Monday, August 25, 2008

பொதுவாகவே கட்டிடங்களைப் புகைப்படமெடுப்பதென்பது இலகுவாகத் தோன்றினாலும், சவால் நிறைந்த ஒன்று தான் அதுவும் புதிய நிழற்படக்காரர்களுக்கு. துறை சார்ந்த நிபுணர்களும் இதை ஒத்துக் கொள்வார்கள். இந்த வகை புகைப் படங்களுக்கு வரவேற்பும் அதிகம் என்பது முக்கியமான ஒன்று. ஆனால் முடியாததென்று எதுவும் இல்லை அல்லவா


Architecture / கட்டமைப்பு நிழற்படங்களுக்கு முக்கியமான இடையூறாக இருப்பது கோடுகள். எந்தப் பெரிய அல்லது சிறிய கட்டிடமாக இருக்கட்டுமே அதில் குறுக்கும் நெடுக்குமாக கோடுகள் இருக்கும். ( Remember leading line concept ). இந்தக் கோடுகள் கவனத்தைச் சிதறடிப்பதில் பெரும் பங்கு வகிக்கும். இது பெரும்பாலும் தவறான கோணத்தில் எடுக்கும் போது புகைப் படத்தின் அழகையே கெடுத்து குட்டிச் சுவராக்கி விடும். ஆனால் அதுவே சற்று யோசித்து சரியான கோணத்தில் எடுத்தால் அற்புதமான அழகைத் தரும். உதாரணத்துக்கு சொல்லனும்னா, கட்டிடத்தின் அருகே நின்று வெகு நேராக எடுக்கும் புகைப்படத்திற்கும் , அதையே பக்க வாட்டிலோ அல்லது சற்று வித்தியாசக் கோணத்திலோ எடுத்தால் வரும் படத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் தெரியும்.




பண்ணை வீடுகளையோ அல்லது தனித்திருக்கும் வீடுகளையோ அல்லது பழைய காலத்து கட்டிடங்களை எடுக்கும் போது முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று. அந்தக் கட்டிடத்தை சற்று தூரத்தில் இருந்து, கட்டிடத்திற்கு சுற்றி இடம் போதுமான அளவு இடம் விட்டு எடுத்துப் பாருங்கள். அந்தக் கட்டிடத்தை சுற்றி இருக்கும் பொருள்களே, இது போன்ற கட்டிடத்தின் அழகை நிர்ணயிக்கும் காரணிகள்.

Viewpoint - Rajaseat - Madikere - Coorg


உயரமான கட்டிடத்தை எடுக்க வேண்டுமெனில், கட்டிடத்தின் அருகில் நின்று மேலே பார்த்தவாரெடுத்தால், மேல் கட்டிடம் மிக வித்தியாசமாகக் காணும். ( அழகா இல்லையா என்பது எடுத்துப் பார்த்தால் மட்டுமே தெரியும் ;) )

Mysore- Tippu

இந்த வகைப் புகைப்படத்தில், நிழற்படத்தின் அழகை நிர்ணயிக்கும் முக்கிய காரணி - வெளிச்சம். கட்டிடத்தை முழுமையாக எடுக்கும் போது வானத்தின் வெளிச்சத்திற்கும், கட்டிடத்தின் மேலுள்ள வெளிச்சத்துக்கும் அதிக வித்தியாசம் இருக்கும். கட்டிடம் சற்று இருட்டாக இருக்கும் சில நேரங்களில். சூரிய வெளிச்சம் கட்டிடத்தின் மேல் விழும் நேரத்தில் எடுத்தால் அழகாக இருக்கும்.

On the way to mysore
உதாரணத்திற்கு சொல்லனும்னா, காலை அல்லது மாலை நேரத்தில், கட்டிடத்தின் பின் சூரியன் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம், அப்போது கட்டிடத்தின் மீது விழும் வெளிச்சம் வெகு குறைவாக இருக்கும். இந்த நேரத்தில் கட்டிடத்தின் அழகு கிடைக்காமல் கருப்பொருள் under-exposed condition ஆக போய்விடும்.

Sunset - at home town

கட்டிடத்தின் உள்ளேயோ அல்லது வெளியேயோ, எடுக்கும் போது நிழல்களையும் சற்று கவனித்து எடுக்கலாம். கட்டிட நிழல்கள் அருமையான புகைப்படத்திற்கு உத்திரவாதம் அளிக்கும். பக்க வாட்டில் இருந்து விழும் வெளிச்சத்தினால் அதிக அளவு நீண்ட நிழல் கிடைக்கும். ஆகவே காலை மற்றும் மாலை வேளைகளில் முயற்சித்துப் பாருங்கள்.





துறை சார்ந்த கட்டிடங்கள் எடுக்கும் போது அங்கு வேலை செய்யும் ஆட்கள் ஃப்ரேமில் இருந்தால், அழகு கூடும் இல்லையா ? சில கிராமத்து வீடுகளை தனியாக எடுப்பதை விட அந்த கிராமத்து மனிதர் அந்த ஃப்ரேமில் இருந்தால், சொல்ல வரும் செய்தி அழுத்தமாக வரும். அது போல இடத்திற்கேற்றவாறு முயற்சிக்கவும்.





அகழ்வாராய்ச்சி நிலையில் இருக்கும் அழிவு நிலைக் கட்டிடங்கள் கட்டமைப்புகள் எல்லாம் பிற்காலத்தில் பலருக்கும் உபயோகமாயிருக்கும். புதர் மண்டிய இடங்களை சற்று தூரத்தில் நின்று எடுக்கும் போது சற்று பேய்வீடு கெட்டப் வரும். எடுத்தப் பின் நீங்கள் பயந்து போகக் கூடாது என்பது முக்கியமான ஒன்று.

Tippu 01

உங்களிடம் நல்ல ஜூம் லென்ஸ் இருக்கிறதா, முடிந்த வரையில் சற்று தூரத்தில் நின்று அப்புறம் கட்டமைப்பை ஃபோகஸ் செய்யுங்கள். மிக அருகில் இருந்து எடுப்பதற்கும், தூரத்தில் இருந்து ஜூம் செய்து எடுப்பதற்கும் அதிக வித்தியாசம் காண்பீர்கள். ( ஏன் என்பது பற்றி நேரமிருந்தால் தனிப் பதிவிட முயற்சிக்கிறேன் )


சில நேரங்களில் கட்டிடங்களை/கட்டமைப்புகளை நேர் கோணத்தில் எடுத்தும் பாருங்கள். கட்டிடங்கள்/கட்டமைப்பு என்பதால், கட்டிடங்களில் உள்ள ஃப்ரேம்களை படத்தில் கொண்டு வர முயற்சியுங்கள்.

படிகள் உள்ளக் கட்டிடங்களை தேர்ந்தெடுத்தீர்களா ? நல்லது. அதில் உள்ளக் கோடுகளை வழி நடத்திச் செல்ல விட்டு அதற்கேற்றார்போல புகைப்படம் எடுங்கள்.

கட்டிடம்/கட்டமைப்பு என்ற உடனே அறைகளும், ஜன்னல்களும், கதவுகளும் நினைவுக்கு வருகிறதா? சரியான ஆள் சார் நீங்க. கோவில் சிலைகளை கணக்கெடுக்க மறந்துட்டீங்களே ? இந்தியாவுல கோவிலுக்காப் பஞ்சம். அழகான சிற்பங்களை வித விதமானக் கோணங்களில் எடுத்துப் பழகுங்கள். சிற்பங்கள் மட்டுமல்ல, அழகு நிறைந்தப் படித்துறைகளையும் கண்ணெடுத்துப் பாருங்கள்.




அதே போல இங்கே எனக்கு கோவில் கிடையாது, நான் பெரிய ஹோட்டலில் தங்கியிருக்கிறேன் என்கிறீர்களா, வசதியாப் போச்சு. செயற்கை நீர்வீழ்ச்சி, செயற்கை நீச்சல் குளம் எல்லாம் உங்களுக்காகத் தான் சார் கட்டி வைத்திருக்கிறார்கள் அதையேன் விடப் போகிறீர்கள்.


குறுகலான சந்துகளின் இருபக்கமும் கட்டப்பட்டிருக்கும் வீடுகளைப் பாருங்கள். கற்பனை ஊற்றெடுக்கும். குறுகலான, பாலங்கள், இடிந்து விழுந்தப் பாலங்கள், வாகனங்கள் சென்று கொண்டிருக்கும் தொங்குப் பாலங்கள் என இவை எல்லாம் இந்த வகைப் புகைப்படத்திற்கு உகந்தவையே.




செட்டி நாடு வீடு போன்ற இடங்களில், அங்கு அமைந்திருக்கும் அழகான வேலைப்பாடுகளை மேக்ரோ/க்ளோசப் எடுத்தால் அழகாய் இருக்கும். பழைய வீடுகளில் ஜன்னல், கதவு என எல்லாவற்றிலும் நல்ல வேலைப்பாடுகள் இருக்கும். தவற விடாதீர்கள்.




பகல் நேரத்தில் எடுப்பது போலவே, இரவு வெளிச்சத்தில் ( நிலா? அல்லது ஒளியூட்டப்பட்ட மாளிகைகள் ?) கட்டிடங்களை எடுக்கலாம். ஆனால் இவற்றிற்கு நிறைய பொறுமைத் தேவை. சற்று அவசரப் பட்டாலும் அழகு குறைந்து அலங்கோலமாகும் அபாயம் உண்டு.



பாதி இருட்டும், பாதி வெளிச்சமும் இருக்கும் சில இடங்களில் , உதாரணத்திற்கு நீண்ட ஹால் என்று வைத்துக் கொள்வோம் அப்போது படம் எடுக்கையில் ஏதோ ஒரு மூலை தான் சரியாக வரும். அதற்காக கவலைப் பட வேண்டாம். இருக்கவே இருக்கிறது HDR மெத்தேட். இது பற்றி சர்வேசன் ஏற்கனவே விளக்கி இருக்கிறார் இங்கே !



என்ன எல்லாம் படிச்சிட்டீங்களா, வழக்கமா சொல்றது தான். இவை எல்லாம் எங்களின் ஆலோசனை மட்டுமே . உங்கள் கற்பனைத் திறனை தறிகெட்டு ஓட விட்டால் வெகு அழகானப் புகைப் படங்கள் கிடைக்கும் என்பதில் சந்தேகமென்ன ?

உங்களுக்கு இதைப் பற்றி மேலும் தெரிந்தால் பின்னூட்டத்தில் பதிலிடவும்.
வந்தனம்!

மெகா போட்டி, ஏன், எதுக்கு, எப்படி நடத்தறோங்கர விவரங்கள் உங்களுக்கு ஏற்கனவே தெரிஞ்சிருக்கும்.
தெரியாதவங்க, அறிவிப்பு பதிவையும், முதல் சுற்றில் தேறியவர்களின் விவரங்களையும் படிச்சுத் தெரிஞ்சுக்கங்க.

இனி, இந்த மெகாப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கான தலைப்பையும், விதிமுறைகளையும், படங்கள் அனுப்பும் முறை எல்லாம் பாப்பமா?

அதுக்கு முன்னாடி, ஒரு சின்ன விளக்கம்.
முதல் சுற்றின் போட்டியில் இடம்பெற்ற 45 படங்களில், பதினோறு படத்தை அடுத்த சுற்றுக்கு அனுப்புகிறோம்னு உங்களுக்குத் தெரியும்.
நேரமின்மை காரணத்தால், எல்லா படங்களுக்கும் விமர்சனங்கள் சொல்ல முடிவதில்லை என்றும் அங்கே சொல்லியிருந்தேன். தேறிய பதினோரு படத்துக்கான விமர்சனத்தை படித்திருப்பீர்கள்.
நடுவர்கள் கூறும் விமர்சனம் படங்களை மெறுகேற்ற உதவும் என்பதில் உண்மையிருந்தாலும், இது ஒரு கூட்டு முயற்சி என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.
போட்டிக்கு அனுப்பப்படும் படம் பற்றிய கருத்தை, அனைவரும் முடிந்தவரை போட்டியாளருக்கு, உடனுக்குடன் தெரியப் படுத்தவேண்டும்.
ஒரு படத்தை பற்றிக் கருத்துக் கூற, "புகைப்பட வித்வானாக" இருக்கணும்னு அவசியம் கிடையாது.
யார் வேண்டுமானாலும், தங்கள் மனதில் பட்டதை உடனே தெரிவிக்கலாம். தெரிவிக்கணும்!
அப்பதான், எல்லோரும் (நடுவர்கள் உட்பட) இந்தக் கலையில் அடுத்த கட்டத்துக்கு நகர முடியும்.
PiT குழுவில் இருப்போர்கள் யாரும், தங்களை 'வித்வானாக' நினைக்கவில்லை. நாங்களும், இந்தப் புகைப்படத் துறையைப் பொறுத்தவரை, சாமான்யர்கள் தான். We are just co-ordinators :).
ஸோ, வாங்க, எல்லாரும் சேந்து, சக பயணிகளை, விமர்சித்து, திருத்தி, கைதட்டி, அடுத்த கட்டத்துக்கு அனுப்புவோம் ;)


சரி, இறுதிச் சுற்றுக்கு ரெடியாகுவோமா?

முக்கியமான விஷயம்: முதல் சுற்றில் தேறிய பதினோறு பதிவர்களும், PiTன் முதல் வருட வெற்றியாளர்களும் மட்டுமே, இறுதிச் சுற்றுக்கு படங்கள் அனுப்ப முடியும்.
அதாவது, இவங்களும் (கடந்தகால வெற்றியாளர்கள்)
MQN ,peeveeads ,Sathiya ,Srikanth ,அமல் ,ஆதி ,இம்சை ,இளவஞ்சி ,உண்மை ,ஒப்பாரி ,கார்த்திகேயன் ,குட்டிபாலு ,கைப்புள்ள ,கோமா ,கௌசிகன் ,சத்யா ,சிவசங்கரி ,சுந்தர் ,தீபா ,நந்து ,நாதன் ,நாதஸ் ,நிலாக்காலம் ,நெல்லை சிவா ,பாபு ,பாரிஸ் திவா ,பிரபாகரன் ,பிரியா ,யாத்ரீகன் ,லக்ஷ்மணராஜா ,வாசி ,விழியன் ,ஜவஹர் ,ஜெயகாந்தன் ,ஸ்ரீகாந்த் ,ஷிஜு

இவங்களும் (முதல் சுற்று வின்னர்ஸ்)
இலவசக் கொத்தனார், Sathanga, Mazhai Shreya, Parisalkaran, T Jay, Iravu Kavi, Ramalakshmi ,Jagadeesan, Gregory Corbesier, Surya, Raam

போட்டிக்கான தலைப்பு: Architecture / கட்டமைப்பு. வெறும் கட்டடக் கலை மட்டுமல்லாது, ஒரு artificial man-made கட்டமைப்பு எங்கெல்லாம் தென்படுகிறதோ, அதை படமெடுத்து போட்டிக்கு அனுப்பலாம். இயன்றவரை, புதுசா புடிச்சு அனுப்புங்க.
உ.ம்: பீஜிங் ஒலிம்ப்பிக் ஸ்டேடியமும் அனுப்பலாம், ஒரு மரக் கதவையும் அனுப்பலாம்.

சில மாதிரிகள் இங்கே: (படங்களை க்ளிக்கி பெரிதாய் பார்க்கலாம்)




படங்கள் அனுப்பப்பட வேண்டிய கடைசித் தேதி: செப்டெம்பர் 15 2008

இம்முறை, PiT co-ordinatorsம் (Deepa, CVR, சர்வேசன், An&, Jeeves), வாசகர்களும் இணைந்து வெற்றிப் படத்தை தேர்தெடுப்போம். அது எப்படிங்கரத செப்டெம்பர் 16 அன்னிக்கு பாப்போம்.

பரிசு: மெகா போட்டியாச்சே பரிசில்லாமலா? ரூ.3500 மொத்தப் பரிசுத்தொகை.
முதல் பரிசு: ரூ 2000, இரண்டு: ரூ 1000, மூன்று: ரூ 500.

ஸ்பான்ஸர்ஸ்: CVR (ரூ1000), மதுமிதா (ரூ1000), நிஜமா நல்லவன் (ரூ1000), ஜீவ்ஸ் (ரூ500). (நன்றி ஸ்பான்ஸர்ஸ் :) )

படம் அனுப்புவது எப்படி?:
கீழே உள்ள ஃபார்ம் உபயோகித்து, உங்கள் படத்தை அனுப்புங்கள்.
ஃபார்ம் மூலம் அனுப்பப்படும் படங்கள் மட்டுமே போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
ஒருவர், ஒரு படம் மட்டுமே அனுப்ப வேண்டும்.

--FORM REMOVED--

படத்தை போட்டிக்கு அனுப்பியாச்சா? சரியா இருக்கான்னு இங்க அமுக்கி சரிபாருங்க. நன்றி!

தவறிருந்தால், பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்.

வேறென்னங்க?

'கட்டடம்' கட்டலாம்ல? கட்டி அனுப்புங்க.

மேலே சொன்ன மாதிரி, அனைவரும், போட்டிக்கு வரும் படங்களுக்கு உடனுக்குடன் உங்களின் எண்ணத்தில் எழும் பாராட்டையும், கேள்விகளையும், திருத்தங்களையும், தவறுகளையும் சுட்டிக்காட்டத் தவறாதீர்கள்.

லைட்ஸ் ஆன்!

-சர்வேசன்

படங்கள் இதுவரை:
இங்கே க்ளிக்கி காண்க

Saturday, August 23, 2008

முதல் சுற்றில் வெற்றி பெற்ற பதினோறு படங்களுக்கு, நடுவர்களின், ஒரு சில கருத்துக்கள்!

(PiT குழுவினரின், ஆணி பிடுங்குதல் என்ற பெருஞ்சாபத்தால், எல்லா படங்களுக்கும் கருத்துப் பகிர்வை அளிக்க முடியாமல் போவதர்க்கு எங்களின் வருத்தங்கள். ;) )

இனி வருவது, நடுவர்களின் கருத்துக்கள்.

(in no particular order)

1) இலவசக் கொத்தனார் (பூமியா? மார்ஸான்னு scientificஆ யோசிச்சா, மனுஷன் வீட்டுக்குள்ள எதையோ ஓரு கொட்டையை மல்லாக்கப் போட்டு படம் எடுத்திருக்காரு. கலக்கல். :) )
மாயாஜாலம் காட்டியுள்ளார் கொத்ஸ்.
க்ரியேடிவ் ஷாட் வித்தியாசமான சிந்தனை.
அருமையான படைப்பு.


2) Sathanga (கலைக் கண்ணோட எடுத்திருக்காங்க)
நல்ல ஃப்ரேமிங்
படம் எடுத்த கோணம் - ரசிக்கத்தக்தக்கது
இந்த பொருளை, வேற எப்படி எடுக்கரதுன்னு சொல்லத் தெரியல, ஆனா, மேலெழுந்த கம்பி, படத்தை விட்டு வெளியே செல்வது போல் இருப்பதால், சின்ன கவனச் சிதறல் வருதோ?


3) Mazhai Shreya (பொறுமையின் எடுத்துக்காட்டு)
ரொம்ப கஷ்டப்பட்டு எடுத்திருக்காங்க. குட் வர்க்!
ஏற்கனவே அவங்க ப்ளாக்குல சொன்னது போல ரொம்ப உழைச்சிருக்காங்க. ஹாட்ஸ் ஆஃப். முயற்சி திருவினையாகி இருக்கு.
100 க்கும் மேலே எடுத்ததில் இது தான் தேறிச்சுன்னு சொல்லியுருக்காங்க - சித்திரம் மட்டுமில்லை- புகைப்படக்கலையும் பழகப்பழகத்தான் நுணுக்கங்களும் , Strokes ம் வசமாகும்.. kudos !


4) Parisalkaran (இந்தப் படம் எடுக்க யாரையும் துன்புறுத்தலையே?)
கண்ணுக்குள்ளே கேமரா வைத்தேன் கண்ணம்மா ( கண்ணின் பிரதிபலிப்பில் தெரியும் விரல்கள் அயல்கிரக மனிதர்களை நினைவூட்டுகிறது )
நம்ம மூடுக்கேத்தாப்போல இந்த படத்துக்கு தலைப்பு குடுக்க வைக்கும்.. ஆழமான படைப்பு


5) T Jay (B&W எப்பவும் நச்சு!)
நல்லா வந்திருக்கு.
நிழல் முழுமையா வந்திருந்தா இன்னும் அழகா இருந்திருக்கும்
அருமை !.. கும்மிருட்டுன்னு சொல்லும்போது ஒரு காட்சி மனசுக்குள்ளே வந்துபோகும்.. இனிமே இந்த படம் தான் வரும்.


6) Iravu Kavi ( ஒடஞ்ச கட்டையும் அழகுதான், சரியான கோணத்தில் எடுத்தா)
நைஸ் ஃப்ரேமிங்
இடது மூலையிலும், மேலே வலது மூலையிலும், லேசான பிசிரை க்ராப் செய்திருக்கலாம்.


7) Ramalakshmi (ஒரு வாழ்த்து அட்டைக்குரிய சர்வ லட்சணமும் இருக்கு. )
சூரியனின் தகதகப்பு நன்றாய் வந்துள்ளது.
காலை வெயில் காலை வாராம வந்திருக்கு இருள் நீங்கி பொழுது விடியும் தருணம்னு கவித்துவமாக சொல்லுவது மாதிரி இருக்கு.. அருமை!


8) Jagadeesan (perfect click!)
நல்ல ஃப்ரேமிங்.
லீடிங் லைன் - அருமையா வொர்க் அவுட் ஆகிருக்கு
Panoramic shot - அதோட ஜன்னலை திறந்து பார்ப்பது போல் இரு உணர்வு , அருமை!


9) Gregory Corbesier (யாருங்க நீங்க? எந்த ஊரு? அசத்தியிருக்கீங்க)
கலக்கல் வெளிச்சம்/டைமிங். ஆனா, சட்டுனு பாத்ததும் திகிலாயிடுச்சு ரெண்டு கால் அந்தரத்துல பாத்ததும் :)
செம டைமிங். ஊஞ்சலில் ஆடும்போது எடுத்ததா ? இல்லை உயரத்தில் எகிறி குதிக்கறப்போ எடுத்ததா ?
என்னனு சொல்ல.. ஒரே க்ளிக்கில் multiple shots எடுக்குமே.. அந்த மாதிரி ஏதாவது செட்டிங்க்ஸ் பண்ணினீங்களா ??


10) Surya ( magical. மரத்தை சுற்றிய நிழல், படத்துக்கு அழகை கூட்டுது. பக்கா ஃப்ரேமிங்! )
அட்டகாசமா வந்திருக்கு. குறிப்பா இலைகளின் ஓரத்தில் தெரியும் இருள்.
நல்லா இருக்கு. இன்னமும் கொஞ்சம் க்ளோசப் ல போயி எடுத்திருக்கலாமோ ? ஆங்கிள் கொஞ்சம் மாத்தி எடுத்திருக்கலாம். மறுபடி அதையே வேறு ஆங்கிள் இன்னும் க்ளோசப்ல எடுத்துப் பாருங்க. நல்ல வித்தியாசமா அழகா இருக்கும்
அருமை ! அண்ணார்ந்து பார்த்தேன் !


11) Raam (அய்யனாரைப் பத்தி என்ன சொல்றது? போஸ்ட் கார்ட் finish. வெள்ளையா இருக்கர பொருளை கச்சிதமா எடுத்திருக்காரு. அருமை)
அய்யனார் பளிச்னு வந்திருக்காரு.
கட்டம் கட்டியதும் நல்லாருக்கு.
கொஞ்சம் லேசா திரும்பின மாதிரி எடுத்திருக்கலாம். அருமை!

Friday, August 22, 2008

வணக்கம் நண்பர்களே. வாழ்க்கைல எது முன்னேறுதோ இல்லியோ, நேரம் மட்டும் சிரிதும் தாமதிக்காமல் ஓடிக்கிட்டே இருக்கு.
வயசு ஆக ஆக, ஒவ்வொரு நாளும், வாரமும், மாசமும் உஸைன் போல்ட்டு மாதிரி பிச்சுக்கிட்டு ஓடுது.

இப்பதான் PiT ஆரம்பிச்சு முதல் போட்டி நடத்தின மாதிரி இருந்தது, அதுக்குள்ள ஒரு வருஷம் ஓடிப்போயிடுச்சு.
இந்த மெகா போட்டி அறிவிப்பும் நேத்து நடந்த மாதிரி இருக்கு, அதுக்குள்ள 45 பேர் க்ளிக்கித் தள்ளி முதல் சுற்றுக்கு படங்கள் அனுப்பி முடிச்சுட்டாங்க.

கடந்த மாதங்கள் போலல்லாமல், மெகாப் போட்டியின் இந்தச் சுற்றுக்கு, செலக்க்ஷன் கமிட்டியில், An&, Deepa, CVR, Jeeves மற்றும் சர்வேசனாகிய நான், என்ற ஐவர் குழு இணைந்து முதல் சுற்றின் பத்துப் படங்களை தேர்ந்தெடுத்திருக்கிறோம்.

முன்னமே சொன்ன மாதிரி, PiTன் முதலாண்டு நிறைவை ஒட்டி, இந்த முறை மெகா போட்டி நடக்கிறது.
இதுவரை நடந்த போட்டிகளில் வெற்றி பெறாதவர்கள், இந்த மாதப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார்கள். இதில் வெற்றி பெற்றவர்கள், அடுத்த போட்டியில், கடந்த போட்டிகளின் வெற்றியாளர்களுடன், களத்தில் இறங்குவார்கள்.

பத்து பேரை தேர்ந்தெடுக்க முனைந்ததில், சில படங்கள், ஒரே 'மதிப்பெண்கள்' பெற்ற நிலையில், பதினோறு படத்தை அடுத்த கட்டத்துக்கு அனுப்புகிறோம்.

அடுத்த போட்டியைப் பற்றிய அறிவிப்பு, திங்களன்று வெளியாகும்.
'கட்டடம்' கட்ட ரெடியாகுங்கள், மக்களே!

இனி, கீழே வருவது, முதல் சுற்றிலிருந்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறும், பதினோறு முத்துக்கள்!!!

(in no particular order)

1) இலவசக் கொத்தனார் (பூமியா? மார்ஸான்னு scientificஆ யோசிச்சா, மனுஷன் வீட்டுக்குள்ள எதையோ ஓரு கொட்டையை மல்லாக்கப் போட்டு படம் எடுத்திருக்காரு. கலக்கல். :) )


2) Sathanga (கலைக் கண்ணோட எடுத்திருக்காங்க)


3) Mazhai Shreya (பொறுமையின் எடுத்துக்காட்டு)


4) Parisalkaran (இந்தப் படம் எடுக்க யாரையும் துன்புறுத்தலையே?)


5) T Jay (B&W எப்பவும் நச்சு!)


6) Iravu Kavi ( ஒடஞ்ச கட்டையும் அழகுதான், சரியான கோணத்தில் எடுத்தா)


7) Ramalakshmi (ஒரு வாழ்த்து அட்டைக்குரிய சர்வ லட்சணமும் இருக்கு. )


8) Jagadeesan (perfect click!)


9) Gregory Corbesier (யாருங்க நீங்க? எந்த ஊரு? அசத்தியிருக்கீங்க)


10) Surya ( magical. மரத்தை சுற்றிய நிழல், படத்துக்கு அழகை கூட்டுது. பக்கா ஃப்ரேமிங்! )


11) Raam (அய்யனாரைப் பத்தி என்ன சொல்றது? போஸ்ட் கார்ட் finish. வெள்ளையா இருக்கர பொருளை கச்சிதமா எடுத்திருக்காரு. அருமை)


முன்னேறிய அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.
பங்கு பெற்று சிறப்பித்த அனைவருக்கும் நன்றி! நன்றி! நன்றி!

அனைவரும், புகைப்படங்கள் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிரவும்.

அனைத்து படங்களையும் காண இங்கே சொடுக்கலாம்.

வர்டா,

-சர்வேசன்!

Thursday, August 21, 2008

இணையத்தில் இலசமாக Photoshop க்கு என நீட்சிகள் (Plugins) பல கொட்டிக்கிடக்கின்றன. அவற்றை எல்லாம் எப்படி கிம்பில் உபயோகிப்பது எப்படி ?

கிம்பை மூடி விடுங்கள். முதலில் நமக்கு தேவை PSPI.EXE என்ற மென்பொருள். இதை இங்கே இருந்து தரவிறக்கிகொள்ளலாம்.
( படத்தை கிளிக்கினால் பெரிதாக பார்க்கலாம்.)




பின் pspi.exe கீழ்கண்ட GIMP ன் நீட்சி (plugins) பகுதிக்கு நகலெடுத்துக் கொள்ளுங்கள்.
(c:\Program Files\GIMP-2.0\lib\gimp\2.0\plugins)



அதே பகுதியில் போட்டோஷாப்பின் நீட்சிகள்(plugins) சேகரித்து வைத்துக் கொள்வதற்காக ஒரு புதிய அடைவு(directory) உருவாக்கிக் கொள்ளுங்கள்.

உதாரணதிற்க்கு நான் photoshop-lugins என்ற பெயரில் உருவாக்கி கொண்டேன்.



கிம்பை திறவுங்கள். Xtns-> photoshop plugin settings இந்த பகுதியில் நாம் புதியாய் ஆரம்பித்த அடைவு(directory) தெரிவிக்க வேண்டும்.




படத்தில் குறிப்பிட்ட படி, ஒரு புதிய பாதையை உருவாக்க, 1 என்று குறிப்பிட பட்டுள்ள பொத்தானை முதலில் அமுக்கி, இரண்டு என்று குறிக்கப்பட்டுள்ள பொத்தானை அமுக்கினால், நமக்கு தேவையான இடத்தை தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம்.



பாதையை சரியாக தேர்ந்து எடுத்தப்பின் இந்த பாதை இங்கே தெரியவேண்டும்.



கிம்பை மூடிவிடுங்கள்.
இனி நமக்குத் தேவையான இலவச photoshop plugin தேட வேண்டும்.

நான் அதிகம் உபயோக்கிக்கும் ஒரு நீட்சி(plugin), Virtual Photographer. அதை இங்கே தரவிறக்கிகொள்ளலாம்.



அதை நாம் ஏற்கனவே உருவாக்கிய photoshop plugin அடைவு (directory)-க்கு நகலெடுத்துக் கொள்ளுங்கள்.



கிம்பை மூடி, மீண்டும் திறந்த வுடன், Filters பகுதியில் நாம் இப்போது நிறுவிய நீட்சி(plugin) தெரிய வேண்டும்.



அப்புறமென்ன, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான்.
புதிய நீட்சி(plugin) னோடு விளையாடி, படத்தை அடுத்த PiT போட்டிக்கு அனுப்புங்க, பரிசை வெல்லுங்க...



இது போல எந்த ஒரு நீட்சி (plugin) ( *.8bf)யையும் நீங்கள் நிறுவிக்கொள்ள முடியும்.


(Plugin, Directory ...
இதுக்கெல்லாம் சரியான தமிழ் வார்த்தை தெரிந்தால் சொல்லுங்கள். இடுகையில் மாற்றம் செய்துவிடுகிறேன். )
 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff