Monday, July 23, 2012

பறவைகளைப் படம் பிடித்தல்(I) - புகைப்பட அனுபவம் (9)

7 comments:
 
பறவைகளைப் படம் பிடிப்பது என்பது ஓடி ஆடித் திரியும் சின்னஞ் சிறு குழந்தையைப் படம் பிடிப்பதை விடக் கடினமான ஒரு காரியம். காரணம் குழந்தை பல சமயங்களில் உங்களை நோக்கி வரும். ஆனால் பறவையோ மனிதர்களைக் கண்டால் தங்கள் பின் புறத்தை உங்களுக்குக் காட்டிக் கொண்டு பறந்து சென்றிடும். அப்படி என்றால் எப்படி பறவைகளின் அழகான படங்களைப் பலர் எடுக்கின்றனர்? அதைப் பார்ப்போம் இப்போது.

உங்கள் நண்பர் ஒருவரை நீங்கள் சந்தித்துப் பேச விரும்புகிறீர்கள் என்றால் என்ன செய்வீர்கள்? அவர் வீட்டிற்குச் செல்வீர்கள். அல்லது அவர் வேலை செய்திடும் அலுவலகத்திற்குச் செல்வீர்கள். இதே தான் பறவைகள் விஷயத்திலும் நீங்கள் செய்ய வேண்டும்.

ஒரு பறவையின் வீடு என்பது அதன் கூடு. அலுவலகம் என்பது அது இரை தேடும் இடம். எனவே இவை இரண்டில் ஒன்றினை நீங்கள் கண்டு பிடிக்க வேண்டும்.

கூட்டினைக் கண்டு பிடிப்பது எப்படி?

ஒரு பறவை தன் அலகுகளில் ஒரு குச்சியையோ, புல், வைக்கோல், பஞ்சு இவற்றில் ஏதேனும் ஒன்றையோ எடுத்துச் சென்றால் அது கூடு கட்ட ஆரம்பிக்கிறது என்று அர்த்தம். அதே போல ஒரு பறவை தான் எடுத்த, அல்லது பிடித்த இரையை அங்கேயே உண்டிடாமல் எடுத்துச் சென்றால் அதற்கு ஒரு கூடு இருக்கிறது. அதில் குஞ்சுகள் இருக்கின்றன என்று அர்த்தம்.

மேற் சொன்ன இரு காரியங்களில் எது ஒன்றை ஒரு பறவை செய்தாலும் அதை நீங்கள் உங்கள் கண்களாலும் உடலாலும் தொடர்ந்து செல்வீர்களானால் உங்களால் அதன் கூட்டினைக் கண்டு பிடித்து விட முடியும். இப்போது பாதி கிணறு தாண்டி விட்டீர்கள். இனி மீதிப் பாதி.

# 1 ஏஷி ரென் வார்ப்ளர் என்னும் பறவை தன் கூட்டருகே..

(படம் நடராஜன் கல்பட்டு)

கூட்டைக் கண்டு பிடித்தாயிற்று. இனி....?

பறவைகளைப் படம் பிடிக்க இரு வழிகள் உள்ளன. ஒன்று “கூடு வழி” (Nest technique). மற்றது டெலிபோட்டோ லென்ஸ் பொறுத்திய கேமிராவினால் எடுப்பது.

முன்னதில் கேமிராவும் தேவையானால் ஃப்ளேஷும். கூட்டின அருகில் ஸ்திரமாகப் பொறுத்தப் படும். பறவையின் கூடு ஃபோககஸ் செய்து வைக்கப் படும். பின்னர் துரத்தில் மறைந்திருந்தோ அல்லது ஒரு கூடாரத்திற்குள் அமர்ந்திருந்தோ ஷட்டரை இயக்கிடும் உபகரணங்கள் உதவி கொண்டு பறவை கூட்டில் வந்தமர்ந்திடும் போது படம் பிடிக்க வேண்டும்.

இவ் விஷயங்கள் பற்றியெல்லாம் நான் கற்றது திரு பெருமாளிடம் இருந்து தான்.
# 2
(சிரித்திடாதீர்கள் என் படம் வரைந்திடும் திறமை பார்த்து)

முன் நாட்களில் வாயு கொண்டு இயக்கப் படும் பிஸ்டன் அல்லது பலூன் உள்ளடக்கிய கருவி ஒன்று ஒரு சிறு கம்பியை வெளித்த் தள்ளும். அக்கம்பி ஷட்டரை இயக்கிடும். வாயு கொண்டு இயக்கப்படும் பிஸ்டன் கொண்ட கருவி ஒன்றினை நான் வாங்கினேன். பின்னர் வீடுகளில் முன்பெல்லாம் உபயோகிக்கும் படுக்கையில் இருந்து இயக்கிடும் ஸ்விட்ச் ஒன்றினை வாங்கி அதன் குடலை உருவி விட்டு ஒரு குட்டி ரப்பர் பலூன், சிறிய பிளாஸ்டிக் மூடி இவற்றைக் கொண்டு நானே ஒரு கருவியையும் செய்து வைத்துக் கொண்டேன். இக் கருவி எனது ட்வின் லென்ஸ் கேமிராவை இயக்கப் பயன் பட்டது. இது என்னிடம் இல்லாதிருந்தால் பெரிய ஆந்தை படம் ஒரே சமயத்தில் கலரிலும் கருப்பு வெள்ளையிலும் என்னால் எடுத்திருக்க முடியாது.

(நான் கடையில் வாங்கிய கருவியையும், வீட்டில் தயார் செய்து வைத்திருந்த கருவியையும் படம் பிடித்துப் போடலாம் என்றெண்ணி கடந்த ஒரு மணி நேரம் என் வீடு பூராவும் தெடினேன். கிடைக்க வில்லை.) :-((

இந்நாட்களில் ஒளிக் கதிர்கள் கொண்டு கேமிராவை இயக்கிடும் கருவிகளும் வந்து விட்டன.

பறவைகள், விலங்குகள் இவற்றைப் படம் பிடிக்கப் போதும் போது உங்கள் உடை விஷயத்தில் சிறிது கவனம் செலுத்த வேண்டும். வெள்ளை ஆடை அணியக் கூடாது. பழுப்பு நிற (ப்ரௌன் அல்லது காக்கி) ஆடையோ அல்லது ராணுவத்தினர் காடுகளுக்குள் சென்று போர் புரியும் போது அணிந்திடும் இலைகள், மலர்கள் படம் போட்ட ஆலிவ் க்ரீன் ஆடைகளோ அணிய வேண்டும்.

‘கூடு வழி’ முறையில் படம் பிடிக்கும் போது சில விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் ஆர்வத்தினால் சுமார் பதினைந்து நிமிஷங்களுக்கு மேல் நீங்கள் கூட்டின் அருகில் இருந்தீர்களானால் தாய்ப் பறவை குஞ்சுகளுக்கு இரை கொடுக்காமல் இருக்குமாதலால் குஞ்சுகள் இறந்து விடும்.

உங்கள் கேமிராவிற்கு நல்ல காட்சி தெரிய வேண்டும் என்பதற்காக கூட்டின் முன்பிருக்கும் இலை கிளைகளை வெட்டி எடுத்து விட்டீர்களானால் காகம் போன்ற பறவைகள் கூட்டினை எளிதாகக் கண்டு பிடித்துக் குஞ்சுகளைக் கொன்று தின்று விடும். மறைத்திடும் இலை, கிளைகளை ஒரு மெல்லிய நூல் கொண்டு வேறு புறம் இழுத்துக் கட்டிடுதல் நல்லது.

எக்காரணம் கொண்டும் குஞ்சுகளைக் கையினால் தொடாதீர்கள். அப்படித் தொடப் பட்ட குஞ்சுகளை பல சமயம் தாய்ப் பறவை கூட்டை விட்டு வெளியே தள்ளிவிடும்.

இம் மூன்றினையும் கட்டாயம் தவிர்க்க வேண்டும். இல்லை என்றால் பறவைகளின் சந்ததி வந்திடலைத் தடை செய்தவர்களாகி நீங்களே பறவைகளுக்கு எமனாகி விடுவீர்கள். சில சமயங்களில் பயந்து போன தாய்ப் பறவை கூண்டிற்கு நிறந்தரமாகத் திரும்பாமலே போய் விடலாம். இதுவும் ஒரு பரிதாபமான நிகழ்வு.

பெருமாளுடன் சென்று நான் பிடித்த முதல் படம் இதோ:
# 3

பார்ப்பதற்கு ஒரு சிட்டுக் குருவி போலிருக்கும் இப் பறவையின் பெயர் பைடு புஷ் சேட் (Pied Bush chat) என்பதாகும். இது பங்களூரில் இருந்து சுமார் பத்துப் பதினைந்து கிலோ மீடர் தூரத்தில் இருந்த் ஒரு கிராமத்தில் ஒரு வைக்கோல் போரில் கூடு கட்டி இருந்தது. இந்த முதல் முயற்சி எனக்கு மிகுந்த ஊக்கத்தினை அளித்தது. இரவு பகல் என்னேரமும் இதே சிந்தனையாய்க் கழிந்தன அடுத்த மூன்றாண்டுகள்.
***


Legend Talks..
திரு கல்பட்டு நடராஜன்தொடர்புடைய முந்தைய பதிவுகள்:


7 comments:

 1. //(நான் கடையில் வாங்கிய கருவியையும், வீட்டில் தயார் செய்து வைத்திருந்த கருவியையும் படம் பிடித்துப் போடலாம் என்றெண்ணி கடந்த ஒரு மணி நேரம் என் வீடு பூராவும் தெடினேன். கிடைக்க வில்லை.) :-((
  //
  அட்டட்டா! அததானே எதிர்பார்த்தேன்!

  ReplyDelete
 2. அருமையான விளக்கம், மிகவும் உபயோகமான விஷயங்கள். பகிர்ந்ததிற்கு நன்றி!

  ReplyDelete
 3. அருமையான பதிவு மிக மிக நன்றி ஐயா!

  ReplyDelete
 4. மிக மிக அருமையான பதிவு ஐயா, தங்களுடைய எல்லா பதிவுகளுக்கும் நன்றி ஐயா!

  ReplyDelete
 5. ஐயா.. மிக அருமையான கட்டுரை.. மிக்க நன்றி எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு. உங்கள் அனுபவங்கள் எங்கள் படிகட்டுகள். மதிக்கிறோம்.

  ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff