Showing posts with label PIT பாடம். Show all posts
Showing posts with label PIT பாடம். Show all posts

Wednesday, November 6, 2013

வணக்கம் பிட் வாசகர்களே,

இன்றைய கட்டுரையில் நாம் Camera RAWவில் கருப்பு & வெள்ளைப் படங்களை உருவாக்குவதில் எழும் சிக்கலையும் அதனை எவ்வாறு தீர்ப்பது என்பதைப் பற்றியும் சற்று விரிவாகப் பார்க்கலாம். பொதுவாகவே இன்றும் பல புகைப்படக்கலைஞர்கள் விரும்புவது கருப்பு & வெள்ளைப் படங்களைதான், காரணம் கருப்பு& வெள்ளைப் படங்களில் ஒருவித உணர்ச்சியைக் கொண்டுவர முடியும். படத்தினைக் கொண்டு ஒரு கருத்தைச் சொல்லவிரும்பும் புகைபடக்கலைஞர்களுக்கு கருப்பு & வெள்ளை படங்கள் என்றைக்கும் வரப்பிரசாதமே.

சரி RAWவில் படம்பிடிக்கும் கலைஞர்கள் தங்கள் படங்களை Basic Editing_கை Camera RAW_விலேயே செய்துகொள்வார்கள். Camera RAW வில் கருப்பு & வெள்ளை Conversion காக பெரும்பாலானவர்கள் பயன்படுத்துவது Convert to Grayscale  என்ற ஆப்ஷனைத்தான்.


Reds,Oranges,Yellows,Greens,Aquas,Blues,Purples, and Magentas என‌ தனித்தனி கலர்களையும் தனியாக கன்ட்ரோல் செய்துகொண்ட பின்னர் படத்தினை போட்டோஷாப்பிற்கு கொண்டுவந்து Final touch செய்துகொள்வார்கள். இவ்வாறாக Camera RAW வில் Convert to Grayscale  கொண்டு மாற்றப்பட்ட கருப்பு&வெள்ளை படங்களை போட்டோஷப்பில் கொண்டுவரும்போது போட்டோஷாப்பில் இருக்கும் Adjustment & New Adjustment Layerல் இருக்கும் சில ஆப்ஷன்களும் இயங்காது, அதேபோல போட்டோஷாப்பில் இருக்கும் ஒருசில பில்டர்களும் தனியாக நிறுவியிருக்கும் Plugins களும் இயங்காது.


இதற்கு காரணம் உங்களது படமானது Grayscale mode_க்கு மாற்றப்டுவதுதான்.போட்டோஷாப்பில் பெரும்பாலான Adjustmentகளும் பில்டர்களும் மற்றும் Third Party Plugins களும் RGB, மோடில் வேலை செய்யும்படியே வடிவமைக்கப்படுகிறது.

இதனை சரிசெய்ய போட்டோஷாப்பில் Image>Mode சென்று உங்களது படத்தின் Mode RGB க்கு மாற்றுங்கள்.

அவ்வளவுதான் இனி உங்களது போட்டோஷாப்பில் இயங்க மறுத்த‌ அனைத்துபில்டர்களும், Adjustment  & Third Party Pluginsகளும் மீண்டும் இயங்கும்.

நன்றி வணக்கம்
அன்புடன்,
நித்தி ஆனந்த்


Monday, October 3, 2011

பொருள் மேலே ஒளி பட்டுத் திருப்பி அனுப்பப் படறதுதான் ரிஃப்லெக்ஷன்-ன்னு பார்த்தோம். அதுக்கு மாதிரி படம் எங்கே? ஹிஹிஹி.. நாம பார்க்கிற எல்லா படங்களுமே இதுக்கு மாதிரி படங்கள்தான். இப்படி ஒளி சிதறி திருப்பி அனுப்பப்பட்டு நம் கண்களை அடையாட்டா நாம் அதைப் பார்க்கவே முடியாது. ஆக ரிஃப்லெக்ஷன் என்கிறது தினசரி எப்போதுமே நடந்துகிட்டு இருக்கிற விஷயம். ஆகவே படம் எடுக்க இது வெகுவாகவே பார்க்கப்பட வேண்டிய விஷயமும் கூட.

இது வரை ஒளி, அதன் நடத்தை ஆகியவற்றைப் பார்த்தோம். ஒளி மூலத்தின் மூன்று முக்கிய தன்மைகள் பிரகாசம், நிறம், மாறுபாடு என்று பார்த்தோம். படமெடுப்பதில் லைட்டிங் என்பதற்கு படம் எடுக்கப்படும் பொருளே வெளிச்சத்தை விட முக்கிய காரணி என்றும் பார்த்தோம். இந்த படம் எடுக்கப்படும் பொருள் ஒளியை ஊடுருவ விடலாம், உள் வாங்கலாம் அல்லது திருப்பி அனுப்பலாம் என்பதையும் பார்த்தோம். இனி மேலே இந்தக் கடைசி விஷயத்தை மேலும் கவனிக்கலாம்.

பொருள் ஒளி முழுவதையும் ஊடுருவ விட்டால் அதை பார்க்க முடியாது. அதே போல முழுக்க உள்வாங்கி விட்டாலும் பார்க்க முடியாது. இந்த இரண்டிலுமே ஒளி பொருள் மேலே பட்டு சிதறி நம் கண்களை வந்து அடையவில்லை. நல்ல காலமா இயற்கையில இந்த இரண்டு எக்ஸ்ட்ரீம்களிலும் விஷயங்கள் 100% ஆக இல்லை. பெரும்பாலும் கொஞ்சமாவது ஒளி சிதறி பொருளை நாம் பார்க்க முடிகிறது. ஆகவே இந்த ஒளிச் சிதறலை சரியாக புரிந்து கொள்வதும் மேலாளுவதுமே போட்டோகிராபில லைட்டிங் என்பதில் முக்கியமானது.

ஒரு எண்ணச் சோதனை மூலம் இதைச் சரியாக புரிஞ்சு கொள்ள முயற்சி செய்யலாம்.

ஒரு மேசை மேலே ஒரு தடிமனான வழ வழன்னு இருக்கிற சாம்பல் நிற காகிதத்தை கற்பனை செய்யுங்க. சாம்பல்(க்ரே)ன்னா இது மேலே பென்சில்ல எழுதினா தெரியணும். அதே சமயம் யாரும் அதை வெள்ளைன்னு நினைக்ககூடாது. சரியா?

உதாரணத்துக்கு இப்படி:


அதே போல ஒரு சாம்பல் நிறத் தகடு கற்பனைக்கு கொண்டு வாங்க. பேப்பர் அளவே அதுவும். அதே நிறம் வழ வழப்பு.

இப்படி இருக்கலாம்:


ரைட், அதே மாதிரி அளவு, நிறம், வழவழப்போட ஒரு செராமிக் டைல்-உம் கற்பனைக்கு வரட்டும்.

இப்படி:


இது மூணையும் (கற்பனை செய்து) பார்த்தா, ஒவ்வொண்ணும் ஏன் வித்தியாசமா இருக்கு? இதுல எதுவும் ஒளியை ஊடுருவ விடலை. (அதுக்குத்தான் காகிதம் தடிமனான்னு சொன்னோம்!). எல்லாமே ஒரே அளவு ஒளியை உள்வாங்கியது. அதனாலதான் எல்லாமே ஒரே நிறமா இருக்கு! சரிதானே? அப்ப இந்த மூன்றுமே ஒளியை வித்தியாசமா திருப்பி அனுப்புகின்றன. இது கற்பனையிலேயே எப்படித் தெரிஞ்சது? நாம் இந்த பதிவுகளில பார்க்கபோகிற எல்லாமே ஏற்கெனவே நம்ம தினசரி வாழ்க்கையில பார்த்தவைதான். அவற்றை இங்கே கவனத்துக்கு கொண்டு வரோம். அவ்வளோதான்.

(இன்னும் தெரிந்து கொள்வோம்)

காரமுந்திரி I.
காரமுந்திரி II

Wednesday, May 11, 2011

ஒரு புகைப்படத்தில் இருப்பவர் பளிச்சுன்னு தெரிய புன்னகைக்கு அடுத்து போட்டிருக்கும் உடையும் பெரும்பங்கு வகிக்கும் என்பதை யாராலும் மறுக்க முடியாதுதானே?

உடைகளுக்கு என படம் எடுக்க இருப்பவர்களுக்கு மட்டுமின்றி பொதுவாக படங்களுக்கு எந்தவிதமான உடைகள் அட்டகாசமாக அம்சமாக அமையும் என்பது குறித்து ஒரு சில குறிப்புகள்.

மீடியம் மற்றும் டார்க் பின்னணியில் படம் எடுக்க டார்க் கலர் உடைகள் என்றைக்கும் பொருத்தம். டார்க் பின்னணி என்பது ஒரு கராஜ் முன்னாலோ வீட்டு சன்னலின் வெளிப்புறம் நிற்க வைத்தோ எடுக்கலாம். அதுவுமில்லாமல் டார்க் ஷேட்ஸ் ஒருவரை இன்னும் ஸ்லிம்மாகவும் காட்டும்!

அழுத்தமான வண்ணத்துக்கும் 'அடிக்க வரும்' வண்ணத்துக்குமான வித்தியாசத்தையும் நினைவில் நிறுத்திடுங்கள். ப்ரைட் கலர்களை புகைப்படங்களுக்குத் தவிர்த்திடுங்கள்.

உடையில் வாசகங்கள் படத்துக்கு அழகூட்டாது. உடையின் சிறப்பை.. முகத்தின் பூரிப்பை.. கவனிக்க விடாது.

முழுக்கை உடைகள் பிரமாதமாகத் தெரியும்.
[படம்: 1 # கருவாயன்]

க்ளோஸ் நெக், ஹை நெக் இன்னும் அழகுன்னு படங்களே சொல்கின்றன.[படம்: 2 # ராமலக்ஷ்மி]

கையற்ற மற்றும் அரைக்கால் உடைகளை தவிர்த்தல் நலம். உடல் பாகங்களே கவனத்தைப் பெறுவதாகி விடும். ஆனால் சின்னஞ்சிறு தவழும் மற்றும் நடை பயிலும் குழந்தைகளைப் பொறுத்தவரை சில விஷயங்கள் ரிவர்ஸ். அவர்களது உடல் அதிகம் தெரியுமாறு, பிரகாசமான ப்ரைட் கலர்கள் அணிவித்து எடுக்கலாம். பேட்டர்ன், எழுத்துக்கள், படங்களுடனும் உடைகள் இருக்கலாம். படம்:4_ல் கவனிங்க.

ஒரு உடையில் எடுக்கும் போது க்ளோஸ் அப், முழுப்படம், இரண்டுக்கும் நடுவிலாக என பலவாறாக எடுத்து சிறப்பானதை தேர்வு செய்திடலாம்.

மெயின் உடை, கச்சேரி போல களை கட்ட, பக்க வாத்தியங்களிலும் அக்கறை காட்டணும். பெல்ட், ஜாக்கட், காலணி, தொப்பி, ஸ்கார்ஃப் போன்றவை மேலும் அழகூட்டும், பெரியவர் சிறியவர் பேதமின்றி. (படம்_2-ல் பாப்பாவின் ஹேர் பேண்ட்).

உடையின் காண்ட்ராஸ்ட் கலரில் ஸ்கார்ஃபை குழந்தைகள் கழுத்தில் கட்டி படம் எடுத்துப் பாருங்களேன். சொக்கிப் போகலாம் ஒரு பூங்கொத்தைப் பார்க்கிற மாதிரி:)!
[படம்:3 # இணையம்]

குழந்தைகளை எடுக்கையில், அவர்கள் நமக்கு ஒத்துழைக்கும் இதமான சூழலை உருவாக்கித் தரணும். அவுட் டோரில் எடுப்பது இயற்கையான பின்னணிகளுடன் அருமையான படங்களைத் தரும் என்பதோடு குழந்தைகள் தங்களைப் படமெடுக்கிறார்கள் எனும் உணர்விலிருந்து விடுபட்டு சுற்றுப்புறத்தில் லயித்து இயல்பாக போஸ் கொடுப்பார்கள். நீங்களே பாருங்க:)!படம்: 4 # கருவாயன்
அவுட் டோர் படங்களை காலை பத்தரை மணிக்கு முன்பாகவும், மாலை என்றால் ஐந்து மணிக்கு மேலும் எடுத்தால் சூரிய வெளிச்சம் அழகாய் ஒத்துழைக்கும்.

லைட் பின்னணிக்கு லைட் கலர்கள் பரவாயில்லை. மெலிந்த உடலமைப்பு கொண்டவராயின் லைட் கலர் உடையில் டார்க் பின்னணியிலும் தோன்றி அசத்தலாம் இப்படி:
[படம்:5 # ஜீவ்ஸ்]

அறிவிப்புப் பதிவில் பகிர்ந்த படமே. மிதமாக ஒரு சீராகப் பரவி நிற்கும் இப்படத்தின் லைட்டிங் என்னைக் குறிப்பாகக் கவர்ந்த ஒன்று. [நான் பொதுவாக இரண்டு பக்கமும் டேபிள் லாம்ப் வைத்து ஒளியூட்டுவேன். ஒரு சில இடங்களில் அதீத ஒளி விழுந்து போவதைத் தவிர்க்க முடிந்ததில்லை.] எனவே இப்படம் குறித்து ஜீவ்ஸிடம் கேட்டதும், எடுத்த விதத்தை ஒரு படமாக அனுப்பி வைத்து விட்டார். நன்றி ஜீவ்ஸ்!

வீட்டுக்குள்ளே மினி ஸ்டூடியோவும் ‘எதிரொளி’யும்:

விளக்கப்படம்: ஜீவ்ஸ்
ஒரு கயிறு கட்டி தேவையான வண்ணத்தில் ஒரு புடவை அல்லது துப்பட்டாவை இப்படிப் பின்னணியில் தொங்க விடுங்கள். இங்கே இவர் லைட் கலர் உடையை எடுப்பாகக் காட்ட கருப்பு வண்ணத்தை தேர்ந்தெடுத்துள்ளார். இடப்பக்கம் ஒரு ட்ரைபாடில் எக்ஸ்டர்னல் ஃப்ளாஷை பொறுத்தி கூரையைப் பார்த்து வைக்க, ஒளி கூரையில் பட்டு சிறுமியின் மேல் விழுந்து மீண்டும் ரிஃப்ளெக்ட் ஆகி வலப்பக்கமிருக்கும் தெர்மகோல் ஷீட்டின் மேல்பட்டுத் தெறித்து ‘எதிரொளி’யாய் தேவதையைக் குளிப்பாட்டியிருக்கிறது:)!

பெண்கள் உடைக்கேற்ற இயல்பான ஹேர் ஸ்டைல் இருக்குமாறு பார்த்துக் கொள்வது அவசியம். ஆண்கள் ஓரிருநாள் முள்ளுத் தாடிகள் இல்லாமல் க்ளீன் ஷேவ்ட் ஆக இருப்பது உடைக்கும் பிரகாசத்தைத் தரும்.

நம்ம ஊர் உடையான புடவை உலகெங்கும் கொண்டாடப்படுவதன் காரணம், முழுநீளத்தில் விதவிதமாய் உடுத்தும் வகையில் வியக்க வைப்பதால்தான் என்பது சொல்லியா தெரியணும்:)? புடவை மட்டுமில்லாமல் பாரம்பரிய உடையான வேட்டியும் ஒவ்வொரு மாநிலத்தில் ஒவ்வொரு கலாச்சாரத்தில் ஒவ்வொரு விதமாக அணியப் படுகிறது. உழைப்பாளிகள், கிராம நகர மக்கள் தங்கள் செளகரியத்துக்கேற்ப வேட்டியை மடித்துக் கட்டுவதும், புடவையை இழுத்துச் செருகிக் கொள்வதும் ஒரு ஸ்டைல். கருப்பு வெள்ளையிலும் கவனத்தை உடை மேல் செலுத்த வைக்க கருவாயனால் மட்டுமே முடியும்:[படம்:6 # கருவாயன்]

அற்புதமான காட்சிகள் கண்ணுக்கு கிட்டும் போது உச்சி வெயில் எல்லாம் பார்க்க முடியாதில்லையா:)? அந்த வெயிலும் கூட இந்தத் தம்பதியரை ஆசிர்வதிப்பது போல அழகாய் ஒத்துழைத்திருக்கிறது!

நம்மைச் சுற்றி ரசனையான உடைகளுக்கா பஞ்சம்:)?

பதினைந்தாம் தேதிக்குள் படம் எடுத்து சீக்கிரமா அனுப்பி வையுங்க:)!
 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff