Showing posts with label படம் செய்ய விரும்பு. Show all posts
Showing posts with label படம் செய்ய விரும்பு. Show all posts

Friday, November 16, 2007

இரவு புகைப்படக்கலையில் முதல் பாடத்தை படிச்சி இருப்பீங்க. இப்ப இரண்டாவது பாடத்திற்கு போகலாமா? இந்த முறை சொந்தமாக கற்றுக்கொண்டதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். இந்த தீபாவளிக்கு எப்படியும் நல்ல படங்கள் எடுத்துவிட வேண்டும் என்ற ஒரு ஆவலில் இருந்தேன். மொட்டை மாடிக்கு சென்று வானத்தில் அழகாக மின்னிய நடசத்திரங்களுடன் தானும் சில நொடிகள் மின்னிய பட்டாசுகள் கண்ணை கவர்ந்து இழுத்தது. எப்படியும் பிடித்துவிடலாம் என்று இருந்த எனக்கு ஏமாற்றம் தான் மிச்சம். ஒரு படம் கூட சரியாக பதியவில்லை. சுமார் முக்கால் மணி நேரம் சொடுக்கி சொடுக்கி வெறுத்தே போனது.
முக்காலியில் அவசியம் அப்போது தான் உறைத்தது. வீட்டின் முன்னே அழகான composition. ஆனால் கைகளில் வைத்து சொடுக்கிய போது நிறைய ஷேக்குகள் படத்தில் தெரிந்தது. பின்னர் கைப்பிடி சுவரில் மீது வைத்து சொடுக்கினேன். கொஞ்சம் ஆபத்தான செயல் தான். கொஞ்சம் தவறினாலும் கிளிக்கிற்கு பதில் டமால் தான்.
Mode : Manual : F/4 : Exposure Time : 5 sec

இரவுப்புகைப்படக்கலையில் முக்காலியின் அவசியம் இப்போது உணர்ந்திருப்பீர்கள். மிக நல்ல படங்களை தவறவிட்டுவிடுவோம்.


சிறிது நேரம் கழித்து இரவு பட்டாசுகளை வீட்டில் வெடிக்க ஆரம்பித்தார்கள். பட்டாசுகளை முதல்முறை படம் பிடிப்பதால் எப்படி எங்கு படம் பிடிப்பது என்று தெரியவில்லை. ஆனால் அந்த வெளிச்சத்தில் தெரியும் முகங்கள் பார்க்க அழகாக இருக்கும். அடுத்த முறை முயற்சித்து பாருங்கள். Program மேடில் இருந்து Manual மோடிற்கு மாறினால் இரவு புகைப்படங்கள் பிரமிக்கும் வகையில் கிடைக்கும். அப்படி கிடைத்தது தான் கிழே உள்ள புகைப்படங்கள். அனைத்தும் Manual Modeல் எடுக்கப்பட்டது. எடுக்கும் படத்திற்கு ஏற்ப Exposure நேரத்தை மாற்றிக்கொள்ளவும். Prolonged Exposure என்று இதனை சொல்கிறார்கள்.


எங்கோ ஓரு புத்தகத்தில் வேகமாக செல்லும் பேருந்து, வாகனத்தின் பாதையை (trail) இந்த மோடில் எடுக்கலாம் என்று சொல்லி இருந்தார்கள். அந்த படிப்பினையை கொண்டு எடுத்த படங்கள் இவை.


இப்படிப்பட்ட படங்களுக்கு புகைப்படிப்பவருக்கு இணையாக அந்த பட்டாசுகளை வைத்து வடிவங்கள் கொடுப்பவரின் பங்களிப்பும் அவசியமானது.

-விழியன்

Wednesday, October 17, 2007

வணக்கம்,

இந்த பதிவில் இரவு புகைப்படங்களை பற்றிய எனது அனுபவங்களை உங்களோடு பகிர்கிறேன்.
இரவு புகைப்படம் (Night Photograph) எப்போதும் கனவாகவே இருந்தது. புதிய கருவி (Canon 400D Rebel XT) வாங்கியதில் இருந்து ஒரு இரவு காட்சி கூட எடுக்க வரவில்லை. முதல் தவறு முக்காலி (Tripod) இல்லை என்பது என்று புரிந்தது. இரண்டாவது சரியான நிறுப்பில் (Setting) வைக்க தெரியவில்லை என்பது தான். என்னென்னவோ முயற்சித்தும் ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை. பிருந்தாவன் தோட்டதிற்கு சென்று எடுத்த வண்ணமயமான தண்ணீர் காட்சிகள், பேயின் நடமாட்டம் போல காட்சி தந்தது.
காசிக்கு சென்று இருந்த போது ஹிந்து நாளேட்டின் முக்கிய புகைப்படக் கலைஞர் கே.ஆர்.தீபக்கை சந்திக்க நேர்ந்தது.அவர் தான் கங்கை ஹார்த்தியினை எடுக்கும் போது என்ன செட்டிங் வைக்க வேண்டும் என கற்றுக்கொடுத்தார். அட படங்கள் அருமையாக வருகின்றதே !!!
முக்காலியின் அவசியம்:
இரவு புகைப்படங்களுக்கு முக்காலி (Tripod) மிக மிக அவசியமானது. ஏன் என்றால் நீண்ட நேரம் புடைக்க (Expose) செய்ய வேண்டி இருக்கும். அத்தனை நேரம் அசையாமல் கருவியை பிடித்திருக்க வேண்டும். (இரவும் புகைப்படங்கள் எடுக்கும் போது கிளிக் செய்வதை விட self timer உபயோகிக்க பரிந்துரைக்கின்றார்கள். ஏனெனில் நாம் கிளிக் செய்யும் போது ஏற்படும் அசைவுகள் கூட படங்களை கெடுத்துவிடலாம் என்கின்றார்கள். டிரைபாடில் வைத்து Self Timer வைக்கும் போது மிகச்சிறந்த காட்சிகள் நமக்கு கிடைக்கும்.
சூரியன் மறைந்து அதன் வெளிச்சம் மட்டும் இருக்கும் சமயத்தில் எடுக்கும் காட்சிகள் பிரமாதப்படுத்தும். ஏனெனில் வெவ்வேறு வண்ணங்கள் சிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
கீழே உள்ள படம் இரவு புகைப்படக்கலைக்கு தேவையான தொழிநுட்ப விடயங்களை நமக்கு தெளிவாக்கும். மேலும்

படத்திற்கு நன்றி (www.cambridgeincolour.com/)
இரவின் என்னென்ன எடுக்கலாம் என்கின்ற சில வழிகாட்டுதல்கள்
  • இரவு வாழ்கை
  • கட்டிடங்கள், மண்டபங்கள்
  • நீர் நிலைகளும் அதன் பிரதிபலிப்புகளும்
  • வான வேடிக்கைகள் (இதற்கு தனியாக யாரேனும் எழுதலாமே)
  • மின்னல்கள்
  • இரவின் நரகம்..ச்ச இரவின் நகரம்
  • விழாக்கள்
  • இன்னும்..இன்னும்......
ISO :
இரவும் புகைப்படங்களுக்கு அதிக ISO பயன்படுத்தினால் படங்கள் தெளிவாக வரும்.
சென்றவாரம் மைசூரில் நடந்த தசரா திருவிழாவிற்கு சென்றிருந்த போது எடுத்த படங்கள் இவை. மூன்றும் ஒரே நேரத்தில் எடுத்தவை தான். ஆனால் வேறு வேறு Exposure. ஒவ்வொரு படத்திலும் படத்தின் ஆழம் அதிகரித்து கொண்டே போவதை காணலாம். முதல் படத்திற்கு -2 Exposure (Under Expose), அடுத்ததற்கு -.67, மூன்றாவது 0 Exposure. ISO : 400
படம் : 1
படம் : 2
படம் : 3
இரவு புகைப்படங்கள் எடுப்பது மற்ற படங்களை எடுப்பதை விட சற்று சிரமம் தான், ஆனால் அதன் பலன்கள் ஆஹா !!!

தொடரும்.

- விழியன்

Monday, October 8, 2007

படங்கள் எடுக்கும் போது உங்க கேமராக்களிலோ அல்லது எடுத்த அப்புறம் கணிணியில் படம் சார்ந்த மென்பொருள்களிலோ இந்த பட்டை வரைபடத்தை (Histogram) பார்த்திருப்பீர்கள்.பல சமயங்களில் அதுக்கு என்ன அர்த்தம் என்று தெரியாமலே மேலோட்டமாக பார்த்துவிட்டு விட்டிருப்போம். ஆனால் இன்றைக்கு இவைகளை பற்றி என்னவென்று பார்த்துவிடுவோம் வாருங்கள்.

இந்த பட்டை வரைப்படம் உங்கள் படத்தில் உள்ள வெளிச்சம்,மற்றும் வெளிச்சமற்ற பகுதிகளின் வரைபடம் என்று கொள்ளலாம். இடது பக்கத்திலிருந்து வலது பக்கத்துக்கு போக போக இருட்டிலிருந்து வெளிச்சப்புள்ளிகளின் அளவை பொருத்து கோடுகள் உயரமாகவோ,உயரம் குறைந்தோ காணப்படும்.இதன் ஒரு முக்கியமான உபயோகம் என்னவென்றால்,உங்கள் கேமராவின் LCD திரையில் படம் ஒழுங்காக வந்திருக்கிறதா என்பதை முழுமையாக பார்க்க முடியாவிட்டாலும்,படம் அதிக ஒளியினால் வெளிரிப்போயுள்ளதா,அல்லது வெளிச்சம் குறைந்து இருட்டிவிட்டதா என்பதை இந்த தட்டைப்படத்தை கொண்டு அனுமானித்துக்கொள்ளலாம்.
சில உதாரணங்களை பார்க்கலாமா??

கீழே உள்ள படத்தினையும் அதற்கான தட்டைப்படத்தினையும் பாருங்கள்கீழே இருக்கும் படத்தில் வெளிச்சம் அதிகமாக இருப்பதால் சற்றே வலது புறத்தில் உயரமான கோடுகள் இருப்பதை பார்க்கலாம்.இதனால் படம் சிறிது over exposed ஆகி இருக்கிறது என்று நீங்கள் உணர்ந்துக்கொள்ளலாம்.


இப்பொழுது கீழே இருக்கும் படத்தையும் அதற்கான தட்டை வரைபடத்தையும் பாருங்கள்.இந்த படத்தில் குழந்தை கருப்பு வண்ணத்தில் சட்டை அனிந்திருப்பதாலும்,படம் சற்றே வெளிச்சம் குறைந்து காணப்பட்டிருபதாலும் தட்டை வரைப்படத்தில் இடது புறம் கோடுகள் உயர்ந்து காணப்படுகின்றன.


இப்பொழுது எந்த ஒரு பக்கமும் தனியாக உயர்ந்து நிற்காமல் சீராக பரவி இருக்கும் ஒரு தட்டை வரைபடத்தையும்,அதற்கான படத்தையும் கீழே பாருங்கள்.இடது பக்கம்,வலது பக்கம் என்றில்லாமல் எப்படி ஒரே சீராக (ஓரளவிற்கு) கோடுகள் எல்லா பக்கமும் இருக்கிறது என்று பாருங்கள்.

புகைப்படக்கலையின் மற்ற பாடங்களை போல் இதுவும் நாம் நல்ல புகைப்படம் எடுப்பதற்கான ஒரு கருவி மட்டுமே. தட்டை வரைப்படம் ஒரே சீராக பரவி இருந்தால்தான் நல்ல படம் என்றோ,அப்படி இல்லாமல் இருந்தால் நல்ல படம் இல்லை என்றோ யாராலும் சொல்ல முடியாது.ஆனால் அடுத்த முறை எங்கேயாவது தட்டை வரைப்படம் பார்த்தால் பேந்த பேந்த முழிக்காமல்,அது என்ன,அதற்கும் படத்திற்கும் என்ன சம்பந்தம் என்றாவது புரிந்துக்கொள்ள இந்த பதிவு உதவும் என்று நினைக்கிறேன்.

பதிவு புரியவில்லை என்றால் தயவு செய்து பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.அடுத்த முறை இன்னும் தெளிவாக எழுத முயற்சி செய்கிறேன்.
நன்றி! :-)

படங்கள் மற்றும் ஆங்கில மூலம் :
Understanding Histograms

Thursday, September 13, 2007

யதார்த்த போட்டோகிராஃபர் பல்லியின் டிப்ஸ்..

சரியான வண்ணத்தோட போட்டோ கிடைக்க மாட்டேங்குதேன்னு கவலைப் படறீங்களா ?

நாம எங்க போட்டோ எடுக்கப்போறோம்னு உங்களுக்கு ஏற்கனவே தெரியும் இல்லீங்களா ? அதுக்கேத்த மாதிரி வொயிட் பேலன்ஸ் ஐ சரி செஞ்சீங்கன்னா போட்டோ நல்லா வரும்னு சொல்லியிருக்குங்க.


    • அதாவது சூரியன் உச்சத்தில இருக்கும்போது வொயிட்பேலன்ஸ் செட்டிங் க டேலைட்/சன்னி(daylight/sunny) மோட் ல வைக்கனுங்க. அப்படி வைக்கும் போது சூரியனின் ஆதிக்கம் அதிகமா இருந்தா சில நேரம் நீல நிறம் அதிகமா வர்ரதுக்கு சான்ஸ் அதிகம் இருக்குங்க.
    • அப்படி அதிகப்படி நீலம் வரும்போது வருணபகவானை மனசில நினைச்சுக்கிட்டு க்ளொடி (cloudy ) மோட்ல வச்சி எடுத்துப் பாருங்க.
    • பொதுவா வீட்டுக்குள்ளார படம் எடுக்கறப்ப மின்சாரத்தின் ஆதிக்கம் நிறையவே இருக்குமுங்க. முடிஞ்ச வரை இயற்கையான வெளிச்சத்தில படம் பிடிக்கிறது உங்க போட்டோவுக்கு நல்லது.
    • ஹோல்டரில் குண்டுபல்பு( incandecent ) மின்சாரத்துட சேர்ந்து ஆதிக்கம் செய்யும் போது ஆரஞ்சு கலர் அல்லது பிங்க் கலர் உங்க போட்டோல நிறைய வர்ரதுக்கு சான்ஸ் இருக்குங்க. டியூப் லைட் ஆதிக்கத்தினால் உண்மையான நிறம் மாறி வேறு மாதிரி கூட தோன வாய்ப்பு இருக்குங்க. முக்கியம இந்த மெர்குரி வெளிச்சத்துல அது அதிகம் வரலாங்க. அதனால பல்புக்கேத்த மாதிரி வொயிட் பேலன்ஸ் செட்டிங் உங்க கேமரால இருக்கான்னு பாருங்க. அப்படி இல்லாத போது ஆட்டோ பேலன்ஸாண்டவர் துணை உங்களுக்கு கட்டாயம் உண்டுங்க. நம்பிக்கையை கைவிட்டுடாதீங்க.





ஆனா ஆட்டோ பேலன்ஸ் தவறான அல்லது விரும்பத்தகாத மாதிரி உங்களுக்கு போட்டோ தருதுன்னு நீங்க நினைச்சீங்கன்னா அடுத்த செட்டிங் மாத்தி எடுத்து பாருங்க. உங்களுக்கு திருப்தியான போட்டோ வர வரைக்கும் எடுத்துட்டே இருங்க. ( set high standard on your photography. dont come to the conclustion " I cant take more than this.. thats it " )
மேலே இருக்கிற போட்டோ ஆட்டோ பேலன்ஸ் மோட்ல எடுத்தது. கொஞ்சம் புளூ ஃபிளிமா மாறிப்போச்சு. இல்லீங்களா


அதையே கொஞ்சம் வொயிட் பேலன்ஸ் செட்டிங் மாத்தி கிளொடு மோடுல எடுத்தது. இப்ப பாத்தீங்கன்னா பெரிய வித்தியாசம் தெரியுமுங்க.

ஆகா மொத்தத்துலா வொயிட் பேலன்ஸை ஆட்டோவில வச்சி எல்லா நேரத்திலையும் எடுத்தா நல்ல பலனளிகாதுங்க.






பொதுவா ஒரு சப்ஜெக்டை நல்ல முறையில படம் எடுக்கணும்னு நினைக்கிறீங்க உங்க கிட்ட ஜூம் குறைவான கேமரா தான் இருக்கேன்னு கவலைப்படறீங்க இல்லையா. இதுக்கு நீங்க கவலைப்பட தேவையில்லீங்க.. பெரும்பாலும் மக்கள் அதுபோல கேமரா தான் வைச்சுட்டு இருக்காங்க. முடிஞ்ச வரையில் அந்த சப்ஜெக்ட் அருகே போயி படம் எடுக்க முயற்சி செய்யுங்க நல்ல பலனைத் தரும்.

முக்கியமா என்ன சொல்ல வரேன்னா வொயிட் பேலன்ஸ் போட்டோ வாழ்கையில முக்கியமுங்க. அதுவும் இல்லாம உங்களோட முயற்சிய்யும் நம்பிக்கையும் தான் இதில முக்கியமுங்க. உங்க மேல நீங்க நம்பிக்கை வச்சே தீரனுங்க. என்னால இவ்வளவு தான் படம் எடுக்க முடியும்னு கட்டாயம் நினைக்காதீங்க. சில நேரம் நல்லா வரும்னு நினைக்கிற போட்டோ சரியா வராமல் போகுமுங்க. அதுக்காக மனம் தளராதீங்க. முயற்சி திருவினையாக்கும்.. என்ன நான் சொல்றது சரிதானுங்களே ?


.. யதார்த்த போட்டோகிராபர் பல்லியின் டிப்ஸ் தொடரும்.

ps: அடிக்கடி நாளிதழ்/மாதஇதழ்களில் வரும் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ படிச்சதோட விளைவு.. மன்னிச்சுக்கோங்க மக்கா

http://www.kenrockwell.com/tech/notcamera.htm --- மேலே இருக்கிற போட்டோஸ் இங்கன இருந்து தான் எடுத்தது.

http://www.kenrockwell.com/tech/white-balance-examples.htm -- இதையும் பாக்க மறக்காதீங்க
நம்ம ஆனந்த் அண்ணாச்சி எழுதியது அவரோட பதிவுல

http://anandvinay.blogspot.com/2005/07/white-balance-zen.html
http://anandvinay.blogspot.com/2005/07/5.html

Wednesday, August 29, 2007

போன பகுதியை படிச்சுட்டு பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.பின்னூட்டமிடாதவறுக்கும் நன்றி!! :-P
போன பகுதியின் கடைசியில் நான் குறிப்பிட்ட சில விஷயங்களை பற்றி இந்த தடவை பாக்கலாம்.

Focal Length : தமிழ்ல இதை குவிய தூரம் அப்படின்னு சொல்லலாம்.
சின்ன வயசுல பள்ளிக்கூடத்துல இது பத்தி படிச்சிருப்பீங்களே ,ஞாபகம் இருக்கா???

சுருக்கமா சொல்லனும்னா குவிய தூரம் என்பது லென்ஸிற்கும் கேமராவின் சென்சர்/படச்சுருளின் இடையில் இருக்கும் தூரம். இதைத்தான் லென்ஸ் பற்றி குறிப்பிடும்போது குறிப்பிடுவார்கள். உதாரணமாக 180mm lens என்று சொன்னார்கள் என்றால் கேமராவில் பொருத்திவிட்ட பின் லென்ஸிற்கும் ,ஒளிக்கற்றை வந்து விழும் திரைக்கும் இடையில் உள்ள இடைவெளி 180mm இருக்கும் என்று பொருள். பல லென்ஸ்கள் ஒரே குவிய தூரத்தில் மட்டுமே நாம் உபயோகப்படுத்தும் வண்ணம் வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆனால் சில லென்ஸ்களை ஒரு குறிப்பிட்ட அளவுக்கள் எந்த குவிய தூரத்தில் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். உதாரணத்திற்கு 18-55mm என்று ஒரு லென்ஸ் உள்ளது. நீங்கள்் SLR வாங்கினீர்கள் என்றால் இந்த லென்ஸையும் சேர்த்தே பல இடங்களில் விற்பார்கள்.

இந்த லென்ஸின் குவிய தூரத்தை 18mm-இல் இருந்து 55mm வரை எந்த தூரத்திலும் மாற்றிக்கொள்ளலாம். இது போன்ற லென்ஸ்களை zoom lens என்று அழைப்பார்கள்.

இந்த குவிய தூரத்தினால் நாம் எடுக்கும் புகைப்படத்தில் என்னென்ன மாறுதல்கள் வரும் என்று பார்க்கலாமா?? பொதுவாக குவிய தூரம் கம்மியாக இருந்தால் நமக்கு முன் பரந்து விரிந்த காட்சியை காமெராவினுள் அப்படியே பதிக்கலாம். சுற்றி உள்ள விஷயங்கள் எல்லாவற்றையும் திறந்த கோணத்தில் திரைக்குள் சேர்ப்பதால் இதை வைத்து கிட்டேயிருக்கும் பொருளை எடுத்தால் கூட அது தூரத்தில் இருப்பது போல் தெரியும். அதனால் குறைந்த குவிய தூரம் உடைய லென்ஸ்களை wide angle lens என்று அழைப்பார்கள்.

லென்ஸின் குவிய தூரம் அதிகமாக அதிகமாக focus செய்யும் பொருட்கள் எல்லாம் பெரியதாக ஆகிக்கொண்டே போகும். அதனால் சிறிய பொருட்களை எல்லாம் பிடிக்க அதிக குவிய தூரம் உள்ள மேக்ரோ லென்ஸ்களை பயன்படுத்துவார்கள்.அதுவுமில்லாமல் தூரத்தில் இருக்கும் பொருள் அருகில் தெரிய வேண்டுமென்றால் குவிய தூரம் அதிகம் உள்ள லென்ஸ் தேவை. இந்த வகை லென்ஸ்களை telephoto lens என்று சொல்லுவார்கள்.

நாம் பயன்படுத்தும் point and shoot கேமராக்களில் 30-40 இல் இருந்து சுமார் 150mm மில்லிமீட்டர் வரை உள்ள zoom lens பொருத்தப்பட்டிருக்கும். எல்லாம் அந்தந்த கேமராவையும் அதின் zoom range-ஐயும் பொருத்தது. இப்பொழுதெல்லாம் 12x-15x point and shoot கேமராக்கள் எல்லாம் வர ஆரம்பித்து விட்டன. இவற்றின் குவிய அளவு 400-450mm வரை செல்லும். பொதுவாக மக்கள் SLR வாங்கினாலே அதில் நன்றாக zoom செய்ய முடியும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இது முற்றிலும் தவறான கருத்து. SLR வாங்கினால் கூட அதிக குவிய தூரம் உள்ள லென்ஸ்கள் இருந்தால் தான் உங்களால் அதிகமாக Zoom in செய்ய முடியும்.

DOF : இது புகைப்பட வல்லுனர்கள் பலராலும் தான் ரொம்ப விஷயம் அறிந்தவர் என்று காட்டிக்கொள்ள பயன்பட்டுத்தப்படும் வார்த்தை!! :-)
ஏதாவது நல்ல படம் என்றால் ஆனா ஊனா உடனே,"படம் செம DOF" என்று பிலிம் காட்ட ஆரம்பித்து விடுவார்கள்!!

அது சரி!! இந்த உண்மையில் இந்த DOF என்றால் என்ன???
DOF என்பது "Depth of field" என்பதன் சுருக்கம்.தமிழில் இதை காட்சியின் ஆழம் என்று சொல்லலாம்.

நாம் ஒரு படத்தை எடுக்கும் போது கேமராவின் முன்னே பல பொருட்கள் பல தூரங்களில் கொட்டிக்கிடக்கும். ஆனா படத்துல எல்லாமே தெளிவா தெரிவதில்லை, ஒரு குறிப்பிட்ட தூரத்துல இருக்கற சில பொருட்கள் மட்டும் தான் தெளிவா தெரியுது. அப்படி தெளிவா தெரியற பொருள் படத்தின் கருப்பொருளாக (subject) இருந்தால் படத்துக்கு அழகு. இப்படி நமக்கு வேண்டிய காட்சி மட்டும் தெளிவாக தெரிந்து மற்ற விஷயங்கள் எல்லாம் மங்கலாக தெரிந்தால் படத்தின் காட்சி ஆழம் கம்மி என்று சொல்லுவார்கள் (Shallow depth of field). படத்துல எவ்வளவோ விஷயம் இருந்தால் கூட எந்த பகுதி தெளிவா இருக்கோ அங்கே தான் நம் கண்கள் தானாக செல்லும்.

நம் கருப்பொருளின் பின்னால் (background) நம் கவனத்தை சிதறடிக்கும் வண்ணம் பல விஷயங்கள் இருந்தாலும் நான் நம் கருப்பொருளின் மேலே மட்டும் காட்சியின் ஆழம் அமையுமாறு வைத்தால் படம் அழகாக இருக்கும்.

இந்த shallow depth of field எல்லா படங்களுக்கும் நல்லா இருக்கும் என்று சொல்ல முடியாது. இயற்கை காட்சிகள் போன்று பரந்து விரிந்த காட்சிகள் எடுக்கும் போது படத்தில் எல்லா பொருளின் மேலும் தெளிவு சீராக பரவியிருக்க வேண்டும். அந்த மாதிரி சமயத்துல காட்சியின் ஆழம் எல்லா தூரங்களிலும் பரவி இருப்பது போல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
நமக்கு வேண்டிய காட்சி தெளிவாக இருக்க வேண்டும் என்பதுதான் இந்த சிந்தாந்தத்தின் நோக்கமே!!

சரி!!

இந்த காட்சியின் ஆழத்தை எப்படி கட்டுபடுத்துவது???

அதற்கும் சில உத்திகள் புகைப்படக்கலையில் உண்டு. நாம் நமது கருப்பொருளின் பக்கத்தில் எவ்வளவுக்கெவ்வளவு போகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு காட்சியின் ஆழம் கம்மியாகும். அதாவது நமக்கும் பொருளுக்கும் உள்ள தூரத்தை விட பொருளுக்கும் background-இற்கும் உள்ள தூரம் அதிமாக இருக்க வேண்டும்!!
புரியுதா???
அது ஒரு உத்தி!!
அதனால் தான் நாம் ஒரு பூவின் பக்கத்தில் போய நன்றாக zoom செய்து படம் எடுத்தால் அதின் காட்சி ஆழம் கம்மியாக வந்து விடும்.

இரண்டாவது உத்தி நான் போன பகுதியிலே சொன்னது போல லென்ஸின் துளை(aperture) சம்பந்தப்பட்டது. அதாவது துளையின் விட்டம் எவ்வளவுக்கெவ்வளவு பெரியதாக இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு காட்சியின் ஆழம் கம்மி. லென்ஸின் f-stop கம்மியாக கம்மியாக துளையின் விட்டம் அதிகமாகும் என்று நான் போன பதிவில் சொன்னதை மறந்திருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்!! :-)

இப்படியாக காட்சியின் ஆழத்தை கட்டுப்படுத்தி படங்களின் தரத்தை நிர்ணயிக்கலாம்!!!

அடடா!! பேச ஆரம்பிச்சு வல வலன்னு பேசிட்டே போயிட்டேன். இதுக்கு மேலே புது தலைப்பு ஆரம்பிச்சா சுவாரஸ்யம் இருக்காது,அதனால மத்த விஷயங்களை அடுத்த பதிவில் தொடர்கிறேன்.

இந்த தலைப்புகள் பத்தி ஏதாவது பேசனும்/ஆலோசிக்கனும்/கேட்கனும்னு தோனிச்சுனா பின்னூட்டம் இடவும். அப்படி இல்லைன்னாலும் போடுங்க (எனக்கும் நீங்க பதிவை படிச்சீங்கன்னு தெரிய வேண்டாம்?? ஹி ஹி)
புகைப்படக்கலை பற்றிய இன்னும் சில விஷயங்களோட உங்களை பிறகு சந்திக்கிறேன்.

அது வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது,உங்கள் அன்பு சீ.வீ.ஆர்!!
வரட்டா?? :-)


பி.கு: செப்டெம்பெர் மாத போட்டிக்கான அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும்,உங்கள் எண்ணங்களின் "வண்ணங்களை" எங்கள் முன் படைக்க இது நல்ல வாய்ப்பாக இருக்கும் என நம்புகிறேன்!! :-)


படங்கள் :
http://www.sweethaven02.com/Photog01/fig0119.gif
http://www.livingroom.org.au/photolog/images/Nikkor-18-55mm-af-s-dx.jpg
http://www.edbergphoto.com/images/dof-cartoon.gif

Friday, August 24, 2007

வணக்கம் மக்களே!!

எல்லோரும் எப்படி இருக்கீங்க???

இந்த மாசத்துக்கான போட்டியிலே உற்சாகமா கலந்துக்கிட்டதுனால எல்லோரும் ரொம்ப களைப்பா இருப்பீங்க,அதனால கொஞ்சம் ஓய்வு தரலாமேன்னு கொஞ்ச நாளா எந்த பதிவும் போடல.

ஆனா அடுத்த போட்டிக்கான அறிவிப்பு வரதுக்கு முன்னாடி லேசா சில விஷயங்களை அறிமுகப்படுத்திட்டு போகலாம்னு வந்தேன்.
நல்ல படங்கள் எடுக்கனும்னு நம்ம எல்லோருக்குமே நிறைய ஆசைதாங்க,ஆனா அது பத்தி கொஞ்சம் கத்துக்கலாம்னு பாத்தா நம்ம பசங்க டெக்னிகலா என்னென்னமோ பேசி நம்மல மூட் அவுட் பண்ணீருவாய்ங்க!! எத்தனை இணையதளம் பாத்திருக்கோம்??எத்தனை புகைப்பட
ஆர்வலர்களை சந்திச்சிருப்போம்??? எங்கிட்டு போனாலும் Aperture,shutter,ISO அப்படி இப்படின்னு டஸ்ஸு புஸ்ஸுன்னு பேசி நம்மள வெரட்டி
விட்டுருவாய்ங்க!!!
அப்படி அவிங்க என்னதான் சொல்ல வரானுங்க அப்படின்னு சில அடிப்படையான சொற்களின் அர்த்தங்களை பார்க்கலாமா???
ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி ஒரு விஷயத்தை தெளிவா சொல்லிடறேங்க!! புகைப்படத்துறையை பொருத்த வரை எல்லாமே ஒளி சார்ந்தவை. நாம் எடுக்கும் புகைப்படங்கள் உண்மையாகவே பொருட்கள் அல்ல,பொருட்கள் மேலே பிரதிபலிக்கும் ஒளி தான். ஒரு கதவு (Shutter) வழியாக ஒளியை ஒருசில நேரம் லென்ஸ் வழியாக உள்ளே விட்டு அதை ஃபிலிமிலோ அல்லது டிஜிட்டல் சென்சரிலோ பதியச்செய்வது தான் புகைப்படத்துறையின் அடிப்படை.
இப்படி ஒளியை நாம் கேமராவில் பதிக்கும் பொழுது மூன்று விதங்களால் அதன் பதியும் திறன் மாற வாய்ப்பு உண்டு.

முதல் விஷயம் கேமராவின் லென்ஸின் விட்டம்(diameter)். விட்டத்தின் அளவிற்கேற்ப ஒளி உள்ளே வரும் அளவு மாறுபடும். விட்டம் அதிகமானால் ஒளி அதிகம் வரும்,கம்மியானால் ஒளியும் கம்மியாகிவிடும்.
அதே போல் ஒளியை தடுத்துகொண்டிருக்கும் கதவை (shutter) திறந்து மூடும் வேகம இன்னொரு காரணி். ஒரு நொடிக்குள் திறந்து மூடிவிட்டால் குறைந்த அளவு ஒளியே உள்ளே வரும்,அதிகமாக திறந்து வைத்திருந்தால் அதிகமான ஒளி வரும்.இதனால் படம் சரியான வெளிச்சம்,நிறம் எல்லாம் சரியாக விழுவதற்கு கதவை திறந்து மூடும் வேகம் ஒரு முக்கியமான விஷயம்.
மூன்றாவது படச்சுருளின் தரம்.சில படச்சுருள்கள் குறைந்த அளவு ஒளியையே நன்றாக பதிவு செய்து விடும்,அதிகப்படியான ஒளி இருந்தால் படம் வெளிரிப்போய்விடும். இரவு நேரங்களில் படம் எடுக்க இது போன்ற படச்சுருள்கள் மிகவும் உபயோகமாக இருக்கும். சில படச்சுருள்களின் மேல் அதிகப்படியான ஒளி இருந்தால் தான் படம் ஒழுங்காக பதியும்.

சரி!! இப்போதான் எல்லார்கிட்டேயும் டிஜிட்டல் கேமரா வந்துருச்சே!!! அதுல இந்த விஷயமே கிடையாதே அப்படின்னு கேக்கறிங்களா?? இது பத்தி மேல நான் ISO பத்தி சொல்லும்போது சொல்றேன்.
இப்போ கேமராக்கள் குறித்து அடிக்கடி விவாதிக்கப்படும் சொற்கள் சிலவற்றை பார்ப்போமா??
Shutter Speed: நான் முன்னமே சொன்னது போல,கேமராவின் உள்ளே விடப்படும் ஒளியை கட்டுப்படுத்த ,கதவு திறந்து மூடப்படும் நேரத்தை
கூட்டியோ குறைக்கவோ செய்வார்கள்.நொடிப்பொழுதில் நடந்து முடியக்கூடிய விஷயங்களாக இருந்தால் அவற்றை அதிவேக Shutter speed-ஓடு எடுப்பார்கள். உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால் தெறிக்கும் தண்ணிர், மோட்டார் ரேஸ்,பறக்கும் பூச்சி போன்ற காட்சிகளுக்கு கதவு நொடிப்பொழுதில் திறந்து மூடினால் அந்த நொடியில் நடந்த நிகழ்வு தெளிவாக படத்தில் பதியும். இப்படி செய்யும் போது ஒளி உள்ளே
வருவதற்கான வாய்ப்பு குறைவு என்பதால் நீங்கள் எடுக்கும் காட்சி வெளிச்சமாக இருக்குமாரு பார்த்துக்கொள்வது உங்கள் பொறுப்பு.

அதி வேக shutter speed-ஐ போல சில சமயங்களில் கதவு மிக மெதுவாக திறந்துமூடுமாறு வைப்பதும் ஒரு சுவாரஸ்யமான புகைப்பட உத்தி. பல நொடிப்பொழுதுகள் கதவை திறந்து வைத்தால் அந்த சமயத்தில் உள்வரும் ஒளி அனைத்தும் ஒரு வித்தியாசமான காட்சியை நமக்கு காட்டும்.

இந்த சமயத்தில் சற்றேனும் நகர்வு இருந்தால் கூட படம் ஷேக் ஆகி விடும் என்பதால் slow shutter speed காட்சிகள் பெரும்பாலும் tripod-இன் உதவியுடன் எடுக்கப்படும்.

அது சரி!! ட்ரைபாட் என்றால் என்ன என்று கேக்கறீங்களா??

அதாங்க!! ஸ்டூடியோல எல்லாம் கேமராவை ஏதோ ஒரு குச்சியின் மேலே வெச்சிருப்பாங்களே!! அந்த குச்சியின் பெயர் தான் ட்ரைபாட்.
இப்பொழுதெல்லாம் பெரும்பாலான கேமராக்களில் Shutter mode(TV mode) என்று படம் எடுக்கும் முறை இருக்கும். கேமராவை அதில் மாற்றிக்கொண்டால் எவ்வளவு நேரம் கதவு திறந்திருக்க வேண்டும் என்று நாமே முடிவு செய்துக்கொள்ளலாம். அதற்கேற்ப லென்ஸின் விட்டத்தை கேமராவே கண்டுபிடித்து மாற்றிக்கொள்ளும்.
Aperture: ஒரு கேமராவில் ஒளியை கட்டுப்படுத்த பயன்படும் அடுத்த முக்கியமான விஷயம் லென்ஸின் விட்டம்.
Aperture என்பதற்கு ஆங்கிலத்தில் துளை என்று பொருள் கொள்ளலாம்.லென்ஸிற்கு முன்பு ஒரு வட்டமான,சுருங்கி விரியக்கூடிய திரையின் துணையோடு
ஒரு துளை போன்ற அமைப்பு ஒன்று இருக்கும். இதை பெரியதாக்கி சின்னதாக்கி லென்ஸிற்கு வரும் ஒளியின் அளவை கட்டுப்படுத்தலாம். இந்த விட்டத்தின் அளவிற்கு ஏற்ப படங்கள் வித்தியாசமாக வெளிவரும். பொதுவாக அகலமான விட்டம் இருந்தால் படங்களில் DOF (இதை பற்றி பின்னர் பார்க்கலாம்) நன்றாக வரும்.உங்களுக்கு துளை பெரியதாக வேண்டும் என்றால் அதிகப்படியாக வரும் ஒளியை கட்டுப்படுத்த, கதவு திறந்து மூடும் வேகத்தை அதிகமாக்கி விடலாம். அதேபோல் துளை சிறியதாக இருந்தால் வேகத்தை குறைத்து ஒளி நிறைய நேரம் உள்ளே வருமாறு ஏற்பாடு செய்யலாம்.

உங்கள் கேமராவில் இருக்கும் Aperture Mode-ஐ உபயோகித்தால் உங்களுக்கு வேண்டிய அளவிற்கு துளையின் அளவை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். அதற்கேற்ற கதவின் வேகத்தை கேமராவே கூட்டி பெருக்கி செட் செய்து கொள்ளும்.

f-Number அல்லது fstop :நிறைய இடங்களில் இந்த வார்த்தையை வெச்சுக்கிட்டு எல்லோரும் செமத்தியா சீன் போட்டுகிட்டு இருப்பாய்ங்க!!! இந்த f-number-னா என்னன்னு பார்க்கலாமா???
சுருக்கமா சொல்லனும்னா இந்த f-number என்பது நம்ம லென்ஸ் துளை விட்டத்தின் அளவுகோள் என்று சொல்லலாம். f-Number அதிகமாக ஆக துளையின் விட்டம் சிறியதாகிக்கொண்டே போகும். அதாவது ஒரே லென்ஸில் f1.2-ஐ விட f5.6-இல் துளை சிறியதாக இருக்கும்.f நெம்பரில் ஒவ்வொரு புள்ளி கூட கூட துளையின் விட்டம் பாதியாக குறைந்துக்கொண்டே போகும். அதாவது f1.0-இல் இருப்பதை விட f2.0-இல் துளையின் விட்டம் பாதியாக இருக்கும். இப்படி விட்டத்தை குறைத்துக்கொண்டே போனால் உள்வரும் ஒளி குறையும் அல்லவா.அதனால் கதவின் வேகம் அதற்கேற்றார்போல் மாற்றப்படும். உதாரணத்திற்கு ஒரு லென்ஸின் f அளவை f1.0-இல் இருந்து f2.0ஆக மாற்றினால் அதன் துளை யின் அளவு பாதியாக குறையும் அல்லவா ,அதனால் கேமராவின் ஷட்டர் திறந்திருக்கும் நேரம் இரண்டு மடங்காக்கினால் தான் முன்பு கிடைத்த அதே அளவு ஒளி கிடைக்கும்.

உங்கள் கேமராவை Manual Mode-இல் பொருத்திக்கொண்டால் துளையின் அளவு,கதவு திறந்து மூடப்படும் வேகம் ஆகியவற்றை நீங்களே தனித்தனியே தீர்மானித்துக்கொள்ளலாம். அதுவே Automatic mode-இல் இருந்தால் ,கேமராவில் உள்ள light meter ஒளியின் அளவை ஊகித்து அதற்கேற்றார்போல் துளையின் விட்டம் மற்றும் ,கதவின் வேகத்தை தானே தீர்மானித்துக்கொள்ளும். நம்மில் பெரும்பாலனவர்கள் இதை நம்பித்தான் படம் எடுத்துக்கொண்டிருக்கிறோம்.

f-stop-க்கும் f-number-க்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால்,கேமராக்களில் பொதுவாக f1.0,f2.0 போன்ற முழுமையான அளவுகள் இருக்காது.கேமராக்களில் f2.8,f5.6 போன்ற அறைகுறை என்களில் f-Number-கள் உருவாக்கப்பட்டிருக்கும். இதைத்தான் f-stop என்கிறார்கள்.
fstop is nothing but a discrete rounding off of f-numbers
கணக்குல ஆர்வம் இருக்கறவங்களுக்கு ஒரு சமன்பாடு இதோ!!

f1 = Focal length of the lens (லென்ஸின் குவிய தூரம்) / Diameter of the lens (லென்ஸின் விட்டம்).

இதன்படி பார்த்தால் எப்பொழுது ஒரு லென்ஸின் குவிய தூரம் (focal length),அதன் விட்டத்தோட சமமா இருக்கோ அப்போ லென்ஸ் f1-இல இருப்பதாக சொல்லுகிறோம். லென்ஸின் விட்டத்தை நாம் குறைக்க குறைக்க f-number-இன் புள்ளி கூட்டிக்கொண்டே போகிறது!!
புரியுதா???
ஹ்ம்ம்ம் !! இருங்க திரும்ப ஒரு முறை படிச்சுட்டு சொல்றேன் என்கிறீர்களா?? ஒரு தடவைக்கு நாலு தடவை படிச்சு பாருங்க!! சந்தேகம் இருந்தா பின்னூட்டத்துல கேளுங்க!!
அதெல்லாம் சரிபா!! இந்த குவிய தூரம்(focal length) என்றால் என்னன்னு கேக்கறீங்களா???
அது ஒரு தனி கதை மக்களே,வேணும்னா அடுத்த பகுதியில சொல்றேன்!!சரியா???
அப்படியே DOF,ISO,White balance இதெல்லாம் என்னன்னும் பாக்கலாம் !! சரியா???
போறதுக்கு முன்னாடி ஒரு கொசுறு செய்தி. இந்த லென்ஸ் பற்றி பேசும்போது 18-55mm என்றெல்லாம் குறிப்பிடுகிறார்கள் அல்லவா.இந்த குறியீடுகள் எல்லாம் இந்த குவிய தூரத்தின் அளவுகள் தான்!! :-)

அடிப்படையான விஷயங்களுக்கு அறிமுகமா இருக்கனுமேன்னு எந்த தலைப்பையும் பத்தி ரொம்ப விரிவா போகல!!ஏதாச்சும் அலோசிக்கனும்னா பின்னூட்டமிடுங்க!! அப்படியே சொல்லுறது புரியுதா, நல்லா இருகான்னும் சொன்னீங்கன்னா தொடரை செம்மைப்படுத்த வசதியா இருக்கும்!!
வரட்டா?? :-)

படங்கள் :
http://www.wtec.org/loyola/mems/fh6_4.gif
http://www.morguefile.com/lessons/lesson_images/applewat.jpg
http://www.stsite.com/camera/images/slowshut2.jpg
http://en.wikipedia.org/wiki/Image:Aperures.jpg
http://web.uvic.ca/ail/techniques/aperture.gif


 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff