Tuesday, November 17, 2009

புகைப்பட ஆர்வலர்களுக்கான இலவச நீட்சிகள் FireFox உலாவியில் பல இருக்கின்றன. நான் அதிகம் பாவிக்கும் இரண்டு இங்கே TinEye : புகைப்படங்களை தேடுவதற்கான நீட்சி இது. ஒரு படத்தை அல்லது படத்துக்கான நிரலை அளித்தால், இதே போன்ற படங்களை வலையில் தேடித் தரும்.படத்துக்கான Google என்று கூறலாம். உதாரணதிற்கு எனது இந்தப் படத்தை இங்கே தேடினால், ஆறு இடங்களில் சுட்டு போட்டு இருக்கிறார்கள் என்று காட்டுகிறது . இவர்கள் மேல் திருட்டு வழக்குப் போடலாமா என்று யோசித்துக் கொண்டு இருக்கிறேன் :-) FireShot: பிகாஸாவில் Screen Shot எடுப்பது பற்றிய இடுகை இங்கே. இது அதை விட எளிது. FireFoxல் இருந்து நேரடியாக எடுத்துக் கொள்ளலாம். சில அழகான பிற்சேர்க்கைகளும் செய்ய முடியும்.

Tuesday, November 10, 2009

நல்ல சீரிய சூரிய ஒளியில் இயற்கை அழகை புகைப்படப் பெட்டியில் பிடிப்பது எல்லோருக்கும் பிடித்தமான ஒன்று. அதே நேரம் இரவின் அழகையும் பிடிக்கலாம். நட்சத்திரங்கள், ஜொலிக்கும் விளக்குகள் என நிறைய இருக்கிறது. ஆனால் உள்ளரங்கில் எடுக்கப்படும் புகைப்படத்தின் தரம் எதிர் பார்த்த அளவு வருவதில்லை. முக்கிய காரணம் போதுமான வெளிச்சம் கிடைக்காதது. சில படங்கள் ரொம்ப கறுத்து ஒன்றுமே தெரியாமல் போகும். இல்லாட்டா கை நடுங்கி நாலு பெக் அடிச்சிட்டு அப்புறமா எடுத்த மாதிரி இருக்கும். அதை சரி செய்ய ஃப்ளாஷ் அடிச்சா போச்சு... உள்ளதும் போச்சுடாங்கற கதையா போய்டும். ஆனால் இதையெல்லாம் சமாளிச்சு இருக்கும் வெளிச்சத்தை மேம்படுத்தி அல்லது இயன்ற அளவுக்கு தேவையான வெளிச்சத்தை உருவாக்கி வீட்டினுள்ளும் அருமையான படங்களை எடுக்க முடியும். ஏற்கனவே விளம்பரங்கள் போட்டிக்கு வந்த படங்களின் தரத்தையும் நினைவுக் கூர்ந்து பார்க்கலாம். வெளியில் எடுக்கும் புகைப்படத்தை விடவும் வீட்டில் எடுக்கும் புகைப்படத்திற்கான ஒளியை நம்மால் கட்டுப்படுத்தி தேவையான அளவு மட்டுமே புகைப்படம் எடுக்கப் போகும் பொருளின் மீது விழச்செய்ய முடியும். நம்புங்கள் நம்மால் முடியும்... இங்கே நாம் விவாதிக்கப் போவது இருக்கும் ஒளியை எப்படி மேம்படுத்தி உபயோகிப்பது Portrait & Tabletop photography வீட்டிலேயே தேவையான ஒளிக்கருவிகளை செய்து கொள்வது & உபயோகிக்கும் முறைகள். கண்ணாடி பொருட்களை புகைப்படமெடுக்கும் நுணுக்கம் நகை, சிறு பொருட்கள் ( மொபைல் போன், எலெக்ட்ரானிக் கேட்ஜட் ) லைட் பெயிண்டிங். விடுபட்டவை ஏதும் இருப்பின் பின்னூட்டத்தில் சொல்லவும். இந்தத் தொடரை வெறும் "மற்றுமொரு பாடமாக" இல்லாமல், நீங்களும் பங்கெடுத்து செயல்பட்டால் மட்டுமே வெற்றிகரமாக அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியும். சொல்லப்படுபவகளை முயற்சித்து பார்த்து அதற்கேற்ப வரும் பின்னூட்டங்களே இது போன்ற பதிவுகளை அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு செல்ல உதவும் காரணிகள். அடுத்த பதிவு - குறைந்த விலையில் சிறு பொருள்களைப் படம் பிடிக்க லைட் டெண்ட் அமைப்பது எப்படி ? ( செய்முறை விளக்கங்களுக்கான படங்களுடன் வருவதால் சற்றே தாமதம் ஆகலாம். நிதானித்தருள்க ) கூடிய விரைவில் சந்திப்போம். அதுவரை.... சில படங்கள் :) ஃபெராரி - ஜீவ்ஸ் :. செர்ரீஸ் - ஆனந்த்:. கோக் - கைப்புள்ள:. என்ன தவம் செய்தனை.. யசோதா - ஜீவ்ஸ்:. LG Cookies - Jeeves :. Yeaaay... Lets start the wheel rolling.....
அன்பு மக்களே, சிரமத்திற்கு மன்னிக்கவும்.. நான் சொன்ன மாதிரியே எல்லோரும் கண்டபடி திட்டியிருப்பீங்க... ஆனா,இவ்வளவு சீக்கிரம் நடக்கும்னு நெனைக்கவே இல்லை.. நான் முன்ன பின்ன வெளியே போயிருந்தா குழந்தைகளை படம் பிடிப்பது கஷ்டம்னு கொஞ்சமாவது தெரிஞ்சிருக்கும்.. இப்போ நல்லாவே புரிஞ்சுகிட்டேன்.. அதனால,கொஞ்சம் நிபந்தனைகளை மட்டும் தளர்த்திக்கொள்ளலாம் என்று முடிவுக்கு வந்துள்ளோம்.. தலைப்பு வாண்டு(கள்) தான், அதனால, ஒரு வாண்டு இருந்தாலும் பரவாயில்லை..கண்டிப்பா நீங்க ஒரு குழந்தையையாவது படம் எடுத்திருப்பீங்க..இந்த தலைப்பு உங்களுக்கு சிரமம் இருக்காது என்று நினைக்கிறேன் மக்களே... ஆனா மக்களே, எங்க வீட்ல நானும் ஒரு குழந்தை மாதிரி தான்,அப்படின்னு உங்க photoவை அனுப்பீடாதீங்க... ஆகவே,மீசை வெச்ச குழந்தைகளும்,தாவணி போட்ட தீபாவளிகளும் கண்டிப்பா கிடையாது... மேலும்,இது வரையில் அனுப்பியவர்களுக்கும் இன்னொரு வாய்ப்பு தருகின்றோம்.. அவர்களும் இன்னொரு முறை அனுப்பலாம்..ஏனென்றால்,அவர்கள் இதை விட நல்ல படமும் வைத்திருக்கலாம்.. அதுவுமில்லாமல், மேலும் 5 நாட்கள் நீட்டிப்பு செய்கிறோம்,எனவே போட்டிக்கு புகை படங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி:20-11.2009 சில சாம்பிள்கள்... என்ன மக்களே,இப்போ உங்களுக்கு சந்தோஷம் தானே... புதுசு புதுசா அசத்துங்க...

Thursday, November 5, 2009

கருப்பு வெள்ளைப் படங்களுக்கு கலரடிப்பது ( Tinting) மிகப் பிரபலம். பொதுவாக Sepia tone படங்களை நிறையப் பார்த்து இருப்பீர்கள். இதுபோன்ற படங்களை எளிதாக கிம்பில் செய்வதுப் பற்றி இங்கே. படத்தை கிம்பில் திறந்து பின்ணணி லேயரை நகலெடுத்துக் கொள்ளுங்கள். உங்களின் படம் வண்ணப்படமாக இருந்தால் அதை முதலில் கருப்பு வெள்ளைக்கு மாற்ற வேண்டும். அதற்கு எளிதான வழி Colors->Desaturate... Luminosity தேர்ந்து எடுத்துக் கொள்ளுங்கள். படம் கருப்பு வெள்ளைக்கு மாறி இருக்கும். இனி Colors-> Colorize... தெரிவு செய்யுங்கள். இங்கே மாற்றுவதற்கு மூன்றுப் பகுதிகள் இருக்கும். Hue, Saturation மற்றும் Lightness. Sepia க்கு மாற்ற Hue = 36, Saturation =20 Lightness=0 என்று தெரிவு செய்துக் கொள்ளுங்கள். உங்களின் தேவைக்கு ஏறப மாற்றிப் பாருங்கள். Sepia மட்டும் அல்ல உங்களுக்குப் பிடித்தமான வண்ணத்தாலும் படத்தை மாற்றிக் கொள்ளலாம். உதாரணதிற்கு Hue= 230 Saturation=32 Lightness =0 Hue= 352 Saturation=64 Lightness =0 அவ்வளவுதான் வேலை. விளையாடிப் பார்த்து அடுத்த முறை வெறும் கருப்பு வெள்ளைக்கு மற்றும் மாற்றாமல், இந்த முறையிலும் கலரடித்துப் பாருங்கள்.

Sunday, November 1, 2009

உள்ளூர் நூலகத்தில், National Geographicன் 'The Ultimage Field Guide to Photography' என்ற புத்தகம் கண்ணில் பட்டது. புகைப்படத் துறையின் ஜாம்பவான்கள் சிலர், கூட்டாக, உபயோகமான நுட்பங்களை வெளியிட்டிருக்கும் புத்தகம் இது. ஆ முதல் ஃ வரை எல்லாத்தையும் வெவரிச்சிருக்காங்க. பாதி தான் பொரட்டிருக்கேன். மீதிப் பாதி பொரட்டரதுக்குள்ள, அங்கே படித்து அறிந்து கொண்ட சில 'டிப்ஸை' இங்கே அள்ளி வீசலாம்னு தோணிச்சு. அதான், புக்கை மூடி வச்சுட்டு தட்டச்ச வந்துட்டேன். மொத்தமும் அங்கேருந்து உருவினது இல்லை. இடை இடையே சொந்த சரக்கும் கலந்து விட்டிருக்கேன். அ. கேமரா வாங்குவது பற்றி...
இதை PiTலும் நல்லா அலசியிருக்கோம். படிக்காதவங்க படிச்சுக்கோங்க. உங்க பட்ஜெட் எந்த அளவுக்கு பெருசா இருக்கோ, அந்த அளவுக்கு ஆராய்ச்சி பண்ணுங்க. ஆராய்ச்சி பண்ண சில முக்கிய தலங்கள் இவை: http://photographyreview.com, http://camerareview.com, http://decresource.com, http://imaginc-resource.com, http://steves-digicams.com
ஆ. Point & Shoot கேமரா வைத்திருப்பவர்களுக்கு...
நல்ல படங்கள் எடுக்க DSLRதான் வேணும்னு அவசியம் இல்லை. குறைந்த விலையில் கிட்டும் பாயிண்ட் & ஷூட்டும் ஓ.கே. கைக்கடக்கமா குட்டியா இருக்கரதால இந்த கேமராவின் ஒரே ப்ரச்சனை, கெட்டியா பிடிச்சு, ஸ்டெடியா படம் எடுக்கரது கஷ்டம். எனக்குத் தெரிஞ்ச ஒரு பெருசு படம் புடிக்க சொன்னா, கேமரா க்ளிக்கரை மட்டும் அழுத்தாமல், மொத்த கேமராவையும் க்ளிக்கி ஒரு ரெண்டடி வரைக்கும் கேமராவ ஆட்டுவாரு. படம் ஷேக்காகித் தான் வரும், இப்படி எடுத்தா. முடிந்தவரை, இரண்டு கையிலும் ஸ்டெடியா புடிச்சு, அலுங்காம குலுங்காம எடுக்கப் பழகிக்கங்க. கிட்டார் கத்துக்கும்போது சொன்னாங்க, சும்மா ஒக்காந்து டிவி பாக்கும்போதும், கை விரல்களை கிட்டார் வாசிப்பது போல் ப்ராக்டீஸ் பண்ணிக்கிட்டே இருக்கணும். அப்பத்தான், விரல் திடமாகும்னு. அதே மாதிரி, நீங்களும் ஆள்காட்டி விரலை பென்ச்சில் க்ளிக்கிக்ட்டே இருங்க. அந்த ஒரு விரல் மட்டும்தான் ஆடணும், மொத்த உடலும் அல்ல. உங்கள் கேமராவில் இருக்கும் digital zoomஐ பயன் படுத்தாமல் இருத்தல் நலம். optical zoom உபயோகித்து படம் புடிச்சு, அப்பரம் தேவைப்பட்டா க்ராப் பண்ணிக்கோங்க. digital zoom கொண்டு எடுக்கும்போது, படத்தின் தரன் குறைஞ்சிடும். உங்க கேமராவின் வேகம் என்ன, எவ்ளோ சீக்கிரமா அது படம் எடுக்க முடியுங்கரத, ப்ராக்டீஸ் பண்ணி தெரிஞ்சுக்கோங்க. அதன் வேகத்துக்கு ஏத்த மாதிரி, குழந்தையை ஃபோட்டோ எடுக்கும்போடோ வேர ஏதாவது, அசையும் பொருளை எடுக்கும்போதோ உங்களை நீங்க தயார் படுத்திக்கலாம். focus lock (half press) எப்படி பண்றதுங்கரதும் அவசியம். க்ளிக்கரை முழுசா அமுக்காம பாதி அமுக்கினா, நீங்க எடுக்கவிருக்கும் படம் ஃபோக்கஸ் ஆயிடும், அப்பரமா, குழந்தை சிரிக்கும்போது, மீதிப் பாதி அமுக்கிட்டா, நீங்க நெனச்ச படம் கெடச்சிடும். முழு க்ளிக்கும் ஒரே வீச்சில் பண்ணினா, குழந்த சிரிச்சு முடிச்சு, 'இப்ப என்னா பண்ணுவ?'ன்னு வில்லங்கமா பாக்கும்.
இ. அடிப்படைகள்:
பிட்டில் ஏற்கனவே இதை அலசி ஆராஞ்சாச்சு. முதலில் இவைகளை படிக்காதவங்க படிச்சுடுங்க. general tips, Focal Length, F-Stop, DOF, White balance, Histogram, Metering
ஈ. DSLR டிப்ஸ்:
ISO - இது உங்க கேமராவின், sensitivity/கிரஹிப்புத் தன்மையை நிர்ணயிக்கும். நல்ல வெயில் இருக்கும் இடங்களுக்கு 100ம், வெளிச்சம் குறைவான இடங்களுக்கு 400ம், இருள் சூழ்ந்த இடங்களில் 800 அல்லது 1600ம் உபயோகிக்கணும். வெளிச்சம் கம்மியாக ஆக, ISOவை கூட்டணும். ஆனால், ISO கூட்ட கூட்ட, உங்கள் படங்களின் தரம் கம்மியாகிடும். noise ஜாஸ்தி ஆயிடும், ஞாபகம் இருக்கட்டும். 'Sunny f/16'ன்னு ஒண்ணு சொல்றாங்க. மேலே உள்ள பாடங்கள் படிச்சிருந்தீங்கன்னா உங்களுக்கு aperture/Fstopன்னா என்னான்னு தெரிஞ்சிருக்கும். வெளியில் பரந்து விரிந்த இயற்கை காட்சிகளை படம் பிடிக்கும்போது, உங்கள் ISOக்கு ஏத்த மாதிரி ஷட்டர் ஸ்பீடு அமைக்கணும். அதாவது, fstop f/16 (landscapeக்கு குட்டி அபெர்ச்சர் தேவை) வைத்து, ISO 200 வச்சிருந்தீங்கன்னா, ஷட்டரின் வேகம் 1/200 வைக்கணும். ISO 400 வச்சிரூந்தீங்கன்னா, ஷட்டரின் வேகம் 1/400. ஒரு போர்ட்ரெய்ட் படம் எடுக்க 1/60 லிருந்து, 1/250 வரை ஷட்டர் வேகம் இருக்கலாம். ஓடும் வஸ்துக்களை ஷார்ப்பாக எடுக்க 1/1000 வைத்துக் கொள்ளலாம். 1/60ஐ விட கம்மியாக எடுக்க வேண்டிய நிர்பந்தம் வந்தால், ட்ரைபாடு இல்லாமல் எடுக்காதீர்கள். படம் ஷேக்காகம வரது கஷ்டம்.
- உ டு ஃ தொடரும்,
 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff