Showing posts with label Legend Talks. Show all posts
Showing posts with label Legend Talks. Show all posts

Friday, April 12, 2013


நாரை இனத்திலே பூ நாரை என ஒன்று.  இதை சங்குவலை நாரை, வர்ண நாரை என்றும் அழைப்பார்கள்.  விஞ்ஞான ரீதியாக இதற்கு அளிக்கப் பட்டு உள்ள பெயர் என்பதாகும்.ஆங்கிலத்தில் இதனை ‘Painted stork’ என்பர். 
[வண்ணப்படம் நன்றி: http://en.wikipedia.org/wiki/Image:Painted_Stork.jpg ]

பூ நாரையின் பெயர்கள் எல்லாமே காரணப் பெயர்கள் தான்.  மஞ்சள் நிற அலகுகள், மெழுகினால் செய்தது போன்ற ஆரஞ்சு நிறத் தலை, இறக்கை களில் மயில் கழுத்தென மின்னும் கருப்புக் கோடுகள், பாலெனத் தோன்றும் வெள்ளை உடல், மார்பிலே ஒரு கருப்புப் பட்டை, இறக்கைகளின் நுனி சிறகுகளிலும், வால் சிறகுகளின் மேல் புறத்திலும் மிகச் சன்னமாக ஒரு    ரோஜாவின் வண்ணம், சாம்பல் பூத்த ரோஜா நிறக் கால்கள் என ஒரு ஓவியன் துரிகை கொண்டு வர்ணம் தீட்டி இருப்பது போல இருப்பதால் தான் இந்தக் காரணப் பெயர்கள்.

பூ நாரை வெளி நாட்டிலிருந்து நம் நாட்டுக்கு வலசை வரும் பறவை அல்ல.  உள் நாட்டிலேயே வாழும் பறவை தான்.  இவை செப்டம்பர் முதல் ஜனவரி வரையிலான நாட்களில் இனப் பெருக்கம் செய்யும்.  இனப் பெருக்கம் செய்யும் இடங்களில் மற்ற நாட்களில் காணப் படுவதில்லை என்பதால் பலர் இதனையும் வலசை வரும் பறவைகளின் பட்டியலில் சேர்த்து வழக்கம் போல சைபீரியாவில் இருந்து வரும் பறவைகள் என்று விடுகின்றனர்.  (வலசை வரும் பறவைகள் அனைத்துமே சைபீரியாவில் இருந்து வருபவை அல்ல என்பது வேறு விஷயம்.)

சாலையோர மரங்களிலோ, கிராம வீடுகள் நடுவே உள்ள புளிய மரம் போன்ற மரங்களிலோ கூட்டமாக பல பூ நாரை ஜோடிகள் கூடுகள் கட்டி, முட்டை இட்டுக் குஞ்சு பொரித்து வாழும்.  ஆனால் சாதாரணமாக மக்கள் இவற்றைத் துன்புறுத்துவது இல்லை.  காரணம் தெரிய வேண்டுமா?

முன்னாள் முதல்வர் ப்ரகாசம் அவர்கள் ஊரான ஆந்திர மாநிலம் டங்குடூரு அருகில் உள்ள ஜருகுமல்லி என்ற கிராமத்தின் தலைவருடன் 1976ல் தெலுங்கில் நட்த்திய ஒரு சம்பாஷணையின் தமிழாக்கத்தைப் படியுங்கள்.

ஏன் சார், நாம பேசறது கூடக் காதுலே விழாதபடி இப்படி கா...கா... ன்னு கூச்சல் போட்டுகிட்டு இருக்குதுங்களே இந்தப் பறவைங்க. ஒங்களுக்கெல்லாம் தொந்திரவா இல்லயா?  ஊர் ஜனங்க இதுங்களெ வெரட்டறது இல்லயா?”

தொந்திரவு என்ன சார் தொந்திரவு?  இந்தப் பறவைங்க எங்க ஊருக்கு வந்திச்சுன்னா இந்த வருஷம் மழை நல்ல பேஞ்சு ஏரி குளமெல்லாம் நெறெஞ்சு வெளெச்சல் அமோகமா வரும்னு தெரிஞ்சுடும்.  அதுங்களெ நாங்க ஏன் சார் வெரட்டணும்?”

சரி சத்தத்தெ உடுங்க.  தரையெல்லாம் வெள்ளை அடிச்சாப்ளெ பறவை எச்சமும் மீன் துண்டுங்களுமா கெடக்குது.  நாத்தம் வயத்தெக் கொமட்டி வாந்தியெடுக்க வருது.  இது கஷ்டமா இல்லியா ஒங்களுக்கு?”  (இதைக் கேட்டுக் கொண்டிருக்கும் போதே என்மேல் ஒரு பறவையின் எச்சம் விழுகிறது)

சார் இந்தப் பறவைங்க வயல்கள்லெ மேஞ்சுகிட்டு இருக்கும் போது போடுற எச்சமும், இங்கெ தரெலெ கெடெக்கற எச்சமும் அறெகொறெயாக் கடிச்ச மீன் துண்டுங்களும் நல்ல ஒரமாகுது.  இது மட்டுமா?  அப்பொப்போ ஊர் சனங்களுக்கு கருவாடும் கெடைக்குது.  எப்படிங்கிறீங்களா?  பறவைங்க குஞ்சுங்களுக்கு மீனெக் கொண்டு வந்து கொட்டும்போது கொஞ்சம் கீளேயும் விளும்.  ஊர் செனம் ஏன் சார் இதுங்களெ வெரெட்டுவாங்க?”

இப்போது புரிகிறதா பூ நாரைகள் ஜன நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களிலும் எப்படி கூடுகள் கட்டி குடும்பம் நடத்த முடிகிறது என்று?
(ஜருகுமல்லியில் பூநாரையும் அதன் பூப்பந்து போன்ற குஞ்சுகளும்) 

பூ நாரைகளின் கூடு குச்சிகளால் ஆன சுமார் 2 3 அடி விட்டமுள்ள ஒரு வட்ட வடிவமான மேடை போன்றது.  நடுப் பாகம் சற்றே பள்ளமாக இருக்கும்.  பள்ளத்தில் இலைகள் மற்றும் காய்ந்த புல், வைக்கோல் இவை இருக்கும். 

ஒவ்வொரு முறை பெரிய பறவைகள் வந்திறங்கும் போதும், குஞ்சுகள் நகரும் போதும் சில குச்சிகள் கீழே விழுந்து விடும்.  ஆகவே அவற்றுக்குப் பதிலாக வேறு குச்சிகளைக் கொண்டு வந்து கூட்டினை சரி செய்ய வேண்டி வரும்.  இந்த சரி செய்யும் வேலை பார்த்து ரசிக்க வேண்டிய ஒரு காட்சி.  எப்படி என்கிறீர்களா?

கூட்டில் குஞ்சுகள் இருக்கும் போது எப்போதும் ஒரு பறவை காவல் காத்துக் கொண்டு இருக்கும் தனது இறக்கைகளை சற்றே விரித்து குடைபோல நிழல் கொடுத்துக் கொண்டு.
   (குடை விரித்திருப்பது குழந்தைகளுக்காக)

வெளியே சென்று இரையுடன் திரும்பும் பறவை தன் அலகிலே ஒரு குச்சியையும் கொண்டு வரும்.
(கூடு ரிபேருக்குக் குச்சி வருது)

குச்சி கொண்டு வந்த பறவை தானே கூட்டினை சரி செய்யும் வேலையைத் துவங்காது.  பதிலாக உட்கார்ந்திருக்கும் பறவையிடம் கொண்டு வந்த குச்சியைக் கொடுக்கும், ஏதோ அரச சபையிலோ அல்லது ஜனாதிபதி வீட்டிலோ பணி மாறிடும் காவலர்கள் போல.  அதுவரை காவல் பணியில் ஈடுபட்டிருந்த பறவை குச்சியை வாங்கிக் கூட்டினை சரி செய்யும்.  பின்னர் இருவருமாக பாசத்துடன் அலகுகளால் ஒன்றை ஒன்று மாறி மாறி தட்டிக்கொள்ளும் முத்தமிடுவது மாதிரி. (மூக்கு ஒரு முழ நீளம் நீட்டிக் கொண்டிருந்தால் மூக்கால் தானே முத்தமிட்டுக் கொள்ள முடியும்!)  குஞ்சுகள் பசியில் வாயைப் பிளந்து கா... கா... என்று கத்திக் கொண்டு இருக்கும்.  ஆனால் சடங்குகள் முழுவதுமாக முடியாமல் அவை கவனிக்கப் படமாட்டா.

குஞ்சுகளுக்கு இரை ஊட்டுவதும் ஒரு காணவேண்டிய காட்சி.

இரை கொண்டு வரும் பறவை ஒரே ஒரு மீனைக் கொண்டு வராது.  தொண்டை, கழுத்து மற்றும் வாய் பூராவும் மீன்கள் தான்.  அவற்றினை ஒவ்வொன்றாகக் கக்கி குஞ்சுகளுக்குக் கொடுக்கும்.  அப்போது சில மீன்கள் கூட்டிற்குள்ளேயும் சில கீழேயும் விழும்.  அப்படி நடக்கும்போது குஞ்சுகள் இரைக்காகக் கெஞ்சினாலும் மேலும் மீனை தொண்டையிலிருந்து வெளியே கொண்டு வராமல் அதோ பார் அங்கே ஒன்று”, என்பது போல கூட்டில் கிடக்கும் மீனைக் காட்டும்.

(அங்கெ பாருங்க.  கூட்டுலெ ரெண்டு மீனு கெடெக்கு)

குஞ்சுகள் தானாக அதைப் பொறுக்கித் தின்னவில்லை என்றால் பெரிய பறவை அந்த மீனைத் தானே எடுத்துக் குஞ்சுக்குக் கொடுக்கும்.   ஐந்தறிவே படைத்தது என்று நாம் எண்ணும் பறவைகளுக்குத் தான் எத்தனை அறிவு!

இதெல்லாம் எப்படி உங்களுக்குத் தெரியும் என்கிறீர்களா?  நான்தான் 30 அடி உயரத்தில் சவுக்கு, மூங்கில் இவற்றால் கட்டப் பட்ட நான்கு கால் சாரத்தில், சாக்குக் கூடாரதினுள் உட்கார்ந்து பார்த்தேனே படங்கள் பிடித்திடும் போது.

தமிழ் நாட்டில் பூ நாரையை திருநெல்வேலி ஜில்லாவின் மூன்றடைப்பு என்ற இடத்திலும், தஞ்சை ஜில்லாவின் கோடியக்கரையிலும் வேறு சில இடங்களிலும் காணலாம்.

இயற்கையின் எழிலைக் கண்டு ரசியுங்கள்.  இறைவனைக் காண்பீர்கள்.
***

(கருப்பு  வெள்ளை படங்கள் அனைத்தும் எடுத்தது: நடராஜன் கல்பட்டு)


Legend Talks..
திரு கல்பட்டு நடராஜன்
-----------------------------------------------------------------------------------------------------------
தொடர்புடைய முந்தைய பதிவுகள்:

Saturday, September 22, 2012

றவைகளைப் படம் பிடித்தலைப் பொறுத்த வரை இங்கிலாந்தைச் சேர்ந்த சார்லஸ் கியர்டன் (1862 -1928) என்பவரைப் பிதாமகர் என்று சொல்லலாம்.  அவர் தனது இருபத்தி இரண்டாவது வயதில் இயற்கைக் காட்சிகள் பற்றி (வனங்கள், வனவிலகுகள் இவை பற்றி) கட்டுரைகள் எழுத ஆரம்பித்தார்.  அப்போது அவருக்குத் தோன்றியது கட்டுரைகள் படங்களோடு இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்குமே என்று.  உடனே படம் பிடிப்பதில் இறங்கினார். (இறங்கினாரா ஏறினாரா என்பது என் தீராத சந்தேகம்.)


 (சார்லஸ் கியர்டனும் அவர் சகோதரர் ரிச்சார்டும் பறவை படம் பிடிக்கிறார்கள்.  இது எப்படி இருக்கு?  ஆடுமா?  ஆடாதா?  படம் வருமா?  வராதா?  கேமிரா லென்ஸின் மூடிதான் ஷட்டர் என்று இருந்த காலம் அது.)

பறவைகளோ அவருக்கு போஸ் கொடுக்காமல் பயத்தில் பறந்து சென்றன.  அவர் உடனே ஒரு கூடாரத்துள் ஒளிந்திருந்து படம் பிடிப்பது சுலபம் என்பதைக் கண்டறிந்தார்.  அவர் தயார் செய்த மாய்மால கூடாரங்கள் (camouflage tents) பிரபலமாயின.  அவரது கண்டு பிடிப்பு பறவைகளோ விலங்குகளோ மாய்மால கூடாரங்கள் மனிதனைத் தவிற வேறு எந்த உருவத்தில் இருந்தாலும் அவற்றைக் கண்டு கொள்வதில்லை, பயப் படுவதில்லை என்பது.

கியர்டனுக்குப் பின் பறவைகளைப் படம் பிடிப்பதில் உலகப் புகழ் பெற்றவர் எரிக் ஜான் ஹாஸ்கிங்க் (ஆர்டர் ஆஃப் தெ ப்ரிடிஷ் எம்பையர்) (1909 – 1991) ஆவார்.

ஹாஸ்கிங் பல படங்கள் எடுத்த போதிலும் அவர் உலகப் புகழ் பெற்றது அவர் ஒரு ஆந்தையைப் படம் பிடித்தபோது அவருக்கு ஏற்பட்ட ஒரு விபத்தினால் தான்.  அந்த் ஆந்தை தன் கூரிய நகங்களினால் அவரது இடது கண் விழியினைப் தோண்டி எடுத்துச் சென்று விட்டது.

அதன் பிறகு அவரது பறவைகள் படங்கள் அவருக்குப் பல பட்டங்களையும், பதவிகளையும் கொண்டு சேர்த்தன.
 
உலகில் தான் எடுத்த பறவைகள் படங்கள் கொண்டு சேர்த்த பணத்தைக் கொண்டே வாழ்க்கை நடத்திய ஒரே மனிதர் அவர் என்று சொல்வார்கள்.

 எரிக் ஜான் ஹாஸ்கிங்

 ஹாஸ்கிங்க் எடுத்த ஆந்தை படம்

நம் நாட்டில் பறவைகள் படம் பிடிப்பதிலோ, அவை பற்றி ஆராய்ச்சிகள் செய்வதிலோ முன்னோடி என்றால் “இந்தியாவின் பறவைகள் மனிதன்” என்றழைக்கப் பட்ட பத்ம விபூஷன் டாக்டர் சாலிம் அலி யைச் சொல்ல வேண்டும்.

 டாக்டர் சாலிம் அலி


பல புத்தகங்கள் எழுதிய, படங்கள் எடுத்த, ஆராய்ச்சிகள் செய்த டாக்டர் ஸாலிம் அலி அவர்கள் பறவைகள் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கக் காரணம்மயிருந்தது ஒரு நாள் அவர் கண்ணில் பட்ட, தோட்டத்தில் செத்துக் கிடந்த மஞ்சள் தொண்டை கொண்ட சிட்டுக் குருவி!

 மஞ்சள் தொண்டைச் சிட்டுக் குருவி


நான் திருச்சியில் இருந்த போது இந்த பெரியவர் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார்.  அன்று மாலை அவர் எங்கள் வன விலங்குப் பாதுகாப்புச் சங்கத்தின் கூட்டத்தில் தலமை தாங்கிப் பேச வேண்டும்.  அவரை அறிமுகம் செய்ய வேண்டியது காரியதரிசியான என் வேலை.  அதனால் அவரை நிகழ்ச்சி துவங்கும் முன் எங்கள் வீட்டிற்குத் தேனீர் விருந்திற்கு அழைத்திருந்தேன். 

முதல் நாள் இரவு எனது தாயின் உடல் நிலை திடீரெனெக் கவலைக் கிடமாகியதால் நான் அவசர அவசரமாக இரவு 11 மணிக்குச் சென்னைக்குக் கிளம்ப வேண்டியதாயிற்று.  உடனே என் பேச்சினை ஒலிப் பதிவு செய்து மனைவியிடம் கொடுத்து விட்டு சென்னை சென்றேன். 

திட்டமிட்ட படி சாலிம் அலி அவர்கள் எங்கள் வீட்டிற்கு மறு நாள் மாலை வந்தார்.  தேனீர் விருந்தும் நடந்தது.  அன்று மாலை சங்கக் கூட்டமும் நடைபெற்றது..  ஆனால் நான் தான் கொடுத்த் வைக்க வில்லை அந்தப் பெரியவரோடு அன்று கலந்துரையாட!
***
Legend Talks..
திரு கல்பட்டு நடராஜன்


தொடர்புடைய முந்தைய பதிவுகள்:

Thursday, July 26, 2012

மனிதர்களில்மட்டும் தானா தையல்காரர்கள்? பறவை களில் இல்லையா? ஏன் இல்லை. ஜனவரி பிப்ரவரி மாதங்களில் உங்கள் தோட்டத்தில் "கிவீ...கிவீ..." என்று கணீரென ஒரு குருவியின் குரல் கேட்கிறதா? சற்று கூர்ந்து கவனியுங்கள். பறவையின தையல் காரரை உங்களால் பார்க்க முடியும். அதுதான் 'Tailor bird' என்று ஆங்கிலத்தில் அழைக்கப் படும் தையல்காரக் குருவி.

குடும்பம் பெருக்கும் காலத்தில் ஆண் தையல்காரக் குருவியின் வால் இறகுகளில் நடு இரண்டு இறகுகள் நீண்டு வளரும், கிட்டத் தட்ட இரு மடங்காக.

#1 (வண்ணப் படத்தில் உள்ள ஆண் குருவியின் வால் இறகுகளைப் பாருங்கள்)
வண்ணப்படம் நன்றி: Wikipedia

இந்தக் குருவி தன் கூட்டினை எப்படி அமைக்கும் தெரியுமா?

சற்றே அகலமான இலயினைத் தேர்ந்தெடுத்து அதனை பறந்து கொண்டிருக்கும் போதே வளைத்துப் பிடித்துக் கொண்டு சிலந்தி வலையினைக் கொண்டு சுற்றி ஒட்டும். பின் அவ்வாறு தயார் செய்த ஃபனல் போன்ற குழாய் உள்ளே பஞ்சினைக் கொண்டு வந்து வைக்கும். தனது கூறிய அலகினைக் கொண்டு இலயின் விளிபில் சிறு துவாரங்கள் செய்து அத்துவாரங்களின் வழியே பஞ்சினை வெளியே இழுத்து அதை பின் தட்டையாக்கும். இவ்வாறு செய்வதால் 'ரிவெட்' அடித்தாற் போல கூடு தயார் ஆகிவிடும். ஃபனலின் அடிப் பாகத்தில் பஞ்சினாலும், காய்ந்த மெல்லிய வேர்கள் நுனிப்புல் இவற்றாலும் குழிவாக மெத்தை தயார் செய்யும். (குருவிக்கு பஞ்சு எங்கிருந்து கிடைக்கும் என்று யோசிக்கிரீர்களா? குப்பை மேட்டிலிருந்துதான்)

இவ்வாறு தயார் செய்த மெத்தையில் 2 முதல் 6 வரை வெளிர் நீலக்கலரிலான முட்டைகளை இடும். தாய் தந்தை இரண்டுமே மாறி மாறி அடை காப்பதிலும் பின்னர் குஞ்சுகள் வெளிவந்தவுடன் அவற்றுக்கு உணவு அளிப்பதிலும் ஈடுபடும்.

#2 (குஞ்சுகளுக்குக்கு ஆகாரம் இதோ அலகின் நுனியில்)
படம்: நடராஜன் கல்பட்டு

தையல்காரக் குருவிகள் பறக்கும் போது வலுவு அற்றவை ஆகக் காணப்படும். ஆனால் குரல் எழுப்பும்போதோ வலுவு எங்கிருந்து வருமோ, அதனைப் படைத்த ஆண்டவனுக்குத்தான் தெரியும் அந்த ரகசியம்.

தையல்காரக் குருவிகள் தூங்கும் போது பார்பதற்கு வெகு அழகாக இருக்கும். இரு பறவைகளும் அருகருகே ஒரு கிளயில் உட்கார்ந்து, உடலில் உள்ள அத்தனை இறகுகளையும் வெளித் தள்ளி (puffing up the feathers) ஒரு பூப்பந்துபோல செய்து கொண்டு தூங்கும். இது எதற்காக என்று தெரியுமா? குளிரின் தாக்கத்திலிருந்து தப்பிக்கத் தான்.


# 3 (எங்களுக்குத் தூக்கமா வருது)
படம்: நடராஜன் கல்பட்டு

நாம் தூங்க ஆரம்பிக்கும் போது நம் கைகளிலே ஏதாவது ஒரு பொருளை வைத்துக் கொண்டு இருந்தால் சற்று நேரத்திற்க்கெல்லாம் நமது கை தானாக விரிந்து கொண்டு கையில் உள்ள பொருள் கீழே விழுந்துவிடும். சிறு குழந்தைகள் தூங்கச் செல்லும் போது மிகவும் பிடித்த பொருளை கையில் வைத்துக் கொண்டிருக்கும். ஆனால் தூக்கம் வந்த சற்று நேரத்திற்கெல்லாம் அப்பொருள் கையிலிருந்து விடுபட்டு படுக்கையில் விழுந்துவிடும். இதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் பறவைகள் தூங்கும் போதோ அவற்றின் விரல்கள் இறுகிக் கொண்டே போகும். அதனால் அவை ஒரு போதும் கீழே விழாது. இயற்கையில் இறைவன் காட்டும் விந்தைகள் தான் எத்தனை!
***

Legend Talks..
திரு கல்பட்டு நடராஜன்



தொடர்புடைய முந்தைய பதிவுகள்:



Tuesday, July 24, 2012

நான் படம் பிடித்த இரண்டாவது பறவை தேன் சிட்டு.

உங்கள் வீட்டுத் தோட்டத்தில் “கீ வூ...கிக்வூ...கிக்வூ...” என்று கத்தியபடி பறந்த நிலையிலேயே செம்பருத்திப் பூவில் தேன் குடித்திட வரும் ஒரு சிறு பறவையைப் பார்த்திருப்பீர்கள் அதுதான் தேன் சிட்டு. ஒரே இடத்திலேயோ, முன்னும் பின்னுமோ பறந்திடும் சக்தி கொண்டது இப்பறவை. இதை அமெரிக்காவின் ஹம்மிங்க் பேர்டின் சொந்தக் காரன் எனலாம்.

# 1 தேன் சிட்டு பெண் பறவை (படம் – சுதீர் ஷிவ்ராம்)


# 2 பர்பிள் ரம்ப்ட் சன் பேர்ட் – ஆண் பறவை (படம் – சுதீர் ஷிவ்ராம்)

இந்தப் பறவை நம் தோட்டங்களில் உள்ள செடிகளில் இருந்து தொங்கிடும் கூடு ஒன்றை அமைத்து, அதில் நான்கு முட்டைகள் இட்டு, அடை காத்துக் குஞ்சு பொரிக்கும். கூடு காய்ந்த இலை, சரகு, மெல்லிய குச்சிகள், பேபர் துண்டுகள், தட்டு போன்ற எட்டுக் கால் பூச்சியின் முட்ட்டைகளின் பைத் தோல் இவற்றை ஒட்டடை, சிலந்தி வலை இவற்றால் ஒட்டித் தயார் செய்திடும்.

கூடு கட்டும் போது பெண் பறவை கூட்டிற்குத் தேவையான பொருட்களைத் தேடிக் கொண்டு வந்து கூட்டைத் தயார் செய்யும். ஆண் பறவை தானும் கஷ்டப் பட்டு வேலை செய்வது போலக் கூடக் கூடப் பறந்திடும்.

(கீழ்வரும் அனைத்து கருப்பு வெள்ளைப் படங்களும்: நடராஜன் கல்பட்டு)

# 3 தேன் சிட்டு பெண் பறவை


# 4 தேன் சிட்டு ஆண் பறவை

பறவைகள் பலவிதம். அவை ஒவ்வொன்றின் உணவும் ஒரு விதம். தேன், தானியம், பழம், கொட்டைகள், தேனீ, புழு பூச்சிகள், பல்லி, ஓணான், எலி, பாம்பு, இறந்த மிருகங்களின் இறைச்சி, ஏன் மனிதனின் மலம் கூட பறவைகளின் உணவு. ஆனால் எல்லாப் பறவைகளுமே தங்கள் குஞ்சுகளுக்கு மாமிச பதார்த்தங்களையே உணவாக அளிக்கும். காரணம் என்ன தெரியுமா? குஞ்சுகள் குறைந்த கால அவகாசத்தில் வளர்ந்து பறக்கும் திறமையை அடைய வேண்டும். அதற்குப் புரதச் சத்து (protein) அதிகமுள்ள உணவு தேவை.

தேன் சிட்டு கூட்டில் உள்ள குஞ்சுகளுக்கு சிறிது நேரம் உணவளித்த பின் தாய்ப் பறவை தங்களுக்கே தெரிந்த மொழியில், "நீ இவ்வளவு நேரம் உணவு உட்கொண்டுவிட்டாய். இனி மலம் கழிக்க வெண்டும்", என்று சொல்லும். குஞ்சும் திரும்பிக் கொண்டு மலம் கழிக்கும். அவ்வாறு வெளியேற்றப் படும் மலத்தினை தாய்ப் பறவை அலகில் கொத்திக் கொண்டு வெகுதூரம் எடுத்துச் சென்று எறிந்துவிடும். மலமும் கூட்டிலோ அல்லது தாயின் அலகிலோ ஒட்டிக் கொள்ளாத வகையில் ஒரு மெல்லிய தோல் பொன்ற வஸ்துவால் மூடி இருக்கும். மலப் பை (fecal sac) என்று அதற்குப் பெயர். இவ்வாறு மலம் கூட்டில் படாமல் வெளியேற்றப் படுவதற்கு கூட்டின் சுத்தம் (nest hygiene) என்று சொல்வார்கள்.
இதற்கு நேர் எதிர் புறாக்கள். குஞ்சுகள் கூட்டிலேயே மலம் கழிக்கும். ஆனால் கூடு இடைவளி அதிகம் கொண்டு குச்சிகளால் கட்டப் பட்டு இருக்குமாதலால் மலம் வெளியே விழுந்து விடும்.

# 5
(மலம் கூட்டினுள் விழுமுன் வெளியேற்றப் படுகிறது)

‏தேன் சிட்டில் இரு வகைகளைக் காணலாம். ஒன்று பர்பிள் ரம்ப்ட் சன்பேர்ட். மற்றொன்று பர்பிள் சன்பேர்ட். முன்னதை நம் தோட்டங்களில் காணலாம். பின்னதை சாதாரணமாக காடுகளில் காணலாம்.

தேன் சிட்டினை நான் படம் பிடித்த போது 'பர்பிள் ரம்ப்ட் சன் பேர்ட்' அதிகம் கலவரப் படவில்லை. ஆனால் 'பர்பிள் சன் பேர்டோ' மிகுந்த கலவரப் பட்டு ஆத்திரத்தில் கேமராவையே தாக்கியது. அதை மற்றொரு கேமெரா மூலம் பதிவு செய்தேன். அந்தப் படம் இதோ:

# 6 “என்னிடம் அனுமதி பெறாமல் என்னையா படம் பிடிகிறாய் நீ?





Legend Talks..








திரு கல்பட்டு நடராஜன்



தொடர்புடைய முந்தைய பதிவுகள்:


Monday, July 23, 2012

பறவைகளைப் படம் பிடிப்பது என்பது ஓடி ஆடித் திரியும் சின்னஞ் சிறு குழந்தையைப் படம் பிடிப்பதை விடக் கடினமான ஒரு காரியம். காரணம் குழந்தை பல சமயங்களில் உங்களை நோக்கி வரும். ஆனால் பறவையோ மனிதர்களைக் கண்டால் தங்கள் பின் புறத்தை உங்களுக்குக் காட்டிக் கொண்டு பறந்து சென்றிடும். அப்படி என்றால் எப்படி பறவைகளின் அழகான படங்களைப் பலர் எடுக்கின்றனர்? அதைப் பார்ப்போம் இப்போது.

உங்கள் நண்பர் ஒருவரை நீங்கள் சந்தித்துப் பேச விரும்புகிறீர்கள் என்றால் என்ன செய்வீர்கள்? அவர் வீட்டிற்குச் செல்வீர்கள். அல்லது அவர் வேலை செய்திடும் அலுவலகத்திற்குச் செல்வீர்கள். இதே தான் பறவைகள் விஷயத்திலும் நீங்கள் செய்ய வேண்டும்.

ஒரு பறவையின் வீடு என்பது அதன் கூடு. அலுவலகம் என்பது அது இரை தேடும் இடம். எனவே இவை இரண்டில் ஒன்றினை நீங்கள் கண்டு பிடிக்க வேண்டும்.

கூட்டினைக் கண்டு பிடிப்பது எப்படி?

ஒரு பறவை தன் அலகுகளில் ஒரு குச்சியையோ, புல், வைக்கோல், பஞ்சு இவற்றில் ஏதேனும் ஒன்றையோ எடுத்துச் சென்றால் அது கூடு கட்ட ஆரம்பிக்கிறது என்று அர்த்தம். அதே போல ஒரு பறவை தான் எடுத்த, அல்லது பிடித்த இரையை அங்கேயே உண்டிடாமல் எடுத்துச் சென்றால் அதற்கு ஒரு கூடு இருக்கிறது. அதில் குஞ்சுகள் இருக்கின்றன என்று அர்த்தம்.

மேற் சொன்ன இரு காரியங்களில் எது ஒன்றை ஒரு பறவை செய்தாலும் அதை நீங்கள் உங்கள் கண்களாலும் உடலாலும் தொடர்ந்து செல்வீர்களானால் உங்களால் அதன் கூட்டினைக் கண்டு பிடித்து விட முடியும். இப்போது பாதி கிணறு தாண்டி விட்டீர்கள். இனி மீதிப் பாதி.

# 1 ஏஷி ரென் வார்ப்ளர் என்னும் பறவை தன் கூட்டருகே..

(படம் நடராஜன் கல்பட்டு)

கூட்டைக் கண்டு பிடித்தாயிற்று. இனி....?

பறவைகளைப் படம் பிடிக்க இரு வழிகள் உள்ளன. ஒன்று “கூடு வழி” (Nest technique). மற்றது டெலிபோட்டோ லென்ஸ் பொறுத்திய கேமிராவினால் எடுப்பது.

முன்னதில் கேமிராவும் தேவையானால் ஃப்ளேஷும். கூட்டின அருகில் ஸ்திரமாகப் பொறுத்தப் படும். பறவையின் கூடு ஃபோககஸ் செய்து வைக்கப் படும். பின்னர் துரத்தில் மறைந்திருந்தோ அல்லது ஒரு கூடாரத்திற்குள் அமர்ந்திருந்தோ ஷட்டரை இயக்கிடும் உபகரணங்கள் உதவி கொண்டு பறவை கூட்டில் வந்தமர்ந்திடும் போது படம் பிடிக்க வேண்டும்.

இவ் விஷயங்கள் பற்றியெல்லாம் நான் கற்றது திரு பெருமாளிடம் இருந்து தான்.
# 2
(சிரித்திடாதீர்கள் என் படம் வரைந்திடும் திறமை பார்த்து)

முன் நாட்களில் வாயு கொண்டு இயக்கப் படும் பிஸ்டன் அல்லது பலூன் உள்ளடக்கிய கருவி ஒன்று ஒரு சிறு கம்பியை வெளித்த் தள்ளும். அக்கம்பி ஷட்டரை இயக்கிடும். வாயு கொண்டு இயக்கப்படும் பிஸ்டன் கொண்ட கருவி ஒன்றினை நான் வாங்கினேன். பின்னர் வீடுகளில் முன்பெல்லாம் உபயோகிக்கும் படுக்கையில் இருந்து இயக்கிடும் ஸ்விட்ச் ஒன்றினை வாங்கி அதன் குடலை உருவி விட்டு ஒரு குட்டி ரப்பர் பலூன், சிறிய பிளாஸ்டிக் மூடி இவற்றைக் கொண்டு நானே ஒரு கருவியையும் செய்து வைத்துக் கொண்டேன். இக் கருவி எனது ட்வின் லென்ஸ் கேமிராவை இயக்கப் பயன் பட்டது. இது என்னிடம் இல்லாதிருந்தால் பெரிய ஆந்தை படம் ஒரே சமயத்தில் கலரிலும் கருப்பு வெள்ளையிலும் என்னால் எடுத்திருக்க முடியாது.

(நான் கடையில் வாங்கிய கருவியையும், வீட்டில் தயார் செய்து வைத்திருந்த கருவியையும் படம் பிடித்துப் போடலாம் என்றெண்ணி கடந்த ஒரு மணி நேரம் என் வீடு பூராவும் தெடினேன். கிடைக்க வில்லை.) :-((

இந்நாட்களில் ஒளிக் கதிர்கள் கொண்டு கேமிராவை இயக்கிடும் கருவிகளும் வந்து விட்டன.

பறவைகள், விலங்குகள் இவற்றைப் படம் பிடிக்கப் போதும் போது உங்கள் உடை விஷயத்தில் சிறிது கவனம் செலுத்த வேண்டும். வெள்ளை ஆடை அணியக் கூடாது. பழுப்பு நிற (ப்ரௌன் அல்லது காக்கி) ஆடையோ அல்லது ராணுவத்தினர் காடுகளுக்குள் சென்று போர் புரியும் போது அணிந்திடும் இலைகள், மலர்கள் படம் போட்ட ஆலிவ் க்ரீன் ஆடைகளோ அணிய வேண்டும்.

‘கூடு வழி’ முறையில் படம் பிடிக்கும் போது சில விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் ஆர்வத்தினால் சுமார் பதினைந்து நிமிஷங்களுக்கு மேல் நீங்கள் கூட்டின் அருகில் இருந்தீர்களானால் தாய்ப் பறவை குஞ்சுகளுக்கு இரை கொடுக்காமல் இருக்குமாதலால் குஞ்சுகள் இறந்து விடும்.

உங்கள் கேமிராவிற்கு நல்ல காட்சி தெரிய வேண்டும் என்பதற்காக கூட்டின் முன்பிருக்கும் இலை கிளைகளை வெட்டி எடுத்து விட்டீர்களானால் காகம் போன்ற பறவைகள் கூட்டினை எளிதாகக் கண்டு பிடித்துக் குஞ்சுகளைக் கொன்று தின்று விடும். மறைத்திடும் இலை, கிளைகளை ஒரு மெல்லிய நூல் கொண்டு வேறு புறம் இழுத்துக் கட்டிடுதல் நல்லது.

எக்காரணம் கொண்டும் குஞ்சுகளைக் கையினால் தொடாதீர்கள். அப்படித் தொடப் பட்ட குஞ்சுகளை பல சமயம் தாய்ப் பறவை கூட்டை விட்டு வெளியே தள்ளிவிடும்.

இம் மூன்றினையும் கட்டாயம் தவிர்க்க வேண்டும். இல்லை என்றால் பறவைகளின் சந்ததி வந்திடலைத் தடை செய்தவர்களாகி நீங்களே பறவைகளுக்கு எமனாகி விடுவீர்கள். சில சமயங்களில் பயந்து போன தாய்ப் பறவை கூண்டிற்கு நிறந்தரமாகத் திரும்பாமலே போய் விடலாம். இதுவும் ஒரு பரிதாபமான நிகழ்வு.

பெருமாளுடன் சென்று நான் பிடித்த முதல் படம் இதோ:
# 3

பார்ப்பதற்கு ஒரு சிட்டுக் குருவி போலிருக்கும் இப் பறவையின் பெயர் பைடு புஷ் சேட் (Pied Bush chat) என்பதாகும். இது பங்களூரில் இருந்து சுமார் பத்துப் பதினைந்து கிலோ மீடர் தூரத்தில் இருந்த் ஒரு கிராமத்தில் ஒரு வைக்கோல் போரில் கூடு கட்டி இருந்தது. இந்த முதல் முயற்சி எனக்கு மிகுந்த ஊக்கத்தினை அளித்தது. இரவு பகல் என்னேரமும் இதே சிந்தனையாய்க் கழிந்தன அடுத்த மூன்றாண்டுகள்.
***


Legend Talks..




திரு கல்பட்டு நடராஜன்



தொடர்புடைய முந்தைய பதிவுகள்:


Sunday, July 22, 2012

இத் தொடரின் முதல் கட்டுரையில் திரு உபேந்த்ரா என்பவர் என்னை திரு டி.என்.ஏ. பெருமாள் என்பவருக்கு அறிமுகம் செய்து வைத்தார் என்று சொன்னேன்.

#1 டி.என்.ஏ.பெருமாள்பெருமாள் பறவைகள், விலங்குகளை படம் எடுப்பதில் நிபுணர். அவரை சந்தித்த முதல் நாளில் இருந்து அவர் எனக்குக் குருநாதரானார். அன்று முதல் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு பெருமாள், உபேந்த்ரா, நான் ஆக நாங்கள் முவரும் ஞாயிற்றுக் கிழமைகளிலும், விடுமுறை நாட்களிலும் காடு மேடுகளில் சுற்றித் திரிந்தோம் விலங்குகள், பறவைகள் இவற்றைப் படம் பிடித்திடும் நோக்கில்.

எனது அனுபவங்கள் பற்றி எழுது முன் பெருமாள் எடுத்த சில படங்களை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்:

# 2 பந்திபூர் சரணாலயத்தில் ஒரு புலி



# 3 பந்திபூர் சரணாலயத்தில் ஒரு காட்டு யானை



# 4 சிங்கம்

# 5 கோடுகள் போட்ட ஆந்தை

(இந்தப் படம் குறுக்கிடும் ஒளிக் கதிர்களால் இயக்கப் பட்ட கேமிரா கொண்டு எடுத்தது.)

பெருமாள் அதிகம் பேச மாட்டார். அவருடன் சுற்றியதில் பல விஷயங்கள் கற்றுக் கொண்டேன். அவரை சந்தித்திரா விட்டால் நான் பறவைகள் படங்கள் எதுவுமே எடுத்திருக்க முடியாது. பல பறவைகளைப் பற்றி அறிந்திருக்கவும் முடியாது.
பெருமாளின் கூற்றுப் படி, “ஒரு நல்ல படம் அலமாரி நிறைய உள்ள புத்தகங்களைக் காட்டிலும் சிறந்த விளக்கம் அளித்திடும் ஒரு பறவை அல்லது விலங்கு பற்றி.”

பறவைகளைப் படம் பிடிக்க விரும்புவோருக்கு பெருமாள் சொல்லும் அறிவுரைகள் பற்றி அறிய வேண்டுமா? படியுங்கள்:



Legend Talks..








திரு கல்பட்டு நடராஜன்



தொடர்புடைய முந்தைய பதிவுகள்:


Saturday, July 21, 2012

எறியும் குப்பையில் இருந்து எழும் புகையோ, அல்லது களத்து மேட்டில் எழும் தூசியோ, மூடு பனியோ அழகான புகைப் படங்களை உங்களுக்கு அளித்திடும் உங்களுக்கு அழகினை ரசித்திடும் கண்கள் இருந்தால். அந்தப் படங்களில் வெரும் புகையோ பனியோ இருந்தால் போதாது. வேறு சிலவும் இருந்திடல் வேண்டும். இந்தப் படங்களைப் பாருங்கள். அப்போதுதான் அவை கதை சொல்லும். கண்களைக் கவரும்.

(படம் எடுத்தது: நடராஜன் கல்பட்டு)

இந்தப் படத்தில், “மாடுகள் வெட்டுப் பட்டிருப்பது ஒரு குறையாகாதா?” என்று கேட்கலாம். ஆனால் அவை வெளியில் இருந்து படத்தின் உள்ளே வருவதாலும் அவை களத்து மேட்டின் கதையைப் பூர்த்தி செய்வதாலும் அது ஒரு பெரிய குறையாகத் தோன்றாது.

இதோ இந்தப் படத்தில் ஆடுகள் கிளப்பிடும் புழுதியே படத்திற்கு உயிர் ஊட்டுகிறது,


(படம் எடுத்தது: சி.ராஜகோபால்)

நீங்களும் எடுத்திடலாம் இவ்வகையான படங்களை.


Legend Talks..
தொடருகிறார் திரு கல்பட்டு நடராஜன்











தொடர்புடைய முந்தைய பதிவுகள்:


புகைப்பட அனுபவங்கள் (01) - LEGEND TALKS


புகைப் பட அனுபவங்கள் (2) மையப் புள்ளிகள்

என் புகைப் பட அனுபவங்கள் (3) வெட்டும் கோடுகள்


என் புகைப் பட அனுபவங்கள் (4) இழுத்துச் செல்லும் கோடுகள் (LEADING LINES)


என் புகைப்பட அனுபவங்கள் (5) படத்தினுள் கோடுகள்


என் புகைப் பட அனுபவங்கள் (6) - தவிர்க்கப் பட வேண்டியவை

Tuesday, April 10, 2012

இம்மாதப் போட்டித் தலைப்பான ‘வழிநடத்தும் கோடுகள்’ குறித்த திரு கல்பட்டு நடராஜன் அவர்களது அனுபவப் பகிர்வு மீள் பதிவாக இங்கே, முன்னர் தவற விட்டவருக்காக:



இழுத்துச் செல்லும் கோடுகள் (Leading lines)

நீங்கள் பிடிக்கும் படங்களில் ஒரு கோடு வெளியில் இருந்து படத்தின் உள்ளே செல்லலாம். அது ஒரு குச்சியாகவோ மரக் கிளையாகவோ, சாலையாகவோ, நதியாகவோ இருக்கலாம். அப்படிப் பட்ட கோடுகள் வெளியில் இருந்து உள்ளே வருபவையாக இருக்க வேண்டும். அவை பார்ப்பவர் கண்களை படத்தின் முக்கிய அம்சத்திற்கு இழுத்துச் செல்வதாக இருக்க வேண்டும். உதாரணத்திற்குக் கீழே உள்ள படத்தைப் பாருங்கள்.

[(கேமிரா தன் கூட்டினைப் படம் பிடிப்பதைக் கண்டு ஆத்திரமைடைந்த தேன் சிட்டு கேமிராவைத் தாக்கிடுது-படம் பிடித்தது 1965)

இந்தப் படத்தில் தூரத்தில் இருந்து கேமிராவை இயக்கிடும் காற்றுக் குழாய் ஒரு இழுத்துச் செல்லும் கோடு என்று சொல்லலாம். ஆனால் அது என்ன செய்கிறது? பார்ப்பவரின் கண்களை படத்தின் பிரதான கதா நாயகனான தேன் சிட்டுக்கு இழுத்துச் செல்கிறது.

அடுத்து இழுத்துச் செல்லும் கோடு தேன் சிட்டின் அலகும் நாக்கும் ஆகும். ஆனால் இதுவும் ஒரு நல்ல வேலையே செய்கிறது. உங்கள் கண்களை கேமிராவிற்கு எடுத்துச் சென்று உங்களுக்கு ஒரு கதை சொல்கிறது.

இதே படத்தில் ஒரு பக்கத்தில் இருந்து ஒரு மரத்தின் கிளையோ, சாய்ந்த கம்பமோ நீட்டிக் கொண்டிருந்தது என்று எண்ணிப் பாருங்கள். அது என்ன செய்யும் உங்கள் கண்களை படத்தில் இருந்து வெளியே இழுத்துச் சென்று விடும்.

ஒரு ஆளோ. ஆடோ, மாடோ படத்தின் வெளி வரம்பு அருகே படத்திற்கு வெளியே பார்த்தது போல நடந்து வந்து கொண்டிருந்தாலும் இதே வேலையை செய்து விடும். இப்படிப் பட்டவை எல்லாம் தவிர்க்கப் பட வேண்டியவை.

இழுத்துச் செல்லும் கோட்டிற்கு இதோ மற்றுமொரு உதாரணம்..


இந்தப் படத்தில் சாலையும் அதன் வேலியும் இழுத்துச் செல்லும் கோடுகள். அவை உங்கள் கண்களை நேராக அந்த் அழகிய சிவப்பு வீட்டிற்கு இழுத்துச் செல்கின்றன. அதே சாலை நேராகச்சென்றோ அல்லது வலது பக்கமாகத் திரும்பியோ படத்தின் வ்ரம்புக்கு வெளியே சென்றிருக்குமானால் அது கண்களை வெளியே இழுத்துச் செல்லும் கோடுகளாக அமைந்திருக்கும்.

என்ன சொல்கிறேன் என்று புரிகிறதா?

-by, நடராஜன் கல்பட்டு

***


திரு கல்பட்டு நடராஜன் அவர்களுக்கு நமது நன்றி!









***

உற்சாகமாக இதுவரையிலும் படம் அனுப்பியிருக்கும் அனைவருக்கும் நன்றி. இன்னும் அனுப்பாதவர்கள் ஏப்ரல் 20ஆம் தேதிக்குள் அனுப்பிடுங்கள். மேலும் சில மாதிரிப் படங்கள் இங்கும்: கோடு போட்டா ரோடு.
***
 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff