பிலிம் கேமராக்களில் பிலிம் படும் ஒளிக்கு ஏற்றவாறு ஒரே மாதிரியான ( fixed ) விளைவைதான் ஏற்படுத்தும். ஆகவே filters அவசியம். அல்லது பிலிம் பிராஸஸ் செய்யும் போது தேவையான விளைவு வரும் மாதிரி செய்து கொள்ளலாம்.

Digital Camera வில் Electronically தேவையான white Balance கொண்டு வர முடியும், filters தேவை இந்த camera க்களுக்கு அதிகம் இல்லை.

எந்த ஓரு வண்ணத்தையும் Over -expose செய்தால் வெள்ளையாக தான் வரும். ஆகையினால் வண்ணத்தை விட "brightness" தான் முக்கியம்.

ஒவ்வொரு வண்ணதிற்கும் ஒரு color temperature இருக்கும். ( Kevin அளவு ஞாபகம் இருக்கா ?)

ஒரு "black body" பூஜ்ஜியம் Kelvin இருந்து சூடு படுத்த ஆரம்பித்தால் , மெதுவாக இது இளம் சிவப்பாக மாறும், பிறகு ஆரஞ்ச், மஞ்சள், வெள்ளை என்று மாறி, நீலமா ஜொலிக்கும். ( அதானால் தான் காலை.மாலை படங்கள் ஆரஞ்சு வண்ணத்துடனும், மதிய படங்கள் நீலம் கலந்தும் வருகிறது )


இந்த அளவின் படி இந்த வண்ணம் வர இந்த அளவு Kelvin தேவை. உதாரணதிற்கு

மெழுகு 1500 K
சூரிய உதயம்/மறைவு 3200 K
டங்கஸ்டன் விளக்கு 3400K
மதிய வெயில் 5500K
மேகம் நிறைந்த வானம் 7000K

இதில் இருந்து நீங்கள் உபயோக படுத்தும் வெளிச்சத்தில் இருந்து என்ன மாதிரி ஆன விளைவுகள் வரும் என கொள்ளலாம்.

படம் Warmer ஆக தெரிய வேண்டும் என்றால் குறைவான வெளிச்சத்தில் எடுக்க வேண்டும்
( மாலை நேரம் )

Cooler ஆக தெரிய வேண்டும் என்றால் அதிக வெளிச்சத்தில் எடுக்க வேண்டும் ( நண்பகல் ),

மீண்டும் மீண்டும் ஒரே பொருளை வெவ்வேறு நேரத்தில்( காலை, மதியம் , மாலை ) எடுக்க முடியாமல் போனால், தேவையான விளைவை warming filers மூலம் பெறலாம் , இல்லை உங்கள் Digital கேமராவில் உள்ள white-balacing settings போதும், filters வேண்டாம்.

சரி ஒரு சின்ன கேள்வி
இப்ப உங்கள் கேமராவில் overcast/cloudy என்று செட் செய்தால் என்ன ஆகும் ? படம் warmer" ஆக வரும். ஏன் ? ( பின்னூட்டத்தில் உங்கள் பதிலை சொல்லுங்கள்.



Auto WB:




Warmer Tone:


Cooler Tone:






Saturday, August 21, 2010

பச்சை தலைப்புக்கு, எதிர்பார்த்ததை போலவே அள்ளித் தெளிச்சுட்டீங்க எல்லாரும், பச்சை பச்சையா.சுலபமான தலைப்பாய் இருந்தும், நெறைய பேரு புதுசா முயற்சி பண்ணாம, கையில் இருக்கும் பச்சையை அப்படியே தட்டி விட்டிருக்கீங்க.

91 படங்களை மேலும் கீழும் பார்த்தால், நிறைய படங்கள் ப்ரத்யேகமான கவன ஈர்ப்பு ஏற்படுத்தாமல் இந்த அமைந்திருக்கிருப்பது வருத்தமான உண்மை.

என் கவனத்தை ஈர்த்த பத்து, கீழே.
தேர்வு பெறாத சில படங்கள், நேர்த்தியாக வந்திருந்தாலும், வெளிறிப் போன வானத்தாலும், பச்சை பிரதானமாய் இல்லாததாலும், டாப்10ல் வராமல் போனது.

டாப் படங்களை பார்ப்போம். (in no particular order)
1) அஷோக்


2) சிவபரணிதரன்


3) கார்த்திக் ராமலிங்கம்


4) செந்தில்குமார் சுப்ரமணியன்


5) வெங்கட்நாராயணன்


6) எம்.ரிஷான் ஷெரீப்


7) Priyadarsan


8) KVR


9) Anand


10) Amal


போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி.


Thursday, August 19, 2010

நான் சாதா (point & Shoot) கேமராவிலிருந்து, DSLRக்கு மாறியும் கூட, DSLRஐ point&shoot போல, automaticல் தான் பல மாதங்கள் பல படங்களை எடுத்து வந்திருந்தேன்.DSLRன் முழுப்பலமே, கேமரா உங்களுக்காக எல்லா கணக்குகளையும் போடாமல், முழுச் சுந்தந்திரத்தையும் நமக்கே கொடுப்பது.
அந்த முழுப்பலத்தை வெளிக்கொணர, ஆட்டோமேட்டிக்கிலிருந்து, Manualக்கு மாறணும்.
முழுசா manualக்கு மாறலன்னாலும், இடைப்பட்ட semi-manualக்கு மாறுவது கூட, உங்கள் படங்களில், பெரிய மாற்றங்களை கொண்டுவரும்.
நான் அநேகமாய், இந்த semi-manualல் (or semi automatic) தான், சமீப காலமாய் படங்கள் எடுத்து வருகிறேன். பளிச்சென தெரியும்படியாய், பெரிய வித்யாசத்தை உணர்கிறேன், automaticல் எடுத்த படங்களுக்கும், இப்படி semi-manualல் எடுத்த படங்களுக்கும்.

Manualல் எடுத்தது:

Dahlia
Automaticல் எடுத்தது:
guitar4


கேமராவில் automatic mode எப்படி வெக்கரதுன்னு உங்களுக்கு தெரியும். பச்சை எழுத்துல AUTOன்னு போட்டிருக்குமே, அந்த modeதான்.

Semi-Manual என்னது அதுன்னு யோசிக்கறீங்கல்ல? விஷயத்துக்கு வரேன்.

ஒரு படம் எப்படி வரும் என்பதை நிர்ணயம் பண்ணுவது மிக்காரும் மூன்று விஷயங்கள் என்பது உங்களுக்கு எல்லாமே தெரிந்த விஷயம்.
1) ஷட்டரின் வேகம் - இது 1/25, 1/60, 1", 2" என்ற அளவுகோலில் இருக்கும். 1/60 என்பது, ஒரு விநாடியின் அறுபதில் ஒரு பகுதி. அதாவது, நெம்ப ஸ்பீடு. 1" என்பது ஒரு விநாடியை குறிக்கும். ட்ரைபோடு இல்லாமல் ஒரு படம் எடுக்க, 1/60க்கு மேல் ஷட்டர் வேகம் இருத்தல் நலம்.

2) aperture அளவு - இது லென்ஸின் ஓட்டையின் அளவை குறைக்கும். ஓட்டையின் அளவுக்கேற்ப, ஒளி உள்புகும். f/2.8, f/4, f/5.6, f/8 (கருவாயனின் விரிவான விளக்கங்களை பார்க்கவும்). இதில் சின்ன குழப்பம், நெம்பர் பெருசாக ஆக, லென்ஸ் ஓட்டை சின்னதாகுதுன்னு அர்த்தம். உ.ம். 2.8, 8ஐ விட பெருசு. லென்ஸ் ஓட்டை பெருசா இருந்தா, வெளிச்சம் அதிகம் இல்லா இடங்களையும், ஃப்ளாஷ் துணையில்லாமல் உள்வாங்கலாம். அதை விட பெரிய உபயோகம், ஒரு படம் எப்படி அமைய வேண்டும் என்பதை இந்த ஓட்டை அளவு நிர்ணயிக்கும். பூ வேணும், அதற்க்கு பின் இருக்கும் விஷயங்கள் மங்கலா வேணுமா? பெரிய ஓட்டை, குட்டி aperture நெம்பர் வேணும். ஒரு அழகிய பூங்காவை முழுசா அப்படியே டாப் டு பாட்டம், உளவாங்கணுமா, குட்டி ஓட்டை, பெரிய aperture நெம்பர். புரிஞ்சுதுல்ல? புரியலன்னா DOF பற்றிய மேல் வாசிப்புக்கு இங்கே செல்லவும்.

3) ISO அளவு - இது வந்து கேமரா சென்ஸாரின் வெளிச்சத்தை உள்வாங்கும் திறன் (sensitivity of the sensor). இதன் அளவுகோல், 100, 200, 400, 800, இப்படி இருக்கும். சுறுக்கச் சொலணும்னா, 100ல் எடுக்கும்போது, வெளிச்சம் தேவை, 800க்கு வெளிச்சம் குறைவா இருந்தாலும் போதும். ஆனா, 100ல் வைத்த்து எடுக்கும்போது, படங்களில் எல்லா பிக்ஸெல்ஸும் பளிச்னு பதிவாகியிருக்கும். பெருசாக ஆக, படத்தின் பளிச் தன்மை குறைந்து 'சொற சொற' (noise) தன்மை அதிகமாயிடும். ISO மேல் விவரங்களுக்கு இங்கே போகலாம்.

ஓ.கே, மூணு மேட்டர் பாத்தாச்சு. இப்ப இன்னா? அப்படீங்கறீங்களா.

கேமரவில், 'M'னு இருப்பதுதான் Manualமோடு, இந்த modelல் வச்சீங்கன்னா, மேலே சொன்ன, எல்லா விஷயங்களையும், இன்னும் பல விஷயங்களையும், நீங்களா தனித் தனியா தெரிவு பண்ணி ஒரு படத்தை எடுக்கணும். அநேகம் பெருந்தகைகள், இப்படித்தான் எடுப்பாங்க.
என்னை மாதிரி கத்துக்குட்டிகளுக்கு, மேல் மூச், கீழ் மூச் வாங்கக் கூடிய விஷயம் இது. ஆயிரமாயிரம் படங்கள் எடுத்தாலும், லைட் மீட்டர் எல்லாம் பாத்து, எடுக்கும் பக்குவம் வரலை. என்னை மாதிரியே பல பேர் இருப்பீங்க என்ற எண்ணத்தில் தான் இந்த பதிவு.

எங்க வூட்டுக்காரரும் வேலைக்கு போறாருங்கர கணக்கா, என்னைப் போல் உள்ளவர்களுக்கு, semi-manualதான் சரிபடும். இந்த semi-manualக்கு, கேரமாவில் இரண்டு தெரிவுகள் இருக்கு. A - Aperture Priority, S - Shutter Priority.
அதாகப்பட்டது, Aவில் வச்சு எடுத்தீங்கன்னா, aperture அளவு, நீங்களே தெரிவு செஞ்சுக்கணும். என்ன எடுக்க ஆசப்படறீங்களோ, அதற்கேற்ப (உ.ம்: பூ - 3.5, பூங்கா 16) aperture அளவை டயல் பண்ணி வச்சுக்கங்க.
இப்ப கேமரா என்ன பண்ணும்னா, உங்க இஷ்டமான aperture அளவுக்கு தேவையான ஷட்டர் வேகத்தை அதுவே தேர்ந்தெடுத்துக்கும். இது, ISO அளவு, வெளிச்சம், இதை வைத்து அமையும். 1/60க்கும் கீழ் ஷட்டர் வேகம் காட்டினால், முக்காலி அவசியம். முக்காலி கைவசம் இல்லை, கைல புடிச்சே படம் புடிக்கணும்னா, ISO கூட்டிப் பாருங்கள். 1/60ஐ விட வேகமாய் ஷட்டர் வேகத்தை கேமரா காட்டியதும், க்ளிக்கினா, படம் ப்ரமாதமாய் வரும் வாய்ப்புண்டு.
இந்த A modeல் போட்டீங்கன்னா, ஃப்ளாஷ் வேணுமா வேணாமான்றதையும் நீங்களே நிர்ணயிக்கலாம். இயன்றவரை ஃப்ளாஷை தவிர்த்தல் நலம். ஃப்ளாஷ் போட்டே தீரணும்னா, இங்க ஃப்ளாஷ் பற்றிய மேல் விஷயங்களை தெரிஞ்சுக்கங்க.

S - Shutter Priorityயிலும் படங்கள் எடுக்கலாம். என் சொந்த அனுபவத்தில் குறைந்த் நேரங்களில் மட்டுமே இதை உபயோகப்படுத்தி வருகிறேன். இதில், ஷட்டரின் வேகத்தை நீங்கள் நிர்ணயம் பண்ண, கேமரா அபெர்ச்சரின் அளவை நிர்ணயிக்கும். ஓட்டப்பந்தயங்களை எடுக்கப் போறீங்கன்னு வச்சுக்கவோம், அங்க அதி வேக விஷயங்களை க்ளிக்க வேண்டி வரும். அந்த மாதிரி தருணங்களில், 1/125 மாதிரி அளவை வச்சுக்கிட்டீங்கன்னா, ஆக்ஷன் படங்கள் பதிய சுலபமாய் இருக்கும். அதே போல், இரவில் ஓடும் வாகனங்களை பதிய, 1", 2" மாதிரி அளவை வச்சு முயலலாம்.

அதாகப்பட்டது DSLR வைத்துக் கொண்டு ஆட்டோமேட்டிக்கில் படம் புடிக்கும் மக்களே, இன்னா சொல்ல வரேன்னா, இன்றிலிருந்து, A-Aperture Priorityக்கு மாறுங்க. பழகப் பழக, இதன் அருமை உங்களுக்கே புரிஞ்சுடும்.
க்ளிக்குங்க, கலக்குங்க! அருமையான படங்களுக்கு கொம்பேனி காரண்ட்டி!

Sunday, August 15, 2010

நீல வானம் சில குறிப்புகள்


இந்த இரண்டு படங்களில் வானத்தின் வண்ணம் வேறு பட்டு இருப்பத்தின் காரணம் ? இரண்டு படங்களுமே , காலை வேளையில் எடுக்ப்பட்டவை .





வானம் பின்புறமாக வைத்து எடுக்கப்படும் இயற்கைக் காட்சிப் படங்களில் , வானம் நீல நிறமாக இல்லாமல் வெளிறி வெள்ளை அல்லது பழுப்பு வண்ணத்தில் வருவதைப் பார்த்த்து இருப்பீர்கள்.

நீல வண்ணம் வர சில வழிகள்

1. வானத்திற்கு ஏற்ற exposure செய்து ஒருப் படமும், முன்னால் இருப்பவற்கு ஏற்ற exposure செய்து இன்னொருப் படமும் எடுத்து இரண்டையும் இணைக்கலாம.

2. ND filter, Circular Polariser உபயோகிப்பது,

3. மிக எளிய வழி. சூரியன் இருக்கும் திசையில் இருந்து 90 degree வானத்தை எடுப்பது.


Thanks: Jayanth Sharma

Monday, August 9, 2010

எந்த கேமரா நமக்கு சிறந்த கேமரா??

இதற்கு முந்தைய பகுதிகள்....

பகுதி:1 கேமரா வாங்குவதற்கு முன் கவனிக்க வேண்டியது..
பகுதி:6 கேமராவின் கண்கள் - லென்ஸ்
பகுதி:7 எந்த ZOOM RANGE வாங்கலாம்


வணக்கம் நண்பர்களே,

நீ..ண்ட இடைவெளிக்கு பிறகு இந்த கட்டுரையின் தொடர்ச்சி மூலம் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.. கடந்த பகுதிகளில் மேலே கூறியவற்றை பற்றி பார்த்தோம்..இனி,

லென்ஸின் வேகம் என்றால் என்ன?

பொதுவாக லென்ஸ்களில் ஒரு அளவு குறிப்பிட்டிருப்பார்கள்.

1:3.3-5.6,
1:2.8-4.5
1:2.8
1:1.8 இந்த மாதிரி..

இந்த அளவுகள் எல்லாம் லென்ஸின் படமெடுக்கும் வேகத்தை குறிப்பதாகும். இதை தான் aperture அளவு என்று சொல்வார்கள்.

இதில் ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால், இதன் நம்பர் அளவு குறைய குறைய லென்ஸின் வேகம் என்பது அதிகமாகும்..

லென்ஸின் வேக அளவுகள் என்பது, வேகமாக போகும்,ஓடும் சப்ஜெக்டை படம் எடுப்பது என்று அர்த்தம் கிடையாது..
ஒரு லென்ஸ் எவ்வளவு அதிகமாக ஒளியினை உள்வாங்கும் திறன் கொண்டுள்ளது என்று அளவுகளால் குறிப்பதாகும்..

ஒளி உள் வாங்குதல் அதிகம் இருந்தால் நாம் வேகமாக போவதை freeze பன்னலாம்

கீழே உள்ள படத்தினை பார்த்தால் ஒளி உள்வாங்குதல் நமக்கு புரியும்..


இந்த படத்தில் f/1.4 (1:1.4) என்பதின் ஒளி துவாரம் என்பது பெரியதாக இருக்கின்றது , அப்படியே படிப்படியாக குறைந்து f/16(1:16) ன் ஒளி துவாரம் சிறியதாகின்றது..
aperture அளவுகளுக்கேற்ப ( ஒரே அளவு ஷட்டர் ஸ்பீடில்) ஒளி அதிகமாவதையும்,குறைவதையும் அருகில் தெரியும் படங்களிலே நாம் பார்க்கலாம்.

இந்த துவாரத்தின் (diameter) அளவு பெரியதாக இருந்தால் ஒளியின் அளவு அதிகமாக உள்ளே போகும். அப்படி அதிகமாக ஒளியினை உள்வாங்கும் போது ஷட்டர் ஸ்பீட்ன் அளவு அதிகமாகும். . ஷட்டர் ஸ்பீடின் அளவு அதிகரித்தால் தான் நம்மால் blur இல்லாமல் படம் எடுக்க முடியும்..
இதனால் வெளிச்சம் குறைவான நேரத்தில் கூட blur இல்லாமல் நாம் எளிதாக, flash போடாமல் படம் எடுக்கலாம்.

கவனிக்க... துவாரம் பெரிதாக பெரிதாக f number என்பது குறையும்..

ஆகையால், அதிக f number என்பது சிறிய துவாரம்... இதனால் குறைவாக ஒளி தான் உள்வாங்கும்,
சிறிய f number என்பது பெரிய துவாரம்... இதனால் அதிகமாக ஒளியினை உள்வாங்கும்.


வேகத்தின் அளவுகள்:

வேகத்தின் அளவுகளை படிப்படியாக இவ்வாறு வரிசையாக நிர்ணயித்துள்ளார்கள்.
1.0 1.4 2.0 2.8 4.0 5.6 8.0 11 16 22 32 45 64 ..

(இதற்கென்று ஒரு ஃபார்முலா இருக்கின்றது,இப்போதைக்கு நமக்கு அது வேண்டாம்,அதை படித்தால் தலை தான் வலிக்கும்)

மேலே கூறியிருக்கும் அளவுகளின் வரிசையில், ஒவ்வொரு வரிசை நம்பரும் மாறும் போது அதன் ஒளி வேகம் என்பது இரண்டு மடங்கு அதிகரிக்கும்.. உதாரணமாக f/16 என்பதின் ஒளியை விட அதற்கு முந்தைய ஸ்டாப் ஆன f/11ன் ஒளி என்பது இரண்டு மடங்கு அதிகமாக உள்வாங்கும்.
அதாவது f/16 ல் வைத்து எடுக்கும் போது ஷட்டர் ஸ்பீடின் அளவு 1/30 secs என்று இருந்தால் , அதையே f/11 ல் வைத்து எடுத்தால் ஷட்டர் ஸ்பீடின் அளவு 1/60 secs என்று இருக்கும்.. இந்த மாற்றங்கள் எல்லாம் நாம் shutter priority mode , manual mode ல் வைத்து எடுக்கும் போது நாம் எளிதாக தெரிந்து கொள்ளலாம்..
எண்கள் குறைய குறைய சிறு அளவு மாற்றமே இரண்டு மடங்கு வெளிச்சம் அதிகரிக்கும்..(உ.ம். 2.0 vs 1.4).
இந்த aperture அளவு என்பது லென்ஸுக்கு லென்ஸ் மாறுபடும்..

இதில் ,

f/1.4, f/1.8 போன்ற அளவுகளை அதிவேக லென்ஸ் எனவும்,
f/2.0, f/2.8 போன்ற அளவுகளை வேகமான லென்ஸ் எனவும்,
f/3.3, f/4 போன்ற அளவுகளை மிதமான வேகம் எனவும்,
f/5.6, மற்றும் இதற்க்கும் கிழ் உள்ள f/8,f/11,f/16 etc போன்ற அளவுகளை slow லென்ஸ் எனவும் கூறுகின்றனர்..

இரண்டு வகையான APERTURE அளவுகள்:


ஒவ்வொரு லென்ஸும் அதன் அதிகபட்ச aperture அளவுகளை(ஒளிகளை உள்வாங்கும் திறனை) லென்ஸில் குறிப்பிட்டிருப்பார்கள்..

இதில் இரண்டு வகையாக வரும்,
  1. நிலையான aperture அளவுகள். - constant aperture

  2. மாறுகின்ற aperture அளவுகள். - variable aperture


நிலையான aperture அளவுகள். - constant aperture






constant aperture என்பது இரண்டு வகையான லென்ஸுகளுக்கு வரும்..

இந்த வகையான constant aperture என்பது சிறிய கேமராக்களில் கிடையாது..

fixed lens மற்றும் zoom lens

nikon 50mm 1:1.8,
nikon 17-55mm 1:2.8

இந்த வகை constant aperture என்பது zoom லென்ஸில் தயாரிப்பதற்க்கு செலவு அதிகமாகும்.. இதனால் இதன் விலை கூடுதலாக இருக்கும்.. ஆனால் குவாலிட்டி என்பது மிகவும் நன்றாக இருக்கும்..

பொதுவாக லென்ஸ்களில் அதிகபட்ச அபெர்சூர் அளவினை(உ.ம். f 2.8 ) மட்டும் தான் லென்ஸில் குறிப்பிட்டிருப்பார்கள்.. குறைந்த பட்ச அளவுகளை (f/16, f32) லென்ஸில் குறிப்பிட்டிருக்க மாட்டார்கள்.

இந்த வகையில் தயாரிக்கப்பட்ட லென்ஸ் என்பது எந்த zoom range லும் அதிகபட்ச ஒளியினை உள்வாங்கும் படி அமைக்கபட்டிருக்கும்.
உதாரணமாக, nikon 17-55mm 1:2.8 என்று இருக்கும் லென்ஸில் 17mm ல் வைத்து எடுக்கும் போதும் f/2.8 aperture அளவில் எடுக்கலம்,28mm,35mm,45mm,55mm போன்ற எந்த zoom ல் வைத்து எடுத்தாலும் இதன் அதிக பட்ச wide aperture ஆன f/2.8 ல் வைத்து எடுக்கலாம்... அதே சமயம் f5.6 , f8 , f16... போன்றவற்றிலும் வைத்து எடுக்கலாம்..

ஆனால் variable aperture லென்ஸ்களில் இந்த மாதிரி எடுக்க முடியாது..


மாறுகின்ற aperture அளவுகள். - variable aperture






variable aperture அளவுகளை கீழ்கண்டவாறு குறிப்பிட்டிருப்பார்கள்..

nikon 18-55mm 1:3.5-5.6
sigma 17-70mm 1:2.8-4.5
canon 28-135mm 1:3.5-5.6
sigma 18-200mm 1:4 - 6.3

இந்த அளவுகளை சிறிய வகை கேமராக்களிலும் குறிப்பிட்டிருப்பார்கள்..



இதன் அர்த்தம் என்ன?

உதாரணமாக , 18-55mm 1:3.5 - 5.6 என்றால்,

இதன் அதிகபட்ச aperture அளவு என்பது f/3.5 முதல் f/5.6 என்று அர்த்தம்..
குறைந்த பட்ச aperture என்பது f/32 முதல் f/45 வரை செல்லும்..

அதென்ன அதிகபட்ச அளவு என்பது f/3.5 முதல் f/5.6 என்று வேறுபடுகின்றது?

இது எப்படி என்றால்,

நாம் இந்த லென்ஸில் 18mm ல் வைத்து எடுக்கும் போது நாம் அதிகபட்சமாக f/3.5 வரை apertureஐ அதிகபடுத்தலாம்..
ஆனால் அதுவே zomm rangeஐ அதிகப்படுத்தி 50mmல் வைத்து எடுக்கும் போது f/3.5 ல் aperture ஐ வைத்து படம் எடுக்க முடியாது..

50mm ல் இதன் அதிகபட்ச aperture என்பது f5.6ஆக மாறிக்கொள்ளும்.

எனவே f/5.6 வரை தான் 50mm ல் apertureஐ அதிகபடுத்த முடியும்..
இதனால் நமக்கு படம் எடுக்கும் வேகம்(ஷட்டர் ஸ்பீட்) குறைந்து விடும்..

இந்த மாதிரி லென்ஸ்களை பொறுத்த வரையில், அதிகபட்ச aperture அளவுகள் கீழ்கண்டவாறு மாறிக்கொள்ளும்..

18mm - 24mm = f/3.5
28mm - 34mm = f/4.0
35mm - 40mm = f/4.5
40mm - 55mm = f/5.6

ஆனால் constant aperture லென்ஸ்களில் எந்த zoom rangeல் வைத்து எடுத்தாலும் ஒரே மாதிரி அதிகபட்ச apertureஐ வைத்து எடுக்கலாம்.. aperture அளவுகள் மாறாது..

சரி, மீண்டும் அடுத்த பகுதியில் பார்ப்போம்..

இந்த பகுதியில் ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் பின்னூட்டத்தில் கேளுங்கள்...

நன்றி
கருவாயன்.

Friday, August 6, 2010

அனைவருக்கும்,

ஃப்ளாஷ் போட்டோகிராபி பற்றிய உங்களின் கேள்விகளுக்கான பதிலை இந்த பதிவில் விவாதிக்கலாம். உங்களின் கருத்துகளை பின்னூட்டத்தில் பகிர்ந்துக் கொள்ளுங்கள்


ஃப்ளாஷ் எப்படி வேலை செய்கிறது ?


செறிவூட்டப் பட்ட மின்சாரத்தை ( கிட்ட தட்ட பல ஆயிரம் வோல்ட் ) xenon Gas நிரப்பப் பட்ட டிஸ்சார்ஜ் ட்யூப் ( நியான் பல்ப் பாத்திருப்பீங்களே அது மாதிரி இருக்கும் ) ஒரு முனைக்கு செலுத்தப் படும். டிரிக்கர் ப்ளேட் அடுத்த முனை (பாஸிடிவ் / நெகடிவ் மின்சாரம் ). அதிக செறிவூட்டப் பட்ட எதிர்மின்சாரம் டிரிக்கர் ப்ளேட்டில் ஏற்றப் படும் போது ionisation என்ற முறையில் அணுக்களின் நகர்வு இரு புறமும் ஏற்படுகிறது. செறிவூட்டப் பட்ட மின்சாரம் விடுவிக்கப் படும் போது மோதும் அணுக்களின் மூலம் ஏற்படும் ஆற்றலினால் அதிக ஒளி உண்டாகிறது. ஏறக்குறைய குழல் விளக்குகள் எப்படி வேலை செய்கிறதோ அதே முறையில். ஆனால் இங்கே மிக அதிக அளவில் மின்சாரம் செலுத்தப் படுகிறது.



எப்போதெல்லாம் ப்ளாஷ் பயன்படுத்த வேண்டும். எங்கு பயன்படுத்த கூடாது?

இது தனி பதிவுக்கான கேள்வி. பதில் சற்றே சுருக்கமாக சில உதாரணங்கள்.
  • எங்கே பயன் படுத்தலாம் ?
  • - இருட்டு இருக்கும் போது தெளிவான படங்களைக் கொணர
  • - அதி/வேகத்தில் நகரும் பொருளை "உறைந்த" நிலையில் எடுக்க
  • - ஒளி இரைச்சல் அதிகம் வரும் என்று தோன்றினால் அதை தவிர்க்க
  • - போர்ட்ரைட் படங்கள் எடுக்க ( முகம் எல்லாப் பக்கமும் தெளிவாக வரவேண்டும் என்ற முனைப்பிருந்தால் ). முடிந்த வரை ஒளி சுவர்களில் பட்டு எதிரொளிப்பது நல்லது.
  • - விளம்பர படங்களின் (தேவையான ) போது.
  • - மேக்ரோ போட்டோ எடுக்கும் போது
  • - நல்ல வெயில் நேரங்களில் மனிதர்களை / பொருட்களை புகைப்படம் எடுக்கும் போது ஃபிளாஷ் உபயோகித்தல் நலம். இல்லாவிட்டால் நிழல் படிந்த இடங்கள் ( முக்கியமாய் மூக்கு மற்றும் கண்களுக்கு அடியில்) கருப்பாகவும் மற்ற இடங்கள் நல்ல வெளிச்சத்துடன் இருக்கும். ஃபிளாஷ் வேண்டாம் என்று கரும் பட்சத்தில் மூக்கின் கீழும் கண்களின் கீழும் நிழல் விழாமல் இருக்கும் வகையில் பார்த்து எடுக்க வேண்டும்.

  • எங்கே கூடாது ?
  • - தொட்டிலில் இருக்கும் குழந்தைகள்
  • - முகம் அறியா மூன்றாம் மனிதர்கள்
  • - பறவைக் கூடுகளில்
  • - முகத்துக்கு மிக அருகில்
  • - உங்கள் கற்பனைத் திறன் பாதிக்கப் படும் இடங்களில். உதாரணத்துக்கு மெழுகுவத்தியின் வெளிச்சத்தில் அருமையாகக் காணும் பொருள் ஃப்ளாஷ் போட்டால் தட்டையாகப் போய் நீங்கள் கற்பனை செய்த வகையில் வராது.
  • - சில வழிபாட்டுத் தலங்கள்.
  • - தொல்பொருள் பாதுகாப்பிடம்
  • - இரவின் ஒளியை புகைப்படத்தில் சேகரிக்க நினைக்கும் போது


எந்த ப்ளாஷ் வாங்கலாம்?

அது உங்கள் கேமராவைப் பொருத்தது. தேவையைப் பொறுத்தது . கூடவே உங்களின் பட்ஜெட்டையும் பொறுத்தது.

* பாயிண்ட் & ஷூட் கேமரா என்றால் ( ஹாட் ஷூ இல்லாத பட்சத்தில்) சில நேரங்களில் கேமராவில் இருக்கும் ஃப்ளாஷ் வெளிச்சம் போதாது. அப்போது கேமரா ஃப்ளாஷின் ஒளியினால் ஆக்டிவேட் ஆகும் ரிமோட் ஃப்ளாஷ் வாங்கலாம்
* உங்களுக்கு வெறுமே அதிக வெளிச்சம் தேவைப்படும் பட்சத்தில் குறைந்த விலையில் கிடைக்கும் ஃப்ளாஷ் வாங்கலாம்.
* சில ஃப்ளாஷ் களில் ஒளியின் அளவைக் கட்டுப் படுத்த முடியும். அது போன்றவை சற்று அதிக விலையில் கிடைக்கிறது. முழு வெளிச்சத்தைக் குறைத்து 1/16 அல்லது 1/24 என்ற அளவில் வெளிச்சம் தரும்.
* எஸ்.எல்.ஆர் கேமராக்களுக்கு அந்த கேமராவின் தயாரிப்பு நிறுவனங்களின் ஃப்ளாஷ்கள் நல்ல பயன் தரும். விலை சற்று அதிகம் என்றாலும் கூட. கேமராவின் மூலம் ஃப்ளாஷைக் கட்டுப்படுத்தும் வசதி அதிகம் அதில் உண்டு.
* விளம்பரம் எடுக்கும் போது பல ஃப்ளாஷ் ( சாஃப்ட் பாக்ஸ் ) கொண்டு எடுப்பார்கள்.


ப்ளாஷுடன் வேறு ஏதேனும் பயன்படுத்த வேண்டுமா? (தெர்மோகால்)

எப்போதும் உபயோகிக்க வேண்டும் என்று இல்லை. வெளிச்சத்தைப் பிரதிபலிக்க வேண்டிய நேரத்தில் உபயோகிக்கலாம். தெர்மோகோல்/ரிஃப்லெக்டர் போன்றவை ஃப்ளாஷுடன் தான் உபயோகிக்க வேண்டும் என்று இல்லை. சூரிய வெளிச்சத்திலோ அல்லது வெளிச்சம் ஒரு புறத்தில் நன்றாக விழுந்து மறுபுறம் கருப்பாக இருக்கும் பக்கத்திற்காகவோ உபயோகிக்கலாம்.
உங்களின் கேள்விகளோ மாற்றுக் கருத்துகளோ இருப்பின் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். ஃப்ளாஷைக் கொண்டு சிறப்பாக பொருட்களை எடுப்பது பற்றி அடுத்தப் பதிவில் விவாதிக்கலாம்.
நன்றி
குழுப்போட்டி அறிவிப்பு வந்து ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப காலமா இழுத்தடிச்சு, இப்ப ஒரு வழியா முடிவை அறிவிக்கும் நாள் வந்துடுச்சு. இத்தனை நாள் இழுத்தடித்தர்க்கு நெம்ப சாரி. போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் மிக்க நன்றீஸ்.

இனி முடிவுகளை பாப்போம்.

போட்டியில் குதித்த ராஜபாளையம் குழுப் படங்கள் ராஜபாளையத்தின் அழகை பிரதிபலித்து, போட்டித் தலைப்புக்கும் நன்றாய் ஒத்துவந்திருந்தது. 120 படங்களில் பலதும் அருமையாக இருந்தது. ஊரின் ப்ரதான இடங்கள் பலதையும் அரன்கேற்றி இருந்தார்கள். ஒரே குறை, படங்கள் பலதிலும், 'பஞ்ச்' குறைவாகவே இருந்தது, மற்ற குழுக்களின் படங்களோடு ஒப்பிடும்போது.

City of Summer, Sydney, Australia 'குழு'வும்,
Truth 'குழு'வும், ஆட்டையில் சேர்த்துக் கொள்ளவில்லைன்னு ஏற்கனவே சொல்லியாச்சு. 'குழு'வோட வரச்சொன்னா, சிங்கிளாதான் வருவோம்னு உறுமிக்கிட்டே வந்ததால், இந்த நிலை.
Truth (25 படங்கள்),ஷ்ரெயா (21 படங்கள்)


Melbourne, Australia குழுவும், விஜயாலன், தனி நபராக க்ளிக்கித் தள்ளி ஆல்பம் செய்திருந்தது, படங்களை அலசும்போது தெரிந்தது. இவரும், ஆட்டையில் சேர்த்துக் கொள்ளவில்லை.


போட்டி அறிவித்ததும் துரிதமாய் செயல்பட்டக் குழு, அமல் மற்றும் செந்திலின் LosColoresOrange, Orange County, California குழு. Orange county கடற்கரைகளை கண் முன் கொண்டு நிறுத்தியவர்கள், தங்கள் ஏரியாவின், மற்ற பிரதானங்களை சேர்க்கத் தவறியிருந்தார்கள். ஊரின் வாசம் கிட்டவில்லை. 65 படங்களும், பட்டையை கிளப்பும் விதம் இருந்தும் ஒரு முழுமை இல்லாத நிலை. ட்ராஃபிக் நெரிசல், மக்கள், ஏர்போர்ட், அருகாமை டிஸ்னி, போன்றவைகள் சேர்த்திருந்தால், பன்ச் கூடியிருக்கும்.
குழுப்போட்டியின் மூன்றாம் இடம், Orange County குழுவின், அமல் மற்றும் செந்திலுக்கு. வாழ்த்துக்க்ள் அமல்,செந்தில்.

குழு: Amal, Senthil

அடுத்ததாய் இருப்பது, Delhi குழுவும், Uniquely சிங்கப்பூர் குழுவும்.
இந்த இரு ஆல்பத்தையும் அலசும்போது, எது எதை மிஞ்சுகிரது என்பது ஒரு குழுப்பமான தேர்வாய் இருந்தது.
'எங்க ஏரியா' என்ற தலைப்புக்கு கனக்கச்சிதமாய் பொருந்தி இருந்தன Delhiக் குழுவின் படங்கள். பிரதான கட்டடங்கள், ஜந்தர் மந்தர், ரயில் நிலையம், சாலையோரக் கடை, சமோசாக் கடை, டில்லி மக்கள் என்ற ஒரு 'ஏரியா' ஆல்பத்துக்கு வேண்டிய அனைத்து ரக படங்களும் இடம் பெற்றிருந்தன.
எங்க இடிச்சுதுன்னா, அநேகம் படங்களும் (52) , பொலிவில்லாமல் ஒரு புத்தகத்தில் அச்சிடும் ரகத்தில் இல்லாது இருந்தது.
குழுப்போட்டியின் இரண்டாம் இடம், Deadal Delhiக் குழுவின் Mohankumar, Karunakaran, Venkat Nagarajan மற்றும் Muthuletchumiக்கு.
வாழ்த்துக்கள் Delhiகுழு.


அப்பரம் என்ன? தண்டோரா அடிச்சுட வேண்டியதுதான?
குழுப்போட்டியின் முதல் இடம், நம்ம uniquely சிங்கப்பூர் குழுவையே சேரும்.
பெரிய குழு அமைச்சு பட்டையைக் கிளப்பிட்டாங்க.
( குழு: சத்யா - ஒருங்கிணைப்பாளர், ராம்/Raam - ஆலோசகர், ஜோசப், அறிவிழி - ராஜேஷ், கிஷோர், பாரதி, ராம்குமார்(முகவை)ஜெகதீசன்)

ஒவ்வொரு படமும், அச்சிடத்தக்க வகையில் பளிச் ரகம். மிகவும் ரசனையுடன், பரிசு பெறக்கூடிய சகல லட்சணங்களுடன் படம். மக்கள், கடை, சாலை, வாகனம், கட்டடம், மழை, வெயில், கடல், மிருகம் என்று சகலமும் இருந்தது. சிங்கப்பூரை ஒரு ரவுண்டு அடித்ததைப் போல் அனுபவம் தந்தது.
ஒரே குறை, ஆல்பத்தில் ஒரே மாதிரி யான படங்கள் இரண்டு முறை ஏற்றப்பட்டிருப்பது. சுருக்கியிருக்கலாம். 100+ படங்களில், 20 குறைத்து, குட்டியாக்கியிருக்க்லாம். ஆனாலும், குறையில்லை.

வாழ்த்துக்கள் சிங்கப்பூர் குழு!


ECP, SingaporeAn Evening at ECP, Singapore
At singapore Zoo-3Hong Bao River Festival -3
Swiss Hotel @ SingaporeHong bao River Festival-1


கலந்து கொண்ட அனைவருக்கும் பெரிய நன்றி. வெற்றி பெற்றவர்களுக்கு மிகப் பெரிய வாழ்த்துக்கள்.

முதலிடம் பெற்ற சிங்கப்பூர் குழுவின் ஆல்பத்தில் உள்ள படங்களை, முன்னர் அறிவித்தபடி, ஒரு photo bookஆக (ஒரே ஒரு புத்தகம் மட்டுமே), உருவாக்கி, அனுப்பி வைக்கப்படும்.
சிங்கைக் குழு, ஆல்பத்தை கூட்டிக் குறைத்து, வேண்டு மென்றால் இன்னும் சில புதிய படங்களை அதில் சேர்த்து, உங்களுக்கு மிகவும் பிடித்த 100 படங்களை ஒருங்கிணைத்து ஒரு zip ஃபைலாக ஒரிஜினல் படங்களை esnips.com போன்ற தளத்தில் ஏற்றி தெரியப்படுத்தவும். ஈ.மடலில் surveysan2005 at yahoo.comக்கு குழுவிலிருந்து ஒருவர் தொடர்பு கொள்ளவும். மற்றவை, ஈ.மடலில் அளவளாவலாம்.

நன்றீஸ் மக்கள்ஸ்!
 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff