Showing posts with label Exposure modes. Show all posts
Showing posts with label Exposure modes. Show all posts

Tuesday, September 30, 2008

HDR பற்றி ஏற்கனவே இங்கு படித்து இருப்பீர்கள். பல வெளிச்ச நிலைகளுக்கு ஏறப படங்கள் எடுத்து அதை ஒன்றாக இணைக்க, Tufuse, Photomatix போன்ற பல மென்பொருட்கள் ஏற்கனவே இருக்கின்றன. எளிதாக, இதை கிம்பில் செய்வது பற்றி ஒரு சிறிய முயற்சி.


முதல் படத்தில் , கோயில் நன்றாக வந்து இருக்கு, ஆனால் வானம் வெளுத்து விட்டது.


இதில் வானம் நல்ல நீல நிறத்துடன் இருந்தாலும், கோயில் இருண்டு விட்டது. இதை இரண்டையும் இணைப்பது எப்படி.





முதலில் இரண்டு படத்தையும் ஒன்றன்பின்



ஒன்றாக கிம்பில் திறவுங்கள்.



நீல வானப் படத்தை முழுவதுமாக தேர்ந்து எடுத்து நகலெடுத்துக் கொள்ளுங்கள் ( Ctrl+A, Ctrl+C )



இனி இந்தப் படம் தேவையில்லை. வேண்டுமானால் மூடிவிடலாம்.

வெளிர் வானப்படத்தில் ஒரு புதிய லேயரை உருவாக்குங்கள்.





ஏற்கனவே நகலெடுத்தப் படத்தை இங்கு சேர்த்துவிடுங்கள் ( Ctrl + V).



நங்கூரத்தை அமுக்கியவுடன்., இது போன்று இரண்டு லேயர்கள் தெரிய வேண்டும்.



இனிதான் ஆட்டம் ஆரம்பம்.

படத்தில் குறிப்பிட்ட படி, மேலே இருக்கும் லேயரை தெரிவு செய்து, எலிக்குட்டியின் வலது பொத்தானை அமுக்கி,



லேயர மாஸ்க் உருவாக்கிக் கொள்ளுங்கள்.







அவ்வளவுதான், முடிந்தது வேலை. நீல வானம் , வெளிர் வானத்தை நிரப்பி இருக்கும்.

இதற்க்கு மேல் உங்களுக்குத் தேவையான, வழக்கமான பிற்சேர்ப்பு வேலைகளை செய்துக் கொள்ளலாம்.
(பி.கு. இது உண்மையான அல்ல. ஏன் என்று , அடுத்த இடுகையில் பார்ப்போம்.)

Tuesday, April 15, 2008

முதல் பகுதி இங்கே...

ஒரு கேமராவில் உள்வரும் ஒளியின் அளவு(திறப்பளவு-exposure) போதுமானதா என்பதை நாம் எப்படி அறிந்துக்கொள்வது???

ஒளி அதிகமாகிவிட்டால் ,படம் ஓவர் எக்ஸ்போஸ்ட்(overexposed) ஆகி வெளிரிப்போய்விடும்,அதே ஒளி கம்மியாக இருந்தால் படம் அண்டர் எக்ஸ்போஸ்ட்(underexposed) ஆகி படம் இருண்டுபோய்விடும்!


உங்கள் வ்யூ ஃபைண்டர்(viewfinder) அல்லது LCD திரையின் கீழே ஒரு விதமான அளவுகோள் ஒன்று இருக்கிறதே கவனித்தீர்களா???
பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பித்து ஒரு பங்குக்கு மூன்று புள்ளிகள் எனும் அளவுகளில்,பூஜ்ஜியத்திற்கு அதிகமாகவும்,குறைவாகவும் (positive and negative)இரண்டு அல்லது மூன்று புள்ளிகளுக்கு இருக்கும்.

இதுதான் ஒளியை அளக்கும் அளவுகோளான லைட்மீட்டர்(Lightmeter).உங்கள் கேமராவில் பொருத்தப்பட்டிருக்கும் இந்த கருவி ஒரு காட்சியின் ஓளிக்கு எந்த அளவு திறப்பளவு வேண்டும் என்பதை உங்களுக்கு கணித்துச்சொல்லிவிடும். நீங்கள் ஆட்டோ மோடில் படம் எடுக்கும் போது இந்த லைட்மீட்டரின் கணிப்பை பொருத்து தான் கேமரா லென்ஸின் விட்டம் மற்றும் ஷட்டர் வேகத்தை தீர்மானித்துக்கொள்கிறது.நீங்கள் Manual-இல் படம் எடுக்கும் போதும் நீங்கள் தீர்மானிக்கும் லென்ஸ் விட்டம் மற்றும் ஷட்டர் வேகம் போதுமானதா என்பதை நிர்ணயம் செய்ய இந்த லைமீட்டரைதான் நம்ப வேண்டும்.போன பகுதியில்,பாடத்தின் மிக முக்கியமான விஷயம் ஒன்றை சொல்லப்போகிறேன் என்று சொல்லியிருந்தேன் அல்லவா!!அந்த விஷயம் இதுதான் ... :)


சரி இந்த லைட்மீட்டர் என்னன்னு தெரிஞ்சுகிட்டாச்சு! இதை எப்படி உபயோகப்படுத்தனும்???

உங்க லைமீட்டர்ல அம்புக்குறி பூஜ்ஜியத்துல இருந்துச்சுன்னா அப்போ படம் பிடிக்க சரியான அளவு ஒளி வருதுன்னு அர்த்தம்!! ஆனா சில சமயங்களில் கேமராவின் லைட்மீட்டர் ஒளி அளவை அவ்வளவு துல்லியமாக கணக்கிடாது என்பதால் சிலர் லைட்மீட்டர் அளவை விட சற்று குறைவான ஒளியமைப்போடு படம் எடுப்பார்கள்!! அதை பற்றி பிறகு பார்த்துக்கொள்ளலாம்,ஆனால் இப்போது அதை குழப்பிக்கொள்ள வேண்டாம்.

சரி! உங்கள் கேமராவை Av மோடில் பொருத்திக்கொண்டு கேமராவின் குறைந்தபட்ச f-நம்பர்(அதிகபட்ச லென்ஸ் விட்டம்) செட் செய்துவிட்டீர்களா?

உங்கள் கேமரா, ஷட்டரின் வேகத்தை எவ்வளவு நிர்ணயித்துள்ளது என்று கவனியுங்கள்.அது ஒவ்வொருவரின் காட்சியை பொருத்தது.பொதுவாக 1/60 நொடிகளுக்கு மேல் ஷட்டரின் வேகம் இருந்தால், அவை handheld -இல் எடுத்தால் படம் அதிர்வுக்குள்ளாகும் என்று சொல்லுவார்கள். கேமராவை முக்காலியில் பொருத்தியாகிவிட்டது அல்லவா??முக்காலி இல்லாதவர்கள் தட்டையான மற்றும் கடினமான பரப்பில் கேமராவை வைத்துக்கொள்ளுங்கள்.

இப்பொழுது கேமராவை டைமரில் போட்டுவிட்டு ஒரு படத்தை எடுத்துக்கொள்ளுங்கள்(டைமரில் போட்டால் படத்தை க்ளிக்கும் போது ஏற்படக்கூடிய அதிர்வுகளை தவிர்க்கலாம்).

இப்படி அதிகபட்சமான லென்ஸ் விட்டத்துடன் என் கேமராவில் எடுக்கப்பட்ட படம் கீழே .



பாத்தீர்களா!! படத்தில் நடுவில் பேனாவில் மட்டும் நல்ல தெளிவான ஃபோகஸ் உள்ளது.பின்னால் இருக்கும் தொலைபேசி மற்றும் முன்னால் இருக்கும் லென்ஸ் மூடி இவை சற்றே மங்கலாக காட்சியளிக்கிறது.

என்ன படம் எடுத்தாச்சா???

வாழ்த்துக்கள்!! உங்கள் கேமராவில் முதல் manual படத்தை எடுத்துவிட்டீர்கள்!! படம் எப்படி இருந்தாலும்,உங்கள் பதிவில் போட்டி சுட்டியை பின்னூட்டத்தில் அறிவிக்கலாமே!! ;)


சரி!! இப்பொழுது குறைந்த பட்ச லென்ஸ் விட்டத்தோடு ஒரு படம் எடுத்துப்பார்ப்போம்.

இப்பொழுது உங்கள் கேமராவின் இருப்புநிலையில்(position) மாற்றங்கள் எதுவும் செய்யாமல் உங்கள் லென்ஸ் விட்டத்தின் அளவை மட்டும் குறைத்துக்கொள்ளுங்கள்.அதாவது உங்கள் fநம்பரை கூட்டிக்கொள்ளுங்கள்.அதை எப்படி செய்ய வேண்டும் என்பது ஒவ்வொரு கேமராவிற்கு மாறுபடும்.என் கேனான் கேமராவை பொருத்தவரை ஷ்ட்டர் பொத்தானின் பக்கத்தில் உள்ள ஒரு டயலை திருகினால் fநம்பரை மாற்றிக்கொள்ளலாம்.
எவ்வளவு அதிகப்படுத்துவது???

நீங்கள் Av மோடில் இருப்பதால்,நீங்கள் உங்கள் லென்ஸின் விட்டத்தை குறைக்க குறைக்க,அதற்கேற்றார்போல் சரியான அளவு ஒளியை தக்க வைக்க ஷட்டரின் வேகத்தை உங்கள் கேமரா குறைத்துக்கொண்டே செல்லும்.

ஒவ்வொரு கேமராவிலும் குறைந்த பட்ச ஷட்டர் வேகம் என்று ஒன்று உண்டு.என்னுடைய கேமராவில் அது 30 வினாடிகள்.அதற்கு மேல் ஷட்டரின் வேகம் அமையுமாறு நான் லென்ஸின் விட்டத்தை குறைத்தால் அப்போது திரையில் தெரியும் அளவுகள் விட்டு விட்டு எரிய ஆரம்பிக்கும்!! இப்படி விட்டு விட்டு எரிந்தால் கேமராவின் எல்லைக்கு மேல் அளவுகளை நான் செட் செய்ய முயல்கிறேன் என்று பொருள்.அதுவுமில்லாமல் நீங்கள் சரியான திறப்பளவிற்கு மேலோ கீழோ அளவுகளை நிர்ணயம் செய்தால் உங்கள் லைட்மீட்டர் பூஜ்ஜியத்திற்கு மேலோ கீழோ சென்றுவிடும்.அதனால் சரியான திறப்பளவு உள்ளதா என்பதை நீங்கள் லைட்மீட்டரை கவனித்தாலே தெரிந்துவிடும்.


இப்படி நான் லென்ஸின் விட்டத்தை குறைத்துக்கொண்டே போக (fநம்பர் ஏற்றிக்கொண்டே போக) எனது குறைந்த பட்ச ஷட்டர் வேகமான 30 வினாடிகள் வரும்போது இருந்த லென்ஸ் விட்டம் f14.
இந்த அளவில் எடுத்த படம் கீழே.



இந்த படத்தில் மேலே இருந்த படத்தைவிட தொலைபேசி நல்ல தெளிவாக இருப்பதை பாருங்கள்.நடுவில் உள்ள பேனா மட்டுமல்லாது சற்றே முன்னே பின்னே உள்ள பொருட்கள் கூட ஃபோகஸில் இருப்பது ,லென்ஸின் விட்டம் குறைவாக உள்ளதனால் தான்.
இப்பொழுது Av மோடில் படம் எடுப்பது எப்படி என்று பார்த்துவிட்டோம்.
Tv மோடில் இதே போன்று ஷட்டரின் வேகத்தை மட்டும் மாற்றிவிட்டால் லென்ஸின் விட்டத்தை கேமராவே தீர்மானித்துக்கொள்ளும்.
முழுமையான Manual மோடில் லென்ஸின் விட்டம்,ஷட்டரின் வேகம் ஆகிய இரண்டையும் நாமே மாற்றிக்கொண்டு படம் எடுக்கலாம்.

இது வரை படித்துப்பார்த்து ஆற அமர முயற்சி செய்து பாருங்கள்!!! இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.உங்களின் புரிதலைப்பொருத்து Tv,Manual மோட்களுக்கு பதிவு தேவையா என்று பார்க்கலாம்!!

வரட்டா?? :)

நன்றி:
Exposure compensation picture from
http://www.cameras.co.uk/cameraimages/canon-powershot-a510-exposure-compensation.jpg
போன பதிவுல உங்களின் கேமராவில் வெவ்வேறு மோட்கள் பற்றி அறிந்துக்கொண்டோம் அல்லவா! இந்தப்பதிவில் அந்த மோட்களில் படம் பிடிக்க ஆரம்பிக்கலாம் வரீங்களா??
போன பதிவை படிக்காதவங்க,அதை ஒரு சுத்து படிச்சிட்டு வந்துடறது நல்லது.
Manual என்று நான் இங்கு குறிப்பிடுவது, லென்ஸ் விட்டம் அல்லது ஷட்டர் வேகம் அல்லது இரண்டையுமே நாமே தீர்மானித்து படம் எடுக்கும் முறையை சொல்கிறேன்.
முதலில் ஆட்டோ மோடை விட்டு விட்டு Av,Tv,M ஆகிய மோட்களில் படம் பிடிப்பதால் என்ன பயன் என்று தெரிந்துக்கொள்வோம்.
ஆட்டோ மோடில் கேமரா தனக்கு ஏற்றார்போல் எல்லா அளவுகளையும் நிர்ணயித்துக்கொள்ளும் என்பதால் நமக்கு வேண்டியபடி படம் எடுக்க வேண்டும் என்றால் அது சரிப்பட்டு வராது.உதாரணத்திற்கு உங்கள் படத்தில் மிகக்குறைந்த DOF-உடன் (shallow Depth Of Field) உங்கள் கருப்பொருள் தனித்து நிற்பது போன்ற படம் வேண்டும் என்றால்,அதற்கு நீங்கள் உங்கள் லென்ஸின் அதிக பட்ச விட்ட அளவை உபயோகித்துக்கொள்ள விரும்புவீர்கள்.
Lesser f number = wider aperture = shallow DOF
குறைந்த f நம்பர் = அதிக லென்ஸ் விட்டம் = குறைவான குவிய ஆழம்
ஆனால் ஆட்டோ மோடில் படம் எடுத்தால் உங்கள் இஷ்டப்படி உங்களால் லென்ஸின் விட்டத்தை நிர்ணயித்துக்கொள்ள இயலாது!! இது போன்று, நீங்கள் படம் எடுக்கும்போது உங்களுக்கு முழு சுதந்திரம் வேண்டுமென்றால் நீங்கள் Av,Tv,M ஆகிய மோட்களில் படம் எடுக்க பழகிக்கொள்வது நல்லது.
இது கற்பதற்கும் சுலபம்தான்,கூடவே சுவாரஸ்யமான விஷயமும் கூட. சிலருக்கு Manual என்ற பெயரை கேட்டாலே சற்றே தலை சுற்ற ஆரம்பித்து விடும்! எதற்கு இவ்வளவு கஷ்டப்பட வேண்டும் ,ஒரே ஒரு பொத்தானை அழுத்தினால் முடிந்துவிடக்கூடிய விஷயத்திற்கு இவ்வளவு மெனக்கெடுவானேன் என்று விட்டு விடுவார்கள். இந்த பதிவை பார்த்து சற்றே நேரம் செலவழித்து முயன்று பாருங்களேன். சரிப்பட்டு வரவில்லை என்றால் திரும்பவும் ஆட்டோ மோடிற்கே சென்று விடலாம்.முயன்று பார்த்தால் தான் என்ன ?? இதை கற்றுக்கொண்டால் ஒரு விஷயத்தை புரிந்துக்கொண்டு செய்யும் திருப்தியாவது கிடைக்கும். என்ன நான் சொல்வது சரிதானே?? ;)

சரி!! ஆரம்பிப்பதற்கு முன் நம்மிடம் தேவையான பொருட்கள் என்னென்ன என்று பார்க்கலாமா? முதலில் வேண்டியது ஒரு கேமரா! அதில் Av,Tv,Manual ஆகிய மோட்களில் படம் எடுக்கக்கூடியதாக இருக்க வேண்டும். அதன் பின் உங்கள் கேமராவில் வெவ்வேறு அளவுகளை மாற்றிக்கொள்வது எப்படி என்று உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்!! தெரியவில்லை என்றால் உங்கள் கேமராவின் செயல்குறிப்புப்புத்தகத்தை(operation manual) எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.அது இல்லையென்றால் இணையத்தில் தேடிப்பிடித்தாலும் சரிதான்.
அப்புறம் உங்களிடம் முக்காலி(ட்ரைபாட்) இருந்தால் ஷட்டர் வேகம் குறைவாக உள்ள படங்கள் எடுக்க வசதியாக இருக்கும். அது இல்லையேல் உங்கள் கேமராவை ஏதாவது தட்டையான மற்றும் கடினமான ஒரு பரப்பில் இருத்திக்கொள்ளுங்கள்.
நீங்கள் கேமராவை பொருத்தும் இடம் உங்கள் கருப்பொருளை படம் பிடிக்க வாட்டமாக இருக்க வேண்டும் என்பதை மறக்க வேண்டாம் ஏற்பாடுகள் எல்லாம் ஆகிவிட்டதா??? சரி இப்போ Manual-இல் படம் எடுக்கலாம் வாங்க.
முதலில் நாம் எடுக்கப்போவது Av மோடில்! போன பதில் குறிப்பிட்டது போல இந்த மோடில் லென்ஸின் விட்டத்தை நாம் தேர்ந்தெடுத்துக்கொள்ள அதற்கேற்ப ஷட்டரின் வேகத்தை கேமராவே தீர்மானித்துக்கொள்ளும். முதலில் இந்த படப்பிடிப்புக்கு தேவையான கருப்பொருளை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். அது என்ன தனியா தேர்ந்தெடுத்துக்கிட்டு?? ஏதோ கண்ணுல மாட்டுனத கப்புனு புடிக்க வேண்டியதுதானே அப்படின்னு கேக்கறீங்களா?? நம்மளோட இன்றைய பாடத்தின் பலனை சுலபமாக புரிந்துக்கொள்ள DOF நிறையவே மாறுபடும் கருப்பொருள் கிடைத்தால் நன்று.
அதாவது உங்கள் கருப்பொருளின் முன்னாலேயும் பின்னாலேயும் பொருட்கள் இருந்தால் ,லென்ஸ் விட்டத்தின் மாறுபாடுகளினால், அவற்றின் மேல் கேமராவின் ஃபோகஸ் எந்த அளவு மாறுபடுகிறது என்பதை புரிந்துக்கொள்ள வசதியாக இருக்கும். உதாரணத்திற்கு ஒரு மேஜையின் மேல் மூன்று பொருட்கள் இருப்பது போன்று தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். அப்பொழுதுதான் அந்த பொருட்களில் நடுவில் உள்ள பொருள் மட்டும் தெளிவாக தெரிவது போல ஒரு படம் ,அந்த பொருட்கள் மூன்றுமே தெளிவாக உள்ளது போன்ற படம் என்று மாற்றி மாற்றி எடுத்து லென்ஸ் விட்டத்தின் மகத்துவத்தை பற்றி அறிந்துக்கொள்ளலாம்.
சரி! உங்கள் கருப்பொருளை முடிவு செய்துக்கொண்ட பின்,உங்கள் கேமராவை அதற்கேற்ப பொருத்திவிட்டு,கேமராவின் மோடை Av-கு மாற்றிக்கொள்ளுங்கள். பின்னர் உங்கள் லென்ஸின் விட்டத்தை முடிந்தவரை பெரிதான அளவிற்கு செட் செய்துக்கொள்ளுங்கள்.ஒவ்வொரு லென்ஸின் அதிகபட்ச விட்ட அளவு அந்தந்த லென்ஸின் மேலேயே குறிப்பிடப்பட்டிருக்கும். என்னுடைய கிட் லென்ஸில் அதிகபட்ச விட்ட அளவு f5.6. உங்கள் லென்ஸின் குறைந்தபட்ச எஃப் நம்பர் லென்ஸின் அதிகபட்ச விட்டத்தின் அளவுகோல் என்பதை மறக்க வேண்டாம். இப்பொழுது உங்கள் ஷட்டரை லேசாக அழுத்துங்கள்! உங்கள் கருப்பொருளின் மேல் ஃபோகஸ் செட் ஆகி விடும்.நீங்கள் வைத்திருக்கும் முன்று பொருட்களில் நடுவில் உள்ள பொருளின் மீது உங்கள் கேமராவின் ஃபோகஸ் செட் ஆகுமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
உங்கள் காட்சியின் ஒளியமைப்புக்கு ஏற்றார்போல், உங்கள் கேமரா, ஷட்டரின் வேகத்தை தீர்மானித்துக்கொள்ளும்.இப்பொழுது Manual-இல் படம் பிடிக்கும் போது நாம் கவனிக்க வேண்டிய அதிமுக்கியமான விஷயத்தை பற்றி நாம் பார்க்கப்போகிறோம்
அது ரொம்ப முக்கியம் என்பதால் இந்த பகுதியில சொன்னா அதிகப்படியா போயிடும்! அதனால அதை விலாவாரியா அடுத்த பகுதியில சொல்றேன்! சரியா???
அட!! எதுக்குங்க அதுக்குள்ள கல்லை எடுக்கறீங்க?? அடுத்த பகுதியை உடனே போட்டுடறேன்!!
ஒரே பதிவா இருந்தா ரொம்ப நீளமா இருக்குமேன்னு தான் இரண்டாக பிரித்துப்போடுகிறேன்.
ஓகேவா??
இப்போ எனக்கு உத்தரவு கொடுங்க!! வரட்டா?? ;)

--தொடரும்..

Thursday, March 13, 2008

மு.கு:
இந்த பதிவில் வரும் aperture,shutter speed போன்ற கலைச்சொற்களுக்கு அர்த்தம் தெரியவில்லை என்றால் சைடுபாரில் உள்ள பதிவுகளில் பார்த்துத்தெரிந்துக்கொள்ளுங்கள்.

நமது கேமராக்களில் பார்த்தீர்கள் ஷட்டர் பொத்தானிற்கு பக்கத்திலேயே ஒரு dial பொருத்தப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள்.அதில் Av,Tv என்று வெவ்வேறு வகையான modes குறியிடப்பட்டிருக்கும்.ஆனால் நாம் அதை பற்றியெல்லாம் அவ்வளவாக கண்டுக்கொள்வது கிடையாது.எப்போதும் auto mode-இல் கேமராவை பொருத்திவிட்டு அதிலேயே எல்லா படங்களையும் எடுத்துக்கொண்டிருப்போம்.
எனக்கு தெரிந்து ஒருவர் தனது DSLR கேமராவிலும் கூட auto mode மட்டுமே பயன்படுத்தி படங்களை எடுப்பார்!!!
Auto mode பயன்படுத்துவதாக இருந்தால் அவர்களுக்கு SLR எதற்கு?? சாதாரண point and shoot கேமரா மட்டுமே போதுமே என்று நான் நினைத்துக்கொள்வேன்.
இவ்வளவு காசு கொடுத்து வாங்கிவிட்டு நம் கேமராவின் பெரும்பாலான பயன்பாடுகளை இப்படி பயன்படுத்தாமல் இருந்தால் எப்படி??
வாங்க இந்த modes ஒவ்வொன்றாக என்னவென்று பார்க்கலாம்.
கேமரா என்றாலே ஒரு துளையின் விட்டத்தையும் அது திறந்திருக்கும் நேரத்தையும் கட்டுப்படுத்தி ஒளியை சேமிக்கும் கருவி என்று சுருக்கமாக சொல்லிடவிடலாம்.இப்பொழுது வரும் எல்லா கேமராக்களிலும் கண்டமேனிக்கு பல modes இருந்தாலும் ஒளியின் அளவை நேரிடையாக கட்டுப்படுத்தும் சில அடிப்படையான modes-ஐ பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

Auto Mode:
உங்கள் கேமராவில் Auto என்றோ அல்லது ஒரு சிறிய சதுரம் கொண்டு இந்த வகை குறியிடப்பட்டிருக்கும்.பேருக்கேற்றார்போல் இந்த வகையில் அனைத்தும் கேமராவின் கையில்.துளையின் விட்டம்,ஷட்டர் வேகம்,ISO,White balance,ப்ளாஷ் உபயோகிக்கலாமா வேண்டாமா இப்படி சகலமும் கேமராவே தீர்மானித்துக்கொள்ளும்.நீங்கள் காட்சியை நோக்கி க்ளிக் செய்தால் மட்டும் போதும்.ஷட்டரை பாதி அழுத்தும்போதே காட்சியில் எவ்வளவு ஒளி இருக்கிறது என்று தீர்மானித்து அதற்கேற்றார்போன்ற அளவுகளை கேமரா தானே ஊகித்து படம் எடுத்துவிடும்.ஒளி கம்மியாக இருக்கும் பட்சத்தில் ப்ளாஷை தானாக பயன்படுத்திக்கொள்ளும்.
இந்த mode தவிர மற்ற எல்லா mode-களிலும் ISO,White balance,ப்ளாஷ் உபயோகிக்கலாமா வேண்டாமா போன்றவற்றை நீங்களே முடிவு செய்துக்கொள்ளலாம்.
நீங்கள் SLR வைத்திருக்கும் பட்சத்தில் இந்த வகையை உபயோகித்தால் SLR வைத்திருப்பதற்கே அர்த்தம் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால் ஒளியின் அளவு நமது விருப்பத்திற்கேற்க கூட்டவோ குறைக்கவோ பிரத்தியேகமாக உருவாக்கப்படுவது SLR கேமராக்கள்!! அதை வாங்கி வைத்துக்கொண்டு முழுவதுமாக தானியங்கி முறையில் உபயோகித்தால்,ஐந்து கியர் கொண்ட ஒரு காரை வாங்கிவிட்டு ஆட்டோகியரில் ஓட்டுவது போல!


Program Mode:(P)
இந்த வகையில் காட்சிக்கு ஏற்றார்போல் aperture மற்றும் ஷட்டர் வேகத்தை மட்டும் கேமரா முடிவெடுத்துக்கொள்ளும்.மற்றபடி ISO,whitebalance போன்றவற்றை நீங்களே நிர்ணயித்துக்கொள்ளலாம்.காட்சியை பார்த்து பொத்தானை பாதி அழுத்திய உடனேயே ஒளியின் அளவை கணித்து aperture மற்றும் ஷட்டர் வேகத்தை கேமராவே நிர்ணயித்து விடும். ஒளி குறைந்திருந்தால் அதற்கேற்றார்போல் ஷட்டர் வேகத்தை குறைத்துக்கொள்ளுமே தவிர ப்ளாஷ் உபயோகிக்கப்பட மாட்டாது.
முழுவதுமாக auto mode-இல் உபயோகிப்பதை விட இந்த முறை சற்றே தேவலாம். கேமரா வாங்கிவிட்டு புகைப்படக்கலையை கற்க ஆரம்பிக்கும் ஒருவர்,தொடக்கத்தில் manual mode பழக்கமாவதற்கு முன் இந்த வகையை உபயோகிக்கலாம்

Av mode:
பெரும்பாலான SLR பயனர்கள் அதிகமாக பயன்படுத்தும் வகை இது என்று சொல்லலாம்.
உங்கள் கேமராவின் aperture எனப்படும் துளையின் விட்டத்தை நீங்களே முடிவு செய்ய வேண்டும் என்று விரும்பினால் நீங்கள் இந்த வகையை பயன்படுத்தலாம்!!aperute-ஐ பொருத்தவரை அதன் அளவை பொருத்து படத்தில் பெருமளவு மாறுதல் ஏற்படும்.உதாரணத்திற்கு துளையின் விட்டம் குறைவாக இருந்தால் அப்பொழுது தூரத்தில் இருக்கும் பொருள் கூட நன்றாக தெளிவாக பதியுமாறு wider depth of field(DOF)-உடன் படம் எடுக்கப்படும்.கேமராக்களில் இருக்கும் Landscape mode-ஐ நீங்கள் தெரிவு செய்தால் இருக்கும் ஒளிக்கு ஏற்ற மிக குறிகிய துளையின் விட்டத்தை கேமரா தெரிவு செய்துக்கொள்ளும்.ஏனென்றால் அப்பொழுது தான் நீங்கள் எடுக்கும் காடு,நாடு,மேடு மலை ஆகிய எல்லாமும் சரியான தெளிவோடு கேமராவில் பதிவாகும்.
aperture-இன் விட்டம் அதிகமாக அதிகமாக கேமராவின் f-number குறைவாகிக்கொண்டே போகும் என்பதை மறக்க வேண்டாம்.
இதே போல் துளையின் விட்டம் அதிகமாக இருந்தால் காட்சியின் ஒரு சிறு தூரத்திற்கு மட்டும் focus set ஆகுமாறு DOF shallow-வாக அமைந்துவிடும்.கேமராக்களில் உள்ள portrait mode-ஐ நீங்கள் தேர்ந்தெடுத்தால் அது காட்சியின் ஒளிக்கு ஏற்ப முடிந்த வரை அதிகமான துளையின் விட்ட அளவை தெர்ந்தெடுத்துக்கொள்ளும் அப்பொழுதுதான் நீங்கள் எடுக்கும் மக்கள் பிண்ணனியில் இருந்து பிரிந்து பளிச்சென்று தெளிவாக தெரிவார்கள்.
இப்படி துளையின் விட்டத்தை மாற்றுவதால் படத்தின் போக்கே மாறிவிடும் என்பதால்,பலர் இந்த Av mode-ஐ உபயோகிக்கிறார்கள்.இந்த வகையில் துளையின் விட்டத்தை நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்,அதற்கு ஏற்ப ஷட்டரின் வேகத்தை கேமரா தேர்ந்தெடுத்துக்கொள்ளும்.







Higher fnumber - shorter aperture - wider DOF(f/13.0)

Lower fnumber - wider aperture - shallow DOF(f/1.8)

Tv Mode:
இந்த வகையில் கேமராவின் ஷட்டர் வேகத்தை நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ள,அதற்கேற்ப துளை விட்டத்தை (aperture) கேமரா கணித்துக்கொள்ளும். பல சமயங்களில் நமக்கு ஒரு சில மணித்துளிகளில் ஒரு காட்சி பதிவு செய்யவேண்டியிருக்கும்(உதாரணத்திற்கு தண்ணிர் தெரிக்கும் காட்சி,ஒரு நீச்சல் வீரர் நீரில் குதிக்கும் காட்சி போன்றவை) சில வேறு நேரங்களில் நமக்கு ஷட்டர் குறைவான வேகத்தில் இருக்க வேண்டி வரும்.(இரவில் வாகனங்கள் விட்டுச்செல்லும் ஒளியை கோடு போல படம் பிடிக்க,அருவியில் விழும் நீரை படம் பிடிக்க,இரவில் படம் பிடிக்க.... போன்றவை)
இப்படி ஷட்டர் வேகத்தை நமக்கு மாற்ற வேண்டிய சந்தர்ப்பம் வரும் நேரங்களில் இந்த வகையான mode-ஐ பயன்படுத்திக்கொள்ளலாம்.துளையின் விட்டத்தின்(aperture) அளவை கேமரா பார்த்துக்கொள்ளும்.








Faster shutter speed(1/100s) - capturing action

Slower shutter speed(30s) - Traffic trails

Manual mode:(M)
இது முழுக்க முழுக்க நாமாகவே எல்லாவற்றையும் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு வகை.இதில் ஷட்டரின் வேகம்,துளையின் விட்டம் என எல்லா அளவையும் நாமே நிர்ணயித்துக்கொள்ளலாம்.புகைப்படக்கலையின் தொடக்கநிலையில் இருக்கும் ஒருவருக்கு இந்த வகையில் படம் பிடிப்பது குழப்பத்தையும்,அயற்சியையும் தரலாம் என்பதால்,சற்றே இந்த கலையை பழகிவிட்ட பின் இதை உபயோகப்படுத்த எல்லோரும் விரும்புவார்கள்.அதிலும் படம் எடுப்பதற்கு முன் நாமே அளவுகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதால் இதை உடனடியாக படம் எடுக்க வேண்டிய சந்தர்ப்பங்களில(பறவை,மிருகம் போன்ற அசைந்துக்கொண்டிருக்கும் பொருட்கள்)் உபயோகப்படுத்த முடியாது.நல்ல ஆற அமர நேரம் இருக்கும் சமயங்களில்(அசையாத பொருட்கள்) இதனை பயன்படுத்தலாம்!!
ஆனால் நல்ல அனுபவமுள்ள புகைப்படக்கலைஞர்கள் இந்த முறையையே உபயோகிக்க விரும்புவார்கள்!!தனக்கு வேண்டியவாறு படத்தின் தன்மையை நுணுக்கமாக மாற்றியமைக்க முடியும் என்பதால் இந்த முறை அவர்களுக்கு பிடிக்கும்.பழக்கம் காரணமாக பெரிதாக நேரம் எடுத்துக்கொள்ளாமல் கண நேரத்தில் எல்லா அளவுகளையும் நிர்ணயித்து பட்டென படம் எடுத்துவிடுவார்கள்!! :-)

இப்படியாக நமது கேமராவில் வெவ்வேறு Exposure mode-கள் உள்ளன.உங்கள் கருத்துக்களையும் கேள்விகளையும் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.கலந்தாலோசிக்கலாம்.
அப்படியே நீங்கள் உங்கள் கேமராவில் வழக்கமாக எந்த mode-இல் படம் எடுப்பீர்கள் என்று பின்னூட்டத்தில் தெரிவித்து விட்டு செல்லலாமே!!
வரட்டா??? :-)


பி.கு:இது தவிர கேமராவில் auto focussing,manual focussing என்று ஒரு சங்கதி உண்டு.அதை இத்துடன் போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம்!
 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff